யாத்ராவோடு ஒரு சந்திப்பு

யாத்ரா விடைபெற்றுக் கொண்டு பேருந்து நிலையத்தில் நடந்து செல்லும் பொழுது அடர்ந்த கானகத்தில் அநாயசமாக நுழையும் காற்றைப் போன்று இருந்தது. மென்மைக்கான முழு உருவம் அவர் என்றே கூட சொல்லிவிடலாம். மே 13 சந்திப்புகள் குறித்து பலவகையிலும் சிந்தித்து வைத்திருக்கும் வேளையில் எதிர்பாராத சந்திப்பு யாத்ராவோடு நிகழ்ந்ததை எண்ணிக் கொண்டே பேருந்து நிலையத்தைவிட்டு வெளிவந்தேன்.

என்னோடு வரும் பொழுதே வீண் சிரமம் வேண்டாம் ஆதவா, நானே நடந்து போய்க்கொள்ளுகிறேன் என்றார். நாங்கள் அமர்ந்திருந்த பேக்கரிக்கும் பேருந்து நிலையத்திற்கும் இடையே எப்படியும் ஒரு கி.மீட்டர் இருக்கும். எனக்கு சிரமம் வேண்டாம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் விருந்தோம்பல் என்பது விடைபெற்று செல்பவரை இறுதி வரையிலும் கவனிப்பது ஆகும். அதைத்தான் நான் செய்தேன்

பேக்கரியில் நானும் யாத்ராவும் எழுந்து செல்லக் காத்திருந்தோம். ஒரு சில மணித்துளிகள்தான் சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால் எந்த ஒரு நொடியையும் இருவரும் எரித்து சாம்பலாக்கவில்லை. சொல்லப்போனால் ஒவ்வொரு நொடிகளுக்குமிடையே கொஞ்சம் இடைவெளி அதிகமிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தோம். அவர் தன் கையில் கொண்டுவந்திருந்த நீல வர்ண பெட்டியை சரிபார்த்துக் கொண்டார்.

கவிதைகள், அரட்டை, வலைப்பதிவுகள் என்று வழக்கமான பதிவர் சந்திப்புப் பேச்சுகளோடுதான் ஆரம்பித்தோம். மெல்லிய வர்ணத்தில் ஒரு சட்டை அணிந்திருந்தார். சற்றே நீள்வட்ட கருத்த முகம். கண்கள் கூர்மையாக இருந்தன. அவரது பேச்சு மிக மெல்லிய இழையில் தங்கும் சப்தத்தைப் போன்று இருந்தது. அகநாழிகை, அவர் பாடுவார் என்று சொல்லியிருந்தார். பாடுகுரல் பேச்சின் வழியே வந்ததைக் கவனிக்க முடிந்தது. அவருக்குள் சிறிது நாணம் இருப்பதாகவும் கருதுகிறேன்.

சிகரெட் பிடித்துக் கொள்ளலாமா என்றார். எனக்குப் பழக்கமில்லை என்றேன். மன்னிப்பு கேட்டார். அவர் கேட்ட விதம் சற்றே ஆச்சரியமளித்தது. தொழில் துறைகள் குறித்த தகவலைப் பரிமாறிக்கொண்டோம். பேக்கரியில் சும்மா அமர்ந்திருக்க முடியாதே.. இரண்டு கூல்ட்ரிங்ஸ் சொன்னோம். ஒன்று மாஸா, இன்னொன்று ஃபாண்டா.

திருமணத்திற்காக வந்திருப்பதாகக் கூறினார். நேராக ஊருக்குச் செல்லாமல் மணல் வீடு ஆசிரியரைப் பார்த்துவிட்டுத்தான் செல்லவேண்டும் என்றார். கவிதைகள் மீதான காதல் குறித்து சிறிது பேசினோம். நன்கு வாசிக்கிறார் என்பது தெரிகிறது. பேக்கரியில் நுழையும் முன்னர் ஒரு வேப்ப மரத்தினடி நின்று கொண்டிருந்தார். சரியான உயரம். இன் செய்திருந்தார். ஒரு பிஸினஸ் மேனுக்குரிய மேனரிஸங்கள் நன்கு பளிச்சிட்டன. யாத்ரா என்னைத் தொடர்பு கொண்ட போது நான் வீட்டில் இருந்தேன். முதலில் என் அலுவலகத்திற்குத்தான் வருவதாக இருந்தார். நான் தான் அங்கே பேச வாய்ப்பே இருக்காது என்று சொல்லிவிட்டு அவரை பேக்கரிக்குள்ளாகவே தள்ளிக் கொண்டு போனேன்.

யாத்ராவுடனான சந்திப்பில் நேரம் போதாது என்று வீட்டிலிருந்து கிளம்பும் போதே எனக்குத் தெரியும். ஏனெனில் ஹாய் மட்டும் சொல்லிவிட்டு போய்விட யாத்ரா வேறு மனிதரல்ல. பதிவுலகம் மனிதர்களின் மனதை விரித்து வைக்கிறது. அது எப்பொழுதும் திறந்தே கிடக்கிறது. சந்திப்புகள் தினமும் எழுத்தின் வழி நடக்கின்றன. அவரை சந்தித்த முதல் நொடியில் நான் அவருக்காக கட்டிவைத்திராத அவரது பிம்பம் அப்பொழுது கட்டிக் கொள்ள ஆரம்பித்தது!!

திருச்சி சந்திப்பில் பங்கெடுக்காமல் என்னைக் காதலித்து மோகித்து இரண்டு நாட்கள் சிறையிலடைத்த காய்ச்சலுக்கும், வறட்டு இருமலுக்கும் கண்டனங்கள்!!!

Comments

ஆதவா said…
ட்ராஃப்டில் போடுவதற்குப் பதிலாக, போஸ்ட் பட்டனை அமுக்கிவிட்டேன்!!!!
சந்திப்பு இனிதே!! வாழ்த்துக்கள்.
அவரைப் பற்றி நல்லதொரு அறிமுகம் கொடுத்திருக்கின்றீர்கள்.

(ட்ராஃப்டில் போடுவதற்குப் பதிலாக, போஸ்ட் பட்டனை அமுக்கிவிட்டேன்!!!!)

???? (பிண்ணூட்டம் இடலாம்ல!!!)
ஆதவா,

அந்த இரவு நன்றாக நினைவில் இருக்கிறது. வழக்கம்போல் ஒலித்த கைப்பேசியை சாதாரணமாகத்தான் எடுத்தேன். மறுமுனையில் யாத்ரா. அவரது குரலும், உரையாடிய தன்மையும் நீண்ட நாட்களாக என்னுடன் பழகும் நண்பரைப் போன்ற நெருக்கத்தை தந்தது.

இதுவரை நேரில் சந்தித்ததில்லை. அதனால் என்ன, முகம் பார்க்கும் கண்னாடி எப்போதும் யாத்ராவை பிரதிபலித்துக் கொண்டுதானே இருக்கிறது?

தோழமையுடன்
பைத்தியக்காரன்
இரண்டு கவிஞர்களின் சந்திப்பு இனிதாக நிகழ்ந்தற்கு வாழ்த்துகள்.
அன்பு ஆதவா, தங்களை சந்திக்க முடிந்ததில் எனக்கு தான் மிகவும் மகிழ்ச்சி, உடல் நலம் சரியில்லையென குறிப்பிட்டிருந்தீர்கள், தற்போது பரவாயில்லையா, உடம்பைப் பார்த்துக்கொள்ளவும்.

அன்று டைமண்ட் தியேட்டர் வாசலில் தங்களைக் கண்ட மகிழ்ச்சி இன்னும் மனதில் அப்படியே இருக்கிறது, நான் பதிவில் எழுத ஆரம்பித்த நாளிலிருந்தே தங்களின் கருத்துகள் என்னை வெகுவாய் சந்தோஷப் படுத்தியிருக்கிறது, அந்த பேக்கரி நிமிஷங்கள் மறக்க முடியாதவை, நான் திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கும் போது,நண்பர் அகநாழிகை கூறியிருக்க வில்லையெனில் தாங்கள் அங்கு தான் இருக்கிறீர்கள் என்பதே தெரிந்திருக்காது.
தங்கள் கடுமையான வேலைப் பளுக்களுக்கிடையில் தங்களை சந்திக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி,
எவ்வளவு பேசினாலும் பேச வேண்டியவை இன்னும் தீராமலிருக்கின்றன, என் வருத்தம் என்னவெனில் தங்களைப் போன்ற நண்பர்களை அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியாத தூரத்தில் இருக்கிறேன் என்பது தான், இருந்தாலும் தாங்கள் குறிப்பிடுவது போல எழுத்தின் மூலமாக ஒவ்வொரு பதிவிலும் நாம் சந்தித்துக் கொண்டு தானிருக்கிறோம்.

அந்தக் காலையில் பேருந்து நிறுத்தத்தில், நாம் விடைபெற்ற கணத்தில் இருந்த உணர்வை என்னால் விவரிக்க இயலவில்லை, எங்கெங்கோ பிறந்து எழுத்தின் மூலமாக அறிமுகமாகி, முதல் முறை தான் சந்தித்தாலும், நெடுங்காலம் பழகிய நண்பர்களைப் போல் நம்மிடையேயான அந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியளித்தது, அந்த கணங்களை மறுபடியும் மீட்டெடுத்து மனதிற்குள் ஓடச்செய்து கொண்டிருக்கிறது, தங்களின் இந்தப் பதிவு.
Suresh said…
அழகான அந்த சந்திப்பை ஒரு கவிதையாய் சொல்லிட்டே மச்சி
சந்திப்பை விவரித்திருக்கும் விதம் நல்லா இருக்கு ஆதவன்...

இப்போது உங்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது... நலம் என்று நம்புகிறேன்...
very nice, thanks for sharing, You could have published photo of you and yaathra.
//பதிவுலகம் மனிதர்களின் மனதை விரித்து வைக்கிறது. அது எப்பொழுதும் திறந்தே கிடக்கிறது. //

உண்மைதான் ஆதவா,
இதுவரையில் பார்த்தறியாத உங்களையும், சந்தித்துக் கொள்ள சந்தர்ப்பத்தை உருவாக்கி சந்தித்துப் பேசி மகிழ்ந்துகொண்ட யாத்ராவையும், ச.முத்துவேல், மண்குதிரை, கார்த்திகைப்பாண்டியன் என பல நண்பர்களை இணைத்திருப்பது வாசிப்பும் எழுத்தும் மட்டுமே. இன்று 70க்கும் மேற்பட்ட நண்பர்கள் பதிவுலகில் கிடைத்ததற்கும், அவர்கள் எல்லோருமே வாசிப்புப் பழக்கமும், எழுது திறனும் கொண்டவர்கள் என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
வாழ்த்துகள் ஆதவா...
நானும் கூட அவரை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். ஃபார் தட் மேட்டர், ஏதாவது ஒரு பதிவரை சந்திக்க வேண்டுமென. பதிவுலகத்திற்கு புதிதெனினும் இந்த சகோதரத்துவம் அதற்குள்ளாக எனக்குள் துளிர் விட்டுவிட்டது.
ஆதவாவுக்கு நல்ல அனுபவமாக இருந்து இருக்கும்.. இரண்டு கவிஞர்கள் சந்தித்து உரையாடி மகிழ்வது ரொம்ப இனிமையான விஷயம்.. நாம் எல்லாருமே பதிவுலகத்துக்கு கடமைப்பட்டு இருக்கிறோம்.. புதிய உறவுகளையும், நட்புக்க்லியாயும் நமக்கு தந்திருப்பது அதுதானே.. சந்திப்புக்கு வாழ்த்துக்கள் நண்பா.. முடிஞ்சா ஒரு இன்ட்ரோ கொடுங்க..
ஆதவா நண்பர் யாத்ராவைப்பற்றி அருமையாக எழுதியிருக்கிறேர்கள்.
sakthi said…
பதிவுலகம் மனிதர்களின் மனதை விரித்து வைக்கிறது. அது எப்பொழுதும் திறந்தே கிடக்கிறது. சந்திப்புகள் தினமும் எழுத்தின் வழி நடக்கின்றன.

உண்மை ஆதவா
sakthi said…
ஒரு அழகிய சந்திப்பை விவரித்த விதம் வெகு அழகு
எனக்கும் ஒரு தகவல் கொடுத்திருக்கலாமே ஆதவன். நானும் சந்தித்திருப்பேன்.
சந்திப்பின் பகிர்வு நன்று. பதிவுலகம் தந்திருக்கும் இத்தகைய நட்பு ஈடில்லாதது.
பல்வேறு திரம் படைத்த கவிஞர்கள், படைப்பாளீகள் சந்திப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கா என்பது நினைத்து வியப்பு

அதை விளக்கியவிதம் அருமை ஆதவா

ஆம் சிற்சில இடையூருகள் (உடல் உபாதைகள்) வருவதற்கு நாம் எதுவும் செய்ய இயலாது, இருந்தாலென்ன இன்னும் எத்தனையோ சந்திப்புகள் இடம்பெறதான் போகிறது...
அபூர்வ கணம் சிறையெடுத்த விவரிப்பு உங்கள் எழுத்துக்களில்..

எனக்கும் உங்களை யாத்ராவை மற்றும் பல பதிவர்களை சந்திக்க ஆசை.. விரைந்து வருகிறேன் :-))
//அன்று டைமண்ட் தியேட்டர் வாசலில் தங்களைக் கண்ட மகிழ்ச்சி இன்னும் மனதில் அப்படியே இருக்கிறது,//

குடந்தை டைமண்ட் தியேட்டர்!! :-)))
//திருச்சி சந்திப்பில் பங்கெடுக்காமல் என்னைக் காதலித்து மோகித்து இரண்டு நாட்கள் சிறையிலடைத்த காய்ச்சலுக்கும், வறட்டு இருமலுக்கும் கண்டனங்கள்!!!

//

வாழ்வின் எல்லா தருணங்களிலும் காதலிக்கபடுபவன்.
ஆதவா said…
அனைவரின் அன்புக்கும் பாத்திரமானேன்....
--------------------
நன்றி நண்பர்களே... (தீராத வேலை அதனால் அதிகம் பதில் சொல்ல முடியவில்லை!)
Anonymous said…
இப்போ உடம்பு எப்படி இருக்கு??
வருத்தப்படாதீங்க அடுத்த சந்திப்புல ஒரு ஆட்டம் போட்டுடலாம்
அனுபவிச்சு, சிலாகிச்சு எழுதியிருக்கீங்க ஆதவா,
தனிப்பதிவு எழுதிக் கொண்டாடப்பட வேண்டியவர்தான் யாத்ரா.
யாத்ராவை அதிகம் வாசித்ததில்லை.இனிமேல் கண்டிப்பாக வாசிப்பேன்,

மேலும் உங்கள் உடல் நிலை தற்போது எப்படி உள்ளது ?

நாமெல்லாம் நிச்சயம் ஒருநாள் சந்திப்போம்.அந்த நாளை எண்ணி நான் காத்திருக்கிறேன்.
யாத்ராவுடனான சந்திப்பை ஒரு ஆழந்த அமைதியான மொழியில் சொல்லியிருக்கிறீர்கள். அவரை அங்கங்கு சித்தரித்த விதம் கவிதை போல் இருந்தது. யாத்ராவின் தாக்கத்தை புரிந்து கொள்கிறேன். சரி உடல்நலம் முழுமையாக தேறி விட்டீர்களா?
ஆதவா said…
நன்றி நண்பர்களே!!!

கவின், மாதவராஜ்.... உடல்நிலை இப்பொழுது பரவாயில்லை.. உங்கலது அக்கறை எனக்கு புல்லரிக்கவைக்கிறது!!!
வணக்கம் ஆதாவா,
யாத்ராவுடன் சந்திப்பு உங்களை மகிழ்வித்திருக்கும், உங்களை சந்திக்க முடியாதது வருத்தம்தான், பரவாயில்லை கூடிய விரைவில் சந்திக்க முடியும் என்றே நம்புவோம். உங்கள் உடல் நிலையை பார்த்துகொள்ளவும். தற்பொழுது எப்படியுள்ளீர்கள்???
Karthikeyan G said…
போட்டோ எங்கே?
ஆதவா said…
தேறிவிட்டேன் ஆ.ஞானசேகரன்.. திரும்பவும் சந்திப்போம்!!!!
----------------
கார்த்திகேயன் சார். நாங்கள் புகைப்படம் எதுவும் எடுத்துக் கொள்ளவேயில்லை. குப்பன் யாஹூ அவர்களுக்கும்.....
Anonymous said…
இப்படியான சந்திப்புகள் மேலும் தொடர வாழ்த்துக்கள் ஆதவா...