Transformers 3 : Dark of the Moon - விமர்சனம்
Direction | Michael Bay |
Starring | Shia LaBeouf, Josh Duhamel, John Turturro, Tyrese Gibson, Rosie Huntington-Whiteley, Patrick Dempsey, Kevin Dunn, Julie White, John Malkovich, Frances McDormand |
Cinematography | Amir Mokri |
Year | 2011 |
Language | English |
Genre | Action, Sci-fi |
சில தமிழ் படங்களைப் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியேறும்பொழுது சிலர் “நல்லா கதை விடறானுங்க” என்று உச்சுவார்கள். அந்த படத்தில் பல ஓட்டைகளும், விபரங்களில்லாத மேலோட்டமான சங்கதிகளும் நிறையவே இருக்கும். ஆனால் அதே சமயம் அந்த சிலர் “இங்கிலிஷ் காரனுங்க எப்படி எடுக்கிறானுங்க பாருங்க… நம்மளாலெல்லாம் முடியாதுப்பா” என்று சலித்துவிடுவார்கள். ஆனால் ஹாலிவுட்டில் வெறும் பணம் மட்டுமே படமல்ல. கூடுமானவரையிலும் லாஜிக் ஓட்டைகள் தவிர்த்து, கொஞ்சம் விவரங்கள் சேகரித்து ஒரு புனைகதையை உண்மையாகவே நடந்தது போன்ற தோற்றத்தைத் தந்துவிடுகிறார்கள். ஆகமொத்தம் நமக்கும் அவர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், நாம் ஏனோதானோவென கதை விடுகிறோம், அவர்கள் கொஞ்சம் நம்பும்படியாக கதை விடுகிறார்கள் அவ்வளவே.. அமெரிக்கர்கள் வாழ்வியல் நிலைநிறுத்தத்தையும், இனப்போராட்டத்தையும் மையமாகக் கொண்டு படங்கள் எடுக்கிறார்கள். ஹாரிபாட்டர், எக்ஸ் மென் போன்றவைகள் தமக்குள் ஏற்படும் இனத்தை நிலைநிறுத்தும் பொருட்டு கதைகள் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு இனப்போராட்டத்திற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அமெரிக்கர்கள் சம்பந்தப்படுகிறார்கள். அவர்கள் உலகையும் ஒரு இனத்தையும் காப்பாற்ற வந்தவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்.
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் எனும் உருமாறிகள் சைபர்ட்ரான் எனும் வெளிகிரகத்தைச் சார்ந்தவர்கள். அவர்களில் டிசெப்டிகான், பிரைம் என இரண்டு இனத்தவர்கள் இருக்கிறார்கள். டிசெப்டிகானைச் சார்ந்தவர்களின் தலைவன் மெகட்ரான், பிரைம் இனத்தைச் சார்ந்தவர்களின் தலைவன் ஆப்டிமஸ் பிரைம். இவர்களுக்குள் நிகழும் போரினாலும் விளைவுகளினாலும் பூமி சம்பந்தப்படுவதாக அல்லது பாதுகாப்பிடமாக முந்தைய படங்கள் காட்டுகின்றன. மற்ற படங்களைப் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும். டிசெப்டிகான்கள் தங்களுக்காக ஒரு உலகை நிர்மாணித்து அதில் வாழ நினைக்கிறார்கள். ப்ரைம்களோ உயிர் வாழத் தகுதியுள்ள கிரகத்தை பாதுகாக்க அல்லது அழிக்காமலிருக்க நினைப்பவர்கள்.
1961ல் சைபர்ட்ரானில் போர் நிகழ்கிறது. விண்வெளிப்பாலம் அமைக்கும் தூண்களை ஒரு விண்வெளிக்கப்பலில் சுமந்துகொண்டு அக்கிரகத்தை விட்டு வெளியேறுகிறது செண்டினல் பிரைம் எனும் உருமாறி. ஆனால் டிசெப்டிகான்களின் குண்டுகளால் தாக்குதலுற்று சேதமடைய அந்த விண்வெளிக்கப்பல் நிலவில் வந்து விழுகிறது. நிலவின் மறுபக்கம் பூமியிலிருந்து பார்க்கமுடியாத ஒரு இருண்ட பக்கமாகவே இருந்து வருகிறது. ஏதோ ஒரு வெளிக்கிரக கப்பலொன்று நிலவில் விழுந்துவிட்டதாக உணர்ந்த அமெரிக்க விண்வெளித்துறையான நாசா அங்கே முதன்முறையாக மனிதனை அனுப்பி சோதனையிட முயலுகிறது. நிலவில் முதன்முதலாகப் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும் அந்த கப்பலை சோதனையிடுகிறார்கள். ஆனால் அளவில் மிகப்பெரியதாக இருப்பதாலும் தேவையான ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதாலும் சோதனையிடாமல் வெறும் பார்வையை மட்டும் பதித்துவிட்டு திரும்பிவிடுகிறார்கள்.
இந்நிகழ்வு நிகழ்ந்து ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஆப்டிமஸ் பிரைமும் அவனது கூட்டாளிகளும் ரஷ்யாவிலுள்ள செர்நோபில் எனும் அணு உலை விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சோதனையிட அழைக்கப்படுகிறார்கள். அங்கே நிலவின் மறுபக்கத்தில் விழுந்த விண்வெளிக்கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட கருவியொன்றின் மூலம் ஆற்றல் பெறப்பட்டதையும் அதனால் உலை வெடித்துப் போனதையும் தெரிந்து கொள்கிறார்கள். நிலவில் விண்வெளிக்கப்பல் விழுந்த ரகசியம் ஒருசிலருக்கு மட்டுமே தெரியும் என்பதாலும் அமெரிக்கா ரகசியத்தைக் கசியவிடாமல் வைத்திருந்ததாலும் ஆப்டிமஸ் பிரைம் அந்த விண்வெளிக்கப்பலையும் அதிலிருக்கும் தூண்களையும் ஓட்டிவந்த உருமாறி செண்டினல் பிரைமையும் மீட்க செல்கிறார்கள். செண்டினல் பிரைமுடன் ஒரு முக்கிய தூணுடன் சேர்ந்து ஐந்து தூண்களையும் எடுத்து வருகிறார்கள். நாசா ஆராய்ச்சி மையத்தில் வைத்து செண்டினல் பிரைமுக்கு உயிர் கொடுக்கிறது ஆப்டிமஸ் பிரைம்.
வேலை தேடிக் கொண்டிருக்கும் கதாநாயகன் சாமுக்கு நிலவில் கப்பல் விழுந்த ரகசியம் தெரியவருகிறது. அதனுடன் விண்வெளிப் பாலம் அமைக்கப் போகும் தூண் பற்றியும், அதனால் மனித குலத்திற்கு ஏற்படப்போகும் பிரச்சனை பற்றியும் தெரிந்து கொள்கிறான். தவிர செண்டினல் பிரைம் டிசெப்டிகானின் தலைவனான மெகட்ரானின் உதவியுடன் அவர்களது கிரகமான சைபர்ட்ரானை பூமியிலேயே அமைப்பது குறித்தும் தெரியவர, இந்த விஷயத்தை நாசா ஆராய்வளர்களிடம் கூற முற்படுகையில் செண்டினலும் மெகட்ரானும் இணைந்து இல்லினாய்ஸ் நகரை அழித்து வேலி போட ஆரம்பிக்கிறார்கள். இதற்குத் துணையாக சாமின் காதலியின் முதலாளி டைலன் இருக்கிறார். ஒருகட்டத்தில் சாமின் காதலியைக் கடத்திச் செல்ல, சாம் தனது காதலியைக் காப்பாற்ற இல்லினாய்ஸ் செல்லுகிறார். இன்னொரு பக்கம் மெகட்ரான் அமெரிக்க அரசிடம் பிரைம்களான ஆட்டோபாட்களை வெளியேற்ற மிரட்டுகிறது. அதன்படி ஆட்டோபாட்கள் ஒரு ராக்கெட்டில் வைத்து அனுப்பப் படுகின்றனர். டிசெப்டிகானின் திட்டப்படி அந்த ராக்கெட் அழிக்கப்பட்டு ஆட்டோபாட்கள் அனைத்தும் ஆப்டிமஸ் பிரைம் உட்பட அழிகிறார்கள்.
மெகட்ரானும் செண்டினல் பிரைமும் விண்வெளிப் பாலம் அமைக்க பூமியெங்கும் தூண்களை நிறுவுகிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றியானதா? ஆப்டிமஸ் பிரைம் போன்ற உருமாறிகள் இல்லாத நிலையில் சாம் எப்படி சமாளித்து தன் காதலியையும் உலகையும் காப்பாற்றப் போகிறார் என்பது மீதிக் கதை!!
யப்பா… டைப் அடிக்கவே எனக்குக் குழப்பமாக இருக்கும் பொழுது சத்தியமாக இந்நேரம் இந்த வரிகளை நீங்கள் படிப்பீர்களா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது. முந்தைய இரண்டு படங்கள் பார்க்காதவர்கள் இப்படத்தைப் பார்க்க நேர்ந்தால் யார் வில்லன், யார் ஹீரோ என்றே தெரியாமல் ஙே என்று முழித்துக் கொண்டுதான் பார்க்கவேண்டியிருக்கும். இந்த கோஷ்டிகளுக்கு அடையாளம் தெரிய ஆட்டோபாட்கள் பல நிறங்களிலும் டிசெப்டிகான்கள் பழுப்பு நிறத்திலும் வடிவமைக்கப்பட்டிருப்பதால் கொஞ்சமேனும் யாருடன் யார் சண்டையிடுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. படம் முழுக்க எதாவது ஒன்று உருமாறிக் கொண்டேயிருப்பதாலும் பழகிய திரைக்கதை என்பதாலும் ஒரு சலிப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு பிரம்மாண்டத்தின் ஆச்சரியம் துளியுமில்லாதது இப்படத்தில் பெரிய குறையாகக் கருதுகிறேன். தவிர ஹாலிவுட் கிளிஷேக்கலான கதாநாயகனுக்கு எந்த காயமுமில்லாமல் தப்பிப்பது, காதலியைக் காப்பாற்ற எந்த சூழ்நிலையிலும் தைரியமாக கதாநாயகன் முடிவெடுப்பது, மனித இனத்துரோகியாக வில்லன், இறுதியில் மனித இனம் காப்பாற்றப்படுவது போன்றவைகள் இப்படத்திலும் உண்டு. இனப்போராட்டத்தை மறைமுகமாக சொல்லும் படமாக இதை சேர்க்க முடியாவிட்டாலும் மேலோட்டமாக அமெரிக்க இனம் மற்ற இனத்தைக் காட்டிலும் உயர்ந்தது போன்றோ அல்லது அதுவே ஆள்வது போன்றோதான் படம் காண்பிப்பதாகத் தெரிகிறது.
ஆட்டோபாட்கள் காரிலிருந்து உருமாறுவதும், செர்நோபில் மற்றும் இல்லினாய்ஸ் சண்டை காட்சிகள் குறிப்பிடத்தகுந்தவை. சைபர்ட்ரான் கிரகத்தின் உட்பகுதியில் நிகழும் போரும் அதன் வடிவமைப்பும் கற்பனையின் உச்சம். பொதுவாகவே இம்மாதிரியான படங்களில் ஒளிப்பதிவும் ஒலிக்கலவையும் மிக அருமையாகவே இருக்கும். தவிர கணிணியில் வரையப்படவேண்டியவற்றை மனதில் நினைத்து ஒளிப்பதிவு செய்வது ஒரு சவாலான விஷயமும் கூட.. எனினும் படத்தின் இசை என்னை சுத்தமாகக் கவரவேயில்லை. ஒரு சராசரி இந்திய மசாலா திரைப்படத்தின் இசையை ஒத்திருந்தது. படம் முழுக்க சப்தங்கள் இரைந்து கிடப்பதால் இசைக்கான உண்மையான வேலை இல்லவே இல்லை!
சாமின் காதலியாக முந்தைய படத்தில் வந்த மெகன் ஃபாக்ஸை நீக்கியது பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. நம் ஊர் சீரியலில் இவருக்குப் பதில் இவர் வருவார் என்று காண்பிப்பது போல ஒரு ஃப்ளாஷ்பேக் வைத்து காண்பித்தது படத்துடன் ஒட்டாமலும் முந்தைய படங்களில் மெகன் கொடுத்த அழுத்தம் இதில் பதியாமலும் இவர்களிருவரின் காதல் சுத்தமாக எடுபடவேயில்லை. ஒரு மொன்னைத்தனமான காதலால் சாம் இவரைக் காப்பாற்றும் மையக் கதை தவிடுபொடியாகிவிடுகிறது. வெறும் எலக்ட்ரானிக் யுத்தங்களை ரசிப்பதற்காக வேண்டுமானால் ஓகே/// ஆனால் ஒரு அழுத்தமில்லாமல் சலிப்புத்தான் மிகுதியாகிறது.
சமீப காலங்களில் வரலாற்று நிகழ்வுடன் புனைகதையை இணைத்து (பொன்னியின் செல்வனைப் போல) படமெடுப்பது சகஜமாகி வருகிறது. நிலவில் அமெரிக்காவின் முதல் மனிதப் பயணமான அப்போலோ 11 ஐயும், செர்நோபில் அணு உலைக்குக் காரணம் எது என்பதையும் இணைத்து திரைக்கதை உருவாக்கியிருக்கிறார்கள். பார்ப்பவர்கள் நம்புப்படியாக அமைந்திருக்கிறது.
ஒரு எலக்ட்ரானிக்ஸ் மனிதர்களின் இனப்போராட்டம் அது வடிவமைக்கப்பட்டிருக்கும் கிராஃபிக்ஸுக்காகவும், மற்றும் முப்பரிமாண பார்வைக்காவும் ஒருமுறை பார்க்கலாம்…
(கார்ஸ் 2 முன்னோட்டம் திரையிடுவார்கள் என்று நினைத்து ஏமாந்தேன்… அநேகமாக அடுத்தவாரம் பார்த்துவிடுவேனென்று நினைக்கிறேன்!!)
Comments
சைத்தான் நல்ல ப்ரிண்ட் கிடிஅச்ச லிங்க அனுப்புங்க புண்ணியமா போகும்
சைத்தானை நானும் தேடிட்டு இருக்கேன்.
கார்ஸ் பாருங்க தலைவா அருமையாக உள்ளது.
Cars 2 3D - கார்ஸ் இரண்டாம் பாகம்