மனத்தட்டுகள்
நிரம்பி வழியும் பகலை மெல்ல மெல்ல துடைக்கும் இரவு நேரத்தில் தெருவில் விளக்குகள் சிரித்துக் கொண்டிருந்தன. குதறப்பட்ட தார்ச்சாலையின் வெப்பம் அடங்கிக் கொண்டிருக்க, அத்தெருவையே இருள் கவ்வி தன்னுள் இழுத்துக் கொண்டிருந்தது. பகல் முழுக்க நன்கு புணரப்பட்ட தெருவின் அயர்ச்சியை இரவுக்கு முந்திய நேரத்தினில் காணலாம்.

சுப்பைய்யா காலனி என்றழைக்கப்பட்ட அப்பகுதியில் இறுதி தெருவின் விளிம்பில் அவ்வளவாக கவனிக்கப்படாத பிள்ளையார் கோவிலின் முன் பேசிக்கொண்டிருப்பதுதான் அந்த பெரியவரின் அன்றாட வழக்கம். அவரது உரையாடலைக் கவனிக்கவோ, கேட்கவோ எவரும் அங்கு இருக்கமாட்டார்கள். விளக்கு உமிழும் ஒளியை சிறைபிடிக்க பூச்சிகள் அலைவது போல, அவரது வார்த்தைகளை சிறைபிடிக்க மெளனம் அலைந்து கொண்டிருக்கும். கடந்து செல்லும் மனிதர்களின் கேலிக்குறியாக அப்பெரியவர் காணப்பட்டார். ஓயாமல் இரைந்து பொழுதுக்குள் கரைந்து செல்லும் சப்தங்களின் ஊடாக அவரது பேச்சுக்கள் நிறைந்திருக்கும் மிளிர்ந்து நடக்கும் வெறுமையின் அங்கங்கள் அவரது பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கலாம். அல்லது வெறும் கல்லெனவே அமர்ந்திருக்கும் பிள்ளையாரிடம் அவர் பேச்சுவார்த்தை கொண்டிருக்கலாம். மெல்லிய குரல் கொண்டவராதலால் பெரும் நிசப்தங்களைக் கலைக்க அவரால் முடிவதில்லை. அருகே இருக்கும் எவருக்கும் அவ்வளவு எளிதில் அவரது குரல் சென்றடையாது. பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரது கண்கள் யாரையோ பார்த்துக் கொண்டிருப்பதாக இருக்கும். சிலசமயம் கண்களை மூடி மெளனமாக இருப்பார், அந்த சமயங்களில் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று எனக்குள் சம்மதமிட்டுக் கொண்டேன்.

அந்த பெரியவருக்கு சுமார் ஐம்பது வயது இருக்கலாம். நன்கு கருத்த மேனி, மீசை, தாடியெல்லாம் நரைத்து சற்று சுருங்கிய முகத்தோடுதான் அவர் எப்போதும் இருப்பார். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை.. சற்று பருமன்.. அவ்வளவுதான் அவரது மொத்த உருவமும். அந்தி சாய்ந்த பொழுதுகளில் எனது பள்ளிவேளை முடிந்தபிறகுதான் அவரை தினந்தோறும் சந்திக்க நேரிட்டது. முனைப் பிள்ளையாருக்கு எதிர் திசையில்தான் அவர் பேசிக் கொண்டிருப்பார். கை கால்களை அசைக்க மாட்டார், தனது புட்டத்தில் ஒட்டியவாறு இரு கைகளையும் கட்டிக் கொண்டு பேசுவார். அவரைக் காணும் பொழுதெல்லாம் மனதுக்குள் முளைக்கும் வியப்புக்கு மட்டும் அளவில்லாமல் இருந்தது. என்ன ஆனாலும் சாயங்காலங்களை அப்பிள்ளையார் கோவில்முன்பே கழிப்பார். நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருப்பதும் ஆச்சரியமாகவே தென்பட்டது ; எதற்காக பேசிக்கொண்டிருக்கிறார்? அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா அல்லது ஆவிகளோடு பழக்கம் கொண்டவரா என்ற கேள்விகள் எழுந்தாலும் அவரிடம் பேசுவதற்கு எனக்கு தைரியம் போதவில்லை. பிள்ளையார் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கூட அவரிடம் எந்த ஒரு விசாரணையும் மேற்கொண்டதாக நான் கண்டதில்லை. எல்லோருடைய மனதிலும் அவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற வடிவம் அமர்ந்து கொண்டிருக்கலாம்.

அவரைப் பற்றி தெரிந்ததாக சொல்லுபவர்களெல்லாம் "சொத்து பிரச்சனை அதான் பைத்தியமாய்ட்டான் கிழவன்" என்றோ, " குடும்பத் தகறாரு.. கெழவன் உளறாரு" என்று நையாண்டி நிறைந்த சந்தேகங்களையோ அல்லது அவரவர் கருத்துக்களையோ நிரப்புவார்கள். பிள்ளையார் கோவில் பூசாரி சிலசமயம் அப்பெரியவரைத் திட்டியபடியே அர்ச்சனை செய்வதைக் கண்டிருக்கிறேன். பூசாரியின் கோபத்திற்கு இவர் என்ன செய்திருப்பார் என்பது தெரியவில்லை. விரோதம் என்பது முன்பின் தெரியாதவர்களோடு வருவதென்பதால் கோபம் ஏற்பட்டிருக்கலாம். பூசாரி ஒருமுறை தன் கையிலிருந்த சொம்பில் தேக்கி வைத்திருந்த நீரை உள்ளங்கையில் ஊற்றி அப்பெரியவரின் தலையில் தெளித்ததைப் பார்த்திருக்கிறேன். அக்கால கட்டத்தில் எதற்காக அப்படிச் செய்தார் என்று அறிந்து கொள்ள நினைக்கவில்லை.

பின்னொரு இரவில் அவரைப் பின் தொடர்ந்து செல்லவேண்டிய ஆவல் எனக்குள் ஏற்பட்டது. அத்தெருவின் மத்தியில் உள்ள எனது நண்பன் வீட்டுக்கு நான் தினமும் செல்வது வழக்கம். நானும் எனது நண்பனும் இணைந்து அவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆயத்தமானோம். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. முதலாவது அப்பெரியவருக்கு ஒரு பெண் இருப்பதாகக் கேள்விப்பட்டோம். இரண்டாவதாக அவர் ஆவிகளோடு பேசுபவர் என்று நண்பன் வீட்டு பால்காரர் சொன்னதும் நினைவுக்கு வந்தது. இருவரும் அவரைப் பின் தொடர்ந்தோம். வழிநெடுகிலும் அவர் ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டபடியே சென்றார். அவர் இயற்கையோடு பேசுபவர் போன்று மரங்கள் தென்பட்டால் நின்று பேசுவார். மரக்கிளைகளில் வேதாளம் தங்கியிருக்கும் என்ற நம்பிக்கைகளை வளர்த்து வைத்திருந்ததால் இனம்புரியாத அச்சத்தோடு மேலும் அவரைப் பின் தொடர்ந்தோம். இரு தெருவுக்குத் தள்ளி மூன்றாவது தெருவில் அவர் திரும்பினார். திரும்பியவர் எங்கள் இருவரையும் கவனித்தார். நாங்கள் வேறெங்கோ செல்வது போல நடந்து கொண்டோம். சற்று நேரத்திற்கெல்லாம் அவரது வீடும் வந்துவிட்டது. நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அவரது பெண்ணை அன்று பார்க்க முடியவில்லை (பிறிதொருநாள்தான் தெரிந்தது அப்பெண்ணுக்குத் திருமணம் ஆகி குழந்தையும் இருப்பது!) இருவரும் வீடு திரும்பினோம். அவருக்காக நாங்கள் செலவிட்ட நாழிகைகள் இவ்வளவே!

பெரியவரின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சோகம், மனதை விட்டு நீங்காமல் அடம்பிடித்து இடம்பிடித்திருக்க வேண்டும். கேலிக்குறியாக இருந்த அவர், ஒருசில நாட்களில் கேள்விக்குறியாக மாறினார். ஒவ்வொருவருக்கும் மனத்தட்டுகள் ஒழுங்காக, நிரலாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும். ஒழுங்கற்ற நிலையில் தட்டுகளின் இடமாற்றத்தினால் பெரியவரைப் போன்ற மனக்கோளாறுகள் ஏற்படுவதுண்டு! . ஒருநாள் அவர் இறந்து போனதாக அவரது வீட்டின் முன்பு பந்தல் கட்டியிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் தானாக விதிக்கப்பட்டிருக்கும் கால இடைவெளிகளில் ஒருசிலர் மறைந்தும் வடுக்களை விட்டுச் செல்வார்கள். அப்பெரியவரின் இறப்பு அப்படியானதொரு வடுவை என் நெஞ்சில் இட்டுச் சென்றது. அவரது இறப்பு அவருக்குத் தெரியுமா எனும் கேள்வி இன்னும் என்னுள் எழும்பிக்கொண்டே இருக்கிறது. இறக்கும் ஒவ்வொருவருக்கும் தனது இறப்பு பற்றி தெரியவேண்டிய அவசியமில்லையெனினும் தான் வாழ்ந்த நாட்களின் நினைவுகள் அத்தருணங்கள் ஊஞ்சல் கட்டி ஆடுமா ஆடாதா?

இப்பொழுது பிள்ளையார் கோவிலின் முன்பு பேசிக்கொண்டிருக்க யாருமில்லை. அத்தெருவைக் கடந்து செல்லும் ஒவ்வொரு பொழுதுகளிலும் அப்பெரியவர் பேசிய வார்த்தைகள் மட்டுமே அக்கோவிலைச் சுற்றிக் கொண்டிருக்கும். வார்த்தைகள் என்பது உடைந்துபோன மெளனத்தின் குறியீடுகள். யாருக்கும் தெரியாமல் குறியீடுகள் அவருக்குள்ளே முடிச்சிட்டு முடிந்து போனதுதான் அவிழ்க்க முடியாத சூக்குமமாக எனக்குத் தெரிகிறது. என் மனத்தட்டுகளில் அது என்றுமே அவிழ்க்க முடியாததாகத்தான் இருக்கிறது!

அன்புடன்
ஆதவா!

Comments

நண்பா.. நீங்கள் பார்த்த ஒரு மனிதரின் வாழ்வியல் நிகழ்வுகளை எழுத்தாக்கி உள்ளீர்கள்.. காலம் நம்முன் வீசி செல்லும் விடை தெரியா கேள்விகள் எத்தனையோ உண்டு.. நமக்கு புரியாத விஷயங்கள் நம் மனதில் நிரந்தர வடுக்களை ஏற்ப்படுத்துவது உண்டு.. அருமையான நடை.. உண்மையில் எனக்கு இதைப் படிக்கும்போது எஸ்ராவின் ஞாபகம் வருகிறது.. வாழ்த்துக்கள்..
Unknown said…
நல்லா இருக்கு ஆதவா.மனதைத் தொடுகிறது.

நீங்கள் வருணையை குறைத்து அதை கொஞ்சம் நடைமுறைத் தமிழில் செய்தால் இன்னும் கூட மனதைத் தொடலாம் என்பது என் கருத்து.

வாழ்த்துக்கள்.
ஆதவன்...அருமையான எழுத்து நடையில் அசாதாரணமாக உங்கள் அனுபவங்களில் ஒரு நிகழ்வை எழுதியிருக்கிறீர்கள்...

இந்தப் பெரியவர் போல ஒவ்வொரு ஊரிலும் ஏதோ ஒரு தெருவில் ஒருவர் வாழ்ந்து மடிந்து கொண்டு தான் இருக்கிறார்...
//விளக்கு உமிழும் ஒளியை சிறைபிடிக்க பூச்சிகள் அலைவது போல, அவரது வார்த்தைகளை சிறைபிடிக்க மெளனம் அலைந்து கொண்டிருக்கும்.//

அருமையான உவமை...
கொஞ்ச இடைவெளிக்கு பிறகு வந்தாலும் நல்லதொரு பதிவு.
மனதில் நிர்க்கின்றது எழுத்து.

உங்கள் அனுபவம் போல் எல்லோருமே அப்பெரியவர் போல் பார்த்திருக்க கூடும், அச்செயல்களை விளக்க முடியாதொரு மௌனம் நம்மீது படிந்து விடும், அதை புரிந்து நாம் எத்தனிப்பதேயில்லை புரிந்து கொள்ளவும் முடியாது, நீங்கள் அதனை அழகாக கட்டுரை படுத்தியுள்ளீர்கள் ஆதவன். நல்ல எழுத்து நடை படிக்க தொய்வேயில்லை, சுவை கூடியிருக்கின்றது எழுத்தில்.
உவமைதானே எழுத்தை படிக்க சுவைபடுத்துகிறது. நல்ல உவமை எழுத்தை ஆழப்படுத்திவிடும், அதில் தேர்ந்து வருகிறீர்கள். வாழ்த்துகள் ஆதவன்!

நண்பர் கார்த்திகை பாண்டியன் சொன்னதை
|உண்மையில் எனக்கு இதைப் படிக்கும்போது எஸ்ராவின் ஞாபகம் வருகிறது.. |
நானுப் ஒப்புக் கொள்கிறேன்.
எழுத்தோட்டம் வரிகளில் தெரிகிறது ஆதவா

நல்லாயிருக்கு

எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்

காணாமல் போனவர்கள் பதிவு போடலாம்னு இருந்தேன்...
//விளக்கு உமிழும் ஒளியை சிறைபிடிக்க பூச்சிகள் அலைவது போல//

சொற்சிக்கனத்தை பற்றி நீங்கள் கவலைப்படுவதேயில்லை.

அதுதான் உங்கள் மிகப்பெரிய பலம் ஆதவன்.
//ஒவ்வொருவருக்கும் மனத்தட்டுகள் ஒழுங்காக, நிரலாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும். ஒழுங்கற்ற நிலையில் தட்டுகளின் இடமாற்றத்தினால் பெரியவரைப் போன்ற மனக்கோளாறுகள் ஏற்படுவதுண்டு! //

உங்க‌ள் எழுத்தாற்ற‌ல் இங்கே மைய‌ம் கொண்டிருக்கிற‌து.
//வார்த்தைகள் என்பது உடைந்துபோன மெளனத்தின் குறியீடுகள். //

வார்த்தைக‌ளின் இல‌க்கு மெள‌ன‌ம் லா.ரா.அமிர்த‌த்தின் சிந்தாந்த‌மும் கூட‌.
இலக்க‌ற்ற‌ வார்த்தைக‌ள் என்ப‌து மிகைப்ப‌டுத்த‌ப் ப‌டும் பொய்.
ஆத‌வ‌னை வாசிப்ப‌தில் ஒரு ம‌ன‌ அமைதியும் சில‌ நேர‌ங்க‌ளில் இறுக்க‌மும் என்னை வியாபிக்கிற‌து.
//நிரம்பி வழியும் பகலை மெல்ல மெல்ல துடைக்கும் இரவு நேரத்தில் தெருவில் விளக்குகள் சிரித்துக் கொண்டிருந்தன.//

ஆரம்பமே .. பேஸ்..

//அவர் இயற்கையோடு பேசுபவர் போன்று மரங்கள் தென்பட்டால் நின்று பேசுவார்.//

பலசமயங்களில் நம்மை பைத்தியம் என்று மற்றவர் நினைக்க கூடாது என்பதற்க்காக கோழையாக இயற்கையை பார்த்து மனதிற்குள் பேசுவோம் அதுக்கு இதுவே மேல்

//வார்த்தைகள் என்பது உடைந்துபோன மெளனத்தின் குறியீடுகள்//

மீண்டும் ஆதவனின் ஆதிக்கம்.

*****

வாழ்கையில் பலகேள்விகளுக்கு விடை கிடைக்காது, இந்த மனித மூளை அத்தகைய கேள்விகளை சாமத்தியமாக தவிர்த்து, அடுத்த கேள்விகளுக்கு சென்றுவிடுகின்றது. விடுபட்ட கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பவன் இந்த சமுதாயத்தில் வித்தியாசமாக பார்க்கபடுகின்றான். ஏதாவது புரிஞ்சிதா ?
இந்த பதிவை வாசித்தேன் .. அருமை.

( உங்கள் பதிவு சில விநாடிகளிலேயே திறந்துவிட்டது - டெஸ்ட் பாஸ்)
பதிவு அருமை!!
நடை சரளமாக வந்துள்ளது!!
உங்கள் அனுபவத்தில் பார்த்ததை நயம்பட உவகையுன் ஊடே அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துகள் ஆதவா.

சென்ற வாரம் கவுந்தையில் கவிழ்ந்துவிட்டதாக‌ கா.பா சொன்னார்
உண்மையா?
அன்பின் ஆதவன்,

மிகவும் அருமையான எழுத்து. தொடருங்கள் !
kuma36 said…
இது போன்ற சம்பவங்கள் பலர் பார்த்திருந்தாலும் ஒரு சிலரின் மனதிலே ஆழமாக பதிகின்றது! அப்பெரியவரின் ஒரு பகுதியை பதிவாக்கி தந்தமை பாராட்டுகிறியது! இருப்பினும் அவருக்கு ஏன் ? இப்படி? என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது!!!!!!

எந்த ஒரு விடயமாயினும் அதை அழகான நடையில் எழுதுவது ஆதவாவிற்கு கைவந்த கலையாயிற்று!
நடைமுறை வாழ்கையை நன்கு கவனிகிறீர்கள்
ஆதவா....
என்ன சொல்ல???
உங்கள் எழுத்தில் மயங்கி விட்டேன்...

அருமை அருமை...
நடை கலக்கல்...

சூப்பர்...
Joe said…
ஆதவா,
அருமையான பதிவு!

முழு நேர எழுத்தாளர் ஆகும் தகுதி இருக்கு! வாழ்த்துக்கள்.
சிறிய இடைவெளிக்கு பின் நல்லதொரு அனுபவ நிகழ்வு.....
dharshini said…
//புதியவன் said...
இந்தப் பெரியவர் போல ஒவ்வொரு ஊரிலும் ஏதோ ஒரு தெருவில் ஒருவர் வாழ்ந்து மடிந்து கொண்டு தான் இருக்கிறார்...//

இதுதான் அண்ணா நான் சொல்ல வந்தது...
மேலும் எழுத்து நடை மிகவும் அருமை.
ராம்.CM said…
வாழ்த்துக்கள்.
மனதைத் தொடுகிறது....

வாழ்த்துக்கள்.
Anonymous said…
////மிளிர்ந்து நடக்கும் வெறுமையின் அங்கங்கள் அவரது பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கலாம். ///


மிகவும் ஆச்சரியபட்டேன்... எப்படி இப்படிப்பட்ட வார்த்தைகள் உனக்கு வசியமாகிறதென்று!


//கேலிக்குறியாக இருந்த அவர், ஒருசில நாட்களில் கேள்விக்குறியாக மாறினார்.//

கேலிக்குறி என்று சொல்வது பிழை என்று கருதுகிறேன்! கேலிக்குறியவன் என்று தான் வரவேண்டும்!

ஒரு பெரியவரின் மனநிலையை வெகு விரிவாய் இக்கதை சொல்லவில்லையென்றாலும், சொல்ல வந்ததை தெளிவாகவே சொல்லபட்டிருக்கிறது. பெரியவரை தொடர வேண்டும் என்று முடிவெடுத்தபின், அதற்கு காரணம் என்று சொல்லபட்ட அவருக்கு பெண் உண்டு என்ற காரணம் கதைக்கு சற்றும் பொருந்தாமல் இடைச்செறுகலாய் இருப்பதாய் உணர்கிறேன்.

ஆதவா ஆரம்பம் ஜோர். இடையில் கொஞ்சம் தடுமாற்றம். முடிவு நன்றாகவே அமைந்துள்ளது..

இப்படியான பதிவுகளை படிப்பதற்கு எனக்கு ஆவல் கொஞ்சம் அதிகமே! எல்லாம் எஸ்.ராவின் எழுத்துக்கள் செய்த மாயம்!

நன்றி ஆதவா!
ஆதவா said…
மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன் எஸ்ராவின் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.. அவர் அப்படி ஆழமாக எழுதிவிட்டார்...
--------------------------
நன்றிங்க ரவிஷங்கர்.. கூடுமானவரையிலும் குறைத்துத்தான் எழுதுகிறேன்!!
-------------------------
மிக்க நன்றி புதியவன்.. உங்களுக்குப் பிடித்த வரிகள் எனக்கும்!!
-------------------
நன்றி ஆ.முத்துராமலிங்கம். உங்களது பின்னூட்டம் எப்போதும் பெருமகிழ்ச்சியைத் தருகிறது
--------------------------
வாங்க அபுஅஃப்ஸர். அவ்வளவு சீக்கிரம் காணாமல் போயிடமாட்டேன். பணிப்பளு அவ்வளவுதான்..
-------------------
நன்றிங்க அ.மு.செய்யது. உங்கள் அளவுக்கு எனக்கு எழுத்தாளர் பரிச்சயமில்லையெனினும் எனக்குப் பெருமையே!!! மிக்க நன்றிங்க செய்யது!!
--------------------------
நன்றிங்க பித்தன்... ஆதிக்கமெல்லாம் இல்லைங்க.. எழுதணும்னு தோணிச்சு.. அவ்வளவுதான்.
-----------------------------
நன்றிங்க முத்துலெட்சுமி கயல்விழி
-----------------------
நன்றிங்க தேவா சார்.
-------------------------
நன்றிங்க சொல்லரசன்... அவருகிட்டையே கேளுங்க. கவுந்தைக்குப் போகவே இல்லை!!!
----------------------------
நன்றிங்க ரிஷான்...
-------------------------
மிக்க நன்றிங்க கலை. எல்லோருடைய மனதிலும் இப்படியொரு கேள்வி இருக்கத்தான் செய்கிறது.
-------------------------
நன்றிங்க வேத்தியன்... மயங்கி எழுந்தீர்களா???
-------------------
நன்றிங்க ஜோ!! , ஆ.ஞானசேகரன், தர்ஷினி, ராம்.CM
-----------------------------
ஷீ! இதில் இடைச்செறுகலுக்கு வேலையில்லை. ஏனெனில் வாழ்வில் நடந்த விஷயம்.. ஏன் பின் தொடர்ந்தேன் என்பதைச் சொல்லியாகவேண்டிய கட்டாயம் உங்கள் ஆவலுக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க ஷீ!
Rajeswari said…
ஒரு நிகழ்வை அழகான நடையில் கொண்டு வந்துள்ளீர்கள்.சில விசயங்கள் காரண காரியமின்றி நம் மனதில் வடுக்களாய் நின்று விடும்..
அவற்றில் இதுவும் ஒன்று என நினைக்கிறேன்..

எழுத்துக்கள் அருமை..வளர்க.வாழ்த்துக்கள்
Suresh said…
மச்சான் நேரம் கிடைக்கும் போது நிம்மதியாய் இந்த பதிவை படித்தால் தான் உத்தமம், ஆகவே இப்போ தூங்க போறேன் அப்புறமா படித்து கருத்து சொல்கிறேன் மச்சான்

Popular Posts