சிறிது வெளிச்சம் - எஸ்.ரா


சிறிது வெளிச்சம் - எஸ்.ராமகிருஷ்ணன்

சிறிய வெளிச்சத்திற்கும் எனக்குமான தொடர்பு மதுக்கோப்பையில் விழுந்து கிடக்கும் பனிக்கட்டியைப் போன்றது. சிறிது நேரமே நீடித்திருக்கும். கண்களின் கோளவிழிகள் நன்கு விரிந்து கூர்ந்து கவனிக்கும். எனது அசைவுகளை நுட்பமாக்கி மூளைக்குத் தெரிவிக்கும். சொல்லப்போனால், அடர்ந்த இருளிலோ, காய்ந்த வெயிலிலோ காணாத முகம் அந்த சிறிய வெளிச்சத்தில் எனக்குத் தோன்றியிருக்கிறது. சிறிய வெளிச்சம் என்பது வாழ்வின் மூலையெங்கும் பரந்து கிடக்கிறது. கவ்விய இரவை சற்றே விலக்கிட சிறியவெளிச்சம் முயலுவதைப் போன்று கவலைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிவிடலாம் என்றொரு கவிதை எழுதிய ஞாபகம் இருக்கிறது.

நேற்றிரவு மின்சாரம் தொடர்பற்று போனதில் சட்டென்று ஒரு பூனையைப் போன்று நழுவிப் போனது வெளிச்சம். சுற்றிலும் மூடிக்கிடந்த இருளில் நானிருக்குமிடத்தை எனது அலைபேசியினால் சிறிய வெளிச்சமாக்கினேன். அச்சூழ்நிலையில்தான் ஆ.வியில் எஸ்ராவின் "சிறிது வெளிச்சம்" படிக்க நேர்ந்தது. இருள் என்றது எனக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது நிசப்தமும், சூன்யமும்தான். ஒருக்கணத்தில் இவையிரண்டும் ஒருங்கே நெருங்கி என்னை அணைத்தது. அது இத்தொடர் படிக்க மிகவும் வசதியாக இருந்தது. இத்தொடர் மட்டுமல்ல, எனது எல்லா வாசிப்புகளும் இரவின் சிறிய வெளிச்சத்தில்தான் நடக்கின்றன. இதோ, இக்கட்டுரையைக் கூட மங்கிய இரவில், சிறிய வெளிச்சத்தில்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

எப்பொழுதெல்லாம் சிறுவெளிச்சம் என்மீது பாய்ந்திருந்ததோ அப்பொழுதெல்லாம் எழுதத் துவங்கினேன். இருள் மீதான பயத்தைப் போக்க சிறிய வெளிச்சமே போதும். ஆனால் எனக்கு இருளின்மீதான காதலில் வெளிச்சமே பயமாகிப் போனது. எனது வாசிப்பு, படைப்பு, அரட்டை, இணையம், ஆகிய மொத்த தொடர்பும் இரவுகளில்தான் அதிகம் என்பது நண்பர்களுக்குத் தெரிந்த விஷயம். எஸ்ரா கூறியதைப் போன்றே, ஒருமுறை என்னிடம் நண்பர்கள் கேள்வி கேட்டார்கள். தாஜ்மஹாலைக் கட்டியது யார் என்று. ஷாஜகான் என்று பதில் சொன்னேன். அவர்களோ, கொத்தனார்டா மடையா என்று கேலியாகச் சிரித்தார்கள். ஆனால் எனக்கோ, ஷாஜகானைக் காட்டிலும் மிகுந்த அக்கறையோடு கட்டியிருக்கும் தாஜ்மகாலின் கட்டிட இன்ஜினியர் யாராக இருப்பார், ஏன் அவரை வரலாறு மறைத்துவிட்டது, அல்லது மறைக்கப்பட்டு விட்டார் என்று கேள்வி எழுந்து கொண்டேயிருந்தது. அவர் தாஜ்மகாலைக் கட்டும்பொழுது தான் உலகின் ஒரு அற்புதத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறோம் என்று தோணியிருக்குமா? அவரது மனைவி இக்காதலின் சின்னத்தைப் பற்றி என்னென்ன சிந்தித்திருக்கக் கூடும்?

வாழ்வின் இருள் நிறைந்த இடுக்குகளெங்கும் இக்கேள்விகளின் சிறிய வெளிச்சம் பாய்ந்து கொண்டேயிருக்கிறது. யாரும் அறியாத ரகசியங்கள் விண்வெளியில் கசிந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. இருள் நிறைந்த அப்பாதையில் சிறிய வெளிச்சத்தைப் பாய்ச்சி தெரிந்து கொள்ள எனக்கு எத்தனையோ முறை ஆவல் பிறந்ததுண்டு. நாம் வாழும் வாழ்வை சூழ்நிலைகள் தீர்மானிப்பதைப் போன்று வேறேதும் தீர்மானிப்பதில்லை. சிறிய வெளிச்சமேனும் சூழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையின் திரையைக் கிழிக்காதா என்று தோணுகிறது. அவர் கூறியவற்றுள், எனக்கு நேர்மாறாக இருப்பது இரவைக் குறித்த அவரது எண்ணங்கள். எனக்கு பகல் எப்பொழுதும் மூடியே கிடக்கிறது. அலுவலகமும் பணி சார்ந்த நெருக்கடியும் பகல் பொழுதுள் முடங்கிவிடாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறது. எதைப் பற்றியும் சிந்திக்கவோ, எழுதவோ, படிக்கவோ, மனதைப் புரட்டிடவோ முடிவதில்லை. இதற்கு நேர்மாறாக இரவு சட்டென்று விழித்துக் கொண்டதைப் போன்று இருக்கிறது. இரவுகளில் சிந்தனைகள் தோன்றுகின்றன. இணையம் எனும் மாய உலகம் வரவேற்கிறது. அதனுள் விழுந்து பலவாகத் தெறித்து ஒன்றி, ஒன்றாவதற்குள் எனக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட இரவு முடிந்துவிடுகிறது. ஆனால் இப்பொழுது இந்நிலை சற்று மாறிக் கொண்டிருப்பதை உணரமுடிகிறதெனினும் இந்நிலையே நீடிக்க வேண்டுமென்கிறது மனம்.

எஸ்ரா, மனதில் புகுந்து அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொத்திக் கொண்டிருப்பவர் என்று அறிவேன். சிறிது வெளிச்சத்தில் வாசனை குறித்து படிக்கையில் அப்படித்தான் தோன்றியது. முதன் முதலாக வாசனையை எப்பொழுது அறிந்தேன் எனும் கேள்வி புத்தகத்தின் எழுத்தினூடாக ஊர்ந்து கொண்டிருந்தது. எனக்கு நினைவு தெரிந்து முதல் வாசனையாக, இருந்தது ஊதுபத்தி வாசனைதான். தினமும் காலையில் எழும் முன்னர் அலமாரியின் கதவிடுக்கில் புகைவிட்டுக் கொண்டிருக்கும். மூக்கின் வழி துளைத்து உடலெங்கும் தூங்கிக் கிடக்கும் ஆன்மீகத்தைச் சுண்டியெழுப்பும். அதன் ஒடிசலான உடலிலிருந்து நாற்றம் வெளியேறுவதைப் போன்றே புகை கிளம்பிக் கொண்டிருக்கும்.. தினமும் அதன் நுகர்ச்சியிலேயே எழவேண்டியிருந்தது. அதன் புகை ஒரு கயிறைப் போன்று நீட்டி கழுத்தை இறுக்குவதைப் போன்றே இருந்தது. நாளடைவில் அது எனக்கு சலிப்பையே ஏற்படுத்தியது. ஆன்மீகத்தின் மணமாக அறையெங்கும் வாசனை நிறைந்திருந்தது குறித்து பலசமயம் வீட்டில் சண்டையிட்டிருக்கிறேன். ஒருவகையில் நாத்திகம் நாடுவதற்காகவும் கூட ஊதுபத்தி பயன்பட்டிருக்கலாம்.

நுகர்தல் என்பதும் ஒருவகையில் பசியைப் போக்கக் கூடியது அல்லது ஒரு பொருளைத் தின்பது என்று புரிந்து கொண்டது சமையற்கட்டில் நுழையும் பொழுது தெரிந்து கொண்டேன். கைக்கு எட்டமுடியாத உயரத்தில் வாழைப்பழம் தொங்கிக் கொண்டிருக்கும். அதன் வாசனை அச்சிறிய அறையில் ஊதிபத்தியைப் போன்றே நிறைந்து கொண்டிருக்கும். தின்னமுடியாத அவ் வாழைப்பழத்தின் வாசனையை நுகரும்பொழுதெல்லாம் பசியின் தாகம் தீர்ந்துவிட்டதாகவே நினைத்துக் கொள்வேன். பிறகு ஒவ்வொரு முறையும் அவ்வறைக்குள் நுழையும் பொழுது ஏற்படும் வாழைப்பழத்தின் வாசனை வேண்டுமென்றே உணவைத் திணிப்பதாகவே தோன்றும். நுகர்ச்சி எனும் உணர்வு மிக நுட்பமானது. அது நுகர்தலின் வழியே சில நுட்பமான செயல்களையும் செய்கிறது. ஊதுபத்தி வாசனையும், வாழைப்பழ வாசனையும் எனக்கு இன்று பிடிக்காமலேயே போய்விட்டது.

நுகர்தல் என்றபொழுது இன்னுமொன்று நினைவுக்கு வருகிறது. தற்சமயம் சேவல்காரி என்றொரு தொடர் எழுதி வருகிறேன். (இன்னும் வலையில் வெளியிடவில்லை) அதில் ஓரிடத்தில் கோழியின் வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டிருப்பேன். உணவுப் பொருட்களின் மீதான வாசனை இன்னும் தீராமலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது வாழைப்பழம் தவிர்த்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான வாசனை பிடித்திருக்கிறது. எஸ்ரா குறிப்பிட்டபடி, அவ்வாசனை யாருக்கும் தங்குவதில்லை. உடல் மொழியெழுதும் கவிதையில் கசிந்து பிழையாகி வரும் வார்த்தைகளே உடல் வாசனை, எனக்குப் பிழைகள் பிடிப்பதில்லை. ஆனால் நினைத்துப் பார்த்தால் இறுதி வரையிலும் உடன் வரும் வாசனை அதுமட்டுமே தான். Pink ன் Get the Party Started பாடலின் ஒரு காட்சியில் அவள் குளித்துவிட்டு வரும் பொழுது தனது அல்குலை முகர்ந்து பார்ப்பாள். வீட்டில் உள்ளவர்கள் அதைக் கண்டதும் சிரிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் இப்பொழுது தோன்றுகிறது. நம்முள் எழும் வாசனை நமக்கு ஏன் பிடிக்காமலிருக்கிறது? வலையில் 31 கேள்விகள் எனக்குக் கேட்கப்பட்டிருந்த பொழுது மல்லிகையே எனக்குப் பிடித்த மணம் என்று குறிப்பிட்டிருந்தேன். அது சூழ்நிலையின் காரணமாகக் குறிப்பிட்டிருந்தேனா, நிர்பந்தமா, அல்லது முன்யோசனையற்ற பதிலா என்று தெரியவில்லை. உண்மையில் எனக்கு எந்த வாசனை பிடித்திருக்கிறது என்று அனுமானிக்க முடியவில்லை.

இக்கட்டுரையை எழுதும் பொழுது என் அம்மாவிடம் நீ முதன் முதலாக கண்டறிந்த வாசனை எது என்று கேட்டதும் பட்டென்று பால்வாசனை என்றார். யோசித்துப் பார்த்தால் உலகின் எல்லோருடைய முதல் வாசனை பாலாகத்தான் இருக்கவேண்டும். பிடித்த வாசனை எது என்று கேட்டேன். பட்டு ரோஸ் என்றார். அது இப்பொழுதும் உனக்கு வாசனையை உணர்த்துகிறதா என்றேன். ஆம் என்றார்... பெண்களின் கூந்தலில் எப்பொழுதும் ஏதாவதொரு வாசனை தங்கியிருக்கிறது. அது அவர்கள் நினைத்தவுடன் மூக்கின் நுனியில் அமர்ந்து கொள்கிறது. வாசனை குறித்து பேசுகையில் இன்னுமொன்று குறிப்பிட்டாகவேண்டும், எனக்கு நுகர்தலின் வாயிலில் தொந்தரவு இருக்கிறது. நான் இதுவரையிலும் எந்த மருத்துவரையும் அணுகியதில்லை. இத்தொந்தரவு என்னை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதாக உணர்கிறேன்.

எஸ்ரா தேர்ந்தெடுக்கும் தலைப்புகளில் இருக்கும் வசீகரம் இத்தொடரில் இல்லை. மிகச்சாதாரணமாகவே இருக்கிறது. அதனாலோ என்னவோ, சாதாரண விஷயங்களின் நுட்பங்களை எடுத்துச் சொல்லுகிறது. இனி வரும் வாரங்களின் எஸ்ரா இன்னும் மனதை அரித்து சுத்தமாக்குவார் என்று நினைக்கிறேன்.. அவருக்கு என் முன் வாழ்த்துகள்!!

பிகு:
திரு.எஸ்.ராமகிருஷ்ணனின் சிறிது வெளிச்சம், ஆனந்தவிகடனில் ஆரம்பமாகியிருக்கிறது. கிட்டத்தட்ட ஆனந்தவிகடன் வாங்குவது நின்றுபோன சூழ்நிலையில் அவர்களது இந்த தொடர், தொடர்பற்று போன எனக்கும் ஆ.விக்குமான உறவை சற்று வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இப்பொழுது சிறிது வெளிச்சம் ஒரு பாகமே வந்திருக்கும் இச்சூழ்நிலையில் இதைப்பற்றி எழுதவேண்டிய அவசியமோ, நிர்பந்தமோ, படிக்கும் வரையிலும் இல்லை ; ஆனால் படிக்கத் துவங்கியதும் நிச்ச யம் எழுதியே ஆகவேண்டும் என்பதை உறுதிபடுத்திக் கொண்டேன். இது விமர்சனமல்ல, படித்தவுடன் தோன்றிய எண்ணங்கள்.

Comments

படித்துவிட்டு வருகிறேன் ஆதவா
நானும் படிச்சிட்டு வாரேன்
நுகர்தல் பற்றிய உங்க பகிர்வு அருமை.
நல்ல பகிர்வு ஆதவா!


\\அதன் புகை ஒரு கயிறைப் போன்று நீட்டி கழுத்தை இறுக்குவதைப் போன்றே இருந்தது\\

வித்தியாசமான சிந்தனைகளின் பிறப்பிடம்
(எனக்கு தெரிந்த வரையில் குழந்தை ஓவியம்)
//பூனையைப் போன்று நழுவிப் போனது வெளிச்சம்.//

சாதாரண வாக்கியங்கள் கூட கவிதையாக இருக்கிறதே......................
\\இத்தொந்தரவு என்னை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதாக உணர்கிறேன். \\


ஏனோ!


ஆனாலும் தாங்கள் சொன்னால் ஏதோ ஒரு விதத்தில் சரியாகத்தான் இருக்கும்.
நல்ல பகிர்வு, வாசனைப்பற்றி நல்ல ஆராட்ச்சியும்கூட.. திருவிளையாடல் படம் ஞாபகப்படுத்தியது.
ஆதவா,
உரைநடையிலும் உன் ரசனையான விவரணை அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
வாசனை என்றவுடன் ஒரு பகிர்வு..
மூக்குக்கு நமக்கு பிடிக்காத வாசனை வந்தால் உடனே அந்த வாசனைப் பற்றிய எண்ணத்தை நீக்கிவிடுவதாக சொல்வார்கள்.... வாசனையை வைத்து ஒரு உணவின் சுவையை நம்மால் உணரமுடியும் அதுவே நம்மை சாப்புட அழைப்பதாக தெரியும். ஒரு வாசனை மட்டும் நம்மை ஏமாற்றிவிடும் அன்னாசிப்பழம் வாசனை.... இதன் வாசனைக்கும் சுவைக்கும் சம்மந்தம் இல்லாதுபோல் தெரியும்.... நன்றி நண்பா
ஆதவா...

மிகவும் ரசித்துப் படித்தேன்...
நுகர்தல் பற்றிய உங்களுடைய விவரணை அருமை...
Rajeswari said…
முதல் வாசனை - பால் வாசனை என்பது உண்மைதான்..நானும் அந்த தொடரை(எஸ்.ஆர்) படித்துக்கொண்டிருக்கிறேன்.

நல்ல பதிவு.
எஸ்.ரா வின் எழுத்துக்களின் மீதுள்ள ஈர்ப்பு விவரிக்க முடியாதது.

ஆ.வியில் வெளியான துணையெழுத்து தொடரையும் விடாமல் வாசித்திருக்கிறேன்.

ஆனால் அவர் எழுதிய சில திரைப்பட வசனங்கள் அந்த அளவுக்கு என்னை கவரவில்லை.
அச்சில் இருக்கும் அழுத்தம் திரையில் வராது தான்.
//ஆனால் எனக்கு இருளின்மீதான காதலில் வெளிச்சமே பயமாகிப் போனது.//

ரசித்தேன்..கிளாஸ்...

//நாம் வாழும் வாழ்வை சூழ்நிலைகள் தீர்மானிப்பதைப் போன்று வேறேதும் தீர்மானிப்பதில்லை.//

முற்றிலும் உண்மை.

வாழ்வின் நுட்ப‌மான‌ விஷ‌ய‌ங்க‌ளின் மீதான உங்க‌ள் பார்வை என்னை விய‌க்க‌ வைக்கிற‌து.

இந்த‌ த‌ளத்தில் "ஞாப‌க‌ ந‌க‌ங்க‌ள்" ஐ போன்று, இந்த‌ ப‌திவும் ஒரு புதிய‌ போக்கை
( டிரெண்ட் ) ஐ நிச்ச‌ய‌ம் உருவாக்கும்.
sakthi said…
இதை விமர்சிக்கமளவு சத்தியமாய் எனக்கு தகுதியில்லை ஆதவா
அத்தனை
அருமை
படிச்சிங்களான்னு
கேட்கிறது காதுல விழுகுது

பொறுமையா படித்து பிறகு பின்னூட்டமிடுகிறேன்

இப்போதைக்கு ஓட்டு மட்டும்
வாசனைகள் வாழ்வின் அங்கம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாசனை பிடிக்கும். தாம்பரத்தில் இருந்து பஸ்ஸில் வருவோர் குரோம்பேட்டையை தாண்டும்போது ஒரு வாசனை வரும் அந்த வாசனைக்கு எல்லாரும் மூக்கைப் பிடித்துக்கொள்வார்கள். இத்தனைக்கும் அது செண்ட் கம்பெனியிலிருந்து வரும் வாசனை.
சேவல்காரி தொடர் எப்போது வரும்? ஆவலுடன் காத்திருக்கிறேன்...
ஆதவா! அய்யனார் பற்றி நான் ஒரு அய்க்கூ எழுதியிருந்தேன். அப்போது அய்யனார் பற்றிய ஒரு பதிவு எழுத இருப்பதாக சொன்னீர்கள். அதே போல் மின்தடை இரவு பற்றியும்... எதிர்பார்க்கிறேன்...!
வலையில் 31 கேள்விகள் எனக்குக் கேட்கப்பட்டிருந்த பொழுது மல்லிகையே எனக்குப் பிடித்த மணம் என்று குறிப்பிட்டிருந்தேன். அது சூழ்நிலையின் காரணமாகக் குறிப்பிட்டிருந்தேனா, நிர்பந்தமா, அல்லது முன்யோசனையற்ற பதிலா என்று தெரியவில்லை. உண்மையில் எனக்கு எந்த வாசனை பிடித்திருக்கிறது என்று அனுமானிக்க முடியவில்லை. ///
நல்லா எழுதியிருக்கிறீர்கள் ஆதவா!!
//அவர் தாஜ்மகாலைக் கட்டும்பொழுது தான் உலகின் ஒரு அற்புதத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறோம் என்று தோணியிருக்குமா? //

சிந்திக்கவேண்டிய விடயம், எல்லோரும் விளையாட்டுக்கு சொல்லுவோம் கட்டியது கொத்தனார் என்று, சிந்தித்துப்பார்த்தால் அதுவே உண்மையும் கூட..


//அவரது மனைவி இக்காதலின் சின்னத்தைப் பற்றி என்னென்ன சிந்தித்திருக்கக் கூடும்?//
/

எதுவுமே சிந்தனைக்கு எட்டாது, இறந்தபின் மறு உலகத்தோடு ஐக்கியமாகிவிடுவர்... இது அவருக்காக கட்டப்பட்டது அன்றி அவர் உணர்வுக்கு எட்டா...
எஸ்ரா வின் சிறிது வெளிச்சம் தொடர் பற்றிய கருத்துக்களில் மீண்டும் ஆதவனுக்குள் இருக்கும் விமர்ச்சகர் தெரிகிறார்...

//நேற்றிரவு மின்சாரம் தொடர்பற்று போனதில் சட்டென்று ஒரு பூனையைப் போன்று நழுவிப் போனது வெளிச்சம்//

வித்தியாசமான உவமை...

//இருள் மீதான பயத்தைப் போக்க சிறிய வெளிச்சமே போதும். ஆனால் எனக்கு இருளின்மீதான காதலில் வெளிச்சமே பயமாகிப் போனது.//

மீண்டுமொருமுறை படிக்கத் தூண்டிய வரிகள்...

நுகர்தலின் ஆராய்ச்சியின் வரி வடிவம் விழி விரியச் செய்கிறது ஆதவன்...

//தற்சமயம் சேவல்காரி என்றொரு தொடர் எழுதி வருகிறேன். (இன்னும் வலையில் வெளியிடவில்லை)//

விரைவில் வெளியிடுங்கள் படிக்கக் காத்திருகிறேன்...

//இக்கட்டுரையை எழுதும் பொழுது என் அம்மாவிடம் நீ முதன் முதலாக கண்டறிந்த வாசனை எது என்று கேட்டதும் பட்டென்று பால்வாசனை என்றார். யோசித்துப் பார்த்தால் உலகின் எல்லோருடைய முதல் வாசனை பாலாகத்தான் இருக்கவேண்டும்.//

ம்...உண்மை தான்...
எஸ்ரா எழுத்துக்களை நான் படித்தது கிடையாது, ஆதவன் பதிவுக்கு பிறகு தேடிக்கொண்டிருக்கிறேன் படிப்பதற்கு..

நுகர்தலில் ஒரு புது விளக்கத்தை தெளிவுபடுத்திவிட்டீர்..
Anonymous said…
இருளை நேசித்த முதல் காதலன்....இருளில் எழுதிய பதிவே தான் படிக்க படிக்க முகத்தில் எத்தனை எத்தனை மாற்றம் உணரமுடிகிறது....ஆம் எல்லாமே ஆம் தானே என்று இதை படிக்கும் போது தான் அறிந்தேன்...
இந்த ஆதவன் இரவில் உதிர்த்த பூக்களா அனைத்தும் அதிசயித்தேன்.....அப்பா மின்சார இழப்பால் எத்தனை நல்ல பதிவு கிடைத்து இருக்கிறது.....அதெப்படிப்பா இத்தனை விஷயமும் தொடர்ச்சியா தொட்டுருக்கு மனசு...இனி ஆதவன் வீட்டில் அடிக்கடி பவர்கட்டுக்கு ஏற்பாடு பண்ணனும்....
வாழ்வின் இருள் நிறைந்த இடுக்குகளெங்கும் இக்கேள்விகளின் சிறிய வெளிச்சம் பாய்ந்து கொண்டேயிருக்கிறது.
யாரும் அறியாத ரகசியங்கள் விண்வெளியில் கசிந்து ஓடிக் கொண்டிருக்கின்றன.

Supper supper supper
Unknown said…
நல்லா எழுதி இருக்கீங்க... உங்களுடைய எழுத்து எஸ். ராவைப் போல உள்ளது. வேண்டுமென்றே எழுதுகிறீர்களா? இல்லை இயல்பாக வருகிறதா? இந்தக் கேள்வி உங்களை உறுத்தியிருந்தால் மன்னிக்கவும். நான் உங்களிடம் எதுவும் கேட்கவில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

நான் கூட எஸ். ரா வின் இணையப் பக்கத்தில் 'சிறிய வெளிச்சம்' தொடரைப் பற்றி படித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது.

குறிப்பு: உங்களுடைய மின்னசலை தெரிவித்திருந்தால் அதிலே தொடர்பு கொண்டு இந்த கேள்வியைக் கேட்டிருப்பேன். இப்பொழுது பாருங்கள் எல்லோருக்கும் தெரியுமாறு கேட்க வேண்டியதாகிவிட்டது.
கிருஷ்ண ப்ரபுவின் பின்னூட்டத்தில் கேட்டிருக்கும் கேள்வியே எனக்கும் இந்தப் பதிவை படிக்கும்போது தோன்றியது.

சொல்லப்போனால், அவரைவிடவும் சுவாரஸ்யமாய் தான் உங்களின் இந்தப் பதிவு இருக்கிறது.

வார வாரம் ஆ.வியின் சிறிது வெளிச்சத்தை உங்கள் வலைப்பூவில் விமர்சிப்பீர்களா?
திரு.எஸ்.ராமகிருஷ்ணனின் சிறிது வெளிச்சம், ஆனந்தவிகடனில் ஆரம்பமாகியிருக்கிறது. கிட்டத்தட்ட ஆனந்தவிகடன் வாங்குவது நின்றுபோன சூழ்நிலையில் அவர்களது இந்த தொடர், தொடர்பற்று போன எனக்கும் ஆ.விக்குமான உறவை சற்று வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை//

நானும் இதே காரணத்துக்காகத்தான் மீண்டும் ஆ.வியை வாங்கத் துவங்கியுள்ளேன்.
உங்களுடையது அருமையான எழுத்துநடை ஆதவா..
சேவல்காரிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் !
வேலையின் காரணமாக தாமதம்...!!

முதலில் உங்க எழுத்தை சொல்லனும் ஆதவா, அத்தனை லயத்துடன் எழுகின்றீர்கள். எதைபற்றி எழுதினாலும் அதில் ஒரு ரசனையையும் எழுத்தாலுமையயும் இருக்கச் செய்து விடுகின்றீர்கள் நகத்தை பற்றி எழுதினீர்கள் யாருக்குமே தோன்றாத ஒன்று சிலர் நகத்தை பற்றி எழுத என்ன இருக்கு என்று கூட நினைக்கலாம் ஆனால் உங்கள் எழுத்தில் அந்தக்f கட்டுரை படித்த யாருக்கும்f ஒரு ரசனையை ஊட்டியிருக்கும் அது போலவே இதுவும் எஸ்.ராவின் சிறு வெளிச்சம் எத்தனையோ பேர் படித்திருப்பார்கள் நானும் படித்தேன் ஆனால் அதிலிருந்து உங்கள் பார்வை ரசனை சிறிய அனுபவம் என்று குழைத்து வரைந்து எழுத்தாக்கி விட்டீர்கள் அதுவே உங்கள் வளர்ச்சி!! மேன்மேலும் உங்கள் எழுத்து வளர்ச்சி பெரும்.


வாழ்த்துக்கள் ஆதவா!!
இதை எஸ்.ரா படித்தால் நிச்சயம் சந்தோசப்படுவார் ஒரு வாசகனின் பாராட்டு எவ்வளவு பெரிது என்று அவருக்கு தெரிந்திருக்கும்.
கிட்டத்தட்ட ஆனந்தவிகடன் வாங்குவது நின்றுபோன சூழ்நிலையில் அவர்களது இந்த தொடர், தொடர்பற்று போன எனக்கும் ஆ.விக்குமான உறவை சற்று வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை//

இந்த நிலையிலிருந்து கொஞ்சம் கடந்து வந்து விட்டது என் நிலை,
கிட்டதட்ட ஒரு மூன்று நான்கு மாதம் விகடனை வாங்குவதில்லை சமீபமாக நம் வலை நண்பர்களின் எழுத்து அச்சேர திரும்பவும் வாங்க துவங்கினேன் அது இப்போது எஸ்.ராவின் சிறுவெளிச்சம் நீட்டிச் செல்லும் என்பது நிச்சயம் ஆதவா.
”புது இணைய இதழ் “

இது ஒரு திரட்டி அல்ல.

தங்கள் படைப்புகளை இங்கு இணத்து
நண்பர்களைப் பெருக்கிக்கொள்ளுங்கள்.

http://tamilervaram.blogspot.com/
ஆதவா said…
மிக்க நன்றி நட்புடன் ஜமால், அத்திரி, சொல்லரசன்....

நன்றிங்க அகநாழிகை....
---------------------------
ஆ.ஞானசேகரன் சார்... உங்கள் இந்த பின்னூட்டமே வியக்க வைக்கிறது.. அழகான அலசல்....

நன்றிங்க வேத்தியன்...
நன்றிங்க ராஜேஷ்வரி....
------------------------------
அ.மு.செய்யது.. உங்கள் பாரட்டு என்னை கிறங்க வைக்கிறது.. நீங்கள் கூறீயது போல, திரை வசனங்கள் அவ்வளவு சரியில்லைதான்...
-----------------------------
வாங்க சக்தி மேடம். பொறுமையா படிங்க... நன்றிங்க....
ஆதவா said…
நன்றிங்க குடந்தை அன்புமணி... அதீத வாசனை யாருக்குமே ஆகாது....

சேவல்காரி தொடருக்கு முன்னர் இன்னும் நிறைய இருக்கிறது... சேவல்காரி இதுவரைக்கும் இருபது பாகம் எழுதிவிட்டேன்.. எப்படி பதிவில் தருவது என்று யோசித்து வருகிறேன்..

அய்யனார் பதிவு இன்னும் எழுதவில்லை... விரைவில் எழுதுவேன்.... மின்தடை இரவு பற்றிய பதிவு ஒரு நெடும் பதிவு... "கவிதை எழுதுவது எப்படி?" என்றொரு கட்டுரையில் அது ஒரு பாகம்... விரைவில் தருகிறேன்ங்க...
ஆதவா said…
நன்றிங்க தேவன்சார்..

அபுஅஃப்ஸர்.... நீங்கள் சொல்வது உண்மைதான்... ரசித்துப் படித்தமைக்கு நன்றிங்க..
------------------
நீண்ட விமர்சனத்திற்கு நன்றி புதியவன்.

வணக்கம் தமிழரசி.. உங்கள் விமர்சனங்கள் ரசிக்கத் தகுந்தனவாக இருக்கின்றன.... மிக்க நன்றிங்க..

வாருங்கள் கவிக்கிழவன். புதிய வரவுக்கு வரவேற்புகள்!!
-------------------
ஆதவா said…
வணக்கம் கிருஷ்ணபிரபு... உங்களது கேள்வி பெரிய எழுத்தாளரைப் போன்றே எழுதுகிறேனெனும் மகிழ்ச்சியையும்
எனக்கென தனிபாணியாக இது அமையவில்லையோ எனும் என்மீதான வருத்தத்தையும் தருகிறது. வேண்டுமென்றே நான் எழுதுவதில்லை... எழுதியபின் ஓரிரு சரிபார்ப்பு... அவ்வளவுதான்.. கடகடவென்று எழுதி முடித்துவிடுவேன்... நீங்கள் கேட்டதில் தவறில்லை!!!

எனது மின்னஞ்சல் : aadava@gmail.com
ஆதவா said…
வணக்கம் அமிர்தவர்ஷினி அம்மா.. உங்கள் பாராட்டு மயிற்கூச்செரிகிறது. அவரை விடவும் நான் சுவாரசியமாக எழுதிவிட முடியாது.. எனினும் உங்கள் வாழ்த்து தேனினும் இனியது.

நன்றிங்க ரிஷான் ஷெரிப்... விரைவில் சேவல்காரியைத் தருகிறேன்..
ஆதவா said…
@@ அமிர்தவர்ஷினி அம்மா.... வாரவாரம் எழுதினால் அது தவறாகப் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன்.. தவிர எனக்கு எழுத இன்னும் நிறைய இருக்கிறது.
------------------
வாங்க ஆ.முத்துராமலிங்கம்... உங்கள் ரசிப்புக்கு என் வந்தனம்.. உங்களது நீண்ட விமர்சனம் சிலாகிப்பைத் தருகிறது. எஸ்ராவின் எழுத்துக்கள் யோசிக்க வைக்கிறது. எல்லோருடைய வாழ்விலும் இந்தமாதிரி ரசனையும் அனுபவமும் கலந்து இருக்கிறது. கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் புரியும்...

நன்றிங்க..
ஆதவா என்ன ஒரு நடை, மிகவும் வியக்கிறேன் நண்பா உங்கள் நடையை, எழுத்தின் போக்கில் தொடர்ந்து சித்திரங்களாக வரைந்து கொண்டு போகிறது மொழி, அருமையான பதிவு.
hi can u copy and paste his (SR's ) article. I have discontinued Vikatan subscrition after fed up with Joovi fraud imaginery newses.

I am in dielama whether to subscribe vikatan only for SR.
ஆதவா said…
மிக்க நன்றிங்க யாத்ரா...

குப்பன் யாஹூ சார், என்னிடம் அந்த கட்டுரையின் எழுத்து பதிப்பு இல்லை. ஆனந்தவிகடன் தளத்திலிருந்தும் எடுக்க முடியாது. நீங்கள் திரும்பவும் ஆனந்தவிகடன் வாங்குவதே சிறந்தது! நன்றிங்க...
என்னையும் அறியாமல் இந்த பதிவில் என் மனது ஆழ்ந்து விட்டது என்று நான் நினைக்கிறேன்

மிகவும் ரசித்துப் படித்தேன்...
ராம்.CM said…
நுகர்தல் பற்றிய நல்ல தகவல். அருமை.
ஆதவா said...
வணக்கம் அமிர்தவர்ஷினி அம்மா.. உங்கள் பாராட்டு மயிற்கூச்செரிகிறது. அவரை விடவும் நான் சுவாரசியமாக எழுதிவிட முடியாது.. //

இருக்கலாம் ஆனால் இந்தக் குறிப்பிட்ட பதிவினை அதோடு ஒப்பிடும்போது சுவாரசியமாகவே இருந்தது.

நேற்று உங்களின் பதிவை படித்தபின் மீண்டுமொருமுறை சிறிது வெளிச்சம் படித்தேன்.

உங்களின் இந்தப் பதிவு சுவாரஸ்யமே
வசனமே கவித போல உள்ளது...
நல்ல பகிர்வு...
:)))
thamizhparavai said…
ஆதவா , வாரமொருமுறையாவது இப்படியொரு பதிவு போடுங்கள்...உங்கள் வார்ததைகள் ஆழப்புதைந்திருப்பதை நானறியாவண்ணம் வெளிக்கொணர்கிறது...
(எஸ்ரா எழுத்து சாயலும் இருக்கிறது)...
Anonymous said…
அதே பிரதிபலிப்பு..! விகடனுக்காக(எஸ்.ரா) காத்திருக்கிறேன்
நல்ல பகிர்வு
எளிமையான நடை படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது
ஆதவா said…
குமரை நிலாவன்,
ராம். CM
அமிர்தவர்ஷினி அம்மா (மறுபடியும் படித்தமைக்கு நன்றிங்க)
வழிப்போக்கன்,
தமிழ்ப்பறவை (நிச்சயம் தருகிறேங்க)
கவின்... (உங்கள் தளம் என்னாச்சு?)
நசரேயன்
ஜெஸ்வந்தி (வரவுக்கு வரவேற்புகள்)

அனைவருக்கும் மிக்க நன்றி!!
Joe said…
ஆனந்த விகடன் வாங்குவதற்கு பதில் அந்த தொடர் புத்தமாக வரும்போது வாங்கிக் கொள்வேன்.
Joe said…
சென்ற முறை படித்த போது, "என்னடா இந்தாளு, இவன் கட்டுரை எழுதியிருக்கான? இல்லை எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரையை மீள்பதிவு பண்ணிருக்கானா?" அப்படின்னு ஒரு சந்தேகம் வந்தது.

முழுதாக படிக்காமல் சென்று விட்டேன், சின்ன பின்னூட்டத்தை மட்டும் எழுதி விட்டு.

கிருஷ்ணா பிரபு சொன்னது போல, நானும் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதுவே உங்கள் பலவீனமும், பலமுமாக இருக்கலாம்.

சேவல்காரி விரைவில் வெளிவர வாழ்த்துக்கள்.
Murali said…
Dear Aadavan,

I like your site and contents.
Love your writings.
Only thing I did not like is the image in the front page. You have used my daughters photo taken by me without my permission. Kindly remove it as soon as possible.
Thanks.

Link to origional photo ->http://www.flickr.com/photos/murali-art/2192311233/

Anbudan,
Murali

muraliwind@yahoo.com
நல்ல பதிவு.நானும் இந்தத் தொடரை படித்து வருகிறேன்.