முகமூடி.... கழற்றி எறியப்பட்ட முகம்

Directed & Written

Mysskin
Starring

Jiiva, Narain, Pooja Hegde, Nasser

Music K
Cinematography  Sathya
Year 2012
Language   Tamil
Genre Super Hero

Mugamoodi-poster

ஒரு சூப்பர் ஹீரோவுக்கு எப்பொழுதும் தருக்க ரீதியிலான காரணங்கள் உண்டு. அவன் ஏன் தேவைப்படுகிறான் என்பதன் மீதான மிக அழுத்தமான அல்லது மித அழுத்தமான ஒரு காட்சி நிச்சயம் இருக்கும். தங்களைக் காக்க ஒருவன் கடவுளென வரமாட்டானா எனும் பார்வையாளின் அசாத்திய கனவுகளின் வெளிப்பாடுதான் அசாதாரண மனிதன் எனும் கதைகள் தோன்றுவதற்கான காரணம். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சூப்பர் ஹீரோ என்பவன் இன்று நேற்று முளைத்தவனல்லன், ஸ்டான்லீ, பாப் கேன் போன்ற மிகச்சிறந்த கற்பனாவாத சித்திர எழுத்தாளர்களின் வழியாக மெல்ல மெல்ல உருப்பெற்று இன்று வளர்ந்து நிற்கிறது. மேலும் அதன் மீதான மீள்பார்வையும் அவ்வப்போது வைக்கப்படுகிறது., அமெரிக்கர்களின் பொருளாதார சூழ்நிலைக்கொப்ப அத்திரைப்படங்களும் பிரம்மாண்டமாகவே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

நமது தமிழ் சினிமாவிலும் சூப்பர் ஹீரோக்கள் உண்டு. மக்களை காப்பதுதான் ஒரு சூப்பர் ஹீரோவின் வேலை என்றால் நமது முதல் சூப்பர் ஹீரோ எம்.ஜி.ஆர் தான். ஒரே குத்தில் ஒன்பதடி தூரம் பறந்துவிழுமளவு திறமைமிக்க பாத்திரங்கள் வடிக்கப்பட்டு வெளிவரும் எல்லா படங்களுமே சூப்பர் ஹீரோ படங்கள்தான்.. நமது திரைப்படங்கள் நமது பார்வையைக் குலைத்து புரிதலை மாற்றியமைத்து வைத்திருப்பதுதான் ஆகப்பெரிய சாதனை என்று கருதுவேன்.

ஆனால் அமெரிக்க சூப்பர் ஹீரோ எப்படி மாறுபடுகிறான்?

அமெரிக்க படங்களில் வரும் சூ.ஹீரோ அசாத்திய சக்தியினை அடக்கிய ஒரு சாதாரண மனிதனாக இருக்க முயலுவான், அல்லது தனக்கேயுரிய கண்டுபிடிப்புகள் மூலமாக ஒரு சூப்பர் ஹீரோவாக முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெறுவான், (பெரும்பாலும் ம்யூட்டண்டுகளைத்தான் இந்தியர்கள் ரசிக்கிறார்கள்) ஒரு கொலை, தன்னை உணரல், பழிவாங்கல், இறுதியில் மக்கள் நாயகனாக இருத்தல்.... இவையனைத்தும் ஒரு சூ.ஹீ படங்களில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்..

சரி.. ஓவராக பேசாமல் விசயத்திற்கு வருகிறேன்.

அமெரிக்க படங்களோடு எப்பொழுதும் நமது படங்களை ஒப்பிடவே மாட்டேன்... மிஸ்கினின் முகமூடி ஒரு சூ.ஹீ படம் என்பதால் ஒரு சூ.ஹி படத்திற்குண்டான அம்சங்களை சரிபார்த்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. காமிக்ஸ் படிக்கும் பழக்கமில்லாத (புத்தகம் அறவே படிக்கும் பழக்கமில்லாத) நம்மிடையே ஒரு புதிய சூப்பர் ஹீரோ உருவாவதற்கான சாத்தியங்களை நாம் எப்பொழுதும் கொடுத்ததேயில்லை. புத்தகங்களிலிருந்து சினிமா செல்வதற்கான வழியையும் நாம் கடைபிடிப்பதில்லை என்பதற்கான சாட்சியாக “முகமூடி” முகம் முழுக்க பேண்டேஜுகளைப் போட்டு கிடக்கும் நோயாளியைப் போல வந்திருக்கிறது. இது மிஸ்கினிடமிருந்து வந்திருப்பதுதான் ஆகப்பெரிய வியப்பு.

இரண்டு கதைகள் பேரலல்லாக நகர்கின்றன. ஒன்று, ஜீவா எனும் குங்ஃபூ மாணவன் காதலியைக் கவிழ்க்க முகமூடியணிந்து இரவில் திரிகிறான். இரண்டாவது ஒரு முகமூடி கும்பல் நகைகளை மட்டுமே கொள்ளையடிக்கிறார்கள். அவர்களை பிடிக்க முடியாமல் திணறும் போலிஸ்.. இவர்கள் சந்திக்கும் ஒரு புள்ளியிலிருந்து கதை துவங்குகிறது... அதற்குள் இடைவேளை வேறு.. யாருமில்லாத இடத்தில் முகமூடி அணிந்துகொண்டும், யாராவது பார்க்கும்பொழுது முகமூடி கழற்றும் கொடூரமான வில்லன் நரேன் தான் இதற்கு முக்கிய காரணம் என்றறிந்த பிறகு தான் தப்பிக்க பள்ளி வாகனத்தைக் கடத்தி டிமாண்ட் செய்கிறான். கூடவே காதலியையும்.. காதலிக்கு ஒரு ட்விஸ்டெல்லாம் இருக்கிறது. அந்த கண்றாவியைப் பற்றி எழுத விரும்பவில்லை இவர்களை எப்படி மீட்கிறான் என்பது மீதிக் கதை

ஒரு சூ.ஹீ படத்தினை இயக்கப்போவதாக அறிவித்து விட்டோம்... முதலில் என்ன செய்யலாம்... நமது பட்ஜெட்டுக்கு நம் ஹீரோவை ஸ்பைடமேனாகவோ சூப்பர்மேனாகவோ மாற்றமுடியாது.. மிகப்பிரச்சித்தமான பேட்மேன் தான் சரியான தேர்வு. ஏற்கனவே நிறைய சூ.ஹீ படங்கள் வெளிவந்துவிட்டமையால் நகலெடுக்கக்கூடாது.. அல்லது நகலெடுத்தது தெரியக்கூடாது.. டார்க் நைட் தான் என்று முடிவாகிவிட்ட பிறகு படத்தில் ஒரு கொள்ளை இருக்கவேண்டும், ஹீரோ ப்ரூஸ் வேய்ன் மாதிரி பணக்காரனாக இருந்தால் அது காப்பி, ஏழையாக்கிவிடலாம். ஆனால் அவரது தாத்தா லூஸியஸ் ஃபாக்ஸாக இருக்கலாம். பெரிதாக தெரியாது. மேக்கப் கூட பாதி பேட்மேன், முகத்தில் ஐஸ் வைட் ஷட்டில் படத்தில் வரும் முகமூடி.. வில்லன் க்ரூப்புகளுக்கு  மோர்டல் காம்பாக் ஸ்கார்பியன் மாதிரி முகமூடி!!  வில்லன் ஒரு ஜோக்கர்... ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒன்பதுமாதம் தங்குபவன் ஒரு குங்ஃபூ பள்ளியைக் கட்டி சம்பாதிக்கிறான்... டார்க்நைட் ஜோக்கர் எப்படி காரணமில்லாமல் பேட்மேனை எதிர்கிறானோ அதைப்போல நரேன் காரணமில்லாமல் கொள்ளை அடிக்கலாம்.. அதுசரி கொள்ளையடிக்க ஏது காரணம்? ஜோக்கர்தான் நரேன் என்று முடிவாகிவிட்ட பிறகு ஜோக்கரின் சில குணாதிசயங்களைப் பொருத்திவிடலாம். மனதினை குழப்பிவிட்டு வெறியேற்றி அடிப்பது ஜோக்கரின் வேலை என்றால் நாமும் அதையே செய்வோம். யாராவது ஒருவரின் இறப்பில்தான் சூ.ஹீ தோன்றுவார்.. அதை அப்படியே காப்பியடிக்கக் கூடாது, இறப்பது போல காட்டிவிட்டு உயிர்த்தெழ செய்திடவேண்டும்.  கப்பல் நிறைய பயணிகளைக் கடத்தினால் நம் பட்ஜெட்டுக்கு ஆகாது. தவிர டார்க் நைட்டையே காப்பியடித்தல் கூடாது. சட்டென ஸ்பைடர்மேனுக்குத் தாவுவோம். ஒரு வேனைக் கடத்துவோம். முகமூடியின் காதலியையும் கடத்துவோம்..  ஆங்... ஓவர் காப்பி உடம்புக்கு நல்லதல்ல... ஜோக்கர் எப்பொழுதும் பேட்மேனோடு சண்டையிடமாட்டார். நாம் சண்டையிட வைப்போம். ஹீரோவைவிட வில்லன் சக்தி மிகுந்தவனாக்கிவிடுவோம்.. பிறகு எப்படி வெல்வது?? கராத்தே கிட்டிலிருந்து கொஞ்சம் கடன் வாங்குவோம். வித்தியாசமான ஏணி ஃபைட், வில்லனுக்குத் தெரியாது ஆனால் ஹீரோவுக்குத்தான் தெரியும்.. கண்ணை மூடிக்கொண்டு அடிப்போம். எல்லா சூப்பர்ஹீரோ படங்களிலும் வில்லன்கள் எப்படி செத்தொழிந்தார்கள்?? தற்கொலைதான்... அந்த ஃபார்முலாவை நாமும் கடைபிடிப்போம்...

- மிஸ்கினின் பேட்டி ஒரு கண்ணாடிக்கு முன்...

ஒளிப்பதிவு ஒன்றுதான் படத்தில் சொல்லத்தகுந்த திரையம்சமாக இருக்கிறது. மிஸ்கினின் மெளன இசை காட்சிகள் இதில் இல்லை... படம் நெடுக வாசித்துக் கொண்டேயிருக்கிறார்கள். எப்போதுதான் நிறுத்துவார்கள் என்றிருந்தது. சண்டை காட்சிகள் சட்டென முடிந்துவிடுகிறது. சாதா காட்சிகள் நீளுகின்றன. லோ ஆங்கில், வைட் ஆங்கில், லாங் ஷாட் (ரொம்ப லாங் இல்லாததால் தப்பித்தோம்) போன்ற மிஸ்கின் கிளிஷேக்கள் இருந்தாலும் வழக்கமான மிக அழுத்தமான மிஸ்கின் திரைக்கதை இதில் சுத்தமாக இல்லை.. ஆஃப் கோர்ஸ் அசுத்தமாகவும் இல்லை!

ஜீவாவை வீணடித்துவிட்டார், கதாநாயகி பூஜாவுக்கு அடுத்த பட வாய்ப்புகளே வராது. நரேனும் ரொம்ப பாவம்...

ஒன்றரை மணிநேரத்தில் மிகச்சிறப்பான திரைக்கதையமைத்து தந்துகொண்டிருக்கும் அமெரிக்கர்களின் படங்களை காப்பி செய்வதைக் காட்டிலும் அவர்கள் எப்படி எடுக்கிறார்கள் எனும் யுக்தியை காப்பியடிப்பதில் தவறில்லை.. திரைக்கதை என்ற ஒரு வஸ்துவை திரைமுழுக்கத் தேடவேண்டியிருக்கிறது. டார்க்நைட் போல நோலனே எடுக்க முடியாது என்பதுபோல வித்தியாசமான இயக்குனர் என்று பெயரெடுத்த மிஸ்கின் கமர்ஷியல் படங்களை எடுக்க முடியாது போலும். இப்படம் ஒரு கலைப்படத்தையும் கமர்ஷியலையும் கத்தரித்து தைத்ததுபோல இருக்கிறது. கலைப்படம் என்றதும் ஓவராக எடுத்துக் கொள்ளவேண்டாம்..இந்த படத்தில் முகமூடி என்ற பாத்திரமே தேவையில்லை. ஒரு சாதாரண மனிதனாகவே இருந்திருக்கலாமே? ஒரு விஜய், அஜித் கம்ர்ஷியல் படங்களில் முகமூடி அணிந்து நடித்திருந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது. ஒரு சூ.ஹீ படம் மற்ற படங்களிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கவேண்டும்.. அதன் அம்சம் ஒன்றுகூட இங்கே இல்லை! . Kick Ass எனும் லோ பட்ஜெட் படம் ஒன்று வந்தது.. ஒருமுறை பாருங்கள் மிஸ்கின். முகமூடி 2 எடுக்கலாம்.

எப்போது படம் முடியும் என்று நோகவைத்த இப்படம் தோல்வியுற என் ஆழ்ந்த அனுதாபங்கள்!


இறுதியாக...

தயவு செய்து தியேட்டருக்குப் போய் பார்க்காதீர்கள்.. திருட்டு விசிடியில் கூட பார்க்கத் தகுதியற்ற திரைப்படம் இது.!
எனக்கு கந்தசாமியைப் பார்க்க ஆவலாக இருக்கிறது!!

Comments

Anonymous said…
ஆதவாக்கே உரிய மிக ஸ்டைலிஷ்ஷான விமர்சனம்..

ஏற்கெனவே முகமூடி விமர்சனம் வேறு ஒரு தளத்தில் படித்தேன்.. ரிசல்ட் நெகடிவ்தான்...

என் நண்பன் நேற்று ஆன்லைனில் சத்யமில் 4 டிக்கெட் புக் செய்தான் டாக்ஸ் எல்லாம் சேர்த்து 790 ரூபாய்...

அந்த கொடுமையை (புக்கிங்) நான் தான் செய்து கொடுத்தேன்...
இவ்வளவு சொன்ன பிறகு அந்தப்படம் போகப் பிடிக்குமா...? பார்த்து விட்ட நண்பர்களும் சரியில்லை என்றார்கள்...