புத்தக வாசம்

புத்தகங்களிலிருந்து கசிந்து அறை நிரப்பும் வாசம் வாசிக்கும் மனமாயலோகத்தில் அடைந்து கிடக்கும் துவாரங்களைத் திறந்துவிட்டுச் செல்கிறது. சிலசமயம் நன்கு திறந்து மாசடைந்து கிடந்த துவாரங்களை மூடிவிட்டும் செல்கிறது. புத்தகங்களின் வேலையே இதுதான். ஆனால் அவை நம்முள் நெடுக பயணிக்கின்றன. அதன் பயணத்தின் போது நமக்கு பல குறிப்புகளையும் துப்பிவிடுகின்றன. குறிப்புகளும் குறியீடுகளும் நிறைந்த அதன் எச்சில் வழியே வாசிப்பின் அடுத்த நகர்வு உள்ளதை படைப்பாளிகள் அறிந்துவைத்திருப்பார்கள்.

ஈரோடு புத்தகக் கண்காட்சியில் புத்தகப் பெண்களை காமத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சமயம் ஒரு சிறுமி, வயது பத்துக்குள் இருக்கலாம். புத்தகத்தைத் திறந்து அதனுள் எழும் வாசத்தை நுகர்ந்தாள். அச்சு வாசனை அத்தர் வாசனையைக் காட்டிலும் அவளுக்கு இன்பம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. வாசிக்கும் நாம் அனைவருமே அதன் வாசத்தை அதற்கே அறியாமலோ அல்லது நம்மை அறியாமலோ நுகர்ந்துவிடுகிறோம். அது சிலசமயம், என்னை நுகர்ந்து கொள் என்று தன்னை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது. நிர்வாணமாய் தன்னைக் காட்டி நமக்கு ஆடை அணிவிக்கிறது. அச்சிறுமிக்கு புற வாசனையைப் போன்று நமக்கு அகவாசனை. எழுத்துக்களில் மலிந்து கிடக்கும் தரமான வாசத்தைப் பிரித்து எடுப்பது நம் நுகர்வின் பணி. புத்தகங்கள் தேர்ந்தெடுத்தலைப் போன்ற மிகக் கடினமான தேர்வுப் பணி வேறேதுமில்லை. அதன் அக அழகின் ஆழம் அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ளக் கூடியதல்ல. அதை முதல்முறையாக உணர்ந்தேன்.

குழந்தைகள் பொருட்காட்சியை சுற்றும் பொழுது ஏற்படும் உவகையைப் போன்றே புத்தக கண்காட்சிகளில் வாசகனுக்கு உண்டாகின்றன. முன்பே ஒருமுறை கூறியிருக்கிறேன். புத்தக கண்காட்சிகளுக்குச் செல்லும் பொழுது, முதலில் பதிப்பகம் வாரியாக பிரித்துக் கொண்டு பிறகு மறுமுறை சுற்றுவேன். இம்முறை அப்படிச் சுற்றியதில் பல புத்தகங்களையும் தவறவிட்டது குறித்து மிகவும் வருத்தப்பட்டேன். பிறகு மறு சுற்றலில் அவை கிடைக்கவேயில்லை. புத்தக தேர்ந்தெடுத்தலுக்கான வழிமுறைகளிலிருந்து நான் பிசகி நடப்பதாக எனக்குப் பட்டது.

குறைந்த பதிப்பகங்களே ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு வந்திருப்பதாகத் தென்பட்டது. பல எதிர்பார்த்த புத்தகங்கள் இல்லையென உச் கொட்டி சென்றவர்களையும் காணமுடிந்தது. இளம்பெண்கள், பா.விஜய், தபூசங்கர், வைரமுத்து போன்றோரின் கவிதைகளைப் படித்து உடன் வந்திருந்த தோழிகளிடம் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்புத்தகங்களில் காதல் வாசம் தூக்கியிருக்கவேண்டும். பலதரப்பட்ட வயதினரையும் காணமுடிந்தது.

கிருஷ்ணபிரபு எனக்கு அடிக்கடி சொல்வார். புத்தக வாசிப்பு உங்களுக்கு அவசியம் தேவை என்று. தேவை என்று உணரும்பொழுது அதற்கான முயற்சிகளையும் நாம் எடுக்கவேண்டும். ஆக, எனக்கு மிகவும் பிடித்த தொழிலான கவிதையும் கவிதை சார்ந்துமே அதிக புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்தேன். கீழ்பட்டியலிட்டவை சொந்தமாக்கப்பட்டுவிட்டன புத்தகங்கள் மட்டும்..

கவிதையும் கவிதை சார்ந்தும்...

கவிதைகள் :
என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - மனுஷ்யபுத்திரன்
காயசண்டிகை - இளங்கோ கிருஷ்ணன்
உறுமீன்களற்ற நதி - இசை
நீராலானது - மனுஷ்யபுத்திரன்
பூமியை வாசிக்கும் சிறுமி - சுகுமாரன்
மணலின் கதை - மனுஷ்யபுத்திரன்
கல்யாண்ஜி கவிதைகள் - கல்யாண்ஜி

கட்டுரைகள் :

சித்திரங்களின் விசித்திரங்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்
எப்போதும் வாழும் கோடை - மனுஷ்யபுத்திரன்
கவிதை எனும் வாள்வீச்சு - ஆனந்த்
நவீன தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்

கதை சார்ந்து:

என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
நகுலன் வீட்டில் யாரும் இல்லை - எஸ்.ராமகிருஷ்ணன்

இப்படி பட்டியலிடுவதன் மூலம், என்னை நான் தனித்துக் காட்டவோ, அல்லது வேறெந்த வகையிலும் சிறப்பிக்கவோ முனைய வரவில்லை. பின் வரும் பின்னூக்கங்கள் அது குறித்துப் பேசப்படலாம். வேறு சில உதாரணங்கள், முன்மொழிகள் சுட்டலாம். அல்லது தேவையானது தேவையற்றது என வகைப்படுத்தலாம்.. அது உங்கள் கைகளில்...

Comments

உண்மை தான் புத்தக வாசம் நுகர்தல் ஒரு தனி சுகம் தான் ...

வைரமுத்து இன்னும் இளைஞர்களை கட்டுக்குள் வைத்திருக்கிறார் ...

உங்கள் பட்டியலில் மனுஷ்யபுத்திரன் நிறைய இருக்கிறார் - படித்த பின் சமயம் கிட்டின் பகிருங்களேன் ...
sakthi said…
குறிப்புகளும் குறியீடுகளும் நிறைந்த அதன் எச்சில் வழியே வாசிப்பின் அடுத்த நகர்வு உள்ளதை படைப்பாளிகள் அறிந்துவைத்திருப்பார்கள்.

கண்டிப்பாக ஆதவா

புத்தகங்களால் மட்டுமே இது சாத்தியப்படும்
sakthi said…
அருமையான புத்தகங்கள் பலவற்றை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்

வாழ்த்துக்கள் ஆதவா!!!
ஆதவா, சொல்லியிருக்கலாமே நீங்க கண்காட்சிக்கு போறத...... உங்க லிஸ்ட்ல மூணு புக் என்னிடம் இருக்கு.... ஷேர் பண்ணியிருக்கலாம்...:-)
வாசிக்கும் நாம் அனைவருமே அதன் வாசத்தை அதற்கே அறியாமலோ அல்லது நம்மை அறியாமலோ நுகர்ந்துவிடுகிறோம்>>>>
அருமையான வரிகள்.வாழ்த்துகள்
நல்ல கலெக்‌ஷன் நண்பா.. சில புத்தகங்கள் விடுபட்டுப் போச்சேன்னு கவலையெல்லாம் பட வேண்டாம்.. மதுரைல கரெக்ட் பண்ணிக்கலாம்ப்பா..:-))))
rvelkannan said…
எல்லாம் தேவையானது தான் இதுவும் இதற்க்கு மேலும்.
தேவையற்றது என்று ஒன்றும் இல்லை என்பது என் கருத்து நண்பரே
இவைகளில் என்னுடைய மிக மிக விருப்பமானது

பூமியை வாசிக்கும் சிறுமி - சுகுமாரன்
கல்யாண்ஜி கவிதைகள் - கல்யாண்ஜி

கவிதை எனும் வாள்வீச்சு - ஆனந்த்
(மிக கவனமாக படிக்கவும் நண்பரே. நம்மில் பலரும் படிக்கவேண்டிய புத்தகம் )
நகுலன் வீட்டில் யாரும் இல்லை - எஸ்.ராமகிருஷ்ணன்
ஆதவா said…
அனைவருக்கும் நன்றி..

@ முரளி,
நான் வேறு விஷயமாக ஈரோடு சென்றிருந்தேன். இதுவரை யாரிடமும் புத்தகம் பகிர்ந்து கொண்டதில்லை. தவறாக எண்ணவேண்டாம். எனக்கு புத்தகப் பகிர்வு அவ்வளவாகப் பிடிக்காது;