தமிழருக்கு உலக அங்கீகாரம் - ஓட்டு போடுங்க

நேசம் கிருஷ்ணன்... 

மதுரை இளைஞர் கிருஷ்ணன்... சி.என்.என். (CNN) தேர்ந்தெடுத்துள்ள உலகின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவர்.

சமூக அக்கறை, நம்பிக்கை, விடா முயற்சி இவற்றை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு இந்தப் பூமியில் மாற்றத்தைக் கொண்டு வர முனைந்து செயல்படுவோரைக் கண்டறிந்து, ஆண்டுதோறும் சிறந்த மனிதர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் திட்டமே 'சி.என்.என். ஹீரோஸஸ்'.

இதில், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 10 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், தமிழரான கிருஷ்ணன். (இவர், முதலிடம் பெறுவது உங்கள் கையில் - விவரம் கீழே)

தனி மனிதர் ஒருவருக்கு உணவில்லாதபோது, அவரது வயிற்றுச் சோறிட்டு வருபவர் இவர்.

கிருஷ்ணனை 2005 ஆம் ஆண்டே வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது விகடன். அவரது சமூகப் பணியின் ஆரம்பகட்ட நிலை குறித்து ஜூலை 31, 2005 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரை இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்காக...

****

நம்பிக்கை மனிதர்கள்... 'நேசம்'கிருஷ்ணன்!

நான்கு வருடங்களுக்கு முன் கேட்டரிங் டெக்னாலஜி முடித்துவிட்டு, பெங்களூரில் ஸ்டார் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன். சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வேலை வாய்ப்பு அவருடைய கையைப் பிடித்து இழுக்க... அங்கு புறப்படும் முன் ஒரு வாரம் ரிலாக்ஸ்டாக இருப்பதற்காக சொந்த ஊரான மதுரைக்குப் போயிருக்கிறார் கிருஷ்ணன். அந்த பயணம் ஒட்டு மொத்தமாக அவருடைய வாழ்க்கையையே மாற்றிப்போட, இன்றைக்கு மனித நேயம் மிக்க மனிதராக உருவெடுத்திருக்கிறார் கிருஷ்ணன்.

"அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போனப்புறம் சும்மாதானே இருக்கோம்... ஊரை ஒரு ரவுண்ட் அடிப்போம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு மதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கமா போனேன். மேம்பாலத்தை ஒட்டி ரோட்டோரமா அழுக்குத் துணிபோல கிடந்தார் ஒரு பெரியவர். நெருங்கிப் பார்த்தேன்... மனநிலை சரியில்லாத நபரான அந்தப் பெரியவர், தன்னோட நரகலை தன் கையில எடுத்து சாப்பிட்டுக்கிட்டிருந்தார். எனக்குள்ளே ஷாக் அடிச்ச மாதிரியிருந்தது. உடனே அவரோட கையப் புடிச்சு உதறி விட்டேன். அவரைச் சுத்தப்படுத்தி உட்கார வெச்சுட்டு, ஓட்டல்ல இருந்து இட்லிய வாங்கிவந்து குடுத்தேன். அவரோட கண்கள்ல நீர்கட்டி நின்னுச்சு.

அதே நினைப்போட வீட்டுக்குத் திரும்பி வந்த நான், இந்த மனித வாழ்க்கையில இப்படியெல்லாம் கஷ்டங்கள் இருக்கறத நினைச்சு நினைச்சு 'ஓ'னு அழுதேன். அதுக்கப்புறம் எனக்கு சுவிட்சர்லாந்து பெருசா தெரியல. 'ஸ்டார் ஓட்டல்ல ஐந்நூறு ரூபாய்க்கு ஃப்ரைடு ரைஸ் வாங்கி, அதுல முக்கால் பிளேட்ட சாப்பிடாம மிச்சம் வெச்சுட்டுப் போறவங்களுக்கு சர்வீஸ் பண்றத விட, தெருவோரத்துல தூக்கி வீசப்பட்டவங்களுக்கு சேவை பண்றதே சரி'னு என் மனசுக்கு பட்டுது. ஊர்லயே தங்கிட்டேன்" என்று படு இயல்பாகச் சொல்லி நம்மை நெகிழவைக்கிறார் கிருஷ்ணன்.

இன்றைக்கு மதுரை தெருக்களில் வேண்டாத பொருளாக எறியப்பட்டுக் கிடக்கும் நூற்று இருபது பேருக்கு மூன்று வேளையும் வயிறார சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணன். மனநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், உழைத்து சாப்பிடமுடியாத முதியவர்கள் என்று பாவப்பட்ட ஜீவன்கள்தான் அவர்கள் அனைவரும்.

"எந்த நேரமும் நான் இதே சிந்தனையா திரியுறத பாத்துட்டு எங்க சொந்தக்காரங்க, 'இவன முனி அடிச்சுருக்கு'னு கிளப்பி விட்டுட்டாங்க. அதக்கேட்டுட்டு எங்க அம்மாவும் அப்பாவும் சோட்டாணிக்கரைக்கு என்னைய இழுத்தாங்க. 'அதுக்கு முன்னாடி நான் சாப்பாடு போடுற அந்த ஜீவன்களை ஒரு தடவ நீங்க நேருல வந்து பாக்கணும்'னு அம்மாகிட்ட சொன் னேன். எங்கூட வந்து அந்த ஜீவன்கள பாத்துட்டு வீட்டுக்கு வந்ததுமே, 'இத பாருப்பா, நீ அந்த ஜீவன்களுக்கு சோறு போடு. ஒன்னைய புள்ளயா பெத்து பாக்யம் பண்ணினதுக்காக உனக்கு நாங்க சோறு போடுறோம்'னு ரெண்டு பேருமே கண்கலங்கிப்போய் சொன்னாங்க. அதிலிருந்துதான் நான் முழு நேர வேலையா இதை செய்ய ஆரம்பிச்சேன்" என்று சொல்லி தன் பெற்றோரின் மீதான மரியாதையையும் அதிகப்படுத்தினார் கிருஷ்ணன்.



இன்று இந்த நூற்று இருபது பேருக்கும் ஒரு நாளைக் கான உணவை சமைத்து சப்ளை பண்ணி முடிக்க, மூவாயிரம் ரூபாய் செலவு பிடிக்குமாம். இவருடைய தொண்டுள்ளத்தை கண்டு நெகிழ்ந்துபோன சேவை உள்ளம் கொண்ட இருபது பேர், மாதாமாதம் தலா மூவாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாளைக்கு உண்டான செலவை ஏற்றுக்கொண்டு வருகிறார் களாம். கிருஷ்ணனின் பெற்றோர் இருவரும் மேற்கொண்டு இரண்டு நாட்களுக்கான செலவை பகிர்ந்துகொள்ள, மீதி எட்டு நாட்களுக்குத்தான் சிரமம். திருமணம், பிறந்தநாள் என்று ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள், கொடுக்கும் உணவை வைத்து அதைச் சமாளித்து வருகிறார் கிருஷ்ணன்.

சாப்பாடு சப்ளை போக மீதி நேரங்களில் அழுக்காக திரியும் மனநோயாளிகளை மாநகராட்சி குளியலறைக்குள் கூட்டிபோய் குளிக்கவைத்து அவர்களுக்கு மாற்றுத் துணி கொடுத்து பளீச் ஆக்கிவிடுகிறார். முடிவளர்த்துக் கொண்டு திரியும் மனநோயாளிகளை உட்கார வைத்து, கத்தரி பிடித்து அவர்களுக்கு முடி வெட்டிவிட்டு அழகு பார்க்கிறார், வேதங்களை முறைப்படி கற்ற 24 வயது, கிருஷ்ணன்!

- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

***

ஆரம்ப காலகட்டத்தில் நாளொன்றுக்கு நூற்று இருபது பேரின் பசிப் பணியைப் போக்கி வந்த கிருஷ்ணன், கடந்த எட்டு ஆண்டுகளாக தனது அக்ஷயா அறக்கட்டளை மூலம் தினமும் ஏறத்தாழ 400 பேருக்கு மூன்று வேளை உணவு அளித்து வருகிறார்.

அன்றாடம் காலை 4 மணிக்கே துவங்கிவிடும் இவரது சேவைப் பயணம், சுமார் 200 கி.மீ தூரம் வரை மதுரையை வலம் வந்து, வீடற்ற ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குவது வழக்கம்.

கிருஷ்ணனின் அடுத்த இலக்கு... வீதியில் வசிப்போருக்கு வசிக்க வீடு கட்டித் தருவதே. அதற்கான, செயல் திட்டங்களை வகுத்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

உங்கள் ஓட்டு கிருஷ்ணனுக்கே...

உலகின் சிறந்த 10 மனிதர்களைத் தெரிவு செய்துள்ள சி.என்.என்., அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சி.என்.என். ஹீரோ ஆஃப் தி இயர்' என்ற கெளரவத்தை அளிக்க இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

சி.என்.என். தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.

"என்னுடைய மக்களைக் காப்பற்ற வேண்டும். இதுவே, எனது வாழ்க்கையின் நோக்கம்."

- இந்த உன்னத மந்திரச் சொல்லை தனது ஒரே கொள்கையாக கொண்டுள்ள மதுரை நேசம் கிருஷ்ணன், உலகின் முதன்மை நாயகனாக தேர்ந்தேடுப்பதற்கு, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய
 

http://heroes.cnn.com/vote.aspx

நவம்பர் 18 ஆம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

கிருஷ்ணன் பற்றிய முழு விவரங்களைத் தரும் சி.என்.என். பக்கம்..

THIS IS YEAR HERO NARAYANAN KRISHNAN (PROTECTING THE POWERLESS)

கிருஷ்ணனின் அக்ஷயா அறக்கட்டளையின் வலைத்தளம்... 

இணையவாசிகள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தாலே கிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி!


நன்றி : ஆனந்த விகடன். (நியூஸ் விகடன்)

இங்கே வாக்களிப்பதன் மூலம் இச்செய்தி பலரைச் சென்றடையும்..

Comments