ஒரு நாள் ஒரு இரவு பாகம் 3

கார் எப்படி நின்னுச்சு தெரியுமா? பள்ளத்துக்கு பக்கத்தில.... டோரை திறந்து காலை கீழ வெச்சா பள்ளம். அப்படியே விழுக வேண்டியதுதான்...கோவிந்தா கோ..விந்தா.. எல்லோருமே ஜாக்கிரதையா இறங்கினோம். என்னை இறக்கி விட்டாங்க.. என்னாச்சுன்னு வந்து பார்த்தோம்.. காரோட இடது முன்பக்க சக்கரம் காணாமப் போயிருந்தது... காருக்கு அடியில தேடினோம்.. இப்படி சொல்றதை விட, தேடினாங்க....ஆனா கிடைக்கல.. என்ன கொடுமைங்க இது... ஓட்டிட்டு வந்த காரோட சக்கரம் காணாம போச்சு. அம்பாஸ்டர் பாடியில மட்டும் ச்ச்சின்ன அடிபட்டிருந்தது. தேடினோம் தேடினோம் தேடினோம்.... மூலை முடுக்கெல்லாம் தேடினோம்...ம்ஹூம்.... காரோட சக்கரம் கிடைக்கல..

டால்பின் நோஸ்ல இருந்து அப்பர் பாரிஸுக்கு திரும்பி வர வண்டியெல்லாம் நம்மளை ஒருமாதிரியா பார்த்துட்டுத்தான் போனாங்க. இப்ப என்ன பண்றது?

நாங்க காரை அதுவும் ரொம்ப ஓரமா “பார்க்” பண்ணி வெச்சிருந்ததைப் பார்த்த ஒரு கோஷ்டி, என்னாச்சுன்னு வந்தாங்க.

“காரை ஓட்டிட்டே வந்தோங்ணா, திடீர்னு காரோட சக்கரத்தைக் காணோம்”

“என்னப்பா சொல்றீங்க, சக்கரத்தைக் காணோமா? எப்படி ஆச்சு?”

”மெதுவாத்தான் வந்திட்டிருந்தோங்ணா, திடீர்னு கிர்ர்ர்னு சவுண்டு வந்திச்சி, வண்டி அப்படியே சாஞ்சாப்ல போயிட்டிருந்தது. மெதுவா போனதால கார் இழுத்துட்டு இங்க வந்து நின்னிடுச்சு, இறங்கி வந்து பார்த்தா சக்கரத்தைக் காணோம்.. தேடிட்டு இருக்கோம்.”

“ரோட்ல கோடு போட்டு வெச்சிருக்கீங்க”

“தெரியலைங்ணா, ஏதோ ஒரஞ்சிட்டு வந்திருச்சாட்டிருக்கு”

“பள்ளத்தில கிள்ளத்தில விழுந்திருச்சோ என்னவோ?”

”இன்னம் பாக்கலைங்க, தேடோணும்”

“கயிறு இருந்தா இடுப்புல கட்டி கொஞ்சம் இறங்கிப் பார்க்கலாம்”

“கயிறு இல்லை, சீரி இருக்கு (பனியன் துணிதான் கயிறு மாதிரி நீண்டு இருக்கும்)”

“ஏதோண்ணு, கொண்டுவாங்க பார்த்தடலாம்.

காரோட டிக்கியில சீரி இருந்துச்சு, அதை எதுக்கு வெச்சிருந்தான்னு தெரியலை, நேத்திக்கு ப்லாக் தண்டர்ல வண்டிய பார்க் பண்ணிட்டு அங்கயே ட்ரஸ் சேஞ்ச் பண்ணப்பவே கவனிச்சேன். ஆனா கேக்கலை. ரெண்டு மூனு சீரியை கட்டி அதை இடுப்புல கட்டி, கோகுல் பள்ளத்தில இறங்கினான்.. கூடவே அந்த மனுஷனும் இறங்கினாரு. கால் வெச்சா சருக்கிற அளவுக்கு இருந்துச்சு போல, நிறைய மரங்கள் இருந்துச்சு. அதில எங்கயாச்சும் முட்டிகிட்டு சக்கரம் நின்னாலும் நிக்கும். இதையெல்லாம் நான் வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்... கூடவே அந்த கோஷ்டியில் வந்திருந்த பொண்ணையும்...

“அண்ணா, சக்கரம் இங்க இருக்கு”

கோகுல் குரல் கொடுத்தான். சக்கரம் ஒரு மரத்தோட இடுக்கில மாட்டியிருக்கு...... அந்த மரம் பார்க்க, கூண்டு மாதிரியே இருந்தது.. கரெக்டா சக்கரம் உள்ள மாட்டியிருந்தது. இன்னும் ஒருத்தர் பள்ளத்தில இறங்கினாரு... அவங்களுக்கு கட்டின அந்த சீரி கயித்த ஸ்கூபியும் ராக்கியும் பிடிச்சுக்கிட்டாங்க. கோகுலும் அந்த இன்னொருத்தரும் சக்கரத்தை மெதுவா மேல கொண்டுவந்தாங்க... அப்பாடா.....

எங்க கார்ல ஆக்சுவலா என்ன நடந்திருக்குன்னா, சக்கர ராடுல இருந்து பிய்ஞ்சு தனியா கழண்டு எங்கியோ விழுந்து ஓடிடுச்சு.. ஒரு படத்தில பார்த்திபன், வடிவேலுகிட்ட சொல்லுவாரே... முன்னால சக்கரம் ஓடுதுன்னு... அந்த கதை ஆயிடுச்சு.. ஆனா சக்கரம் ஓடினதை நாங்க யாரும் பார்க்கலை.. ராடு கட்டாகி கார் சாஞ்சிட்டதால கிர்ர்ர்னு சவுண்டு. இரும்பு பட்டறையில இரும்பை அறுக்கிறமாதிரி... இதையெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில யூகிக்க முடியலை.

நான் ஒரு ஓரமா உட்கார்ந்திட்டேன்... நம்மளால என்ன பண்ணமுடியுமோ, அதத்தானே செய்யமுடியும்?

கூட நின்ன கோஷ்டியும் (அந்த பொண்ணும் ) கிளம்பி போயிட்டாங்க... தேங்க்ஸ் டூ அந்த கோஷ்டி.. அவங்க இல்லாட்டி நிச்சயம் சக்கரத்தை எடுத்திருக்க முடியாது... இப்ப இதை பொருத்தனும்... ராட்ல இருந்து கட் ஆயிட்டதால கண்டிப்பா வெல்ட் வைக்கறாப்படிதான் இருக்கும்... ஆனா எதுக்குமே மெக்கானிக் வேணுமே...இந்த இடத்தில மெக்கானிக்கை எங்கன்னு போயி தேடறது? குன்னூர்லதான் மெக்கானிக் ஷாப் இருக்கும். இருக்கிற இடமோ அப்பர் பாரிஸுனு பேரு. கரெக்டா பஸ் ஸ்டாப்புக்கு நேரா கார் நின்னிருக்கு.

எங்களோட அதிர்ஷ்டம்.... அந்தவழியா ஒரு மெக்கானிக் வந்தாரு... நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்டுட்டு, சக்கரத்தை மாட்டிடலாம்னு சொன்னாரு.. டோ கட்டி இழுத்துட்டு போயிடலாமான்னு கேட்டோம்.. வேண்டாம்னு சொல்லிட்டு, கோகுலை கூப்பிட்டுட்டு அந்த மெக்கானிக் வந்திருந்த மோட்டார் சைக்கிள்ல குன்னூர் பொறப்பட்டாரு...

அது எவ்வளவு பெரிய தப்புன்னு அப்ப தெரியலை........

இத்தனை விஷயம் நடந்ததெல்லாம் மதியம் ரெண்டு மணி இருக்கும். சாப்பிடவேற இல்லை. பசியெடுத்துச்சு. மெக்கானிக்கும் கோகுலும் போனவங்க ஆளையே காணோம். இங்கிருந்து ஒரு போன் கூட பண்ணமுடியாது. டவர் இல்ல. எனக்குன்னா, நிக்கவும் முடியாம உக்காரவும் முடியாம ஒரே வலி. பசங்க டால்பின் நோஸ்ல ட்ரை நெல்லி வாங்கியிருந்தானுங்க. ஒவ்வொன்னா பிச்சி பிச்சி சாப்பிட்டேன். கார் நின்னதுக்கு நேரெதெரே கரண்ட் போஸ்ட். அந்த ஏரியாவிலயே அந்த போஸ்ட் மட்டும்தான். அதுவும் பஸ் ஸ்டாப்புங்கறதால வெச்சிருக்காங்க. இல்லாட்டி அதுவும் இல்லை. அங்கிருந்து பாதை ரெண்டா பிரிஞ்சி, ஒன்னு டால்பின் நோஸுக்கு இன்னொன்னு அப்பர் பாரிஸுக்கும் போவுது. அப்பர் பாரிஸ் ரோடு, மண்ரோடு, மேடா இருக்கிறதால நிறைய கல்லை அடுக்கி வெச்சிருந்தாங்க, டிவைடர் மாதிரி. அங்க போய் உட்கார்ந்துகிட்டோம்.

”எல்லாம் இவனால வந்தது” ஸ்கூபி ராக்கியை பார்த்து சொன்னான்

“நான் என்னடா பண்ணினேன்?”

”முன்னாடி உட்காரேன்னு அடம்பிடிச்சு பாரு, வெயிட்டு தாங்காம சக்கரம் கழண்டிருச்சு”

“ஆமா இல்லைன்னா மட்டும் திருப்பூர் வரைக்கும் அலேக்கா போகுமாக்கும்?”

“எனக்கும் அந்த டவுட் இருக்குடா” நான் கொஞ்சம் ஊதிவிட்டேன்

“என்னாங்கடா, ஏக்ஸிடண்டுக்கு நாந்தான் காரணம்னு சொல்றீங்க”

“மொத்தமா நீதான்னு சொல்லல, நீயும்தான்னு சொன்னேன்”

எங்க சண்டை முடியறதுக்குள்ள கோகுலும் மெக்கானிக்கும் வந்துட்டாங்க. கையில ஒரு பெரிய சைஸ் கப்பும் அஞ்சாறு போல்டும் கொண்டுவந்திருந்தாங்க. மெக்கானிக் ஒரு சின்ன பையை எடுத்துட்டு வந்திருந்தாரு.

“எவ்வளவு நேரங்ணா ஆகும்?”

“ஒருமண்நேரம் இல்லாட்டி ரெண்டு மண்நேரத்தில முடிச்சரலாம்”

சக்கரம் கழண்ட இடத்தில உட்கார முடியாது, பள்ளம் இருக்கு. அதனால எல்லோருமா சேந்து (சரி சரி... நானில்லாமதான்) வண்டியை ஒன்ரரை அடி தள்ளி போட்டோம். மெக்கானிக் கழண்டு போன இரும்பு ராடைப் பார்த்துட்டு,

“போல்டு அப்படியே இருக்கு, அதை எடுத்தாத்தான் புதுசை போடமுடியும்” னாரு

“சரி பண்ணிடுங்க”

“ஸ்பேனர்..... 20 22 (சரியான அளவு தெரியலை) வேணும். அது என்கிட்ட இல்ல, குன்னூர்தான் போகணும்“

“ மறுபடியுமா?”

“20 22 தானேங்ணா, வண்டி டூல்கிட்ல இருக்கும்ல, வர வண்டியை நிறுத்தி கேக்கலாமே”

”ஆங்..... தந்திட்டுதான் போவானுங்க.... எவனாச்சும் ஒருத்தன்கிட்டயாச்சும் வாங்கிடுங்க பாக்கலாம்”

“ஏங்ணா, வாங்க முடியாதா”

“எவனும் நிறுத்தக்கூட மாட்டானுங்க. நான் ஒர்க்‌ஷாப்புக்குப் போயிட்டு வந்திடறேன்”

ராக்கிக்கு வேற பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு... எங்களுக்கும் தான், என்ன, நாங்க சொல்லல அவன் சொல்லிட்டான். ஏற்கனவே மணி நாலு ஆச்சு, மொதவாட்டி போயிட்டு வந்ததுக்கே ரெண்டு மண்நேரமாச்சி, இப்போ திரும்ப போயிட்டு வந்து....... எப்ப முடிச்சி எப்ப போறது?

”எனக்கென்னவோ இன்னிக்கு முடியறாப்படி தெரியலடா”

“வாயைக் கழுவுடா”

“அவன்அவன் வயித்தெரிச்சல்ல இருக்கான்”

“ஏண்டா?”

“வண்டி ஆக்ஸிடண்ட் ஆயி நிக்குது, எப்படிறா ஊருக்குப் போறதுன்னு யோசிச்சுட்டு இருக்கோம். இவனுக்கு பசிக்கிதாம்”

“அவன் வயிறு, பாவம்...”

“சிச்சுவேஷனுக்கு ஏத்தமாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்க ராக்கி”

“டேய்.... நீங்க கேட்கல, நான் கேட்டுட்டேன்.. அது தப்பாடா? உங்களுக்கெல்லாம் பசிக்கவே இல்ல.... “

மெக்கானிக் திரும்பி வந்தான், கோகுலும்தான். ஒரு ஸ்பேனருக்காக ரெண்டு பேரும் குன்னூருக்கே போயிருக்காங்க..
மணி அஞ்சரை. மெக்கானிக் ராடுல இருக்கிற போல்டை கழட்டு கழட்டுன்னு கழட்டிகிட்டே இருந்தாரு. ஒண்ணூம் முடியலை.. எல்லோரும் ஒரு சான்ஸ் ட்ரை பண்ணி பார்த்தோம். எழவு கொஞ்சம் கூட கழண்டு போகவே இல்ல.

மணி ஆறு...

ஆறு மணிக்கே இருட்டிடுச்சு, நல்ல குளிரு, ஸ்வெட்டர் யாருகிட்டயும் கிடையாது. யாருக்குத் தெரியும் இந்தமாதிரி ஆவும்னு. எனக்கென்னவோ இது நடக்கற கதையா தெரியலை. மெக்கானிக் வேற வெளிச்சமில்லை குன்னூர் போயி மெழுகுவர்த்தி வாங்கிட்டு வாங்கன்னு ஸ்ப்ரிங்கியையும் ராக்கியையும் அனுப்பிவெச்சாரு. ஸ்கூபி பக்கத்தில இருக்கிற எல தழ குச்சியெல்லாம் சேர்த்துட்டு இருந்தான்...

”எதுக்குடா சேர்த்துட்டு இருக்கிற?”

“கேம்ப் ஃபைர் போடறதுக்குத்தான்”

தொடரும்...

Comments

Tamil News 24x7 said…
உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...

Popular Posts