திருப்பூர் புத்தகத் திருவிழா–நாள் 1

முட்டை ஓட்டின் விரிசல் வழி
நீளும்
பிஞ்சு அலகுக்கு
முதல் உணவாய் கிடைக்கும்
ஒரு துளி ஆகாயம்

- யுவன்.


புத்தகங்கள் ரகசிய உலகை ஒவ்வொரு பக்கத்திலும் ஒளித்து வைத்திருக்கின்றன. அவற்றை முகரும் பொழுதெல்லாம் அவிழ்ந்து பரந்து விரிகிறது ஒரு புறவெளிப்பாட்டு கனவைப் போலவே. இந்த புத்தக இரகசியம் அறிந்த எவரும் வெவ்வேறு உலகினுள் பயணிக்கவே விரும்பி புத்தக அடிமைகளாகிவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையிலும் நானொரு புத்தக அடிமை என்று சொல்லவே மாட்டேன். வீட்டிலே எண்ணிப் பார்த்தால் ஐம்பது புத்தகங்கள் கூட தேறாத சூழ்நிலையில் என்னைவிடவும் என் வீட்டு எலிகளே அதிகம் அந்த உலகினும் சஞ்சரித்திருக்கக் கூடும். புத்தக வாசிப்பவர்கள் தன் மேலே ஒரு உலகை எழுப்பி போர்த்திக் கொள்கிறார்கள் அதினின்று மீண்டு உலகின் மேற்கூட்டைக் கிழித்து மீண்டுமொரு உலகினுள் பொருத்திக் கொள்வது எவ்வளவு தீராத விளையாட்டு?

எந்த புத்தகத் திருவிழாவை விடவும் இந்த முறை திருப்பூரில் நிகழும் 9 வது புத்தகத் திருவிழா, எனக்கு மிகுந்த களிப்பையும் வனப்பையும் தருவது எனக்கே சுவாரசியமான விஷயம். இரவெல்லாம் புத்தகங்கள் கனவுகளை அடுக்கிச் சென்றன. வெளிப்படுத்த முடியாத ஆசுவாசம் பனிக்காற்றைப் போல தாக்கிற்று. எல்லாம் புத்தகம் புத்தகம் புத்தகம்…..

சென்னை புத்தகத் திருவிழா குறித்து ஒவ்வொரு நாளும் நம் வலைப்பதிவர்கள் எழுதியவற்றைப் படிக்கும் பொழுதெல்லாம் நாமும் நமது ஊரில் நிகழவிருக்கும் திருவிழாவை இம்மாதிரி ஏன் கொண்டாடாமல் இருக்கிறோம் எனும் கேள்வி எழுந்தது. ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. போர்களத்தில் நின்று கத்தியைச் சுழற்றுவதுகூட எளிதாக இருக்கலாம் ஆனால் புத்தகத் திருவிழாவைப் பற்றி நாளொன்றும் எழுதுவது கடினம் என்று இக்கட்டுரையை எழுதும் பொழுதே உணர்ந்தேன். முடியும் வரையிலும் என்னுடையை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றே இதை எழுதுகிறேன்.

நமது சேர்தளம் நண்பர்களுடன் மாலை ஆறு மணிக்கு விழாவினுள் கூடுவதாகத் திட்டமிட்டோம். முன்னதாக ஒரு ”ரவுண்ட்” அடிப்போம் என்று புத்தக விற்பனையகங்களைப் பார்வையிட்டபடியே சென்றேன். பெரியதாகவும் அல்லாமல் சிறியதாகவும் அல்லாமல் திருப்பூருக்கு ஏற்றவாறே இருந்தது. வழக்கம்போல கூடும் பதிப்பகங்கள், தமிழ், ஆங்கில புத்தக அகங்கள், மழலையர் புத்தக மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அங்காடிகள் ஆகியவையே நிரம்பியிருந்தன. ஆச்சரியமளிக்கத்தக்கவகையில் ”காலச்சுவடு” பதிப்பகம் அங்கே காணமுடியவில்லை. எதிர்பார்த்திருந்த “காமிக்ஸ்”களும் அங்கே இல்லை.

ஆறுமணிக்கெல்லாம் பரபரப்பாகி, திருப்பூர் மேயரும் (பாதி)மாநகரின் தலைவரும் திறப்பு விழாவிற்கு வந்திருந்தார்கள். அதற்குள் தல, முரளி, செல்வம், சிந்தன், இரவிக்குமார் மற்றும் அவர்களது நண்பர்களுடன் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். வழக்கமான சந்திப்பு விசாரணைகளுடன் தேநீரால் தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டு வந்திருக்கையில் சிவக்குமாரும் திருநாவுக்கரசும் வந்து சேர்ந்திருந்தார்கள். அண்ணன் சிவக்குமார் அப்பொழுதுதான் சாளுக்கிய தேசப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்று வந்த ஊர், கண்டுணர்ந்த கோவில்கள், அனுபவங்கள் ஆகியவற்றை இயல்பாக பகிர்ந்து கொண்டிருந்தார். சேர்தளம் நண்பர்கள் அனைவரும் வெளியே சின்ன இடத்தை ஆக்கிரமித்து அமர்ந்து நிறைய பேசினோம். வழக்கம்போல எழுத்துக்களில் ஆரம்பித்து எழுத்தாளர் வழி வந்து சினிமாவில் முடிந்தது. திருநாவுக்கரசும் சிவக்குமார் அண்ணனும் உள்ளே சென்று

முதல் நாளில் அவ்வளவாக புத்தகத் திருவிழாவில் தொலைந்து போகவில்லையெனினும் எப்போழ்தும் சென்றிராத ஆங்கிலப் புத்தகப் பெண்களைத் தழுவச் செல்லலாமே என்று ஸ்டால் எண் மூன்றில் உள்ள ஓம் சக்தி புத்தக நிலையத்தைப் பார்வையிட்டேன். மேசை முழுவதும் குழந்தைகளுக்கான ஆங்கில புத்தகங்கள், மிக எளிதாக குழந்தைகள் புரியும்படியான, எளிமையான புத்தகங்கள், குறிப்பாக சாப்பிடுவது எப்படி? கைகழுவுவது எப்படி போன்றவற்றை படவிளக்கங்களுடன் கொடுத்திருக்கிறார்கள். ஒருவேளை சாப்பிடவே தெரியாதவர்களுக்கான புத்தகம் போலும்! மேலும் அங்கே இளைஞர்களுக்கான புத்தகங்கள் நிறையவே இருக்கின்றன. நல்ல தரமான போட்டோ பேப்பரில் அச்சிடப்பட்ட பல புத்தகங்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன. இரண்டாம் உலக யுத்தம் குறித்த ஒரு புத்தகம் The Illustrated Second World War, யுத்தத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்கிறது. நேரில் அமர்ந்து யுத்தத்தை “ரசிப்பதைப்” போல காணக்கிடைக்காத புகைப்படங்களுடனும் விளக்கப்படங்களுடனும் இருப்பதைக் காணும் பொழுது ஆங்கிலம் அறியாமை அறிவுக்குள் அறைந்தது! மொத்தம் நான்கு தொகுதிகள்; தொகுதியொன்றின் விலை 350 ரூபாய், கிட்டத்தட்ட 500 பக்கங்களாவது இருக்கும். கொஞ்சம் அப்படியே மேய்ந்ததில் ஆச்சரியமாக Van Gogh and Gauguin  எனும் புகைப்பட புத்தகம் கிடைத்தது. வில்லியம் வான்கா மற்றும் அவரது தற்காலிக நண்பர் பால் காகினது ஓவியங்கள் குறித்தான பார்வைகள் ஓவியங்களுடன்… வான்காவின் முக்கிய ஓவியங்களை எடுத்து அதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். பின்பக்கத்தில் விலை ரூ. 175.00 என்றிருந்ததும் வாங்கிக் கொள்ளலாம் என நினைத்தேன், ஆனால் விற்பனையாளர் அதைத் திருத்திவிட்டு 350 என்று சொன்னதால் புத்தகம் பழைய இடத்திற்கே பரிதாபத்துடன் அமர்ந்து விட்டது! இதைப் போன்றே Impressionism (ரூ.450) Claude Monet (250) மற்றும் Mastering the art of Oils Acrylic and Gouache (ரூ.450) போன்றவை அதனதன் புத்தக அளவிலும் தரத்திலும் மலிவானவையே!!  விற்பனையாளரிடம் கொஞ்சம் பேசினால் இன்னும் மலிவாகக் கிடைக்கும் என்பது என் எண்ணம். Vangogh, Impress.., Mastering the art ஆகிய மூன்று புத்தகங்களையும் 500 ரூபாய்க்கு கேட்கலாம் என்றிருக்கிறேன்!

இன்னும் ஒரு புத்தக அகத்தையே முடிக்காத சூழ்நிலையில் மீதமிருக்கும் நாட்களில் அறுபதிற்கும் மேற்பட்ட அகங்களை எப்படி களித்துணர்வது?

Comments

King Viswa said…
நண்பரே,
பதிவுக்கு நன்றி. திருப்பூர் புத்தக கண்காட்சிக்கு வரவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் நேரமின்மை காரணமாக வர இயலவில்லை. அதே சமயம் பபாசி செய்கிற வேலையால் இரண்டு புத்தக கண்காட்சிகள் ஒரே நேரத்தில் தமிழகத்தில் நடைபெறுகிறது. பதிப்பாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் இது ஒரு தடங்களே.

//எதிர்பார்த்திருந்த “காமிக்ஸ்”களும் அங்கே இல்லை// சென்ற பதிவில் சொன்ன காரணமும், சென்னை புத்தக கண்காட்சி என்கிற ஒரு அசுரத்தனமான கண்காட்சி முடிந்த ஒரே வாரத்தில் ஆரம்பிக்கிற காரணத்தினாலும் திருப்பூருக்கு காமிக்ஸ் புத்தகங்கள் வரவில்லை.

தங்களின் பதிவுகளை தொடருங்கள்.
King Viswa said…
முடிந்தால் அடுத்த முறை சில போட்டோக்களையும் பதிவேற்றுங்களேன்?
ஒருவழியாக மறுபடியும் எழுத ஆரம்பித்த பிரபல பதிவருக்கு அநேக நமஸ்காரங்கள்.

முன்னோடத்துக்கே ஒரு பதிவா ?? கலக்குங்கள்.....வெகு விரைவில் புகைப்படங்களையும் அப்லோட் செய்ய வேண்டும்..

இது பபாசி நடத்துறதானா ? 60 ஸ்டால் கம்மியா இருக்கே....
ஆதவா said…
நண்பர் கிங் விஸ்வாவுக்கு நன்றி,
அடுத்தமுறை புகைப்படங்களை வலைப்பதிவேற்றுகிறேன்....

@கொழந்த,
”பிற”பலமில்லா”த பதிவர்களோடு நானும் ஒருவன்!!! என்னைப் போயி......
60 சொச்சம் தான்.... சென்னை அளவுக்கெல்லாம் இங்கே கூட்டம் வராது,
King Viswa said…
// . சென்னை அளவுக்கெல்லாம் இங்கே கூட்டம் வராது//

நண்பரே, இந்த ஒரு விஷயம்தான் என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

என்னுடைய கடந்த பத்து வருட திருப்பூர் பயணங்களில் எல்லாமே புத்தக கடைகளை தேடிப்பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இரண்டு பழைய புத்தக கடைகளை தவிர வேறெதுவுமே இல்லை. ஆனால் வாசிக்கும் பழக்கமும், புத்தகங்களை கலெக்ட் செய்யும் பழக்கமும் கொண்ட திருப்பூர்வாசிகள் பலரை சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறேன். அவர்கள் தவிர, மற்ற திருப்பூர் மக்களும், பெரும் வணிகர்களும், முதலாளிகளும்கூட புத்தகப்பிரியர்களே. இப்படி இருக்க, அங்கே லேண்ட்மார்க் போன்றுகூட இல்லாமல் ஒரு சிறிய அளவிலான புத்தக கடைகள் கூட இல்லாதது ஆச்சர்யமே.

இப்படி இருந்தால் அங்கு கண்டிப்பாக புத்தக கண்காட்சியில் விற்பனை கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு விற்பனை விவரங்களை கேட்டறிந்த பின்னர் அங்கு நடைபெறும் புத்தக கண்காட்சியில் பங்கெடுப்பது பற்றிய கேள்விகள் எழ ஆரம்பித்தன. போதாக்குறைக்கு, லயன்ஸ் கிளப் நடத்தும் புத்தக கண்காட்சி கும்பகோணத்தில் வேறு இதே காலகட்டத்தில் நடைபெறவுள்ளது.

இந்த காரணங்களாலும் இங்கே காமிக்ஸ் புத்தகங்கள் வரவில்லை
ஆதவா said…
அன்பு கிங் விஸ்வா,
இதே பிரச்சனைதான் எனக்கும்,
ஒரு புதிய புத்தகம் வாங்கவேண்டுமென்றால் இணையம் மூலமாகவோ அல்லது தபால் மூலமாக நேரடியாகவோ மட்டுமே வாங்க முடியும் எனும் நிலைமையில் இருக்கிறோம் என்பது வேதனைதான். ஓரிரு புத்தக அங்காடிகளில் நாம் கேட்க விரும்பும் தலைப்புகள் கிடைப்பதில்லை. இம்முறைதான் சமூக வலைதளங்களின் வழியே புத்தகத் திருவிழாவை முன்னெடுத்துச் செல்லலாம் என்ற எண்ணமே வந்திருக்கிறது. திருப்பூரில் புத்தக வாசிப்பாளர்கள் என்னைக் கேட்டால் குறைவு என்றுதான் சொல்வேன். பார்க்கும் ஒருசிலரும் மிகச்சிறிய வட்டத்திற்குள்ளேயே அமிழ்ந்துவிடுகிறார்கள்.

///இந்த காரணங்களாலும் இங்கே காமிக்ஸ் புத்தகங்கள் வரவில்லை///

ஒருவகையில் இந்த காரணத்தைத்தான் எதிர்பார்த்தேன். சென்றவருட நிலவரம் அப்படி! இருப்பினும் மனதிற்குள் ஒருதுளியாவது சொல்லிக் கொண்டேயிருக்கிறது... காமிக்ஸ் புத்தக அகம் ஒன்று வந்திருக்கலாம்....

அன்புடன்
ஆதவா.
Hope u have used Flipkart...
அனுபவ பகிர்வு ! தொடருங்கள் ! நன்றி நண்பரே !