ஆயிரம் விளக்குகள் ஏந்திய தாமரை... சுடர்விட்டு இறைநிலை எய்தியது....

நாகேஷ்....

இந்த பெயரைக் கேட்டாலே பலருக்கு பற்கள் தெரியும்.. அத்தனை குளுமை, அத்தனை இனிமை..

குண்டுராவ் என்றால் எந்தத் தமிழருக்கும் தெரியவாய்ப்பில்லை.. பெயரில் மட்டுமே குண்டு என்ற வைத்துக் கொண்டு ஒல்லியான உருவத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர். ஆயிரம் படங்களைத் தாண்டிய அபூர்வ சிகாமணி, இவரைக் கண்டால் மட்டுமல்ல, பெயரைக் கேட்டாலே குபீரென்று சிரிக்கும் பல நகைச்சுவை விரும்பிகளில் நானும் ஒருவன்.

ஒருமுறை இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் ஒரு பேட்டியில், " ஒரு காட்சி நாகேஷால் நடிக்க வேண்டும் என்றால், அது ஒரு ஷாட்டோடே முடிந்துவிடும் " என்று பெருமையாக சொல்லியிருக்கிறார்... அதைப் போன்றே, பாலச்சந்தருடன் காரில் பயணிக்கும் பொழுதெல்லாம் மிக வேகமாகச் செல்லுவாராம். ஏன் வேகமாகச் செல்லுகிறீர்கள் என்று கேட்டதற்கு நாகேஷ், "நீ பயப்படாதே, நான் இந்தியாவிலேயே ஒரு சிறந்த இயக்குனரை வெச்சுத்தான் ஓட்டறேன்.. வாழ்க்கையோட அர்த்தத்தை நல்லா தெரிஞ்சு வெச்சுருக்கேன்" என்றாராம்.. இவர்கள் இருவரும் நடிப்புலகில் முத்திரை பதிக்காததற்கு முன்பிருந்தே நண்பர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது..

நீங்கள் திருவிளையாடல் பார்த்திருப்பீர்கள்.. பெரும்பாலும் நாகேஷ் படம் முழுக்க வருவார். ஆனால் இப்படத்தில் இவருக்கென்று தனிப்பகுதி உண்டு.. தருமி எனும் வேடம். சிவனாக நடித்த சிவாஜியின் நடிப்பையே ஓரம் கட்டிவிடும் அளவுக்கு அப்படியொரு நடிப்பு.. எந்த நடிகர்திலகங்களும் எப்படிவேண்டுமானாலும் நடிக்கலாம் ஆனால் மக்களிடம் சிரிப்பை வரவழைக்கும் உத்தி யாரிடம் உண்டோ, அவரே சிறந்த நடிகர் என்று சொல்லலாம்.. தருமி கேள்வி கேட்கும் காட்சி, ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதும் பலபேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அதில் அவர் கேட்டுக்கொண்டே முதுகை வளைத்து செல்வார் பாருங்கள்..... இனியொரு நாகேஷ் பிறந்துதான் வரவேண்டும்..

காதலிக்க நேரமில்லை, யில் பாலய்யாவோடு இணைந்து நடிக்கும் அந்த திகில் காட்சிகள்... ஒருமுறை இக்காட்சியைக் கண்டு கொண்டே தண்ணீர் குடித்த எனக்கு, குபீர் நகைச்சுவையால் பொறை ஏறி மூக்கை அடைத்துக் கொண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.. அப்படத்தில் அவர் ஒரு புகைப்படம் கூட எடுக்கமாட்டார்.....

ஒரு ஸ்வீட்டஸ்ட் வில்லன்.... தில்லானா மோகனாம்பாளைச் சொல்லலாம்.. அந்த பாகவதர் கெட்டப், ரசிக்க வைக்கும் வில்லத்தனம்.... வைத்தி என்று பெயரை வைத்துக் கொண்டு மாமா வேலை பார்க்கும் குறுவில்லன்.. ஏன், அபூர்வ சகோதரர்களில் அவர் தன் வில்லத்தனமான நடிப்பை அப்பட்டமாகக் காண்பிக்கவில்லையா....

வயது எழுபதைத் தாண்டியாயிற்று, இனி என்ன நகைச்சுவை உணர்வைக் கிளப்ப இந்த கிழவனால் முடியும் என்று நினைக்கலாம். ஆனால், கமலும் நாகேஷும் இணைந்த கலவை இருக்கிறதே, அது இனிவரும் நகைச்சுவைக் கலைஞர்களால் முடியுமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது.. பஞ்சதந்திரத்தில் அவர் நடித்த காட்சிகள் அத்தனையும், டாப்..... அந்த கிழட்டு முகத்தில் தோன்றும் சிரிப்பே, அமைதி குடிகொண்டிருக்கும் கோவிலைப் போன்று இருக்கிறதா இல்லையா...

செய்கை காமெடி என்று சொல்வார்கள், அதாவது ஸ்லாப்ஸ்டிக் (Slapstick) அந்தவகை காமெடியில் இவரை அடித்துக் கொள்ள இந்தியாவிலேயே ஆளில்லை. மகளிர் மட்டும் எனும் படத்தில் பிணமாகவே நடித்திருப்பார்... என்னைக் கேட்டால், அப்படியொரு காட்சி தமிழ் திரைப்பட உலகில் வேறு எவரும் நடித்திராத நடிக்க முடியாத காட்சி..

சரி, நாகேஷ் என்ன, நகைச்சுவையாளர் மட்டும்தானா?

ரிதம், மின்னலே, அபூர்வராகங்கள், தீபம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், தசாவதாரம் போன்ற படங்களில் இவரது குணச்சித்திர நடிப்பையும் காணலாம்.. என் நாகேஷ் நடித்த பழைய படங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் சொல்லுவார், "இவருக்கு மட்டும் கொஞ்சம் நல்ல முகவெட்டு இருந்திருந்தா, சிவாஜியே காணாம போயிருப்பாரு" என்று.. உண்மைதான்.. சிவாஜி போன்ற ஒரு நடிப்புத் திறமைமிக்க கலைஞனோடு நாகேஷை ஒப்பிடுவதில் எந்த சந்தேகமுமில்லை. அவர் அருமையாக நடனமும் ஆடுவார்.

சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், நவக்கிரகம், அனுபவி ராஜா அனுபவி, நீர்க்குமிழி, சோப்பு சீப்பு கண்ணாடி, போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து தன் திறமையை நிரூபித்தவர்... இதில் சுவாரசியம் என்னவென்றால், அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்... அதிலும், சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் போன்றவற்றில் தோல்வியைத் தாங்காமல் துடிக்கும் நடிப்பை முகத்திலேயே நிறுத்தியிருப்பார்.எதிர்நீச்சலில், தன்மானத்தைக் காப்பாற்றவும், அதேசமயம் வயிற்றை நிரப்பவும் அல்லல்படும் ஒருவனி நிலையை மிகத் துல்லியமாக முகபாவனைகளில் வெளிப்படுத்தியிருப்பார்..

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. ஆனால் அவரது படங்களில் நகைச்சுவை ஏற்படுத்தாத ஒரு படத்தை குறிப்பிட்டு சொல்லுங்கள்..... முடியாது.... அதேபோன்று, நாகேஷைப் போன்ற ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களே இன்று மிகக் குறைவு..

எம்.ஜி.ஆரோடு இணைந்து பல படங்களைச் செய்த சாதனை இவருக்கு உண்டு. வயதான காலத்தில் கமல் இவருக்கு அளித்த வாய்ப்பும் மறக்க முடியாது... கமலின் கடைசி படத்தில் கூட நாகேஷ் இருக்கிறார்...

தன் சொந்த வாழ்வில் பல இன்னல்களைக் கடந்தவர், கலப்புத் திருமணம் செய்த புரட்சியாளர்... சமீபகாலமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற வதந்தி பரவியது.. அந்த வதந்தி இன்று உண்மையாகி, அவரின் ரசிகர்களை ஊமையாக்கிவிட்டது...

எப்படி, ஜனவரி 30 தியாகிகளின் நன்னாளாகக் கொண்டாடப்படுகிறதோ, அதே போல, ஜனவரி 31 நகைச்சுவையாளர் திருநாளாகக் கொண்டாடப்படவேண்டும்..

காலையில் போன் வந்ததிலிருந்து மனது ஒரே பரபரப்பாகவே இருந்தது. சுலைமான் அண்ணன் என்னை துபாய்க்குக் கூட்டி செல்வதாக சொன்னதை நிறைவேற்றும் வண்ணம் விசா அனுப்பியிருந்தார். அவரது அலுவலகத்தில் இண்டர்வியூ, தங்க ஏற்பாடு என்று சகலமும் செய்துவிட்டார். எனக்கு என்னவோ நான் அந்தரத்தில் பறப்பதைப் போன்ற உணர்வு. முதலில் வெண்ணைக்கரை விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்யவேண்டும். அப்பறம் தான் இந்த விசயத்தை அம்மாவிடம் சொல்லவேண்டும். காலையிலிருந்து ஏதோ கடிதாசி வந்ததே என்னடா அது என்று கேள்வி கேட்டு குடைந்துகொண்டிருந்தார். அப்பாவிடம் சொன்னால் இன்னும் சந்தோசப்படுவார். முன்பைப் போல இனி திட்டமாட்டார்.

விசா கவர் எடுத்துக்கொண்டு வெண்ணைக்கரை ஆலயத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன். வழியில் செல்பவர்களிடமெல்லாம் சொல்லவேண்டும் என்று எண்ணினேன். பின்னே, துபாயில் வேலை கிடைப்பது என்ன அத்தனை சுலபமா? கை நிறைய சம்பாதிக்கலாம். ஊருக்கு வந்ததும் நன்றாக செட்டில் ஆகிவிடவேண்டும். முடிந்தால் ஒருலட்ச ரூபாய் கார் வாங்கி வீட்டில் நிறுத்தவேண்டும். இனிமேல் செருப்பு போடக்கூடாது. ஷூ தான். என்னென்னவோ எண்ணங்கள்.

வெண்ணைக்கரையில் தனியாக அமர்ந்திருந்தார் விநாயகர். ஆஹா விநாயகா! உனக்குத்தான் எத்தனை மகிமை? என் கனவுகளை உடனே நிறைவேற்றுவாய் என்று கனவிலும் நினைக்கவில்லையே!. அட என்ன மறதி எனக்கு!! நெய் வாங்கி வர மறந்துவிட்டேன். இதோ, இந்த இடத்தில் தானே உன்னிடம் கேட்டேன். துபாய் வேலை வாங்கிக் கொடு என்று. சொன்னதைப் போல செய்துவிட்டாயே! பலே கில்லாடி நீ!

அருகே இருந்த கடையில் நெய் வாங்கி வந்து நெய்வேத்தியம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். அம்மா சமையல் செய்துகொண்டிருந்தாள். அம்மா, இனி நீ கஷ்டப்பட்டு சமையல் செய்யக்கூடாது. லேட்டஸ்ட் சமையல் பொருட்களை வாங்கித் தருவேன். அல்லது துபாயிலிருந்து அனுப்பி வைப்பேன். நீ ஜாலியாகவே சமைக்கவேண்டும்... மனதில் சொல்லிக் கொண்டேன். "அம்மா, எனக்கு துபாயில் வேலை கிடைச்சிடுச்சி. சுலைமான் அண்ணன் தான் விசா அனுப்பியிருக்காரு. பாருங்க" நீட்டினேன். அவருக்கு அப்படியொரு சந்தோசம். நாளை அக்கம்பக்கத்திலிருப்பவர்களிடம் சொல்லிக் கொள்வாள். என் பையன் துபாயில் வேலை செய்து பணம் அனுப்புகிறான் என்று,. அது அவளுக்குப் பெருமை தானே.. ஆஹா இந்த பெருமையை நான் தேடித் தருகிறேன். வள்ளுவர் கூட ஏதோ ஒரு குறளில் சொல்லியிருக்கிறார். சட்டென ஞாபகத்திற்கு வரமாட்டேன்கிறது.. அட, வள்ளுவர் என்றதும் நம்ம முத்து வாத்தியாரிடம் ஒரு வார்த்தை சொல்லவேண்டும். இன்னும் யார் யாரிடமெல்லாம் சொல்லவேண்டுமோ அனைவரிடமும் சொல்லிவிடவேண்டும். குறிப்பாக நான் வேலையில்லாமல் கஷ்டப்பட்டபோது ஏளனம் செய்தவர்களிடம் சொல்லிவிடவேண்டும்.

இரண்டு தெரு தள்ளி மாமா வீடு இருக்கிறது. மாமா பையனுக்கு விளையாட்டு சாமான்கள் வாங்கித் தரவேண்டும். நல்ல துணிமணி எடுக்கவேண்டும். மாமா கூட துபாயிலிருந்து டிவிடி வாங்கி வரச்சொன்னார். அதையும் வாங்கி வரவேண்டும். அத்தைக்கு ஒரு துபாய் புடவை.. துபாயில் புடவை கிடைக்குமோ என்னவோ? சரி, கிடைக்கும் நேரத்தில் தேடிப் பார்த்துவிடவேண்டியதுதான்..

நான் துபாய் போய்விட்டால் வீட்டில் தண்ணீர் யார் எடுப்பார்கள்.? அம்மாவுக்கு வயது ஆகிவிட்டது. அப்பாவோ சீக்கிரமே அலுவலகம் செல்லவேண்டும். அப்படியென்றால் தண்ணீர் கஷ்டம் கொஞ்ச நாட்களுக்கு இருக்கும். துபாயிலிருந்து வந்ததும் போர்வெல் போட்டு தண்ணீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அப்பறம் துவைப்பதற்கு வாஷிங் மெசின், ஃபிரிட்ஜ். என்று எல்லாவற்றையும் வாங்கிவிடவேண்டும்.

சென்னை கிளம்ப ஆயத்தமானேன். உடன் அம்மாவும் அப்பாவும் மாமாவும் வந்தார்கள். சென்ற வழியெல்லாம் துபாய் கனவுகளை நிரப்பினேன். அடுத்தமுறை என்னை வழியனுப்பும்போது காரில் வழியனுப்பவேண்டும். அப்படியென்றால் செல்லும் போது யார் கார் ஓட்டுவார்கள்? அதற்குள் அப்பாவை கார் ஓட்ட கற்றுக்கொள்ள சொல்லவேண்டும். கார் நிறுத்த வீட்டில் இடமில்லை. வெளியேதான் நிறுத்த வேண்டும்.. எண்ணங்கள் இப்படியே ஓடின. மெல்ல கனவோடு கனவாகத் தூங்கிப் போனேன்.

அப்பாதான் எழுப்பினார். சென்ட்ரல் வந்துவிட்டது.. இதுதான் எனக்கு முதல்முறை சென்னைக்கு வருவது. அடேயப்பா எத்தனை கூட்டம்? எவ்வளவு நெரிசல்? ஏர்போர்ட் செல்லவேண்டும். மீனம்பாக்கத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். ஏர்போர்ட் சென்றால் அங்கே எப்படி நடந்துகொள்ளவேண்டும்? அங்கே பெண்கள் அழகாக இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடன் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அவர்களுக்கு நிகராகப் பேசி அசத்திவிடவேண்டும்.

மீனம்பாக்கத்திற்கு வெகு அருகே வந்துவிட்டோம். ஒருவித நடுக்கம் என்னுள் இருந்தது. முதல்முறை விமானத்தில் செல்லவிருக்கிறேன். விமான விபத்தில் சிக்கிவிட்டால்? அவ்வளவுதான். இத்தனை கனவுகளும் நொறுங்கிவிடுமே! அம்மாவுக்குத்தான் முகமே சரியில்லை. என்னை விட்டு பிரிவதால் வாடிப்போய்விட்டார் போலும்.

எப்படியோ செக் இன் களையும், அம்மாவின் அழுகையையும், மாமாவின் அறிவுரையையும், அப்பாவின் மெளனத்தையும் தாண்டி விமான இருக்கையில் அமர்ந்துவிட்டேன், தொடையெல்லாம் நடுக்கம் ஏற்பட்டது. ஏதோ கனத்த உணர்வு. அழுகை வந்தது கண்ணீர் இல்லாமல். எதையோ இழந்துவிட்டேன். என்னவாக இருக்கும்? அம்மாவை விட்டுப் பிரிவது எத்தனை கஷ்டம் என்பது இப்போதுதான் புரிகிறது. என்னுடன் வருபவர்கள் எல்லாம் சிரித்தவாறு அமர்ந்திருக்கிறார்களே! பலமுறை விமான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அய்யோ, எனக்கு மட்டும் இப்படி நடுக்கம் ஏற்படுகிறதே! பேசாமல் இப்படியே எழுந்து சென்றுவிடலாமா? அதுவும் முடியாது. அதற்கும் திராணியில்லை. மெல்ல கண்ணயர்ந்தேன். தீடீரென ஒரு சப்தம். எனக்கு எதிர் திரையில் ஒரு பெண்மணி எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள். அருகே ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்திருந்தார். அவரது கையில் ஒரு வெளிநாட்டு புத்தகம். மயக்கும் வாசனை. என்னைப் பார்த்து மெல்ல சிரித்தார். ஆங்கிலத்தில் " துபாயா ? " என்றார். ஒருவேளை இது துபாய் செல்லும் விமானம் இல்லையோ? உள்ளூர் பேருந்தைப் போல சில நாடுகளில் இறங்குமோ என்னவோ?

சிறிது நேரம் யோசித்து, "வீட்டுக்குப் போகணும் " என்றேன். மீண்டும் சிரித்துவிட்டு, புத்தகத்தில் மூழ்கினார்.

29.1.09

சமாதானம்

|

சமாதானம் என்பது
இயற்கை, ஊமையாக அலையும்
அமைதி அல்ல
போர்க்கரங்கள் ஒன்றையொன்று
தழுவிக் கொள்வது
முதல்நாள் மனைவி போல
முழுநாளும் பிணைந்திருப்பது.

இங்கு சமாதானக் குழந்தைகள்
குறைபிரசவத்திலேயே பிறக்கின்றன
சில கருவிலேயே கலைக்கப்படுகின்றன.

மீறி பிறப்பவைகளுக்கு
யாரோ சிலர்
சமாதானக் கல்வி கற்பிக்கிறார்கள்
அதற்காக தண்டனையும் பெறுகிறார்கள்.

சமாதானம் ஒவ்வொரு நாட்டிற்கும்
வாரிசு

சிலநாடுகளுக்குப் பாவம்
இனவெறி வறுமை போலும்
ஒவ்வொரு ஆயுத விற்பனையிலும்
விலைபேசப்படுகிறது

மிகச் சில நாடுகளுக்கு
மதம் மேல் காமம் போலும்
ஒவ்வொரு குருதிபடுக்கையிலும்
கற்பழிக்கப்படுகிறது

தெருவினில் வீசப்பட்ட சமாதானத்தை
புறாக்கள் எடுத்துச் செல்லுகிறது
அந்தோ பரிதாபம்
நரமாமிசம் திண்ணும் குண்டுகளால்
முட்டையோடு கருகுகிறது புறாக்கள்

உலகம் சமாதானத்தில்
உலவும் வாய்ப்புண்டு ; அப்பொழுது
அதைத் தழுவிக்கொள்ள
கரங்கள் இருக்காது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், பல படங்களின் கலவை படிக்காதவன்.. பல காட்சிகள், ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய பல படங்களைக் காட்டியது. அட, சில வசனங்கள் கூட அப்படித்தான்..

படம் அரசியல் கொலையில் தான் ஆரம்பிக்கிறது.. காமிராக்கள் உருண்டோட, வீரவசனங்கள் பேசி, திரைமறைவே கொலை செய்யும் அதே அரதப்பழசான உத்தியை இப்படத்திலும் காண்பிக்கிறார்கள்.. அதுல் குல்கர்னியை கொல்ல, காதல் தண்டபானி ஆட்களை ஏவிவிடுகிறார்... அதுல் குல்கர்னியோ, எல்லாரையும் கொல்லச் சொல்ல, தனது தம்பியை நியமிக்கிறார்.. இவர் பெரிய அரசியல்வாதியாக மாறப்போகிறாராம்.. அதனால் கொலை செய்யமாட்டாராம்... நல்ல ரவுடிக் கொள்கை. அவரது தம்பியோ, எல்லோரையும் கொலை செய்துவிட்டு, தானும் கொலைபட்டு வந்து நிற்கிறார்... சேசே.. படுத்துக் கிடக்கிறார். இப்படியாக ரவுடி சாம்ராஜ்ஜியக் கதைதானோ என்று நினைத்தால்ல்... அதுவும் இல்லை..

தனுஷ் அறிமுகம்.. பெரிய வீடு, பிரதாப் போத்தன் தான் அப்பா... வேலைவெட்டி இருக்கிறதோ இல்லையோ, வத வதவென்று பிள்ளைகளைப் பெத்துப் போட்டிருக்கிறார்.. இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி, ஒரு தங்கை.. ஆகமொத்தம் தனுஷோடு சேர்த்து, ஐந்து பேர்.. (ஒண்ணுரெண்டு விட்டிருந்தா மன்னிச்சுக்கோங்க) தனுஷைத் தவிர, மற்ற எல்லாரும் படித்தவர்கள்... தனுஷ் படிக்காதவன்... அதான் படத்துக்குப் பேரே!!! இவர் படிக்காதவர் என்பதால் அப்பா திட்டுகிறார்.... எனக்கென்னவோ பிரதாப்பைக் கண்டால் சிரிப்புதான் வருகிறது... நன்கு அழ்ழ்ழ்ழுத்தமாக பேசி, தன்னைப் பைத்தியக்காரன் போன்றே சித்தரித்துக் கொள்கிறார்.

படிக்காத பசங்கள் எப்படி இருப்பார்கள்... நான்கு படிக்காத நண்பர்கள், அதே டீக்கடை, இல்லாட்டி மெக்கானிக் ஷாப், ஓசி டீ, கதாநாயகன் காசு, கேரம்போர்டு, இத்யாதி இத்யாதி... இந்த படத்திலும் எல்லாம் உண்டு..

தனுஷும் அநியாயத்திற்கு படிக்காதவனாக இருக்கிறார்... பத்தாம் கிளாஸ் பத்துமுறை எழுதியவராம்... தண்டியை, கிண்டி என்று படிப்பவராம், அப்படி இப்படி, என்று சுத்தமாகவே படிக்காதவனாக வலம் வருகிறார்.. எல்லா காட்சிகளும் கலகல..

வராத படிப்ப வரும் வரும்னா எப்படி வரும் என்று சொல்லும்பொழுதும், அப்பா, அவன் இருக்கணும் இல்லாட்டி நான் இருக்கணும் என்று பொறிந்து தள்ளும்பொழுது, தனுஷ், அம்மாவிடம், "அப்பாவையை வீட்டு விட்டு போகச்சொல்லும்மா" என்று சொல்லும்பொழுதும், பெண் பார்க்கப் போகுமிடத்தில் குண்டு ஆர்த்தி ஐலவ்யூ என்று சொல்லும்பொழுது நெகிழ்ந்து பார்க்கும்பொழுதும் தனுஷுடைய முகபாவனைகள் மிக அருமை. சண்டைக்காட்சிகளைத் தவிர்த்து, தனுஷுடையை அருமையான நடிப்பை கண்டு ரசிக்கலாம்..

அட,... இன்னும் ஹீரோயின் வரலையேப்பா..

பேருக்குப் பின்னால் டிகிரி வரவேண்டும் என்று நண்பர் பட்டாளம் யோசிக்க, ஒரு ஐடியா கிடைக்கிறது.. நல்ல படித்த பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால், அந்தப் பெண்ணின் பெயருக்குப் பின்னால் கணவன் பெயரும் அதற்குப் பின்னால் டிகிரியும் வந்துவிடும்,.. ஆக படிக்காமலேயே டிகிரி வாங்கிவிடலாம் என்று (மிக) அருமையான யோசனை சொல்லுகிறார்கள்... அந்த யோசனை நன்றாக இருக்குமோ என்று பெண்கள் கல்லூரிகளுக்கெல்லாம் அலைகிறார் தனுஷ்... எதிர்பாராத நேரத்தில் நடிகை தமன்னா தனுஷிடம் லிஃப்ட் கேட்க..... தனுஷும் நெகிழ்கிறார்..

நடிகை தமன்னாவைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.. கேடி யில் வில்லத்தனமான நடிப்பையும், கல்லூரியில் யதார்த்த நடிப்பையும் வெளியிட்டிருந்த தமன்னா, அடுத்தடுத்த படங்கள் தமிழில் இல்லாமல் தெலுகில் முன்னணி நடிகையாக ஜொலித்துவந்தார்... அழகான பாவனைகள் நெளியும் வட்டமுகம், கவிதை பேசும் உதடுகள், நடித்துக் காட்டும் கண்கள் என்று இளமைப் பாட்டாளத்தின் குதூகலத்தை மொத்தமாக அடக்கி வைத்திருக்கிறார்.. நல்ல எதிர்காலம் உண்டு.

தமன்னா பின்னாடியே தனுஷ் சுற்றுகிறார்... அத்தனை காட்சிகளும் ரசிக்கத்தக்கனவாக உள்ளது... ஒரு கட்டத்தில், தனுஷை ஆள்வைத்து ரெண்டு தட்டு தட்ட, தனுஷிடமே போன் செய்து சொல்வதும் தியேட்டரே அதிரும் காட்சி... பின்னர் வில்லன்களின் முயற்சியால் (?) தனுஷ் தமன்னா காதல் உறுதியாகிவிடுகிறது.

தனுஷைக் கொல்ல அங்கங்கே ஆட்கள் கத்தி கடப்பாரையோடு அலைகிறார்கள்... காஃபி ஷாப், பரங்கி மலை என்று.... பிறகுதான் தெரிகிறது, அது தனுஷைக் கொல்ல வந்த ஆட்கள் இல்லை, தமன்னாவைக் கொல்லவந்தவர்கள் என்று....

தமன்னாவின் அப்பா சுமன்... இடைவேளைக்குப் பிறகு எண்ட்ரி.. பெரிய தாதாவாம்... ஹெலிகாப்டரில் வந்து சுடுவாராம்.. கீழே நின்று கொண்டிருக்கும் தன் மகள், தான் சுடும்பொழுது ஏதாவது ஆகிவிடுமோ என்று கொஞ்சம்கூட யோசிக்காமல் சுடுகிறார்... எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி.... தமன்னாவைக் கொல்லவந்த கும்பல், ஷாயாஜி ஷிண்டேவின் ரவுடிக் கும்பல்....

ஆங் நீங்கள் நினைப்பது சரிதான்.. ஷாயாஜிக்கும், சுமனுக்கு பகை... தமன்னாவைக் காதலிப்பதாக சொன்ன ஷாயாஜியின் மகனை சுமன் கொன்றுவிட, ஷாயாஜியோ தமன்னாவைப் போட்டுத்தள்ள ஆந்திராவிலிருந்து சென்னை வருகிறார்..... இந்த கதையை எங்கேயோ பார்த்தமாதிரி இல்லை??? சுமன் தமன்னாவைக் கூட்டிக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்லுகிறார்... தனுஷ் பின் தொடருகிறார்....

இடைவேளை.

அப்பாடா.... படம் முடிந்தது.... ஆமாம்... உண்மையிலேயே!!! இடைவேளைக்குப் பின் படம் ஒருவித சலிப்பாகவே செல்கிறது. விவேக் எண்ட்ரியும் அதைவிட சலிப்பு... விவேக்கும் தனுஷும் ஆந்திரா செல்கிறார்கள்... விவேக் ஆந்திராவில் ஒரு போலி தாதாவாக முயல, அதை வைத்து தமன்னாவை சந்திக்க தனுஷ் முற்படுகிறார்... தமன்னா, தனுஷ் சந்திப்புக்காக, பெண் கெட்டப் பெல்லாம் போடுகிறார்... விவேக்கின் காமெடி அந்த இடத்தில் மட்டுமே சிரிக்கவைக்கிறது... நடிகையோடு ஒரு கும்பலே பாதுகாப்புக்காக கோவில் குளமெல்லாம் சுற்றுகிறார்கள்.

ஆந்திர கோவில் திருவிழாவில் ஷாயாஜி கும்பல், வெடி வைத்து தாக்க, எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போகும் சுமன், தமன்னாவை கைவிட்டு சண்டை போட்டுக் கொண்டிருக்க, தமன்னாவை வெட்டி சாய்க்க வரும் ஆட்களிடமிருந்து தனுஷ் காப்பாற்றுகிறார்.. (சரவணா!!! சரவணா!!) ஆஹா ஓஹோ என்று சுமன், தனுஷை பாராட்ட, தனுஷோ, உங்க பொண்ணை எனக்குக் கட்டிக் கொடுங்க என்று துணிச்சலாகச் சொல்லுகிறார்....

தமன்னாவும் தனுஷும் காதலிக்கும் விபரமறிந்த சுமன், ஆத்திரப்படாமல், தன் மகளுக்கு புத்திமதி சொல்லுகிறார்... படத்திலேயே உறுப்படியான சீன் இது. அப்படியும் இப்படியுமாக சுமனும் ஓகே சொல்லிவிட, தமன்னா தனுஷ் காதலுக்கு இப்போது யாருக்கும் குறுக்கே இல்லாத நிலையில்...

தனுஷை கொல்ல ஆட்கள் ஏவிவிடுகிறார் சுமன்... ஆனால் உண்மையிலேயே சுமன் தனுஷைக் கொல்ல நினைக்கவில்லை...
அதுல் குல்கர்னி தன் தம்பியின் சாவுக்கு தனுஷ்தான் காரணம் என்று அறிகிறார்... ஆனால் உந்த விஷயம் தனுஷுக்கே கடைசியில்தான் தெரியும்.. சுமனுக்கும், தனுஷ்தான் அதுல்குல்கர்னியின் டார்கெட் என்று பிறகுதான் தெரியும்..

அதுல் குல்கர்னி Vs தனுஷ்... சண்டை.... அடிக்க அடிக்க வீழும் தனுஷ், பின்னர் எழுந்து சுதாகரித்து வில்லனை அடித்து உதைத்து ஜெயிக்கிறார்...

முடிந்தது கதை...

படத்தில் ஒரு போலிஸ் கூட இல்லை... அநியாயத்திற்கு இருக்கிறது.. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது மாதிரி, தனுஷ் செய்யும் கொலைக்கு, அட்லீஸ்ட் விசாரணை என்ற பெயரிலாவது போலிஸைக் கண்ணில் காண்பித்திருக்கலாம்.

பாடல்காட்சிகளைப் பற்றி கொஞ்சமாவது சொல்லவேண்டுமே... சில பாடல்கள் நேராக வெளிநாடு.... சில பாடல்கள் செட்டிங்க்ஸ்... அந்த செட்டிங்க் அமைத்து காட்சிபெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர்.. அருமையான பேக்ரவுண்ட்.. அதற்கு ஏற்ப காஸ்ட்யூம்ஸ்... கேமரா துள்ளி விளையாடுகிறது...

ராங்கி ரங்கமா,,லூஸு லூஸு, அப்பா அம்மா விளையாட்டு, போன்ற பாடல்கள் டாப்... தமன்னாவின் இளமை பொங்குகிறது.. நல்ல நெளிவு சுளிவுகளோடு இடுப்பை வளைத்து நெளித்து ஆடுகிறார்.. தனுஷுக்கு ஏற்ற ஜோடிதான்.. விளம்பரங்களிஅலேயே தமிழ்மக்களைக் கொள்ளை கொண்ட அந்த அழகுச் சிலை.. இனி வரும் ஆண்டுகளில் ரசிகர்கள் மனதில் ஆழ இடம் பிடிப்பார் என்பது இந்த படத்திலேயே தெரிகிறது. தமன்னா வரும் காட்சிகள் எல்லாமே ஒரு படிக்(ஆதவன்) அவை தவிர மற்றயவை... பிடிக்(ஆதவன்)

எதிர்பாராத காட்சிகள், தமன்னாவின் அழகு, பாடல் காட்சிகள், இடைவேளைக்கு முந்தைய ரசனையான கலகலப்பான காட்சிகள் ஆகியவற்றுக்காக ஒருமுறை படத்தைப் பார்க்கலாம்....

ஆற்றங்கரையில்
நீச்சல் தெரியாமல்
அமர்ந்திருப்பேன்.

ஆற்றில் எங்கோ சென்ற அப்பா
நண்டுகள் பிடித்து வருவார்
இறந்து போன நிலையில்

கொடுக்கு துண்டிக்கப்பட்டு
பிரசவத்தோடு இறந்திருக்கும்
சில பெண் நண்டுகள்

ஓடைப் பிரித்தால் காற்று புணர்ந்து
மாய்ந்து போகும் லட்சம் உயிர்கள்.
இறப்பதைக் கண்டால் மகிழ்ச்சி எனக்கு.

அப்பா சொல்வார்,
நண்டு உடலுக்கு நல்லதென்று

சொன்னவர் இங்கில்லை,

நண்டு வேட்டையில் இறங்குகிறேன்
என் அப்பாவைப் போலவே

Subscribe