திருப்பூர் புத்தகத் திருவிழா–நாள் 3

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலைபுரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?

- சுகுமாரன்.

அலுவலக வேலைப் பளு காரணமாக வெகு தாமதமாகத்தான் விழாவினுள் நுழைந்தேன். எறும்பு மொய்க்காத பண்டம் போல பல இடங்களில் கூட்டமேயில்லை, ஒருவேளை நான் தாமதமாக வந்ததன் காரணமாகக் கூட இருக்கலாம். சேர்தளம் நண்பர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று தேடியவாறே இருந்தவர்களை ஊடுறுவிச் சென்று கொண்டிருக்க, சிவக்குமார் அண்ணனும் திருநாவுக்கரசும் எதிர்பட்டார்கள். இம்முறை சில புத்தக அகங்களில் நுழைந்து பார்க்க அவகாசம் கிடைத்தது!

நகரத் திருவிழாவில் தாவணி அணிந்த பெண்களைத் தேடுவதைப் போன்றதுதான் நல்ல புத்தகங்களைத் தேடுவதும். ஒரு புத்தகம் நல்லதா, அல்லது நமக்குத் தேவையில்லாததா என்று கணிப்பதென்பது ”கடவுள் இருக்கிறாரா இல்லையா” சர்ச்சையைப் போன்றது. பார்த்தவுடனேயும் ஒரு புத்தகத்தை வாங்கிவிட முடியுமா என்ன? ஒரு வாசகர் எப்படி புத்தகத்தைத் தேர்வு செய்கிறார்?

என்னைப் பொறுத்தவரையிலும் ஒரு புத்தகத்தின் ஈர்ப்பு அதன் அட்டைப்பட வடிவமைப்பிலும் புத்தகத் தலைப்பிலுமே இருக்கிறது. சிலசமயம் இது வெறூம் விளம்பரமென பட்டாலும் தலைப்பின் வசீகரம் அப்புத்தகத்திற்கான தர நிர்ணயக் குறியீடாக இருக்கும் என்பது எனது பொதுவான அனுமானம். இருப்பினும் வசீகர தலைப்புள்ளவைகள் அனைத்தும் நன்றாக இருக்கும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடமுடியாது. நான் தேட விரும்பியது ஒரு கவிதை புத்தகமாக இருந்தால் அதிலிருந்து இரண்டு கவிதைகள் ஒழுங்கற்ற வரிசையில் (Random Order) படித்துப் பார்த்துவிடுவேன். அவையிரண்டும் பிடித்திருந்தாலொழிய அப்புத்தகத்தை வாங்க மாட்டேன். இதுவே கட்டுரையாக இருந்தால் ஒரு பக்கம், சிறுகதைத் தொகுப்பாக இருந்தால் ஒரு கதை. ஆனால் நாவலைத் தேர்ந்தெடுப்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. ஏதாவது ஒரு பக்கத்தைப் படித்துவிட்டு நமக்கு ஏற்றது என தேர்ந்தெடுத்துவிட முடியாது. அது பெரிய ஆலமரத்தின் விழுதைப் பற்றிவிட்டு ஆலமரத்தைச் சுற்றிவந்ததாக ஆகிவிடும். சிலசமயம் நமக்கு பரிட்சமயானவர்களுடைய முன்னுரை, பதிப்பகம், அல்லது பரிந்துரையின் காரணமாக கண்ணை மூடிக் கொண்டு தேர்ந்தெடுக்கலாம்.

முதலில் கண்ணில் பட்ட ஒரு புத்தகம் ஜென் வழி (வி.பத்மா - மதி நிலையம் – ரூ.150) ஜென் தத்துவங்களை விளக்கிச் சொல்லமுடியாது என்பார்கள், ஜென்னைப் பற்றித் தெரிந்து கொள்ள நாமும் ஜென் துறவியாக மாறவேண்டும். ஜென் துறவி என்றால் லெளகீக இன்பங்களைத் துறந்துவிட்டு காட்டுக்குச் செல்லுவதல்ல, நமது வாழ்க்கையில் மூடிக் கிடக்கும் வாழ்க்கை மீதான அர்த்தங்களை, உணர்வுகளை திறப்பதே ஜென்னின் வேலை. இப்படிச் சொல்லுவது கூட தவறாக இருக்கலாம். புத்தகத்தில் வாசித்த ஒரு கதை.

வாழ்க்கை சலித்துவிட்டது என்கிறார் நண்பர். ஒரேமாதிரியான வாழ்க்கை, வீடு, அலுவலகம், திரும்பவும் வீடு என அசுவாரசியமாக இருக்கிறது என்கிறார். அதற்கு ஜென் தத்துவம் அறிந்த நண்பர் “ வாழ்க்கை எப்பொழுதும் ஒரே மாதிரியாகச் செல்லுவதில்லை என்கிறது ஜென், ஒரு ஆற்றில் குளித்து முடிந்த பிறகு மறுநாள் அதே ஆற்றில் ”நேற்று குளித்த ஆறு” என்று சொல்லிவிட முடியாது, ஏனெனில் நேற்று பாய்ந்த நீர் இன்று திரும்பவும் கிடைக்காது, இன்றூ வேறொரு புதிய நீரைத்தான் ஆறு நமக்கு வழங்கும்… வாழ்க்கையும் அது போலத்தான் என்கிறார்.

குறுங்கதைகளாக இருந்தாலும் ஓரளவு ஜென் தத்துவங்கள் மீதான ஐயத்தைப் போக்குமென்று நினைக்கிறேன். இதைப் போலவே  ஜென் தத்துவக் கதைகள் (குருஜி வாசுதேவ் – சிக்ஸ்த் சென்ஸ் - 130), சூஃபி கதைகள், கன்ஃபூசியஸ் கதைகளும் கிடைக்கின்றன. என்னைக் கேட்டால் சிறுவர்கள் அவசியம் படிக்கவேண்டிய கதைகள் இவை. அன்றாட வாழ்க்கையிலிருந்தே உருவாக்கப்பட்டிருப்பதால் வெகு எளிமையாக இருப்பதை உணர முடிகிறது.

காலச்சுவடு தனியாக புத்தக அகத்தினை அமைக்கவில்லை என்றாலும் சில புத்தகங்கள் கிடைக்கின்றன. அதில் நண்பர் மண்குதிரையின் புதிய அறையின் சித்திரம் (காலச்சுவடு – ரூ 75) கிடைக்கிறது. மண்குதிரையின் வலைப்பக்கத்தில் நிறைய கவிதைகள் வாசித்திருக்கிறேன். மொழியை எளிமையாகவும் அடர்த்தியாகவும் பயன்படுத்தும் இளம் கவிஞர்களில் ஒருவர். சில கவிதைகள் கதை சொல்லல் போலவும், அனுபவங்களைப் போலவும், நெறியுணர்த்துபவை போலவும் பல பரிமாணங்களில் இருப்பவை. அதேபோல கவிஞர் இசையின் சிவாஜி கணேசனின் முத்தங்கள் (காலச்சுவடு – ரூ.70/-) சற்றே விளாசல் கவிதை தொகுப்பு. இவரது உறுமீன்களற்ற நதி ஒரு குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய கவிதைத் தொகுப்பு. சிவாஜி கணேசனின் முத்தங்கள் அவரது மூன்றாவது தொகுதி என்று நினைக்கிறேன். முன்னுரையில் குறிப்பிட்டிருந்தது போல இவரது கவிதையின் கூர்மை அபாயகரமானதாகவே இருக்கிறது.

மனம் மட்டும் உறுப்பாக இருந்திருந்தால்
இன்னேரம் வெட்டித் தூர
எறிந்திருப்பான் தலைவன்

எனும் வாசித்த ஒரு கவிதையின் வரிகளே மனதை என்னவோ செய்கிறது. மிகச் சாதாரண வரிகள்தான் இவை, சொல்லப்படும் விதத்தில் அதன் வீச்சு உணரமுடிகிறது.

யுவன் சந்திரசேகரின் பயணக்கதை (காலச்சுவடு – ரூ. 290/-) எனும் நாவல் மூன்று நண்பர்களின் பயணத்தைப் பற்றியது, மூன்று சேருமிடத்தில் நாவல் முடிவதாக முன்னுரை இருக்கிறது. ஒருநாவலில் மூன்று கதைகள் என்பதைவிட இம்மாதிரியான வகைகள் எனக்கு மிகவும் பிடிக்கும், ஒரே சினிமாவில் இரண்டு கதைகள் (ஐந்து மொக்கை கதைகள் கூட சினிமா ”வானத்தில்” இருக்கும்) அதன் திரைக்கதைக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுபவை.

மற்றபடி உயிர்மையில் நிறைய புத்தகங்கள் “பார்த்ததில்”

சுப்ரபாரதி மணியனின் ”நீர்த்துளி”, (இவரது சாயத்திரையும் மிக அருமையான புத்தகம்), கால்கள் – ஆர்.அபிலாஷ், வாமுகோமுவின் எட்ரா வண்டிய, மனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுது (முன்னட்டை படம் சுமார்தான்) ஆண்பால் பெண்பால் (தமிழ்மகன்) மற்றும் சுஜாதா, ஜெயமோகன், எஸ்ரா, எக்ஸட்ரா….

ஸ்டீவ் ஜாப்ஸின் சரிதம் கிட்டத்தட்ட எல்லா புத்தக அகங்களிலும் கிடைக்கிறது. சில பக்கங்களைப் புரட்டியதில் ஹாலிவுட் பாலாவின் பிக்ஸார் ஸ்டோரி கண்ணில் படர்ந்தது, எனினும் பிக்ஸார் தாண்டி ஸ்டீவ் ஜெயித்த கதையை பிரசுரித்திருக்கிறார்கள். “பாபர் நாமா” புத்தகம் விளம்பரப்படுத்தப் பட்டிருந்தது (மதி நிலையம் என்று நினைக்கிறேன்) கேட்டதற்கு இன்னும் புத்தகம் வரவில்லையாம். நீயா நானா கோபிநாத்தின் “ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க” என்ற புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என சில பக்கங்களைப் புரட்டியதில் அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் பயணம் பற்றியும் எழுதியிருப்பதைப் பார்த்த பொழுது, எஸ்ரா ஜெயமோகன் போன்றோர் செல்லாத பயணங்களா, சந்திக்காத மனிதர்களா, அவர்களுடையதெல்லாம் ஏன் லட்சம் பிரதிகளைத் தொடவில்லை என்று தோணிற்று!!! பிரபலமாக இருப்பதன் வரம் போலும்!!!

Comments

King Viswa said…
//நகரத் திருவிழாவில் தாவணி அணிந்த பெண்களைத் தேடுவதைப் போன்றதுதான் நல்ல புத்தகங்களைத் தேடுவதும்...

மிகவும் ரசித்தேன்.

//என்னைப் பொறுத்தவரையிலும் ஒரு புத்தகத்தின் ஈர்ப்பு அதன் அட்டைப்பட வடிவமைப்பிலும் புத்தகத் தலைப்பிலுமே இருக்கிறது. சிலசமயம் இது வெறூம் விளம்பரமென பட்டாலும் தலைப்பின் வசீகரம் அப்புத்தகத்திற்கான தர நிர்ணயக் குறியீடாக இருக்கும் என்பது எனது பொதுவான அனுமானம். இருப்பினும் வசீகர தலைப்புள்ளவைகள் அனைத்தும் நன்றாக இருக்கும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடமுடியாது//

நானும் பல முறை இந்த மாதிரி ஏமாந்தது உண்டு.

//நீயா நானா கோபிநாத்தின் “ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க” என்ற புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என சில பக்கங்களைப் புரட்டியதில் அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் பயணம் பற்றியும் எழுதியிருப்பதைப் பார்த்த பொழுது, எஸ்ரா ஜெயமோகன் போன்றோர் செல்லாத பயணங்களா, சந்திக்காத மனிதர்களா, அவர்களுடையதெல்லாம் ஏன் லட்சம் பிரதிகளைத் தொடவில்லை என்று தோணிற்று!!! பிரபலமாக இருப்பதன் வரம் போலும்!!!//

உண்மைதான்.
நல்ல பதிவு.
நன்றி.
பகிர்வுக்கு மிக்க நன்றி சார் !
திருப்பூர் தானா? வாழ்த்துகள்.

நானும் ஆர்வமாகத்தான் சென்றேன். இந்த முறை பரவாயில்லை. ஒவ்வொரு பள்ளியின் மாணவ மாணவியர்களையும் அந்தந்த பள்ளிகள் வரவழைத்து இருந்தார்கள்.

ஆனால் புத்தக விலைகள் அத்தனையும் சம்மந்தம் இல்லாமல் பொருந்தா காமம் போல இருக்கிறது. சண்டை போட்டது தான் மிச்சம்.
திருப்பூர் புத்தகக்கண்காட்சி தொடர் பதிவு அசத்தலாக உள்ளது.வாழ்த்துக்கள்.

Popular Posts