சேர்தளம் - நிகழ்வு.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வலையுலக வாசலுக்குள் அடி வைக்கிறேன். அது என் கண்களால் தொடக்கூடிய தொலைவில் இருக்கிறது. எழுத்துக்களால் நிரம்பிக் கிடக்கும் இவ்வாசலுக்கு எத்தனையோ முறை வந்து முகர்ந்து மட்டுமே சென்றிருக்கிறேன். எழுத்துக்கள் ஒவ்வொன்றும் விஷத்தன்மை கொண்டது. எட்டிப் பார்க்கும் நேரங்களில் அது கொட்டியிருக்கிறது என்னை. இப்பொழுத்தும் அப்படித்தான்.

ஆனால் இன்று திருப்பூரில் நிகழ்ந்த சேர்தளம் சந்திப்பு மிக நீண்ட பாதிப்பை மனதுக்குள் ஏற்படுத்தியிருந்தது. அது இன்று வித்தியாசமாகவும் சிறப்பானதாகவும் கவிஞர் மகுடேசுவரனைக் கொண்டு நிகழ்ந்தது. வறட்சியின் போது வளமைகளை எட்டிப் பார்ப்பது போன்று அக்கூட்டத்தினுள் நுழைந்திருந்தேன். கவிஞர் நடுவே அமர்ந்திருந்தார். நல்ல ஆஜானுபாகுவான தோற்றம். நன்கு கருத்து பெருத்த மீசை, அதன் விளிம்பு இருமுனை வாள் போன்று கூர்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. மொழியின் மேனடையை லாவகமாகக் கையாளும் கவிஞருக்குண்டான புறத்தோற்றம் கவிஞர் மகுடேசுவரனுக்குப் பொருத்தமாக இருந்தது. அவரை இதற்கு முன்பே அரிமா சங்கத்தின் சந்திப்பொன்றில் சந்தித்திருக்கிறேன். அன்றைப் போலவே இன்றும் இருந்தார். கவிதைகள் மூப்படையாதது போன்று அவரும் புற மாறுதல்களின்றி இருந்தார். நான் சற்றே தாமதமாகத்தான் நுழைந்தேன். கிட்டத்தட்ட பத்து பேருக்கும் மேலே அமர்ந்திருந்தார்கள். எண்ணிக்கையை வைத்திருக்கவில்லை அதைப் போன்றே பலருடைய பெயர் முகவரிகளும் தெரியவில்லை. (மன்னிக்க) வெயிலான், செல்வேந்திரன், பரிசல், சாமிநாதன், ராமன், முரளி, சொல்லரசன், என சிலரை மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறேன்.

இரண்டு வகையான முதன்மைப் பேச்சுக்களால் சந்திப்பு நிறைந்திருந்தது. கவிதைகளும் அது குறித்து நீடித்த விவாதங்களும், விமர்சனங்களும் சந்திப்பின் பாதிகாலத்தைத் தின்றன. கூட்டத்தில் வந்திருந்த அனைவரும் பலருடைய கவிதைகளையும், கவிஞர் மகுடேசுவரனின் கவிதைகளையும் மேற்கோள் காட்டி பேசினார்கள். புரிந்த/புரியாத கவிதைகள் குறித்து கவிஞர் தன் கருத்தை வெளியிட்டார், புரியாத கவிதைகள் எழுதப்படும் விதம் குறித்த என் சந்தேகங்களையும் அது வாசித்து, இருத்தல் குறித்த குழப்பங்களையும் சற்றேனும் தீர்த்து வைத்தது. கவிதைகளுக்கான விமர்சனங்களின் போது அது எளிமையாக கவிஞர் விளக்கினார். நண்பர்கள் அனைவரும் ஏறக்குறைய ஏதாவது ஒரு கவிதையை மேற்கோள் காட்டி உற்சாகமாகப் பேசி வந்தார்கள். அப்பொழுது வாசிப்புலகத்தின் வாசனையை நுகரமுடியாமல் போனதற்கு குறித்து வருத்தமும் ஏற்பட்டது. (இப்படி வருத்தப்படுவது இது முதல்முறையல்ல.). அனைவரும் நன்கு பேசினார்கள், நாலாபுறமும் வீசப்பட்ட கேள்விக் கணைகளை, கவிஞர் தன் இருமுனை வாளை முறுக்கிக் கொண்டே எதிர்கொண்டார், ஆனால் நான் மட்டும் மெளனத்தின் புணர்தலில் இருந்துவிட்டேன். ஒன்றுமே பேசவில்லை. பொதுவாக இம்மாதிரியான சந்திப்புக்களில் பேசுவது எனக்கு சங்கோஜமானது. மனம் தாழ்வுநிறம் பூசியது. கவிதைகளுக்குப் பிறகு சினிமா உலகம் குறித்து பேசப்பட்டது. அப்பொழுது நாங்கள் எல்லோரும் வானம் பார்த்தபடி அமர சங்கத்தின் மாடிக்குச் சென்றுவிட்டோம். இதற்கிடையே முன்னூற்றியருபது பாகைகளிலும் அவரை கருவியில் திருடிக் கொண்டிருந்தார் பரிசல்காரன்.

அரசியல், உலகமயமாக்கல், உள்ளூர் விவகாரங்கள், சொந்த அனுபவங்கள், என அத்தனையும் கவிஞர் பேசினார். அவர் குறிப்பிட்டவற்றுள் முக்கியமானது, கனவுலகம் குறித்த அதீத சிந்தனைகளும், அதனால் பாதிப்பாகும் சுயவாழ்நிலையும் ஆகும். எழுத்து ஒரு மாயக்கோப்பை, அதன் விளிம்பில் அமர்ந்து கொண்டே வாழ்க்கையை இழுத்துச் செல்பவர்களால் மட்டுமே சந்தோஷமான வாழ்க்கையை நடத்தமுடியும் என்றும், அப்படியாகத்தான் நானும் இருக்கிறேன் என்றும் கூறினார். முழுமையாக கனவுக்கோப்பைக்குள் விழுந்து உழழ்பவர்களைக் குறித்தும் அதற்கான அர்ப்பணம் குறித்தும் பேசினார். அதிலும், சினிமாவுக்குள் நுழைய குறைந்த சாத்தியங்களும் அதிக வலிகளும், நெடிய அர்பணிப்பும் தேவைப்படும் என்றார்.பொதுவாக, கவிஞனது பேச்சுக்களும், மொழிநடையும், ஒயிலும் அசாதாரணவாதிகளுக்குள் மட்டுமே புரியும்படியாகவும் புழங்கும்படியாகவும் இருக்குமென்பது நம் மனதில் இருக்கும் ஒரு மாயத்தோற்றம். அதை உடைத்தெறிந்துவிட்டு, எங்களுக்குள் கலந்து பேசியது எனக்குப் புதுமையாகத் தெரிந்தது. அவரது குரலொலி அருகிலிருப்போரைத் தின்றுவிடாதபடி மென்மைக்கும் உரத்தொலிக்கும் இடைப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நிகழ்ந்த இச்சந்திப்பு நிச்சயம் சேர்தளம் திருப்பூர் குழுமத்திற்கு நினைவுப் பறைகளை விட்டு நீங்காமல் இருக்கும். அங்கு இறைந்த பேச்சுக்கள் சந்தித்த ஒவ்வொருவருக்கும் குறுஞ்சலனத்தையேனும் ஏற்படுத்தியிருக்கும்

எனக்கு இவ்வாய்ப்பை நல்கிய வெயிலான் அவர்களுக்கும் சேர்தளம் குழும நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
ஆதவா.

Comments

அழகு, ஆதவா,....
பேக் வித் பேங் என்பதுபோல, வாழ்த்துக்கள்.. கவிஞர் சொன்னதுபோல நிறைய கவிதைகள் எழுதுங்கள். நேரம் கிடைக்கும்போது..... :-))
ஆதவன்...நல்ல பகிர்வு. உங்கள் மொழி உங்கள் வாசிப்பைப் பறைசாற்றுகிறது. தொடர்ந்து எழுதுங்கள்

அன்புடன்

செல்வம்
www.kadalaiyur.blogspot.com
நல்ல பகிர்வு..தொடர்ந்து எழுதவும்.
(உங்களது வலைதள முகவரியை தலைவர் வெயிலான் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து சேர்தளத்தில் இணையவும்)
SIVA said…
நல்ல பகிர்தல் மற்றும் பதிவு. ஒரு நவீன சிக்கலான மொழியில் எழுதக்கூடிய கவிஞரைப்போலவே நேர்சந்திப்பில் உங்களை நான் உணர்ந்தேன்.எனவே தொடர்ந்து நீங்கள் இயங்கினால் உங்கள் ஆற்றாமைகளை ஒரளவு மட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
எழுத்துக்கள் ஒவ்வொன்றும் விஷத்தன்மை கொண்டது. எட்டிப் பார்க்கும் நேரங்களில் அது கொட்டியிருக்கிறது

ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க.
செல்வம் கூறியது போல், வாசிப்பின் அடர்த்தி உங்கள் எழுத்துக்களில் வெளிப்படுகிறது.

இச்சந்திப்பின் மூலம் நீங்கள் திரும்ப எழுத ஆரம்பித்தது குறித்து மகிழ்ச்சி!
ஆதவா-

உங்களைச் சந்திக்க வேண்டுமென்பது எனது நீநாள் அவா. ஆனால் நேற்று நீங்கள் அவ்வளவு மௌனியாய் இருந்தது சற்றே ஏமாற்றமடையச் செய்தது..

ஆனால் இப்பதிவைப் பார்த்ததும் அவ்வளவு மகிழ்வாய் உணர்கிறேன். எழுத்தின் இந்த அடர்த்தி உங்கள் மௌனத்தை அர்த்தப்படுத்திவிட்டது.

சிறப்பான பகிர்வு!
ஆதவா உங்க எழுத்துக்கு நான் ரசிகன், அதேபோல் அடுத்தவரின் எழுத்தை விமர்சித்து பின்னுட்டமும் எழுதியவருக்கு டானிக்.

தொடருங்க ஆதவா
ஹேமா said…
வாங்க ஆதவா.நிறைவான எழுத்தோடு மீண்டும் சந்திப்பதில் சந்தோஷம்.தொடர்ந்தும் எழுதுங்கள்
sakthi said…
Welcome back aadhava!!!
ஒரு சந்திப்பைக்கூட இவ்வளவு அருமையாக பகிர்ந்துள்ளீர்கள், அழகு ஆதவா

-----------------

ஒரு வருடத்திற்கு பின் வந்துள்ளீர்கள்
நலம் தானே ...
வாங்க ஆதவா..... நலமா?
பகிர்வுக்கு நன்றி
ஆதவா!! என் இளம் நண்பனே!!! உன் பேனாவின் மை காயாது இருக்கட்டும்!!
sakthi said…
கனவுலகம் குறித்த அதீத சிந்தனைகளும், அதனால் பாதிப்பாகும் சுயவாழ்நிலையும் ஆகும். எழுத்து ஒரு மாயக்கோப்பை, அதன் விளிம்பில் அமர்ந்து கொண்டே வாழ்க்கையை இழுத்துச் செல்பவர்களால் மட்டுமே சந்தோஷமான வாழ்க்கையை நடத்தமுடியும் என்றும்,

100% சத்தியமான வார்த்தைகள் ஆதவா
நலமா ஆதவன்...

நீண்ட நாள் கழித்து ஒரு பதிவு+பகிர்வு+மகிழவு.
நேரம் கிடைக்கும் போது இன்னும் நிரைய எழுதுங்கள்.

நன்றியுடன்.
ஆ.முத்துராமலிங்கம்
Unknown said…
Happy about your blog write... do continue it...