சச்சின் நூறு அடித்தால் இந்தியா தோற்குமா?

 

143579

கிட்டத்தட்ட பழமொழியாகவே ஆகிவிட்ட இந்த சொற்றொடர் மீண்டும் மீண்டும் இந்தியா தோற்பதால் உருவாகிவருகிறது. இந்திய அணி அப்படியொன்றும் அசாதாரண அணி அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும், சச்சின் ட்ராவிட் கங்குலி போன்ற ஜாம்பவன்களால் அது கபில்தேவ் காலத்திய அணியிலிருந்து உருமாறி இன்றைய அதிரடி நிலைக்கு வந்து நிற்கிறது. இந்திய அணியின் மாபெரும் உருவாக்கத்தில் சச்சினது பங்கு நிச்சயம் பெருமளவில் இருப்பதை மறுப்பதற்கில்லை, யாராலும் எட்டமுடியாத சாதனை எனும் அளவுக்கு படைக்காவிட்டாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதன்முதலான சாதனைகள் பெரும்பாலானவைகளை இவர் செய்திருக்கிறார். கிரிக்கெட்டில் சாதனைகள் பெரும்பாலும் தனிநபர் சாதனைகளாக அமைந்துவிடுகிறது. ஒரு தனிநபர் சாதனை புரிய ஏராளமான இடங்களை கிரிக்கெட் விட்டுத்தருகிறது. மொத்த அணிக்கான சாதனை என்று பார்க்கும்பொழுது தனிநபர் சாதனைகளே அதிகம் கிடைக்கிறது. இதில் சச்சின் மட்டும் ஒரு சாதனை வீரனாக, சுயநலத்தின் பால் பார்க்க்கப்படுவது பார்வையின் பட்டும்படாத மேலோட்டத்தையே காண்பிக்கிறது.

ஒரு இளம் வீரனாகக் களமிறங்கி வக்கார் யூனிஸிடம் அடிவாங்கி, இரத்தம் சொட்டச் சொட்ட அணிக்காக ஆடியவர் சச்சின் என்பதை நம்மில் பலர் மறந்தே விடுகிறார்கள். ஒரு அணிக்கான அர்பணிப்பு உள்ளவனாக இருப்பவனை நாம் வீரன் என்கிறோம். சச்சினிடம் மட்டுமல்ல, எல்லா வீரர்களிடமும் அதையே நாம் எதிர்பார்க்கிறோம். சொந்த சாதனைக்காக அணியை கைவிட்டவன் எனும் பெயர் சச்சினுக்கு எப்படி ஏற்பட்டது என்பதே தெரியவில்லை. ஒரு அணியின் வெற்றியும் தோல்வியும் எல்லா வீரர்களையே சார்ந்திருக்க, ஒருவரை மட்டும் குறைசொல்வது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நாமனைவருமே புரிந்து கொள்ளவேண்டும். சச்சின் ரன்னே அடிக்காத ஒரு இன்னிங்க்ஸில் அல்லது முக்கியமான போட்டிகளின் போது அடிக்காமல் போனால் “சச்சினால்தான் இந்தியா தோற்றது” எனும் வாதத்தை ஓரளவுக்கேனும் ஏற்றுக் கொள்ளமுடியும், ஏனெனில் சச்சின் மீதான எதிர்பார்ப்பு அத்தகையது. ஆனால் நூறு ரன்கள் அடித்தால் இந்தியா தோற்றுவிடும் எனும் மூடநம்பிக்கையை இந்தியர்களிடம் மட்டும்தான் காணமுடியும். தோற்ற போட்டிகளில் சச்சினது பங்களிப்பு என்பதைவிட மற்ற 10 பேரது பங்களிப்பு எப்படிப்பட்டது என்று ஆராயாமல் விடுவது தவறானதாகத் தெரியவில்லை இல்லையா? உதாரணத்திற்கு நேற்றைய பங்களாதேசுக்கு எதிரான போட்டியை எடுத்துக் கொண்டால், என்னிடம் சச்சின் குறித்த மூன்று சந்தேக/சர்ச்சைகள் எழுப்பப்பட்டன,

1. சதத்திற்காக ஆடியதால் ஸ்கோரிங் ரேட் குறைந்து போய்விட்டது, அதனால் இந்தியா அதிகம் ஸ்கோர் செய்ய இயலவில்லை
2. பங்களாதேஷ் எல்லாம் ஒரு அணியே அல்ல, அதற்கு எதிராக ஒரு சாதனை சதம் அடித்தது நன்றாக இல்லை,
3. வழக்கம் போல சச்சின் சதமடித்து இந்தியா தோற்றுவிட்டது!

ஒரு மேலோட்டமான பார்வையில் இவை உண்மையாகவே தெரிகிறது. ஆனால் இது “நிஜமாகவே” (!) உண்மைகளா?

1. நேற்றைய போட்டியில் இறுதி நேர அழுத்தத்தின் காரணமாக ரைனா, தோனி தவிர வேறு யாரும் அடித்து ஆடவில்லை, குறிப்பாக கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 80.48, குறைந்த ரன்களே அடித்திருந்தாலும் காம்பிரும் பாலைத் தின்றிருந்தார். இந்த சூழ்நிலையில் சச்சினின் ஸ்டாண்டிங்கில் பந்துகள் வீணாகப்போவது “சுயநலம்” காரணமல்ல, தவிர பந்து மெதுவாக வந்ததை சச்சின் குறிப்பிடுகிறார். அடுத்த இன்னிங்க்ஸ் ஆடிய பங்களாதேஷின் தமிம் இக்பால், ஜஹருல் இஸ்லாம் ஆகியோரும் மெல்லவே ஆடினார்கள்,

2. பங்களாதேஷ் எனும் சிறூ அணிக்கெதிராக அடிக்கும் முதல் ஒருநாள் சதம் அது என்பதை அறியாமல் பேசுவது வீண். தவிர பங்களாதேஷ் ஒரு நல்ல எழுச்சி நிலை கண்டுள்ளது. அவர்களது அணியின் சகிப் அல் ஹசன், மொர்டாசா, தமிம் போன்ற தரம் வாய்ந்த வீரர்கள் வந்துவிட்டார்கள், ஒருகாலத்தில் இலங்கையும், அதற்கு முன்பு இந்தியாவுமே ஒரு “சப்ப” அணி தான் என்பதை மறந்துவிடக்கூடாது. தவிர டெண்டுல்கர் சுமாரான அணியிடம் அதிக ரன் அடித்தவர் கிடையாது, அவரது சதங்களும் ரன்களூம் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கெதிரானது என்பதை மறந்துவிடவேண்டாம். என்னதான் பங்களாதேஷ் வலிமை குன்றிய அணி என்றாலும் அவர்களும் வலிமை வாய்ந்த அணியினரை தோற்கடித்துள்ளனர் என்பதை மறக்கவேண்டாம். 2007 உலகக் கோப்பையில் பங்களாதேஷ் என்ன செய்தது என்பது ஞாபகம் இருக்கிறதா இல்லையா?

3. ஒரு அணியின் தோல்விக்கு ஒருவர் மட்டுமே காரணமாக ஆகமாட்டார். இதை ஏன் இந்த கோணத்தில் பார்க்கக் கூடாது... இந்தியாவின் ஸ்கோரில் சச்சின் பங்களிப்பை எடுத்துவிட்ட்டிருந்தால் வெறும் 175 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கும், அதுவும் வலிமை குன்றிய ஒரு அணிக்கு எதிராக... ஒரு கெளரவமான ஸ்கோரில்தானே தோற்றிருக்கிறோம்.. தவிர இன்னொன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இந்தியா எப்பொழுதுமே வலிமை வாய்ந்த அணீ அல்ல. வலிமை வாய்ந்த வீரர்கள் இருப்பினும் அது ஒரு சுமாருக்கும் மேலான அணிதான்!

சச்சினது காலம் ஒருநாள் போட்டிகள் துவங்கி எழுச்சி பெற்ற காலம், அவர் டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவே அவரது முதல் ஐந்து வருடங்கள் கழிந்தன. இன்றும் அவரை ஒரு நல்ல டெஸ்ட் வீரராகப் பார்க்க முடிகிறது. சமகாலத்தில் காலிஸும் சச்சினும் டெஸ்டை அடுத்த கட்ட அல்லது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சென்றார்கள். (ட்ராவிட்டும் தான்...) காலத்திற்கு ஏற்ப சச்சின் ஒருநாள் வீரராகவும், ட்வெண்டி 20 வீரராகவும் கூட தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் கூட அதிக ரன்களைக் குவித்திருக்கிறார். இல்லையா?

நேற்றைய பேட்டியின் போது தான் எந்தவித மனநெருக்கடிக்கு உள்ளானேன் என்பதை சுட்டிக் காட்டுகிறார். ஒரு வீரருக்கு மனநெருக்கடி என்பது சகஜமானதுதான். முதன்முறையாக ஒரு விருது விழாவில் உங்களுக்காக வழங்கப்படும் விருதிற்கு நீங்கள் மனநெருக்கடிக்கு உள்ளாவீர்களா மாட்டீர்களா என்பதை உங்களிடமே கேட்டறிந்து கொள்ளலாமே? சரி, நாட்டுக்காக ஆடுபவனுக்கு அணியின் நலந்தான் முக்கியம், சாதனையை மையப்படுத்திய மன அழுத்தம் கூடாது என்று அறிவுருத்துவதாக இருந்தால் ’நாட்டுக்காக’, ’அணிக்காக,’ என்று பாராமல் கோடிகள் புழங்கும் வியாபார ஆட்டமான ஐபிஎல்லை நாம் பார்க்கவே கூடாது... கிரிக்கெட் இன்று வியாபாரம் ஆகி பணம் கொழிக்கும் விருட்சமாக மாறிவிட்டது. இதில் நாட்டுணர்வு என்பது எங்கோ ஓரிரு இடங்களில் மிச்சமிருக்கும் வீரர்களிடம் இருப்பதையும் நாம் கொச்சைப் படுத்தி வருகிறோம்.

99 சதங்களைப் பேசாதவர்கள், நூறாவது சதம் குறித்து பேச அருகதையற்றவர்களாகிறோம். அதனைத்தான் சச்சின் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்... விஜய் மல்லய்யாவின் வியாபார விளம்பரங்களில் நடிக்க மறுத்தவரான சச்சின் விளையாட்டுத் துறையில் மிகப்பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்திருந்தாலும் அவர் அடிப்படையில் ஒரு வீரர்.. நாட்டுக்காக ஆடும் இன்றைய ஒரே வீரர்!!

வாழ்த்துக்கள் சச்சின்!

Comments

Anonymous said…
மிகவும் அழுத்தமாக, தெளிவாக சொல்ல வந்த கருத்துக்களை சொல்லியுள்ளாய் ஆதவா...

முழுமையாக உனது கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்..

சச்சின் ஓய்வு பெற வேண்டும், என்று சொல்பவர்களுக்கு என்னிடம் ஒரே ஒரு கேள்வி....

சச்சினுக்கு இணையான மாற்றுவீரர் யார் உள்ளனர்?

சச்சின் விளையாடும் காலத்தில் நாம் இருந்திருக்கிறோம் என்பதே நமக்கெல்லாம் மிகவும் பெருமைக்குரிய ஒன்று.

சச்சின் ஓய்வு பெற்றுவிட்டால் நீங்கள் எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் மீண்டும் ஒரு உன்னதமான ஆட்டக்காரனின் ஆட்டத்தை உங்களால் காண முடியாது..

டெஸ்ட் கிரிக்கெட்டில் டிராவிட் அவுட் ஆனவுடன் ஸ்டேடியம் முழுக்க கரவொலி... இந்திய ரசிகர்கள்தான்..என்னவென்று பார்த்தால், சச்சின் அடுத்து ஆட உள்ளே நுழைவதுதான் காரணம்..

இது ஒன்று போதும் சச்சினின் திறமைக்கும், பெருமைக்கும்...

மற்றவர்களையெல்லாம் கேட்டு சச்சின் கிரிக்கெட்டில் நுழையவில்லை..

மற்றவர்களெல்லாம் சொல்லி சச்சின் கிரிக்கெட்டில் இருந்து வெளியேற வேண்டிய அவசியமுமில்லை.

ஓய்வு என்பதை அவர் அறிவித்துக்கொள்ளட்டும்..

அந்த நாள் வரும்வரை சச்சினின் ஆட்டத்தை காணும் பாக்கியம் பெற்றவர்களாயிருப்போம்...
நாட்டுக்காக ஆடும் இன்றைய ஒரே வீரர் ! நல்ல பதிவு !
chicha.in said…
hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

Popular Posts