இன்னுமொரு ஞாயிறு 04-03-2012

aravaan-pictures-080

 

முக்கால் கிணறு

மதுரை களம், இருநூறு ஆண்டுகால இடைவெளி, பேச்சு, உடை. வழக்கு, அரசியல், வன்முறை என நமது மறந்து போன சொந்த வரலாறைப் பார்த்தது மாதிரி இருந்தது அரவான். நிறைய நுணுக்கமான காட்சிகள், ஜஸ்ட் லைக்தட் மாதிரி வந்து போகிற யதார்த்தம், உண்டியலின் வாயிலிருந்து வெளியே செல்லும் கோணம், கொலையின் பார்வைகோணம், கண்களாலேயே பெருமிதம் காட்டும் நடிகன், காட்சியிலிருந்து வெளியே துப்பிவிடமாட்டாத நிலங்கள், “பாலை” நில குறியீடுகள் என பார்த்து பார்த்து உழைத்திருக்கிறார்கள்... ஒரு புதுமையான “களத்தைச்” சொன்ன விதத்தில் வசந்தபாலனுக்கும் சரி, தமிழ் சினிமாவுக்கும் சரி, அரவான் ஒரு முக்கியமான படம் தான்...

ஆனால்....

திரைக்கதைதான் ஒரு சினிமாவைத் தீர்மானிக்கும் சக்தி. அரவானில் கிணற்றைத் தாண்ட முடியாமல் உள்ளே விழும் பசுபதியைப் போல முக்கால் கிணற்றைத் தாண்டி உள்ளே விழுகிறது திரைக்கதை. ”எப்படி” மற்றும் “எதற்கு” போன்ற கேள்விகள் படத்தில் சில இடங்களில் அதுவும் முக்கியமான இடங்களில் துருத்திக் கொண்டு நிற்கிறது. சுவாரசியமாகச் செல்லவேண்டிய திரைக்கதை அசுவாரசியத்திற்குத் தள்ளப்படுகிறது... ஆதி, நிலவைத் தள்ளுவது போல. :) (வரலாற்று) புலனாய்வு திரைப்படத்திற்குத் தேவையானது ”ஆதிமுடிச்சு”! படத்தில் அப்படி எங்கும் முடிச்சு போட்டு அவிழ்த்ததாகத் தெரியவில்லை, கொலைகாரனைக் கண்டுபிடிக்க புதுக்கதையை உருவாக்க வேண்டியிருக்கிறது, இன்னார்தான் கொலைகாரன் என்பதை ஒரு முடிச்சு மூலமாக முதலிலேயே சொல்லிவிடும் யுக்தி பின் அதனை நோக்கிப் பயணப்படும் ஆதியின் வேட்டை என திரைக்கதையை அப்படியே மாத்தியமைத்திருக்கலாம்.. பசுபதியை முக்கியப்படுத்தாமல் ஆதியின் கோணத்திலேயே கதை செலுத்தியிருக்கலாம்...மேலும் காளைகள் வரும் சிஜி காட்சிகள் தேவையற்றது!  இப்படி நிறைய யோசனைகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்த கதை தோற்றால் அடுத்து பீரியட் படங்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். தமிழில் சொல்லப்படாத களங்கள் ஏகப்பட்டது உண்டு. அதில் ஒன்றிரண்டேனும் சிறப்பாக அமையும் வாய்ப்பும் இருக்கிறது. அதற்காகவேனும் அரவான் ஜெயிக்கணும்!!

ஒவ்வாத நாவல்

யுவன் சந்திரசேகரின் பயணக்கதை நாவல் படித்து முடித்தேன். வித்தியாசமான கதைப்போக்கில் நாவல் அமைத்திருக்கிறார். இவரது எழுத்துக்களில் உச்சபட்ச வாசிப்பு சுகத்தைத் தருவதாக சொல்லப்படும் பின்னட்டை உரை பார்த்து வாங்கினதுதான். மூன்று நண்பர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் போது அவர்களால் எழுத அல்லது சொல்லப்படும் கதைகள்தான் நாவல்… ஒரு நாவல் என்றூ சொல்வதை விட குட்டிக் குட்டி கதைகள் அடங்கிய ஒரு சிறுகதைத் தொகுப்பு எனலாம். ஆரம்பத்திலிருந்து ஏகப்பட்ட பாத்திரங்கள், ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள முயன்று தோற்றுவிட்டேன். மூன்றூ நண்பர்களின் கதைகளும் வேறுவேறானவை, தவிர ஒருசில மட்டுமே ஒன்றோடொன்று தொடர்புக்குள்ளாக இருக்கிறது. எனது வாசிப்பு அனுபவத்திற்கு இது ஆகாத நாவல் என்றாலும் இவரது எழுத்துக்கள் மிக அற்புதமாக இருந்ததை மறக்கமுடியாது.

நாவலின் பெயர் : பயணக்கதை
ஆசிரியர் : யுவன் சந்திரசேகர் 
பதிப்பகம் : காலச்சுவடு
பக்கங்கள் : 388
விலை : 290.00

பெண்ணுள்

தமிழ்மகனின் ஆண்பால் – பெண்பால் உளவியல் சார்ந்த ஒரு அற்புதமான நாவல். குழப்பம் நிறைந்த பெண் பாத்திரம், தான் ஏன் இவ்வாறு இருந்தோம் என தர்க்கரீதியிலான தனது நியாயங்களை எடுத்துச் சொல்லும் பெண்பால். அதே கதையை அதே இடத்தை தனது கோணத்தின் மூலம் நியாயப்படுத்தும் ஆண்பால்.. இடையிடையே எம்.ஜி.ஆர்.

பெண்பால் பகுதி படித்து முடித்த பிறகு இவர் தமிழ்மகனா அல்லது தமிழ்மகளா என்று சந்தேகித்து பின்னட்டையைப் பார்த்தால் படிய வாரப்பட்ட முடியுடன் கண்ணாடி, மீசை, வாட்ச் சகிதம் உட்கார்ந்து கொண்டு போஸ்கொடுத்திருக்கிறார்… ஆணேதான்.. பெண்பால் பகுதி படிக்கப்படிக்க பெண்மை எனும் பெருந்தீவினுள் நம்மை நுழையவிடுகிறார். சில இடங்களில் நாவலை சந்தேகிக்கும்பொழுது அந்த சந்தேகத்தை அப்போதே தீர்த்தும் விடுகிறார். ஆண்பால் பகுதியைவிடவும் பெண்பால் பகுதி பிரமாதமானது… படித்தால் ஒருவேளை நீங்கள் உங்கள் மனைவியைப் பற்றி பெரிதும் யோசிக்கத்தோணும்!!! ஆண்பாலில் ஓரிரு இடங்களில் சலிப்பு வருவதைத் தவிர்க முடியவில்லை,

நாவலின் பெயர் : ஆண்பால்-பெண்பால்
ஆசிரியர் : தமிழ்மகன்
பதிப்பகம் : உயிர்மை
பக்கங்கள் : 256
விலை : 200.00

Comments

Thava said…
அருமையான விமர்சன பதிவு..தங்களுக்கு தோன்றியவற்றை அப்படியே சிறப்பாக எழுதியுள்ளீர்கள்..மகிழ்ச்சி..மிக்க நன்றிகள் சகோ.

Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)
ஆண்பால் பெண்பால் நாவல் குறித்த வரிகள் அதனினை படிக்க தூண்டுகிறது...
Unknown said…
அரவான் பார்க்கவில்லை. நீங்கள் இறுதியில் சொன்னதுபோல் தமிழின் சொல்லப்படாத இன்னும் ஏராளமான கதைகளுக்காக அரவான் ஜெயிக்கட்டும்!
ஆண்பால்-பெண்பால் பற்றி கேள்விப்பட்டதெல்லாம் வாசிக்கவேண்டும் என்ற ஆவலைத் தோற்றுவிக்கிறது!
நல்லா இருக்குங்க !