Bicentennial Man - விமர்சனம்
Film : Bicentennial Man
Direction : Chris Columbus
Starring : Robin Williams
Year : 1999
Language : English
Genre : Drama, Sci-fi
எந்திரங்கள் ஆட்சி செய்யப்போகும் நாளைய உலகில் எந்திரன்களின் அன்புக்கும் காதலுக்கும் உறுதுணையாக இருப்பது எது? மனிதனா? அல்லது எந்திரன்களா?
இந்த கேள்வியைத் தாங்கித்தான் பைசெண்டனியல் மேன் படம் முழுக்கக் கதை செல்கிறது. இன்றைய உலகமே அன்பு எனும் மாயவலைக்குள்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு நாய்க்குட்டி கூட தன் ரோமங்களை பாசத்தோடு தடவிவிடுவதற்கு விரல்களுக்கு ஏங்கும் பொழுது மனிதன் அன்பினால் கட்டுண்டிருப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல. நமது வாழ்வை மெல்ல மெல்ல உலோக மனிதர்களுக்குப் பரிகொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கும் காதல், பாசம், நகைச்சுவை, கோபம், போன்ற உணர்வுகள் இருந்தால் எப்படியிருக்கும்?? அறிவியல் புனை எழுத்தாளர் ஐசக் அசிமோவின் கதையில் 1999 ம் வருடம் வெளியான பைசெண்டனியல் மேன் திரைப்படம் உணர்ச்சி மிகுந்த, மனிதம் விரும்பும் ஒரு இயந்திரத்தின் இரண்டு நூற்றாண்டுக் கதையாகும்.
வீட்டு உபயோகங்களுக்காக ஆண்ட்ரூ எனும் மனித ரோபோவை வாங்கி வருகிறார் மார்ட்டின். வழக்கம்போல அதன் புத்திச்சாலித்தனமான பேச்சும் இயந்திரத்தனமான நடத்தையும் பிடிக்காத மார்டினின் குழந்தைகள் அதனை வெறுக்கிறார்கள். மார்டினின் இரண்டாவது குழந்தையான லிட்டில் மிஸ்ஸுக்குப் பிடித்தமான குதிரை பொம்மையை எதிர்பாராத விதமாக உடைத்துவிடும் ஆண்ட்ரூ, லிட்டில் மிஸ்ஸுக்காக அதே போல வேறொரு குதிரை பொம்மையை செதுக்கித் தருவதிலிருந்து அதற்கு கற்பனைத் திறனும் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் அறிவும் இருப்பதை மார்டின் உணர்கிறார். மார்ட்டின் ஆண்ட்ரூவுக்கு உணர்ச்சிகளை உள்வாங்குவது குறித்தும், மனிதவளம் குறித்தும் பலவகையில் சொல்லித் தருகிறார். ஆண்ட்ரூவை ஒரு ரோபோவாகப் பார்க்காமல் தனக்குக் கீழ் வேலை செய்யும் ஒரு மனிதனாகவே பார்க்கிறார். ஆண்ட்ரூ தனது கற்பனையின் மூலம் பலவகையான விதவிதமான பொருட்களைச் செதுக்குகிறது. தனக்கென ஒரு வங்கி கணக்கும் ஏற்படுத்திக் கொண்டு பணமும் சம்பாதிக்கிறது. அதனைக் கொண்டு தனது உணர்ச்சியை முகத்தில் காட்டும்படி ஒரு சில அப்க்ரேடும் செய்துகொள்கிறது.
நாட்கள் கடக்கின்றன. லிட்டில் மிஸ்ஸுக்குக் கல்யாணம் நடந்துவிடுகிறது. ஆண்ட்ரூ தனக்கென ஒரு வாழ்க்கை வாழவேண்டுமென விரும்பி மார்ட்டினிடம் சுதந்திரம் கேட்டுப் பெற்றுக் கொள்கிறது. வருடங்கள் கடந்தநிலையில் மார்ட்டின் இறந்துவிடுகிறார். ஆண்ட்ரூ தனது அடுத்த பயணத்தைத் தொடருகிறது. தன்னைப் போலவே திறமையுள்ள ரோபோக்களைத் தேடி வருடம் முழுக்க அலைகிறது. முடிவில் கலடீ (Galatea) எனும் ஆடிப்பாடும் ஒரு பெண் ரோபோவைக் கண்டுபிடித்து அதன் உரிமையாளரும் ஆராய்ச்சியாளரும் ஆண்ட்ரூவை வடிவமைத்த ஆராய்ச்சியாளரின் மகனுமான ரூபர்ட் என்பவரை அடைகிறது. ஆண்ட்ரூ இப்பொழுது தன்னை முழுமையாக மனிதனாக்க விரும்புகிறது. தனது பழைய உலோகத் தோலை உரித்துக் கொண்டு புதிதாக மனிதத் தோல் போர்த்தி உருவெடுக்கிறது. இதற்கான ஆராய்ச்சி செலவு அனைத்தையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் ஆண்ட்ரூ கூறிவிட, ரூபர்ட் இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்கிறார். வெற்றிகரமாக லிட்டில் மிஸ்ஸைக் காணத் திரும்பும் ஆண்ட்ரூவுக்கு ஆச்சரியம், லிட்டில் மிஸ் மிக இளமையாக இருக்கிறாள். ஆனால் அது உண்மையில் லிட்டில் மிஸ்ஸின் பேத்தி போர்சியா என்பதை பின்னர் அறிகிறார். தான் கிட்டத்தட்ட மனிதன் ஆகிவிட்டோம் என்பதோடு தனக்கு ஒரு துணைவேண்டும் என்று போர்சியாவைக் காதலிக்கவும் செய்கிறது ஆண்ட்ரூ. லிட்டில் மிஸ்ஸின் இறப்புக்குப் பிறகு ரூபர்ட்டின் ஆராய்வில் மேலும் சில அப்க்ரேடுகளோடு முழுக்க மனிதனாகவே மாறிவிட்ட ஆண்ட்ரூ தான் ஒரு மனிதன் என்று உலகிற்கு அறிவிக்கவேண்டியும், போர்சியாவை முறைப்பட திருமணம் செய்து கொள்ளவும் உலக காங்கிரஸுக்கு மனு கொடுக்கிறது. ஆனால் அந்த விசாரணை ரத்து ஆவதோடு மட்டுமின்றி ஆண்ட்ரூ ஒரு ரோபோ மட்டுமே என்று தீர்ப்பும் வந்துவிடுகிறது.
நாட்கள் கடந்துசெல்ல, ரூபர்ட் ஆண்ட்ரூவுக்கு இரத்த முறையை அறிமுகப்படுத்தி ஆண்ட்ரூவை 99 சதவிகிதம் மனிதனாக்குகிறார். ஆனால் இந்த சோதனைக்குப் பிறகு ஆண்ட்ரூ மனிதர்களைப் போலவே வயதாகி இறக்கவும் நேரிடும் என்று எச்சரிக்கிறார். போர்சியாவுக்காக முழு மனிதனாக மாறிக்கொள்ளும் ஆண்ட்ரூ தனது அந்திமக் காலத்தில் மீண்டும் ஒரு மனு ஒன்றை உலக காங்கிரஸுக்கு வைக்க, அதனைப் பரிசீலித்து முடிவெடுப்பதாக நீதிபதிகள் கூறுகின்றனர். அதன் பிறகு ஆண்ட்ரூ மனிதனாக அங்கீகரிக்கப்பட்டாரா? போர்சியாவுடன் உயிரோடு இருந்தாரா என்பதெல்லாம் கிளைமாக்ஸ்.
அதிரடியான சண்டைகள், பிரம்மாண்டமான காட்சிகள், போன்ற எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் அமைதியாகத் தொடங்கி அமைதியாக முடிகிறது இத்திரைப்படம். ஒருவேளை அதுவே இப்படத்திற்குத் தோல்வியாக இருந்திருக்கலாம். வீட்டுக்காட்சிகளே மிகப்பிரதானமாக இருக்கையில் ஒரு சில இடங்களில் நமக்கும் நெளிவு வந்துவிடுவதற்குக் காரணம் இது ஒரு ரோபோ பற்றிய படம் என்று மனது அடிக்கடி நினைவூட்டுவதுதான். ஆண்ட்ரூவாக நடித்திருக்கும் ராபின் வில்லியம்ஸுக்குப் பேர் சொல்லும் வகையில் பல காட்சிகள் உண்டு. தமிழ் “எந்திரன்” போல முப்பது நாளிலேயே உணர்ச்சியைப் புகட்டிவிடும்படியான காட்சிகள் எதுவுமில்லாமல் இயல்பாகவே அந்த ரோபோவுக்கு உணர்ச்சியிருப்பதாகக் கூறியிருப்பது ஒரு க்ரேட் எஸ்கேப் என்றே சொல்லலாம். மேலும் ஒரு இயந்திரம் முதலில் தனக்குள் உண்டாக்கப்பட்டிருக்கும் ஸ்க்ரிப்டுகளுக்குள்தான் முதலில் உள்வாங்கும் என்பதற்கு ஆண்ட்ரூ, நகைச்சுவை பயிலும் காட்சிகளைச் சொல்லலாம். என்னதான் ரோபோ என்றாலும் அதனை முழு மனிதனாக்குகிறேன் பேர்வழி என்று அதற்கு நரம்பிலிருந்து இரத்தம் வரை இயக்ககம் கொண்டுவருவது எல்லாம் நம்பும்படியாக இல்லை. ஆனால் நாளை என்னவேண்டுமானாலும் நடக்கலாம்..
சிறந்த மேக்கப்புக்காக பரிந்துறைக்கப்பட்ட இப்படத்தின் உலோக மனிதன் அலங்காரம் ஒரு இயந்திரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது ஆச்சரியமான விஷயம். வெளியுலகம் எப்படியிருக்கும் என்று அவ்வளவாகக் காண்பிக்காத உத்தி சிறந்ததுதான் என்றாலும் வீட்டிற்குள்ளேயே படமெடுக்கப்பட்டிருப்பதால் ஏதோ ஆங்கிலத்தில் விசு படம் பார்த்தமாதிரி இருக்கிறது. ட்ராமா என்பதால் மனதைத் தொடும் காட்சிகள் ஒரு சில உண்டு என்றாலும் ஆகச்சிறந்த காட்சிகள் என்று எதுவுமேயில்லை. ராபின் வில்லியம்ஸ் கண்ணீர்கூட விடமுடியாத இயந்திரமாகவே நின்றுகொண்டிருப்பதால் உண்மையில் இயந்திரம் சோகத்தில் இருக்கிறதா, சிரிக்கிறதா என்றெல்லாம் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. அப்படி உணர்ந்து கொண்டிருந்தாலும் சறுக்கலாகவே இருந்திருக்கும்.
இந்த திரைப்படத்திலிருந்து “எந்திரன்” திரைப்படம் உருவானதாகக் கூறியவர்கள் முதலில் இரண்டு படங்களையும் நன்கு பார்க்கவேண்டும். இரண்டுக்கும் கதையே சற்று வித்தியாசமானது; உணர்வு வந்த ஒரு ரோபோ காதலில் விழுவது குறித்தது பைசண்டனியல் மேன் திரைப்படம் ; உணர்வு புகுத்தப்பட்ட ரோபோ, காதலில் விழுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றியது எந்திரன். ஆக இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. மேலும் பைசண்டனியல் மேன் திரைப்படத்தின் எந்தவொரு காட்சிகளும் எந்திரன் திரைப்படத்தில் காப்பியடிக்கப்படவில்லை. ( i,robot படத்திலிருந்து ஒரேயொரு காட்சி மட்டுமே எந்திரன்களிலிருந்து மனிதனைக் கண்டுபிடிக்குமிடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ) ரோபோ என்ற பெயரில் இந்த திரைப்படம் பைசண்டனியல் மேனுக்கு முன்பே உருவாகவேண்டியது, ஆனால் பட்ஜெட் பிரச்சனைகளினால் நடவாமல் போனது குறித்து பலருக்கும் நினைவிருக்கும்... என்னைப் பொறுத்தவரையிலும் பைசண்டனியல் மேன் மற்றும் ஐ,ரோபோட் ஆகிய இருபடங்களிலிருந்தும் காப்பியடிக்கப்படாத திரைப்படமே சூப்பர்ஸ்டார் நடித்த எந்திரன். மற்றபடி எந்திரன் ஒரு பிரம்மாண்ட மசாலா என்பதை மறுக்கமாட்டேன்!!
பதிவு பிடித்திருந்தால் இண்ட்லியில் வாக்களியுங்கள்.
Comments
காதலி கன்னத்தில் முத்தமிட்ட உடன் ரோபோ காதல் வருவது ஆரம்பித்து பற்பல காட்சிகள். கை வலிக்கும் so not typing other scenes
http://philosophyprabhakaran.blogspot.com/2010/10/bicentennial-man.html
அந்த இணைப்பைத் தாருங்கள் பார்க்கீறேன்.
@ பிரபாகரன்.... நிச்சயம் படித்துப் பார்க்கிறேன். வருகைக்கு நன்றி நண்பர்களே