பிரிவின் சுமையும், ஆக்டோபஸின் காதலும்

இரண்டு குறும்படங்களை இணையத்தில் வாசித்தேன். அதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

Father and Daughter (2000)

எழுத்து & இயக்கம் : Michaël Dudok De Wit
இசை : Normand Roger, Denis L. Chartrand
மொழி : மொழிகடந்தது (நெதர்லாந்து)

பிரிவின் சுமை காலங்களைக் கடந்தும் நிற்கிறது. மனதை விட்டு அகற்றிவிடமுடியாத நினைவொன்று நாளெங்கும் வலியின் சதையைச் சுரண்டுகிறது. உறவு எனும் உறவு கட்டாயமாக்கப்பட்டு பிரிவை நிர்பந்தத்தில் வைக்கிறான் கடவுள்.

டச்சுநாட்டின் கரையொன்றில் தந்தையும் மகளும் வருகிறார்கள். பிரிவு எனும் நோயை அளித்துச் செல்ல தந்தை முடிவெடுக்கிறார். பிரிவைத் தாளாமல் மகளை அணைத்துவிட்டு, கரையில் விட்டுச் செல்கிறார். அறியாத வயதில் அமர்ந்திருக்கும் அச்சிறுமி, தந்தை வருவாரெனக் காத்திருந்து பின் துள்ளுகிறாள்.

தந்தை வரமாட்டார். தெரிந்துவிட்டது அவளுக்கு, திரும்பிச் செல்லுகிறாள்.

காலங்கள் கடக்கின்றன, கதிரின் வீச்சு மண்டையோட்டை உரிக்கும் சூரியகாலம், பூக்கள் நிரம்பி வழிந்த வசந்தகாலம், வானழுது நிலம் நனைந்த கார்காலம், மரங்கள் முடியுதிர்ந்து வழுக்கையாகிப் போன இலையுதிர்காலம்... எல்லாம் கடக்கின்றன. சிறுமி படித்து முடித்து காதலாகி, மணம்புரிந்து, குழந்தைகள் பெற்று வளர்ந்துவிடுகிறாள்.. ஒவ்வொரு காலத்திலும் அவள் தன் தந்தையை எதிர்நோக்கி அக்கரைக்கு வருகை புரிகிறாள்..

அவர் வரவேயில்லை. திரும்பிச் செல்லுகிறாள் பெருத்த ஏமாற்றத்துடன்...

பின்னுமொரு முதுமைகாலம், அவள் பனிப்போர்த்திய நதியின் கரையில் மிதிவண்டியை நிறுத்தமுடியாமல் நிறுத்திவிட்டு இறங்கி நடக்கிறாள். அங்கே, பனிமணலில் சிக்கியவாறு கிடந்த படகைக் காண்கிறாள். அது அவளது தந்தை சென்ற படகு. இறுதிவரையிலும் அவளால் காணவே முடியவில்லை. காலம் கடக்கிறது. முதியவள் எழுந்து நோக்குகிறாள், தொலைவில் அவரது தந்தை நின்றுகொண்டிருக்கிறார், தனது முதுமையை விட்டு நீங்கி இளமையாக அவளது தந்தையை அடைகிறாள், அணைக்கிறாள். தனிமையெனும் பெரும்சக்தியை மகள் வெல்லட்டும் என தந்தை தன் நோய் மறைத்து பிரிகிறார். தான் இன்னும் உயிருடனே இருப்பதாக தன் மகளை நம்பவைக்கிறார். இறுதியாக முதியவள் இறந்து தந்தையை அடைவதாக படம் முடிகிறது.

மனதில் சிறிது நேரம் சலனத்தை ஏற்படுத்திய இக்குறும்படம் தந்தையின் பிரிவுக்குப் பிறகான அவளது தனிமையையும் பாசத்தின் எதிர்நோக்கையும் மிக ஆழமாகக் கூறுகிறது. எட்டு நிமிடங்களே ஓடும் இப்படத்தினுள் ஒரு வாழ்க்கையை அடக்கியிருக்கிறார்கள். அதன் அடர்த்தி பார்த்தவர்களை பாதிப்புக்குள்ளாக்குகிறது. அசைபடமான இது, மோனோ வர்ணம் பூசப்பட்ட அசைபடமாகும். ஒளியமைப்பும் பிரதிபலிப்பும் பக்கபலமாக இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் Michaël Dudok De Wit. சிறந்த அசைகுறும்படத்திற்கென 2000மாவது ஆண்டின் ஆஸ்கர் விருதும் பெற்றிருக்கிறது. உணர்வுகளை உலவவிடும் அத்தனை பேருக்கான படமிது.Oktapodi (2007)

இயக்கம் : Julien Bocabeille, François-Xavier Chanioux, Olivier Delabarre, Thierry Marchand, Quentin Marmier, Emud Mokhberi
இசை : Kenny Wood
மொழி : மொழிகடந்தது (ப்ரான்ஸ்)


கால்கள் பிணைந்து காதல் புரிந்தன அந்த ஆக்டோபஸ்கள், அதிலிருந்து ஒன்று பிரிக்கப்படுகிறது, அது எடைபோடப்பட்டு வாடிக்கையாளருக்கு விற்கப்படுகிறது, காதலியைப் பிரித்துவிட்ட விரக்தியில் கண்ணாடித் தொட்டியில் கண் வைத்து பார்க்கிறது அந்த செம்மெய் ஆக்டோபஸ். வாடிக்கையாளன் தன் காதலியை வெட்டித் தின்னத்தான் வாங்கிச் செல்கிறான் என்று உணர்ந்த அது, தொட்டியை விட்டிறங்கி வாடிக்கையாளனின் வேனை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது. மெல்ல மெல்ல கண்ணாடிக்குச் சென்று இடையூறு கொடுக்க, தன் வாடிக்கையாளன் மிரண்டு அதை அடிக்கிறான். காதலி அடைந்திருந்த பெட்டி திறக்கப்படுகிறது, இருவரும் வெளியேறுகிறார்கள்.

மனித இனத்தை வெல்ல இந்த கால் மிருகங்களுக்கென்ன திமிர்? வாடிக்கையாளன் வண்டியைச் செலுத்தினான், காதலர்களைத் துரத்தினான்; இறுதியின் வென்றது ஜோடிகள். ஆனால், எங்கிருந்தோ பறந்து வந்த கழுகொன்று ஆணைக் கவ்விச் சென்றது.... அதன்பின்???

பல விருதுகள் பெற்று, ஆஸ்கருக்குப் பரிந்துறைக்கப்பட்ட அசைபடமான இது, சிறந்த ஆக்டோபஸ் காதலர்களையும் இரண்டரை நிமிடங்களில் ஒரு சின்ன அல்லது மிகப்பெரிய சண்டைக் காட்சியையும் காட்டுகிறது. ஆனால், சண்டைக் காட்சிகள் பிக்ஸரின் படங்களை நினைவூட்டுகின்றன. ராட்டடூயில் (Ratatouille) படத்தில் இதேபோன்ற காட்சி இருக்கிறது, உயர்திணையும் அஃறிணையும் வேறு வேறு அவ்வளவே. Julien Bocabeille, François-Xavier Chanioux, Olivier Delabarre, Thierry Marchand, Quentin Marmier ஆகியோரால் இயக்கப்பட்டிருக்கிறது, அனைவரும் (குறிப்பாக சிறுவர்கள்) பார்க்கவேண்டிய படம் இது.

Comments

ஆக்டோபஸின் காதல் ரொம்ப நெகிழ வைக்கிறது ...
தந்தையின் பிரிவு அழவே வைத்து விடுகிறது

குழந்தையை பிரிந்து வெளிநாட்டில் வாழும் மக்களுக்கு இது இன்னும் அழ செய்யும்

நல்ல பகிர்வு ஆதவா!
படம் பார்ப்பதைவிட விமர்சனம் அருமை
பகிர்வுக்கு நன்றி ஆதவா..
முதல் குறும்படத்தில் வெறும் எட்டு நிமிடங்களில் நெகிழ்வான ஒரு வாழ்க்கையையே சொல்லியிருப்பது அருமை..
சிறந்த பகிர்வு நண்பா.
ஹேமா said…
ஆதவா...இரண்டு படங்களுமே மனதைப் பாசத்தால் நெகிழவைக்கிறது.இந்தமுறை ஊர் போய் வரும்போதும் விமான நிலையத்தில் அப்பா அழுதது மனதில் ஓடுகிறது.
sakthi said…
நல்ல பகிர்வு ஆதவா!
chandramohan said…
I've seen the Octopus short film. Excellent One. Very good writing.

Popular Posts