27.11.15

வட இந்தியா - 1

|

மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்து கிடந்தது அந்நேரத்திலேயே. குளிர் பத்து டிகிரிக்கும் குறைவாக இருக்கலாம். என்னைப் போன்ற வெப்பமண்டலக் காடுகளிலிருந்து வரும் வெயில்காரர்களுக்கு மிகவும் நடுக்கம் நிறைந்ததாக இருக்கிறது. உடலெங்கும் குளிர் ஊடுறுவி உறுப்புகளை நடனமாடவைக்கிறது. மலைமுழுக்க குளிர் மூடி நெருப்பின் கதகதப்பைத் தேடவைக்கிறது. சிம்லா பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கேள்விக்கும் அனுபவத்திற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. மிக உயர்ந்த மலைநகரம்.. மலையெங்கும் கிராமங்கள். இரவுகளில் மலைகள் முழுக்க ஒளிர்கிறது. மலைகளின் மகாராணி சிம்லா என்றால் ஏனைய கிராமங்கள் அதன் உற்ற தோழிகள். எங்கு நின்றாலும் சிம்லா நமக்கு ஒரு காட்சிமுனை தந்துவிடுகிறது. ஊட்டி, கோத்தகிரி போன்ற இடங்களில் காட்சிமுனைகளுக்காக இடம் ஒதுக்கி இருப்பார்கள். இங்கு அந்த தேவையில்லை. சிம்லாவில் பார்த்த ஒவ்வொரு முகமும் வட இந்திய முகங்கள். சில திபத்திய முகங்கள். மிக அன்புடன் பழகும் மக்கள். விலை அதிகமாக வைத்து சுற்றுலாப் பயணிகளிடம் பணம் கறக்கும் வியாபாரிகள், ஓட்டல் நிர்வாகிகளிடம் கமிஷன் பேசிக்கொள்ளும் ஆட்டோ காரர்கள்., என சுற்றுலாத் தளத்திற்கே உரிய மக்கள் நிறைந்த ஊர். மலைப்பகுதி என்பதால் குறுகலான பாதைகள், சிராய்வு நிறைந்த ஊர்திகள், புழுதி படர்ந்த சாலைகள், பரபரப்பாக இயங்கும் பலதரப்பட்ட மக்கள்... சிம்லா மற்றுமொரு மலைச் சுற்றுலாத் தளம்.

குஃப்ரி.

காலையில் குஃப்ரி கிளம்பினேன். ஒன்பது மணிக்குத் தயாராகி, ஏற்கனவே பதிவு செய்ந்திருந்த ஒரு டாக்ஸியை வரச் சொன்னேன்.  மால்ரோட்டில் வண்டிகள் ஏதும் வரமுடியாது என்பதால் மால்ரோட்டிலிருந்து கீழறங்கி மெயின்ரோட்டுக்கு வந்தேன். டாக்ஸி ட்ரைவர் மது எங்களை குஃப்ரிக்கு அழைத்துச் சென்றார். சுமார் பதினான்கு கி.மீ தூரம் கொண்ட அந்த பாதை மலைகளின் விளிம்பிலிருந்து மலைக்கு நடுவே செல்கிறது. மிகக் குறுகலான சுத்தமில்லாத பாதை. சிம்லாவில் வண்டி ஓட்டுவது பாத அளவுள்ள மதில் மேல் நடந்து செல்வதைப் போன்றது. கொஞ்சம் இடறினாலும் அடுத்த வண்டியில் உராய்ந்துவிடும்.  குஃப்ரி சிம்லாவைத் தாண்டி இருக்கும் மிக உயர்ந்த இடம். குஃப்ரியிலிருந்து மேலும் கொஞ்சம் உயரம் வரை செல்ல வேண்டுமென்றால் குதிரையில்தான் செல்ல வேண்டியிருக்கும். சுமார் ஒன்றரை அல்லது இரண்டு கி.மீ பயணம். ஆனால் நம்மை ஏழு கிலோமீட்டர் அழைத்துச் செல்வதாகச் சொல்வார்கள். டாக்ஸி ட்ரைவர் காண்பிப்பதாகச் சொன்ன இடங்களுக்குச் செல்ல மேலும் அதிகம் செலவு செய்யவேண்டியிருந்தது.  குதிரையில் ஏறி பயணம் செய்ததே கிடையாது. முதல் முறையாக ஏறி அமர்ந்த பொழுது ஒரு இராஜ உணர்வு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் குதிரைகள் மட்டுமே செல்லும் மலைப்பாதை என்பதால் பள்ளத்தில் கால்வைத்து தவறி விழுந்தேன். பின் இரண்டாம் முறை கொஞ்சம் பழகிக் கொண்டேன். குதிரை தனக்கு மிகவும் தெரிந்த வழியில் செல்வது போல தானாகவே சென்றது. பள்ளத்தில் தள்ளிவிடுமோ என்ற பயத்தில் அழைத்துச் சென்ற சிறுவனிடம் அடிக்கடி குதிரையை தள்ளி அழைத்துப் போகுமாறு சொல்லிக் கொண்டேன். ஆனால் அந்த சிறுவன், இந்தமாதிரி நிறைய கேட்டிருப்பான். எந்த பிரச்சனயுமில்லை (குச் நயி ஹோகா) என்று தைரியத்தோடு அழைத்துப் போனான். மூன்று கி.மீட்டர் என்றதும் குதிரையில் செல்வதை ஒத்துக் கொண்டேன். இல்லையென்றால் அது நடந்தே செல்லவேண்டிய தூரம் தான். தவிர குதிரைகள் நிறைய வருவதும் போவதுமாக இருப்பதால் முட்டிக் கொண்டே செல்லவேண்டியிருந்தது. கால்கள் எல்லாம் அடிவாங்கின. பள்ளத்தின் விளிம்பில் கட்டியெழுப்பப் பட்டிருந்த சுவர்களில் கால்கள் உராய்ந்து கொண்டே சென்றன. ஒரு நல்ல ஷூ இருந்தால் நம் கால்கள் தப்பிக்கலாம். எப்படியோ குஃப்ரியின் உயர்ந்த இடத்தை அடைந்துவிட்டேன். குதிரைக்காரன் ஒரு எண்ணைக் கொடுத்து, சுற்றிப் பார்த்துவிட்டு அந்த எண்ணுக்கு அழைக்குமாறு சொல்லிவிட்டு குதிரையை மீண்டும் தொடங்கிய இடத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டான். அவனுக்குக் கொடுத்த அல்லது குதிரை சவாரிக்குக் கொடுத்த பணம் அதிகம் என்று தோணிக்கொண்டே இருந்தது.  இமயமலையைப் பார்ப்பதற்கான ஆவலோடுதான் அங்கே ஓடிச் சென்றேன். ஆனால் எனக்கு அந்த பேராசையைத் தவிர மற்ற அனைத்தும் கிடைத்தது. மேலும் மேலும் மலை மடிப்புகள் ஒன்றோடொன்று தொட்டுக் கொண்டே சென்றதேயொழிய பனி பூசிய இமயமலைகளைப் பார்க்க முடியவில்லை. டெலஸ்கோப் வழியாகப் பார்க்க முடியும் என்று சொன்னதால் நம்பி அங்கேயும் பணத்தை இழந்ததுதான் மிச்சம்.  இமயமலைகள் மேகத்தோடு மூடி இருப்பதால் இப்போது பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டனர். டெலஸ்கோப் வழியாக நான்கைந்து கோவில்களை மட்டுமே பார்க்க முடிந்தது. இந்தியாவின் எல்லை என்று ஒரு இடத்தைக் காண்பித்தனர். இவையெல்லாவற்றையும் விட அடுக்கடுக்கான மலைகளை ரசிப்பது மிக சுவாரசியம். மலையடுக்குகள் முடிவில்லாமல் சென்று கொண்டேயிருக்கின்றன. அதில் ஏதாவது ஒரு மலையைக் காண்பித்து அதுதான் இமயமலை என்று சொல்லியிருந்தாலும் நம்பியிருப்பேன். அடுத்த முறை குஃப்ரிக்குச் செல்வதாக இருந்தால் அது டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தான் செல்லவேண்டும். பனி பொழிவைக் கண்டிருக்க முடியும். அதேபோல குஃப்ரியிலிருந்து உயர்ந்த இடத்திற்கு நடந்தே செல்லலாம் குதிரைகளை நீங்கள் சகித்துக்கொண்டால்.. மேலும் அங்கே ஹிமாலயன் வ்யூ என்று சொல்லி கொண்டு வரும் எவரையும் நம்பி பணத்தைத் தந்து ஏமாறக் கூடாது. அவர்களிடமிருக்கும் டெலஸ்கோப்புகளும் உயர்ந்த தரமானதில்லை, ஒரு 300mm லென்ஸில் தெரியக்கூடியதை டெலஸ்கோப்பில் வைத்துக் காண்பிப்பார்கள்.. ஆகவே  சிம்லாவில் அதைக் காண்பிக்கிறேன், இதைக் காண்பிக்கிறேன் என்று பலரும் சொல்வார்கள், அவை அனைத்தும் உண்மை இல்லை...

குஃப்ரியிலிருந்து மால்ரோட்டுக்கு அருகே டாக்ஸியில் வந்து விட்டேன். மாலை நான்கு மணி ஆகிவிட்டதால் வேறெங்கும் செல்லமுடியாது என்று ட்ரைவர் சொன்னார். ஆகவே வரும் வழியிலேயே மதிய உணவாக இரண்டு ஆம்லேட் (நான்கு முட்டைகள்) சாப்பிட்டுவிட்டேன்.  ஷிம்லாவில் நான் தங்கியிருந்த அறைக்கு அருகிலுள்ள எந்த உணவகத்திலும் உணவின் விலை குறைவாக இல்லை. மூன்று நட்சத்திர ஓட்டல்களின் விலைகளிலேயே உண்ணவேண்டியிருந்தது. ஒரு இரவுக்கு குறைந்தது 750 ரூபாய் செலவாகிறது. ஆகவே ஆம்லெட்டுகளோடு இன்றைய உணவை முடித்துக் கொள்வதாக முடிவெடுத்துக் கொண்டேன். நான்கு ஆம்லெட் 150 ரூபாய்.. போலவே எந்த உணவகத்தின் உணவும் ருசியற்று இருக்கிறது. இதை சண்டிகரிலேயே உணர்ந்துவிட்டோம். ருசியான உணவகங்கள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில்தான் என்பது என் கருத்து. அக்கருத்து இன்னும் வலிமையானதாக உணருகிறேன். இன்னும் சிம்லாவின் சுற்றுலா இடங்கள் பாக்கி இருந்தன.. ஆகவே அப்படித் தெரியலாம். சிம்லா பொது நகரத்தில் ஒருவேளை என் கருத்துக்கு மாறுபாடு வரலாம்.

அன்றைய இரவு குளிர் சுமார் ஐந்து டிகிரி இருக்கலாம். அந்த அறையே ஒரு குளிர்பதனப் பெட்டிபோல இருந்தது. ஊட்டியில்தான் அதிக பட்ச குளிரை உணர்ந்திருக்கிறேன். ஆனால் ஊட்டியைக் காட்டிலும் மிக அதிக பட்ச குளிர், தெர்மல் பனியன் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன், ஆனால் கடைசி நேர பயண அவசரத்தில் மறந்துவிட்டேன். இந்த குளிரைத் தாங்க முடியாமல் எனக்கு ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. கோவையிலிருந்து விமானத்தில் தான் கிளம்பினேன். இரண்டு ஸ்டாப் விமான பயணம். மும்பையில் இறங்கி அங்கிருந்து டெல்லிக்கு இரவிற்குள் சென்றுவிட்டேன். மறுநாள் டெல்லியிலிருந்து சண்டிகருக்கு விமானப் பயணம். ஒரு அவசரத்தில் பயணத்தை முடிவு செய்ததால் இரண்டு ஸ்டாப் விமானத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இனி ஒரு போதும் அப்ப்படிச் செய்யவே கூடாது.  கொஞ்சம் விலை அதிகமென்றாலும் ஒன்ஸ்டாப் விமானத்தைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். ஏனெனில் டெல்லியில் ஒரு இரவை வீணாகக் கழிக்க வேண்டியிருந்தது. அடுத்தநாள் டெல்லியிலிருந்து சண்டிகர். சண்டிகர் இந்தியாவின் க்ரீன் சிட்டி என்று சொன்னார்கள். காட்டுக்குள்ளே நேர்த்தியான நகரம் ஒன்றை நுழைத்தது போல இருந்தது. நகரம் முழுக்க செக்டார்களாகப் பிரித்திருந்தார்கள். ஷிம்லா செல்லும் பேருந்துகள் எங்கே நிற்கும் என்று அறிந்து கொண்டு அங்கே சென்றேன். நகருக்குப் பொருத்தமில்லாத அந்த பேருந்து நிலையத்திலிருந்து ஷிம்லாவுக்கு கல்கா வழியாக பேருந்தில் சுமார் நான்கு மணிநேரப் பயணம். கல்காவிலிருந்தே மலைப்பாதைகள் தொடங்கிவிடுகின்றன. வலது புறம் முழுக்க மலைகளும் பள்ளத்தாக்குகளுமாக என்னோடே பயணித்தது. பொதுவாகப் பேருந்துப் பயணமென்றாலே தூங்கிவிடுவேன். ஆனால் சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகள் தூக்கத்தைத் தடுக்கின்றன. ஷிம்லா பேருந்து நிலையம் வந்தடைந்தபொழுது மணி ஆறு.

indru-netru-naali

 

Direction R.Ravikumar
Starring Vishnu Vishal, Mia George, Karunakaran, Jayaprakash
Year 2015
Language Tamil
Genre Science Fiction, Comedy, Thriller
   

இன்னும் யாராலும் கணக்கிட முடியாதது “காலம்”. குறிப்பாக, காலத்தின் பிறப்பு. மற்றும் வெளி (Space) இது இரண்டுக்கும் மிக நெருங்கின தொடர்பு உண்டு. கிட்டத்தட்ட கணவன் மனைவி போல. இவை இரண்டையும் இணைக்கும் கருவிதான் Time Machine. இதற்கான சாத்தியம் இல்லை (அல்லது இப்போதைக்கு இல்லை) என்றாலும் திரைப்படங்களிலோ, புத்தகங்களிலோ பேசப்பட்டே வருகிறது. டைம் மிஷின் ஏன் சாத்தியமில்லை என்றால், நம்மிடம் ஒளியை மிஞ்சும் வேகத்தில் எந்த கருவியுமில்லை என்பதுதான். நாம் பார்க்கும் நட்சத்திரங்கள், பிரபஞ்சங்கள் எல்லாமே அது கடந்த காலத்தில் உமிழ்ந்த ஒளியைத்தானே பார்க்கிறோம். ஆக நாம் வெளியெடும் ஒளியிலிருந்து மிகத் தொலைவிலிருந்து நமது கடந்த காலத்தைப் பார்க்கலாம் என்கிறது அறிவியல். இது பற்றி நிறைய பேசுவதற்கு இருக்கிறது.

ஒருவேளை அப்படியொரு டைம் மிஷின் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அது நிகழ்காலத்தில் ஒருவரிடம் சிக்கினால் எப்படியிருக்கும்? அதுதான் “இன்று நேற்று நாளை”

சொந்த தொழில்தான் செய்யவேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்கும் விஷ்ணு, அவருடைய நண்பர் போலி ஜோதிடர் கருணா இருவரும் எதிர்பாராத நேரத்தில் கால இயந்திரத்தைக் காண்கிறார்கள். அதைப் பற்றிய அடிப்படை புரிதல்கள் இல்லாமல் அதனை இயக்குகிறார்கள். ஓரளவு புரிதல் கிடைத்ததும் அதைவைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கிறார்கள். கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வின் ஒரு சிறு கண்ணி விலகி, அது நிகழ்காலத்தில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று புரிந்து கொள்கிறார்கள். இறுதியில் எப்படி பாதிப்பிலிருந்து வெளியேறுகிறார்கள் என்பதே கதை (புரிகிறதா?)

காலத்தைக் கடக்கும்பொழுது ஏற்படும் சிறு மாற்றங்களை மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்  இயக்குனர் ரவிக்குமார். படம் முழுக்க ஜாலி மூடில் செல்வதால் டைம் மிஷின், ஸ்பேஸ், ட்ராவல் என்று ஒரே சைன்ஸ் வார்த்தைகளால் நிரப்பி குழப்பாமல் தெளிவாக இருக்கிறது திரைக்கதை. பெரிய லாஜிக் மீறல்கள் இல்லாதிருப்பது திரைக்கதையை எவ்வளவு தூரம் ஆழமாக செதுக்கியிருக்கிறார்கள் என்பது புரிகிறது. அதற்காக ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் டூ திரைக்கதை டிஸ்கஷன் குழுவினருக்கு.

விஷ்ணுவின் சமீப இரண்டு திரைப்படங்கள் ஃப்ரெஷாக இருந்தன. இன்று நேற்று நாளை, அவருக்கு பேசப்படும் திரைப்படம். நன்கு நடிக்கவும் செய்கிறார். மியாவுக்கு கண்கள் பெரிது. கொஞ்சம் பூசினாற்போல் இருக்கிறார். கருணாகரன் படத்தின் டெம்போவை ஏற்றுவதில் பெரிய பங்கு வகிக்கிறார். அவர் வருகிற எல்லா காட்சிகளுமே அட்டகாசம்.. வசனம் படத்திற்கு பெரிய பலம். எடிட்டிங் செம க்ரிஸ்பாக இருந்தது. டெக்னிக்கலாக எல்லாமே அபாரம். சிஜி தேவையான அளவுக்கு இருந்தது. துருத்தவில்லை. பாடல்களுக்கு நடனம் அமைக்காமல் மாண்டேஜில் சென்றது திருப்தியைத் தந்தது

நிறைய தருணங்கள் சிலிர்ப்பானவை… எதுவும் சொல்லக் கூடாது என்றாலும் ஒன்றே ஒன்று… மியா ஜார்ஜ் குழந்தையை வாங்கி முத்தமிடும் தருணம் அபாரம்.. மைல்ட் ட்விஸ்ட் இருப்பதால் திரில்லிங்காக செல்கிறது திரைப்படம். எந்தவொரு இடத்திலும் போரடிக்கவில்லை என்பதைவிட எந்தவொரு இடத்திலும் திரில்லிங் குறையவில்லை, குறிப்பாக இரண்டாவது பாதி செம ஸ்பீடு…

படத்தின் இசையைப் பற்றி பேசமுடியவில்லை, நான் சென்ற அரங்கில் ஸ்பீக்கரே இல்லை. இனியொருமுறை பார்க்கவேண்டும்.

குறைகள் ?

பெரிதாக ஏதுமில்லை என்றாலும் சண்டைக்காட்சிகள் இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகியிருக்கவேண்டும். சில காட்சிகளில் நடிகர்கள் சுமாராகவே செயல்பட்டிருந்தார்கள். மக்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காகவே இயக்குனர் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

டைம் மிஷின் படங்கள் எல்லாமே ஒரேவகையான டெம்ளேட்டைக் கொண்டவை. நிகழ்காலத்திலிருந்து கடந்த/எதிர் காலத்திற்குச் செல்லலாம். ஃபிஸிக்கலாக செல்வதால் அங்கே நிகழும் நிகழ்விலிருந்து எதையும் மாற்றாமல் திரும்பவேண்டும் என்பது பொதுவான விதி. இதில் மாற்றம் ஏற்பட்டால் பின்னால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும். இது butterfly effect, chaos theory என்று பொதுவாக பல பெயர்களில் சொல்வார்கள். ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுத்திவிட்டு பின் அதை சரிசெய்வது என்பதாகத்தான் எல்லா திரைப்படங்களும் இருக்கும்.  இந்த படமும் அதில் விதிவிலக்கல்ல.. டைம் மற்றும் ஸ்பேஸ் இரண்டையும் வைத்து நிறைய திரைப்படங்கள் குறிப்பாக ஹாலிவுட்டில் வந்திருக்கின்றன. Back to the Future, X-Men, Time Machine, Butterfly Effect, Source code போன்ற படங்கள் காலத்தைக் கடப்பதைப் பற்றின திரைப்படங்கள். சில படங்களில் இந்த உத்தியை ஊறுகாய் போல தொட்டுக்கொள்வதும் உண்டு. டெர்மினேட்டர் ஒரு நல்ல உதாரணம். தமிழில் இதற்கு முன்பு தாசாவதாரத்தில் கேயாஸ் தியரியைப் பற்றி கமல் சொல்லுவார், 12பி கூட ஐந்து நிமிட காலப்பயணம் பேரல்லலாக பயணிக்கும், ஆனால் முழுநீள டைம் ட்ராவல் படம் தமிழில் இதுவே முதல்!

வித்தியாசமாக படம் பார்க்கவேண்டும், வழக்கமான மசாலாத்தனம் இல்லாத தமிழ்படம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த படம் ஒரு விருந்து!!

சிறப்பான இடத்தை ரிசர்வ் செய்திருக்கும் ரவிக்குமாருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

8.7.14

இரத்த அழுத்தம்!

|

1996 ஆம் ஆண்டு காலம் மாறிப் போச்சு என்ற சினிமா வந்தது, பாண்டியராஜன், வடிவேலு, சங்கீதா, சரளா போன்றவர்கள் நடித்த திரைப்படம். அதில் சங்கீதாவின் அம்மாவான வடிவுக்கரசிக்கு ஒரு வாக்குவாதத்தில் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள். ஒரு பெட்டில் படுத்திருக்கும் அவரை, டாக்டர் பரிசோதித்தபிறகு வந்து சொல்வார் “ உங்கம்மாவுக்கு ஏற்கனவே இரத்தக்கொதிப்பு இருந்திருக்கு, பத்தாததக்கு அவங்க மனசைப் பாதிக்கிறமாதிரி ஏதோ ஒண்ணு நடந்திருக்கு, இதெல்லாம் ஒண்ணா சேந்ததனால மூளையில இருக்கிற இரத்தக்குழாய் வெடிச்சிருச்சு, என்னால முடிஞ்சவரைக்கும் எல்லா ட்ரீட்மெண்டும் கொடுத்திருக்கேன்” என்பார். இந்த வரிகள் ஒரு மறக்கமுடியாத சம்பவத்தை ஞாபகப்படுத்தியது. மூளையில் உள்ள இரத்தக் குழாய் வெடித்திருந்தால் முதலில் அதுதான் பிரச்சனையா என்று ஸ்கேன் எடுக்காமல் சொல்லமாட்டார்கள். இரத்த அழுத்தம் Systolic, Diastolic என இரண்டு வகையில் குறிப்பிடுவார்கள், ... இதயம் சுருங்கும்பொழுது ஏற்படும் அழுத்தம் சிஸ்டலிக், இதயம் விரிவடையும் பொழுது ஏற்படுவது டயஸ்டலிக், சுருக்கமாகச் சொன்னால், லப் என்றால் Systolic, டப் என்றால் Diastolic. இவையும் சர்க்கரை அளவைப் போலவே 120-80 என்ற கணக்கில் இருக்கவேண்டும், மேலதிக தகவல்களுக்கு கூகிளில் தேடலாம். (நான் மருத்துவரல்ல) இவை எப்பொழுது 200ஐத் தாண்டுகிறதோ, அப்பொழுது நீங்கள் பவுல்ட் ஆகப்போகிறீர்கள் என்று அர்த்தம். மாமாவுக்கு இந்த பிரச்சனை திருப்பதி தரிசனத்திற்காக வரிசையில் நின்றுகொண்டிருக்கும்பொழுது ஏற்பட்டது. எங்களில் யாரும் உயர் இரத்த அழுத்தம் பற்றி சினிமாவில் கேட்டதோடு சரி, அதன் விளைவுகளைப் பார்த்தவர் கிடையாது. மாமாவுக்கு இடதுபுறம் மட்டும் செயலிழந்து வாய் கோணியது, கைகள் மரத்துவிட்டிருந்தது. அதுதான் முதல் அறிகுறி. ஸ்ட்ரோக் (அதற்கு முன்னரேயே தலைவலிக்க ஆரம்பிக்கும்) . மூளையில் இரத்தம் அப்போதுதான் வெடித்திருக்கும். சத்தமில்லாத வெடிகுண்டு. பிறகு செல்போன் பேட்டரி லெவல் குறைவது போல, மூளை கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை இழக்கத் தயாராக இருக்கும் நொடி அது. மூளை முதலில் கட்டவிழ்த்துவிடுவது, சிறுநீரையும் மலத்தையும் தான். சிறிதுநேரத்திலேயே வெளியேறிவிடும், அவர் அறியாமலயே.. அப்போதுவரைக்கும் தனக்கு இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாது.. மாமா அப்படித்தான் இருந்தார். பின்னர் சாப்பிட்ட உணவும் வாந்தியாகிவிடும். அதுதான் மூளை செய்த கடைசி வேலை என்பது எங்களுக்கும் தெரியாது. திருமலையிலேயே மருத்துவர்களுக்கு இதுதான் விஷயம் என்பது தெரிந்துவிட்டது. கீழ் திருப்பதிக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ள சொன்னார்கள், மூளை எதையெதையோ ஞாபகப்படுத்தும், உளறினார். திருப்பதி அரசு மருத்துவமனையில்தான் விஷயம் தெரியவர ஆரம்பித்தது, மருத்துவர்கள் எந்தவித தயக்கமுமில்லாமல் பக்கவாதம் வந்துவிட்டது என்றார்கள், எனக்கு என் மனதில் பக்கவாதம் ஆகிவிட்டது போல இருந்தது. எனக்கு சட்டென நிலைமை புரிந்துவிட்டது, சரி, இனி என்ன செய்யலாம், இவர் எப்போது வீட்டுக்குப் போகமுடியும் என்றேன். கோமாவில் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டுதான் கேட்டேன்.. தலைக்கு ஒரு எம்.ஆர்.ஐ எடுக்கச் சொன்னார்கள். பிறகுதான் முழுவிபரமும் தெரிந்தது. அந்த மருத்துவருக்கு முன்பே தெரிந்திருக்கலாம். ஆனால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. என்னிடம் சொல்லும்போது என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை, ஏனெனில் நான் ஒருவன் மட்டுமே அங்கே ஆங்கிலம் புரிந்து கொண்டவனாக இருந்தேன். இதை தங்கையிடம் சொல்லவேண்டும்.. ஹைபர்டென்ஷன் என்று சொல்லப்படுகிற இந்த தீவிரவாதியின் வன்முறைக்கான காரணம் என்னவென்று எங்களால் சொல்லமுடியவில்லை, ஒவ்வொருவரும் தனக்குத் தகுந்த காரணத்தை வடிவமைத்துக் கொண்டார்கள். எல்லாரையும் பார்ப்பதற்கு வெறுப்பாக இருந்தது. வேலூர் சிஎம்சிக்குச் சென்றும் பயனில்லை, மூளையில் விபத்து ஏற்பட்டால் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்பதையும் சினிமாதான் எனக்கு போதித்திருந்தது. பெரும் செலவு செய்தால் ஒரு சதவிகிதம் காப்பாற்ற முடியும். ஆனால் ஆயுளுக்கும் பக்கவாதம் தான். அல்லது கோமாவிலேயே இருக்கவேண்டியதுதான். ஒருவாரத்தில் இறந்துவிட்டார். ஒருசமயத்தில் நாங்கள் அவர் இறப்பதே பரவாயில்லை என்றுகூட யோசித்தோம், ஏனெனில் அவரை அந்த நிலையில் தினமும் பார்க்கவே முடியவேயில்லை, முடிவோ மிக நிச்சயமாகத் தெரிந்துவிட்டது. அவர் இறக்கும் வரையிலும் மூன்னூறை விட்டு இரத்த அழுத்தம் இறங்கவேயில்லை... ஆகவே எந்தவொரு தானமும் செய்ய முடியாது என்றுவிட்டார்கள். இறந்து போன என் மாமாவுக்கு மூன்று வயதில் குழந்தை இருந்தது. இப்ப்போது நான் மீண்டும் “காலம் மாறிப் போச்சு”க்கே வருகிறேன். வடிவுக்கரசி கண்விழித்து சங்கீதாவைப் பார்ப்பார். எல்லாரையும் ஒருமுறை பார்ப்பார், பிறகு இறந்துவிடுவார். இரத்த அழுத்தம் அதிகமாகி மூளைவெடிப்பு ஏற்பட்ட ஒருவர், முழித்து கண்ணீர் மழ்க பார்த்து வசனம் பேசி இறப்பதெல்லாம் சினிமாவில்தான். நிஜத்திலும் அப்படி இருந்திருக்கலாமோ என்று தோணவைக்கும் காட்சிதான் அது. திரைப்படத்தில் சொல்வது போல ஏதோ ஒரு சம்பவத்தின் அழுத்தம் மட்டுமே காரணமல்ல, எந்தவொரு சம்பவ அழுத்தமுமில்லாமல் இரத்த அழுத்தம் வரலாம்... ஃபேஸ்புக் நிலைத்தகவலுக்காக எழுத ஆரம்பித்து இறுதியில் கொஞ்சம் பெரிதாக வலைப்பதிவில் பதிவிடும்படி ஆகிவிட்டது, ஃப்லோ கொஞ்சம் மாறி மாறி இருக்கலாம். தகவல் தேவையானது. அன்புடன் ஆதவா.

Subscribe