தூங்காநகரத்தில் தூங்கியவர்கள்

thoonga_nagaram

நேற்று Tangled 3D க்குத்தான் செல்லலாம் என்று நண்பர்கள் முடிவெடுத்தோம். ஆனால் தியேட்டருக்குச் சென்றபிறகுதான் தெரிந்தது படத்தைத் தூக்கிவிட்டார்கள் என்பது ; பதிலாக பிரியாமணி மார்பைக் காட்டிக் கொண்டு “உனக்கா எனக்கா” என்று அழைத்துக் கொண்டிருந்தாள். வெறுப்பில் “தூங்கா நகரம்” பார்ப்பது என்று முடிவானது. விதி வலியது!!!

ஒரு படம் எப்படியெல்லாம் எடுக்கக் கூடாது ; எப்படியெல்லாம் எடுக்கவேண்டும் என்று சினிமா நுணுக்கங்கள் அவ்வளவாக அறிந்திராத பார்வையாளனுக்கே தெரியும் பொழுது நிறைய கற்றுக் கொண்டு அனுபவங்களோடு பணி புரியும் இயக்குனர்களுக்கு ஏன் தெரிவதில்லை என்பது புரியாததாக இருக்கிறது. பொழுதுபோக்கு மற்றும் கலை ஆகிய இரண்டு பெரும் துறையடங்கிய காட்சி ஊடகத்தில் மக்களின் ரசனையை, முழுமையாகப் புரிந்து கொண்டு இவர்களால் ஏன் வெற்றிபெற முடிவதில்லை?

தூங்கா நகரத்தின் கதை என்ன ? நான்கு இளைஞர்கள். தற்செயலாக நண்பர்களாகிறார்கள். ஒரு சம்பவத்தின் தீவிரத்தால் தூங்காநகரமாகிய மதுரையை விட்டு அவரவர் ஊருக்குச் செல்ல, அச்சம்பவத்தின் விளைவுகள் அவர்களை எப்படி துரத்தியது என்பது ஒரு சின்ன திருப்பத்துடன் கூடிய முடிவில் சொல்லிவிடுகிறார்கள். இரண்டரை மணிநேரம் மக்களிடமிருந்து பிடுங்குவது போல இருந்தது கதை சொல்லல். எந்தவொரு காட்சியிலும் கிராமத்தையோ அதன் அழகியலையோ, நட்பையோ, காதலையோ, ஏன் வன்மத்தைக் கூட கொலைகளின் மூலமோ உணரமுடியவேயில்லை. இரண்டரை மணிநேர சினிமா காலத்தின் அளவை இன்னும் ஏன் கடைபிடிக்கிறார்கள் என்பது விடையற்ற கேள்வியைப் போல நீள்கிறது.

திரைப்படத்தின் ஆரம்பத்தில் கோபுரத்தின் கீழிருந்து பயணிக்கும் காமரா, மெல்ல உயர்ந்து கோபுரத்தின் பின்னோக்கி வீட்டினுள் நுழைந்து வெளியே வரும் அந்த காட்சியும் பின் தொடர்ந்து மூன்று உருவங்கள் ஒரு மூட்டையை எடுத்துக் கொண்டு சென்று எரிக்கும் காட்சியும் ஒரு நல்ல ட்ராமா வாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தை விளைவித்திருந்தது. ஆனால் அதற்கு அடுத்த காட்சியில் இது மற்றுமொரு தமிழ் சினிமா என்று பொட்டில் அடித்தாற் போல் செல்வது வேதனை.. அதற்குப் பிறகு வெகுசில இடங்களைத் தவிர ஒளிப்பதிவாளருக்கு வாய்ப்பு தரப்படவேயில்லை. வெகுசில காட்சிகள் மிஷ்கினின் கோணங்களைப் போல லோ ஆங்கிலில் செல்வதும் தலைகீழாக இருப்பதும் பார்க்க முடிகிறது. ஓரிடத்தில் கதாநாயகன் அடிபட்டு விழும்பொழுது விண்ணைப் பார்த்தவாறே காமராவும் விழும் காட்சியும் (அதுவும் பாதிதான்) வில்லன் அடிபட்டு ரோட்டில் கிடக்கும்பொழுது அவனது கண்வழியே நிகழ்வுகளைக் காண்பிப்பதாக இருக்கும் காட்சியும் குறிப்பிடத்தக்கது.

யுத்தம் செய் மற்றும் தூங்கா நகரம் ஆகிய இருபடத்திற்கும் தற்செயல் ஒற்றுமையாக உள்ள மிக முக்கிய காட்சி ஒன்று உண்டு. அக்காட்சியின் மூலமே கதையின் நுனி ஆரம்பமாகிறது. ஆனால் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் யுத்தம் செய் காண்பிக்கப்படாமலேயே அழுத்தத்தையும், தூங்காநகரம் சுற்றி சுற்றி காண்பித்த விதத்தில் அவசரத்தனத்தையும் பதிவு செய்திருக்கிறது. இந்த படத்திலும் பார்வையாளர்களை முட்டாளாக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன. ஒரு வீடியோகிராஃபராக வரும் விமலுக்கு கேஸட் இல்லாமல் ரெக்கார்ட் செய்யமுடியாது என்பது கூடவா தெரியாது? பார்வையாளனை கேஸட் இன்றியும் ரெக்கார்ட் ஆகும் என்பது போல நம்பவைத்திருப்பது இயக்குனர் மக்கள் மீது வைத்திருக்கும் மட்டமான ரசனையும் நம்பிக்கையும் காரணமாக இருக்கலாம். நண்பனுக்கு என்ன இரத்தப் பிரிவு என்றே தெரியாமல் அல்லது அறிந்து கொள்ளாமல் தூரத்தே நின்று கொண்டிருப்பவளை இழுத்து கொண்டுவந்து இரத்தம் கொடுக்கவைப்பது அறிவின்மையைக் காட்டுகிறது. ஒரே இரத்தப் பிரிவு உள்ளவர்கள்தான் இரத்தம் தரமுடியும் என்பது படிப்பறிவில்லாத மக்களுக்கும் தெரிந்திருக்கும் விஷயம். இந்த இடத்தில்தான் வெற்றிமாறன், மிஷ்கின் போன்றவர்கள் மாறுபடுகிறார்கள். முறையான இரத்த பரிசோதனை அல்லது இன்ன இரத்தம் என்பதை காட்சிகளில் மக்களிடம் தெரிவித்துவிடுகிறார்கள். அதே போலத்தான் எல்லா தமிழ் சினிமாக்களிலும் காணப்படும் விபத்துமுறை இதிலும் மேம்போக்காக காட்டப்படுவது நடக்கிறது. ஒரு மனிதனுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தால் என்னாகும், இரத்தம் எத்தனை யுனிட் தரவேண்டும் போன்ற அடிப்படை அறிவுசார்ந்த விஷயங்கள் எதுவும் இல்லாமல் எப்படி கதை எழுதமுடிகிறது? வெறும் இறுதி  திருப்பத்தை நம்பி எழுதப்பட்ட தரமற்ற கதையைப் போல இருந்தது. பார்வையாளனை எப்படி நுணுக்கமற்ற காட்சியால் ஏமாற்றுகிறார்களோ அதைப் போலவே அழுத்தி அமைக்கப்படாத திரைக்கதை ஓட்டை மூலமும் ஏமாற்றுகிறார். படத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள். ஓட்டைகள். முன்பே கணித்தவிடக்கூடிய காட்சிகள் என இஷ்டத்திற்குத் தாளித்திருக்கிறார்கள். இதை நான் விளக்கிக் கொண்டிருப்பதைவிட, கேபிள் சங்கர் அவரது விமர்சனத்தில் கூறியிருக்கிறார் (இணைப்பு இறுதியில்..)

பாடல்களோ, பிண்ணனி இசையோ குறிப்பிட்டு சொல்லும்படியில்லை. இருந்தாலும் முன்பு இருந்தது போல இப்படி கட் செய்து அப்படி ஃபாரினில் ஓபன் செய்வதில்லை. நிறைய படங்களில் கதைகளினூடாக பாடல்களை அமைப்பது வந்துவிட்டது. என்றாலும் இன்னமும் தொடரும் பிண்ணனி நடனங்களும் அபத்தமான அலங்கார அமைப்புகளும் இல்லாத படங்கள் வருவது வெகு குறைவாகத்தான் இருக்கிறது. ஒலிப்பதிவுகளில் கொஞ்சம் முன்னேற்றம் நிகழ்ந்திருப்பதும் நல்ல செய்தியே..

newpg-anjali2தூங்காநகரத்தில் ஒரேயொரு ஆறுதல் அஞ்சலி மட்டுமே. எதிர்வீட்டுப் பெண்ணைப் போலத் தெரிகிறாள். (உண்மையிலேயே என் எதிர்வீட்டில் ஒரு பெண் இப்படி இருக்கிறாள்.) முந்தைய படங்களைப் போலின்றி இப்படத்தில் நன்கு டெவலப் ஆகியிருக்கிறாள். படத்தில் பார்த்தபிறகு இப்படியொருத்தி வாழ்க்கையில் கிடைக்கவேண்டும் என்று இளைஞர்களிடையே தோணாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அங்காடித் தெருவில் வந்த அஞ்சலியை இப்படி இந்த படத்தில் கேவலப்படுத்தியிருக்கவேண்டாம். எந்தவொரு காட்சியும் கதைக்குச் சம்பந்தமில்லாத அழுத்தமில்லாத காட்சிகளாகவே அஞ்சலிக்கு அமைந்திருப்பது தமிழ்சினிமா நடிகைகளை எப்படியெல்லாம் திறமைகளை வீணடிக்கிறது என்பதை உணர்த்துகிறது.

கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரப்படத்தில் ஒருமணிநேரத்தைத் தூக்கிவிட்டு பெரிய பெரிய ஓட்டைகளை அடைத்திருந்தால் சுவாரசியம் கொஞ்சம் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். மதுரை பிண்ணனி என்றாலே இலக்கின்றி திரியும் இளைஞர்கள், கொலை, பழிவாங்கல், இடையிடையே திருவிழா போன்ற டெம்ப்ளேட் திரைக்கதையை தொடர்வது கற்பனை வறட்சியையும் கலைத்திறனற்ற இயக்கத்தையும் காட்டுகிறது.

சோர்வும், வெறுப்பும், மொக்கையும்,  அறிவுஜீவித் தனத்தைக் குப்பையிலெறியும் மனம் கொண்ட மனமும், தூக்கமும் தேவைப்படும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய படமிது.

தூங்காநகரம் விமர்சனம் :

http://adrasaka.blogspot.com/2011/02/blog-post_05.html
http://cablesankar.blogspot.com/2011/02/blog-post_06.html


Trailer

Comments

ஆதவா said…
மாத்தியோசி!! நன்றி!
நிச்சயம் அடுத்தடுத்த முறை ஓட்டு போடுவேன். மிக்க நன்றி.
ஹேமா said…
அப்போ....படம் பார்த்து நேரம் வீணாக்கவேணாம்னு சொல்றீங்க !
ஆதவா said…
அதே அதே!!
ஆதவா, இந்த அஞ்சலி பொண்ண கற்றது தமிழ்ல பார்க்கும்போது “ஒரு அசட்டுத்தனத்தோட நிஜமாத்தான் சொல்றியான்னு கேக்குமே, உண்மையிலேயே பொண்ணுங்ககிட்ட அந்த மாதிரி இன்னோசென்ஸ்தான் இருக்கனும், அய்யோ இந்த தமன்னா இருக்கே.....”
ஆமா ஆதவா உங்க வீடு எங்க இருக்கு?
:-)
ஆதவா said…
உண்மையிலேயே அந்த இன்னசன்ஸ் நம்மளை ரொம்பவும் கவர்ந்திழுக்கும்....
ஆங்... எங்கவீட்டுக்கு எதிர்த்தவீட்டுக்கு எதிர்த்தமாதிரி இருக்குங்க.... கண்டிப்பா கூப்பிடமாட்டேன். கவலைப்படுங்க...
:D :D
sakthi said…
அப்போ பார்க்க வேண்டாம்ங்கறீங்க
ஓகே நாங்க படம் பார்க்கல...
// பதிலாக பிரியாமணி மார்பைக் காட்டிக் கொண்டு “உனக்கா எனக்கா” என்று அழைத்துக் கொண்டிருந்தாள். வெறுப்பில் “தூங்கா நகரம்” பார்ப்பது என்று முடிவானது. விதி வலியது!!! //

வேற தியேட்டருக்கு போக வேண்டியது தானே...
// இரண்டரை மணிநேர சினிமா காலத்தின் அளவை இன்னும் ஏன் கடைபிடிக்கிறார்கள் என்பது விடையற்ற கேள்வியைப் போல நீள்கிறது. //

நல்ல சிந்தனை...
// உண்மையிலேயே என் எதிர்வீட்டில் ஒரு பெண் இப்படி இருக்கிறாள்.) //

உங்க அட்ரஸ் சொல்லுங்களேன்...
ஆங்... எங்கவீட்டுக்கு எதிர்த்தவீட்டுக்கு எதிர்த்தமாதிரி இருக்குங்க.... கண்டிப்பா கூப்பிடமாட்டேன். கவலைப்படுங்க]]

ha ha ha

nice review aAthav ...
ஆதவா said…
அண்ணன் டக்கால்டி, சக்தி, ஆண்டிகார்சியா (கிஸ்கு... அட்ரஸ் தர்மாட்டேன்...), தோழி பிரஷா, பிரபாகரன், ஜமால்... (வாங்க ஜமால் ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து) ஆகிய அனைவருக்கும் நன்றி!!!
தூங்கா நகரம் தூங்கி விட்டது என்பதனை அழுத்தமாகச் சொல்லுகிறது விமர்சனப் பார்வை.