2010 - ஒரு பார்வை - 2

முந்தைய பாகத்தை ஒருமுறை படித்துவிட்டு வரவும்....

5. எந்திரன்
பிரம்மாண்டமான கமர்ஷியல் சைஃபை படம். தொழில்நுட்ப ரீதியாக தமிழ் சினிமாவில் பல புதுமைகளைக் கொண்டுவந்த எந்திரனால் ஷாருக்கின் ரா ஒன் மற்றும் முருகதாஸின் ஏழாம் அறிவு போன்றவை இன்னும் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பாகத் தரவேண்டும் என்ற உந்துதலும் கிடைத்தது. ஒரு ரோபோட்டுக்கு காதல் வந்தால் அது என்ன செய்யும் எனும் ஒன்லைனர் ஸ்டோரி. பல படங்களிலிருந்து பெறப்பட்டது எனும் குற்றம் சாற்றப்பட்டாலும் நந்தலாலா போல காட்சியை அப்படியே காப்பியடிக்காமல் இருந்தது ஒரு சின்ன ஆறுதலும் கூட. ரஜினி எனும் 62 வயது இளைஞரை நன்றாக வேலை வாங்கி ஓரளவு நடிப்பையும் உள்வாங்கி ஷங்கரால் எடுக்க முடிந்திருக்கிறது. எந்திரனின் மேக்கிங் காட்சிகளில் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. எந்திரனில் பல குறைகள் இருந்தாலும் நம்மைக் காட்டிலும் பெரிய சினிமாத்துறையான இந்தியும் எந்திரனைத் திரும்பிப் பார்க்க வைத்தது ஒரு சாதனைதான்.!! இந்தி பதிப்பில் மட்டுமே கிட்டத்தட்ட 30 கோடியைத் தாண்டியிருக்கிறது வசூல். இத்தனைக்கும் டப்பிங் படம்.

4. மதராசப்பட்டினம்கிரீடம் படத்தை டிவியில் தான் பார்த்தேன். வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து கொஞ்ஞ்ஞ்சம் மாறியிருந்த அந்த படம் எனக்குப் பிடித்திருந்தது. அதே இயக்குனரின் வண்ணத்தில் மதராசப்பட்டினம் ஒரு தமிழ் டைட்டானிக் என்று விமர்சகர்கள் சொல்லிவிடுகிறார்கள். ஒரேமாதிரியான காதல் கதைகளைப் படமெடுப்பதில் நம் ஆட்களை மிஞ்ச எவருமில்லை, விஜயும் விலக்கல்ல. என்ன... இது காதல் சுதந்திரப்போராட்டம்... ஹேராம் படம் முழுக்க ஒரு சுதந்திர வாசம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி துளிகூட இல்லாமலிருந்தது மிகப்பெரிய குறை. தவிர ஓரிரு வரலாற்று பிழைகளும் படத்தில் அடக்கம். சலவைத் தொழிலாளியான ஆர்யாவைக் காதலிக்கும் எமி ஜாக்ஸன் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து இந்தியாவை விட்டு வெளியேறுகிறார். பின்னர் பலநாட்கள் கழித்து வந்து பார்க்கிறார். இது படத்தின் கதை. பழைய சென்னையை ஓரளவு காட்டியது, எமி ஜாக்ஸனின் அழகு நிறைந்த நடிப்பு, ஓரளவு சலிப்பில்லாமல் போன திரைக்கதை ஆகியவையோடு ஹிஸ்டரி படங்கள் எடுக்க சிரமப்பட்டு வரும் தமிழ் சினிமாவுக்கு இப்படம் ஒரு சான்று ஆகியவையே படத்தின் நிறை...

3. களவாணி.
நான் எங்கள் அக்கா கிராமத்திற்குள் சென்றால் கையில் கேமரா இல்லாமல் நுழைய மாட்டேன். பார்ப்பதையெல்லாம் போட்டோ பிடிப்பதையே தொழிலாக வைத்திருப்பேன். ஒருவேளை கையில் ஒரு வீடியோ கேமரா கொண்டு சென்று ஒரு காதல் ஜோடியை படமெடுத்தால் எப்படியிருந்திருக்கும்... அப்படியிருந்தது களவாணி. பிரம்மாண்டம் என்ற பெயரில் வீணாக காசை செலவு செய்து தியேட்டருக்கு வருபவர்களைத் தலைவலிக்கச் செய்யும் படங்களுக்கு மத்தியில் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட களவாணி உண்மையிலேயே 2010 ல் சிறந்த திரைப்படமே. களவாணியாகத் திரியும் விமலுக்கும் ஓவியாவுக்கும் காதல் ஏற்பட்டு பின் வரும் விளைவுகளே திரைப்படம். நண்பர் குலாம். அழகான ஓவியா, கிராமப்புறம், ஓவர்லாப் வசனங்கள், அலுக்காத திரைக்கதை ஆகியவையே நிறை. முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். படத்தில் நிறைய குறையிருந்தாலும் நகைச்சுவை கொண்டே ஓட்டையை சரிசெய்ய முயன்றிருக்கிறார்கள். களவாணி போன்ற அலுக்காத அதேசமயம் காசை பதம்பார்க்காத திரைப்படங்கள் தேவையே.. எனினும் காதல் கதையாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

2. விண்ணைத்தாண்டி வருவாயா...மீண்டும் ஒரு காதல்.. எந்தவொரு வித்தியாசமுமில்லாமல்.. ஆனால் முழுக்க முழுக்க படத்தைப் பார்க்கத் தூண்டியிருப்பது கெளதம் மேனம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, மற்றும் திரிஷா.. ஒரு சாதாரண காதல் கதையை எவ்வளவு பிரம்மாண்டமாக சொல்லமுடியும்? சிம்பு தன் மேல்வீட்டு பெண்ணான திரிஷாவைக் காதலிக்க வழக்கம்போல வீட்டில் எதிர்ப்பு... திருமணம் ஆனதா? இல்லையா? என்பது படத்தின் முடிவு.. இதுவரை எந்த காதல் படங்களிலும் இவ்வளவு வசனங்களைப் பார்த்ததேயில்லை. மிக இயல்பான நாடகத்தனமற்ற வசனங்கள். சில சமயம் சிலிர்ப்பூட்டும் வசனங்கள்... படம் முழுக்க ஏ.ஆர் ரஹ்மான் ஆட்சியே செய்திருக்கிறார். அவரது பெஸ்ட் படங்களில் இதுவும் ஒன்று. இதுவரை பார்த்திராத சிம்பு, திரிஷா.. ஒவ்வொரு படத்தின் மூலமும் கெளதமும் ஏ.ஆர் ரஹ்மானும் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டேயிருக்கிறார்கள்... ஓரிரு இடங்களில் படம் இழுவை போலத் தெரிந்தாலும் இசை வந்து குறையை அடைத்துவிடுகிறது. என்னைக் கேட்டால் விண்ணைத் தாண்டி வருவாயா ஒரு மியூஸிகல் ரொமான்ஸ் என்றே சொல்வேன். இந்த படத்திலும் சில காட்சிகள் ஆங்கிலப் படங்களில் வந்ததைப் போலவே இருந்தது என்றாலும் பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை!!

1. அங்காடித் தெரு.வசந்தபாலனின் இன்னுமொரு மாஸ்டர்பீஸ். கடைகளில் வேலை செய்யும் இளைஞர்கள், பெண்கள் படம் அவஸ்தையை ஒரு குறிப்பிட்ட கடையை வைத்தே சொல்லியிருக்கும் விதத்தில் வசந்த பாலனின் தைரியத்தைப் பாராட்டலாம். இயக்கம் எப்படியோ அப்படியே வசனங்களும்.. ஜெயமோகன் அக்னிக்குஞ்சாக படத்தில் வார்த்தைகளைத் தெறித்திருக்கிறார். தென்மாவட்டத்திலிருந்து வேலைக்காக சென்னைக்கு வரும் மகேஷ் வேலையிடத்தில் அடாவடியாக இருக்கும் அஞ்சலியோடு மோதி பின் காதல் செய்கிறார். அந்நிறுவனத்தில் காதல் செய்வது பிடிக்காது என்பதால் ஒரு சூழ்நிலையில் இருவரும் வெளியேறுகிறார்கள். எப்படி வாழப்போகிறார்கள் என்பது மீதி.. இந்தமாதிரியான படங்களில் நகைச்சுவை சிலசமயம் ப்லாக் காமெடி போன்றிருக்கும். தான் செய்யும் வேலை எத்தனை கஷ்டமாக இருந்தாலும் வீட்டுச் சூழ்நிலையின் பொறுத்து அதனை எப்படி லாவகமாக கையாள்வது என்று ஒவ்வொரு கடைப் பையன்களுக்கும் தெரிந்தேயிருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் கனமானவையாக இருந்ததும் சென்னையில் ஒருவர் எப்படியெல்லாம் முன்னேறிவிடுகிறார்கள் என்பதை கழிவறை சுத்தம் செய்யவந்தவர் பின் அதற்கே ஓனர் ஆவது போன்ற காட்சியில் சொல்லியிருப்பார்கள்.. பாடல்களும் அருமையாக இருந்தது.. ஒருசில விஷயங்களைத் தவிர்த்து கொஞ்சம் கனத்தைக் கூட்டியிருந்தால் ஒரு பர்ஃபெக்ட் உலகத் திரைப்படமாக ஆகியிருக்கும்.. 2010 ல் வெளிவந்த அத்தனை படங்களிலும் சிறந்த படம் இதுவொன்றே!!

இந்த பத்து படங்களிலும் பிரதானமாக இருப்பது காதல் மட்டுமே நந்தலாலா தவிர.............. இயக்குனர்கள் இன்னும் காதலை விட்டு இறங்கி வரவேயில்லை. ஆனால் யாரும் வித்தியாசமாக காதலைச் சொல்லுவதாகவுமில்லை!! ஆனால் ஜெயமோகன், எஸ்.ரா போன்றவர்கள் களமிறங்குவதும் ஒருசில நல்ல திரைப்படங்கள் வருவதும் தொடர்ந்தால் தமிழ் சினிமாவும் நல்ல நிலைமைக்கு உயரும் வாய்ப்பு இருக்கிறது!!

Comments

Popular Posts