பிரைவேட் வசீலி கோஸ்லோவ்

பிரைவேட் வசீலி கோஸ்லோவ்.. நீண்டநாட்களாக என்னைத் துரத்தி வரும் பெயர் இது. எங்கே எப்படி உருவானது என்பது எனக்குத் தெரியும் என்றாலும் எத்தனையோ நண்பர்கள் எத்தனையோ பெயர்கள்.... இருப்பினும் ”வசீலி” மட்டும் என்னை ஏன் துரத்தி வருகிறது? பிரைவேட் ஜோ மார்ட்டின் தான் என்னை முதன் முதலில் அவனை அறிமுகம் செய்து வைத்தான். (அவனைப் பற்றி சொல்ல எனக்கு எந்த நினைவுமில்லை, அவன் பெயர் மார்ட்டின் என்பது மட்டும்தான் என் நினைவில் இருக்கிறது. சிலசமயம் ஜோவாக நானும் மாறிப் போயிருப்பதை அறிந்து கொண்டிருக்கிறேன்.) வசீலி ஒரு திடகாத்திரமான, துல்லியமான இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட வீரன். ரஷ்யர்களுக்கேயுரிய நளினமான முகமும், சற்றே ஒடுங்கிய மூக்குமாக, (அம்மா பெயர் அகாசுகி ) எப்பொழுதும் மனைவி டொமினிகா போட்டோவை பாக்கெட்டில் வைத்திருப்பான். அவ்வப்போது டொமினிகாவை முத்தமிட்டு “இந்நேரம் அவளது கன்னத்தில் எச்சில் படர்ந்திருக்கும்” என்பான். ஜார்ஜியாவில் 13வது ரைஃபில் டிவிசனில் நானும் அவனும் ஒன்றாகத்தான் பணி புரிந்தோம். பங்கர்களில், வெடிமருந்து பதுக்கின இடங்களில், தாழ்வாரமான இடங்களில், மோர்டர் இயக்குமிடங்களில், பீரங்கிகளில் இன்னும் பல இடங்களில் நெடுநேரம் ஒன்றாகப் பொழுதைப் போக்கியிருகிறோம். கடைசியாக அவனைப் பற்றி கேள்விப்பட்டது வோல்கா ஆற்றங்கரையில் இரத்தத்தின் கைகளில் தவழ்ந்து கிடந்திருந்தான்..

மாலதி, மேஜை மேலே கையை ஊனியவாறு என்னவோ எழுதிக் கொண்டிருந்தாள். சுமாரான நிறத்திற்கும் சற்று மேலானவள், நன்கு புடைத்த மூக்கு, குண்டு கண்கள். நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கிறதா இல்லையா என்பதை அருகில் சென்றுதான் பார்க்கவேண்டும். அன்று ஆரஞ்சு வர்ணத்தில் புடவையும் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். உள்ளாடையின் கோடு தோளிலிருந்து இறங்கியிருந்தது. நின்றபடி குனிந்து கொண்டிருந்ததால் மேஜையின் விளிம்பில் அவளது மார்பு முட்டிக் கொண்டிருந்தது. சில்வியாவை மட்டும்தான் இப்படி பார்த்ததுண்டு. அவள் ஒரு அதிசயம் என்றே சொல்லவேண்டும், வானொலி அலைவரிசையைத் தேடிக் கொண்டிருப்பாள். குத்தவைத்து அமர்ந்து தொடைகளில் அவளது மார்பு படர்ந்து திமிர, மொட்டையடிக்கப்பட்ட அவளது தலை பார்ப்பதற்கு வசீகரமாகவே இருந்தது. எங்கள் டிவிசனில் அவள் மட்டுமே ஒரு பெண் என்பது பேரதிசயமானது! யாரும் அவளை எதுவும் செய்யவில்லை என்பது இன்னும் அதிசயம்தான். மாலதியை அல்லது அதனைப் பார்த்துவிட்டு திரும்புகையில் பின்புறம் புடைத்திருந்த அவளது புட்டத்தில் ஒரு கை வைக்கவேண்டும் என்று தோணியது.

சே! என்ன நினைப்பு இது? திடீரென எப்படித் தோன்றியது? நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாதே? நான் பெண்சுகத்திற்கு அலைகிறேனா? அவர்களின் தேகங்களின் இடுக்குகளில் என் கண்களை ஒப்புகொடுக்கின்றேனா? ஆணின் கண்கள் வேட்டை மிருகங்களின் கண்களைப் போன்றது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கண்கள் ஏதாவது ஒன்றை வேட்டையாடி களைத்துப் போக விரும்புகின்றனவா? நிறையதடவை மாலதியை இப்படி பார்த்து பின் அது தவறு என்று எனக்குநானே சொல்லியிருக்கிறேன். எனது பார்வையின் கூர்மை அவளது அங்கங்களைத் துளையிட்டுச் செல்வதை அவள் அறிவாளா?

போரின் போது யாராவது பெண்கள் துணைக்கு இருந்திருக்கலாம். இரவுகளில் நானும் ஜான் டேவிஸும் பெண்களைப் பற்றி பேசுவோம். அது பெரும்பாலும் அவர்களைக் கொச்சைப்படுத்துவதாகத்தான் இருக்கும். சதா ஆண்களையும் அவர்கள் தூக்கிச் செல்லும் துப்பாக்கிகளையும் பார்த்தே பழகிவிட்ட எமக்கு சில்வியா தவிர (அவளும் ஸ்டாலின்கிராடில் கொல்லப்பட்டுவிட்டாள்) வேறு பெண்களே நினைவில் இல்லாமல் போய்விட்டது. உலகில் பெண்களையே பார்க்க முடியாத ஒருவனுக்குத்தான் அது எவ்வளவு பெரிய தண்டனை என்பது தெரியும். டேவிஸ் தனது சிறுவயது இச்சைகளைப் பற்றி பேசுவான். அவர்களது பக்கத்துவீட்டு ஆண்ட்டி ஜோன்ஸைப் பற்றி பேசாத இரவே கிடையாது. இவை தவிர பெண் நினைவுகளின் பசுமையான காட்டுப்பரப்பு என்னை வியாபித்ததில்லை. ஆனால் அவர்கள் காட்டும் அங்கங்கள் என்னை ஒவ்வொருமுறையும் உறுத்திக் கொண்டுதான் இருந்தது. ஒருவேளை யுத்தங்களில் செத்து வீழும் பெண்களும் அவர்களின் அழுகுரலும் என்னை முற்றிலும் மாற்றியமைத்திருந்திருக்கலாம். எந்த நேரமும் குண்டுகளின் ஓசையில் பெண்களை நின்று கவனிக்க முடியாத சூழ்நிலையும், எதிரிகள் எனும் பார்வையில் பெண்களின் கவர்ச்சி மிகுந்த உடல்களும் எனக்குத் தெரியவேயில்லை.

என்றாலும் ஒருநாள் சற்றே திரும்பியது பார்வை... அதை பிறகு சொல்கிறேன்.

அப்பாவுக்கு நான் சிக்கிரம் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசை. ஒவ்வொருமுறையும் பெண்பார்க்க வீட்டுக்குச் செல்வோம். பெண்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்று எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதலில் அப்பாவின் நண்பர் ராமச்சந்திரன் வீட்டுக்குச் சென்றோம். அவரது பெண் காயத்ரியை முன்பே தெரியும் என்றாலும் அவ்வளவாகப் பார்த்து பேசியதெல்லாம் கிடையாது. பெண்பார்க்கும் படலமாக அல்லாமல் சும்மா ஒரு விசிட் எனும் ரீதியில்தான் சென்றோம். அப்பாவும் ராமச்சந்திரன் அங்கிலும் பேசிக் கொண்டிருக்க, காயத்ரி ஆரஞ்சு வர்ண லோ டாப், லெக்கின்ஸ் அணிந்து தனது தொடையை வசீகரமாகக் காட்டியபடி வந்து நின்றாள். எனது கண்கள் முதலில் அவளது கண்களையும் பிறகு சற்றே பார்த்தும் பாராமலுமாக அவளது மார்பையுமே பார்த்தது. எனது ஆசைக்கும் அடங்காமைக்கும் நிறைவில்லாத வகையைச் சார்ந்த மார்பைக் கொண்டிருந்தாள். நெற்றியில் சின்ன பொட்டு இருந்தது. எனது கற்பனையில் அது பெரிதாக நீண்டு குண்டு துளைத்த பொட்டைப் போல இருந்தது. நான் எழுந்து வெளியே செல்லவேண்டுமென முற்பட்டேன். அப்பாவே கிளம்பிவிடலாம் என எழுந்தார்.

ஒருமுறை ஆஸ்திரியாவின் பவரியன் ஆல்ப்ஸில் பனி சொட்டச் சொட்ட நனைந்து சிதிலமடைந்திருந்த ஒரு மரவீட்டினுள் ஜெர்மனின் 18வது காப்பு ரைஃபில் டிவிசன் வீரர்கள் சிலர் இருந்தார்கள் எனத் தகவல் வந்தது. என்னோடு ஜான் டேவிஸும், ஜோனதன் ஸ்டீலும், மெக்காலேயும் இருந்தனர். என்னிடம் kar98k இரக ஜெர்மன் ரைஃபில் இருந்தது. அது எப்படி என் கைக்கு வந்தது என்பது ஞாபகமில்லை எங்கும் பனி பொழுந்து கொண்டிருப்பதால் கால்கள் புதைந்து புதைந்து நடப்பதற்கு இயலாத சூழ்நிலையில் அந்த மரவீட்டினுள் என்னால் சீக்கிரம் நுழைய இயலவில்லை. . பொதக் பொதக் என்று எட்டு வைத்து விட்டருகே சென்றோம். கேப்டன் பிரின்ஸ் கண்களை நோக்கி இரண்டு விரல்களால் சுட்டி யாராவது உள்ளே இருகிறார்களா என்று பார்க்கச் சொன்னார். பிரைவேட் மெல்வினும், பிரைவேட் அலெக்ஸும் உள்ளே நுழைந்து யாருமில்லை என கை காண்பித்தார்கள். நாங்கள் அனைவரும் உள்ளே நடுங்கிக்கொண்டே சென்றோம். ”ஆல் கிலியர் ஸார்” என்றோம். மேல் மாடியில் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க நானும் ஸ்டீலும் நுழைந்தோம். மெல்ல கதவைத் திருப்பியதில் அலறல் சப்தம்! அலறியது ஒரு பெண். அப்பொழுது அவள் எனக்குப் பெண்ணாகத் தெரியவில்லை. ஸ்டீல் அவளை நோக்கி துப்பாக்கியை நீட்டியவாறே சென்றான். அவளது சட்டையைக் கிழித்து வாயினையும் கையையும் கட்டி நடுவீட்டில் மண்டியிட வைத்தோம். “ஆல் கிலியர் சார்” என்றோம். கேப்டன் பிரின்ஸ் தனது துப்பாக்கியால் அவளது முகத்தை மறைத்திருக்கும் முடிகளைக் களைத்தார். மிக அழகான ஜெர்மன் முகம். கன்னத்தில் ஆங்காங்கே திட்டு திட்டாக புள்ளிகள், கண்கள் முழுக்க அழுதோய்ந்த வலி. யுத்தமக்களில் முதல் முறையாக பெண்ணை பெண்ணாக கவனித்தேன். இது ஒரு நல்ல வாய்ப்பு, அவளை அனுபவிக்க... துடிக்கத் துடிக்க அந்த எதிரியை காமத்தின் விசம் தோய்ந்த பற்களால் கடித்துக் குமுறவேண்டும்.. ஜான் டேவிஸை கவனித்தேன். அவனுக்கு இதில் எந்தவொரு விருப்பமுமற்று ஜன்னல் அருகே நின்று பார்த்துக் கொண்டிருந்தான். பிரின்ஸ் அவளிடம் ஜெர்மனில் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார். அவளை அப்படியே விடமுடியாது எனும் நிலை. பனியின் புகை மண்டிய வாயினால் “டாப்” என்று சொல்லிவிட்டு பிரின்ஸ் நகர்ந்தார். அவர் என்னிடம்தான் அதைச் சொன்னார். கம்பீரமாக, வசீலியின் டொக்ரெவ் பிஸ்டலில் நெற்றியில் ஒரு பொட்! கீழே விழும் பொழுது அதிர்ந்த மார்பு என்னில் ஆண்மையைத் தூண்டியது.

சில சமயம் கொஞ்சம் தடுமாறித்தான் போகிறேன். பெண்களின் வாசத்தை இன்னும் நுகராமல் இருப்பது என் தவறுதான். அதுதான் என்னை இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுகிறதோ என்னவோ. டேவிஸ் என்னிடம் பழகும் பொழுதெல்லாம் பெண்களை அபரிமிதமான மிதப்பில் வர்ணிப்பான். எச்சில் ஊறி மனதெங்கும் பெண்களின் அங்கங்கள் தனித்தனியே துண்டாகிக் கிடக்கும் காட்சி ஓடும். போரில் ஏன் பெண்களை கற்பழிக்கிறார்கள் என்று கூறீனான். காமம் என்பது எந்த பெட்டிக்குள்ளும் அடங்காமல் திமிறக்கூடியது. அது ஒரு பாம்பைப் போல வெளியேறி பெண்களைக் கொத்திவிடுகிறது என்றான். அப்போதெல்லாம் என்னோடு வசீலி இல்லை. அவன் இம்மாதிரியெல்லாம் பேசக்கூடியவனல்ல. வாழ்க்கையை சுகமாக வாழ்வது பற்றியும், போருக்குப் பின்னைய வாழ்க்கையின் எதிர்பார்ப்பைப் பற்றியுமே பேசிக் கொண்டிருப்பான்.

இரண்டாவதாக மாரப்பனின் பெண்ணை ஒரு மைதானத்தில் சந்தித்தோம். வெள்ளை வர்ண சட்டையும் பேண்டுமாக ஜாக்கிங் வந்திருந்தாள். ”அங்கில்” என்று கூப்பிட்டதும் நானும் அப்பாவும் திரும்பிப் பார்த்தோம். ஜாக்கிங் செய்தபடியே எங்களோடு வந்தாள். “என்ன அங்கில் இந்த பக்கம்” என்று ஆங்கிலத்தில் கேட்டாள். “ஜாக்கிங் எப்பவுமே வருவேனே, நீ இங்கதான் எப்பவும் வருவியா” என்றார் அப்பா. ஆமாம் என்றது அந்த வெள்ளைச் சட்டையும் பேண்டும்... ஜாக்கிங்கில் அதிர்ந்த அவளது மார்பு எனது காலைநேரத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தது. நான் முன்னே செல்லவுமில்லை, பின்னே தாழவுமில்லை, மிதமாக அவளையும் அதனையும் கவனிப்பதை அறிந்து கொண்டாள். பின், இடுப்பில் கையை ஊனியவாறு நின்றுகொண்டு பேசினாள். அவளது கண்களின் வழியே வெளியேறிய கோபம் என் ஆண்மையைப் பொடிப்பொடியாக்கியது.

( எப்பொழுதும் பெண்களை ஆண்கள் இப்படி ஏதாவது ஒரு நோக்கில்தான் பார்ப்பார்களோ? டேவிஸ் இதை மறுப்பான். அதை அவர்கள் விரும்புகிறார்கள். விரும்பாதது போல நடித்து விரும்பும் ஆண்களைக் கவர்கிறார்கள் என்றான். அது ஒருவேளை சரிதானோ என்று தோணும். ஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் பக்கவாட்டுத்தோற்றம், துணிக்கடையில் ஜீன்ஸ் எடுக்கவரும் பெண்களின் பின்புறம், பேருந்தில் கம்பியைப் பிடித்து தொங்கிக் கொண்டு வியர்வை காட்டும் அக்குள், மங்கை நைட்டி அணிந்தவாறு வாசலில் அமர்ந்திருக்கும் பெண்கள்-அவர்களின் மார்புகளில் புதைந்து கிடக்கும் குழந்தைகள், கீழே நின்று மேல் நிற்பவனுக்கு மார்பின் துளி காட்டும் அஜாக்கிரதை இன்னும் இன்னும் இன்னும்.. பெண்கள் அபாயகரமான வளைவுகளைக் கொண்டவர்கள்! )

நிறைய பெண்களை நிராகரித்தேன். மாரப்ப கவண்டன் மகள் பார்வதி, எனக்குப் பொருத்தமானவள். வனப்பாக இருக்கிறாள். கற்பனைக்கு எட்டாதவாறு இருந்தாலும் போதுமென்றே நினைத்தேன். எனக்கு வசீலியின் மனைவி ஞாபகம் வந்தது. வசீலியைப் போலவே, ஏறக்குறைய ஒரேமாதிரி முகம். ஒரு ஸ்வெட்டரை கழுத்து வரைக்கும் இறுக்கி அணிந்திருந்தாள். பின்புறம் ஒரு சர்ச் இருந்தது. பெரும்பாலும் சிதிலமடைந்தே வைத்திருந்த போட்டோ என்பதால் என்னால் சரியாக கவனிக்க முடியவில்லை. ஸ்டாலின்கிராடில் செத்துப் போன சில்வியாவும் ஞாபகத்திற்கு வந்தாள். நான் நினைத்துப் பார்க்கவெண்டுமென்றால் இவர்கள் இருவரையும் மேற்கொண்டு மாலதியை மற்றும் அந்த ஜெர்மன் பெண்.. அப்பாவிடம் சொல்லி பார்வதையைக் கல்யாணம் செய்து கொள்ளலாம். காரணம் அவள் ஏராளமான மார்பை சுமந்து கொண்டிருக்கிறாள்.

வசீலி என்னோடு இருந்தபொழுது ஒருமுறை டொமினிகாவும் அவனும் சந்தித்துக் கொண்டதைப் பற்றி பேசியிருக்கிறான், ’ஒரு மெல்லிய வர்ணத்தில் உடையணிந்திருந்தாள், ஏதோவொரு பூவின் வாசனை அவள் மீது எப்பொழுதும் இருக்கும், நல்ல உயரமாகவும், உயரத்திற்குத் தகுந்த உடலும் கொண்டிருப்பாள். முதன்முதல் பார்வையில் சிரித்துக் கொண்டோம். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்லுவதற்கு முன்னர் அவள் சத்தியம் வாங்கிக் கொண்டாள். எக்காரணத்திலும் என்னைக் கைவிடாதீர்கள் என்பதுதான் அது. கழுத்தில் தொங்கும் சிலுவையைத் தொட்டு வணங்கி சத்தியம் செய்து கொண்டேன். இருவரும் கலந்து கொண்டோம். நான் இன்னும் உயிரோடு இருப்பதற்கு டொமினிகாவின் கழுத்தில் தொங்கும் சிலுவை காரணமாக இருக்கும்’ கோர்வையாக இல்லாமல் தனித்தனியாகச் சொன்னான். டொமினிகாவின் மார்பை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை, அது வசீலியின் நெருக்கத்தினால் இருக்கலாம். அவ்வாறு கற்பனித்துத் தோற்கும் பொழுது நொந்து போவதை உணரமுடிகிறது.

நான் ஏன் சில்வியாவையோ மாலதியையோ ”வைத்துக்” கொள்ளவேண்டும் என்று தோணவில்லை?

கார்பொரல் பில் எப்பொழுதும் கூறுவார். பெண்களை அணுகுவது என்பது துப்பாக்கியின் குண்டுகளைப் போல... விசை அழுத்தாதவரைக்கும் வினை ஏதுமில்லை” எனக்கு இருக்கும் பிரச்சனை பெண்களின் மார்புகள். அவைகளை வெட்டி எறிந்துவிட்டால் பிரச்சனை ஏதுமில்லை என்று தோணுகிறது. முகம் முழுக்க நட்பையோ, காதலையோ பூசிக் கிடக்கும் பெண்களைக் காணமுடிவதில்லை, இது ஒருவகை வலி எனலாம். டாக்டரிடம் சென்றேன். திருமணத்தை மருந்தாக எழுதிக் கொடுத்தார். எனக்கு பார்வதி அல்லது மாலதி கூட போதும்தான். இறுதியாக காயத்ரி.. “உனக்கு பெண்ணா கிடைக்காது” என்றார்கள் உடனிருந்த நண்பர்கள். கிடைக்கலாம். ஆனால் பெண்கள் அவர்களுக்கே தெரியாமல் தரும் வலி, அல்லது கோபம், அல்லது... என்ன வார்த்தை என்று தெரியவில்லை, அது எனக்கு காயத்தை ஏற்படுத்துகிறது.

கார்பொரல் இவனோவிச்சுடன் வசீலி வோல்கா ஆறைக் கடந்து கொண்டிருந்தான். ஜெர்மனின் லூட்வாஃப் விமானங்கள் குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தன. இவர்களது பிரிவில் விமானங்களைத் தாக்கும் ஃப்லாக்பேன்ஸர்கள் போல ஏதுமில்லை. அல்லது அப்படியிருந்திருந்தாலும் பயன்படவில்லை. வசீலி, போட்டோவைக் கையில் வைத்துக் கொண்டே சென்றிருக்கிறான். வோல்கா ஆற்றைச் சுற்றியுள்ள காடுகளில் ஒளிந்திருந்து சென்றாலும் எவ்வளவு தூரம்தான் தப்பிச் செல்ல முடியும்? முழுக்க சிதைந்து இறந்துகிடந்தவர்களை எண்ணும் பொழுது கையில் புகைப்படத்துடன் இறந்தவனது பெயர் பிரைவேட் வசீலீ கோஸ்லோவ் என்றார்கள். அது எனக்குத் தெரியவர வெகுநாட்கள் ஆனது. அவனது அழகான மனைவி டொமினிகா இனி எனக்குத்தான். ரஷ்யாவில் எங்கோ ஒருமூலையில் கணவன் திரும்புவான் எனக் காத்திருக்கும் அந்த பெண், சார்ஜெண்ட் மூடியாகவோ, பிரைவேட் எல்விஸ் வைட்டாகவோ அல்லது வசீலி கோஸ்லோவ் மாதிரியோ என்னை நினைத்துக் கொள்ளட்டும். அவளது மார்பின் சூட்டை ஒருமுறையேனும் உணரவேண்டும்.

எனக்கு காயத்ரிதான் அமைந்தாள். நான் எந்த எதிர்ப்பும், கோபமும், காதலும் அவள்மீதும், திருமணம் செய்து வைத்தவர்கள் மீதும் கொள்ளவில்லை. டொமினிகா அல்லாத ஒரு பெண் (ஜோன்ஸ் மாதிரி இருப்பாளோ) அமைந்ததில் சற்றே வருத்தம்தான். இன்றுவரையிலும் வசீலியும் டொமினிகாவும் என்னை ஆக்கிரமிப்பதை அதன் காரணத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை, காயத்ரியிடம் கூட. நான் எதிர்பார்த்த பெண் தானில்லை எனும் வருத்தம் அவளுக்கு எழாதவாறு நடந்து கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தேன். அவளோடு முயங்கும் ஒவ்வொரு நாளும் அவளது உடலை அழித்து டொமினிகாவையோ அல்லது பெயரறியா ஜெர்மன் பெண்ணையோ பொருத்திக் கொண்டேன். என்னமாதிரியான குற்றம் அது. ஆனால் எனக்கு மட்டுமே தெரிந்த குற்றம். காலையில் அவள் என் அப்பாவிடம் “ப்ரைவேட் வசீலி” பற்றி பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எப்படியோ நான் உளறியிருக்கிறேன். இருப்பினும் எனது இரகசியம் என்னோடே இருக்கட்டும். அவள் மெல்ல மெல்ல டொமினிகாவாக மாறிக் கொண்டிருந்தாள். அவளுக்கு கழுத்து வரையிலுமான வெள்ளை ஸ்வெட்டர் வாங்கிக் கொடுத்தேன். சர்ச்சுக்குப் பின்னே போட்டோ எடுத்துக் கொண்டேன். ஒருநாள் அவளது நெற்றிப் பொட்டில் சுட்டு “இறந்து போ ஜெர்மன் பெண்ணே” என்றேன். என்னிடம் வசீலியின் டொக்ரெவ் பிஸ்டல் இப்பொழுது பெரட்டா 92s பிஸ்டலாக இருந்தது.

பிகு:
சிறுகதைக்கு உதவிய சில கணிணி விளையாட்டுகள், காமிக்ஸ், இணையம், விக்கிபீடியா போன்றவற்றிற்கு நன்றி!

Comments

Katz said…
நல்ல வித்தியாசமான முயற்சி.
Unknown said…
excellent athavan, stunning.
chicha.in said…
hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

Popular Posts