இறந்து போகாத கலைஞன்

4351-the-essential-michael-jackson

இசை!!

மடல்களின் வழியே பறைகளின் மீது மோதி உட்புகுந்து தெறித்து நரம்புகளின் நுண் துளைகளில் நிரம்பி நம்மை மறக்கச் செய்யும் வித்தையை இசையன்றி வேறெந்த கலையாலும் செய்யமுடியாது. Without music, life would be an error. என்றார் நீட்ஷே. இசைக்கு இனம், மொழி, தேசம், வயது என்று எந்த வட்டமும் கிடையாது. ஆனால் இசைக்கு பல பரிமாணங்கள் உண்டு!! அதனால் நம்மை அழவைக்கவும் முடியும், நம்மை சந்தோஷப்படுத்தவும் முடியும்... “இசை, தேவதைகள் பேசும் மொழி” என்கிறார்கள் அறிஞர்கள்!! அவர்களில் ஒருத்தி நம் காதில் தேனைப் போல பாய்கிறாள்! இன்னொருத்தி கண்களின் வழியே நீராய் வழிகிறாள்!!

இதென்ன திடீரென்று இசையைப் பற்றி பேசுகிறேன் என்று பார்க்கிறீர்களா? இன்று இசைச் சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்ஸனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம். இசையுலகில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திச் சென்ற கடவுள் என்றே சொல்லலாம். எனக்கு மட்டுமல்ல, எல்லா ஆங்கில இசை விரும்பிகளுக்கும் இவரே நுழைவாயிலாக இருந்தார் என்றால் அது மிகையல்ல. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னர் எனக்கு மைக்கேலின் இசைத் தொகுப்பு கிடைத்தது. அதுதான் முதல் அறிமுகம் என்று சொல்லலாம் என்றாலும் மைக்கேல் ஜாக்ஸனைப் பற்றி எத்தனையாவது வயதில் அறிந்து கொண்டேன் என்பது தெரியாது. ஆங்கில இசைப்பாடல்கள் கேட்கும் வழக்கம் இல்லையென்றாலும் மைக்கேல் ஜாக்ஸன் எனும் பெயர்தான் கேட்கும்படி உந்தியது. ஆங்கில இசையை எல்லோராலும் விரும்பி அனுபவிக்க முதலில் முடியாது. அதற்குப் பழகவேண்டும். மாற்று இசை விரும்பிகள் எளிதில் நுழைந்துவிடுவார்கள் என்றாலும் சிறிதும் பழக்கமில்லாத ஒருவரும் மைக்கேல் ஜாக்ஸனின் இசையில் அவர் குரலில் மயங்கிப் போவது எப்படி என்று யாராலும் சொல்லிவிடமுடியாது. இத்தனைக்கும்  மைக்கேலின் பாடலைக் கேட்டறியாதவர்கள் கூட அவரது ரசிகர்களாக இருப்பதையெல்லாம் பார்த்திருக்கிறேன். அப்படியென்ன அவரது பாடல்களிலும் குரலிலும் இருந்தது?? மைக்கேலின் குரல்வளத்தை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய இசை விமர்சகன் கிடையாது. இசை விமர்சனமும் செய்தது கிடையாது. இருப்பினும் அவரது குரலில் ஒரு துள்ளல் இருக்கும். இருபாலரின் குரல் சேர்ந்த கவர்ச்சி இருக்கும். ஆனால் நம் மக்கள் மைக்கேலின் குரலைவிடவும் அவரது நடனத்தில்தான் விழுந்தார்கள் என்பதுதான் உண்மை!

திரில்லர் வந்த சமயத்தில் அது இசைப்பிரியர்களின் தேசியகீதமாக இருந்தது. அப்பொழுதெல்லாம் நான் பிறக்கவேயில்லை (என் பெற்றோருக்கே திருமணம் நிச்சயிக்கவில்லை) எம்.டிவி வளர்ந்ததே ஜாக்ஸனின் திரில்லர் ஆல்பம் மூலம்தான் என்று சொல்வார்கள். திரில்லர் ஆல்பத்தில் அவரது மாஸ்டர் பீஸான திரில்லர் பாடலைப் பார்க்காதவர்களே இன்று இருக்கமாட்டார்கள். மிக வித்தியாசமான கதைசொல்லியாக அப்பாடல் இருக்கும். ஒரு சுருள்வடிவ வட்டத்தில் (ஸ்பைரல்) திரைக்கதை சுற்றிக் கொண்டிருக்கும். மைக்கேலும் அவரது காதலியும் ஒரு திரையரங்கில் சினிமா பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த சினிமாவில் காதலனாக மைக்கேல் ஜாக்ஸன் வருவார். இருவரும் காதலித்துக் கொண்டிருக்கும் ஒரு இரவில் முழுநிலவின் ஒளியில் திடீரென நரிபோல மாறிவிடுவார். காதலியைக் கொல்வதாக காட்சி இருக்கும். அதைக் கண்டு பயப்படும் மைக்கேலின் காதலி சினிமா அரங்கை விட்டு வெளியேறுவாள். அவளை மகிழ்விக்க ஜாக்ஸன் பாடுவார்... எனக்குப் பிடித்ததே அப்பாடலில் ஜாக்ஸன் காதலோடு பாடிவரும் இடங்கள்தான். அந்த நீக்ரோ பெண்ணிடம் காதல் நிரம்பி வழியும். ஆனால் திடீரென சுடுகாட்டிலிருந்து பிணங்கள் எழுந்து காதலியைச் சுற்றிவர, திடீரென மைக்கேலும் பேயாக மாறி ஆட்டம் போடுவார்... அச்சமயத்தில் இரண்டு நிமிடம் நடனம் தான்... அந்த இரண்டு நிமிட நடனமே மைக்கேலின் முழுத்திறமையையும் கொட்டி எடுத்ததைப் போல இருக்கும். பேய்கள் அவரோடு ஒத்துழைத்து ஆடும். பயந்து போய் காதலி அவளது வீட்டுக்குப் போனால் அங்கேயும் பேய்கள் வீட்டை இடித்துக்கொண்டு வந்து தலையில் கையை வைக்கும் பொழுது திடீரென விழித்தால் மைக்கேல் ஜாக்ஸன் எப்பொழுதும்போல நின்றுகொண்டிருப்பார்.. ”பயந்துட்டியா” என்று கேட்டுக் கொண்டே நம்மைப் பார்ப்பார்... அவரது கண்கள் பேயுருவத்திற்கு மாறும்!!

இதில் சுருள்வட்ட திரைக்கதை என்று ஏன் சொன்னேனெனில் உண்மையில் மைக்கேல் ஜாக்ஸன் பேயாக இருக்கிறாரா அல்லது கனவா என்றே இறுதிவரைக்கும் தெரியாது. திரில்லர் பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும் மயிர்கூச்செறியும். தானாகவே மனம் துள்ளிடும்... பாடல் அப்படி!!

என்றாலும் மைக்கேலின் திரில்லரை விட எனக்கு மிகவும் பிடித்தது Earth song, சுற்றுச்சூழல் மாசுகேட்டையும், மனிதனின் வக்கிரங்கள், போர்குற்றம் போன்றவற்றையும் எதிர்த்து பாடும் பாடல்... மிக அற்புதமான பாடல் அது.. மெலடி போல ஆரம்பித்து ராக் இசைபோல ஹைபிட்சில் பாடுவார். பாடலின் ஆரம்பத்தில் வெட்டி விழும் மரங்கள், தந்தம் இழந்த யானை, போரில் மரித்த மக்கள் என உலக அரசியலின் வக்கிரங்களைக் காண்பித்துவிட்டு மெல்ல மெல்ல அதனை பழைய நிலைக்குக் கொண்டுவருவதாக முடியும்!! அப்பாடலில் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஆச்சரியம் மிகுந்திருக்கும், ஒரு காட்சியில் மரத்தின் இடையே காமராவை வைத்து ரிவர்ஸில், விழுந்த மரம் மீண்டும் இணைவதாகக் காட்டியிருப்பார்கள், அதேபோல யானையின் தந்தம் முளைத்து யானை பிழைப்பது போல.... இன்று அதெல்லாம் பெரிய விஷயமில்லை என்றாலும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு பெரிய விசயம்தான்!! ஒரு பாடலுக்காக அவர் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதை இப்பாடலில் தெரிந்து கொள்ளலாம்!!

ஜாக்ஸன் என்றாலே நடனம் தான்.. அதிலும் Toe top, Moon walk போன்றவை, குறிப்பாக மூன் வாக்கை ஜாக்ஸனுக்கு முன்பே அறிமுகப்படுத்தியிருந்தாலும் ஜாக்ஸனின் பில்லி ஜீனில் (Billie Jean) அது மிகவும் பிரபலமானது. பில்லி ஜீன் மேடைப் பாடலாகத்தான் முதலில் பார்த்தேன்.. அப்பொழுதெல்லாம் மூன் வாக்கும் தெரியாது, சன் வாக்கும் தெரியாது, ஆனால் நடப்பதைப் போலவே பின்னே கால்களை இழுத்துச் செல்வது ஒரு பெரிய ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. குறிப்பிட்ட அக்காட்சியை மட்டும் பலமுறை ஒளிபரப்பி ரசித்தேன்.. என்னைப் போல எத்தனைபேர் ரசித்தார்களோ?

Beat it, பாடலின் காட்சிகள் இன்னமும் மனதில் இருக்கிறது. மற்றும் The way you make me feel. தமிழ் சினிமாவில் நிறையமுறை காப்பியடித்த பாடல்!! இவரது பாடலில் வெறும் நடனம் மட்டும் இருப்பதில்லை. ஆரம்பம் முடிவு முதற்கொண்டு ஒரு மினி சினிமாவே காணலாம். Beat it இல் எதிரெதிர் கோஷ்டிகள் இருவரின் அறிமுகத்தோடு தொடங்கும் பாடல் அவர்களது சண்டை வரை நீளும், பாடல் பாடிக் கொண்டே ஒரு விடுதியிலிருந்து வரும் மைக்கேல் இருவரையும் பிரித்து சேர்த்துவைப்பார்... அதைப் போலவே The way you make me feel ஒரு பெண்ணை சமாதானப்படுத்திச் செல்லும் தெருப்பாடகன், Remember the time (எட்டி முர்ஃபியுடன்) ஒரு அருமையான மினிசினிமா... பண்டைய எகிப்திய அரசிக்கு பொழுதுபோக்கு எதுவுமில்லாததால் அரசன் பொழுதுபோக்கிகளை  (entertainer) அழைத்து வித்தை காட்டச் சொல்லுவான். ஒவ்வொருவராகக் காட்ட மைக்கேலின் வித்தையில் மயங்கும் அரசி மைக்கேலை முத்தமிட, அரசனுக்குக் கோபம் வந்து கொல்லச் சொல்லுவான். அவர்களிடமிருந்து தப்பி அரசியைக் கைப்பிடிப்பதே அப்பாடலின் கதை! பாடலின் வரிகள் அரசியை மயக்குவதாக இருக்கும் (Do you remember the time, when we fall in love...) Black or White மார்ஃபிங் என்றால் என்ன என்பவர்களுக்கு இப்பாடலைப் போட்டு காண்பிக்கலாம்.. (ரோஜாப்பாக்கு விளம்பரம் இதை வைத்தே எடுக்கப்பட்டது)

They don't care about us பாடலை கேட்காதவர்கள் இருக்க முடியாது. ஒரு கிங் ஆஃப் பாப், மக்கள் மத்தியில் பாடினால் எப்படியிருக்கும்?? ஒரு டாகுமெண்ட்ரி + டான்ஸ் ஆல்பம் போல இருக்கும். அதில் ஜாக்ஸனின் நடனம் மட்டுமல்ல, ஜாக்ஸன் அணிந்திருக்கும் பனியன் டிசைன் முதற்கொண்டு தேடியலைந்தவன் நான். You are not alone, ஒரு சுகமான மெலடி.... தவிர இப்பாடல் ஒரு கின்னஸ் சாதனையும் கூட. பில்போர்ட் 100 கேள்விப்பட்டிருப்பீர்கள், டாப் டென் போல இசைக்கு வரிசைப்படுத்தும் நிறுவனம் அது. அதில் எந்த இடமும் பிடிக்காமல் நேரடியாக முதலிடம் பிடித்த ஒரே பாடல் இதுதான்!!! மைக்கேலும் ஒரு பெண்ணும் ஆடையின்றி வருவார்கள், எங்கள் வீட்டில் பார்க்க அனுமதிக்கப்பட்டது... அதன் இசைக்காகவே! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், தங்கை ஜேனட்டுடன் ஸ்க்ரீம்... (ஒருமாதிரி விண்வெளிக்கூடம் போன்ற செட்டிங்..) மிக அருமையான கிளப் சாங்கான Smooth Criminal, மிக அழகான மெல்லிய, வேகம் குறைந்த காட்சிகளுடனான Stranger in moscow, ஆங்... மறந்துவிட்டேன்.. Man in the mirror ஒரு குறிப்பிட்டு சொல்லவேண்டிய பாடல்!!

ஜாக்ஸனைப் பற்றி சிலாகிப்பதென்றால் பேசிக் கொண்டேயிருக்கலாம்... இசைக்கடவுள் என்று வர்ணிப்பதில் மிகையில்லை என்றே தோணுகிறது. தமது வாழ்நாளில் வெள்ளையராக இருக்கவேண்டுமென்ற பேராசையும் ஆடம்பர செலவுகளும் அவரை மன,பொருளாதார ரீதியாக இறக்கினாலும் அவரது ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவேயில்லை என்பது ஆச்சரியம்!! இத்தனைக்கும் ஜாக்ஸனின் Dangerous க்குப் பிறகு குறிப்பிட்டு சொல்லும்படியான ஆல்பம் எதுவும் வரவில்லை, (invinsible வந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் cry என்ற பாடலை மட்டுமே கேட்டிருக்கிறேன்) பாலியல் புகார்கள், ஒருசமயம் தனது குழந்தையை ஜன்னலிலிருந்து கீழே போடுவது போல செய்தது, போதை மருந்து உபயோகித்தது போன்ற தனிமனித ஒழுக்கம் அவரிடம் குறைவாகவே இருந்தது. ஜாக்ஸன் இறந்தபிறகும் சர்ச்சைகள் தீர்ந்தபாடில்லை...  ஜாக்ஸனைப் பற்றி அவதூறு பேசிய, பாலியல் வன்முறைக்கு ஆளானவரிடம் கேட்டபொழுது “ பணத்திற்காக ஜாக்ஸன் மீது பழியைப் போடச்சொன்னார்கள்” என்றார்... ஒரு உயர்ந்த கலைஞனை நாம் இவ்வளவுதூரம் செருப்பால் அடித்திருக்கவேண்டாம்!!

கலைஞர்கள் இறப்பதுண்டு.. அவன் விட்டுச் சென்ற தடங்கள் என்றும் இறப்பதேயில்லை.. ஜாக்ஸன் ஒரு நூற்றாண்டுச் சின்னம் போன்றவர்.. இன்றுள்ளவர்கள் நாளை இருப்பார்களா, தெரியாது. ஆனால் என்றும் ஜாக்ஸனின் ரசிகர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள் . இசை என்ற வஸ்து உலகில் நீங்கும் பொழுது ஜாக்ஸனின் பெயரை உச்சரித்துவிட்டுதான் நீங்கும்... அவரது இரண்டாம் ஆண்டு நினைவுதினமான இன்று இக்கட்டுரை எழுதுவதில் பெருமகிழ்ச்சியடைவதோடு அவரது இசையை ரசித்த நான் அவருக்குச் செலுத்தும் மரியாதையாக நினைக்கிறேன். மேலும் நினைவூட்டி எழுதத் தூண்டிய தக்ஸ் aka ரங்கராஜன் அவர்களுக்கும் என் மனமாழ்ந்த நன்றி!!

Comments

Unknown said…
தனிப்பட்ட வாழ்கைக்கும் தொழிலுக்கும் சமந்தமில்லை என்பது என் கருத்து நண்பா!
மறக்க முடியாத கலைஞன் பற்றி சிறப்பான பதிவைத் தந்திருக்கிறீர்கள்.
Jayadev Das said…
நன்றி நண்பரே, ஜாக்சனைப் பற்றி தகவல்களை ரசித்துப் படித்தேன். எனக்கு Black or White ரொம்ப பிடிக்கும்."
அவர் மேல் தொடுக்கப்பட்ட வழக்குகள் கருப்பினத்தின் மீது கொண்ட பொறமையால்தான்.
செம நண்பரே...

லீயையும் ஜாக்சைனையும் பிடிக்காத ஒருஆளை இதுவரை நான் சந்தித்ததில்லை....எங்க ஆத்தா...(பாட்டி) கூட நா bad-bille jean போட்டு பாக்கும்போது..அந்த துள்ளல் இசையை ரசிச்சிருக்காங்க...

அவுரு ரொம்ப வெகுளித்தனமான ஆளு....மோசமான பிசினஸ்மேன்..சரிவர கணக்கு வழக்குகல கையாலாத் தெரியாது..பல டாகுமேண்டரில பல பேர் சொல்லி பாத்திருக்கேன்....
பதிவுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும்,

ஜாக்சனே தனது மானசீக குரு என்று புகழ்ந்த-மேடைகளில் பாடிக் கொண்டே நடனமாடும் - அட்டகாசமான உடைகளுடன் கலக்கிய Father of Soul: james brown கேட்டிருப்பீர்கள் என்று நினைகிறேன்....இல்லாவிட்டால் உடனே கேளுங்கள்....

addiction guaranteed....
இதில் அவரது வீடியோ பாடல்களை மட்டும் அதிகளவில் குறிப்பிட்டிருக்கிறீர்களே.....audio பாடல்களையும் சொல்லியிருந்தீர்கள் என்றால் கேக்காதவர்கள் கேக்க ஏதுவாக இருக்கும்.... நிறைய பேர் albumகளை முழுவதுமாக கேட்க தவறிவிடுகிறார்கள்.

//// invinsible வந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் cry என்ற பாடலை மட்டுமே கேட்டிருக்கிறேன் //

Invincible - நிச்சயம் U rock my world விடீயோ பாத்திருப்பீர்கள். Chris Tucker marlon Brando எல்லாம் நடித்த விடியோ..
அட்டகாசமான ஆறு பாட்டுகள் உள்ளன..த்ரில்லர் ஸ்டைலில் கூட ஒரு பாட்டு உண்டு.தவறாமல் கேளுங்கள்.
பிராண்டோ நெருங்கி பழகிய ஒருசில பேரில் ஜாக்சனும் ஒருவர்...

Popular Posts