யுத்தம் செய்–படத்தைப் பார்ப்பது எப்படி?
தமிழ் சினிமா எந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று அறிந்து கொள்வதைவிட, அதன் பார்வையாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று முதலில் அறிந்து கொள்ளவேண்டும். இதுநாள் வரையிலும் வந்த சினிமாக்கள் எப்படியெல்லாம் மக்களை முட்டாளாக்கியிருக்கிறது என்பது பார்வையாளர்களைக் கிளறுகையில் கிடைத்துவிடுகிறது.
மிஷ்கினின் யுத்தம் செய் படத்தை வைத்தே பார்வையாளர்களைக் கணித்துவிடலாம் என்று நம்பினேன். அது கிட்டத்தட்ட என் கணிப்புக்கு நேராகவே இருந்தது. யுத்தம் செய் மட்டுமல்ல, இதற்கு முன் வந்த ஆடுகளம், நந்தலாலா போன்றவைகளும் அபத்தங்களின் கனவிலிருந்து தள்ளி யதார்த்த கனவுகளுக்குள் நுழைந்த படங்கள். நுணுக்கமும் இயக்குதிறனும் சொல்முறையும் மற்ற படங்களிலிருந்து நெடுந்தூரம் தள்ளி நின்றவை. ஆனால் அவைகள் அந்த திறனுக்காகக் கொண்டாடப்பட்டவையா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். சினிமாக்கள் இலக்கியத்தின் ஒரு பகுதி. கலை அறிவு மிகுந்த இலக்கியவாதிகளால் மட்டுமே சிறப்பான சினிமாவை எடுக்கமுடியும். அப்படியல்லாது எடுக்கப்படும் சினிமாக்கள் நிலைத்து நிற்பதேயில்லை. நேற்று எழுதிய கவிஞனின் கவிதைகள் காணாமல் போகும் அதே நேரத்தில் பாரதியின் நூறுவருட எழுத்து நிலைத்து நிற்பதைப் போலத்தான் சினிமாவும் அதன் தரத்தால் பேசப்பட்டு நிலைத்திருக்கும்.
கலை சினிமா எடுக்கப்படுவது பெரிய விஷயமல்ல. ஆனால் அதற்கு பார்வையாளனைத் தயார்படுத்துவதுதான் மிகப்பெரிய விஷயமே. இவ்வளவு நன்றாக யுத்தம் செய் படத்தை இயக்கிய மிஷ்கின் தெரிந்தே ஒரு குத்துப்பாட்டு வைத்தார் என்றால் அதற்கு பார்வையாளர்கள் தனது படத்தை உள்வாங்கும் ஒரு உத்திதான். தியேட்டரில் நிறையபேர் இந்த படத்திற்குத் தயாராகவில்லை என்பது தெரிந்தது. இந்நேரத்தில் ஒரு சினிமாவுக்காக நான் ஏன் தயாராகவேண்டும் என்று கேள்வி எழுகிறது.
சினிமாக்கள் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. கலை அறிவின் வெற்றிடத்தையும், வாழ்வின் சூத்திரத்தை நுணுக்கமாக ஒரு கதையின் மூலம் புரியவைப்பதையும் மனச்சந்துகளை நிரப்பும் ஒரு களமாகவும் இருக்கிறது. தமிழ் சினிமா துரதிர்ஷ்டவசமாக பொழுதுபோக்குகளை மட்டுமே நம்பி இருக்கிறது. பார்வையாளர்களை தன் வட்டத்திற்குள்ளேயே அழுத்திப் பிடித்து அமரவைத்திருக்கிறது. என்றோ ஒருநாள் வரும் சில நல்ல சினிமாக்களுக்கு மாறமுடியாமல் மக்கள் தவிப்பதைப் பார்க்கமுடிகிறது. இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பல உலக நாடுகளிலும் நடப்பது இயல்புதான். எல்லோராலும் கொண்டாடப்பட்ட The Shawshank Redemption அது வெளியான அன்று ஏற்கப்படவில்லை என்பது முரணனான உண்மை. ஆனால் தமிழில் இது மிக அதிகமாகத் தெரிகிறது. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் எல்லாநாடுகளிலும் உண்டு. மசாலா திரைப்படங்கள் மக்களை எவ்வளவு மட்டமாக, முட்டாள்தனமாக வைத்திருக்கின்றன என்றால், அத்திரைப்படங்களில் காண்பிக்கும் ஒருவிஷயத்தில் கூட யதார்த்தமில்லை என்பதை பார்வையாளன் அறிந்து கொள்ள முயலவில்லை. அஞ்சாதே திரைப்படத்தில் நரேன் தன் முதல்நாளில் ஒரு பிணத்தைப் பார்த்தபிறகு மயக்கம் போடுவாரே, அந்த காட்சி யதார்த்ததை நெருங்கிவிடுகிறது. ஆனால் அதே காட்சி ஒரு மசாலா திரைப்படத்தில் மிகைப்படுத்தப்படுகிறது. காவல்துறையினர் என்றதுமே இப்படித்தான் இருப்பார்கள் என்று மிகையான போலிகளை மசாலாக்கள் காட்டி நம்மை மட்டமாக்குகின்றன. பலசமயங்களில் அப்படித்தான் இருக்கும்போல என்று நம்பியும் விடுகிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை அது கொலையே ஆனாலும் சரி, அதனை திரையில் காண நாம் அத்திரையினுள் செல்லவேண்டும். ஒரு சிறுகதை நம்மை வெகு எளிதாக உள்ளே இழுத்து பாத்திரங்களோடு பயணிக்கவைக்கும். ஆனால் சினிமாக்களில் தரமான உள்ளே இழுக்கும் கதைகள் எழுதப்படவில்லை என்பது கசக்கும் உண்மை. அதை மீறி எழுதப்படும் ஆடுகளம், யுத்தம் செய் போன்றவைகளுக்குள் நுழைய நாம் தயாராக இருக்கவும் முடிவதில்லை.
யுத்தம் செய் – யதார்த்தங்களை உடைத்த படங்களின் சூத்திரங்களைக் கிழித்து மீயதார்த்த சூழலை விதைத்திருக்கும் ஒரு நுணுக்கமான புலனாய்வு நாவல்படம். எனக்குத் தெரிந்து பிணவறை மற்றும் காவல்துறை இரண்டையும் மிகத் தெளிவாக காட்டியிருக்கும் முதல் தமிழ் திரைப்படம். ஒரேயொருமுறை பிணவறைக்குச் சென்றிருக்கிறேன். என் அண்ணனது பிரேதத்தைப் போஸ்ட்மார்ட்டம் செய்ய ஊழியர்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்தோம். அறையில் எந்த கெட்ட வாசனையுமில்லை. சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிறைய பேர் அறைக்குள் வர அனுமதிக்கப்படவில்லை என்பதைவிட பலருக்கு பயமாகவே இருந்தது. பிரேத அறை எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள அவர்களுக்கு விருப்பமும் இருக்கவில்லை.
மிஷ்கின் மற்றும் சத்யாவின் காட்சிக் கோணங்களை பலரும் பலவிதத்தில் எழுதுவிட்டார்கள். டாப் ஆங்கிலிருந்து லோ ஆங்கில் வரை தமிழ்சினிமாவில் இத்தனை ஆங்கில்களை அறிமுகப்படுத்தியதே மிஷ்கிந்தான். காட்சிகளின் மூலம் கதை சொல்லும் முறை காட்சிக் கோணங்களிலிருந்து துவங்குகிறது என்பதை அவரது படங்கள் கூறிவிடுகிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், தலைகீழாக காண்பிக்கப்படும் ஓரிரண்டு காட்சிகள் அதன் அழுத்தத்தை வைத்து பார்க்கும் பொழுது எந்த தமிழ்சினிமாவிலும் கடைபிடிக்கப்படாதது. தற்கொலை செய்யும் பெண்ணைக் காண்பிக்காமல் தலைகீழாக பெண்ணின் காலைக் காண்பித்திருப்பது யாரும் முயற்சித்திராதது மட்டுமல்ல, கற்பனையும் செய்திராதது. அதன் அழுத்தம் பெண்ணின் தாயின் கண்களில் அவர் விழும் கோணத்திற்கேற்ப காண்பிப்பதிலும் இருக்கிறது. இருப்பினும் இந்த காட்சிகளையெல்லாம் ஒருசிலர் அஞ்சாதேயிலும் இருக்கிறது ; அது தொடர்ந்து வருகிறது என்று குறை சொல்கிறார்கள். ஒரேவகையான காட்சிக் கோணத்தையே கிட்டத்தட்ட ஆயிரம் படங்களில் பார்த்து பழகிவிட்ட நமக்கு வெகு அரிதாக ”அஞ்சாதே” யிலிருந்து தொடர்வது குறையாகத் தெரிகிறது. இருப்பினும் இதனை எத்தனை பேர் சிலாகிக்கிறார்கள்? என்றாலும் பலசமயங்களீல் ஆச்சரியத்தில் விழிதிறந்து காட்சிக்குள் நுழைவதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பதே உண்மை.
எனக்குத் தெரிந்து காட்சிக்கோணங்களை பல டிகிரியில் வைத்த முதல் படம் அஞ்சாதே. பிரச்சன்னாவின் கால்களை மட்டுமே காண்பித்து அவனது காமத்தையும் வன்மத்தையும் அழுத்தமாகச் சொன்ன திரைப்படம்.. அதன்பிறகும் கூட நூறு திரைப்படங்கள் வந்த பிறகும் நெருக்கமான நிலையில் முகத்தைக் காண்பிப்பதும் எந்த அசைவுமில்லாத ஒரேவகையிலான நேர்கோட்டு காட்சிகளுமே பிரதான ஒளிப்பதிவாக இருந்தது. அந்த வகையில் மிஷ்கின் வெகுதூரம் தள்ளி நிற்கிறார். ஒரு காட்சி, சேரனும் அவர்களின் உதவியாளர்களும் மாடியேறி நடந்து வருகிறார்கள். டாப் ஆங்கிலில் வைக்கப்பட்டிருக்கும் காமரா அவர்கள் நடந்து வருவதை நோக்கியே பயணிக்கிறது. முதலில் தலைகீழாக இருக்கும் காட்சி, அவர்கள் மேலே ஏறி வந்ததும் நேராவது, நம்மை உள்ளே வெகுதூரம் இழுத்துப் போடுவதை உணரமுடிகிறது. என்றாலும் யார் ஒருவர் காமராவின் கோணங்களை வெகுவாக சிலாகிக்கிறார்களோ அவர்கள் திரைப்படத்தினுள் நுழைந்து சரியாக படத்தை அனுபவிக்கவில்லை என்பது பொருளாகிவிடுகிறது. நான் பெரும்பாலான காட்சிகளில் உள்ளே நுழைந்தும், சில காட்சிகளில் வெறும் சக்கையான பார்வையாளனாகவும் இருந்தேன். திரை மொழியை உள்வாங்குதலின் உத்திக்கு இன்னும் தயாராகவில்லை என்பதை என்னால் உணரமுடிந்தது.
அநேகமாக நீங்கள் நாவல்கள் படித்திருப்பீர்கள். மெல்ல மெல்ல போடப்படும் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக ஆற அமர அவிழ்க்கப்படும்பொழுது ஏற்படும் கிளர்ச்சியும் ஆச்சரியமும் இத்திரைப்படத்தில் தோன்றுவதை உணரமுடிகிறது. அதனால்தான் இதனை நாவல்படம் அல்லது புதினப்படம் என்று அழைக்கத் தோன்றுகிறது. ஆரம்பத்தில் சேரனாக இருந்த ஒரு பாத்திரம் பிறகு காணாமல் போய், ஜேகே மட்டும் இருப்பதை படம் முடிந்து வெளியே வந்தபிறகு உணர்ந்தேன். இயக்குனர் சேரனுக்கு இந்த படத்தைக் காட்டிலும் ஒரு நல்ல படம் கிட்டுமா என்பது சந்தேகமே… சரி, தலைப்பின் கேள்விக்கு வருவோம். யுத்தம் செய் படத்தைப் பார்ப்பது எப்படி?
எந்த திரைப்படத்தையும் திரையரங்குகளில் தொந்தரவுகளும் கவனச்சிதறல்களுமின்றிதான் பார்க்கவேண்டும். திரையரங்குகளில் கடைபிடிக்கப்படும் ஆழ்மெளனம் எனும் ஒழுக்கமே யுத்தம் செய், ஆடுகளம் போன்ற படங்களை மிக நன்றாக ஊன்றிப் பார்க்க வசதியாக இருக்கும். பலர் தங்களது வியாபாரப் பேச்சுக்களை திரையரங்குகளில் நடத்துகிறார்கள். இன்னும் சிலர், திரைப்படத்தின் மெளனத்தை வசப்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது அப்படத்தின் இயக்கத்திற்கும் அவரவர் கொடுக்கின்ற டிக்கட் விலைக்கும் அசிங்கப்படுத்தும் நடத்தையாகும். இந்த மாதிரியான ஒரு புலனாய்வுத் திரைப்படங்களில் தத்தமது அறிவுஜீவித் தனத்தைக் காட்டுவது ஒருசிலரது மட்டமான நடவடிக்கை. படத்தின் இடையே, ”இவர் கடைசியில் இப்படி ஆகிவிடுவார்,” “ இவர்தான் கொலை செய்திருக்கக் கூடும்” “ இந்த சீனுக்கு வருபவர் கடைசியில் கொலைகாரராக இருப்பார்” இத்யாதி இத்யாதி என்று முன்பே கணிப்பது படத்தின் மீது அவ்வளவு கவனம் செலுத்தாமல் தமது அறிவுஜீவித்தனத்தை அருகிலிருப்பவர்களிடம் நிலைநாட்டும் முயற்சியே. படத்தின் முடிவில்தான் எல்லாவற்றையும் சொல்லிவிடப்போகிறார்களே, அதற்குள் என்ன அவசரம்?… இடைவேளையின் போதும் கூட இப்படம் இப்படித்தான் முடியும் என்றோ, முடிவு இதுதான் என்றோ முடிச்சை முன்பே அவசரத்தனமாக அவிழ்ப்பதும் பார்வையாளர்களிடம் நடக்கிறது. அதைவிட படம் பார்த்துக் கொண்டேயிருக்கையில் என் நண்பனொருவன், “இந்த சீனை ஏதாவது ஒரு படத்திலிருந்துதான் உருவியிருப்பாங்க” என்று சொன்னது இன்னும் உச்சம்.
பல வலைத்தளங்களில் யுத்தம் செய் விமர்சனத்தில் அஞ்சாதே போல இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்கள். அவர்கள் இப்படத்தை சரியாகப் பார்க்கவில்லை என்றே தெரிகிறது. என் நண்பனும் இதையே சொல்லியிருந்தான். அதற்கு அவன் சொல்லும் காரணம், இரண்டிலும் போலிஸ், விசாரணை, செக்ஸ், மர்டர் போன்றவைகள் இருப்பதை சுட்டிக் காட்டுகிறான். எதற்கும் எதற்கும் முடிச்சு? இரண்டுமே இன்வெஸ்டிகேஷன் என்றால் அது ஒன்றாகிவிடுமா? E.Tயும் Avatar உம் ஏலியன்களை நல்லவர்களாகக் காட்டும் கதை என்றால் இரண்டும் ஒன்றாகிவிடுமா?
ஒரு சிறு புள்ளியில் பாதை மாறிய இரண்டு நண்பர்களின் கதையே அஞ்சாதே ; மாறாக ஒரு சிறு சம்பவத்தின் விளைவாக அடுத்தடுத்த பெரிய சம்பவங்களைக் கோர்த்து பெரிய விஷயமாக உருவெடுப்பதை புலனாய்வு செய்யும் கதை யுத்தம் செய்… இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாட்டை மறைத்து இரண்டையும் ஒன்றாக்குவது எது? மற்ற படங்களின் பாதிப்பு இருக்குமோ என்று நினைத்துக் கொண்டே படம் பார்ப்பதுதான். பார்வையாளர்களைச் சொல்லி குற்றமில்லை; தமிழில் எடுக்கப்படும் எல்லா படங்களும் பல படங்களின் (உடைமுதற்கொண்டு) சாயல் அதிகம் இருப்பதுதான். அதனாலேயே பார்க்கும் எல்லா படங்களையும் இது அதன் சாயல் இருக்குமோ? அது இதன் சாயல் இருக்குமோ எனும் சந்தேகித்தே பார்த்து பழகிவிட்டோம். இதைவிட உச்சகட்ட காமெடி, “ கன்னிப்பொண்ணு பாடலில் வரும் இறுதி நடனம் ஜீன்ஸ் படத்தில் அன்பே அன்பே என்னைக் கொல்லாதே பாடலில் வரும் இறுதி நடனத்தைப் போலவே இருந்தது” என்று நண்பர் ஒருவர் கூறியதுதான்..
நீங்கள் இதை ஏற்பீர்களோ மாட்டீர்களோ, யுத்தம் செய் மட்டுமல்ல, உலகத் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் திரைமொழியின் மூலம் வாழ்க்கையை உணர்ந்து கொள்வதற்கும் முதலில் நாம் புத்தகவிரும்பிகளாக இருக்கவேண்டும். புத்தகம் என்றதும் குமுதம் ஆனந்தவிகடன் அல்ல. நல்ல தமிழ் இலக்கியங்கள் அடங்கிய நாவல்கள், சிறுகதைகள் ஆகியவையே.. அல்லது அப்படியொரு உழைப்பு தேவையில்லை எனில் நீங்கள் இந்தமாதிரி படங்களைப் பார்க்கவேண்டியதேயில்லை. அது உங்களுக்கான திரைமொழியடங்கிய படமல்ல.
பிகு : நந்தலாலா பார்த்தபிறகு இப்படி எழுதத் தோணியது. ஆனால் அது கிகுஜிரோ சர்ச்சையில் இருந்ததால் முடியாமல் போனது. யுத்தம் செய் எந்த சாயலுமற்றது என்பதை வலைநண்பர்கள் தமது விமர்சனங்களில் குறிப்பிட்டிருந்தமையால் எழுதமுற்பட்ட்டேன்.
யுத்தம் செய் விமர்சனங்கள் :
http://ponniyinselvan-mkp.blogspot.com/2011/02/blog-post.html
http://www.nilaraseeganonline.com/2011/02/blog-post_06.html
http://www.jackiesekar.com/2011/02/yaddham-sei2011.html
http://www.thacinema.com/2011/02/blog-post.html
http://cablesankar.blogspot.com/2011/02/blog-post_05.html
http://www.athishaonline.com/2011/02/blog-post.html
http://truetamilans.blogspot.com/2011/02/blog-post_05.html
Trailer
Comments
என்னுடைய விமர்சனத்தில் அஞ்சாதே படம் போலவே இருக்கிறது என்று கூறவில்லை... அஞ்சாதே பட டெம்ப்ளேட்டில் எடுத்திருக்கிறார்கள் என்று கூறினேன்... மேலும், அந்த ஓவர்பிரிட்ஜ் சண்டைக்காட்சி அஞ்சாதே படத்தில் பார்த்த அதே சண்டைக்காட்சி தானே...
nice re-view yours.... my native also tirupur. may i know your mobile number.
நீங்கள் சொல்லுவது போல அஞ்சாதே நண்பர்கள் எவ்வாறு பிரிகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அது ஒரு பழைய ரஜினி படத்தின் கரு தான்.ஆனா மேகிங், திரைக்கதையில் அஞ்சாதே வித்தியாசப்பட்டு வெற்றி பெற்றது...
இப்போ விஷயம் என்னன்னா...இந்த படத்தில் கருவும் பழசு...காட்சிகளும் பழக்கப் பட்டது...அஞ்சாதே படத்தின் பாதி வரை தான் நண்பர்களின் ஈகோ காட்டுவார்கள்...அதற்குப் பிறகு அந்த பெண் கடத்தல் கும்பல் எப்படி மாட்டுவார்கள் என்பதே பிரதான திரைக்கதை... அது யுத்தம் செய்யில் பதினைந்தாவது நிமிடம் முதலே தொடங்கிவிடுகிறது.
நீங்கள் சொன்ன கருத்தில், தியேட்டரில் உள்ள அறிவுஜீவிகளின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது...
எனக்கு உடன் படாதவை...இம்மாதிரி சினிமா பார்க்க நாவல்கள் படிக்க வேண்டும் என்று நீங்கள் கூறி இருப்பது. அப்படி பார்த்தால் சுறா படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் எடுத்து பார்க்கும் சாப்ட்வேர் இளைஞர்களை என்ன சொல்லுவீர்கள்?
@ பிரபா, அஞ்சாதே சாயல் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை.. ஒவ்வொருவருக்கும் பலவித பார்வைகள் இல்லையா...?
@ மனோ... உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள்.... நன்றி
@ டக்கால்டி
நிறைய படங்களைப் பார்த்தால் அதன் கதைக்கரு எங்கிருந்தோ வந்திருக்கும்... புதிய கதைக்கரு என்று யாருமே சொல்லவில்லை.. ஆனால் திரைக்கதை மேகிங் புதியதுதானே... மிஷ்கினுடையது புதிய திரைக்கதை மேகிங்.. அவ்வளவே. மற்றபடி இதேவகை புலனாய்வு திரைப்படங்கள் உலகில் எத்தனையோ வந்திருக்கின்றன....
புத்தக வாசிப்பு இல்லாதவர்கள் பலரால் இந்த படத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை இரண்டாம் முறையும் பார்த்த சிலரைக் கொண்டு தெரிந்து கொண்டேன். இருப்பினும் பலரால் படம் அங்கீகரிக்கப்படுவதற்கு வித்தியாசமான மேகிங் காரணம்... இதை ஏன் சொல்கிறேன் பார்வையாளர்கள் அனைவரும் இலக்கிய அல்லது புத்தக ஞானம் கொண்டிருந்தவர்களாக இருந்திருந்தால் நல்ல படங்களைத் தவிர வேறெதுவும் ஓடாது. இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள்... நிறைய படித்தவர்கள் சதவிகிதம் அடங்கிய மாநிலம் எது என்று கேட்டால் கேரளமும் மேற்கு வங்கமும்தான்... அங்கேதான் நிறைய நல்ல படங்கள் உருவாகின்றன... முதலில் பார்வையாளர்களை சினிமா தயார்படுத்தவேண்டும். பிறகே நல்ல படங்களை வெற்றிப்படங்களாகக் கொடுக்க முடியும்....