தனிமையின் கசப்பும் நிராகரிப்பும் நிறைந்த என் வாழ்வில் புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. பெருத்த அச்சம் ஏற்படுத்தக் கூடிய தனிமை எனக்கு பலநாட்கள் வாய்த்திருந்த போதிலும் வாசிப்பைக் காட்டிலும் எழுதுவதில் அக்கறை எடுத்துக் கொண்டேன். திரு.எஸ்.ராமகிருஷ்ணனோடு உண்டான வாசிப்புத் தொடர்பிலிருந்து வாசிப்பின் அடர்த்தி பெருகிக் கொண்டு வருவதை இப்பொழுது என்னால் உணரமுடிகிறது. அது உறுபசி நாவலின் வழியே நீண்டு கொண்டிருக்கிறது.

பொன்னியின் செல்வனைத் தவிர நாவல் வாசிப்பு குறித்தான எந்த ஞாபகங்களும் என்னிடம் இருந்ததில்லை. நாவல் வாசிப்பு ஒரு வெறுப்பின் சின்னமெனவும், எனது கால அளவுகளை வெட்ட வந்த கருவிகளெனவும் ஒதுக்கியே வந்தேன். நண்பர்கள் சிலர் அது தவறு என்று குறுக்கிட்டாலும் நாவல் புத்தகங்களின் மீதுண்டான என் பார்வை கசப்பும் வெறுப்பும் மிக்கதாகவே தொடர்ந்தது.. பிந்தி ஒருநாள் இணையத்தில் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உறுபசி படித்துப் பாருங்கள் என்று யாரோ ஒருவர் குறித்திருந்தார். அவரது நோக்கம் நாவல் படிக்க வைப்பதற்காக மட்டுமல்ல. அது ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

உறுபசி. நாவலை வாங்கிய பிறகு உறுபசி என்றால் என்ன என்று தேடத்துவங்கினேன். நண்பர்கள் கூட உறுபசி என்றால் என்ன என்று கேட்கத் துவங்கினார்கள். பசி உறுதல் என்று சொல்லி சமாளித்து வைத்தேன்.

உலர்ந்த சொற்களால் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்ற வரியே நாவலை வாங்கத் தூண்டியது என்றும் சொல்லலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் உலர்ந்த எழுத்துக்கள் நன்கு காய்ந்த பாறைகளில் படர்ந்திருப்பதாகவும் அதை என் எச்சிலற்ற நாவில் துடைத்து இழுப்பதாகவும் நாவல் படிக்கையில் உணர்ந்தேன். சம்பத் இன் இறப்பை ஒட்டிய நண்பர்களின் நினைவுகளும் சம்பத்தின் காய்ந்த வாழ்வுமே நாவலின் நரம்பாக இருக்கிறது. ஒவ்வொரு பக்கங்களைத் திருப்புகையிலும் ஒரு வெறுப்பின் அடையாளம் இருப்பதாகத் தோன்றி அது எழுத்துக்களின் வளைவுகளில் நின்று என்னையே உமிழ்வதைப் போன்றும் இருக்கிறது. . நாவல் குறித்தான கசப்பை மெல்ல மெல்ல மேகங்கள் விலகுவதைப் போல உறுபசி விலக்கி வந்ததை சில மணிநேரங்களில் உணரமுடிந்தது.

சம்பத்தின் கல்லூரி நண்பர்களான ராமதுரை, அழகர், மாரியப்பன் மற்றும் யாழினி ஆகியோரின் சம்பத் குறித்தான நினைவுகளில் நாவல் பயணிக்கிறது. கல்லூரியில் தமிழ் இலக்கியம் விரும்பிப் படிக்கும் சம்பத்தோடு ராமதுரை, மாரியப்பன், அழகர் மூவரும் நிர்பந்திக்கப்பட்டு படிக்கிறார்கள். சம்பத்தின் வித்தியாசமான வாழ்க்கையும் விசித்திர எண்ணங்களும் மூவரையும் நன்கு கவர்கிறது. சம்பத் யாழினியின் காதலனாக, கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஈடுபடுகிறான். கம்பராமாயணத்தைக் கிழித்து எரிக்கிறான். அரசியல் கூட்டங்களில் பேசுகிறான். நன்கு மது அருந்தி தன்னைத் தானே ஒதுக்கிக் கொள்ளும் நிலைக்கும் வந்துவிடுகிறான். அவனது கல்லூரி வாழ்க்கை நிராசைகளோடும் மிகுந்த களிப்புகளோடும் செல்லுவதாக இருக்கிறது.

பின்னர் அழகரோடு சொந்த வீட்டுக்குச் செல்லும் போது தன் தந்தையையே வெறிமிகுதியால் விறகுக்கட்டையில் சாத்துகிறான். லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கமுள்ளவனாக இருக்கிறான். அவன் தங்கியிருக்கும் லாட்ஜுக்குக் கீழே உள்ள ஒரு டெலிபோன் பூத்தில் வேலை செய்யும் ஜெயந்தியுடன் உண்டான பழக்கம் சட்டென்று திருமணத்தில் முடிகிறது. அவர்களது திருமணம் தனித்து விடப்பட்ட இருவரின் மனநிலைக்குப் பொருத்தமாக இருக்கிறது. திருமணத்துக்குப் பிந்திய சம்பத்தின் காமம் கடந்தகால நினைவுகளின் மோதலாக இருக்கிறது. யாழினியின் நிராகரிப்பு அவனது வெறிமிகுந்த காமத்தின் தீனியாக மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

சம்பத் ஒரு கிரைம் பத்திரிக்கையில் பிழை திருத்துபவனாக செல்கிறான். அங்கே குரூரமான உலகத்தில் தான் இயங்குவதாக எண்ணிக் கொள்கிறான். அவனது நிலைகொள்ளாத எண்ணங்கள் அக்கூர்மையான குரூரத்தின்பால் அலைகழிக்கப்பட்டு வேலையை உதறுகிறான். அதன் விளைவுகள் அவனை ஒரு மனச்சிதைவுக்கு உள்ளாக்கியிருந்தது. சம்பத் தன் வாழ்வு நெடுகவும் எந்த ஒரு தொழிலையும் விரும்பிச் செய்ததாக இல்லை. அது பூச்செடிகள் வளர்ப்பதாகிலும், ஏன், லாட்டரி வாங்குவதாகிலும் கூட.

சம்பத்தின் மனைவி ஜெயந்தியின் தாம்பத்திய வாழ்வு மிகக்குறுகியதாகவும், சந்தோஷங்களும் வருத்தங்களும் மிகுந்ததாகவும் இருக்கிறது. சம்பத் மருத்துவமனையில் சுருண்டு படுத்திருந்த பொழுது அவளது அலைக்கழிப்பும், தனிமையும் சம்பத்தின் வாழ்வுக்குப் பின்னர் ஏற்படும் மாற்றங்களும் மனதில் தாக்கம் ஏற்படுத்தாமல் இல்லை. ஒருவகையில் சம்பத்திற்கு ஏற்றவள் அவளாக மட்டுமே இருக்கமுடியுமென்று நினைக்கிறேன். யாழினி மிகக் கச்சிதமாக அவனைப் பற்றி தெரிந்து கொண்டு கழற்றிவிடுகிறாள். சம்பத், ஜெயந்தி தனக்குச் சரியானவளாக இருப்பாள் என்று கச்சிதமாக மணமுடிக்கிறான்.

இறப்புக்குப் பின்னர் ஏற்படும் சலனங்கள் குறித்து வெகுநாட்களாக சிந்தித்திருக்கிறேன். இந்த உலகம் ஒவ்வொருவருக்கும் தகுந்த வேலை கொடுத்திருப்பதாகவும் அந்த வேலையின் விளைவுகள் இறப்பிற்குப் பின்னர் ஒளிக்கவேண்டும் என்பதாகவுமே நினைத்துக் கொள்கிறேன். சம்பத்தின் நண்பர்கள் அப்படியானதொரு கலக்கத்தில் இருந்திருக்கவேண்டும்.

ஒருவகையில் சம்பத் ஐப் போன்றுதான் நாமெல்லாமே. மனச்சிதைவை நமக்குள்ளாகவோ, அல்லது நம் எழுத்துக்கள், கோபங்கள், ஏன் சந்தோஷங்களின் வழியேவோ கரைத்துவிடுகிறோம். நமக்குள் நாமே உருகி புதியவனாய் மாறிக் கொள்கிறோம். சம்பத்தின் இச்சைகளைப் போன்றே நமக்கும் இருப்பதாகத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் சம்பத் எந்த தவறும் செய்யவில்லை என்றேதான் நினைக்கிறேன்.

நாவலின் வழிநெடுகவும் வன்மத்தின் வண்ணம் ஊறிக் கொண்டே செல்கிறது. அது அடர்த்தி மிகுந்து கழுத்தை இறுக்குவதாகவும்கூட தெரிந்தது ( சட்டென்று நாவலை மூடி வைத்துவிட்டேன். ) திண்ணையெங்கும் தழுவிக் கிடக்கும் வெப்பத்தின் ஊடாக நாவலின் இளஞ்சூடு வாசிக்க இயலாத வெறுப்பைத் தோற்றுவித்ததை உணரமுடிகிறது. எழுத்துக்களை இவ்வளவு சூடாக எழுதமுடியா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். நாவல் படிக்கப் படிக்க என்னோடு ராமதுரையும், மாரியப்பனும், அழகரும் அவர்கள் சென்ற மலையிடுக்குகளில் பயணித்துக் கொண்டே இருந்தார்கள். சம்பத்தோடு உண்டான நினைவுகளும் நிகழ்வுகளுமாக எழுத்துக்கள் சுற்றிக்கொண்டே இருந்தன.

சம்பத் எனும் தனிமனித வாழ்வின் கசப்புகளும், வன்மங்களும், மனச்சிதைவும் நாவலின் பிளந்த பாதையில் காணக்கிடைக்கிறது. புத்தகத்தைப் படித்து முடித்தபிறகும் சம்பத்தின் மனைவி ஜெயந்தியைப் போன்று நாமிருந்தால் எப்படி இருந்திருக்கமுடியும் என்று கேட்டுக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவளது ஒருபக்க வாழ்வு ஏன் முடிந்துவிட்டது என்று கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நிகழ்காலத்தின் மீதுண்டான தாபமும் குரூரமும் அலைகளைப் போன்று முட்டி முட்டிச் செல்கிறது.

இன்னொரு வகையில் சம்பத் ஏன் இப்படித் திரிகிறான் என்றும் கேள்வி எழுகிறது. அவனது எண்ணங்கள், நடத்தைகள், எல்லாமே விசித்திரமாகவோ அல்லது கசப்பான மனிதர்களைக் கண்டிராத புதிய அனுபவத்தையோ தோற்றுவிக்கிறது. அவனது காமம் ஏன் அவ்வளவு உமிழ்கிறது? அல்லது எல்லோருடைய காமமும் அப்படியான ஒன்றா?

நாவலின் ஓரிரு இடங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் தடுமாறியிருக்கிறார். அழகர் கதை சொல்லுவதாக நாவல் செல்கிறது. ஓரிடத்தில் மாரியப்பன் என்று குறிப்பிட்டு, அழகர் மீண்டும் தொடர்வதாக செல்கிறது... நம்பமுடியவில்லை. ஒருவேளை அச்சகப்பிழையாக இருக்கலாம் என்று கருதுகிறேன். அல்லது எனது வாசிப்பனுபவத்தின் குறைபாடாகவும் இருக்கலாம். சொல்லுவதற்கில்லை. அதைப் போன்றே நாவலும் சிறியதாக இருக்கிறதோ என்ற உணர்வும் இருக்கிறது. ஆனாலும் உறுபசியை இன்னும் நீட்டிக் கொண்டிருக்க முடியாதுதான்..

உறுபசி, கடும் பசிக்கு முன்னர் வயிறு ஒலிக்கும் ஓசையைப் போன்று மனதிற்குள்ளிருந்து சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. அது நிரப்பமுடியாத பசியை சுமந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. புத்தகத்தை மூடி நிதானிக்கையில் மனமூலையெங்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் இறைந்து கிடப்பதை மட்டும் உணரமுடிகிறது.

(இது என் முதல் புத்தக விமர்சனம். குறையிருப்பது அறிவேன். குட்டினால் தெளிவேன்.)

உறுபசி- நாவல் (குறுநாவல்)
எழுத்து : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
பக்கங்கள் : 136
உயிர்மை வெளியீடு
விலை ரூபாய்.75.00

தமிழிஷில் வாக்களியுங்கள்
தமிழ்மணத்தில் வாக்களியுங்கள்
எதிர்வாக்க அளிக்க

28.4.09

நாய் பற்றிய கவிதை

|
எங்கள் வீட்டில் உயர்ரக நாய் ஒன்று உள்ளது
உருவியெடுத்த செம்மறியாட்டின்
வெற்றுக் குலையைப் போல
மடிந்து கிடக்கும் அதன் முகம்

ஜூஜூ என்று அதை அழைப்போம்
உயரம் அதிகமில்லை
அதன் விலையைவிடக் குறைவுதான்

என் மடியில்
என் அப்பா மடியில்
என் தங்கை மடியிலென
எல்லாருடைய மடியிலும் தவழும்.

ஜூஜூ இல்லாமல் சாப்பிடுவதோ
உறக்கமோ, ஏன் டிவிகூட பார்ப்பதில்லை
அதன் சலனத்தைத் தாங்காமல்
விடியாது என் தினம்

எத்தனை அழகு அது?
எத்தனை மிருது அது?

இதெல்லாம் உங்களைப் போல
நாய்களை ஏசும் நடுத்தர மக்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.

--------------------------------------

தமிழிஷில் வாக்களிக்க
தமிழ்மணத்தில் வாக்களிக்க
எதிர்வாக்களிக்க


உன் கோபத்தில் சிவந்து போகிறது
நான் அன்று முத்தமிட்ட மூக்கு
என்னை தொடுவதற்கும்
நீ அநுமதிப்பதில்லை
விழிகளின் வெப்பம்
என்னைப் பார்த்து
விளிக்கிறது ஒரு கோபக்காரனாய்
மூச்சு முட்ட பேசும் உன் அதரங்கள்
மெளனியாக நோகடிக்கிறது என்னை
அன்று அணைத்த கரங்களும்
தட்டி விடுகிறது
கோலமிட்ட கால்களும்
கோபக் கனல் வீசுகிறது

பகல் பொழுது இப்படியே செல்ல
நேர்மாறாய் இரவு....
--------------------------------------------------
தமிழிஷில் வாக்களிக்க
தமிழ்மணத்தில் வாக்களிக்க,
எதிர் வாக்களிக்க
நிரம்பி வழியும் பகலை மெல்ல மெல்ல துடைக்கும் இரவு நேரத்தில் தெருவில் விளக்குகள் சிரித்துக் கொண்டிருந்தன. குதறப்பட்ட தார்ச்சாலையின் வெப்பம் அடங்கிக் கொண்டிருக்க, அத்தெருவையே இருள் கவ்வி தன்னுள் இழுத்துக் கொண்டிருந்தது. பகல் முழுக்க நன்கு புணரப்பட்ட தெருவின் அயர்ச்சியை இரவுக்கு முந்திய நேரத்தினில் காணலாம்.

சுப்பைய்யா காலனி என்றழைக்கப்பட்ட அப்பகுதியில் இறுதி தெருவின் விளிம்பில் அவ்வளவாக கவனிக்கப்படாத பிள்ளையார் கோவிலின் முன் பேசிக்கொண்டிருப்பதுதான் அந்த பெரியவரின் அன்றாட வழக்கம். அவரது உரையாடலைக் கவனிக்கவோ, கேட்கவோ எவரும் அங்கு இருக்கமாட்டார்கள். விளக்கு உமிழும் ஒளியை சிறைபிடிக்க பூச்சிகள் அலைவது போல, அவரது வார்த்தைகளை சிறைபிடிக்க மெளனம் அலைந்து கொண்டிருக்கும். கடந்து செல்லும் மனிதர்களின் கேலிக்குறியாக அப்பெரியவர் காணப்பட்டார். ஓயாமல் இரைந்து பொழுதுக்குள் கரைந்து செல்லும் சப்தங்களின் ஊடாக அவரது பேச்சுக்கள் நிறைந்திருக்கும் மிளிர்ந்து நடக்கும் வெறுமையின் அங்கங்கள் அவரது பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கலாம். அல்லது வெறும் கல்லெனவே அமர்ந்திருக்கும் பிள்ளையாரிடம் அவர் பேச்சுவார்த்தை கொண்டிருக்கலாம். மெல்லிய குரல் கொண்டவராதலால் பெரும் நிசப்தங்களைக் கலைக்க அவரால் முடிவதில்லை. அருகே இருக்கும் எவருக்கும் அவ்வளவு எளிதில் அவரது குரல் சென்றடையாது. பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரது கண்கள் யாரையோ பார்த்துக் கொண்டிருப்பதாக இருக்கும். சிலசமயம் கண்களை மூடி மெளனமாக இருப்பார், அந்த சமயங்களில் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று எனக்குள் சம்மதமிட்டுக் கொண்டேன்.

அந்த பெரியவருக்கு சுமார் ஐம்பது வயது இருக்கலாம். நன்கு கருத்த மேனி, மீசை, தாடியெல்லாம் நரைத்து சற்று சுருங்கிய முகத்தோடுதான் அவர் எப்போதும் இருப்பார். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை.. சற்று பருமன்.. அவ்வளவுதான் அவரது மொத்த உருவமும். அந்தி சாய்ந்த பொழுதுகளில் எனது பள்ளிவேளை முடிந்தபிறகுதான் அவரை தினந்தோறும் சந்திக்க நேரிட்டது. முனைப் பிள்ளையாருக்கு எதிர் திசையில்தான் அவர் பேசிக் கொண்டிருப்பார். கை கால்களை அசைக்க மாட்டார், தனது புட்டத்தில் ஒட்டியவாறு இரு கைகளையும் கட்டிக் கொண்டு பேசுவார். அவரைக் காணும் பொழுதெல்லாம் மனதுக்குள் முளைக்கும் வியப்புக்கு மட்டும் அளவில்லாமல் இருந்தது. என்ன ஆனாலும் சாயங்காலங்களை அப்பிள்ளையார் கோவில்முன்பே கழிப்பார். நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருப்பதும் ஆச்சரியமாகவே தென்பட்டது ; எதற்காக பேசிக்கொண்டிருக்கிறார்? அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா அல்லது ஆவிகளோடு பழக்கம் கொண்டவரா என்ற கேள்விகள் எழுந்தாலும் அவரிடம் பேசுவதற்கு எனக்கு தைரியம் போதவில்லை. பிள்ளையார் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கூட அவரிடம் எந்த ஒரு விசாரணையும் மேற்கொண்டதாக நான் கண்டதில்லை. எல்லோருடைய மனதிலும் அவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற வடிவம் அமர்ந்து கொண்டிருக்கலாம்.

அவரைப் பற்றி தெரிந்ததாக சொல்லுபவர்களெல்லாம் "சொத்து பிரச்சனை அதான் பைத்தியமாய்ட்டான் கிழவன்" என்றோ, " குடும்பத் தகறாரு.. கெழவன் உளறாரு" என்று நையாண்டி நிறைந்த சந்தேகங்களையோ அல்லது அவரவர் கருத்துக்களையோ நிரப்புவார்கள். பிள்ளையார் கோவில் பூசாரி சிலசமயம் அப்பெரியவரைத் திட்டியபடியே அர்ச்சனை செய்வதைக் கண்டிருக்கிறேன். பூசாரியின் கோபத்திற்கு இவர் என்ன செய்திருப்பார் என்பது தெரியவில்லை. விரோதம் என்பது முன்பின் தெரியாதவர்களோடு வருவதென்பதால் கோபம் ஏற்பட்டிருக்கலாம். பூசாரி ஒருமுறை தன் கையிலிருந்த சொம்பில் தேக்கி வைத்திருந்த நீரை உள்ளங்கையில் ஊற்றி அப்பெரியவரின் தலையில் தெளித்ததைப் பார்த்திருக்கிறேன். அக்கால கட்டத்தில் எதற்காக அப்படிச் செய்தார் என்று அறிந்து கொள்ள நினைக்கவில்லை.

பின்னொரு இரவில் அவரைப் பின் தொடர்ந்து செல்லவேண்டிய ஆவல் எனக்குள் ஏற்பட்டது. அத்தெருவின் மத்தியில் உள்ள எனது நண்பன் வீட்டுக்கு நான் தினமும் செல்வது வழக்கம். நானும் எனது நண்பனும் இணைந்து அவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆயத்தமானோம். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. முதலாவது அப்பெரியவருக்கு ஒரு பெண் இருப்பதாகக் கேள்விப்பட்டோம். இரண்டாவதாக அவர் ஆவிகளோடு பேசுபவர் என்று நண்பன் வீட்டு பால்காரர் சொன்னதும் நினைவுக்கு வந்தது. இருவரும் அவரைப் பின் தொடர்ந்தோம். வழிநெடுகிலும் அவர் ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டபடியே சென்றார். அவர் இயற்கையோடு பேசுபவர் போன்று மரங்கள் தென்பட்டால் நின்று பேசுவார். மரக்கிளைகளில் வேதாளம் தங்கியிருக்கும் என்ற நம்பிக்கைகளை வளர்த்து வைத்திருந்ததால் இனம்புரியாத அச்சத்தோடு மேலும் அவரைப் பின் தொடர்ந்தோம். இரு தெருவுக்குத் தள்ளி மூன்றாவது தெருவில் அவர் திரும்பினார். திரும்பியவர் எங்கள் இருவரையும் கவனித்தார். நாங்கள் வேறெங்கோ செல்வது போல நடந்து கொண்டோம். சற்று நேரத்திற்கெல்லாம் அவரது வீடும் வந்துவிட்டது. நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அவரது பெண்ணை அன்று பார்க்க முடியவில்லை (பிறிதொருநாள்தான் தெரிந்தது அப்பெண்ணுக்குத் திருமணம் ஆகி குழந்தையும் இருப்பது!) இருவரும் வீடு திரும்பினோம். அவருக்காக நாங்கள் செலவிட்ட நாழிகைகள் இவ்வளவே!

பெரியவரின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சோகம், மனதை விட்டு நீங்காமல் அடம்பிடித்து இடம்பிடித்திருக்க வேண்டும். கேலிக்குறியாக இருந்த அவர், ஒருசில நாட்களில் கேள்விக்குறியாக மாறினார். ஒவ்வொருவருக்கும் மனத்தட்டுகள் ஒழுங்காக, நிரலாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும். ஒழுங்கற்ற நிலையில் தட்டுகளின் இடமாற்றத்தினால் பெரியவரைப் போன்ற மனக்கோளாறுகள் ஏற்படுவதுண்டு! . ஒருநாள் அவர் இறந்து போனதாக அவரது வீட்டின் முன்பு பந்தல் கட்டியிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் தானாக விதிக்கப்பட்டிருக்கும் கால இடைவெளிகளில் ஒருசிலர் மறைந்தும் வடுக்களை விட்டுச் செல்வார்கள். அப்பெரியவரின் இறப்பு அப்படியானதொரு வடுவை என் நெஞ்சில் இட்டுச் சென்றது. அவரது இறப்பு அவருக்குத் தெரியுமா எனும் கேள்வி இன்னும் என்னுள் எழும்பிக்கொண்டே இருக்கிறது. இறக்கும் ஒவ்வொருவருக்கும் தனது இறப்பு பற்றி தெரியவேண்டிய அவசியமில்லையெனினும் தான் வாழ்ந்த நாட்களின் நினைவுகள் அத்தருணங்கள் ஊஞ்சல் கட்டி ஆடுமா ஆடாதா?

இப்பொழுது பிள்ளையார் கோவிலின் முன்பு பேசிக்கொண்டிருக்க யாருமில்லை. அத்தெருவைக் கடந்து செல்லும் ஒவ்வொரு பொழுதுகளிலும் அப்பெரியவர் பேசிய வார்த்தைகள் மட்டுமே அக்கோவிலைச் சுற்றிக் கொண்டிருக்கும். வார்த்தைகள் என்பது உடைந்துபோன மெளனத்தின் குறியீடுகள். யாருக்கும் தெரியாமல் குறியீடுகள் அவருக்குள்ளே முடிச்சிட்டு முடிந்து போனதுதான் அவிழ்க்க முடியாத சூக்குமமாக எனக்குத் தெரிகிறது. என் மனத்தட்டுகளில் அது என்றுமே அவிழ்க்க முடியாததாகத்தான் இருக்கிறது!

அன்புடன்
ஆதவா!


ஆஸ்கர் நாயகன் யார் என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்று நிரூபித்துவிட்ட இசைப்புயல் அடுத்து POP உலகிற்குள்ளும் நுழைந்துவிட்டார். Pussicat Dolls அழகிகளுடன் ரஹ்மான் Jai ho என்று பாடியிருக்கிறார். இது ரிமிக்ஸ் வெர்சன் என்றாலும் ரஹ்மானின் அடுத்த கட்ட உயர்வுக்கு இது உறுதுணையாக இருக்கும்!!

Pussicat Dolls ஏற்கனவே Stick with you, Don't cha, போன்ற பெரிய ஹிட் பாடல்களைக் கொடுத்த அழகிகளின் குழு!! அவர்களுக்கு ஏற்கனவே இந்தியா மேல் ஒரு கண்... பத்தாகுறைக்கு இசைப்புயலின் தொடர் அவார்ட்கள்.. இப்போ இந்த பாடல்தான் ஹாட்...... இப்பாடலில் நிகோல் இந்தியப் பெண்மணியைப் போல பொட்டு வைத்துக் கொண்டு  வருவது குதூகலமாக இருக்கிறது. மிகவும் அழகாக இருக்கிறார்... கீழே ஒரு லுக் விடுங்களேன்...இசைப்புயல் விரைவில் Grammy அவார்டுகளை வெல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!!!

Pussycat Dolls இன் முன்னணி பாடகியான Nicole Scherzinger உடன் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பாடும் ரிமிக்ஸ் பாடல் Jai ho (You Are My Destiny)

யூ ட்யூபில்...

இந்த பாடலை இலவசமாக டவுன்லோடு செய்யவேண்டுமா? இங்கே..


இந்த உலகம் எதற்காவோ ஒரு பயணத்திற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன் ஆரம்பம் எப்படி இருந்ததோ அதைப் போன்றே முடிவும் இருக்கலாம் இந்த இடைவெளியில் சிறு சிறு குமிழ்களாக வரலாற்றைச் சேதப்படுத்தி சேமிக்கும் துகள்களாக நிரப்புகிறது மனித வாழ்க்கை. கெல்லியிடம் நான் கற்றுக் கொண்ட பயணங்கள் எத்தனையோ..

வாழ்க்கைகளுக்கு வழிகாட்டிகளாக எவை வேண்டுமானாலும் அமையலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு துரும்புகளுக்கும் வழிகாட்டிச் செல்லுவது என்பது எத்தனை சிரமமான விஷயம். ஒரு வெங்காயம் உரிப்பதைக் கூட என் அம்மாவைப் பார்த்து செய்தேன் என்று சொல்லும் பொழுது அச்செயலுக்கான வழிகாட்டி அம்மாவாக ஆகிறாள். நான் கெல்லியை ரசிக்கும் பொழுதெல்லாம் இதனையே நினைத்துக் கொள்ளுவேன். என் நரம்பின் வழியினூடு இசைத்தட்டுகள் தொடர்ந்தோடுவதற்கும் அடிப்பாலமாக கெல்லி இருந்ததை இப்பொழுதும் நினைத்துப் பார்க்கமுடிகிறது. அவளே முழு நாதமும் ஆகிறாள் என்று பொய்சொல்லமுடியாது. அவள் என்று சொல்லுவதைக் காட்டிலும் கெல்லியின் படைப்புகளை என்றுவேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்தான் ஆனா படைப்புகள் அவளிடமிருந்து வருகின்றமையாலும், அதன் ஒவ்வொரு நுனியிலும் அவளது இசைவுகள் இருப்பதாலும் கெல்லியை மட்டுமே என்னால் குறிப்பிட முடிகிறது.  

நான்கு வருடங்களுக்கு முன்னர் பழைய வீட்டில் Breakaway யின் பாடல்கள் வீட்டின் மூலையெங்கும் ஒலித்துக் கொண்டிருந்த பொழுது எழுந்த மனக் கிளர்ச்சியும், வேறுபாடும் எந்தவகையிலும் சொல்லமுடியாதவை. வெறும் பொழுதுபோக்குப் பாடலாகவோ, அல்லது கவர்ந்திழுக்கும் கவர்ச்சிப் பாடலாகவோ இருப்பதைக் காட்டிலும் அப்பாடல் எப்படி ரசிகனை லயிக்கவைக்கிறது என்பதில்தான் வெற்றியின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. எனக்கு அதன் முடிச்சு அவிழ்ந்ததும் கட்டவிழ்ந்து சிறகை விரித்து அகண்டவெளியில் பறக்கும் சிறு பறவையைப் போன்றதொரு உணர்வை ஒவ்வொருமுறையும் பெறுகிறேன். கெல்லியின் பாடல்கள் வரிகளில் மயங்கி கவிதை எழுதிய காலமும் உண்டு!! 

Since you been gone பாடலின் கவிதைத்துவமும் Breakaway பாடலில் அது உச்சம் பெறுவதையும் காணும் பொழுது, கெல்லி ஒரு நல்ல கிரியேட்டிவ் பாடகியாக இருக்கவேண்டும் என்பது கருத்து. Because of you பாடலின் காட்சியமைப்பு வெகுவாக கவர்கிறது. இதைப் போன்றதொரு கற்பனையை எந்த திரையிலும் நான் கண்டதேயில்லை. அதைப் பற்றிய சிறுகுறிப்பு ஒன்றை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

கணவன் தம்பதி இருவருடையே நடக்கும் ஊடலைக் குறித்த இப்பாடல், கெல்லி எனும் பெண், தன் சிறுவயது பிராயத்தில் ஏற்பட்ட அப்பா அம்மா ஊடலைப் பார்க்க, கடந்த காலம் நோக்கிச் செல்லுகிறாள். அவள் கடந்த காலத்தில் கெல்லி சிறுவயதாக இருப்பாள்.. நிகழ்கால கெல்லியும், கடந்த கால கெல்லியும் இணைந்து அந்த ஊடலைக் கவனிப்பார்கள். ஆகவே அந்த பிரிவு மனப்பிளவை ஏற்படுத்தி உறவுகளிடையே நிலைக்குலைவை ஏற்படுத்திவிடும் என்பதால் மீண்டும் நிகழ்காலம் திரும்புகிற கெல்லி, எந்த ஊடலும் இல்லாமல் தன் கணவனோடு இருக்கப் பிரியப்படுகிறாள்!!!

அவசியம் இப்பாடலைப் பாருங்கள்... அதில் ஒளிந்திருக்கும் கவிதை தன்னாலே வெளியே வரும்!! காட்சியமைப்பில் பின்னியெடுத்திருப்பார்கள்...

இங்கே கிளிக்குங்கள்


Since you been gone இல் தொடங்கி இதோ இன்று வந்திருக்கும் My Life Would Suck Without You வரை நீண்டு நிற்கிறது எனக்கும் அவளுக்குமான இசைத் தொடர்பு.. கெல்லியின் பாடலை சலிக்காமல் கேட்டு, கணிணியே சலித்திருக்கலாம்.. அவள் சொல்லவருவது என்ன என்பதிலேயே எனது பார்வையும் ஆர்வமும் அடங்கி, அது எண்ணிக்கைகளைத் தாண்டி ரசிக்கவைக்கிறது.

இசை என்பது ஒரு பொதுமொழி. அதை ரசிக்க யாரும் எதையும் கற்றுக் கொள்ளத் தேவையில்லை. ரசிக்கும் தகுதி இருக்கும் எவரும் எதையும் செய்யலாம்.

My Life Would Suck Without You பாடல் UK யில் முதலாம் இடத்தைப் பிடித்திருப்பது இனம்புரியாத மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறது. 

தற்பொழுது US Hot #1 (Billboard Hot 100) உம் இப்பாடல்தான்....

ஒருமுறைதான் கெல்லியின் இசையை ரசித்துப் பாருங்களேன்.. அவளுள் நுழைந்து அவளைக் காதலித்துப் பாருங்களேன்!!

Videos :

Breakaway
Behind These Hazel Eyes
Since U Been Gone
My Life Would Suck Without You


Albums :

for torrents only : (please download utorrent before continue)

Breakaway
All.I.Ever.Wanted

இந்த பாடல்களை கேட்டுவிட்டு நிச்சயம் என்னைப் பாராட்டுவீர்கள்... பதிவு எழுதியதற்காக அல்ல, அழகான பாடல்களைப் பகிர்ந்ததற்காக....

---------------------------------------------


10-02-2007, 12:12 AM

குழாயடி......

கூச்சல், கும்மாளம்.
பெண்களின் வாயினில்
கெட்ட வார்த்தைகள்
முன்னெப்போதும் கண்டிராத
குடிமிச் சண்டை.
சலசலவென நீர்ச் சத்தம்
ஆண்களின் தயக்கம்
எல்லாவற்றையும் மீறி
எங்காவது குனிவார்களா என்று
பார்க்கிறது இரு கண்கள்.........

                  

11-02-2007, 08:47 PM


ரசத்தோடு இணைந்த பெருங்காமத்து
மூலையில் அயர்ந்துபோன விளக்கொளி
மீதமிருக்க, சொக்கிய கண்ணைக்
கட்டிப்போட்டு பெருந்துளியாய்
நெற்றிப்பட்டையில் வியர்க்க
ஆதிகளும் அந்தங்களும்
சுற்றும் ஆகாச நிலவில்
அந்தரங்கமாய் பறக்க நினைத்து
தோற்றுப்போய் மீண்டும்
வீழ்ந்து கிடக்கிறது
இரண்டு புறாக்கள்...
  தமிழிஷில் வாக்களிக்க

தமிழ்மணத்தில் வாக்களிக்க

எதிர்வாக்களிக்கபேய்களுக்கும் எனக்குமுண்டான அளவில்லாத காதல் சிலநாட்கள் வரையிலும் முடிவில்லாத தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. முன்பு சில மாதங்களுக்கு முன்னர் வெறுமை படிந்த அறையில் தனிமையைத் துணைக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த பொழுதுகளில் பேய்களோடுதான் என் காதல் ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு இரவும் என்னோடு புணர்ந்த பேய்கள் மறுநாள் விடிவை நெருங்குவதற்குள் இறந்தோ, அல்லது மறைந்தோ விடுகின்றன. இருளும் இருள் சார்ந்த பொருளும் ஒவ்வொரு தினத்திய பேய்களை உற்பத்தி செய்வதற்காக காத்திருக்கும் பொழுது என் கோரைப்பாய்க்கு அடியில் உலர்ந்து போன என் காதலும் காத்திருக்கும்.

பேய்களுக்கும் எனக்குமான தொடர்பு மிகச் சிறுவயதிலிருந்து தொடங்குகிறது. அதன் தொடக்கத்தில் என்னை இறுக்க அணைத்துக்கொண்டு இரவுகளில் சுற்றியலையும்.. கனவுகளுக்குப் பதிலாக பேய்கள் நடனமிடுவதை பல நாட்கள் உணர்ந்திருக்கிறேன். திகில் படக் கதாநாயகிகளைப் போன்று இரவில் அலறி விழித்து எனக்கருகே இருக்கும் பொருட்கள் தூரத்தில் ஓடுவதைக் கண்டு பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருப்பேன்.

பேய்கள் என்னைக் காதலிக்கத் தொடங்கிய தினங்கள் அவை. அவைகளின் முத்தங்களின் அளவுக்கு எண்ணிக்கை இல்லாமல் போகவே, என் பெற்றோருக்கு இந்நிலையைச் சொல்லவேண்டிய கட்டாயம். தூக்க கலக்கத்தில் அப்பா எழுந்து என்னாச்சுடா என்பார். அவர் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு மிக மெல்லிய குரலில் பேசுவதாகவும், அவர் நீட்டும் கரங்கள் என் அருகே நீண்டு என்னைக் குத்துவதாகவும் தோன்றும். அவர் என்னுடைய நிலையை அவர் புரிந்து கொண்டாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் என்னை பேய்களிடமிருந்துபிரிக்கும் உத்தியை நன்கு அறிந்திருந்தார். ஒருவகையில் என் அப்பா ஒரு பேயோட்டிதான். அந்த சிறு அறையில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குத் தட்டில் கிடந்த திருநீறை எடுத்து என் நெற்றியில் பூசிவிடுவார். "அப்பா, அப்பவும் பேய் போகலைன்னா" என்று சந்தேகத்தோடு கேட்பேன். கையில் புதிய ஏற்பாடு ஒன்றைக் கொடுத்து அந்த விளக்கு வெளிச்சத்தில் படிக்கச் சொல்லுவார். நான் படித்த பள்ளி கிறித்துவப் பள்ளி என்பதால் அருகே இருந்த தேவாலயத்திற்கு தினமும் செல்வது என் வழக்கமாக இருந்தது. அங்கே சுவிசேஷ பாடல்கள் (சுவிசேஷம் என்பது சரியான சொல்லா தெரியவில்லை), குறும் பைபிள்களும், இலவசமாகக் கிடைக்கும்.. அவை பின்னுக்கு என் பேயோட்டும் புத்தகங்களாக இருக்கப் போகின்றன என்பதை அறியவில்லை.

கனவுகளில் நீங்கள் நவீன ஓவியங்களைக் கண்டிருக்கிறீர்களா. மெலிந்த சிவப்பு வர்ணத்தில் நடுவே இருந்து பிம்பம் உடைந்ததைப் போன்ற விரிசல்க்ளுக்கு இடையே பூத்திருக்கும் மரக்கிளைகளில் ஒன்றில் நான் அமர்ந்திருப்பேன். எனக்கு அடுத்த கிளையிலிருந்து ஒழுகும் இரத்தத்தை நக்கிக் குடித்தவாறு பேயொன்று தொங்கிக் கொண்டிருக்கும்.. பார்க்க பயங்கரமான காட்சிதான். இது என் உறக்க காலத்தில் எத்தனை நொடிகள் நீண்டது என்பது தெரியாது. ஆனால் அடுத்த நொடியில் பிம்ப விரிசல்களின் ஒவ்வொரு கீற்றுகளிலும் என் அங்கங்கள் சிதறிக் கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

கிட்டத்தட்ட ஓவியங்களை ஒத்திருந்தன பேய்கள் என் காதில் ஓதிய கவிதைகள். இருளும் நிசப்தமும் உடன் ஓடிவரும் சொற்களை மடித்து கவிதைகள் கொட்டின. அவைகளின் ஓங்காரத்தில் கொட்டிய கவிதைகளிலெல்லாம் யாருடைய குருதியோ நிறைந்திருக்கும். காகிதத்தில் விரிசலுற்று

தற்காலிக பேயோட்டிகள்தான் என் வாழ்நாளில் பலநாட்களில் நான் கண்டிருந்தவையாக இருந்தது. பைபிள்கள் காகித அரிப்பில் இரத்தம் தீர்ந்துபோய் இறந்து கிடந்தன, ஆன்மீக முடிச்சுகளை அவிழ்த்து விட்டதால் எந்த புத்தகமும் பேயோட்ட முன் வரவில்லை. பெரும் மரணத்தினிடையே போராடி எழும் மனிதர்களைப் போன்று உறக்கத்தில் எழுந்து, மாளாத் துயரில் அங்கங்கள் வெடித்து இறக்கும் நொடிகளைப் போன்று பேயோடு உறவாடிக் கொண்டிருந்த அந்த இரவுகளை எப்படி மறப்பது? கொஞ்சம் வயது ஆகிவிட்டது. இந்த விஷயத்தை யாரிடம் சொல்லுவது எனும் மானப் பிரச்சனையாக வேறு இருந்தது. பேய்கள் என்னை நிர்வாணமாக்கி நடுச்சாலையில் நிற்கவைத்ததைப் போன்று ஒவ்வொரு இரவுகளிலும் மானம் பறிபோனது.

பின்வந்த நாட்களில் வேறு வழியின்றி எனக்குத் தெரிந்த ஒரு சென்னை தோழியிடம் என் பிரச்சனையைப் பகிர்ந்தேன். சாதாரணமாக யாரிடமும் சொல்லக்கூடாதென்று நினைத்த விஷயங்களை வேறு வழியின்றி சொல்லவேண்டியதாக ஆக்கிவிட்டது.. அந்த தோழியும் ஒரு கிறித்துவள் என்பது குறிப்பிடத்தக்கது. அவளை நேரில் கண்டதில்லையெனினும் அவளே எனக்கு நிரந்தர பேயோட்டியாக இருந்திருக்கிறாள் என்பது அப்பொது தெரியாமல் போய்விட்டது. யோகாக்களில் கவனத்தைச் செலுத்தச் சொன்னாள். பதினைந்து நாட்கள் யோகா என்று "வாழ்க வளமுடன்" வேதாத்திரி மகரிஷியின் யோகசாலைக்குப் பயிலச் சென்றேன்.எனது இரவுகளை மர்மமாக்கிக் கொண்டிருந்த பேய்கள் யோகசாலையில் பயின்ற தியானங்களால் சற்று இரங்கவேண்டியதாக ஆகிவிட்டது. தியானங்களின் ஆற்றலுக்கு என்னைப் பீடித்திருந்தவைகள் மெல்ல மெல்ல அகலத் துவங்கின. பதினைந்தாம் நாளில் என்னோடுண்டான தொடர்ப்பை முற்றிலும் அற்றுவிட்டு வேறு எவரையோ பீடிக்கச் சென்றுவிட்டது பேய்கள்.

இப்பொழுது பேய்கள் இல்லாத இரவுகளைத்தான் ஒவ்வொரு நாளும் கழித்துக் கொண்டிருக்கிறேன். தியானங்களுக்கான பேயோட்டும் வேலை பதினைந்தாம் நாளோடு முடிந்துவிட்டது. என்னைவிட்டு அகன்ற பேய் இப்பொழுது எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. தூரத்தில் இருக்கும் பொழுதுதான் காதலியின் அருமை புரியும். இரவுக்காதலியாக வலம் வந்த பேய்கள் இப்பொழுது எங்கே இருக்கின்றன என்று தேடிக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் பேய்களைப் போன்று எனக்கு நவீன ஓவியங்களையும் கவிதைகளையும் புகுத்தியவர்கள் வேறு எவருமில்லை!

தமிழிஷில் வாக்களிக்க

தமிழ்மணத்தில் வாக்களிக்க.

தமிழ்மணத்தில் எதிர்வாக்களிக்க


பெண்களின் குளியலறை
எப்பொழுதும் வாசனை மிக்கதாக இருக்கிறது
கடந்து செல்லுகையிலும்
அறைக்குள் நுழைகையிலும்

அவர்களின் அழுக்குகள்
சுவற்றில்
புலப்படாத ஓவியங்களை
நவீன தத்துவங்களாக வரைகின்றன

வழுக்கி விழும் பல்லிகளுக்கு மோட்சமும்
அகப்படாமல் ஒளிந்து கொள்ளும்
பூச்சிகளுக்கு வேட்கையும்
பெண் குளியலின் பரிசாகக் கிடைக்கின்றன

நான்கு சுவர்களுக்குள் பதுங்கியிருக்கும்
பெண்களின் ரகசியங்களை
எளிதில் எவராலும்
கவர்ந்து கொள்ள முடியவில்லை

இப்பொழுதும்
நீங்கள் எட்டிப் பார்க்கலாம்
பெண்கள் இல்லாத நேரங்களில்
சுவர்கள் எவ்வளவு சோம்பிக்கிடக்கின்றன என்று

தமிழிஷில் வாக்களிக்க

தமிழ்மணத்தில் வாக்களிக்க..

தமிழ்மணத்தில் எதிர்வாக்களிக்க


யாழினி ஒரு தீர்க்கமான முடிவோடு அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில் கோபங்களும் ஏமாற்றங்களும் நிறைந்திருந்தன. தன் தந்தை ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று மாறி மாறி யோசித்தாள். தன் தோழிகள் எல்லோரும் பெற்றோர்கள் பேச்சை மதிப்பதில்லை ; தான் மதித்து நடந்தும் தன் வழியில் குறுக்கிடுகிறாரே என்று அழுதாள்.. அவளது அறையில் உடைகள் கலைந்து சிதறிக் கிடந்தன. பொருட்கள் நொறுக்கப்பட்டிருந்தன. சற்று முன் அவளது கோபத்தின் தாண்டவத்தை நினைத்து தன்னைத் தானே நொந்தவாறு அமர்ந்திருந்தாள்.

யாழினி C-MC சாக்லேட் நிறுவனத்தில் மேலதிகாரியாக பணிபுரிகிறாள். நல்ல அழகுவாய்ந்த முகம், திறமைகள் கொட்டிக்கிடக்கும் அவளது இளமை, எல்லாவற்றையும் விட, அவளது பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் அந்நிறுவனத்திற்கு பெருமையும், அந்நிறுவனத்திற்குத் தூணாக விளங்கும் தன்மையும் சேர்த்தது. அவளுடன் பணிபுரியும் அருள்மொழியுடன் உண்டான காதல் தான் இப்பொழுது பிரச்சனையே.. யாழினியின் தந்தை இந்த காதலுக்கு ஒத்துக்கொள்ளவேயில்லை. யாழினியின் காதல், அவளது கண்களை மறைத்து இருந்தது.

தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள் யாழினி. அவளது கோபத்தின் சதவிகிதம் 67 % மாக இருப்பதை அது சுட்டியது.. மருத்துவரைச் சந்திக்க இன்னும் இரண்டு மணிநேரங்கள் இருக்கிறது. இப்பொழுது கிளம்பினால் சீக்கிரம் போய் சேர்ந்துவிடலாம் என்று நினைத்தவாறே அலங்காரம் செய்யவிருக்கும் எந்திரனை அழைக்க, தன் கைக்கடிகாரத்தின் இடது மூலையில் இருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினாள். அவளது அறையின் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்த அந்த எந்திரம் அவள் இருக்குமிடத்திற்கு வந்து அவளது அலங்கார வேலைகளை எப்பொழுதும் போல செய்யத் துவங்கியது. சிறிது நேரம் கழித்து, அறையை விட்டு நீங்க தயாரானாள். அறைக்கதவின் தாழில் பொதிக்கப்பட்டிருந்த எண்களில் சிலவற்றை அழுத்தி தன் கட்டை விரலால் முத்திரை வைத்துவிட்டு லிஃப்டை நோக்கிச் சென்றாள்.

அருள்.... நம் காதலின் ஒவ்வொரு மூலையிலும் தெய்வீகம் அடங்கியிருக்கிறது. நம்மைப் பிரிக்க எவராலும் முடியாது. அருள்... மிசிசிபியில் நாமும் நம் குழந்தையும் மணல் வீடுகட்டி ஆடுகிறோம் பார்த்தாயா.. ஏனடா... அந்த வீட்டை கலைத்துவிட்டாய்? ... பார்..... அதோ தெரிகிறதா.. என் முதுமையிலும் உன் காதலை எப்படியெல்லாம் கொட்டுகிறாய்... நமக்குப் பின்னால் இருந்து கொண்டு நம் பிள்ளைகள் கேலி செய்வதைப் பார்த்தாயா?? ஒரு அந்நியோன்யமான குடும்பமாக இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேனடா.. அருள்.... அருள்.....

அவளது நினைவுகள் எல்லாம் கண்முன்னே திரைகட்டி ஓடுவதைப் போன்று காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. லிஃப்ட் நின்றது. வாசலை நோக்கி வேகமாக நடந்தாள். செல்லும் பொழுது வாசலோரத்தில் பூத்திருந்த ரோஜாவைத் தொட்டு ரசித்துவிட்டு ஏதேதோ எண்ணியவாறு மீண்டும் நடந்தாள். யாழினிக்கு நடப்பது மிகவும் பிடித்த விஷயம். அவள் மற்ற பாதசாரிகளைப் போன்று நகரும் தளங்களில் (Moving Platform) செல்லமாட்டாள். சாவகாசமாக, ஏதாவது ஒரு மின் காகிதத்தைச் சுருட்டி வைத்துக் கொண்டு மூவிங் ப்ளாட்ஃபாரங்களில் செல்லும் மனிதர்களை அவளுக்குப் பிடிக்காது... நடப்பது தேக ஆரோக்கியம் என்பதால் அவள் அதை எப்போதும் விரும்புவாள்.

அருள்மொழியைப் பற்றி சொல்லவில்லையே... யாழினியின் திறமைக்கு ஈடானவன் என்றே சொல்லலாம். ஆண்களுக்குரிய வசீகரம், வலிமை, சிலசமயம் கோபம் ஆகிய எல்லாமும் அடங்கியிருந்தது அவனிடம். யாழினியுடன் பணிபுரிந்தாலும் பணி நேரங்களில் அவன் யாழினியை தன் காதலியாக எண்ணமாட்டான்... ஒரு சக கொலிக்.. அவ்வளவுதான்.. இந்த அணுகுமுறையும் யாழினிக்குப் பிடித்திருந்தது. அருள் முதலில் VC (வீடியோ கான்ஃப்ரன்ஸ்)யில்தான் பணிசெய்து கொண்டிருந்தான்... ஆனால் அவனது திறமையை நன்கு அடையாளம் கண்டுகொண்ட நிறுவனம், அவனை நிறுவனத்திற்கு வந்து பணிபுரியும்படி சொல்லியிருந்தது... இவர்கள் இருவருக்கும் காதல் எப்படி வந்தது என்பது இருவருக்குமே தெரியாத விசயம்... அதை அவர்கள் பேக்வர்ட் மெஷின் மூலமாக தெரிந்து கொள்ள என்றும் ஆசைப்பட்டதில்லை.... இருந்தாலும்....... ஏதோ ஒன்று...... யாழினியின் தந்தை அருளை வேண்டாமென்று சொல்லக் காரணமாக இருந்தது...

யாழினி தன் பின்னங்கழுத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டாள். ஃபாலோயர் சிப் பதிக்கப்பட்டிருந்தது... முந்தைய தினம் தான் அவளது தந்தையின் ஐடியை தன் சிப்பிலிருந்து அழித்தாள். இனி அவள் எங்கே செல்கிறாள் எனும் விபரங்கள் அவளது தந்தைக்குச் செல்ல வாய்ப்பில்லை... நடை ப்ளாட்பாரத்தில் வேகமாக நடந்தாள். தன் வாழ்வின் முக்கிய தினமும், மிகமுக்கிய முடிவும் எடுக்கப் போகும் நாள்... தன் பரம்பரையில் யாருமே செய்யாத காரியத்தை அவள் செய்யப்போகிறாள்.. தனது அலைபேசியில் மருத்துவமனைக்கான பாதையை சரிபார்த்துக் கொண்டாள். இதோ... மருத்துவமனையை அடைந்தும் விட்டாள்.

கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பலமாடிகளை அடுக்கியிருந்தது அந்தக் கட்டிடம்... 325 C ப்ளாக்கிற்குச் செல்லவேண்டும் என்று ரிஷப்ஷனில் அமர்ந்திருக்கும் ஒரு எந்திர பொம்மையிடம் ஒரு காகிதத்தை நீட்டினாள். அதில் மருத்துவரின் அப்பாயிண்ட்மெண்ட் நேரம் என்ன சிகிச்சை ஆகிய அத்தனை விபரங்களும் அடங்கியிருந்தது. அந்த பொம்மை ஒரு ஸ்க்ராச்சிங் கார்டை அவளிடம் கொடுத்தது. யாழினி நேராக கட்டிடத்தின் பின்புறம் சென்றாள். அங்கே ஃப்ளையர்கள் இருந்தன. பல அடுக்குமாடிகள் கொண்ட கட்டிடங்கள் இந்தமாதிரி ஃப்ளையர்களை வைத்திருந்தன. உடனடியாக எந்த மாடிக்குச் செல்லவேண்டுமோ அங்கே சென்றுவிடலாம்.. நிறைய மனிதர்கள் பறந்து கொண்டிருந்தார்கள். யாழினி நேராக அந்த ஸ்க்ராச் கார்டை ஒரு ப்ளையருக்கு முன் அமர்ந்திருந்த பொம்மையிடம் நீட்டினாள். அது யாழினியைப் பார்த்து, " நீங்கள் மூச்சை இழுத்தும், இரத்த அழுத்தம் அதிகமாகவும் வந்திர்க்கிறீர்கள். உங்களை ஓய்வுக்குப் பின்னரே அனுமதிக்க முடியும்" என்று சொல்லிவிட்டு, அடுத்த மனிதரைப் பார்த்தது... யாழினி ஓய்வறைக்குச் சென்றாள்...

யாழினியின் எண்ணங்கள் மீண்டும் கண்ணைக் கட்டின... அப்பா.... அருள்மொழியோடு உண்டான காதலை மறுப்பது மிகவும் தவறு.. நான் மற்றவர்களைப் போல் பாசமின்றி வளர்ந்திருந்தால் உங்களைக் கேட்கவேண்டிய எண்ணமே இல்லை.. ஆனால் என்னால் பாசத்தையும் காதலையும் மறக்கமுடியவில்லை... வேறு வழியுமில்லை அப்பா... என்னை நீங்கள் குழாயிலிருந்து எடுத்தது முதல் இந்த இருபத்தி ஐந்து வருடங்கள் பாசமாக வளர்த்தீர்கள்.. ஆனால் அடுத்து வரும் தொண்ணூறு வருடங்கள் அருள்மொழிதான் எனக்குத் துணையாக இருப்பான்.. ஆமாம் அப்பா.... நான் அவனைத் திருமணம் செய்யப் போகிறேன்.... உங்களது பிரச்சனை அருள்மொழி ஒரு அந்நிய கிரகத்தவன் என்பதுதானே!! இதோ.... அக்கிரகத்திய முறைப்படி நான் உருமாறப் போகிறேன்.. அக்கிரகத்து பிரஜை ஆகப்போகிறேன்.. மன்னித்துவிடுங்கள் அப்பா... ஒரு மனிதனாக இருந்தால் எம் காதலை நீங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள்.. நான் ஒரு ஏலியனாக இருந்தால்???

யாழினிக்கு ஃப்ளையர் தயாராகிவிட்டது... அவளை அண்டியிருக்கும் சோகங்களோடு அவளும் பறக்கவிருக்கிறாள்.. 325 C ப்ளாக்கில் இருக்கும் மனிதர்களை ஏலியன்களாக்கும் மருத்துவமனைக்கு.................

Subscribe