வென்றது இந்தியா : சறுக்கியது சாம்பியன்

130487

நேற்றிரவு எங்கள் ஏரியா முழுக்க தீபாவளி போல காட்சியளித்தது. ஒரே வாணவேடிக்கை, பட்டாசு சத்தங்கள், ஜெய் ஹோ என்ற கரகோஷங்கள், தேர்தல் நேரத்திலும் கூட்டம் கூடி மகிழ்ச்சியை பகிர்ந்தளித்தது என எல்லாருடைய முகத்திலும் சந்தோஷக் களை… எல்லாவற்றிற்கும் காரணம்?

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா!!

மஞ்சள் உடைக்காரர்களைப் பார்த்தாலே மஞ்சள்காமாலை போல பதுங்கும் அணிகளுக்கு இப்பொழுது மென் இன் ப்ளூ வைப் பார்த்தால் ஃபுளூ வரும் என நினைக்கிறேன். நேற்றைய ஆட்டம் இந்தியாவின் மிகச்சிறப்பான ஆட்டங்களுல் ஒன்று.

டாஸில் ஆஸி ஜெயித்தபோதும் எனக்கு நம்பிக்கையில்லை. எப்படியும் இந்தியா வெல்லுவதற்கான வாய்ப்பு உண்டு என்றே நம்பினேன். வாட்சன், ஹடினின் சிறப்பான துவக்கம், மிக முக்கிய நேரங்களில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பாண்டிங், சிறப்பான கம்பனி கொடுத்த டேவிட் ஹஸி போன்றவர்களால் ஸ்கோர் 260 ஐத் தொட்டாலும் இந்தியாவின் பவுலிங்கால்தான் அவர்களால் 300 வரை எட்டவியலாமல் போனது. நேற்றைய நம் அணியின் ஃபீல்டிங் மிகச்சிறப்பாக என்று சொல்லமுடியாவிட்டாலும் எந்த தவறும் செய்யாமல் பொறுப்பாக செய்தார்கள். ஹர்பஜன், ரெய்னா, யுவ்ராஜ் போன்றவர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட்டார்கள். இவை ஏன் மற்ற போட்டிகளிலும் காண்பிக்கப்படுவதில்லை?

அஸ்வினின் வாட்சன் விக்கெட்டுதான் பெரியதிருப்பம் என்று சொல்வேன். ஏனெனில் வாட்சனும் ஹடினும் இணைந்து இன்னுமொரு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தால் நிச்சயம் முன்னூறெல்லாம் தாண்டியிருக்கும்!! இந்த டோர்ன்மெண்டிலேயே மிகச்சிறப்பான ஆல்ரவுண்டராக வலம் வருகிறார் யுவ்ராஜ்.. முக்கிய விக்கெட்டுகளை எடுப்பதோடு ஒவ்வொரு ஆட்டத்திற்கும் குறைந்தது 50 ரன்கள் எடுத்துவிடுகிறார்…. மேன் ஆஃப் த சீரியஸ் மிக அருகில் யுவ்ராஜ்!!! இந்த உலகக் கோப்பையில் 6 இன்னிங்க்ஸ் ஆடியுள்ள யுவராஜ் 1 சதம் நான்கு அரைசதங்கள் அடித்து 341 ரன்களைக் குவித்திருக்கிறார்.. பவுலிங்கிலும் 24 ஆவ்ரேஜுடன் 11 விக்கெட்டுகள்!!

வழக்கம்போல ஜாஹீரின் பவுலிங் மிகப்பிரமாதம்.. ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளராக ஸ்ரீநாத்துக்குப் பிறகு அடையாளம் காணப்பட்டிருக்கிறார்… நேற்று சச்சின் பவுலிங் போட்டதுதான் விஷேசமே… அவர் பவுலிங் செய்த ஓவர்களுக்குப் பிறகு ஒரு விக்கெட் விழுந்தது. மொத்தம் இரண்டே ஓவர், இரண்டே விக்கெட்…. சச்சினின் பவுலிங் ராசி என்பது இதுதானோ?

இந்தியாவின் துவக்கம் ஓரளவு பரவாயில்லை… ஆனால் எப்பவும் போல ஒரு மோசமான ஷார்ட் பாலுக்கு அவுட் ஆகித் தொலைந்தார் ஷேவாக். அது தேவையில்லாத ஷாட். சச்சினும் ஷேவாக்கும் நிதானமாக ஆடியது நிம்மதியை அளித்தது என்றாலும் ஷேவாக் இன்னும் நின்றிருக்கலாம். இது மிக முக்கிய மேட்ச் என்பதை ஷேவாக் நினைவில் வைத்திருக்கவில்லை…

சச்சின்!!! என்ன சொல்வது இந்த மனுஷனை?? 18000 ரன்கள் கடந்து சாதனை!!! இன்னும் 14000 ரன்கள் கூட யாரும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…. ஃபார்ம் போகாத ஒரே மனுஷன் இவர்தான். நேற்று 100 வது சதம் எட்டுவார் என்று மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 53 லேயே சென்றது ஏமாற்றம்தான். இருப்பினும் அவரது ஃபேவரைட்களான கவர் ட்ரைவ், மிட் விக்கெட், ஸ்கொயர் லெக் ஷாட்டுகளும் ( ஒரு ஊப்பர் கட்டும் ) தொடர்ந்தன!! பாகிஸ்தான் மேட்சில் அடிங்க சச்சின்!!!

வழக்கம் போல காம்பீரின் ஸ்டைலிஷான ஆட்டம்,கொஞ்ச நேரம் கம்பனி கொடுத்த கோலி, ஃபார்மில்லாத அதிர்ஷ்டகார தோனிக்குப் பிறகு ரெய்னாவும் யுவராஜும் ஆட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டனர். யுவ்ராஜ் இப்பொழுது சச்சினுக்கு அடுத்த மிகப்பெரும் நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறார்.  பதானுக்கு மாற்றாக வந்த ரெய்னாவின் ஆட்டம் குறிப்பிடத்தக்கது. பவர்ப்லே முதல் பாலில் சிக்ஸர் அடித்த ரெய்னா இனிவரும் ஆட்டங்களில் முக்கிய இடத்தை வகிப்பார்….

இப்பொழுது இந்திய அணி ஃபீல்டிங், பவுலிங் மற்றூம் மிடில் ஆர்டர்களில் நல்ல முன்னேற்றம் கண்டுவிட்டது. இன்னும் ஹர்பஜன், முனாப் படேல், தோனி ஆகியோர் முழுத்திறனும் வெளிப்படுத்தினால் இந்தியாவை ஜெயிப்பது மிகவும் கடினம்!! அதிக ரன்குவிப்பில் முதல் நான்கு இடங்களில் மூன்று பேர் இந்தியர்கள்!! (சச்சின் 379, ஷேவாக் 342, யுவ்ராஜ் 341)

130495ஆஸியின் பவுலிங்கைப் பொறுத்தவரை சுரத்தில்லாமல் போனது கவனித்த அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும். யுவராஜும் ரெய்னாவுமே அநாயசமாக அடித்தார்கள். அத்லெடிக் ஃபீல்டர்கள் என்றழைக்கப்படும் ஆஸியின் ஃபீல்டர்கள் நன்கு உழைத்தும் பயனில்லாமல் போனது. யுவ்ராஜின் பந்தில் ப்ரெட்லியின் கண்ணினோரம் அடிபட்டு இரத்தம் ஒழுகிய நிலையிலும் பாண்டேஜ் ஒட்டி ஆடிய அவர்களின் உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!! வெல்டன் ப்ரட் லீ!!!

பாண்டிங்கின் இறுதி உலகக் கோப்பைப் போட்டியில் அவர் மறக்கவியலாத ஆட்டம் ஆடினார்… அது ஒன்றுதான் ஆஸிக்கு ஆறுதல்!!!

பாகிஸ்தானோடு பார்ப்போம் நண்பர்களே!!

படங்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் உதவி : http://www.espncricinfo.com

Comments

Anonymous said…
உண்மையிலே கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது.
KARTHIK said…
நல்ல விமர்சனம் :-))