மொழுமொழுவென்று மொழுகிப் பூசப்பட்ட நன்கு பெருத்த முட்டை வடிவிலான முகம், அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரு கண்கள். கண்களில் ஆண் பெண் இன வித்தியாசம் காட்டுவதற்கென புருவங்கள், காதுகளும் மூக்கும் கிடையாது, விதவிதமாக உணர்வுகளை மாற்றும் வாய், புசுபுசுவென உப்பிய வயிறு, கரும்பைப் போன்று ஒடிசலான கைகளும் கால்களும், மெத்து மெத்தென்று பஞ்சு கால்கள்...

ஜூஜூ (Zoo Zoo)முட்டையழகிகள்தான் இப்பொழுது எல்லோருடைய மானசீக கதாநாயகிகள். பொதுவாக கார்ட்டூன் பொம்மைகளின் உணர்ச்சிகள் அதன் வாயின் உருமாற்றத்தில்தான் வெளிப்படும், ஜூஜூவும் அதற்கு விலக்கல்ல, விதவிதமான உணர்ச்சிகளைத் தாங்கி ஒரு தரமான அனிமேஷன் காட்சியைப் போன்றே நம்பத்தகுந்தவாறு நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அசாதாரண யுக்தியும் மாற்றுவகையிலான சிந்தனைக் கோணமும்தான் படைப்புகளைத் தரம் பிரிக்கின்றன. அவ்வகையில் வோடஃபோனின் ஜூஜூ முற்றிலும் மாற்று சிந்தனையோடு வெளிவந்தவைகள், வோடஃபோனின் அடையாளமாகவே மாறிவிட்ட இந்த முட்டையழகிகள்தான் இன்று விரும்பிப் பார்த்து ரசிக்கப்படும் அழகிகள்.ஜூஜூ விளம்பரங்களில் பின்நவீனத்துவ விளம்பரபாணி கடைபிடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். Value Added Services என்றழைக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகளைப் பற்றிய நகைக்கத் தகுந்த, குழந்தைத்தனமிக்க, குறும்பான காட்சிகளில் இந்த முட்டையழகிகள் நடித்திருக்கிறார்கள். Call Filter எனும் ஒரு விளம்பரத்தில் காதலர்கள் இருவர் மெய்மறந்து (ஒரு ரெஸ்டாரெண்டில் என்று நினைக்கிறேன்) காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு ஜூஜூ ஒரு பெட்டியொன்றைத் தூக்கிக் கொண்டு, (போன் செய்வதாக,) அவர்களிருக்கும் இடத்திற்கு வருகிறது. ஆண் ஜூஜூவுக்கு இது பிடிக்கவில்லை. முதல்முறை துரத்தி விடுகிறார். இரண்டாம் முறை குத்திவிடுகிறார். இக்காட்சி, தேவையில்லாத போன் அழைப்புகளைத் தவிர்ப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கிறது. இதைப்போன்றே Call Divert விளம்பரம், பிஸியாக பென்ச்சில் அமர்ந்து கொண்டு படித்துக் கொண்டிருக்கும் ஒரு ஜூஜூவைப் பார்க்க இன்னொரு ஜூஜூ வருகிறது. பிஸியான ஜூஜூ கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்க்கிறது. பிறகு பென்ச்சில் இருந்து இறங்கி, வந்த ஜூஜூவை திருப்பி விடுகிறது. அது இன்னொரு இடத்திற்குப் போய் நிற்கிறது.. (அந்த இடத்தில் வேறோர் ஜூஜூ இருந்திருக்க வேண்டும்.) இது கால் டைவர்ட்டுக்கு எடுக்கப்பட்ட காட்சி.. இதைப் போன்றே ஒவ்வொரு காட்சிகளிலும் ஒருவித பின்நவீனத்துவம் கலந்திருக்கும். பெரும்பாலான விளம்பரங்களில் ஆண், பெண் இருவரின் காதலை ஒத்து காட்சிகள் நகருகின்றன. அதில் இரு காதலுக்கிடையே ஏதாவது ஒரு இடையூறு வந்துவிடுகிறது. அதை ஆண் ஜூஜூ சமாளித்துவிடுகிறது. இந்த சமாளிப்பு வோடஃபோன் மதிப்புக்கூட்டப்பட்ட சேவையாக விளம்பரப்படுத்தப்படுகிறது.இவைகளனைத்தும் கம்ப்யூட்டர் அனிமேஷன்கள் அல்ல, பெண்களும் குழந்தைகளும் என்பது முன்பே அறிந்த விஷயம். ஒரு சேவையை கார்ட்டூன் முறையில் விமர்சிக்க அல்லது விபரப்படுத்த அசாதாரண மூளை தேவை. இதை இயக்கியிருக்கும் O&M மற்றும் நிர்வாணா விளம்பர நிறுவனங்கள் மிகச்சிறந்த விளம்பர நிறுவனங்கள் என்பதில் ஐயமில்லை.

இந்த முட்டையழகிகளின் உருமாற்றமே அலாதியான சிந்தனையுடையது. உடல் மற்றும் தலை என்று இருபாகங்களாகப் பிரித்து உடலெங்கும் பஞ்சு போன்ற வெண்மை நிறத்திலான ஃபோம் (Foam) பொறுத்தி, ஜூஜூவின் உடலை அமைத்திருக்கிறார்கள். கைகள், கால்கள் நன்கு ஒல்லியாக இருக்கும்படியாகவும், அதற்கேற்ப நடிகர்களையும் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் இவ்வகையமைப்பிற்குப் பொருந்தி வருவார்கள். எல்லா ஜூஜூக்களின் வயிறு உப்பியவாறு ஃபோம் பொருத்தப்பட்டு கார்ட்டூனிசம் முறையில் இருக்கின்றன. இவையனைத்தும் கசங்கிவிடாத கனமான துணியினால் தயாரிக்கப்பட்டது. ரிங்டோன்ஸ் எனும் விளம்பரத்தில் துணி பொருத்தப்பட்டிருப்பதையும், ஜூஜூ நடந்து முதலையைத் தாண்டும்பொழுது மடங்குவதையும் காணலாம். ஜூஜூவின் தலைப்பாகம் மட்டும் தனி. அதில் கண்கள் வாய் வரையப்பட்டு ஆண்பெண் இன பேதம் பிரிக்க புருவங்களைப் பொருத்தி ஜூஜூவை முழுமையாக்குகிறார்கள். தலைப்பாகத்தின் மொழுமொழு தன்மைக்கு தெர்மோபிலாஸ்டிக் மூலம் அதை வடிவமைத்திருக்கிறார்கள். நன்கு சூடாக்கினால், இளகியும், குளிர்வித்தால் கெட்டியும் ஆகிவிடும் இந்தவகை பிலாஸ்டிக்களினால் பலவகையிலான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஜூஜூவின் தலை மனித தலையைவிடவும் பெரியது. இதைக் காட்சிப்படுத்தும் பொழுது மனித தலையைக் காட்டிலும் சிறியதாகத் தெரியும்படி செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு உணர்வுகளுக்கு ஏற்றவாறு தலையை மாற்றிவிடுகின்றனர். தலையை மாற்றுமிடத்தில் காட்சிகள் நறுக்கப்பட்டுவிடுகின்றன. இவற்றின் எந்த பாதிப்பும் தெரியாதவாறு துல்லியமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஜூஜூக்களின் ஒலி எதனோடு ஒப்பிடமுடியாதவாறு புதுமையாக இருக்கிறது. என் நண்பர் ஒருவர், உடைந்த ரெக்கார்டின் ஒலியை ஒத்தவாறு இருப்பதாகக் கூறினார். அவர்களது மொழி, தனித்துவமாக இருக்கிறது. குழந்தைத்தனமானது என்றும்கூட சொல்லலாம்.

வீடியோவின் வேக அளவு அதிகமாகவும் ஃப்ரேம்களைக் குறைத்தும் எடுக்கும் பொழுது, காட்சிகளின் அசைவு கார்ட்டூனின் அசைவைப் போன்றே பதிவாகும். ஜூஜூவை படம்பிடிக்கும் பொழுது 20 fps ஃப்ரேம் ரேட்டின்படியும் அதிவேகத்திலும் எடுத்திருக்கின்றனர். உண்மையில் வேஷம் பொருத்தப்பட்ட அந்த முட்டையழகிகளின் நடிப்போடு, காமிராவின் தந்திரமும் இணைந்திருக்கிறது.விளம்பரக்காட்சிகளின் பின்புல இடங்கள், ரெஸ்டாரெண்ட், கிரிக்கெட் மைதானம், சுவர், அறை என்று எல்லா இடங்களிலும் கசப்பின் வர்ணமான சாம்பல் (Neutral Greys) நிறம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், சில விளம்பரங்களில் பாரீஸ் டவர், எகிப்து பிரமிடுகள், லிபர்டி சிலை ஆகிய யாவும் முட்டையழகிகளின் உலகத்தில் எப்படி இருக்குமோ அப்படியானதொரு தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மேஜைகள், நாற்காலிகள், தூண்கள், என எல்லா பொருட்களும் ஜூஜூ உலகில் நம்மை மிதக்க விடுகின்றன. பொதுவாக எல்லா விளம்பரங்களிலும் மரங்களையும் கட்டிடங்களையும் மேகங்களைப் போன்றே அமைத்து வைத்திருப்பதைக் காணலாம். தரைத்தளம் யாவும் பூசப்பட்டிருக்கும் மிதமான க்ரே வர்ணம் முட்டையழகிகளின் பிசகில்லாத தோற்றத்தையும் சரியான வெளிச்சத்தையும் கொடுத்திருக்கிறது. முட்டையழகிகளின் உபரிபொருட்கள் (Accessories) யாவற்றையும் வர்ணத்தில் கொடுத்திருக்கிறார்கள். ஆக மொத்தம், எந்தவொரு இடத்திலும் ஜூஜூ உலகத்திலிருந்து நம்மைப் பிரித்துவிடாதபடி கவனமாக கையாண்டிருக்கிறார்கள். ஜூஜூக்களை விடுத்து அடுத்து நாம் ரசிப்பது, ஜூஜூக்களின் கார், மற்றும் பச்சை நிற முதலை. இன்னும் என்னென்ன என்பது நினைவிலில்லை. இந்த விளம்பரத்தை நிர்வாணா விளம்பர நிறுவனம் தென்னாப்பிரிக்கத் தலைநகர் கேப்டவுனில் படம்பிடித்துள்ளது.

புதிய சிந்தனை, மக்களை எளிதில் கவரும் பாணி, சிறந்த சேவை, என்று வோடஃபோன் முன்னேறிவருவதற்கு இவ்விளம்பரங்கள் பெருமளவில் உதவியிருக்கிறது என்றால் அது மிகையல்ல... சென்ற ஆண்டு பக் நாய்களை வைத்து படமெடுத்ததில் PETA (People for Ethical Treatment for Animals) நிறுவனம் கடுப்பில் இருந்தது. இந்த ஆண்டு அதே நிறுவனம் வோடஃபோனுக்கு கிளிட்ர் பாக்ஸ் (Glitter Box) விருதினைத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அன்புடன்
ஆதவா


சிறிது வெளிச்சம் - எஸ்.ராமகிருஷ்ணன்

சிறிய வெளிச்சத்திற்கும் எனக்குமான தொடர்பு மதுக்கோப்பையில் விழுந்து கிடக்கும் பனிக்கட்டியைப் போன்றது. சிறிது நேரமே நீடித்திருக்கும். கண்களின் கோளவிழிகள் நன்கு விரிந்து கூர்ந்து கவனிக்கும். எனது அசைவுகளை நுட்பமாக்கி மூளைக்குத் தெரிவிக்கும். சொல்லப்போனால், அடர்ந்த இருளிலோ, காய்ந்த வெயிலிலோ காணாத முகம் அந்த சிறிய வெளிச்சத்தில் எனக்குத் தோன்றியிருக்கிறது. சிறிய வெளிச்சம் என்பது வாழ்வின் மூலையெங்கும் பரந்து கிடக்கிறது. கவ்விய இரவை சற்றே விலக்கிட சிறியவெளிச்சம் முயலுவதைப் போன்று கவலைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிவிடலாம் என்றொரு கவிதை எழுதிய ஞாபகம் இருக்கிறது.

நேற்றிரவு மின்சாரம் தொடர்பற்று போனதில் சட்டென்று ஒரு பூனையைப் போன்று நழுவிப் போனது வெளிச்சம். சுற்றிலும் மூடிக்கிடந்த இருளில் நானிருக்குமிடத்தை எனது அலைபேசியினால் சிறிய வெளிச்சமாக்கினேன். அச்சூழ்நிலையில்தான் ஆ.வியில் எஸ்ராவின் "சிறிது வெளிச்சம்" படிக்க நேர்ந்தது. இருள் என்றது எனக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது நிசப்தமும், சூன்யமும்தான். ஒருக்கணத்தில் இவையிரண்டும் ஒருங்கே நெருங்கி என்னை அணைத்தது. அது இத்தொடர் படிக்க மிகவும் வசதியாக இருந்தது. இத்தொடர் மட்டுமல்ல, எனது எல்லா வாசிப்புகளும் இரவின் சிறிய வெளிச்சத்தில்தான் நடக்கின்றன. இதோ, இக்கட்டுரையைக் கூட மங்கிய இரவில், சிறிய வெளிச்சத்தில்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

எப்பொழுதெல்லாம் சிறுவெளிச்சம் என்மீது பாய்ந்திருந்ததோ அப்பொழுதெல்லாம் எழுதத் துவங்கினேன். இருள் மீதான பயத்தைப் போக்க சிறிய வெளிச்சமே போதும். ஆனால் எனக்கு இருளின்மீதான காதலில் வெளிச்சமே பயமாகிப் போனது. எனது வாசிப்பு, படைப்பு, அரட்டை, இணையம், ஆகிய மொத்த தொடர்பும் இரவுகளில்தான் அதிகம் என்பது நண்பர்களுக்குத் தெரிந்த விஷயம். எஸ்ரா கூறியதைப் போன்றே, ஒருமுறை என்னிடம் நண்பர்கள் கேள்வி கேட்டார்கள். தாஜ்மஹாலைக் கட்டியது யார் என்று. ஷாஜகான் என்று பதில் சொன்னேன். அவர்களோ, கொத்தனார்டா மடையா என்று கேலியாகச் சிரித்தார்கள். ஆனால் எனக்கோ, ஷாஜகானைக் காட்டிலும் மிகுந்த அக்கறையோடு கட்டியிருக்கும் தாஜ்மகாலின் கட்டிட இன்ஜினியர் யாராக இருப்பார், ஏன் அவரை வரலாறு மறைத்துவிட்டது, அல்லது மறைக்கப்பட்டு விட்டார் என்று கேள்வி எழுந்து கொண்டேயிருந்தது. அவர் தாஜ்மகாலைக் கட்டும்பொழுது தான் உலகின் ஒரு அற்புதத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறோம் என்று தோணியிருக்குமா? அவரது மனைவி இக்காதலின் சின்னத்தைப் பற்றி என்னென்ன சிந்தித்திருக்கக் கூடும்?

வாழ்வின் இருள் நிறைந்த இடுக்குகளெங்கும் இக்கேள்விகளின் சிறிய வெளிச்சம் பாய்ந்து கொண்டேயிருக்கிறது. யாரும் அறியாத ரகசியங்கள் விண்வெளியில் கசிந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. இருள் நிறைந்த அப்பாதையில் சிறிய வெளிச்சத்தைப் பாய்ச்சி தெரிந்து கொள்ள எனக்கு எத்தனையோ முறை ஆவல் பிறந்ததுண்டு. நாம் வாழும் வாழ்வை சூழ்நிலைகள் தீர்மானிப்பதைப் போன்று வேறேதும் தீர்மானிப்பதில்லை. சிறிய வெளிச்சமேனும் சூழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையின் திரையைக் கிழிக்காதா என்று தோணுகிறது. அவர் கூறியவற்றுள், எனக்கு நேர்மாறாக இருப்பது இரவைக் குறித்த அவரது எண்ணங்கள். எனக்கு பகல் எப்பொழுதும் மூடியே கிடக்கிறது. அலுவலகமும் பணி சார்ந்த நெருக்கடியும் பகல் பொழுதுள் முடங்கிவிடாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறது. எதைப் பற்றியும் சிந்திக்கவோ, எழுதவோ, படிக்கவோ, மனதைப் புரட்டிடவோ முடிவதில்லை. இதற்கு நேர்மாறாக இரவு சட்டென்று விழித்துக் கொண்டதைப் போன்று இருக்கிறது. இரவுகளில் சிந்தனைகள் தோன்றுகின்றன. இணையம் எனும் மாய உலகம் வரவேற்கிறது. அதனுள் விழுந்து பலவாகத் தெறித்து ஒன்றி, ஒன்றாவதற்குள் எனக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட இரவு முடிந்துவிடுகிறது. ஆனால் இப்பொழுது இந்நிலை சற்று மாறிக் கொண்டிருப்பதை உணரமுடிகிறதெனினும் இந்நிலையே நீடிக்க வேண்டுமென்கிறது மனம்.

எஸ்ரா, மனதில் புகுந்து அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொத்திக் கொண்டிருப்பவர் என்று அறிவேன். சிறிது வெளிச்சத்தில் வாசனை குறித்து படிக்கையில் அப்படித்தான் தோன்றியது. முதன் முதலாக வாசனையை எப்பொழுது அறிந்தேன் எனும் கேள்வி புத்தகத்தின் எழுத்தினூடாக ஊர்ந்து கொண்டிருந்தது. எனக்கு நினைவு தெரிந்து முதல் வாசனையாக, இருந்தது ஊதுபத்தி வாசனைதான். தினமும் காலையில் எழும் முன்னர் அலமாரியின் கதவிடுக்கில் புகைவிட்டுக் கொண்டிருக்கும். மூக்கின் வழி துளைத்து உடலெங்கும் தூங்கிக் கிடக்கும் ஆன்மீகத்தைச் சுண்டியெழுப்பும். அதன் ஒடிசலான உடலிலிருந்து நாற்றம் வெளியேறுவதைப் போன்றே புகை கிளம்பிக் கொண்டிருக்கும்.. தினமும் அதன் நுகர்ச்சியிலேயே எழவேண்டியிருந்தது. அதன் புகை ஒரு கயிறைப் போன்று நீட்டி கழுத்தை இறுக்குவதைப் போன்றே இருந்தது. நாளடைவில் அது எனக்கு சலிப்பையே ஏற்படுத்தியது. ஆன்மீகத்தின் மணமாக அறையெங்கும் வாசனை நிறைந்திருந்தது குறித்து பலசமயம் வீட்டில் சண்டையிட்டிருக்கிறேன். ஒருவகையில் நாத்திகம் நாடுவதற்காகவும் கூட ஊதுபத்தி பயன்பட்டிருக்கலாம்.

நுகர்தல் என்பதும் ஒருவகையில் பசியைப் போக்கக் கூடியது அல்லது ஒரு பொருளைத் தின்பது என்று புரிந்து கொண்டது சமையற்கட்டில் நுழையும் பொழுது தெரிந்து கொண்டேன். கைக்கு எட்டமுடியாத உயரத்தில் வாழைப்பழம் தொங்கிக் கொண்டிருக்கும். அதன் வாசனை அச்சிறிய அறையில் ஊதிபத்தியைப் போன்றே நிறைந்து கொண்டிருக்கும். தின்னமுடியாத அவ் வாழைப்பழத்தின் வாசனையை நுகரும்பொழுதெல்லாம் பசியின் தாகம் தீர்ந்துவிட்டதாகவே நினைத்துக் கொள்வேன். பிறகு ஒவ்வொரு முறையும் அவ்வறைக்குள் நுழையும் பொழுது ஏற்படும் வாழைப்பழத்தின் வாசனை வேண்டுமென்றே உணவைத் திணிப்பதாகவே தோன்றும். நுகர்ச்சி எனும் உணர்வு மிக நுட்பமானது. அது நுகர்தலின் வழியே சில நுட்பமான செயல்களையும் செய்கிறது. ஊதுபத்தி வாசனையும், வாழைப்பழ வாசனையும் எனக்கு இன்று பிடிக்காமலேயே போய்விட்டது.

நுகர்தல் என்றபொழுது இன்னுமொன்று நினைவுக்கு வருகிறது. தற்சமயம் சேவல்காரி என்றொரு தொடர் எழுதி வருகிறேன். (இன்னும் வலையில் வெளியிடவில்லை) அதில் ஓரிடத்தில் கோழியின் வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டிருப்பேன். உணவுப் பொருட்களின் மீதான வாசனை இன்னும் தீராமலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது வாழைப்பழம் தவிர்த்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான வாசனை பிடித்திருக்கிறது. எஸ்ரா குறிப்பிட்டபடி, அவ்வாசனை யாருக்கும் தங்குவதில்லை. உடல் மொழியெழுதும் கவிதையில் கசிந்து பிழையாகி வரும் வார்த்தைகளே உடல் வாசனை, எனக்குப் பிழைகள் பிடிப்பதில்லை. ஆனால் நினைத்துப் பார்த்தால் இறுதி வரையிலும் உடன் வரும் வாசனை அதுமட்டுமே தான். Pink ன் Get the Party Started பாடலின் ஒரு காட்சியில் அவள் குளித்துவிட்டு வரும் பொழுது தனது அல்குலை முகர்ந்து பார்ப்பாள். வீட்டில் உள்ளவர்கள் அதைக் கண்டதும் சிரிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் இப்பொழுது தோன்றுகிறது. நம்முள் எழும் வாசனை நமக்கு ஏன் பிடிக்காமலிருக்கிறது? வலையில் 31 கேள்விகள் எனக்குக் கேட்கப்பட்டிருந்த பொழுது மல்லிகையே எனக்குப் பிடித்த மணம் என்று குறிப்பிட்டிருந்தேன். அது சூழ்நிலையின் காரணமாகக் குறிப்பிட்டிருந்தேனா, நிர்பந்தமா, அல்லது முன்யோசனையற்ற பதிலா என்று தெரியவில்லை. உண்மையில் எனக்கு எந்த வாசனை பிடித்திருக்கிறது என்று அனுமானிக்க முடியவில்லை.

இக்கட்டுரையை எழுதும் பொழுது என் அம்மாவிடம் நீ முதன் முதலாக கண்டறிந்த வாசனை எது என்று கேட்டதும் பட்டென்று பால்வாசனை என்றார். யோசித்துப் பார்த்தால் உலகின் எல்லோருடைய முதல் வாசனை பாலாகத்தான் இருக்கவேண்டும். பிடித்த வாசனை எது என்று கேட்டேன். பட்டு ரோஸ் என்றார். அது இப்பொழுதும் உனக்கு வாசனையை உணர்த்துகிறதா என்றேன். ஆம் என்றார்... பெண்களின் கூந்தலில் எப்பொழுதும் ஏதாவதொரு வாசனை தங்கியிருக்கிறது. அது அவர்கள் நினைத்தவுடன் மூக்கின் நுனியில் அமர்ந்து கொள்கிறது. வாசனை குறித்து பேசுகையில் இன்னுமொன்று குறிப்பிட்டாகவேண்டும், எனக்கு நுகர்தலின் வாயிலில் தொந்தரவு இருக்கிறது. நான் இதுவரையிலும் எந்த மருத்துவரையும் அணுகியதில்லை. இத்தொந்தரவு என்னை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதாக உணர்கிறேன்.

எஸ்ரா தேர்ந்தெடுக்கும் தலைப்புகளில் இருக்கும் வசீகரம் இத்தொடரில் இல்லை. மிகச்சாதாரணமாகவே இருக்கிறது. அதனாலோ என்னவோ, சாதாரண விஷயங்களின் நுட்பங்களை எடுத்துச் சொல்லுகிறது. இனி வரும் வாரங்களின் எஸ்ரா இன்னும் மனதை அரித்து சுத்தமாக்குவார் என்று நினைக்கிறேன்.. அவருக்கு என் முன் வாழ்த்துகள்!!

பிகு:
திரு.எஸ்.ராமகிருஷ்ணனின் சிறிது வெளிச்சம், ஆனந்தவிகடனில் ஆரம்பமாகியிருக்கிறது. கிட்டத்தட்ட ஆனந்தவிகடன் வாங்குவது நின்றுபோன சூழ்நிலையில் அவர்களது இந்த தொடர், தொடர்பற்று போன எனக்கும் ஆ.விக்குமான உறவை சற்று வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இப்பொழுது சிறிது வெளிச்சம் ஒரு பாகமே வந்திருக்கும் இச்சூழ்நிலையில் இதைப்பற்றி எழுதவேண்டிய அவசியமோ, நிர்பந்தமோ, படிக்கும் வரையிலும் இல்லை ; ஆனால் படிக்கத் துவங்கியதும் நிச்ச யம் எழுதியே ஆகவேண்டும் என்பதை உறுதிபடுத்திக் கொண்டேன். இது விமர்சனமல்ல, படித்தவுடன் தோன்றிய எண்ணங்கள்.


காலையிலிருந்தே பெருத்த மழையாகவோ, சின்னஞ்சிறு துளிகளாகவோ விழாமல் சீராக மழை பெய்துகொண்டிருந்தது. அப்போதே எனக்குத் தோன்றியது என்னவோ நடக்கப் போகிறது என்று. சுமார் பத்து மணியளவில் அலுவலகத்திற்குப் போய் சேர்ந்தேன். அப்போதுதான் எனது பார்ட்டி ஒருவர் கூப்பிட்டார். இப்பொழுது வரப்போவதாகவும் உடனடியாக ஒரு வேலை இருப்பதாகவும் சொன்னார். சரி என்று நானும் எனது அலுவலகத்தை அவரது வருகைக்காக தயார்படுத்தி வைத்திருந்தேன்.

மழை இன்னும் விட்டபாடில்லை. பிறகு எப்படி வரப்போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு பியான்சியின் பாடல் ஒன்றை சத்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திலெல்லாம் குறிப்பிட்ட பார்ட்டி வந்து சேர்ந்தார். அட அவர் மட்டும் வந்திருந்தால் பரவாயில்லை, உடன் இருவரை அழைத்து வந்திருந்தார். அவர்கள் இருவரும் கொரிய நாட்டைச் சார்ந்தவர்கள்.

சரி வந்தவர்கள் எப்படி இருந்தார்கள் என்று உங்கள் சிந்தனைக்கு எட்டும் வரை சொல்லுகிறேனே!

அப்பா, மகளாக இருவர்..அப்பாவை விடுங்கள்,. நான் சொல்லப்போவது அந்த கொரிய மகளைப் பற்றித்தான். நன்கு சிவந்த முகம், பரந்த நெற்றி, விரிந்த கூந்தல், விலகி நிற்கும் கண்கள், முகத்தோடு சேர்ந்தவாறு சப்பை மூக்கு, சுருக்கமான வாய் ; கொஞ்சம் உதட்டுச் சாயம், வட்ட முகம்.. ஏறத்தாள என்னுடைய உயரம்.. கருப்பு வர்ண டீ சர்ட்டும் நீல வர்ண (Navy ) ஜீன்ஸும் அணிந்திருந்தாள். கழுத்தில் மூக்கில் கையில் என்று எந்த இடத்திலேயும் உலோக ஆக்கிரமிப்பு இல்லை.

நான் முதலில் அவர்களோடு பேசவில்லை. பார்ட்டியோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது எனது பார்ட்டியும் அந்த கொரிய மாமாவும் (இனிமே மாமா ) ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்த அந்தப் பெண், நைஸ் ஷாங் (Nice Song) என்று நான் ரசித்த பாடலை ரசித்தாள்.. (அப்பவே ஆதவன் கவுந்தான்.)

டு யூ லைக் பியான்ஸி? (Do you like Beyonce?) இது நான். அவளிடம் பேசும் பொழுது என் ஆங்கிலம் தடுமாறியது. அதைவிட பதட்டம். அவளோ பதட்டமின்றி

யா யா ஐயம் ஃபாந்த் ஆஃப் ஹெர் (I am fond of her?) என்றாள். சொன்னவள் நேரே அவள் அமர்ந்திருந்த நாற்காலியை சற்று இழுத்து, என்னருகில் அமர்ந்தாள். (ஆதவன் காலி) நான் அவள் பெயரைக் கேட்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் மிதந்துகொண்டிருந்தேன். அவளோ என்னிடமிருந்த டிசைன் சாம்பிள்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நிமிடங்கள் கழித்து, " வேர் ஆர் யு ப்ரம்? (where are you from?) என்றேன். உடனடியாக, " கொர்ரியா" என்று பதில் வந்தது.. அத்தோடு நிறுத்திக் கொண்டேன்.

பிறகு அவரது அப்பா மகளிடம் ஏதோ பேசினார்.. அப்பொழுதுதான் கொரிய பாஷையைக் கேட்கிறேன். அதற்கு முன்னர் கேட்டதில்லை.. பிறகு அவர் ஒரு சிடி ஒன்றைத் தந்தார். அதை என் கணிணியில் சுழல வைத்தேன். பிறகு அந்த கொரிய பெண்,

"ஓபன் த சீதி, ஃபைந் தி திசைன் அன் ஃபாலோ தி ஆர்ட்வோர்க்" (Open the CD find the design and follow the artwork) என்றாள்.. அவளது ஆங்கிலம் ஒருமாதிரியாக இருந்தது. டி (t) என்பதை தி என்கிறார்கள். கொரிய ஆங்கிலம் அப்படித்தான் போலும். சரி நமக்கென்ன என்று சிடியைத் திறந்து டிசைன்களை எடுத்து வேலை செய்துகொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழித்து என்னைப் பற்றி விசாரித்தாள். தட்டுத் தடுமாறி என் பெயர் என்ன, என்ன செய்கிறேன் என்பதை ஓரளவு சொன்னேன். வருமானம் உனக்கு எவ்வளவு இருக்கும் என்றாள். அதைச் சொல்லமுடியாது என்று சொல்லி சிரித்துவிட்டேன். அவளும் சிரித்தாள்.. (அடடா!!!)

சிறிது நேரத்திற்கெல்லாம் மழை நின்றுவிட்டது. அவளுக்கு மழை பிடிக்கிறதாம். ஆனால் ஊர் ரொம்ப ஹாட் என்றாள். நான் புன்னகைத்துக் கொண்டே டிசைன் வேலைகளை செய்துகொண்டிருந்தேன்.

எனது பார்ட்டி என்னிடம் வந்து, டிசைன் முடிந்ததா என்று கேட்டார். இல்லை என்றேன். உடனே அவர், தானும் அந்த கொரிய மாமாவும் அலுவலகம் வரை சென்று வருவதாகவும் மகள் இங்கேயே இருப்பாள் என்றும் (ஓவரா ஜொள்ளு விடாதே என்று எச்சரித்தும்) சென்றார்.. அப்பாவிடம் மகள் ஏதோ சொல்ல, அவரும் மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு சென்றார்..

அய்யோ!!! ஆதவா.. உண்மைதானா... இதெல்லாம்.. என் கையை நானே கிள்ளிக் கொண்டேன்.

அந்தப் பெண் பெயர் இதுவரையிலும் தெரியவில்லை, நானும் எக்ஸ்க்யூஸ்மி என்றுதான் அழைத்தேன், அவளும் பெயர் சொல்கிறமாதிரி தெரியவில்லை.

சரி, வேறென்ன நடந்தது என்று கேட்கிறீர்களா?

நான் கூல்ட்ரிங் ஆர்டர் பண்ணவா என்று கேட்டேன். நோ நோ, என்று மறுத்துவிட்டாள். அப்பறம் உங்கள் நாட்டு சமையல் எப்படி இருக்கும் என்று கேட்க, எனக்கோ விழி பிதுங்கிவிட்டது.. (சமாளிடா..) நான் மதிய உணவிற்காக கொண்டு வந்திருக்கும் எனது உணவை எடுத்துக் காட்டினேன். (கஷ்டகாலம்) இப்படித்தான் செய்வோம் என்றது, தாங்களும் அப்படித்தான் செய்வோம் என்றார்கள் (அடப்பாவமே!)

சாப்பிடுகிறீர்களா என்று கேட்டதற்கு வேண்டாம் என்று மறுத்தாள். பிறகு, என்ன நினைத்தாலோ தெரியவில்லை, டேஸ்ட் பார்க்கவேண்டும் என்றாள்.
அம்மா செய்திருந்த சுருக் சுண்டல் குருமாவும், கத்திரிக்காய் பொறியலும் சற்று ருசி பார்த்தாள். (என்னவோ கமெண்ட் செய்தாள்.. எனக்குப் புரியவில்லை)

எனக்கோ ஆனந்தம்.. தமிழ்நாட்டு சமையலை வேறு நாட்டுப் பெண்ணொருத்தி ருசி பார்க்கிறாள் என்றால் சும்மாவா?? இதுவரையிலும் எத்தனையோ ஃபாரினர்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஆனால் இது முற்றிலும் புதிய அனுபவம்.

சிறிது நேரத்தில் சென்ற இருவரும் நந்தி மாதிரி வந்துவிட்டார்கள். திசைன் (Design) முடிந்துவிட்டது. கிளம்பிச் சென்றுவிட்டார்கள்..........

செல்லும்பொழுது, நைய்ய்ஸ் காய் (Nice Guy) என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.. (என்னையா? இல்லை கத்திரிக்காயையா?)

வெளிநாட்டவள் அதிலும் ஒரு பெண்ணின் பாராட்டு..... தித்திக்கும் தேன்......

பிகு: மேலேயுள்ள அந்த புகைப்படம் நான் சொன்ன கொரிய பெண் அல்ல.. இச்சம்பவம் நடந்து பல மாதங்களாகிறது , கடைசி வரைக்கும் அவளின் பெயரைக் கேட்கவேயில்லை... (என்ன கொடுமை இது!!!)எனது எல்லா செய்கைகளும்
தந்தையைப் போலுள்ளதாம்
பயமாகத்தான் இருக்கிறது
அவரைப் போல வந்திடுவேனோவென்று!

XxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXx

அவரிடமிருந்து அதட்டல்
"வேளைக்கு உணவிடாவிடில் அல்சர் வரும்"
இது அக்கறையா?
எச்சரிக்கையா?

XxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXx

தானாடாவிடினும்
தன் தசை ஆடும்
சச்சரவுகளுக்கு மத்தியில்
அவர் மனம் புண்படுகிறதாவென
பார்த்துக் கொண்டேன்

XxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXx

சண்டை ஓய்ந்த பின்னே
அச்சம் தொத்தும்
நாளை எனக்கெதிரேவும்
நடக்கலாம்.

XxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXx

குறைந்த வயதினில்
கன்னத்தில் ஓங்கியடித்தார்
தோள் தாண்டி பழிதீர்த்தேன்
இதயத்தில் அடித்து.உதிர்தலில் வாடாத மரங்களின்
பெருமூச்சைக் கடந்து செல்லும்
நதியின் சலனமாக கடவுள் உறங்குகிறார்

ஒரு பூனையின் சாதுர்யமாக
கடவுளின் இல்லத்திற்குள் நுழைந்து
அவரது பஞ்சனைக்கு அருகில் அமர்கிறேன்

அவரின் பாதங்களில்
பிரார்த்தனைச் சீட்டுக்கள் விழுகின்றன
ஒவ்வொரு சீட்டினுள்ளும்
கடவுளின் உஷ்ணத்தில் பிறந்து
சூடு தாளாமல் இறந்து போன
யாரோ ஒருவர் இருக்கிறார்
வெகு சிலர் எனது இருப்பை
கடவுளுக்குத் தெரியப்படுத்த முயலுகிறார்கள்
அவர் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறார்

என் கோணிப்பை நிறைத்திருக்கும்
விஷத்திலிருந்து இரு சொட்டுக்களை
அவரது வாயில் ஊற்றுகிறேன்
அவை வழுக்கிச் சென்று
மரண முடிச்சைத் தேடுகின்றன

கடவுள் திமிருகிறார்
கண்கள் பிதுங்குகின்றன
சிறிது நேரம் மனிதர்கள் பிறப்பது நிற்கிறது
மூச்சு அடங்குகிறது
கடவுள் இறந்து போகிறார்

கடவுளின் இல்லம் விட்டு நகர்கையில்
எனது வாயிலிருந்து இருபற்கள்
நீட்டி முளைத்து நிற்கின்றன
ஒரு பிசாசின் உருவமாக

20.5.09

தமிழின் நிலை?

|

இந்த படங்களை நன்கு பார்த்துவிட்டு சொல்லுங்கள், இறந்தவர் பிரபாகரன் தானா அல்லது வேறு யாராவது புலியா?
இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரனைக் கொன்று விட்டதாகக் கூறி வருகிறது. இத்தகவல் உண்மையா பொய்யா என்று கூறிக் கொண்டு அழுவதைக் காட்டிலும் அடுத்த என்ன நிகழும் என்பதில்தான் ஒட்டுமொத்த தமிழர்களின் கவனம் இருக்கவேண்டும்.

பிரபாகரன் உண்மையாகவே இறந்ததாகவே இருக்கட்டும்... ஈழமக்களின் மீதான கொடூரத் தாக்குதல் இனி நிறுத்தப்படுமா? அல்லது மறைமுகமாக செயல்படுத்தப்படுமா?

வட இலங்கை இனி எப்படி இருக்கப் போகிறது? அங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் கதி இனியென்ன?

விடுதலைப்புலிகளின் ஆயுத தளபாடங்கள் எங்கே போயின? அதை ஏன் இலங்கை அரசு காட்ட மறுக்கிறது?

இப்படி பல கேள்விகள் உண்டு. என்னைப் பொறுத்தவரையில் பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியைக் காட்டிலும் தமிழினம் இலங்கையில் எப்படி இருக்கும் என்ற கேள்வியே பிரதானமாக இருக்கும். 


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

ஆதவன் என்றால் சூரியன் என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் முதலாவது என்றும் அர்த்தப்படும். இயற்பெயரோடு இணைந்திருப்பதால் இப்பெயர் வந்தது. பெயர்களை நிறைய மாற்றுவேன். வலையுலகிற்கு வந்த பின்னர், ஆதவா மட்டுமே நிலைத்திருக்கிறது. எனது இயற்பெயர் மட்டுமல்ல, எல்லா பெயர்களையும் நான் விரும்புவேன்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

27-07-08. என் அண்ணன் இறந்த தினத்தன்று.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

நிச்சயம் பிடிக்கும். கையெழுத்திற்கென பரிசுகளும் பெற்றிருக்கிறேன். பள்ளி காலத்தில் என் கையெழுத்து மிக அருமையாக இருந்தது. இப்பொழுது எழுதுவதைக் காட்டிலும் டைப்படிப்பதே அதிகம். அதனால் பழைய அழகான கையெழுத்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக் கொண்டே இருக்கிறது.

4).பிடித்த மதிய உணவு என்ன?

அசைவ உணவுகள் எல்லாமே!! எங்கள் வீட்டில் அசைவம் வித்தியாசமாக சமைப்பார்கள். அதற்கு சிந்தாமணி என்று பெயர். அது மிகவும் பிடிக்கும் இப்பொழுது கூட அதை சாப்பிட்டுவிட்டுத்தான் இங்கே தருகிறேன்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நட்பு என்பது இப்பொழுது எழுத்துக்கள் வடிவிலும் காணக்கிடைக்கிறது.. எனது நட்பு புத்தகங்களின் வழியாகவும் இணையங்களின் வழியாகவும் பெருகிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் நான் யாரையும் உடனே நட்பு பாராட்டுவதில்லை. வந்த நட்பை கைவிடுவதுமில்லை.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டையும் விட ஆற்றில் குளிக்க பிடிக்கும்... கடல், அருவி.. இரண்டிலும் குளித்ததில்லை.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம். அல்லது கண்கள்.. பேசும் போது அவர்களது உதடுகள். நான் முகம் பார்க்காமல் பேசிய தருணங்கள் அதிகம்.. இவையெல்லாவற்றையும்விட, அவர் எப்படி பேசுகிறார். என்ன வார்த்தைகளை உபயோகிக்கிறார் (தமிழ் அல்லது ஆங்கிலம் கலக்கிறாரா என்பது...) உதாரணத்திற்கு யாத்ராவோடு பேசுகையில் அவர் எதார்த்தமாக ஆங்கிலத்தைத் தவிர்த்து தமிழில் பேசுவதைக் கண்டேன். அதேசமயம் கார்த்திகைப்பாண்டியனிடம் பேசும் பொழுது சிலநேரங்களுக்கு அவர் ஆங்கிலத்தை நாடுவதும் பிடித்திருந்தது..

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது : எதையுமே சந்தோஷப்படுத்தி, திருப்தி கொள்ளும் பண்பு... சிக்கனம்.. சமாளிஃபிகேஷன், இப்படி நிறைய உண்டு... முக்கியமாக மறதி.

பிடிக்காதது : கோபம். திடீர் முடிவுகள். நிராகரித்தலை மறுபரிசீலனை செய்யாமலிருப்பது. முக்கியமாக மறதி

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இன்னும் திருமணமாகவில்லை. இப்பத்தாங்க டீன் ஏஜ் முடிஞ்சிருக்கு!!!!

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

எனது அண்ணன். ஈரோடு சினீவாசன்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கறுப்பும் வெள்ளையும் கலந்த பின்னலாடையும் சாம்பல் நிற முழுக்கால் சட்டையும். (Gray Pant)


12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கணிணி திரை... வெளியே வாகன சப்தம், சூரியன் FM இல் ஒரு விளம்பரம். அருகே எம்ராய்டரி மிஷின் ஓடும் சப்தம்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருஞ்சிவப்பு.... எனக்கு மிகவும் பிடித்த வர்ணம்.

14.பிடித்த மணம்?

மல்லிகை. அதனை முகரும் பொழுதெல்லாம் எனக்கு யாரோ ஒருத்தியின் ஞாபகம் வரும்.


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?


அ.மு.செய்யது. தனக்காக எழுதுவதைக் காட்டிலும் மற்றவருக்காக எழுதுகிறார். அவரது ஊக்கமும் அவரது ஆழ்ந்த பின்னூட்டமும் எனக்குப் பிடித்தமானது. நன்கு படித்து விட்டு கருத்து சொல்லும் பலரில் இவரும் ஒருவர். (ஒருசிலர் படிக்கிறார்களா என்பதே தெரியாது... :( )

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

கார்த்திகைப் பாண்டியன்

என்னைப் பொறுத்தவரையில் எல்லா பதிவுகளுமே எனக்குப் பிடித்திருந்தது. சமீபத்தில் பேருந்து கவிதையொன்று கொடுத்திருந்தார். மிகவும் அருமையாக இருந்தது... நல்ல எழுத்தாளர். எஸ்ராவின் ரசிகர். இலக்கிய உலகில் நல்ல இடம் அவருக்குக் காத்திருக்கிறது.

17. பிடித்த விளையாட்டு?

Call of Duty 1, 2,
Soldier of fortune II
GTA 3
Warcraft III
Doom 3
இவையெல்லாம் விரும்பி ஆடிய வீடியோ கேம்ஸ்,

கிரிக்கெட், செஸ்.

18.கண்ணாடி அணிபவரா?

ஆம்.. கடந்த எட்டு ஆண்டுகளாக அணிந்து வருகிறேன்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

மனதில் அமர்ந்து கொஞ்சநேரம் அசைபோடவேண்டும். சமீபத்தில் அப்படியான தமிழ்படம் காதல், தவமாய் தவமிருந்து.. அஞ்சாதே
ஆங்கிலப்படங்கள் நிறைய உண்டு..

20.கடைசியாகப் பார்த்த படம்?

திரையரங்கில் : அயன், (தமன்னாவுக்காக)
சின்னத்திரையில் : Monsters Inc தமிழில் (சன் டி.வி)

21.பிடித்த பருவ காலம் எது?

வெயிலும் பிடிக்கும்.. மழையும் பிடிக்கும்... பருவகாலத்தை என்றுமே நான் நொந்து கொண்டதில்லை.

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

உறுபசி முடித்தபின்னர் வேறேதும் கைவசமில்லை. ஆனந்த விகடன் தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஏழு வருடங்களாக கணிணியில் பணிசெய்கிறேன். XP புதியதாக வந்த பொழுதிலிருந்து தற்சமயம் வரை டெஸ்க்டாப் படத்தை சுமார் ஐம்பது முறை கூட மாற்றியிருக்கமாட்டேன்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

எனக்கு நிசப்தம் ரொம்ப பிடிக்கும்.
பிடித்த சப்தம் : குழந்தையின் சிரிப்பு
பிடிக்காதது : குழந்தையின் அழுகை

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

திருப்பதி.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எல்லோருக்கும் தனித்திறமைகள் உண்டு. அவரவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவை வெளியாகின்றன.

எழுத்து ஈடுபாட்டைப் போன்றே ஓவியங்களில் சற்று திறமையுண்டு. ஆனால் இப்பொழுது அதைச் செய்வதில்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

சந்தேகம். என்னை யாராவது அநாவசியமாக சந்தேகப்பட்டால் அவர்களோடு நான் வாழ்நாளும் பேசுவதில்லை..

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

பலகோணம்.. ஒருவரைச் சந்தித்த பிறகு அவர் என்னென்னலாம் நினைப்பார் என்று யோசிப்பேன். அவரது இடத்தில் நானிருந்தால் என்றும் நிதானிப்பேன். சிலசமயங்களில் அதுவே அவர்மீதுள்ள அபிப்பிராயத்தின் ஏற்ற இறக்கத்தை மாற்றிவிடுகிறது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இந்தியா என்றால் பழங்கால கலைமிகுந்த கோவில்கள் பிடிக்கும்...
வெளிநாடு என்றால் வறுமை மிகுந்த ஆப்பிரிக்க நாடுகள்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

நல்லா அனுபவிக்கணும்... சந்தோஷமா இருக்கணும்.. ஞாயிறு அன்று நான் எங்கேயும் செல்லுவதில்லை. கூடுமானவரை தவிர்த்துவிடுவேன். வீட்டில் அமர்ந்து கொண்டு, டி.வி, புத்தகம், இணையம், திரைப்படம், கணிணி விளையாட்டு, அரட்டை, தூக்கம் என்று பலவும் செய்வேன்... இந்த வாழ்க்கை எனக்கு வரம் போன்றது. அது வாழும் வரை நான் நன்கு அனுபவிப்பேன்.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

திருமணமாகவில்லை... அப்படி ஆகியிருந்தாலும் சொல்லுவதற்கில்லை.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

முகத்தில் எப்போதும் சந்தோஷம் பெருகியிருக்க வேண்டும்... யாரையும் குத்தாத சந்தோஷ வாழ்வு நிறைவைத் தரும்.. நிச்சயம்... வாழ்வு என்பது அனுபவிக்க.... அதேசமயம் அர்த்தப்படுத்திக் கொள்ள...

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

அ.மு.செய்யது.

யாத்ரா விடைபெற்றுக் கொண்டு பேருந்து நிலையத்தில் நடந்து செல்லும் பொழுது அடர்ந்த கானகத்தில் அநாயசமாக நுழையும் காற்றைப் போன்று இருந்தது. மென்மைக்கான முழு உருவம் அவர் என்றே கூட சொல்லிவிடலாம். மே 13 சந்திப்புகள் குறித்து பலவகையிலும் சிந்தித்து வைத்திருக்கும் வேளையில் எதிர்பாராத சந்திப்பு யாத்ராவோடு நிகழ்ந்ததை எண்ணிக் கொண்டே பேருந்து நிலையத்தைவிட்டு வெளிவந்தேன்.

என்னோடு வரும் பொழுதே வீண் சிரமம் வேண்டாம் ஆதவா, நானே நடந்து போய்க்கொள்ளுகிறேன் என்றார். நாங்கள் அமர்ந்திருந்த பேக்கரிக்கும் பேருந்து நிலையத்திற்கும் இடையே எப்படியும் ஒரு கி.மீட்டர் இருக்கும். எனக்கு சிரமம் வேண்டாம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் விருந்தோம்பல் என்பது விடைபெற்று செல்பவரை இறுதி வரையிலும் கவனிப்பது ஆகும். அதைத்தான் நான் செய்தேன்

பேக்கரியில் நானும் யாத்ராவும் எழுந்து செல்லக் காத்திருந்தோம். ஒரு சில மணித்துளிகள்தான் சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால் எந்த ஒரு நொடியையும் இருவரும் எரித்து சாம்பலாக்கவில்லை. சொல்லப்போனால் ஒவ்வொரு நொடிகளுக்குமிடையே கொஞ்சம் இடைவெளி அதிகமிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தோம். அவர் தன் கையில் கொண்டுவந்திருந்த நீல வர்ண பெட்டியை சரிபார்த்துக் கொண்டார்.

கவிதைகள், அரட்டை, வலைப்பதிவுகள் என்று வழக்கமான பதிவர் சந்திப்புப் பேச்சுகளோடுதான் ஆரம்பித்தோம். மெல்லிய வர்ணத்தில் ஒரு சட்டை அணிந்திருந்தார். சற்றே நீள்வட்ட கருத்த முகம். கண்கள் கூர்மையாக இருந்தன. அவரது பேச்சு மிக மெல்லிய இழையில் தங்கும் சப்தத்தைப் போன்று இருந்தது. அகநாழிகை, அவர் பாடுவார் என்று சொல்லியிருந்தார். பாடுகுரல் பேச்சின் வழியே வந்ததைக் கவனிக்க முடிந்தது. அவருக்குள் சிறிது நாணம் இருப்பதாகவும் கருதுகிறேன்.

சிகரெட் பிடித்துக் கொள்ளலாமா என்றார். எனக்குப் பழக்கமில்லை என்றேன். மன்னிப்பு கேட்டார். அவர் கேட்ட விதம் சற்றே ஆச்சரியமளித்தது. தொழில் துறைகள் குறித்த தகவலைப் பரிமாறிக்கொண்டோம். பேக்கரியில் சும்மா அமர்ந்திருக்க முடியாதே.. இரண்டு கூல்ட்ரிங்ஸ் சொன்னோம். ஒன்று மாஸா, இன்னொன்று ஃபாண்டா.

திருமணத்திற்காக வந்திருப்பதாகக் கூறினார். நேராக ஊருக்குச் செல்லாமல் மணல் வீடு ஆசிரியரைப் பார்த்துவிட்டுத்தான் செல்லவேண்டும் என்றார். கவிதைகள் மீதான காதல் குறித்து சிறிது பேசினோம். நன்கு வாசிக்கிறார் என்பது தெரிகிறது. பேக்கரியில் நுழையும் முன்னர் ஒரு வேப்ப மரத்தினடி நின்று கொண்டிருந்தார். சரியான உயரம். இன் செய்திருந்தார். ஒரு பிஸினஸ் மேனுக்குரிய மேனரிஸங்கள் நன்கு பளிச்சிட்டன. யாத்ரா என்னைத் தொடர்பு கொண்ட போது நான் வீட்டில் இருந்தேன். முதலில் என் அலுவலகத்திற்குத்தான் வருவதாக இருந்தார். நான் தான் அங்கே பேச வாய்ப்பே இருக்காது என்று சொல்லிவிட்டு அவரை பேக்கரிக்குள்ளாகவே தள்ளிக் கொண்டு போனேன்.

யாத்ராவுடனான சந்திப்பில் நேரம் போதாது என்று வீட்டிலிருந்து கிளம்பும் போதே எனக்குத் தெரியும். ஏனெனில் ஹாய் மட்டும் சொல்லிவிட்டு போய்விட யாத்ரா வேறு மனிதரல்ல. பதிவுலகம் மனிதர்களின் மனதை விரித்து வைக்கிறது. அது எப்பொழுதும் திறந்தே கிடக்கிறது. சந்திப்புகள் தினமும் எழுத்தின் வழி நடக்கின்றன. அவரை சந்தித்த முதல் நொடியில் நான் அவருக்காக கட்டிவைத்திராத அவரது பிம்பம் அப்பொழுது கட்டிக் கொள்ள ஆரம்பித்தது!!

திருச்சி சந்திப்பில் பங்கெடுக்காமல் என்னைக் காதலித்து மோகித்து இரண்டு நாட்கள் சிறையிலடைத்த காய்ச்சலுக்கும், வறட்டு இருமலுக்கும் கண்டனங்கள்!!!

15.5.09

ஞாபக நகங்கள்

|இன்றைய காலையில் நகவெட்டியைத் தேடிக் கொண்டிருந்தேன். வெள்ளிக்கிழமையும் அதுவுமா நகத்தை வெட்டாதே என்று அம்மா திட்டியதை ஒரு காதில் நுழைத்து இன்னொரு காதில் உருவியெடுத்துவிட்டு நீண்டு கூர்ந்திருந்த நகத்தை வெட்டுவதற்காக ஆயத்தமாகியிருந்தேன்.. அது ஏனோ, நான் நகங்களை வெட்டும் நாட்கள் வெள்ளி அல்லது சனிக்கிழமையாகவே அமைந்துவிடுகிறது.. என்னுடைய அன்றாட திட்டமிடுதலிலிருந்து தப்பிச் சென்று நகங்கள் நீளுகின்றன. அதற்கான பொழுதுகளை எதிர்பார்ப்பதுமில்லை. கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், வெட்டப்படும் நாட்கள் எல்லாமே வெள்ளி அல்லது சனியாக இருப்பது என்ன காரணத்தினால் என்பது தெரியவில்லை. கிழமைகள் என்றுமே உகாததாக இருப்பதில்லை. அவைகள் எந்தவொரு நோக்கத்தோடும் பிறப்பதில்லை, ஒருவேளை மூடநம்பிக்கைகளை உடைத்தெறியும் காரணத்தின் பொருட்டு எனக்குள்ளாகவே என்னை அறியாமலேயே அந்த நாட்களை நகம் வெட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கிறேனோ?

நகங்கள் உடலின் ஒரு பாகம் என்று நினைக்கும் பொழுது சிரிப்பாக இருக்கிறது.. அவை எங்கிருந்து முளைக்கின்றன, அதன் வேர் என்ன எனும் ஆராய்வுக்கு இதுவரையிலும் சென்றதில்லை (இளசு அண்ணா சொல்வார் என்று நினைக்கிறேன்) பலருடைய விரல்களைக் காணும் பொழுது அவர்களின் நகம் எப்படி இருக்கிறது என்பதை மட்டும் அவதானிப்பேன். சிறு வயதில் நகங்களில் பூ பூக்கிறது என்று (வெள்ளைப் படுதல்??) ஒவ்வொரு விரலையும் எண்ணிக் களித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. அது ஒரு நம்பிக்கை. அதிகம் பூ உள்ளவர்களுக்கு நல்ல மனைவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்பொழுது எண்ணினால் ஓரிரண்டு தேறுகிறது.

வெகு சில நாட்களுக்கு முன்னர், இடதுகை ஆட்காட்டி விரலில் அடிபட்டு இரத்தம் நகங்களின் இடுக்கு வழியே ஒழுகிக் கொண்டிருந்த பொழுது, நகங்களின் முழுமையான பணி என்ன என்பதை முழுமையாகவே உணர்ந்து கொண்டேன். விரல்கள் கண்களாக இருக்கின்றன. நக இடுக்குகள் என்றுமே மூடிக்கொண்டிருக்கின்றன அல்லது பாதுகாப்பாக இருக்கின்றன. முட்டி ஓடும் இரத்த நீரை அது வெளியேற்றவிடாத பாதுகாவலனாக, விரல்களின் வலிமை அரணாக இருந்துவருகிறது. விரல்கள் அற்றவர்களுக்கு நகங்கள் வெட்டவேண்டும் என்ற அவசியம் நேராததை நினைக்கும் பொழுது நமக்கு ஏன் அது வளரவேண்டும், வளர்ந்து நறுக்கவேண்டும் என்று தோணுகிறது.. இது சோம்பேறித்தனத்தின் எண்ணங்களா இல்லை கையற்றவர்களைப் பற்றி நினைக்கும் கையறு நிலையா என்பது தெரியவில்லை.

சிலசமயம் யோசனைகளை மீறும் பொழுதோ அல்லது யோசனைகளை கயிறு கட்டி இழுக்கும் பொழுதோ, நகங்கள் உணவாவதை நிதானித்திருக்கிறேன். இரவு மொட்டை மாடியில் நகங்களைக் கடித்துத் துப்பாமல் விழுங்கும் பொழுது அது குடலைக் கிழித்து செல்லுவதைப் போன்றும் தொண்டையில் அடைத்து சிறுநாக்கைச் சுரண்டுவது போலவும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அதே உணர்வோடு உணர்வாக மீண்டும் நகங்களைக் கடிப்பது எதற்காக என்று எனக்கும் தெரியவில்லை. நகம் தின்னுவதில் பெரும்பாலும் எனது கட்டை விரல்கள் முன்னுக்கு வருவதில்லை, ஏனைய நான்கும், குறிப்பாக சுண்டுவிரல் நகம் என் பசிக்கு இரையாவதை எல்லா நாட்களிலும் தவிர்க்க முடியவில்லை. கடித்து அப்படியே விழுங்காமல், அதை சிறுசிறு துகள்களாக செதுக்கி, நாக்கால் குழைத்து பின்னரே விழுங்க நேரிடுகிறது. நகங்களின் வளர்ச்சி எப்படி தெரியாமல் இருக்கிறதோ அதைப் போன்றே விழுங்குவதும் எனக்குத் தெரியாமல் நடக்கிறது. எல்லா நாட்களிலும் நகங்களை வெட்டிய பின்னரும், கடிப்பதற்குத் தோதாக நகங்கள் முட்டி நிற்கின்றன. எந்தவொரு சூழ்நிலையிலும் கடிப்பதற்கு இல்லை என்று வெசனப்பட்டதில்லை.

சென்ற ஞாயிறில் ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு குழந்தையைக் கொஞ்சுவதற்காகத் தூக்கினேன். என்னை அறியாமல் என் கைவிரல் நகம் பட்டு அக்குழந்தையின் இடுப்பில் சிறு கீற்று படிந்து இரத்தம் மெல்ல எட்டிப் பார்த்தது. அக்குழந்தையின் கதறலையும் மீறி எனக்குள் நகம் குறித்த வெறுப்புகள் அழுந்தின. நகங்களை வெட்டுவதில் நான் என்றுமே பிரயத்தனப்பட்டதில்லை. அது கண்ணுக்குத் தெரியாத ஆயுதமாக என்னுள் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆயுதங்களுக்கு எந்தவித நோக்கமும் இல்லாமல் இருப்பது போன்று நகங்கள் இருக்கின்றன. பல சமயங்களில் ஆயுதங்களைப் பற்றிய வரையறையிலிருந்து நகங்கள் மட்டும் தப்பித்துச் செல்ல நேர்ந்ததை நினைவுகூர்ந்தேன். அறுதியிட்டு சொல்லமுடியாத தொலைவில் நகங்கள் இருக்கலாம் என்று எனக்கு நானே சமாதானமும் சொல்லிக்கொள்ள வேண்டியதாயிற்று. என்றாலும் யார்மீதோ பட்டு கிழிக்கும் ஒரு ஆயுதமாக எண்ணிப் பார்க்கும் வெறுப்பிலிருந்து நகங்களைக் குறித்த என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள இயலவில்லை.பொதுவாக, பெண்களுக்கு நகங்கள் வளர்ப்பதில் சிறிது விருப்பம் இருக்கின்றது,. அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான ஆயுதமாக விளங்கியிருக்கலாம். எனக்கு பெண்களின் நக அழகு மிகவும் பிடித்த விஷயம். அவர்கள் அதைப் பாதுகாப்பதும் நகப்பூச்சு பூசி அழகுபடுத்துவதும் சொல்லமுடியாத உணர்வுகள்... ஒரு சில பெண்களின் நகங்களில் சிறு சிறு பூக்கள் வரைந்து அழகுபடுத்தியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். நகங்கள் வளர்ப்பது சிலருக்குப் பொழுது போக்காகக் கூட இருக்கிறது. எங்கள் பழைய வீட்டில் ஒரு மாமா இருந்தார். அவரது இடது கட்டை விரலிலும் ஆட்காட்டி விரலிலும் ஒரு செ.மீட்டர் அளவிற்கு நகங்களை வளர்த்து வைத்திருப்பார். அவர் ஒரு தையல்காரர் என்பதால் துணிகளை மடித்து தேய்க்க அந்நகங்கள் உதவுகின்றன என்பதை அறிந்து கொண்டேன். கத்தியின்றி வெங்காயம் நறுக்கும் பொழுது, ஏதாவது ஒரு பொருளை சுரண்டும் பொழுது, சிலசமயம் உடலைச் சொறியவும் கூட நகங்களுக்கு வேலைகள் இருக்கின்றன.

ஆயுதங்கள் நீண்டால், ஒடுக்கப்படவேண்டும் என்ற நியதிப்படிதான் நகங்கள் வெட்டப்படுகின்றன. வெட்டிய நகத்தினைக் குப்பையில் கொட்டும்பொழுது புன்னகை இதழோரம் முளைத்துவிடுகிறது. படித்து கிழிக்கப்படும் கவிதையைப் போன்று விரல்களைப் பாதுகாக்கும் பணியிலிருந்து விலகிவிட்ட நகங்கள் யாருக்கும் தெரியாமல் எங்கோ சென்றுவிடுகின்றன. ஈரமற்ற அதன் நெஞ்சிலிருந்து கண்ணீர் முட்டி நிற்பதைப் போன்ற பிரமை தோன்றுகிறது. உங்களுக்கு அப்படியேதும் தோன்றுகிறதா?

வாக்களிப்பதன் மூலம் படைப்பை பலருக்குக் கொண்டு சேர உதவி புரிகிறீர்கள்

தமிழிஷில் வாக்களிக்க..

தமிழ்மணத்தில் வாக்களிக்க

எதிர்வாக்கு

14.5.09

இருதாய்கள்

|என் தாயொரு தடாகத் தாமரை
வாழ்விலே முற்றிலும் மூழ்காதவள்
மூழ்கினும் தன்மை மாறாதவள்
எனக்கு உடன் பிறக்க வழியின்றி
உயிர் சுமக்கா
உடலைக் கொண்டவள்

பால் சுரக்கா முலைகளும்
வரி படறா வயிறும்
வாழ்வோவியத்தின்
வேண்டாத வர்ணங்களாய்
எண்ணிக் கொண்டிருப்பவள்

அன்றொருநாள்
கட்டுக் கடங்காத உண்மை
வெடித்த போது உணர்ந்துகொண்டேன்

எனக்கு மட்டும் இருதாய்கள்

கைபடாத பத்தினியாய்
பெற்றெடுத்தவளும்
எனக்காகவே வாழும்
வளர்த்தெடுத்தவளும்

---------------------------------------

வாக்களிப்பதன் மூலம் படைப்பை பலருக்குக் கொண்டு சேர உதவி புரிகிறீர்கள்

தமிழிஷில் வாக்களிக்க
தமிழ்மணத்தில் வாக்களிக்க

திருச்சியில் மே 13 புதன்கிழமை அன்று நம் வலை மக்களின் சந்திப்பு நிகழவிருக்கிறது.

வலையில் எழுதுபவர்களும், எழுத்தைப் படிப்பவர்களும், நண்பர்களும் இதில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விருப்பமுள்ள நண்பர்கள் திருச்சி இரயில் நிலையம் அருகே வந்து கீழ்கண்ட நண்பர்களின் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

:: சந்திப்பு குறித்த கார்த்திகைப் பாண்டியரின் பதிவு ::

தொடர்புக்கு :

கார்த்திகைப் பாண்டியன் +91 98421 71138
பொன்.வாசுதேவன் - +91 99945 41010


இப்பதிவிற்கு அதிக வாக்களிப்பதன் மூலம், நிறைய எழுத்தர்களையும், நண்பர்களையும் அழைக்கலாம்...

இங்கே கிளிக் செய்து நீங்களும் நண்பர்களை அழைக்கலாம்..
நீங்களும் நண்பர்களை அழைக்கலாம்..

தமிழிஷ் வழியே அழைக்க...

தமிழ்மணத்தின் வழியே அழைக்க..

6.5.09

பெண்மையின் கோபம்

|


சாரல் தூறிய பொழுதொன்றில்
சருகோசை இசைத்து
கொலுசுகள் பாட
விரைந்தோடுகிறாள்
மலங்கழிக்க

சொட்டுத் துளிகள்
ஒன்றையொன்று உதைக்க
இலைநுனிகளை ரசிக்க நேரமின்றி
கரமறுந்த மரத்திடுக்கில்
மறைகிறாள்

புலமை நிறைந்த மரக்காடு
சப்தக் கவியெழுத
அவளுக்கு உறங்கிக் கொண்டிருந்த
அச்சத் தன்மை ரசிக்கத் துவங்குகிறது

சேறு விழுங்கிய சொட்டொலி
காது படலத்தை கிழித்தெறிகிறது
மிரட்சியால் கண்கள்
கதவு பூட்டிக் கொள்கிறது

இயற்கை அவளை
அந்நேரத்திலும் ரசிக்கிறது
அங்குல அங்குலமாய்
அவள் அங்கங்களைத்
தொட்டு நுகர்ந்து ருசிக்கிறது.

காடுவழி உட்துளைந்து
மரமெய் விட்டிறங்கி
கதிர்களோ துளிகளோ
அவளை அணைத்து முத்தமிட,

கோபத் தாக்கத்தின் வெட்கச்சிதறலில்
மெய்சிலிர்த்து முகம் சிலுப்பி
ஓடுகிறாள்..
வேற்றொருவன் காண்பதாக.
-------------------------------------------

தமிழிஷில் வாக்களிக்க..

தமிழ்மணத்தில் வாக்களிக்க..

எதிர்வாக்களிக்க.

2.5.09

தொடர்பு

|


எனக்கும் கவிதைக்குமான தொடர்பு
அவள் ஒற்றை விழியசைவிலிருந்து
தொடங்கியது

அது ரோஜா இதழாக நீண்டு
எழுத்துக்களின் சுகந்தத்தைச்
சிறைபிடித்துக் கொண்டது.

எனக்கும் கவிதைக்குமான பிணைப்பு
அவள் எச்சிலிட்ட என்னுதட்டிலிருந்து
தொடங்கியது

அது எழுத்துக்களின் புணர்ச்சியாக நீண்டு
கவிதைக்கான படிமங்களாக
நிலை நிறுத்திக் கொண்டது.

எனக்கும் கவிதைக்குமான சலிப்பு
அவளுக்கு மறதி பிறந்த தினத்திலிருந்து
தொடங்கியது

அது முடிவற்று நீண்டு
காகிதங்களைத் தீயிட்டுத்
தானும் இறந்தது

எனக்கும் கவிதைக்குமான வெறுப்பு
அவள் இறுதி வாயெழுத்திலிருந்து
தொடங்கியது

அது எரிந்து கிடந்த காகிதச்சுவடுகளை
காலத்தோடு அழித்துவிட்டு
தானும் மறைந்தது.
--------------------------------------------
தமிழிஷில் வாக்களியுங்கள்
தமிழ்மணத்தில் வாக்களியுங்கள்
எதிர்வாக்கு

Subscribe