வட இந்தியா - 1
மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்து கிடந்தது அந்நேரத்திலேயே. குளிர் பத்து டிகிரிக்கும் குறைவாக இருக்கலாம். என்னைப் போன்ற வெப்பமண்டலக் காடுகளிலிருந்து வரும் வெயில்காரர்களுக்கு மிகவும் நடுக்கம் நிறைந்ததாக இருக்கிறது. உடலெங்கும் குளிர் ஊடுறுவி உறுப்புகளை நடனமாடவைக்கிறது. மலைமுழுக்க குளிர் மூடி நெருப்பின் கதகதப்பைத் தேடவைக்கிறது. சிம்லா பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கேள்விக்கும் அனுபவத்திற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. மிக உயர்ந்த மலைநகரம்.. மலையெங்கும் கிராமங்கள். இரவுகளில் மலைகள் முழுக்க ஒளிர்கிறது. மலைகளின் மகாராணி சிம்லா என்றால் ஏனைய கிராமங்கள் அதன் உற்ற தோழிகள். எங்கு நின்றாலும் சிம்லா நமக்கு ஒரு காட்சிமுனை தந்துவிடுகிறது. ஊட்டி, கோத்தகிரி போன்ற இடங்களில் காட்சிமுனைகளுக்காக இடம் ஒதுக்கி இருப்பார்கள். இங்கு அந்த தேவையில்லை. சிம்லாவில் பார்த்த ஒவ்வொரு முகமும் வட இந்திய முகங்கள். சில திபத்திய முகங்கள். மிக அன்புடன் பழகும் மக்கள். விலை அதிகமாக வைத்து சுற்றுலாப் பயணிகளிடம் பணம் கறக்கும் வியாபாரிகள், ஓட்டல் நிர்வாகிகளிடம் கமிஷன் பேசிக்கொள்ளும் ஆட்டோ காரர்கள்., என சுற்றுலாத் தளத்திற்கே உரிய மக்கள் நிறைந்த ஊர். மலைப்பகுதி என்பதால் குறுகலான பாதைகள், சிராய்வு நிறைந்த ஊர்திகள், புழுதி படர்ந்த சாலைகள், பரபரப்பாக இயங்கும் பலதரப்பட்ட மக்கள்... சிம்லா மற்றுமொரு மலைச் சுற்றுலாத் தளம்.
குஃப்ரி.
காலையில் குஃப்ரி கிளம்பினேன். ஒன்பது மணிக்குத் தயாராகி, ஏற்கனவே பதிவு செய்ந்திருந்த ஒரு டாக்ஸியை வரச் சொன்னேன். மால்ரோட்டில் வண்டிகள் ஏதும் வரமுடியாது என்பதால் மால்ரோட்டிலிருந்து கீழறங்கி மெயின்ரோட்டுக்கு வந்தேன். டாக்ஸி ட்ரைவர் மது எங்களை குஃப்ரிக்கு அழைத்துச் சென்றார். சுமார் பதினான்கு கி.மீ தூரம் கொண்ட அந்த பாதை மலைகளின் விளிம்பிலிருந்து மலைக்கு நடுவே செல்கிறது. மிகக் குறுகலான சுத்தமில்லாத பாதை. சிம்லாவில் வண்டி ஓட்டுவது பாத அளவுள்ள மதில் மேல் நடந்து செல்வதைப் போன்றது. கொஞ்சம் இடறினாலும் அடுத்த வண்டியில் உராய்ந்துவிடும். குஃப்ரி சிம்லாவைத் தாண்டி இருக்கும் மிக உயர்ந்த இடம். குஃப்ரியிலிருந்து மேலும் கொஞ்சம் உயரம் வரை செல்ல வேண்டுமென்றால் குதிரையில்தான் செல்ல வேண்டியிருக்கும். சுமார் ஒன்றரை அல்லது இரண்டு கி.மீ பயணம். ஆனால் நம்மை ஏழு கிலோமீட்டர் அழைத்துச் செல்வதாகச் சொல்வார்கள். டாக்ஸி ட்ரைவர் காண்பிப்பதாகச் சொன்ன இடங்களுக்குச் செல்ல மேலும் அதிகம் செலவு செய்யவேண்டியிருந்தது. குதிரையில் ஏறி பயணம் செய்ததே கிடையாது. முதல் முறையாக ஏறி அமர்ந்த பொழுது ஒரு இராஜ உணர்வு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் குதிரைகள் மட்டுமே செல்லும் மலைப்பாதை என்பதால் பள்ளத்தில் கால்வைத்து தவறி விழுந்தேன். பின் இரண்டாம் முறை கொஞ்சம் பழகிக் கொண்டேன். குதிரை தனக்கு மிகவும் தெரிந்த வழியில் செல்வது போல தானாகவே சென்றது. பள்ளத்தில் தள்ளிவிடுமோ என்ற பயத்தில் அழைத்துச் சென்ற சிறுவனிடம் அடிக்கடி குதிரையை தள்ளி அழைத்துப் போகுமாறு சொல்லிக் கொண்டேன். ஆனால் அந்த சிறுவன், இந்தமாதிரி நிறைய கேட்டிருப்பான். எந்த பிரச்சனயுமில்லை (குச் நயி ஹோகா) என்று தைரியத்தோடு அழைத்துப் போனான். மூன்று கி.மீட்டர் என்றதும் குதிரையில் செல்வதை ஒத்துக் கொண்டேன். இல்லையென்றால் அது நடந்தே செல்லவேண்டிய தூரம் தான். தவிர குதிரைகள் நிறைய வருவதும் போவதுமாக இருப்பதால் முட்டிக் கொண்டே செல்லவேண்டியிருந்தது. கால்கள் எல்லாம் அடிவாங்கின. பள்ளத்தின் விளிம்பில் கட்டியெழுப்பப் பட்டிருந்த சுவர்களில் கால்கள் உராய்ந்து கொண்டே சென்றன. ஒரு நல்ல ஷூ இருந்தால் நம் கால்கள் தப்பிக்கலாம். எப்படியோ குஃப்ரியின் உயர்ந்த இடத்தை அடைந்துவிட்டேன். குதிரைக்காரன் ஒரு எண்ணைக் கொடுத்து, சுற்றிப் பார்த்துவிட்டு அந்த எண்ணுக்கு அழைக்குமாறு சொல்லிவிட்டு குதிரையை மீண்டும் தொடங்கிய இடத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டான். அவனுக்குக் கொடுத்த அல்லது குதிரை சவாரிக்குக் கொடுத்த பணம் அதிகம் என்று தோணிக்கொண்டே இருந்தது. இமயமலையைப் பார்ப்பதற்கான ஆவலோடுதான் அங்கே ஓடிச் சென்றேன். ஆனால் எனக்கு அந்த பேராசையைத் தவிர மற்ற அனைத்தும் கிடைத்தது. மேலும் மேலும் மலை மடிப்புகள் ஒன்றோடொன்று தொட்டுக் கொண்டே சென்றதேயொழிய பனி பூசிய இமயமலைகளைப் பார்க்க முடியவில்லை. டெலஸ்கோப் வழியாகப் பார்க்க முடியும் என்று சொன்னதால் நம்பி அங்கேயும் பணத்தை இழந்ததுதான் மிச்சம். இமயமலைகள் மேகத்தோடு மூடி இருப்பதால் இப்போது பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டனர். டெலஸ்கோப் வழியாக நான்கைந்து கோவில்களை மட்டுமே பார்க்க முடிந்தது. இந்தியாவின் எல்லை என்று ஒரு இடத்தைக் காண்பித்தனர். இவையெல்லாவற்றையும் விட அடுக்கடுக்கான மலைகளை ரசிப்பது மிக சுவாரசியம். மலையடுக்குகள் முடிவில்லாமல் சென்று கொண்டேயிருக்கின்றன. அதில் ஏதாவது ஒரு மலையைக் காண்பித்து அதுதான் இமயமலை என்று சொல்லியிருந்தாலும் நம்பியிருப்பேன். அடுத்த முறை குஃப்ரிக்குச் செல்வதாக இருந்தால் அது டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தான் செல்லவேண்டும். பனி பொழிவைக் கண்டிருக்க முடியும். அதேபோல குஃப்ரியிலிருந்து உயர்ந்த இடத்திற்கு நடந்தே செல்லலாம் குதிரைகளை நீங்கள் சகித்துக்கொண்டால்.. மேலும் அங்கே ஹிமாலயன் வ்யூ என்று சொல்லி கொண்டு வரும் எவரையும் நம்பி பணத்தைத் தந்து ஏமாறக் கூடாது. அவர்களிடமிருக்கும் டெலஸ்கோப்புகளும் உயர்ந்த தரமானதில்லை, ஒரு 300mm லென்ஸில் தெரியக்கூடியதை டெலஸ்கோப்பில் வைத்துக் காண்பிப்பார்கள்.. ஆகவே சிம்லாவில் அதைக் காண்பிக்கிறேன், இதைக் காண்பிக்கிறேன் என்று பலரும் சொல்வார்கள், அவை அனைத்தும் உண்மை இல்லை...
குஃப்ரியிலிருந்து மால்ரோட்டுக்கு அருகே டாக்ஸியில் வந்து விட்டேன். மாலை நான்கு மணி ஆகிவிட்டதால் வேறெங்கும் செல்லமுடியாது என்று ட்ரைவர் சொன்னார். ஆகவே வரும் வழியிலேயே மதிய உணவாக இரண்டு ஆம்லேட் (நான்கு முட்டைகள்) சாப்பிட்டுவிட்டேன். ஷிம்லாவில் நான் தங்கியிருந்த அறைக்கு அருகிலுள்ள எந்த உணவகத்திலும் உணவின் விலை குறைவாக இல்லை. மூன்று நட்சத்திர ஓட்டல்களின் விலைகளிலேயே உண்ணவேண்டியிருந்தது. ஒரு இரவுக்கு குறைந்தது 750 ரூபாய் செலவாகிறது. ஆகவே ஆம்லெட்டுகளோடு இன்றைய உணவை முடித்துக் கொள்வதாக முடிவெடுத்துக் கொண்டேன். நான்கு ஆம்லெட் 150 ரூபாய்.. போலவே எந்த உணவகத்தின் உணவும் ருசியற்று இருக்கிறது. இதை சண்டிகரிலேயே உணர்ந்துவிட்டோம். ருசியான உணவகங்கள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில்தான் என்பது என் கருத்து. அக்கருத்து இன்னும் வலிமையானதாக உணருகிறேன். இன்னும் சிம்லாவின் சுற்றுலா இடங்கள் பாக்கி இருந்தன.. ஆகவே அப்படித் தெரியலாம். சிம்லா பொது நகரத்தில் ஒருவேளை என் கருத்துக்கு மாறுபாடு வரலாம்.
அன்றைய இரவு குளிர் சுமார் ஐந்து டிகிரி இருக்கலாம். அந்த அறையே ஒரு குளிர்பதனப் பெட்டிபோல இருந்தது. ஊட்டியில்தான் அதிக பட்ச குளிரை உணர்ந்திருக்கிறேன். ஆனால் ஊட்டியைக் காட்டிலும் மிக அதிக பட்ச குளிர், தெர்மல் பனியன் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன், ஆனால் கடைசி நேர பயண அவசரத்தில் மறந்துவிட்டேன். இந்த குளிரைத் தாங்க முடியாமல் எனக்கு ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. கோவையிலிருந்து விமானத்தில் தான் கிளம்பினேன். இரண்டு ஸ்டாப் விமான பயணம். மும்பையில் இறங்கி அங்கிருந்து டெல்லிக்கு இரவிற்குள் சென்றுவிட்டேன். மறுநாள் டெல்லியிலிருந்து சண்டிகருக்கு விமானப் பயணம். ஒரு அவசரத்தில் பயணத்தை முடிவு செய்ததால் இரண்டு ஸ்டாப் விமானத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இனி ஒரு போதும் அப்ப்படிச் செய்யவே கூடாது. கொஞ்சம் விலை அதிகமென்றாலும் ஒன்ஸ்டாப் விமானத்தைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். ஏனெனில் டெல்லியில் ஒரு இரவை வீணாகக் கழிக்க வேண்டியிருந்தது. அடுத்தநாள் டெல்லியிலிருந்து சண்டிகர். சண்டிகர் இந்தியாவின் க்ரீன் சிட்டி என்று சொன்னார்கள். காட்டுக்குள்ளே நேர்த்தியான நகரம் ஒன்றை நுழைத்தது போல இருந்தது. நகரம் முழுக்க செக்டார்களாகப் பிரித்திருந்தார்கள். ஷிம்லா செல்லும் பேருந்துகள் எங்கே நிற்கும் என்று அறிந்து கொண்டு அங்கே சென்றேன். நகருக்குப் பொருத்தமில்லாத அந்த பேருந்து நிலையத்திலிருந்து ஷிம்லாவுக்கு கல்கா வழியாக பேருந்தில் சுமார் நான்கு மணிநேரப் பயணம். கல்காவிலிருந்தே மலைப்பாதைகள் தொடங்கிவிடுகின்றன. வலது புறம் முழுக்க மலைகளும் பள்ளத்தாக்குகளுமாக என்னோடே பயணித்தது. பொதுவாகப் பேருந்துப் பயணமென்றாலே தூங்கிவிடுவேன். ஆனால் சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகள் தூக்கத்தைத் தடுக்கின்றன. ஷிம்லா பேருந்து நிலையம் வந்தடைந்தபொழுது மணி ஆறு.
Comments
Buy Instagram Followers India from trusted social media partner, then SNK Creation is best social media marketing agency in India.