வணக்கம் மக்களே!

கதையைப் படித்தபின் என் அலுவலகத்திற்கு ஆட்டோ சகிதம் ஆட்களை அனுப்பப் போகிறீர்கள்... !!! சகிப்புத் தன்மையோடு படியுங்கள். படித்து முடித்தபின் அடச்சே! இதெல்லாம் ஒரு கதையா என்று சொல்லக்கூடாது ஆமாம்... உங்களை நம்பிதான் எழுதியிருக்கேன்..

ஆதவனும் (அட நானில்லைங்க) அவன் காதலியும் முத்தமிடும் அந்தி நேரம். அந்த முத்தத்தில் விளைந்த சத்தங்கள் இடியாக ஒலிக்க, கண்கள் மின்னல் பார்வைகளை ஆதவன் வீச, சூழ்ந்து மறைத்துக் கொண்டிருந்த மேக மாமாக்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு காதல் அரங்கேறுவதை கண்கொண்டு பார்த்து சிரிக்கிறது பூமி, அந்த பூமியில் ஒரு புழுவாக நெண்டிக் கொண்டிருக்கும் பல உயிர்களில் ஆறறிவு உயிரனமாக கதிரவன் இருந்தான்..

மாலை நேரத்தின் மது மயக்கத்தில் பூக்கள் சொறிந்துகொண்டிருந்த சோம்பலை தன் புன்னகையில் வழித்துக்கொண்டு நேரே மேனியை சுத்தம் செய்யப் புறப்பட்டான். அதுவரை என்ன செய்துகொண்டிருந்தான் என்று கேட்கிறீர்களா? கதிரவனுக்கு ஏது வேலை? எல்லாம் கனவுகள் தான். காதல் கனவுகள். அதைவிடுங்கள். நாம் கதைக்குள் வருவோம்.

கதிரவன் என்றுமே தன் தலையை நீர் நனைய குளிக்கும் போது அருகிலிருப்பவர்கள் கண்கள் குளித்துக்கொண்டிருக்கும்.. அந்த நேரத்தில் தன் அகோரக் குரலில் பாட்டு ஒன்று பாடுவான் பாருங்கள்.. முத்தமிட்டுக் கொண்டிருக்கும் ஆதவனும் இரவுக் காதலியும் பயந்தே ஓடிவிடுவார்கள். பூமி அலறிஅடித்துக்கொண்டு சுற்றும்.. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவனைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் இருக்கும்.. அதற்கு பெயர் காதல். இப்படித்தான் அவனே சொல்லிக் கொள்வான். மெல்ல , தண்ணீரின் கண்ணீரை துடைத்துவிட்டு குளித்துவிட்டு வரும் கதிரவன் மிக அழகாக இருப்பான்.

அங்குள்ள ஆண்களில் கதிரவன் அழகு என்றாலும் சற்று அழுக்குதான். சூரியனின் பாசத்தில் பொங்கி வழியும் வியர்வைத் தண்ணீர். அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் குடம் எடுத்து வந்து பிடிப்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கண்கள் அயிரை மீன் மாதிரி.. வேறென்ன சொல்ல, மீன்களைத் தவிர வேறொன்றும் உவமையே சிக்கமாட்டேங்கிறது!. மூக்கு ஆங்கில எழுத்தான 'எல் ஐ கவிழ்த்தமாதிரி இருக்கும். செவிகளிரண்டும் யானைசெவிகள்.. சற்று நீளமான வாய்.. எத்தனை இன்ஞ் என்று கேட்டுவிடப்போகிறீர். இப்படியே வருணித்துக்கொண்டு போனால், போடா இதெல்லாம் ஒரு கதையா என்று என் வலையை மூடிவிடுவீர்கள்.. அதனால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்,.

இந்த நேரத்தில் இவன் எங்கு புறப்படுவான்?.. எல்லாம் காதலியைத் தேடித்தான்... நிற்க, காதலி என்றால் இவன் மட்டுமேதான் காதலிக்கிறான். அவளில்லை. கிட்டத்தட்ட இது ஒருதலைக் காதல். பாவம் கதிர், பலதடவைகள் காதலை பல கோணங்களில் சொல்லிப் பார்த்தான்.. ம்ஹீம்.. அவள் இணங்கவே இல்லை. எல்லா முயற்சியும் கடலில் கலந்த நதிநீர்தான்.. காதலிக்கு ஒரு பெயர் இருக்குங்க. ஜெஸ்ஸிகா. அவள் ஒரு கிறிஸ்டீயன்.. ஜெஸ்ஸிகா என்ற பெயர் வைத்துக்கொண்டு பின்ன என்ன முஸ்லீமா என்று நீங்கள் அரிவாளை எடுப்பது தெரிகிறது... ஜெஸீகா மிக அழகு என்றாலும் கர்வம் ஜாஸ்தி. தான் தான் உலகிலேயே பேரழகி என்று குதிகுதி என்று குதிப்பாள். அவளைப் பற்றிய வருணனைகள் கீழே தருகிறேன். நினைவில் கொண்டு சென்று பெருமூச்சு விட்டுக்
கொள்ளுங்கள்..

ஜெஸ்ஸிகா பார்ப்பதற்கு மிக ஒல்லியாக இருப்பாள். கேசம் இருக்கிறதே அது மலையிலிருந்து விழும் அருவியாக அப்படி ஒரு அழகு... கேசத்தை சுருட்டி கொண்டை போடும் பழக்கமே இல்லை இவளிடம். ஒவ்வொரு முடியையும் கையில் எடுத்துக் கொண்டு ஆனாலப்பட்ட ஆலமரத்தையே சாய்க்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதை அங்கேயும் இங்கேயும் ஆட்டிக்கொண்டு அவள் நடக்கும்போது கேசத்தின் பொலிவைக் கண்டு பாதைகள் எல்லாம் சுத்தமாகிவிடும் என்று கதிரவன் சொல்லுவான். நெற்றி இருக்கிறதே நெற்றி, ஆறாம் பிறை நிலவைப் போல அரை நெற்றி. அதில் பொட்டு இருக்காது. நெற்றியில் உள்ள சுருக்கங்களை ஒப்பிட கவிஞர்கள் பொருளைத் தேடுகிறார்களாம். கண்களின் வசீகரத்தைப் பற்றி நான் எழுதவே முடியாது. அட அட என்ன ஒரு அழகு போங்கள். நட்சத்திரங்கள் மின்னுவதைப் போல இமைகளை மூடி திறக்கும்போது ஒரு ஒளிவெட்டு கண்களில் ஏற்படும் பாருங்கள்... சூரிய கிரகணத்தைவிட சூடானது.. மூக்கு கொஞ்சம் நீளம்தான். இருந்தாலும் கொக்கு மூக்கோடு ஒப்பிட வேண்டாம். மூக்கின் நுனியில்தான் எப்போதுமே அமர்ந்துகொண்டிருப்பாள். அத்தனை கோபம் அவள் காட்டுவாள். மூக்கில் இரு துவாரங்கள்.. (பின்ன பல துவாரங்களா என்று எரிச்சலாவது தெரிகிறது... கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்!! ஹி ஹி) துவாரத்தின் வழியே என்ன இருக்கிறது என்று அறியாமல் காற்று நுழைந்துவிடும்.. அங்கிருந்து பெருத்த அழுகையோடு இன்னொரு காற்று வெளியே வரும்... பேசாமல் காற்றாகவாவது பிறந்து இருக்கலாம் என்று தோணும். நுதல்களைப் பொறுத்தவரை அவள் உருவத்திற்கு பொருத்தமாகவும், குறைவான நீளம் கொண்டனவாகவும் இருக்கும்.. உதடுகளில் வெடிப்பு இருக்கும்.. கதிரவன் அங்கேயே படுத்துக்கொள்ள பார்ப்பான். எந்த பருவத்திலும் 0 டிகிரியில் வைத்திருப்பாள். அவ்வப்போது நாக்கைக் கொண்டு தடவித் தடவியே குளிர்பிரதேசமாக வைத்திருப்பாள். பொதுவாக கழுத்தை சங்குக்கு ஒப்பிடுவார்கள். நான் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கிறேன். தண்ணீர் குடத்தின் விளிம்பை கவிழ்த்துப் போட்ட மாதிரி இருக்கும். கழுத்தில் அவ்வப்போது நரம்புகள் எட்டிப்பார்க்கும்.. அப்படியே இறங்கி வந்தால்........ (வேண்டாமய்யா பொதுமாத்து!! இத்தோட நிறுத்திக்கிறேன்.)

அப்பாடா! ஒருவழியா முக அழகை வர்ணிச்சுட்டேன்.. இனியாவது கதைக்குள் போவோம்...

கதிரவன் ஒரு பூங்காவில் நின்றுகொண்டிருந்தான். காதலித்தவர்கள் பைத்தியம் என்று கவிஞர்கள் கவிதை பாடுகிறார்களல்லவா அதனால் அவன் பூக்களோடு பைத்தியக்காரத்தனமாகப் பேசிக்கொண்டிருந்தான்.. அங்குள்ள பூக்கள் பல வகைகள் ரோசாப்பூக்கள்தான் நிறைய இருந்தன.. அவன் மனதிற்கு பிடித்த பூவான சிவப்பு வர்ண ரோசாப்பூக்கள் அன்றைய இரவை எதிர்நோக்கி தன் கன்னத்தில் கைவைத்து சோகமாக இருந்தது.. எதிர்நோக்கியதர்க்கும் சோகத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு. என்னிடம் கேட்காதீர்கள்.. எனக்கே தெரியாது. அந்த ரோஜாப் பூ சொன்னது, அடப்பாவி கதிரவா! இப்படி நடமாடும் பூவுக்காக காத்திருக்கிறாயே! எங்களையும் கொஞ்சம் கவனித்து ஒரு முத்தம் கொடுத்தால்தான் என்ன? என்று கேட்டன. கதிரவன் சும்மா இருந்தானா? இல்லை. வேலியைத் தாண்டிப் போய் ஒரு முத்தம் கொடுத்தான்... ரோசா முற்கள் அவன் சட்டையை பிடித்துக்கொண்டு இன்னும் இரு முத்தம் கொடு என்று கேட்டன... பாவம் அவன்.. அப்படி கொடுத்துக் கொடுத்தே எச்சில் செய்துவிட்டான்... நல்லவேளை அந்தநேரம் பார்த்து விஜயகாந்த் இல்லை. (பூந்தோட்டக் காவல்காரன்).

தன் கையில் உள்ள கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். மணி 6.10. இன்னும் வரவில்லையே அவள்... சலித்துக்கொண்டான். அங்குள்ள பாறை ஒன்றில் அமர்ந்து நிலவோடு பாட்டுக்குப் பாட்டு பாடிக்கொண்டிருந்தான்... சரியாக 6.20க்கு அவள் வந்தாள்... பூங்காவில் ஒழுங்காக எரியாத விளக்குகள் கூட எரிந்தன.. நிலவு தன் முகத்தைத் துடைத்துக்கொண்டு ஃபேர் அன் லவ்லி போட்டதைக் காணமுடிந்தது,. அவன் அப்படியே கனவுக்குள் போய் விட்டான். காதல் செய்யும் பாட்டைப் பாருங்கள். நன்றாக இருந்த கதிரவன் இப்படி ஆகிவிட்டானே என்று ஒரு ஓரமாக இரு காதல் புறாக்கள் கண்ணீர் விட்டன... (நன்றாக கவனித்துப்பார்த்தால் ஆண் புறா மட்டுமே, "சிக்கிவிட்டானே" என்று கண்ணீர் விட்டது தெரிந்தது.) அவள் ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறாள். அவனுக்கோ குளிர்தேவதை வந்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டிவிட்டாள்... உடலெல்லாம் ஒருவித நடுக்கம் ஏற்பட, கண்களாலேயே வலைவிரித்தாள் அவள்..

அவள் புன்னகைத்தாள்... இவனோ அந்த புன்னகையில் உள்ளே நுழைந்து தன் ஆசையைத் தீர்த்துக்கொண்டான். அட அட... காதலியின் புன்னகை என்ன ஒரு அற்புதம் போங்கள்... அதை அனுபவிக்கனுமே!!... மெல்ல அதரம் திறந்தாள். ஒருநிமிடம் உலகத்திலுள்ள அனைத்து கோள்களும் நின்றுவிட்டன. அவள் எச்சில், உதடுகளை முத்தமிட்டு பிரிய, அவள், " கதிர் உன்னை நான்............................. போடா " என்று வெட்கிச் சிரித்தாள்..

" கதிர் உன்னை நான்...... போடா " ... இந்த வார்த்தைகள் அவனை அப்படியே சொர்க்கத்திற்கு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது.. அங்கே ரதியும் மன்மதனும் கட்டிபிடித்து முத்தமிட்டு நடனமாடுவதைக் கண்டு களித்தான்... சொர்க்கத்தைப் பற்றி வர்ணனை????? வேண்டவே வேண்டாம்... கொஞ்சநஞ்சமாக என் வலையில் படித்துக் கொண்டிருந்தவர்களும் வராமலே போய்விடுவார்கள். ....... ஒரு தேவதை இறகுகளைப் பொருத்திக்கொண்டு கதிரவனை தன் மடியில் வைத்து அதே பூங்காவில் இறக்கிவிட்டது... அவள் இன்னும் சிரித்துக்கொண்டுதான் இருந்தாள். சிரித்தவள் சும்மா இருந்தால்தானே ஆகும்? நம் கதைக்கு முக்கிய காரணியான முத்தத்தை காற்றிலே கலந்துவிட்டு சென்றாள்... ஆம்.. அவள் தன் கைகளை உதடுகளுக்கு அருகே வைத்து தன் காதலின் அடையாளமாக முத்தத்தை ஊதிச் சென்றாள்... (அதாங்க ஃப்ளையிங் கிஸ்ஸு!! 'பறக்கும் முத்தமா தமிழ்ல???)

கதிரவன் தெளிவான நிலைக்கு வந்த பின் ரொம்பவே வருத்தப்பட்டான்... பாழாய்ப் போன மன்மதனும் ரதியும் நம்மை மயக்கிவிட்டார்களே ! இதனால் நம் உதடுக்கு வரவேண்டிய முத்தம் காற்றில் மிதக்கிறதே என்று ரொம்பவே வருத்தப்பட்டான்... முத்தக் கறை காற்றில் மிதந்துகொண்டுதான் இருந்தது.. கரையாமல்.அவன் அதை மெல்ல பிடிக்க முயன்றான்.. அந்த நேரம் பார்த்தா தென்றல் வீசவேண்டும்.. பூச்சாண்டி வேலைகள் காண்பித்தது இந்த காற்று... முத்தம் அப்படியே பறந்து போய் பூங்காவின் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டிருக்கும் செம்பருத்திச் செடி மீது அமர்ந்தது.. இவன் அதறிப்பதறி ஓடிப்போய் அந்த பூவை சாத்து சாத்து என்று சாத்தினான்.... அடப்பாவமே! கதிரவனுக்கு அதிட்டமே இல்லை.. காற்று மீண்டும் வேலையைக் காட்டியது.. இம்முறை பூவிலிருந்து அப்படியே வானம் நோக்கி பறந்தது ஜெஸ்ஸிகா இட்ட அழகிய முத்தம். மேக வீரர்கள் அதைத் தடுத்து நிறுத்தினார்கள். இவன் எப்படியோ காதல் தந்த சக்தியில் பறந்து வந்தான்.. மேகம் அதுவரை அடைக்கலமாய் அந்த முத்தத்தை பத்திரமாக பாதுகாத்துவைத்திருந்தது. இவன் ஒரு போர்வீரனைப்போல் ஆவேசமாக பறந்துவந்தான்.. கையில் ஒரு கேடயம் இருந்ததையும் கவனிக்கவேண்டும். மேகம் பயந்ததோ என்னவோ தன் வேகத்தைக் குறைக்காமல் ஓடிக்கொண்டே இருந்தது. முத்தம் மேகத்தின் அணைப்பில் தூங்கியது. கதிரவனுக்கு பெட்ரோல் தீர்ந்துவிட்டதோ என்னவோ மெல்ல மெல்ல வேகம் குறைந்து வந்தான்.. களைப்பு வேறு வாட்டியது. கண்கள் முத்தத்தைக் காணாமல் வலித்தது. கண்களின் நரம்புகள் வெளிறியது. காதுமடல்கள் சம்மட்டியில் அடித்தவாறு சட்னியானது. இத்தனைப் புலன்களும் ஒரேசமயத்தில் மயக்கமுற்றாலும் மனம் மட்டும் ஒளிவேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென ஜெஸிகா அவன் கண்களில் வந்து போனாள். " மச்சான்! நல்லா பறந்துபோடா என்னோட முத்தத்தை மறக்காம புடிச்சுடுடா " என்று சொன்னாளே பாருங்கள்... எங்கிருந்துதான்
வந்ததோ அத்தனை வேகம்..... ஒரே மூச்சில் தனக்கு மட்டுமே சொந்தமான முத்தத்தை சீதையைக் கவர்ந்த ராவணனனாகச் சென்றுகொண்டிருக்கும் மேகத்தை அடைந்து அதனோடு சண்டையிட்டான்... அவளை நினைத்துகொண்டு அவள் கண்களின் நரம்புகளை எடுத்து பின்னி ஒரு கத்தியை நொடிப்பொழுதில் தயாரித்துவிட்டான்... மேகம் அந்த கத்தியின் பளபளப்பைக் கண்டதும் முத்தத்தை கீழே விட்டுவிட்டு ஒரே ஓட்டமாக சென்றுவிட்டது..

கீழே வீழ்ந்துகொண்டிருந்த முத்தம் கனவிலிருந்து மீண்டது... அநாதையாக வானில் விடப்பட்டதை உணர்ந்துகொண்டது... இம்முறை மழை முத்தத்திற்கு அடைக்கலம் கொடுத்தது.. கதிரவனுக்கு அன்று மழையென்றாலே பிடிக்காமல் போனது...

ஓடிப்போன மேகம் தன் கோபத்தை மழையாகக் காண்பித்தது. மழைத் தண்ணீர் முத்தத்தை கரைக்காமல் தன் இடுக்குகளில் சொறுகிக்கொண்டு மண்ணை நோக்கி விழப் பார்த்தது... மேகத்திடமிருந்து விடுதலை வாங்கித் தந்த சந்தோசத்தில் தலைகால் புரியாமல் வானில் குச்சிப்புடி ஆடிக்கொண்டிருந்த கதிரவன் அவன் சக்தியை இழந்து தரையை நோக்கி விழுந்தான்... மழையிடம் சிக்கிய முத்தம் காணாமல் போனது... மழையைவிட அதிக அளவு தண்ணீரை இமைகள் என்ற மேகம் சொறிந்தது. அப்போது இரவாகையால் மின்னல் அடித்த போது எங்கோ ஒரு ஆட்டோடு கொம்பில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த முத்தத்தைக் கண்டுவிட்டான்.... தன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த முத்தத்தை ஆடு தன் குளிரைப் போக்க தலையை ஆட்டி வெளியே வீசியது.... தன் மேனியெல்லாம் சேறாகப் போனாலும் பரவாயில்லை என்று அங்கிருந்த சேற்றுக் குளத்துக்குள் விழுந்து தேடினான்.... அடக் கதிரவா!! உனக்கு மூளையே இல்லையடா!! நேரே ஜெஸ்ஸிகாவிடம் கேட்டாள் இன்னொரு முத்தம் கொடுக்கப் போகிறாள் என்று சேறு அவன் முகத்தில் சேற்றைப் பூசப் பார்த்தது... அப்போழ்து சொன்னான்.. " உனக்கென்ன தெரியும் முதல் முத்தத்தின் அருமை... நான் தொலைத்துவிட்டு நிற்கிறேனே என்ன செய்வேன்..." என்று அலறினான்....

மழை ஓய்ந்தது.. இரவு பனி படர்ந்தது... பனியிடன் இந்த மனிதன் கஷ்டப்படுவது பார்க்கும் இயற்கை அனைத்திற்கும் வருத்தமாக இருந்தது.. என்ன செய்ய? முத்தம் கிடைக்காமல் இவன் போகமாட்டானே!! மெல்ல அந்த சேற்றிலேயே உறங்கிப் போனான்.. மழையின் துளிகள் அவனுக்குத் தாலாட்டு படித்தது. இரவு கனவில் ஜெஸிகா மிரட்டுவது தெரிந்து சீக்கிரமே அதிகாலையில் எழுந்துவிட்டான்... இம்முறை தன் தேடுதல் வேட்டையில் முத்தம் கிடைக்காவிட்டால் மேனி வானுக்கு மனமோ அந்த மானுக்கு என்று சபதம் பூண்டுகொண்டான்... அவன் ஆயத்தமாவதை சூரியன் கைகொட்டி வரவேற்த்தான்.. அவனின் கதிர்கள் கதிரவனின் நெற்றியில் குங்குமத்தைப் பூசின. இரவெல்லாம் கனவில் வாட்டிய மகராசி தற்போழ்து நினைவில் வந்தாள்...

காற்று, மேகம், மழைம, சேறு இப்படி பல தடைகளைத் தாண்டி முத்தம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்றால்
சும்மாவா என்ன? அத்துணை சக்தி... காதல் எவ்வளவு தெய்வீகமானது தெரியுமா? . இப்படியொரு நொடிப்பொழுதில் அவன் கடற்கரைக்குச் சென்றான்... சேற்றின் வழி நதியில் கலந்து கடலை அடைந்திருக்கவேண்டும் என்னவள் கொடுத்த முத்தம் என்று
நினைத்துக்கொண்டான்.. கடல் ஒன்றுமே தெரியாமல் தேமே என்று படுத்துக்கொண்டிருந்தது. சீற்றமில்லை, சுனாமி இல்லை, ஒரு மண்ணுமில்லை... ஜெஸ்ஸிகாவை நினைத்துக்கொண்டு ஹாரிபாட்டர் மந்திரத்தை உபயோகித்து கடலுக்குள் சென்றான்....

அலைகளின் அடுக்குகளில் ஒளிந்துகொண்டிருக்குமா என்று முதலில் துலாவினான். ம்ஹீம்... கடலில் துலாவுவது என்பது அத்துணை சுளுவா? இல்லை.. அலையடுக்குகளில் இல்லை... அடடா! கடலிள் இறங்கியபின் எப்படி போய்க் கேட்பது என்று அந்த திட்டத்தைக் கைவிட்டான்... திடீரென ஒரு சந்தேகம்.. தன் சட்டைப் பையினுள் இருந்து அலைபேசியை எடுத்து ஒரு போன் செய்தான்.. காதல் தேவதைக்கு.... என் முத்தத்தைக் களவாடிவிட்டாய் என்று குற்றம் சாற்றினான்.. அவள் இரக்கப்பட்டு, வானிலிருந்து இறங்கி வந்தாள்

காதல் தேவதையிடம் கதிரவன் கேட்டான். ம்ம்ஹீம்.. அவர்களுக்கும் தெரியவில்லை. ஆனால் ஒரு க்ளூ மட்டும் கொடுத்தார்... இந்த
வானமும் கடலும் முட்டிக்கொண்டிருக்கும் இடத்தில் ஒரு மூலையில் பொத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார்...

இவன் வேகவேகமாக நீந்தி அந்த இடத்தை அடைந்துவிட்டான். வானும் கடலும் ஒருவரையொருவர் மனம் தவிர்த்துவிட்டு
முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.. அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது ஜெஸ்ஸிகாவின் முத்தம்... மெல்ல அடியெடுத்து வைத்து கதிரவன் , அந்த முத்தத்தை லபக் என்று பிடித்துவிட்டான்... பிடித்தவன் அந்த முத்தத்தை தன் உதடுகளுக்குள் பொருத்திவிட்டான்.... திடீரென ஒரு ஆக்ரோசப் புயல் தாக்கியது.. முத்தத்தின் வேலையை அது
காட்டியது. கண்கள் சொறுகின.. அப்படியே மயங்கிவிட்டான்... கதிரவன் முத்தத்தைப் பெறும் காட்சியைப் பார்க்க வந்த நம் வலை மக்கள் எத்தனையோ முயற்சி செய்தும் அவனை எழுப்பமுடியவில்லை.. ம்ஹீம்... இதற்கு ஒரே மருந்து ஜெஸிகா தான்..
ஜெஸிகா அவனை எழுப்ப முயன்று நீரைத் தெளித்தாள்... அவள் கையில் பட்ட அமிர்த நீர் அவனின் கண்களைத் திறக்கவில்லை.. அவன் காதில் ஒன்று சொன்னாள்... உடனே எழுந்துவிட்டான்....

அப்படி என்ன சொல்லியிருப்பாள்??/ யோசியுங்கள்...

கதை என்ற பெயரில் நான் இட்ட விதையைப் பார்த்துவிட்டு, பதை பதைக்க ஓடிவந்து என்னை உதைக்கப் போகிறீர்கள்... என் சதை கிழியப் போகிறது.. எதையும் செய்யும் முன் யோசித்துவிடுங்கள்..

குழந்தைகளுக்கான உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது. எல்லைகள் அற்ற பாதைகளில் முடிவில்லாத பயணம் போன்று நீண்டு கொண்டே இருக்கிறது. சிலர் அப்பயணத்தில் இறங்கிக் கொள்ளலாம், சிலர் பயணித்துக்கொண்டும் இருக்கலாம்.. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொருவிதமான உலகம் இருக்கிறது. அது நீண்டோ, குறுகியோ, எந்த விதமான வடிவங்களிலும் இருக்கலாம்.. அவர்களின் ஒவ்வொரு நொடியிலிருந்தும், அவர்களின் உலகம் நழுவிக் கொண்டே இருக்கிறது. அவர்கள் முடிவைக் காணும் பொழுது, பாகுபாடுகளை அறிந்து கொள்ளும் முரட்டு மனிதர்களாகிவிடுகிறார்கள்.

குழந்தை எனும் வரையறை எங்கு நீங்குகிறது? அதன் செயல்பாட்டை வைத்தா? அது பேசும் மொழியை வைத்தா?

குழந்தைகளுக்குத் தான் எந்த பாலினம் என்று எப்பொழுது தெரிய வருகிறதோ, அல்லது அந்த பாலினத்தின் உண்மையான நடவடிக்கைகள் சாராம்சங்களைப் பற்றி எப்பொழுது புரிய வருகிறதோ அன்றிலிருந்து குழந்தைகள் மாறத் துவங்குகிறார்கள். அவர்களின் மொழி மாறுகிறது. நடத்தை, பாகுபாடு, செயல்கள், பாவனை என்று ஒவ்வொரு வடிவங்களும் மாறத் துவங்குகின்றன. தான் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.

குழந்தை மொழி ஒரு ஆரஞ்சுப் பழத் தோலைப் போன்று உரிய உரிய அது பண்பாட்டு மொழியை அடைகிறது, உரிந்து சருகாகிப் போன மொழி, எங்கே சென்றது என்ற அக்கறையின்மை, ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தானாக அமர்ந்துவிடுகிறது. உரிந்து போகாத மொழியைக் கொண்டவர்கள் பைத்தியக்காரர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். உண்மையிலேயே பைத்தியக்காரர்களுக்கும் குழந்தைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்? உருவத்தைத் தவிர..

என் மாமாவின் மகன், பேசுவதெல்லாம் ஏதோ கடவுள் பேசுவதைப் போன்று இருக்கிறது ; அவனது ஒற்றைச் சொல்லுக்காக ஏங்கி நிற்கிறோம்.. அவன் அப்படி பேசுகிறான், இப்படி பேசுகிறான் என்று பெருமைப் படுகிறோம், அங்கலாய்க்கிறோம், அவனது ரிப்பீட்டட் சொற்கள் நம்மை குதூகலிக்கச் செய்கிறது, ஒரே சொல்லையே திரும்பவும் சொல்கிறான், அவனது கேள்விகளின் விடைகளெல்லாம் அந்த ஒற்றைச் சொற்கள் தான். ஆனால் ஒரு பெற்றோராக தம் குழந்தை இப்படியே பேசுவதை யாரேனும் விரும்புகிறார்களா என்றால் இல்லை.. குழந்தை மொழி இனிது என்று நினைக்கும் அத்தனை பேரும், அம்மொழி நீடிக்கவேண்டும் என்று விரும்புவதில்லை.. மொழியிலிருந்து வெளியே வரவேண்டும் என்று மறைமுகமா நினைக்கிறார்கள். அதுவே உண்மையும் ஆகிவிடுகிறது. யாருக்கும் தெரியாமல் குழந்தை மொழி, கண்ணீர் கசக்கி குழந்தையை விட்டு வெளியேறுகிறது.

தாயின் கருப்பப்பையிலிருந்து குழந்தைகள் கனவு காணத் துவங்குகிறார்கள். அவர்களின் கனவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்? நவீன ஓவியங்களின் சிதறல்களைப் போன்று வர்ணங்கள் கலைந்த கனவுகள் குழந்தைகளுக்கு வருமா? அல்லது பொம்மைகளின் உலகத்திற்குச் சென்று அகப்பட்டுக்கொண்டதைப் போன்ற கனவுகள் வருமா? இன்னும் புரியாத புதிர்தான்..
தான் கண்டது கனவுதான் என்று அந்த குழந்தைக்கு எப்படி புரிய வைக்க முடியும்? அல்லது குழந்தைகள் ஏன் தன் கனவைப் பற்றி பேசுவதில்லை? விடை தெரியாத கேள்விகள் இவை.

தெரிந்த குழந்தை ஒன்று தனக்கு நேர்ந்த சம்பவத்தை விவரிக்கிறது. அது கனவைப் போன்று இருக்கிறது. குழந்தைகளுக்கு பொய்கள் தெரிவதில்லை, ஏனெனில் அது கற்பனை செய்வதில்லை. நேர்ந்ததை மட்டும் கூறுகிறது. நான் அதனிடம் கேட்டேன், உனக்கு கனவு வருமா என்று.. அதற்கு அக்குழந்தை 'அப்படின்னா என்ன' என்கிறது.. மேலும் சொல்கிறேன். 'நீ தூங்கிட்டதுக்கு அப்பறம் உனக்கு என்ன ஆகும் ? ' அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை.. ஒருவேளை நான் கேட்டது தவறாக இருந்திருக்கலாம். ' நல்லா தூங்கிடுவேன்' என்று சொல்லிச் சிரிக்கிறது. நன்கு ஞாபக சக்தியுடைய மனிதர்களே கனவுகளை மறந்துவிடும்பொழுது, மழலை மொழி பேசும் குழந்தையிடம் இதை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? குழந்தைகளிடம் அதட்டிக் கேட்கமுடியாது, மேலும் ஒரு கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கும்பொழுது, தனக்குத் தெரிந்த பதில்களையே சொல்லி வருகின்றன குழந்தைகள். அவை, முன்பு சொன்னதற்கு ஒத்து இருக்கலாம், அல்லது சற்று மாறியிருக்கலாம்.

சில சமயங்கள் நான் ஆச்சரியப்படுவேன், இந்த குழந்தை என்னைப் பார்த்து என்ன நினைக்கும்? இவன் நல்லவன் என்றா? கெட்டவன் என்றா? அவர்களுக்கு எப்படி அந்த பாகுபாடு தெரிந்திருக்கிறது? குழந்தைகளின் சுபாவம் தாயிடமிருந்து நிர்ணயிக்கப்படுகிறது, தன்னை யார் சுமக்கவேண்டும், யார் சுமக்கக் கூடாது என்பதை அக்குழந்தை முடிவு செய்துகொள்கிறது.. இன்னும் சில குழந்தைகள், தன்னை மாறி மாறி யாரேனும் தூக்க மாட்டார்களா என்று ஏங்குகிறது.

என்னைக் காணும் சில குழந்தைகள் காரணமே இல்லாமல் சிரிக்கும்.. ஏன் சிரிக்கிறது என்று நான் யோசிப்பேன். நான் ஏதோ ஒரு வடிவத்தில் அக்குழந்தையைக் கவருவதாக உள்ளேன். இதைப் போன்றே நான் இன்னொருவரைப் பார்த்து அப்படி சிரிக்க முடியுமா? அந்த சிரிப்பில் என்ன அடங்கியிருக்கிறது, கேலி பண்ணுகிறதா, என்னை கோமாளியாக நினைக்கிறதா என்றெல்லாம் மனம் விரிந்து கொண்டு கேள்விகளை அடுக்கிச் செல்லும். அக்குழந்தை அந்த நொடியில் நினைப்பதெல்லாம், அது கவர்ந்த என் உருவத்தை மட்டுமே..

வெகு நாட்களுக்கு முன்னர், பந்து விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்,, அக்குழந்தைகளுக்கு தன்னைச் சுற்றியுள்ள உலகம் எப்படிப்பட்டது என்று தெரியவில்லை, அதன் குறிக்கோள் எல்லாம், அடுத்த குழந்தையிடமிருந்து எதிர்வரும் பந்தை தன் வசமாக்குவது மட்டுமேதான். பந்து அதன் ஆடையில் பட்டு அழுக்காகிறது. தன் ஆடை அழுக்காகி வருகிறதென்பதை அவர்களால் உணரமுடியவில்லை..

இதே போன்று எங்கோ ஒரு இடத்தில் நானும் விளையாடிக் கொண்டிருந்திருப்பேன்.. என் ஆடையும் அழுக்காகியிருக்கலாம், ஏன், கிழிந்துகூட போயிருக்கலாம்.. அது எனக்கோ, அல்லது நான் எதிர்கொண்டு ஆடிய இன்னொரு குழந்தைக்கோ மறந்து போயிருக்கின்றன. நாங்கள் விளையாடிய மண் இன்று எங்கோ ஆழத்தில் புதைந்திருக்கலாம்.. எந்தச் சுவடும் இன்றி அந்நிகழ்வு காணாமல் போயிருக்கிறது.. அதைப் போன்று எத்தனையோ!!

யாரென்றே தெரியாத குழந்தைகளோடும் விளையாட வேண்டும் என்று நினைப்பேன். அதன் தாய் அதற்கு வழி கொடுக்கிறாள், குழந்தை குறித்து பேசுகிறாள், அவள் யார் என்று எனக்கும் தெரியாது. அக்குழந்தை என்னிடம் விளையாடுகிறது.. சிறிது நேரத்தில் அம்மாவைத் தேடுகிறது.. என்னை விட்டு நீங்கியதும், என்னோடு விளையாடிய நிமிடங்களையும், என்னையும் அது மறந்துவிடுகிறது.. இன்னும் சிறிது காலம் கழித்து அதே குழந்தையை விளையாட்டுக்கு அழைக்க முனையும் பொழுது, அந்த தாய் அவளை மறைக்கிறாள்.. தயங்குகிறாள், ஏனெனில் குழந்தைகள் என்றும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள் என்றுதவறாகப் புரிந்து கொள்கிறேன்.

சிலருக்கு பொம்மைகள்தான் உலகம்.. அதனோடு பேசும், பழகும்.. சிரிக்கும்.. கோவித்துக் கொள்ளும்.. பொம்மைகளுக்காக அழும்... முறிந்து கிடக்கும் பொம்மையின் முண்டம், அதற்கு என்ன விதமான எண்ணங்களையும் தோன்ற வைக்கலாம்.. குழந்தைகள் முடிவு செய்து கொள்கிறார்கள், பொம்மையின் இறப்பை அசாதாரணமாக எடுத்துக் கொள்ள சிலரால் முடிவதில்லை.. அழுகிறார்கள்... மேலும் மேலும்..

என் வீட்டுக்கு எதிர்வீட்டில் உத்திரத்தில் கயிறு கட்டி, கழுத்து நெறிக்கத் தொங்கிய அப்பாவைக் கண்ட அந்த குழந்தைக்கு அது என்ன செயல் என்று தெரியவில்லை, அப்பா தொங்குகிறார் என்று சொல்லத் தெரியாமல் சிரிக்கிறது. அம்மா அழுகிறாள்... எதற்காகவோ அழுகிறாள் என்பது மட்டும் அக்குழந்தை தெரிந்து கொள்கிறது.. தானும் அழுகிறது... மிகச் சில நேரங்கள் கழித்து, அது பொம்மையைத் தேடிக் கொண்டிருக்கிறது. அழுகைகள் என்பது வலியின் பிரதிபலிப்பு, குழந்தைகளைப் பொறுத்தவரை அது தன்னைக் காட்டிக் கொள்ளும் அங்கீகாரம்.

குழந்தைகளுக்கான கேள்விகள் இன்னும் நீண்டுகொண்டேதான் இருக்கின்றன. அதற்கான விடையை இதுவரையிலும் யாரும் சொன்னதாகத் தெரியவில்லை, ஏனெனில் ஒவ்வொரு முறையும் விடை கண்டறியும் பொழுது, ஒரு குழந்தை அவ்விடையை உடைத்தெறிகிறது. குழந்தைகளைப் போல நம்மால் கேட்கவும் முடிவதில்லை, அவர்களைப் போன்று எண்ணவும் முடிவதில்லை, ஏனெனில் நாம் குழந்தை எனும் உலகத்தை கால சுழற்சியில் தொலைத்துவிட்டு வருகிறோம்..

அன்பின்
ஆதவா..

வேத்தியர் எத்தனை நாள் என் மேல் கோபமாக இருந்தாரோ தெரியவில்லை. இப்படி கோர்த்துவிட்டுட்டு போய்விட்டார்...
சரி முயற்சி செய்வோமே!!!

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்!!!!

அகண்டெடுத்த தமிழகழியில் உலாத்தும் கெண்டை நான். வேத்திய வலைஞன் ஆற்றிலிட்ட தூண்டிலில் சிக்கி, ஆற்றினை விட்டகல்ந்தால் தமிழெனும் சாகரம் கைநீட்டி வரவேற்கிறது. வேத்தியருக்கு நன்றி

நெடுநாட்களுக்கு முன்னர் வேற்றொரு பெயரில் நான் எழுதிய காதல் பா'வை உங்களிடம் சொல்லிவிட்டு தொடர்கிறேன்..

ஒண்மை உயர்வெண் முடியாள் ஒருமுக
நுண்துளை நூற்மனதால் நூற்ற - புலமிகு
வண்குழை வாயெழுத்து வெண்ணிற மீனுறங்கும்
விண்ணை விறைக்காதோ சொல்.


முதலில் வழக்கொழிந்த சொற்கள் என்பது.... வழக்கில் அல்லாதன யாவும் வழக்கொழிந்தன எனலாம்.

ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் எழுத்தாளுமை என்பது அவசியம். எழுத்தாளுமைக்கு அவசியமானது மொழியை ஆழ்ந்து உணர்ந்து புரிதல். மொழி பிறக்குமிடத்து உட்துளைந்து மூச்சிறங்கக் கிறங்கல். தன்னிகர் எவருமில்லை எனும் இறுமாப்பில் உலவுதல். இவை யாவும் ஒருசேர அமையப்பெற்றவனுக்கு அம்மொழி ஒரு குழந்தையாக மடியில் தவழும்.

முதன் முதலில் நாம் பார்க்கவிருப்பது :

பாங்கி - சிநேகிதி சகி, தோழி.. பாங்கியர் என்பது பன்மை. இதை பாரதி சிற்சில இடங்களில் சொந்தப்படுத்தியிருப்பார்.

தகழி - அகல், விளக்கு..

சகடம் - சக்கரம்... சென்ற மார்கழியில் குளிரோடு குளிராக, ஆண்டாளை லவ்விக் கொண்டிருந்த பொழுது அவள் காட்டிய வார்த்தை... 'கள்ளச் சகடம்'

திகழ்ச்சி - தோற்றம், அல்லது பிரகாசம், அல்லது விளங்குதல். 'நீ ராஜாவாக திகழ்கிறாய்'

நெக்கு - உருகு.... நெக்கு எனும் சொல், நெகிழ்விலிருந்து பிறக்கிறது.. அல்லது இரு சொற்களும் சகோதர் சொற்களாக இருக்கலாம். நெகிழ்வு - மலர்ச்சி


பிணக்கு - சண்டை

மிடிமை - தரித்திரம் - பாரதியின் ' மிடிமையும் அச்சமும்....

இதே பாட்டில்.. மேவி - பரவி - அல்லது கலந்து...

புனைவு -... அலங்கரிப்பு!!! புனை என்றால், அலங்காரம் செய் என்று அர்த்தம்.. புனைவு என்பது ஆக்கம் அதாவது தம்மால் உருவாகும் ஒரு பொருள் அல்லது படைப்பு என்றும் சொல்வார்கள்.

முறுவல் - சிரிப்பு ... புன்முறுவல், புன்சிரிப்பு!!

நிந்தனை - இகழ்ந்தல்,

மாட்சிமை - அழகு, மாணம் உம் அழகுதான்..

அரவம் - ஒலி.. பாம்பு

போதுமய்யா போதும் என்று பேரரவம் ஓதுபவர்க்கு...... இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.. மேற்கண்ட வெண்பாவுக்கு விளக்கம் கீழே!!!


ஒண்மை = அழகு

ஒண்மை உயர் = அழகில் உயர்ந்த
வெண் முடியாள் = வெண்மை நிற (நரைத்த) முடிகொண்ட கிழவி
ஒருமுக = ஒரேமுகமாய்
நுண்துளை = நுண்ணிய துளையால்
நூற்மனதால் = நூற்ற மனதால்.. (நூற்ற என்பதற்கு சரியான வழக்கு தமிழ் தெரியவில்லை செய்த என்று கூட சொல்லலாம். )
நூற்ற = செய்த (நூல் நூற்றல் அதாவது கட்டுதல் என்பார்கள்.)
புலமிகு = புலமை மிகுந்த
வண்குழை = வண்மை மிகுந்த
வாயெழுத்து = வாய் எழுதும் எழுத்து = பேச்சு
வெண்ணிற மீனுறங்கும் = வெண்ணிறமாய் சுடரும் மீன்கள் உறங்கும்
விண்ணை - வானை
விறைக்காதோ சொல்...... விறைச்சுடாதா சொல்லுங்க..

அதெல்லாம் சரிதாங்க, அதென்ன வண்மை? விளக்கறேனே!!!

வண்ணம் - அழகு
வண்ணம் ஒரு பண்பு. அதிலும் எவ்வண்ணமும் அழகு நிறைந்த பண்புகள்.
வண்ணம் நிறைந்த பூக்கள், வண்ணத்துப் பூச்சிகள்.. நிறமற்றவை என்று எதுவும் சொல்லவியலாது. ஏனெனில் நிறமற்றவைகளும் ஒரு நிறம்தானே!

அழகு..

வண்ணம் = திருமுகம்.
வண்ணன் = அழகு நிறைந்தவன்.

வண்மையும் அழகென்றே பொருளாகும்.

இன்னொன்று,

வன்மை = கடுமை,
வன்சொல் = கடுஞ்சொல்....

இது எதிர்மறையாக அல்லாமல், இப்படிச் சொல்லலாம்..

வன்மை = உறுதி
வன்சொல் = உறுதியான சொல்..

இன்னும் இரண்டு பேரா??? ஏற்கனவே ஹேமாவையும், கார்த்திகைப் பாண்டியரையும் தொடர் எழுதச் சொல்லியிருப்பதால் தற்சமயம்

அபுவும், செய்யதும் ஏற்கனவே தேவாவின் பிடியில் இருப்பதால்

புதியவன்,
மாதவராஜ்

இருவரையும் அழைக்கிறேனுங்கோ!!!


என்றோ ஒரு நாள்
கீறிவிட்ட உடலாலும்
அன்றே திணிக்கப்பட்ட
ஒரு விதையாலும் மனம்
கோளாறுகள் நோண்ட
வீதியில் திரிகிறேன்

என் கண்களுக்குத் தெரிவது
ஒரு குழந்தையின்
ஐஸ் குச்சியும்
அவள் கையிலிருக்கும் பலூனும்

என்னைச் சுற்றி
மடையர்களாய் நிற்கும்
இந்தக் கூட்டங்களைக்
கேவலமாக மதிக்கிறேன்

இந்த தெருவே என் வீடு
சாக்கடைகள் என் குளியலறை
குப்பைத் தொட்டி என் சாதஅறை

நினைவுகளின் பிணைப்புகளினால்
என் மேனியில்
படர்ந்து கொண்டிருக்கும்
செயற்கைத் தோல்களை
அங்கங்கே கிழிக்கிறேன்.
என் வீட்டில்
குழந்தையைத் தவிர
கூட்டத்திற்கு குறைவில்லை

பெளர்ணமியின் வேதனையை
முழுமையாக ரசிக்கிறார்கள்
பூலோகக் காவியர்கள்
கலைந்து போன மேகங்களை
எடுத்து போர்த்திவிட
கவலை எதற்கு இவர்களுக்கு?

முன்குறிப்பு : கொஞ்சம் பெரிய கட்டுரைதான்.... ஆனாலும் படிச்சுடுங்க..

வேத்தியன் மாதிரி நானும் பேசாம இருந்திருக்கலாம்.. வேத்தியராச்சு பல்லு விளக்கினாரு, நான் அதுவும் பண்ணலை. போய், தேவா சார் என்ன பண்ணினாருன்னு எட்டியது குத்தமா போச்சு!!! பிடிச்சவங்களைப் புடிச்சுப் போடறதுமட்டுமில்லாம, இரண்டு பேரையும் பிடிச்சுப் போடணுமாம்.... சரி... இனி நம்ம கட்டுரைய ஆரம்பிச்சிடவேண்டியதுதான்.

மிகவும் பிடித்தவர்கள் :

பிடித்தவர்கள் என்று ஒருவர் இருவரை வகைப்படுத்த இயலாது.. ஒருவேளை அப்படி செய்யவேண்டுமெனில் என் பெற்றோரைக் கைகாட்டிவிட்டு சென்றுவிடலாம். நமக்கு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் மிகவும் பிடித்தவராக இருக்கலாம். மிகச் சரியாக கணித்து என்னால் இவர்தான் பிடித்தவர் என்று சொல்லமுடியவில்லை. இருப்பினும் இருவரை கை நீட்டுகிறேன்.

கலை-இலக்கியம் ஆகிய இரு துறைகள் எனக்கு மிகவும் பிடித்த துறைகள். இவ்விரு துறைகளில் நன்கு தேர்ச்சி பெற்றும் சிறப்படைந்தும், திருப்பங்கள் கொடுத்தும், அவர்கள் வாழ்ந்த பிறகே அவர்களை உலகம் அடையாளம் எடுத்துக் கொண்டது.


மஹாகவி!
----------
எத்தனையோ கவிகளுக்கு ரோல் மாடலாகத் தெரிந்தவர், புதுக் கவிதைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர், புரட்சிக் கவிதைகளுக்குச் சொந்தக் காரர், என் மனம் கவர்ந்த கதாநாயகர், எனக்குக் கவிதைகளைக் கற்பித்த ஆசான். அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறை எழுதி உங்களை சலிப்படைய விரும்பவில்லை நான்..... அவருள் நான் வாழ்ந்ததை முடிந்தவரையில் காண்பிக்கிறேன்...

அவர் வாழ்ந்த நாட்களில் பாடிய பாடலுள் ஒன்று..

தூங்குகையிலே வாங்குகிற மூச்சு - அது
சுழி மாறி போனாலும் போச்சு.

இப்படிப்பட்ட சந்தேகம் அவருக்கு எழுந்ததும் அவர் நினைத்தது, நாம் என்ன செய்தோம் என்பதே! பாரதி என்ன செய்யவில்லை?. பாரதி பற்றிய பல எதிர்க்கூற்றுகள் படித்ததுண்டு. அவர் வாழ்ந்த காலத்துக்கும் அதிகமாகவே நமக்கு ஆவணங்கள் விட்டுச் சென்றுள்ளார்,,, வறுமையையின் கொடுமையை அனுபவித்த மாபெரும் கவிஞர்... அங்கீகாரம் அளிக்காத தமிழகம் இன்று தலைதூக்கி ஆடுவது வெட்கம்...

அன்றைய காலத்தில் மகா கவிகள் என்று சொல்லப்பட்டவர்கள் இருவர் மட்டுமே! மற்றொருவர் தாகூர். தாகூரின் எழுத்துக்களுக்கு ஒப்பானவர்.. இன்னும் சொல்லப்போனால் அதைவிடவும் மேலானவர். ஒருசில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை இம்மாதிரி கவிஞர்கள் பிறப்பதுண்டு. மற்றய மொழிகளுள் அவ்வளவு பரிச்சயம் இல்லை. தமிழுக்கு பாரதியார்..

கம்பனின் ஒரு பாடலை மேற்கோளிட்டு, பின்வருமாறு அவர் கவிதைகளைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்கிறார்.

சவியுறத் தெரிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவியெனக் கிடந்த .........................

ஒளி பொருந்திய தெளிவுடையதாகி, குளிர்ந்த நடையுடையதாகி, மேலோர் கவிதை போல.... என்று வருகிறது. ஒளி என்றால் காணும் கவிதை கருத்தை வெளிச்சமிட்டுக் காட்டவேண்டும்,. கவிதையில் தெளிவு இருக்கவேண்டும், படிக்கும்போது குளிர்ந்த நடை இருக்கவேண்டும் என்று சொல்வதாக சொல்லுகிறார். பாரதி அதை ஆமோதிப்பது போல இங்கே நாம் எழுதுகிறோமா என்று கவனிக்கவேண்டும். அத்தோடு நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப்பட்ட இலக்கியங்கள் யாவும் அக்காலத்தில் புழங்கப்பட்ட வார்த்தைகளை/மொழிகளைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டவையாக இருக்கும், காலம் மாற மாற மொழிச் சிதைவில் மொழி மாறிக் கொண்டே செல்லுகிறது. ஆக கவிஞர்கள் மக்களுக்குத் தெரியக் கூடிய பதங்களையே உபயோகிக்கவும் வேண்டும் என்கிறார். மிகவும் பழையமான வார்த்தைகளை உபயோகிப்பதைக் காட்டிலும் மறையக்கூடிய அல்லது புரியக் கூடிய வார்த்தைகளைக் கவிதை ஆக்குவதில் தவறில்லையே!! இன்று இசங்கள் கட்டி எழுதுவதுதான் தரம் வாய்ந்த கவிதை என்று பல கவிஞர்கள் எண்ணீக் கொண்டிருக்கிறார்கள். இது இப்பொழுது நடந்த விஷயமல்ல. பாரதி காலம் தொட்டே நடக்கிறது... மக்களுக்குப் புரியும்படியே கவிதைகள் எழுதி வந்தார்... கவிஞர்களுக்கு மட்டும் புரியும்படியல்ல...

பின்வரும் பாடலைக் கவனியுங்கள்... எத்தனை அழகு... அப்படியே பாடுவதைப் போல உணர்வு ஏற்படுகிறது... இங்கே அவர் சொல்லிய வார்த்தை ஆடலைக் கவனியுங்கள்... ஏதேனும் ஒரு வார்த்தை உங்களுக்குப் புரியவில்லை எனில் தமிழராய் பிறந்ததில் அர்த்தமில்லாமல் போய்விடும்....

காக்கைக் குஞ்சுக்குக் கலியாணம்;
கொக்குப் பெட்டைக்கு மஞ்சாணம்;
எப்போ எப்போ கலியாணம்?
காடு விளைய விட்டுக்
கண்டாங்கி நெய்ய விட்டுக்
கொக்குச் சமைய விட்டுக்
குழைய லிட்டே தாலிகட்டிக்
காக்கைக் குஞ்சுக்குக் கலியாணம்;
கொக்குப் பெட்டைக்கு மஞ்சாணம்.


மாதர் பற்றி பாரதி என்ன சொன்னார்? எனக்குள் நீண்ட நாட்களாக எழுந்த கேள்வி.. பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்கள் என்று மார்தட்டி சொல்லிக் கொள்கிறோம். பாரதி அப்படி என்னவெல்லாம் கண்டார்..?? அவரே சொல்கிறார் பாருங்கள்

  1. ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும் (பாரதி காலத்தில் ஆணுக்கும் ஓட்டுரிமை இல்லை)
  2. வயது வந்த பிறகு பெண்ணுடைய இஷ்டப்படியே திருமணம் முடித்து வைக்கவேண்டும்
  3. கணவன் கொடுமை புரிந்தால் உடனே விவாகரத்து செய்யும்படி பெண்ணுக்கு உரிமை வழங்கப்படவேண்டும்
  4. அது மட்டுமல்ல, விவாகரத்து செய்வதை ஊர்மக்கள் தூற்றுவதைத் தடுக்கவும் வேண்டும்
  5. பெண்ணை சம்பாதிக்க விட்டு பிழைக்கக் கூடாது. தந்தை தனது சொத்தில் பெண்ணுக்கு பங்கு தரவேண்டும்
  6. கணவனுடைய சொத்தை மனைவி பயன்படுத்திக் கொள்ளவேண்டும்
  7. பெண்கள் தங்கள் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
  8. தனி இடங்களில் அவர்களைக் கண்டால் மரியாதை செய்து வணங்க வேண்டும்
  9. அப்படி மரியாதை செய்யாத மனிதர்களிடம் மற்றவர்கள் நெருங்கக் கூடாது


யோசித்துப் பாருங்கள்.. அன்றைய இந்தியாவில் பெண்கள் எப்படி இருந்திருக்கிறார்கள்.... கிட்டத்தட்ட அவர் நினைத்தது எல்லாமே மாறிவிட்டாலும்...........

  • எந்த ஒரு மனைவியும் கணவனுக்கு அடிமையாக இருக்கக் கூடாது

என்று அவர் சொன்ன ஒரு விதி மட்டுமே இன்னும் விலக்காக இருக்கிறது. பெண் தனது அடிமைத் தனத்திலிருந்து முற்றிலும் வெளியே வந்துவிட்டாளா? இல்லை. முற்றிலும் என்று சொல்லமுடியாது. இன்றைக்கும் விவாகரத்தான பெண்ணை வேறுவிதமாக ஊரார் நினைப்பதுண்டு. தனது மகளுக்கு பல அப்பாக்கள் சொத்து பிரித்துக் கொடுபபதில்லை. பெண்ணை ஒரு பொருளாக நினைப்பவர்களே அதிகம்.

உயிருள்ளவரை இன்பத்துடன் வாழ்வது அவசியம். இன்பத்திற்கு விடுதலை அவசியம்... பாரதியின் வைரவரிகள் இன்றைக்கு எத்தனை தூரம் உண்மையாக இருக்கிறது? ஆனால் ஒரு விஷயம் யோசித்துப் பாருங்கள். பெண்களை கடவுளாக பூசித்தவர்கள் நம் தமிழர்கள். என்றைக்கு இந்த நிலை மாறியது? ஒருசிலர் ஆரியர் உட்புகுதலில் மாறிவிட்டதாக எண்ணுகிறார்கள். இருக்கலாம். பழங்கால இலக்கியங்கள் பெண்ணிற்கு மட்டுமே பாடிய பாட்டுக்கள் ஏராளம். குறிப்பாக, எம்பாவை, அம்மானை, தூது, தெள்ளேணம், சாழல், உந்தி, பூவல்லி, ஊசல், காலைத் துயில் எழுப்பும் பாட்டு, கும்மி, தாலாட்டு, என பல வகைகள் உண்டு... பழங்காலய நாகரீகத்தில் பெரும்பகுதியைத் தொலைத்துவிட்டுத்தான் நாம் இங்கே விதிகளையும் சட்டங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்களைப் பற்றி ஒரு இடத்தில் சொல்லுகிறார்,,,,

"பெண்கள் பத்தினியாக இருக்கவேண்டுமென்று எல்லாரும் விரும்புகிறார்கள் அதிலே கஷ்டம் என்ன வென்றால் ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதையாக இருக்கவேண்டுமென்று எத்தனை ஆவலோடு இருக்கிறானோ அத்தனை ஆவல் இதர பெண்களின் பதிவிரதயத்திலே காட்டுவதில்லை. ஓவ்வொருவனும் ஏறக்குறைய தன் இனத்து பெண்களை மட்டுமே பத்தினி என்று நம்புகிறான், "

இறுதியாக காதல் பற்றி கவிஞர் என்ன சொல்கிறார்.

பெரும்பாலும் பாரதி இருந்த சூழல் அவரை காதல் கவிதைகள் ஆழவிடாமல் பார்த்துக் கொண்டது. காதலை மறைமுகமாக பல கவிதைகளில் குறிப்பாக கண்ணன் பாட்டில் சொல்லியிருக்கிறார். குயில் பாட்டும் கிட்டத்தட்ட காதல் தானே! காதலை தெய்வத்தினோடு ஒப்பிடுகிறார்....

உலகம் இறுகி ஒரு பொருளாய் நிற்பது; ஒரே ஒரு தெய்வம் முடிவு வரை விரிந்து நிற்பது... இது காதல் என்கிறார்...

மேலும்,
காதலர் பிரிந்திருக்கும் பொழுது அவர்களை ஒருவருக்கொருவர் கடிதம் எழுதவோ பேசிக் கொள்ளவோ ஆகாதென்றால் அவர்கள் நமக்குத் தெரியாதபடி ஆயிரம் ஆச்சரிய வழிகளைக் கண்டுபிடித்து பேசிக் கொள்கிறார்கள். பறவைகளின் பாட்டையும் மலர்களின் கந்தத்தையும், குழந்தையின் சிரிப்பையும், ஞாயிற்றின் ஒளியையும் காற்றின் உயிர்ப்பையும், விண்மீன்களின் கதிர்களையும் காதலர் தூது விடுகிறார்கள். ஏன் கூடாது? தெய்வத்தின் படைப்பு முழுவதும் காதலக்குத் தொண்டு செய்யும் பொருட்டே அமைந்து இருக்கிறது. உலக முழுவதையும் தூது போகச் செய்கிற திறமை காதலர்களுக்கு உண்டு.

இளவேனிற் காலமே!
நான் அவளுக்கு
எழுதுகிற ஓலை
நீ!


உயிரே!
நீ கல்லாய் பிறந்தால்
காந்தக் கல்லாய்ப் பிற,
செடியானால்
தொட்டால் வாடிச் செடியாகிவிடு
மனிதனானால் காதல் செய்


காதலர் இல்லாவிடின் ஞாயிறு என்றதோர் தீப்பந்தம் அவிந்து போய்விடும்....

என்னே அழகிய கவிதைகள் பாரதியினுடையது........ வணங்குகிறேன் கவிஞரே!

பாரதியின் வாழ்க்கை வரலாறு


மஹா ஓவியன் வான்கா

கலை இலக்கியங்களில் கவிதை எனும் பரிணாமத்திற்கு அப்பாற்பட்டு நிற்கும் கலை, ஓவியம்.. ஓவியக்கலையில் எத்தனையோ விற்பன்னர்கள் இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தவர் வின்செண்ட் வான்கா... எனக்கு சிறு வயதிலிருந்தே ஓவியத்தில் தனி ஆர்வம். நன்கு தேர்ச்சிபெற்ற ஓவியரான என் தந்தையின் கவனக் குறைவில் என் ஓவியத் திறம் பொலிவிழந்து போய்விட்டது. ஆனாலும் ஓவிய வரலாறுகள், அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்த பிறகு, வின்செண்ட் பற்றி தெரிந்து கொண்டேன். அவரது ஓவியங்களைக் கண்ட பிறகு என்னுள் நிச்சயம் ஒரு மாற்றத்தை உணரமுடிந்தது..

Vincent Willem van Gogh மார்ச் 30 1853 இல் பிறந்தவர். இவர் ஒரு போஸ்ட் இம்ப்ரஷனிஷ ஓவியர்.

அதென்ன போஸ்ட் இம்ப்ரஷனிசம்?

ஓவியங்களுல் பல வகையுண்டு. எக்ஸ்ப்ரஷனிசம், இம்ப்ரஷனிசம், போஸ்ட் இம்ப்ரஷனிசம், பாயிண்டலிசம், ஹைப்ரலிசம், க்யூபிசம், மார்டனிசம், இப்படி பலவகையுண்டு.. அதாவது கிளாஸிக் ஓவியங்களினால் சலிப்புற்ற உலகம், பதினொன்பதாம் நூற்றாண்டில், ஓவியப்புரட்சி கண்டது. இம்ப்ரஷனிசம் என்ற ஓவிய நுட்பம் அப்போது பேசப்பட்டு வந்தது

தொடர்ந்து மாற்றமில்லாமல் சென்றுகொண்டிருந்த ஓவியப் பாதைக்கு இம்ரஷனிஷ்ட்டுகள் ஒரு புதிய அடித்தளம் அமைத்தார்கள். வர்ணக் குழைப்பிலும், தூரிகையின் வீச்சிலும் மாற்றம் காண்பித்தார்கள். ஓவியக்கூடத்தில் வரையும் பழக்கத்தை விடுத்து, வெளியே வந்து வரைய ஆரம்பித்தார்கள். இயற்கைக் காட்சிகள் இயற்கையின் சக்திகள் என்று பல விதமாக வரைந்தார்கள். இயற்கை வெளிச்சத்தில் அவரவர் தம் மனத்தை வெளியே பரப்பினார்கள். இது குறுகிய காலத்தில் அதிகம் பேசப்பட்டு சற்றேறக்குறைய மறைந்து போன ஓவிய உத்தி.

இம்பரஷனிசத்தில் தூரிகையின் வீச்சு நன்றாகப் புலப்படும் வண்ணம் இருக்கும். நீளமாக அல்லாமல் குறுகிய வீச்சுக்களே அதிகமிருக்கும். ஒளியமைப்புடன் கூடிய ஓவியங்கள் இதில் அதிகமாக விரவிக் காணப்படும். பெரும்பாலும் ஓவியக்கூடத்தில் வரையப்படாத ஓவியங்களாகவே இம்ப்ரஷனிசம் காணப்படும். அடர்த்தியான வர்ணங்கள் உபயோகித்தாலும் உயர் அடர்த்தியான கருப்பு வர்ணங்களைப் பெரும்பாலும் இம்ப்ரஷனிச ஓவியத்தில் காண முடியாது. மேலும் வர்ணக் குழைப்பு இதில் அதிகம் காணப்படும், தூரிகையின் குறுகிய வீச்சு வர்ணங்களைக் கலந்து ஒருவித வடிவத்தைத் தரலாம். பொருட்களின் அசைவு நிலையை வரைவது இதன் மூலம் தொடங்கிற்று என்றாலும் இம்ப்ரஷனிஷம் அசைவு நிலையைத் தொட்டும் துலங்காமலுமே இருந்தது.. அதன் வீழ்ச்சிக்குக் காரணம் அதுதான். குறைந்த காலமே இவ்வுத்தி இருந்தாலும் ஒரு புகைப்படத்தால் செய்யவியலா போஸ்ட் இம்ப்ரஷனிசத்தை நோக்கி ஓட உதவியது என்றால் அது மிகையல்ல.

போஸ்ட் இம்ப்ரஷனிசம் :

இம்ப்ரஷனிசத்தின் நீட்சி என்று சொல்லலாம். இவ்வுத்தி பழைய முறைப்படி விவித் (Vivid) வர்ணங்களையே உபயோகித்தார்கள். பெரும்பான்மையிலும் வெளுப்பு நிற தூரிகை வீச்சுகள். மற்றபடி பெரிய வித்தியாசத்தை இவ்விரு இசங்களிடையேயும் காணமுடியவில்லை.

பார்த்தீர்களா.. இது வேற எங்கோ வந்துவிட்டது... ஓவியங்களைப் பற்றி பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம்..

வான் காவின் வாழ்க்கையில் நிறைந்திருக்காத வறுமையே இல்லை எனலாம். மேற்கூறிய ஓவிய இசங்கள் நிறைந்திருந்த சூழ்நிலையில் இவர் சோம்பர் (sombre) வர்ணங்களைக் கொண்டு ஓவியங்களை வரைந்து வந்தார். சற்று மங்கலான (Blury) ஓவியங்கள் அவை. சமகாலத்தில் வாழ்ந்த ஓவியர்களின் ஓவிய உத்தியை நன்கு கவனித்து எக்ஸ்பிரஷனிசத்திலிருந்து போஸ்ட் எக்ஸ்ப்ரஷனிசத்திற்கு தாவி அவர் உலகமே வியக்கும் ஓவியங்களை வரைந்தார்.

அவர் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஓவியங்கள் வரைந்ததாக கூறப்படுகிறது. அதில் பெரும்பாலும் அவரது இறுதி வாழ்நாளில் வரையப்பட்டவை. அவர் வறுமையின் காரணமாகவோ அல்லது பிறகாரணமாகவோ சற்று மனநோயாளியாக திரிந்தவர். ஒரு விபச்சாரியை மணக்க முன் வந்து அதில் தோற்று, தனது நண்பரின் நட்பை முறித்து, அதனால் அவர் காதை அறுத்து உயிர் வாழ்ந்தார்... இல்லையில்லை... அவர் வாழும் பொழுதே மரணத்துடந்தான் இருந்தார். அவரது சுய ஓவியங்களில் காது அறுந்து கட்டு போட்ட ஓவியங்களும் உண்டு!!

உலகில் மிக அதிக விலையுள்ள ஓவியங்களில் வான் காவின் ஓவியங்கள் அதிகம் இடம்பெறுகின்றன. வான் காவுக்கு அவரது சகோதரர் தியோ மட்டுமே உறுதுணையாக இருந்தார். இவர்கள் இருவருக்கிடையேயான கடிதப் போக்குவரத்து பிரசித்தி பெற்றது. வான் கா இறந்த சோகத்தில் சீக்கிரமே தியோவும் மறைந்தார்.

பாரதியைப் போலவே சிறு வயதில் வறுமையால் இறந்த மஹா கலைஞர் வின்செண்ட் வான் கா. அவருக்குப் பின் வந்த எக்ஸ்ப்ரஷனிச ஓவியர்களுக்கு வான் காவே வழிகாட்டியாக அமைந்தார்...

மேலும் அவரைப் பற்றி....
வின்செண்டின் படைப்புகள்
அவரது சுய ஓவியங்கள்

நான் வரைந்த பென்ஸில் ஸ்கெட்ச்... உங்கள் பார்வைக்காக.... (சுமாராத்தான் இருக்கும்..... இதையெல்லாம் வெச்சு என்னை கிரேட் ஓவியன்னு நினைக்காதீங்க!!!! ஹிஹிஹி)
சரி... கஷ்டப்பட்டு இவ்வளவும் எழுதியிருக்கிறேன்.... பாவம்னு நினைச்சு ஓட்டு போட்டுடுங்க....!!! :D

சரி.... இப்போ கோர்த்து விட இரண்டு பேரு!!


ஹேமா
கார்த்திகைப் பாண்டியன்...

எங்கிருந்தாலும் வரவும்

கமல், ஹேமா போன்று பலர் கவிதைகள் எழுதும் பொழுது அதன் வலியை நன்கு உணருவேன். நான் நானாக இருந்த பொழுது எனக்கு ஈழ உணர்வுகள் வந்ததில்லை, நான் எப்பொழுது அடுத்தவராக, அடுத்தவரின் உணர்வாக, இருத்திக் கொண்டு, எழுத்தாளனாக இருந்தேனோ அப்போதிருந்து உணர்ந்து கொண்டேன்!!

பெரும்பாலும் நான் ஈழக் கவிதைகள் எழுதுவதில்லை.. அப்படிச் சொல்லுவதை விட, எனக்கு எழுத வராது என்று சொல்லலாம்.. என்னால் வலியை வார்த்தைகளால் காண்பிக்க முடியுமா என்று பல முறை யோசித்திருக்கிறேன்..

கமலின்
தமிழ் மதுரம் தளத்தில் வெளியாகியிருந்த இப்படத்தைக் கண்டவுடன், எனக்கு ஆழ்ந்த வருத்தம் மட்டுமே உண்டானது.. என்னால் என்ன செய்யமுடியும்??? கவிதை எழுதுவதைத் தவிர... அந்த உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். படம் கொடுத்தமைக்கும், கவிதை வரைய தூண்டுகோலாக இருந்தமைக்கும் கமலுக்கு என் நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்
ஆதவாகழுத்தறுபட்ட முதியவள்
கதறும் குழந்தை
புத்தருக்குத் தூக்கு

xxxxxxxxxxxxxxxxxx

யாரோ வீசிய குண்டு,
எரிந்து தணலானது
போதிமரம்

xxxxxxxxxxxxxxxxxxxxx

குருதியில் சிதறுகிறது
புத்தன் வளர்த்த
அமைதி

xxxxxxxxxxxxxxxxxxx

கண்மூடி இருக்கிறாய் புத்தா
திறந்து பார்
உன் காலடியில் குருதி

xxxxxxxxxxxxxxxxxx

சொல்லமுடியாது
புத்தனும் ஆவேசமாகலாம்
இந்நிலை கண்டு!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxx

யாராவது எழுப்புங்கள்
நீண்ட நெடுந்துயிலொன்றில்
ஆழ்ந்திருக்கிறது அமைதி!

xxxxxxxxxxxxxxxxxxxx

இரத்தத்தில் மிதக்கிறேன்
காகிதம் கொண்டுவா
கவிதைகள் பிறக்கட்டும்

xxxxxxxxxxxxxxxxxxxxx

வழியில்லாத பாதையில்
வலியைச் சுமந்தபடி செல்கிறது
புத்தரின் போதனைகள்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

காலம் ஒழுகிக் கொண்டிருக்கிறது
குருதியைப் போலவே
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
திரைப்படம் போல

xxxxxxxxxxxxxxxxxxxxxxx

A9 சாலையில்
சுட்டெரிக்கும் வெயிலில்
கதறித் துடிக்கிறது
சொற்களை இழந்த தமிழ்!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கதறக் கதறக் கற்பழித்து
அப்பெண்ணோடு கொல்லப்பட்டான்
புத்தன்


xxxxxxxxxxxx

யாரேனும் பார்த்தீர்களா?
நான் தவற விட்ட அம்மாவும்
என் பொம்மைகளும்?

xxxxxxxxxx

புத்தனைச் செவிடாக்குகிறார்கள்
துப்பாக்கிச் சத்தங்களால்

புத்தனைக் குருடாக்குகிறார்கள்
கண்முன்னே கொல்லப்படும் சிசுவால்

புத்தனை ஊமையாக்குகிறார்கள்
காலால் மிதிக்கப்படும் மனிதநேயத்தால்

புத்தனைக் கொல்லுகிறார்கள்
ஒரு இனத்தை அழிக்கும் ஆயுதத்தால்...

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

18.2.09

கழிவறை ஓவியங்கள்

|

கழிவறையில்
ஓவியம் தீட்டுவதில்
அலாதி சுகமெனக்கு.

மனதிற்கு உகந்தவளை
சுவற்றில் தீட்டுவதும்
மனதார இகழ்ந்தவர்களை
சொல்லத்தகா திட்டுவதும்
இங்கேதான்..

சில புகழ்பெற்ற ஓவியங்கள்
வரையக்கற்றுக் கொண்டதும் இங்கேதான்.
இங்கே சுழிப்பவர்கள்
அங்கே இளிப்பார்கள்.

கழிவறைக் கதவைத் திறந்து
வெளியே செல்லுகையில்
ஆழ்ந்த திருப்தி எனக்கு.
இன்னும் நால்வர்
அதைக் காணக்கூடுமல்லவா?

16.2.09

கண்ணனில்லை

|

அவளிடம் பாலருந்தி விட்டு
முகம் துடைப்பதற்குள் எழுந்தோடி
பொருள் கலைப்பதற்கும்

எதிர்வீட்டு அன்னையிடம்
அருமைகளை அளந்து கட்டி
பின்னாளில் புகார் பெறவும்

ஆயிரம் மொழிகள் தெரிந்தாலும்
என்றோ மறந்துவிட்ட மொழியை
நாமே கேட்டு மகிழவும்

மயிலிறகைத் தலையில் சூடிய
கண்ணன் ஒருவன்
என் இல்லத்தில் இல்லை.

ஆதலின்

நான் நந்தரில்லை
அவளும் யசோதையில்லை

நம்மாளுங்களப் பாருங்க.. என்னிக்கிமே போன்ல பேலன்ஸ் வெச்சிருக்கவே மாட்டாய்ங்க. இன்னிக்கீன்னு பாத்து (FEB 14) முழுசா 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணுவானுங்க.. கேட்ட
இலவர்ஸ் டேவாம்....

இப்படித்தான் போன வருசம் நமக்கேதுடா லவ்வர்; நமக்கேதுடா லவ்வர்ஸ்டேன்னு ரீசார்ஜ் பண்ணாம ரெம்ப லோ பேலன்ஸ்ல போனை வெச்சுருந்தேன்.. திடீர்னு ஒரு போன். கரெக்டா 10.00 மணி இருக்கும்.. அநேகமா ராவு காலம் எமகண்டம் எல்லாம் தாண்டி இருக்கும்னு நெனைக்கிறேன். எடுத்து பேசினா,

" ஹலோ, ஈஸ் திஸ் சூர்யா?"

அப்படீன்னு ஒரு பொம்பளக் குரல்வேற... குரல் கூட ரொம்ப ஸ்வீட் . நான்கூட ஏதோ நம்ம பார்ட்டியாட்டம் தெரியுதுன்னு கொஞ்சம் பவ்வியமாவே,

" ஏஸ், ஐயாம் சூர்யா. மே ஐ நோ ஹூஸ் திஸ்? " அப்படீன்னு நமக்கு தெரிஞ்ச இங்கிலீசெ போட்டுத்தாக்கினேன். அப்பவே உள்மனசு ஏதோ சொல்லிச்சு. 'டேய்! வேணாண்டா! இது வெவகாரமே சரியில்லன்னு' இந்த உள்மனசு எப்பவுமே இப்படித்தானுங்க,., நல்லதா நாலுவிசயம் நடந்துட்டு இருக்கும்போது எச்சரிச்சுகிட்டே இருக்கும். அத்த விடுங்க...

அவளும் கம்முனு இருக்காம இங்கிலீசுல, " ஐயாம் ஜென்னி ஃப்ரம் கோவை. ரிமெம்பர் மீ? வீ ஹாவ் மெட் இன்.........." அடுக்கீட்டே போனா.... அய்யோ சாமி.. நான் ஏதோ ரெண்டு வார்த்த இங்கிலீசு பேசுவேன். அதுக்காக ஏதோ வெள்ளக்கார நாட்டுல பொறந்தாப்படி நெனச்சுக்கிட்டா என்னாவறது?

" மேடம் தமிழ்லயே பேசுங்க." அப்படீனேன்..

" என்னோட பேரு ஜென்னி. நாம கோயம்புத்தூர்ல மீட் பண்ணினோம்ல. என்ன மறந்துட்டீங்களா? " அப்படீன்னா..

கோயம்புத்தூர்லயா... உள்ளூர்லயே நான் எவளயும் பார்க்கமாட்டேன். இதுல கோயம்புத்தூர்னா??? எப்போ ? எப்படி? தெரியலையே!!! சரி அதுக்காக தெரியலைன்னு சொன்னா நல்லா இருக்காதே! அவ வாய்ல இருந்தே உண்மைய வரவெச்சுப்புடுவோம்..

" ஆமாமாம் கொஞ்ச ஞாபகம் இருக்கு... நீங்க கிரிஸ்டீயன் தானே!? ஆனா பிஸினஸ் விசயமா நிறைய பேரை மீட் பண்றதால கொஞ்சம் மறந்துட்டேன்,,, உங்களுக்கு என்ன வேணும்?" கொஞ்சம் பவ்யத்தை கட்டுப்படுத்தியேதான் கேட்டேன்.

" இல்லை.. இல்லை..... ம்ம்ம்ம்.... நீங்க எப்படி இருக்கீங்க,,,"

" இதுக்குத்தான் போன் பண்ணீங்களா? சரியா போச்சு. நான் நல்லாத்தான் இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க,.? அட அன்னிக்கி மீட் பண்றப்போ நீங்க கூட எங்கயோ வொர்க் பண்றதா சொன்னீங்கல்ல? மறந்தேபோச்சு பாருங்க..."

இப்படி ஒரு பீலா உட்டாத்தான் கொஞ்சம் கரக்கமுடியும்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.

" நான் ஒர்க் பண்றேனா? யார் சொன்னது?"

அய்யய்யோ! மாட்டிக்கிட்டேனே!!... சூர்யா தப்பிச்சுக்கோடா..

" இல்லீங்க. உங்ககூட வந்தவரு சொன்னார்னு நினைக்கிறேன். (மறுபடியும் ஒரு பொய்) அத விடுங்க.. எதுக்காக போன் பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?"

" ம்ம்ம்ம்... இன்னிக்கி கோயம்புத்தூருக்கு வரமுடியுமா? ப்ளீஸ்...

அய்யோ ரெம்ப கெஞ்சறாளே!! ஒரு வேளை லவ்வா இருக்குமோ... கடவுளே! மாட்டி வுட்றாதேப்பா! அய்யோ இன்னிக்கி வேலண்டைன் டே ல்ல.... முருகா காப்பாத்துப்பா!!! அடச்சே முருகண்ட வேண்டிக்கறேன்பாரு.. விநாயகா காப்பாத்து சாரே!! இருந்தாலும் கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்கே! சரி கொஞ்சம் தைரியமா கேட்ருவோம்..

" நீங்க எதுக்குங்க என்னை வரச் சொல்றீங்க?"

அய்யோ ஒருவேளை HDFC Bank ல இருந்து பேசறாங்களோ என்னவோ? சேசே இருக்காது.. நீங்க நல்லா இருக்கீங்கலான்னு பேங்கில இருந்து யாராவது கேப்பாங்களா?

" வந்து... இன்னிக்கி முக்கியமான நாளு ப்ளீஸ்.. எங்கிட்ட பேலன்ஸ் இல்ல.. நீங்க எனக்கு கூப்பிடமுடியுமா? ப்ளீஸ்.."

நெனச்சேண்டா!! முக்கியமான நாளுன்னாலே வேறென்ன... இன்னிக்கி லவ்வர்ஸ்டேதான்... மொதல்ல ஒரு ஃபோன போட்டு எனக்கும் உனக்கும் காதல்கீதல்லாம் ஒத்துவராதுன்னு சொல்லிப்புடனும்... அதுலயும் பாருங்க.. கரெக்டா ஒரு நிமிசத்துக்கு மேல பொண்ணுங்க கூப்புடுவாங்கங்கீறிங்க?? அதுக்கப்பறம் நாம தானே கூப்பிட்டு காச போனுக்கே கொட்டனும்,,,?

அடச்சே! பேலன்ஸ் வேற இல்லையே! இதென்னடா அக்கப்போரா இருக்கு./. அவனவன் லவ்வர் வெச்சுகிட்டு பேலன்ஸ் ஏத்தறான். நமக்கும் இதெல்லாம் தேவைதானா? ஒருவேளை ஆணா பொறந்ததுக்கு இதெல்லாம் அனுபவிக்கனுமோ? என்ன கண்றாவி இது.. சரி ஒரு ரீசார்ஜ் பண்ணீட்டு அப்பறமா பேசுவோம். இப்ப என்ன அவசரம்..
இருந்தாலும் மனசு மட்டும் பாருங்க. எப்பவுமே லொள்ளு பண்ணும்/ 'டேய் உடனே போன் பண்ணுடா'னு சொல்லுது.
சரி ஓகேன்னுட்டு ரீசார்ஜ் பண்றதுக்கு ஒரு கடைக்கு போனேன். அங்க என்னடான்னா, கூப்பன் இல்லியாம்.. ஈஸி ரீசார்ஜ் பண்றதுக்கும் பேலன்ஸ் இல்லையாம்... இது அவுங்க என்ன சொல்றாங்க தெரியுங்களா?
"உங்க ஆள கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொல்லுங்க.. கொஞ்ச நேரத்தில பண்ணிடறேன்."

அடப்பாவிகளா முடிவே பண்ணீட்டீங்களா? சரிசரி எனக்கும் பெருமதான்..

அதுக்குள்ள எனக்கு அஞ்சாறு மிஸ்டு கால் வேற.. நம்மள தொந்தரவு பண்றா.. என்ன பண்ணலாம். ஆங்,.. எதுக்கு தண்டத்துக்கு ஆபீஸ் போன் இருக்கு? அதுல இருந்து பண்ணுவோம். பில்லு நாமளா கட்டப் போறோம்?
உடனே ஆபீஸுக்கு போனேன். அங்க இருந்து அவளுக்கு பண்ணினேன்.. அவ பேரு என்ன சொன்னேன்... ஆங் ஜென்னி... என்ன பேருயா இது? ஜெனிபர் னு வச்சுருந்தா கூட ஏதோ பாடகியாச்சே அதுலயும் நமக்குப் புடிச்ச பாடகியாச்சேன்னு நெனைக்கலாம்... சரி அத்த விடுங்க.. ரிங் போவுது.. என்ன சொல்றாள்னு பாக்கலாம்.

" இவ்ளோ நேரமா? எத்தனை ரிங் வுட்டேன் தெரியுங்களா? நீ ரொம்ப மோசம் டா"

என்னது? எங்கிட்ட ரெண்டு வார்த்தைதான் பேசினா, அதுக்குள்ள வாடா போடான்னு பேசறாளே!! இதுதான் பொம்பளீங்க தந்திரங்கறதா? நான் மட்டும் விட்ருவேனா? தோ பாரு அடிக்கிறேன்..

" இல்ல,, அதுக்குள்ள சின்ன வேலை வந்துட்டுது. சரி நீங்க ஏதோ முக்கியமான நாளு அப்படி இப்படீன்னு சொன்னீங்க.. என்னது?"

பாத்திங்களா? நானே நெனச்சாலும் அந்த மரியாதை மட்டும் நம்மள விட்டு போய்டாது.. .

" என்ன நீ நீங்க வாங்க அப்படீன்னு பேசுற?"

' இல்லமா! அவ்வளவா பேசினது இல்லீல்ல.."

" சரி இன்னிக்கு கோயம்புத்தூர் வரமுடியுமா ? முடியாதா? "

" உன்னை ஒருதடவைதான் பாத்திருப்பேன். அதுக்குள்ளே வரச்சொல்றியே! எங்க வரது? எப்படி.? எதுக்கு? கொஞ்சம் டீடெய்லா சொல்லுடா "

" காந்திபுரம் வந்துட்டு ஒரு மிஸ்டு கால் கொடு நான் வந்துற்றேன்.. மறந்துடாதே! என் செல்லம் நீ! வந்துடுவேன்ன்னு நினைக்கிறேன். இப்ப எனக்கு டைம் ஆச்சு.. வீட்டுக்கு போகனும் உனக்காக நான் மேக்கப் பண்ணீட்டு வரணும்.. கண்டிப்பா வந்துடுட்டா செல்லம். பாய்/ "

" ஹலோ? ஹலோ!!" சே! கட் பண்ணீட்டா! செல்லம்னு வேற சொல்றா.. கண்டிப்பா என்ன பாத்துருப்பா! இல்லாட்டி இப்படியெல்லாம் பேச முடியாது.. காந்திபுரத்துக்கு போகலாமா? இல்லை...

வேண்டவே வேண்டாம்.... அவகிட்ட ஏதாவது சொல்றதுக்காகவாவது போய்த்தான் தீரணும்.வீட்டுக்குப் போய் நல்ல புது ட்ரெஸ் போட்டுக்கிட்டேன்.. எதுக்கும் இருக்கட்டுமேன்னு இன்னொருதடவ பல்லு தேச்சு, வாய் கொப்பளிச்சு, மேக்கப் போட்டுகிட்டு. நேரா வண்டியெ எடுத்து ஸ்டேண்ட்ல போட்டுட்டு பஸ் ஏறினேன்.

பஸ்ல போகப் போக என்னென்னவோ நெனைப்பு.. அவ எப்படி இருப்பா? அழகா இருப்பாளா? என்னோட நம்பர் எப்படித் தெரியும்? ஒரே கொழப்பமா இருக்கே! இது காதலா இருக்குமோ? அப்படி இருக்கும் போது நான் என்னன்னு சொல்றது? சே மனசு இருக்கே! இது பெரிய வம்பு புடிச்சது.. ஏதாவது நோண்டிக்கிட்டேதான் இருக்கும்.. தோ அப்படியே காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு வந்துட்டேன்... என்ன ஒரு மணிநேரம்தான்... மனசு அங்க இங்க நெனச்சுக்கிட்டே வந்தாலும் அவினாசி ரோட்ல வர்ற காத்துல தூங்கற சொகம் இருக்கே!! அடா அடா!!
இறங்கின உடனே மிஸ்டு கால் கொடுத்தேன்,. அட!! மிஸ்டு கால் கொடுக்கறதுக்கு நாம என்ன பொண்ணா? காலே பண்ணிடலாம்... (இடையில் ரீசார்ஜும் பண்ணிட்டேன்.. பின்ன? அந்த பொண்ணு போன பாக்கறப்போ பேலன்ஸ் லோ அப்படீன்ன நம்மள தப்பா நெனச்சுறாது? ) போன் ரிங் போவுது போவுது.. போய்கிட்டே இருக்கு.. யார்மே எடுக்கல,.. ஆஹா! வந்தது வேஸ்டு தானா? திரும்பவும் ரிங்க் வுடுவோம்... ஆங் இந்த தடவ எடுத்துட்டா!!

" என்னடா! இவ்ளோ லேட்டா!? நான் வந்துட்டேன் நீ எங்க இருக்க?"

" சாரிடா செல்லம்.. கொஞ்சம் மேக்கப் பண்றதுக்கு டைம் ஆச்சு... நான் நேரா ப்ளூமிங் பட்ஸ் போய் ஒரு பொக்கே வாங்கிட்டு வந்துடறேன்... நீ அங்கயே வெய்ட் பண்ணுடா!! "

டொக்.

இவளுக கொஞ்சம் மேக்கப் பண்றதுக்கே இவ்ளோ டைமா? அதுசரி! எதுக்கு பொக்கே வாங்கிட்டு வரணும்? இது ஏதோ வெவகாரம்தானாட்டம் தெரியுது... இது வேலைக்காகாது... திரும்பவும் ஒரு ரிங் வுடுவோம்.

" என்னடா! நான் வந்துடறேன். கொஞ்சம் வெய்ட் பண்ணுடா செல்லம்..

" இல்ல, அதுக்கில்ல. என்ன கலர் ட்ரெஸ் பண்ணீட்டு வரேன்னு கேக்கலாமேன்னுதான் ஃபோன் பண்ணீனேன்.

" சிவப்பு... அதுதானே சரியான பொருத்தமான கலர்"

பொருத்தமான கலரா? அய்யய்யோ! மனசு பக் பக் னு அடிக்குதே!

" அதுசரி யாருக்கு பொக்கே?"

" டேய்! ஒன்னும் தெரியாதவனாட்டம் நடிக்காதேடா! ஒன்னை வந்து வெச்சுக்கறேன்"

கன்ஃபார்ம்தான்... இவ லவ்வர்ஸ்டே பொக்கே தான் வாங்கப் போறா! நாம மாட்டிக்கிட்டோம்.... திரும்பவும் ரிங்..???? நோ! அவ வரட்டும்.

கொஞ்ச நேரம் அப்படியே திங் பண்ணீட்டு இருக்கச்சே, திடீர்னு முதுகுல ஒரு அடி!
திரும்பிப் பார்த்தா, அட நம்ம மயூரேசன். அற்புதராஜ், மதி!!

" என்னடா இங்க என்ன பண்ணீட்டு இருக்கே! ஊருக்கு வந்தா சொல்ல மாட்டியா?

" இல்லடா ஒனக்குத்தான் போன் பண்ணலாம்னு நெனச்சேன்.. இப்பத்தாண்டா வந்தேன்.. எப்படி இருக்கே!?"

" அதெல்லாம் நல்லாத்தான் இருக்கேன்.. யாருக்கோ வெய்ட் பண்றாப்ல தெரியுதே?"

" ஒரு பிஸினஸ் விசயமா ஒரு பொண்ண பாக்க வந்தேண்டா. வேற ஒன்னுமில்ல /"

" ஓ!! ஒன்னோட பிஸினஸ்ஸ மாத்தீட்டியா? பொக்கேயெல்லாம் விக்க ஆரம்பிச்சிட்டியா?"

ஆகா இவனுக்கு எப்படி தெரியும்? ஒருவேளை பக்கத்துல நின்னு ஒட்டுக் கேட்ருப்பானோ?

" உனக்கு எப்படிடா தெரியும்?"

" சும்மா கேட்டேண்டா... நீ எதோ சிவப்புக் கலர் ட்ரெஸ் பண்ண ஒருத்திய பாக்க வந்துருக்கேன்னு எனக்கு எப்படி தெரியும்?

" டேய் உண்மையச் சொல்லு.. எப்படிடா உனக்குத் தெரியும்? ஒட்டு கேட்டியா?"

உடனே ரொம்ப சிரிச்சானுங்க மூனு பேரும்..

" ஏண்டா! எதோ ஒரு பொண்ணு கூப்புட்டு வாங்க அப்படீன்னா வந்துருவியாடா? கொஞ்சம் கூட யோசிக்கமாட்டே" ன்னு அற்புதராஜ் சிரிச்சுகிட்டே சொன்னான்.

அடப்பாவிகளா இவனுகளோட வேலையா? மயூரேசன் பொம்பள குரல்ல பேசுவானே!! நான் மறந்தே போய்ட்டேனே! அடச்சே! என் வாழ்க்கையில இப்படி ஒரு ஒன்னாம் நம்பர் கேவலத்தை பார்த்ததே இல்லை.. இப்படி ஏமாத்திட்டானுங்களே!

" அண்ணன் நாக்கத் தொங்கப் போட்டு திருப்பூர்ல இருந்து வந்துருக்காரு.. பாவம்டா.. ஏதோ ஒரு ஃபிகர் மாட்டும்னு நெனச்சுருப்பான்.. அத்தயும் கெடுத்து குட்டிச்சொவரு ஆக்கீட்டீங்களேடா" மதி ரெம்ப எளக்காரமா சிரிச்சான்...

எனக்கு ரெம்ப அவமானமா போச்சு... நம்ம புத்தி எங்க போச்சு? ஏதோ ஒரு பொண்ணு பேசினா இப்படித்தான் வந்துடறதா? சே!!

" டேய் பாவம்டா அவன்.. அண்ணனுக்கு ஒரு ட்ரீட் வெச்ச எல்லாம் சரியா போய்டும்//// பாருங்கடா அவன் மொகத்த.. பயங்கரமான ஆசையோட வந்துருப்பான்னு நெனைக்கிறேன். எல்லாம் போச்சு.."" சிரிச்சுகிட்டே இருக்கானுங்க...

இவனுகளுக்கு எங்க தெரியப் போவுது? நாம் லவ் சொல்றதுக்காக வரலேன்னு? சொன்னாலும் நம்ப மாட்டானுங்க.. சரி என்ன பண்ண... தோ பசங்க ஏதோ ட்ரீட்னு சொன்னானுங்க... கொண்டாடிட்டு போக வேண்டியதுதான்... வேற வழி.. மூக்க அறுத்துப்புட்டானுங்க. ரெம்ப வருத்தமா இருந்தா பசங்க கம்முனு இருக்க மாட்டானுங்க... ம்ம்ம்ம்ம் இருந்தாலும் அது ஒரு பொண்ணா இருந்து அதை பாத்து லவ்வு கிவ்வு எல்லாம் வேண்டாம்னு சொல்லியிருந்தா கொஞ்சம் திருப்திதான்..... நமக்கு வாழ்க்கையில எல்லாமே ஏமாற்றம் தானே!!!!

(பிகு: காதலர் தினம் என்பதால் இன்று என் மொபைல் அணைத்தே வைத்திருப்பேன்... அரசல் புரசலாக அசின் என்னோட எண் கேட்டு வைத்திருப்பதாக செய்தி,... )
---------------------------------------------------------------------------------
14-02-2007, அன்று எழுதியது.

தீரத்தீர தரும் அட்சய பாத்திரமல்ல நான்
காலத்தின் மதிப்பீட்டில்
சலிப்பு மிகுதியில் 
தூக்கியெறியப்படும்
பழைய பாத்திரம்.

எனது சுகத்தின் முதுகில்
மஞ்சம் அமைத்திருக்கும்
காணமுடியாத கனவுகள்.

தொட்டவருண்டு பலர்
துலக்கியவர் எவரு மிலர்.

ஒவ்வொரு முடிவுக்குப் பிறகும்
(அவர்)கண்களைப் பார்க்க நேரிடுவேன்
எவரேனும் வாழ்க்கை என்ற சொல்லை
முணுமுணுப்பார்களோ வென

கட்டி எறியப்பட்டதால்
காலத்தின் காலில்
தவழ்ந்துகொண்டிருக்கிறேன் 
நிமிர முடியாமல்..

பெருந்தகையீர்!
எங்கேனும் எவரேனும்
விதவைக்கு மறுவாழ்வென்று
சொல்லக் கண்டால்
அவர்களுக்கு நினைவுறுத்துங்கள்

விபச்சாரிகளும் உண்டு என்று..

_______________________________

எழுதப்பட்ட காலம் - 14-07-2007

விகடனில் என் கவிதைகள்

நீ கடவுளைத் தொழுகிறாய்
என்னை நினைத்துக் கொண்டே

கடவுள் அழுகிறான்,
பாவம்
ஒருமுறையாவது அவனை நினைத்துவிடு.

*****

கற்பூரம் கறைந்து ஒழுகுவதைப் போல
உன் பக்தி அத் தெய்வத்தின் முன்
ஒழுகுகிறது.

அபிஷேக அர்ச்சனையால்
கண்களை சிமிட்டமுடியா துக்கத்தில்
அமர்ந்திருக்கிறது தெய்வம்.

*****


பஸ்நிறுத்தத்தில்
நீயும் நானும்
மோதிக்கொண்டோம்
உனக்கு விழுந்தது
புத்தகங்கள்
எனக்கு கவிதைகள்.

*****

கவிதைகளைத் திருடுவதில்
அலாதி சுகமெனக்கு.
உனக்குப் பிடிக்கும் வரை
பிறர் கவிதைகள் என்னுடையது.
என்றாவது ஒருநாள்
சொந்தமாக கிறுக்கியிருப்பேன்..
பிடித்துவிட்டதென்று என்னை
கவிஞனாக்கிவிட்டாயடி பாவி..

*****

பிரசவித்திடும் ஒவ்வொரு கவிதையும்
உன் பெயர் சொல்லியே அழுகிறது.
ஒரு தாயாக வேண்டாம்
ஒரு செவிலியாகவாவது
இனிப்பூட்டு அந்த புதுக் கவிதைக்கு...

10.2.09

நிசப்தம்

|

நீண்டு விரவியிருக்கும்
நிசப்தத்தினை
என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை

நிசப்தத்தின் சூக்குமம் தேடி
தாயின் கருவறையினுள்
மீண்டும் சென்றதில்
அன்று உதைத்த ஒலி
எதிரொலித்ததில் நிசப்தம் தொலைந்தது

இரவின் உச்சத்தில்
நிசப்தம் நிலவியிருக்குமா என்று
இரவுகளை எண்ணியிருக்க
வெளிச்சம் குத்தி இரவு அலறியதில்
நிசப்தத்தின் வாடை மறைந்தது.

பிரபஞ்ச நுனியில் கால்புதைத்து
வெறுமை கோள்களில் நிசப்தம் தேட
சூன்யம் என்னும் சப்தம்
தெறித்து நிசப்தம் கலைந்தது

எங்கு தேடினும்
அதன் முடிச்சைப் பெற முடியவில்லை

பிறிதொருநாள்
எனக்கருகே சம்மணமிட்டு
கவனிக்க ஆளில்லை என்று
சப்தமாய் அழுதுகொண்டிருந்தது
நிசப்தம்

ரொம்ப நாளாக புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏதோ ஒரு காரணத்தினால் நிறுத்தியிருந்தேன். காரணமில்லாத காரணம் என்று கூட சொல்லலாம். ஆனால் புத்தகம் வாசனை என் மனக்கிடங்கின் ஏதோ ஒரு மூலையில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுதான் இருந்தது. வாழ்நிலையும், சூழ்நிலையும் தானே புத்தக வாசிப்பின் தீவிரத்தை நிர்ணயிக்கிறது?? கடந்த சில நாட்களாகவே புத்தக கண்காட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆண்டு தொடங்கியோ அல்லது தொடங்கி ஒரு மாதம் பின்னரோ இங்கு கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.. இதை எப்படி கண்காட்சி என்று சொல்லமுடிகிறது? விற்பனைக்கூடம் என்றோ, விலைநூலகம் என்றோ மாற்றிச் சொல்லுதல் தகுமா? சரி, அந்த ஆராய்வை விடுப்போம்.

சாயுங்காலம் ஐந்து மணியளவில் திருப்பூர் டவுன்ஹாலுக்குச் சென்றடைந்தேன். திருப்பூரில் கண்காட்சியை நடத்த அந்த இடம் சரியான இடமாக இருக்கும்.. இது ஆறாம் கண்காட்சி.. ஏற்கனவே இரண்டு முறை சென்றிருந்தாலும் இம்முறையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் சென்றடைந்தேன்.. இரு வாயில்கள் இருந்தன, ஒன்று நுழை வாயில் ; இன்னொன்று வெளி வாயில். நான் இரண்டாம் வாயில் வழியாகவேதான் உள்ளே சென்றேன்.. வாயில் நுழைவு ஒன்றும் தேர்ந்தெடுப்பின் திறனை தீர்மானிப்பதில்லை என்றாலும் கொடுக்கப்பட்டிருக்கும் விதியைத் தாண்டித்தானே செல்லவேண்டியிருக்கிறது என்ற நோகலுடன் நுழைந்தேன்.

பொதுவாக புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும்பொழுது எனக்கு சில பழக்கங்கள் உண்டு. முதலில் எல்லா ஸ்டால்களையும் ஒருமுறை பார்வையிடுவேன், அப்பொழுதே, பார்க்கவேண்டிய பதிப்பகங்கள் எவையெவை என்பதை தீர்மானித்துவிடுவேன்.. இதனால் பல தேவையில்லாத பதிப்பகங்களை நீக்கிவிட்டு, தேவையானவற்றை மட்டும் பார்க்கலாம்.. இரண்டாவது நன்கு உலாவலாம்... அதே போல, தேவையான பதிப்பகத்தினுடைய விசிட்டிங் கார்டுகளும் மறக்காமல் வாங்கிக் கொள்ளுவேன். அடுத்து, எந்தெந்த புத்தகங்கள் வாங்கவேண்டுமென்று சிறு குறிப்பு அவ்வப்போது எழுதிக் கொண்டே செல்லுவேன்... கூடவே விலையும்.... இறுதியில் கூட்டி கழித்து வாங்குவது என் பழக்கம். இதை நீங்கள் திட்டமிடுதல் என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள், எனக்கு அக்கறையில்லை, எம்முறையும் நண்பர்களுடன் செல்லும் பொழுது, எனக்கு இத்திட்டமிடுதல் வசதிமிகுந்ததாக இருக்கும்.. இம்முறை என்னுடன் வந்தது நான் மட்டுமே..

இறுதிநாளான இன்று (08-02-09) அதிகபட்ச நேரம் இருந்ததால் மெல்ல பார்ப்பதென்று முடிவெடுத்தேன். செல்லும்பொழுதே, கண்டிப்பாக வைரமுத்து கவிதைகளை வாங்கக்கூடாது என்ற முடிவுடந்தான் சென்றேன். ஏன் என்று நீங்கள் கேட்கலாம்.. சென்றமுறை சென்றிருந்த போது பெரும்பாலான பதிப்பகங்களில் வைரமுத்துவின் ஆதிக்கம் இருந்தது... அது இன்று நேற்றல்ல.. பல நாட்களாகவே நிகழும் ஒன்றுதான் என்றாலும், மற்ற கவிஞர்களையும் சற்று பார்க்கவேண்டுமல்லவா.. ஒவ்வொரு பதிப்பகத்தின் மீதும் ஏறி இறங்கும் பொழுதும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது... எத்தனையோ புத்தகங்கள் வாங்க காத்த்திருந்தாலும் கையிருப்பும் தற்சூழ்நிலையும்தானே அவ்வப்போதைய பொழுதை போக்க வல்லனவாக இருக்கின்றன???

ஒரு சில கவிதைகள், கதைத் தொகுப்புகள், இலக்கியங்கள் என்று எனது அலைப்பேசியில் நோட் (Note) செய்துகொண்டே இருந்தேன்... பெரும்பாலும், சமையல் குறிப்புகள், ஜோதிடம், சுயமுன்னேற்றம், திரைப்படம் போன்ற புத்தகங்களே அதிக விற்பனைக்கு இருந்தன, வாங்கியும் செல்கிறார்கள்... கவிதை????

உரசிச் செல்லும்
மூச்சுக்களில்
அடிபட்டு கக்கியது
இரத்தம்...
புத்தகக் கண்காட்சியில் கவிதை...

சென்ற வருடம் நிவேதிதா பதிப்பகத்தில் வாங்கியிருந்த நிழலின் கனம், ஒளியின் பொம்மை (?) சஹாராவும் ரொட்டித்துண்டும், போன்ற சில புத்தகங்கள் இன்னும் அப்படியே இருந்தன... விற்கவில்லை என்று நினைக்கிறேன்... சரி, சில புதியவர்களின் கவிதைப் புத்தகங்களாவது இருக்கும் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம்தான்... இல்லாமல் இல்லை... ஆனால் அவையெதுவும் என்னைக் கவரவில்லை... முழுக்க முழுக்க, வைரமுத்துவும், பா.விஜயும் ஆக்ரமித்திருந்தார்கள்.. அதற்கு அடுத்தாற்போல தபூசங்கர். இவர்களின் கவிதைகளே பிரதானமாக இருக்கையில், புதிய கவிஞர்கள் காணாமல் போயிருந்தார்கள்... ஒருவேளை நான் சென்றது இறுதிநாளாக இருப்பதால் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

ஒருசில காதல் கவிதைகளைப் படித்து வாந்தியெடுத்துவிட்டுத்தான் வந்தேன்... இதற்கு நான் எவ்வளவோ பரவாயில்லையாக எழுதுகிறேன்.

சரி, புத்தகங்கள்தான் ஒன்றும் அமையவில்லை ஏதாவது சினிமாக்களாவது வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டு ஒரு ஸ்டாலுக்குள் சென்றேன்.. உலகில் என்னென்ன சிறந்த திரைப்படங்களெல்லாம் இருக்கிறதோ, அத்தனையும் வைத்திருந்தார்..... நான் தேடிக்கொண்டிருந்தது இதைத்தான்... கிடைத்துவிட்டது.. எனக்கு எல்லாமே வாங்கிச் செல்லவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், முதலில் என்னென்ன படங்கள் இருக்கின்றன என்பதை முழுக்க பார்த்தேன்.. கிட்டத்தட்ட ஒருமணிநேரம் செலவழித்து பார்த்ததில், அவரின் விசிட்டிங் கார்ட் தென்பட்டது.. பத்திரப்படுத்திக் கொண்டேன்... கோவை தானே!! எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்... அப்படியென்றால் எதுவும் வாங்கவில்லையா என்று கேட்கிறீர்களா??

Where eagles dare
Fist full of dollers
For a few dollers More

இவை மூன்று கிளாஸிக்குகள் என் அப்பாவுக்காக,,, ஏற்கனவே இதன் டிவிடி இருந்தாலும் அது பழுதாகிவிட்டதால் மீண்டும் வாங்கினேன்.

எனக்காக,
Pickpocket,
Pulp Fiction, மட்டும்... இனி தரமான உலக சினிமாக்கள் மாதம் நான்கு வரை வாங்கிப் பார்க்கவேண்டும் என்ற முடிவும் எழுந்துவிட்டது... (யாருக்காகவாவது நல்ல சினிமா வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள்.. ஒன்றின் விலை ருபாய் 50.00 :) )

புத்தகம்???

உயிர்மை பதிப்பகம் தென்பட்டது.. உள்ளே சென்றவன், சில புத்தகங்களையாவது வாங்கவேண்டுமே என்ற நோக்கில், எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசியும், மனுஷ்யபுத்திரனின் கடவுளிடம் பிரார்த்தித்தல் உம் மட்டும் வாங்கினேன்... கொஞ்சம் உறுத்தியது... புத்தக கண்காட்சிக்கு வந்து இரண்டுதான் வாங்கினோமா என்று யோசித்துவிட்டு, மீண்டும் உயிர்மை சிற்றிதழை வாங்கி விட்டு நகர்ந்தேன்..

அதற்கடுத்தாற்போல் விகடன் பிரசுரம்...... எனை நன்கு தூண்டிய எஸ்.ராவின் துணையெழுத்தை பத்திரப்படுத்திக் கொண்டேன்.. செல்லும்பொழுது மணி எட்டரை. கால்வேறு வலித்தது... ஓசையில்லாமல் நகர்ந்து சென்றேன்... எனக்காக பல புத்தகங்கள் அங்கே அழுதுகொண்டிருப்பதை காதில் கேட்காமல் நழுவினேன்...

வெளியே செல்லும் வாயிலின் ஒரு ஓரத்தில் காலுடைந்த பிச்சைக்காரி யாசகம் கேட்டாள்.... கையில் மமதை நிறைந்த காகிதங்கள் ; திக்கற்ற மனது ; என்ன செய்ய?? மனம் இறுகிவிட்டது. ஒருநிமிடம் நின்று அவள் முகத்தை கவனித்துவிட்டு மீண்டும் நகர்ந்தேன்... அவள் என்னை என்னவெல்லாமோ எண்ணியிருக்கலாம்.. ஆனால் எனது எண்ணம் யாருக்கும் பிச்சை போடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தது. அவளை விட்டு நகர்ந்துவண்டியை உசுப்புகையில், அங்கே ஒரு பேச்சாளரின் பேச்சரவத்திற்கு கைத்தட்டல்கள் எழுந்துகொண்டிருந்தன.. பலர் அந்த பிச்சைக்காரியை நிராகரித்துச் சென்றார்கள். நான் செல்லும் வழியை அந்த பிச்சைக்காரி பார்த்துக் கொண்டிருக்கத் தேவையிருந்திருக்காது... அவள் அடுத்தவரைப் யாசித்துக் கொண்டிருக்கலாம்...

வீட்டுக்கு வந்த பிறகுதான் யோசித்தேன்.... யாருக்கோ எப்படியோ வீணாக செல்லும் பணத்திலிருந்து ஒருரூபாயாவது கொடுத்திருக்கலாம்...

பின் குறிப்பு :
என்ன, தலைப்பு ஒட்டவில்லையா???? நான் அங்கே சென்று உலவி, படித்து வாங்கிய புத்தகங்களைக் காட்டிலும் எனக்கு அந்த வாயில் பிச்சைக்காரிதான் நிறைய கற்றுத்தந்தாள். ஆகவேதான், அவள் புத்தகம் கற்றுக் கொடுத்தவள்...

6.2.09

2120 ல் ஒரு செடி

|

இயற்கை நீர் பொழியுமென
அண்ணாந்து பார்த்து
செயற்கை பிம்பத்தை
புணர்ந்து துடிக்கிறேன்

ரசாயன தோய்தலில்
நிறமாறிய என் சந்ததிகள்
என்னெதிரே கூடு கட்டி
செழிக்கிறார்கள்.

ஏதோ சில காரணங்களால்
என்னை இவர்கள்
விட்டு வைத்திருக்கக் கூடும்

இயந்திரங்களின்
கட்டுப்பாடுகளைத் தவிர்த்துவிட்டு
நிலவைத் தேடி
மாடிக்குச் செல்லும் சிலர்
என் மீது நீரைத்
தெளித்து விட்டுச் செல்வார்கள்.

இவ் வாக்கிரமிப்புகளுக்கு நடுவே
எங்கோ ஒரு மூலையில்
துடித்துக் கொண்டிருக்கும்
மனிதத்தை எண்ணியே
உமிழ்கிறேன் பிராணத்தை

4.2.09

காலை ஸ்வரம்

|

காலை ஸ்வரம் கேட்காத
எழுச்சி,
அதிகாரம் இல்லாமல்
வீட்டை நெருக்கும்
சூன்யம்
பிறிதொருநாள் எழுதிவைக்கும்
பிரிவென்ற கவிதை.

அழுது முடித்த மூன்றாம்மாதத்தில்
பெற்றவன் திருமணம் பார்க்கும் வாய்ப்பு
என் தாய்க்கு ஒரு மாற்று.

பச்சிளம் குழந்தையை மீறும்
மென்மை அவளிடம்..
சொல்ல வார்த்தை இல்லை
உண்மை அவளிடம்..

இன்று
அபஸ்வரம் இல்லாத காலை
அதிகார நெருக்கடியைக் குடித்த காலை
பிறிதொருநாள் எழுதிவைக்கும்
பரிவென்ற கவிதை.

ஆயின்
என்றேனும் ஒருநாள்
அம்மாவின் நினைவு வரலாம்
அழுது முடித்த பின் தோன்றும்

"அழாமல் இருந்திருக்கலாம்..."

3.2.09

முதற்கனவு

|

என்றேனும் முதற்கனவைப் பற்றி
யோசித்திருக்கிறேனா என்றால்
இல்லை

இரவு உறங்கியதும்
உறக்கம் விழித்தவுடன்
விழியசைவிடுக்கில் நசிந்தன கனவுகள்
பிறகெப்படி நினைவுற?
அதிலும் முதற்கனவு?

பிறை ஓய்ந்த தினமொன்றில்
மூளியான வானம் பார்க்கையில்
தவழ்ந்து வந்து வீழாதோ
கவிதை போல் முதற்கனவு?

நினைவுத் தகட்டின் புழுதி தட்டி
கனவுப் பட்டியலை எடுக்க நேர்ந்ததில்
கனவின் தொடக்கம்
எதுவென்றறிய முடியவில்லை

சப்தமான நிசப்தத்தில் தியானிக்கையில்
ஒருவேளை முதற் கனவு கிடைக்குமா என்றால்
புலன்கள் ஒருங்கிணைந்தது போல
கனவுகள் கூடவில்லை

விரியும் பிரபஞ்சத்தின்
ஏதோவொரு மூலையில்
தேங்கி நிற்கும் என் கனவை
எவ்விதிப்படி மீட்க?

மருத்துவத் தோய்தலில்
மூளை அகழ்ந்து,
கனவைத்
திரைப்படுத்த இயலுமா எனில்
ஆகாதென்றது காலம்.

பிறிதொருநாள்தான் தெரிந்தது
இதுவரையிலும் முதற்கனவை
காணவே இல்லை என்பது.

Subscribe