புத்தக(க்) கண்காட்சியும் ஞானும்

books1புத்தகக் கண்காட்சிகளுக்கும் நமக்கும் எப்பொழுதும் ஒத்துவரவதேயில்லை, கண்காட்சி எப்போதெல்லாம் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் என் கையில் பணம் இருக்காது. இருக்காது என்றால் ஒரு ஐம்பது ரூபாய் வைத்திருப்பேன். அவசர ஆத்திரத்திற்கு. இருந்தாலும் கண்காட்சி நடந்தால் போகாமல் விடுவதில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு.

  • புத்தகக் கண்காட்சியில் நானும் ஒரு புத்தகப் புழு என்றூ காண்பித்துக் கொள்ளலாம். ஆனால் அதை யாரும் பார்க்கப்போவதில்லை
  • நிறைய ஃபிகர்களின் கூட்டம் எதிர்பார்க்கலாம்; குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவிகள்..
  • பொழுது போகவில்லையெனில் ரொம்ப நேரம் சுத்தலாம் ; யாரும் யாரையும் கேள்விகேட்க முடியாது
  • சில சமயம் ஓசியில் ஓரிரண்டு கவிதைகள், ஏன் கதைகளைக் கூட படித்துவிடலாம். அப்படித்தான் போன கண்காட்சியில் ஒரு கதையே படித்து முடித்தபிறகு, சரி நன்றாக இருக்கிறது, வாங்கிக் கொள்வோம் என்று வாங்கினேன்.
  • ஒரு பார்க் மாதிரி, வெளியே விதவிதமான ஐட்டங்கள் தின்பதற்குக் கிடைக்கும். மனைவி குழந்தைகளோடு வருபவர்களுக்கு புத்தக விலை = தின்பண்ட விலை, இல்லையெனில் தப்பித்தீர்கள்

இப்படி நிறைய காரணங்கள் இருந்தாலும் புத்தகம் வாங்குவதற்குத்தான் பலரும் கூடுகிறார்கள். முக்கியமாக என்னைப் போன்ற ரொம்ப்ப்ப்ப நல்லவர்களும். இம்முறை எப்படியோ அடித்துப் பிடித்து பணம் சேர்த்து கண்காட்சிக்குள் நுழைந்துவிட்டேன். பொதுவாக எனக்கு ஒரு பழக்கமுண்டு. முதலில் ஒரு ரவுண்டு சுற்றிக் கொண்டே வருவேன். பிறகு தேவையான பதிப்பகங்களுக்கு மட்டும் இன்னொரு ரவுண்டு சுற்றுவேன். என்னோடு யாராவது வந்தீர்களென்றால் அடிக்கடி ஸ்டாலுக்கு முன்னே ஸ்டூல் போட்டு அமரவேண்டியிருக்கும். அவ்வளவு நேரம் சுத்துவேன். ஆனால் இந்தமுறை அப்படியெல்லாம் நிகழ்ந்துவிடவில்லை. நேரக்குறைவு என்பதைவிட எனக்கு நன்றாகத் தெரியும் வேறெந்த பதிப்பகத்திலுருந்தும் நான் புத்தகம் வாங்கப்போவதில்லை, உயிர்மை தவிர. ஆகவே பெரிய அளவில் சுத்தவில்லை, அப்படி சுத்தும்படி பெரிய கண்காட்சியும் திருப்பூரில் அமைந்துவிடவில்லை.

ஒவ்வொரு ஸ்டாலுக்கும் போய்ச் சென்று புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு வேண்டாம் என்று திரும்பி வரும்பொழுது ஸ்டாலின் கல்லாப்பெட்டியில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் ஒரு லுக்கு விடுவார்கள் பாருங்கள், “இவன்லாம் வாங்குவானா வாங்கமாட்டானா?” என்பது போல இருக்கும். அவர்களைக் கடந்து செல்லும் போதெல்லாம் “உங்க மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டேன்” என்று நினைத்துக் கொண்டே செல்லவேண்டியிருக்கும். ஆனால் பல ஸ்டால்களுக்குச் சென்றால் வாந்தி தான் வருகிறது.  புத்தகத்தின் பெயர்களைப் பாருங்கள்

வாழ்க்கையைக் கடப்பது எப்படி?
சுகமான வாழ்க்கை வாழ்வது எப்படி?

இந்த ”எப்படி” வகை நூல்கள் மிக அதிகம். ஈஸியாக வெளுக்கிக்குப் போவது எப்படி??,
எவன்யா இதெல்லாம் எழுதறது?

எப்படி வகை, சமையல், கீழ்தரமான கதைகள், சினிமா, ஆன்மீகம், அதாவது இலக்கியமல்லாத அனைத்தும் நன்றாக விற்பனையாகின்றன. ஒரு புத்தகம் பார்த்தேன், “பொம்மைகளைப் பராமரிப்பது எப்படி?” (இந்தமாதிரியான தலைப்பில்…) யோவ்… இதுக்கெல்லாமாயா புஸ்தகம் போடறது?

உயிர்மை ஸ்டாலுக்குச் சென்றேன். நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். எல்லாருமே எழுத்தாளர்கள்தான். வேற யாரு, சாருவிலிருந்து எஸ்ரா வரைக்கும்….. ஒன்றிரண்டு பேர் வந்தார்கள் ”சைபர் கிரைம் பத்தி எழுதினது இருக்குங்களா?” என்றார் ஒருவர். ஏதோ ஜூலியன் அசெஞ்ச் ரேஞ்சுக்கு புதுசா ஏதாவது செய்வார் போல.. பெரும்பாலும் சுஜாதாவை வாங்கிக் கொள்கிறார்கள். அதற்கு அடுத்தாற்போல் சாரு, எஸ்ரா போன்றவர்கள், வெகுசிலரே கவிதைகள் விரும்புகிறார்கள். அதிலும் மக்களுக்கு கவிதை என்றாலே வைரமுத்துவும் பா.விஜயும்தான். ஏதோவொரு பதிப்பகத்தில் நின்று கொண்டிருந்தேன் ; ஒரு பெண்ணும் பையனும் (காலேஜ்?) ஜோடியாக வந்தார்கள். பா.விஜய் அல்லது தபூசங்கராக இருக்குமென்று நினைக்கிறேன். அந்த புத்தகத்தைக் கையிலெடுத்துக் கொண்டு “தோ, பாரேன், என்னமா எழுதியிருக்கான்” என்று அந்த ஃபிகர் சொல்ல, அவனும் வேறவழியில்லாமல் ப்ளைத் பொம்மைகளைப் போல கண்ணை விரித்துக் கொண்டு, ”ஆமாமா” என்று மாவரைத்துக் கொண்டிருந்தான். எனக்கு செவிட்டால் அடிக்க வேண்டுமென்றே தோணியது. அந்த கவிதை அப்படியொன்று சிறப்பானது இல்லை என்பது கடந்து செல்லும் போது தெரிந்தது. அப்படின்னா “பிரமிள், மனுஷ்யபுத்திரன், பிரம்மராஜன்” போன்றவர்களையெல்லாம் என்னவென்று சொல்வீர்கள்?

ரொம்ப நேரம் அதாவது கிட்டத்தட்ட அரைமணிநேரம் உயிர்மை ஸ்டாலில் நின்று புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். என்னிடம் பணம் இருந்திருந்தால் ஸ்டாலின் எல்லா புத்தகங்களையும் வாங்கியிருப்பேன். வந்து செல்பவர்களெல்லாம் இடித்துக் கொண்டே செல்ல, ஸ்டால் உரிமையாளர் என்னை முறைத்துக் கொண்டே இருந்தார். அல்லது அப்படி எனக்குத் தோணியது. சட்டென்று எஸ்ரா, சுஜாதா, சாரு, ஜெயமோகன் என்று ஒவ்வொன்றாக உருவி கையில் கொடுத்தேன். முன்பே பொன்.வாசுதேவனின் மதியப்பூனையையும் எடுத்து வைத்திருந்தேன். ஸ்டால்காரருக்கு அப்பாடா என்று இருந்திருக்குமோ தெரியவில்லை. என்னைப் பார்த்து சிரித்தார். “நானும் இலக்கியமெல்லாம் படிப்பேங்க” என்ற ரீதியில் ஒரு போஸ் கொடுத்துவிட்டு, எவ்வளவு ஆச்சுங்க என்றேன். ஐநூத்தி ஐம்பது என்றார். சரிதான்…. கொண்டுவந்ததே ஐநூறுதான், அம்பதுக்கு எங்க போவேன் என்று பர்ஸைத் துலாவிக் கொண்டிருக்கையில் என்ன மாயமோ தெரியவில்லை ஐம்பது ரூபாய் சிக்கியது. தப்பிச்சதுடா மானம் என்று கொடுத்துவிட்டு நகர்ந்தேன்.

250 ரூபாய்க்கும் மேலே வாங்கினால் சான்றிதழ் தருவார்களாம்… இது புதியவர்களுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும். நான் ஒன்றும் புதியவன் இல்லையே… வேகமாக வெளியேறினேன்.

இனிமேல் புஸ்தக கண்காட்சி என்று யாராவது நடத்தினால் கையில் காசு இருக்கும்போது நடத்துங்கப்பா என்று சொல்லத் தோணியது. தவிர, மாதம் ஐநூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்கவேண்டும் எனும் கொள்கையோடு கண்காட்சியை விட்டு அகன்றேன். வீட்டுக்குச் சென்றதும் முதலில் சாருவின் புத்தகத்தை மறைத்து வைக்கவேண்டும்…

Comments

Unknown said…
நல்ல முடிவு...எனக்கு கையில் காசு இருந்தால் புத்தகக் கண்காட்சியில் அத்தனையையும் வாங்கி விடுவேன் பாஸ்..
Unknown said…
ஓஹோ வடை எனக்கா?
Unknown said…
ஆதவா நீங்க திருப்பூர்ல தானே இருக்கிங்க?
:-)
மற்றவை தனிமெயிலில் அல்லது சாட்டில்......
tamilan said…
This comment has been removed by a blog administrator.
Unknown said…
ஏங்க, வாமுகோமு புக் ஒண்ணுகூட உங்க கண்ணுல பட வில்லைங்களா?
ஆதவா said…
மைந்தன்.... சேம் பிஞ்ச்... வடை உங்களுக்கே..

ஐத்ருஸ்... நன்றி தல.

@ வாய்ப்பாடி குமார்.
வாமுகோமு புத்தகங்களெல்லாம் வாங்க ஆசைதான். என்ன பண்ணுவது... விதி வலியதுங்க. அப்பறம் நீங்க ஏன் சுந்தரராமசாமி வாங்கலையான்னு கேட்டுடக்கூடாதுல்ல..
Unknown said…
நல்ல பதிவு !
வாழ்த்துக்கள் !
வடிகட்டிய வாசிப்பே வாழ்விற்கு ஏற்றம் தருமாம். நம்மைத் தேடி விளம்பரங்களோடு வரும் ஆயிரம் நூல்களை விட நல்ல நூல்களை நாம் தேடிச் சென்று வாசிப்பதே சிறந்தது, உங்களின் மனநிலை போன்றே எனது மனவுணர்வும் என்று கூறலாம் சகோதரா. கண்டவுடன் எதையும் வாங்கிப் படிக்கும் எண்ணத்தை விட கடைந்தெடுத்து, வடிகட்டிப் படிப்பதே எனது வழக்கம்.

Popular Posts