கொல்லப்படும் புத்தன் - ஈழக் குறுங்கவிதைகள்

கமல், ஹேமா போன்று பலர் கவிதைகள் எழுதும் பொழுது அதன் வலியை நன்கு உணருவேன். நான் நானாக இருந்த பொழுது எனக்கு ஈழ உணர்வுகள் வந்ததில்லை, நான் எப்பொழுது அடுத்தவராக, அடுத்தவரின் உணர்வாக, இருத்திக் கொண்டு, எழுத்தாளனாக இருந்தேனோ அப்போதிருந்து உணர்ந்து கொண்டேன்!!

பெரும்பாலும் நான் ஈழக் கவிதைகள் எழுதுவதில்லை.. அப்படிச் சொல்லுவதை விட, எனக்கு எழுத வராது என்று சொல்லலாம்.. என்னால் வலியை வார்த்தைகளால் காண்பிக்க முடியுமா என்று பல முறை யோசித்திருக்கிறேன்..

கமலின்
தமிழ் மதுரம் தளத்தில் வெளியாகியிருந்த இப்படத்தைக் கண்டவுடன், எனக்கு ஆழ்ந்த வருத்தம் மட்டுமே உண்டானது.. என்னால் என்ன செய்யமுடியும்??? கவிதை எழுதுவதைத் தவிர... அந்த உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். படம் கொடுத்தமைக்கும், கவிதை வரைய தூண்டுகோலாக இருந்தமைக்கும் கமலுக்கு என் நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்
ஆதவா



கழுத்தறுபட்ட முதியவள்
கதறும் குழந்தை
புத்தருக்குத் தூக்கு

xxxxxxxxxxxxxxxxxx

யாரோ வீசிய குண்டு,
எரிந்து தணலானது
போதிமரம்

xxxxxxxxxxxxxxxxxxxxx

குருதியில் சிதறுகிறது
புத்தன் வளர்த்த
அமைதி

xxxxxxxxxxxxxxxxxxx

கண்மூடி இருக்கிறாய் புத்தா
திறந்து பார்
உன் காலடியில் குருதி

xxxxxxxxxxxxxxxxxx

சொல்லமுடியாது
புத்தனும் ஆவேசமாகலாம்
இந்நிலை கண்டு!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxx

யாராவது எழுப்புங்கள்
நீண்ட நெடுந்துயிலொன்றில்
ஆழ்ந்திருக்கிறது அமைதி!

xxxxxxxxxxxxxxxxxxxx

இரத்தத்தில் மிதக்கிறேன்
காகிதம் கொண்டுவா
கவிதைகள் பிறக்கட்டும்

xxxxxxxxxxxxxxxxxxxxx

வழியில்லாத பாதையில்
வலியைச் சுமந்தபடி செல்கிறது
புத்தரின் போதனைகள்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

காலம் ஒழுகிக் கொண்டிருக்கிறது
குருதியைப் போலவே
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
திரைப்படம் போல

xxxxxxxxxxxxxxxxxxxxxxx

A9 சாலையில்
சுட்டெரிக்கும் வெயிலில்
கதறித் துடிக்கிறது
சொற்களை இழந்த தமிழ்!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கதறக் கதறக் கற்பழித்து
அப்பெண்ணோடு கொல்லப்பட்டான்
புத்தன்


xxxxxxxxxxxx

யாரேனும் பார்த்தீர்களா?
நான் தவற விட்ட அம்மாவும்
என் பொம்மைகளும்?

xxxxxxxxxx

புத்தனைச் செவிடாக்குகிறார்கள்
துப்பாக்கிச் சத்தங்களால்

புத்தனைக் குருடாக்குகிறார்கள்
கண்முன்னே கொல்லப்படும் சிசுவால்

புத்தனை ஊமையாக்குகிறார்கள்
காலால் மிதிக்கப்படும் மனிதநேயத்தால்

புத்தனைக் கொல்லுகிறார்கள்
ஒரு இனத்தை அழிக்கும் ஆயுதத்தால்...

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Comments

நமக்குள் வலி வந்தால் அதை வார்த்தையில் கொண்டு வரலாம் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள் ஆதவன்...

//யாரேனும் பார்த்தீர்களா?
நான் தவற விட்ட அம்மாவும்
என் பொம்மைகளும்?//

கனமான வரிகள்...
நெஞ்சை அசைத்துப் பார்க்கும் வரிகள் ஆதவா.. இந்த நிலை மாற வேண்டும் என வேண்டுவதைத் தவிர நாம் என்ன செய்ய இயலும்..?
யாரோ வீசிய குண்டு,
எரிந்து தணலானது
போதிமரம்//

உணர்வின் வெளிப்பாடுகளும், சுடுகின்ற சொற்களும் கவிதையில் தெரிகின்றது.
கழுத்தறுபட்ட முதியவள்
கதறும் குழந்தை
புத்தருக்குத் தூக்கு//

பாவம் புத்தரின் ஆவி கூட இலங்கையில் அலைந்தால் அதனையும் ஆட்சியாளர்கள் கொன்று விடுவார்கள்.
குண்டுகள் வீசப்படுகின்றன அங்கே காயங்கள் என்னவோ நமக்கு!
உடன்பிறவா சகோதரனை காப்பாற்ற வக்ககற்று போனேமே! இன்னும் சில சதுர கிலோமீ்ட்டர்கள்தானாம்! என்ன செய்ய போகிறாம்?
யாராவது எழுப்புங்கள்
நீண்ட நெடுந்துயிலொன்றில்
ஆழ்ந்திருக்கிறது அமைதி!//


நண்பா யாருமே வரமாட்டார்கள் எழுப்புவதற்கு.... உலகம் நடப்பவற்றை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மனித உயிர்கள் இறந்த பின்னர் தான் உலகம் கணக்கெடுப்பு நடாத்த வரும் போல??
மனது கணத்தது வரிகளை படித்து
//யாரோ வீசிய குண்டு,
எரிந்து தணலானது
போதிமரம்
//

வார்த்தையில்லை
//சொல்லமுடியாது
புத்தனும் ஆவேசமாகலாம்
இந்நிலை கண்டு!
//

அந்தளவிற்கு கொடுமைகள் அரங்கேறுகிறது
//கண்மூடி இருக்கிறாய் புத்தா
திறந்து பார்
உன் காலடியில் குருதி//

அஹ்ஹா சொல்ல வைத்த வரி, அப்படியாவது சிங்களர்கள் விழிக்கட்டும்
//புத்தனைச் செவிடாக்குகிறார்கள்
துப்பாக்கிச் சத்தங்களால்

புத்தனைக் குருடாக்குகிறார்கள்
கண்முன்னே கொல்லப்படும் சிசுவால்

புத்தனை ஊமையாக்குகிறார்கள்
காலால் மிதிக்கப்படும் மனிதநேயத்தால்

புத்தனைக் கொல்லுகிறார்கள்
ஒரு இனத்தை அழிக்கும் ஆயுதத்தால்...
///

புத்தனை வணங்குகிறவர்கள் இதை கவணிப்பாரா
புத்தர் என்றைக்குமே அமைதியை போதித்தவர்

மனதை கலங்கவைத்துவிட்டீர் ஆதவா... கவிதை அருமை
வாழ்த்துக்கள்
Anonymous said…
உருக்கமாக, உணர்ச்சியுள்ள கவிதைகள்.

மீண்டும் உணர்வு பெறுகிறேன் நண்பா.

நன்றி
கவிதை படிக்க வருக
Unknown said…
//வழியில்லாத பாதையில்
வலியைச் சுமந்தபடி செல்கிறது
புத்தரின் போதனைகள்//

பெளத்ததை பேர்த்திய ரெளதிரியிடம் அமைதியை எதிர்பார்க்கலாமா?
ஆம்.. அங்கே புத்தனுக்கு சமாதி கட்டிக்கொண்டிருக்கிறார்கள் தமிழனின் குருதியை வைத்து.

//கதறக் கதறக் கற்பழித்து
அப்பெண்ணோடு கொல்லப்பட்டான்
புத்தன்//

அருமை. இந்த வார்த்தைகளைச் சுமக்கும் காகிதங்கள் கூட கண்ணீர் விடும்.


கொஞ்சம் சம்பந்தப்பட்ட என் பதிவு கீழே..
http://tamizhodu.blogspot.com/2009/02/blog-post_3575.html


உழவன்
kuma36 said…
ஆதவா மெய்ச்சிலிர்க்க வைக்கின்றன கவி வரிகள்.

//யாரேனும் பார்த்தீர்களா?
நான் தவற விட்ட அம்மாவும்
என் பொம்மைகளும்?///

எவ்வளவு வேதனை.

இந்தனை
பிஞ்சுள்ளங்களின்
கதறல்கள்
இன்னும்
உன்
காதில்
எட்ட விலையா
என் இறைவா?
ஆதவன் said…
உள்ளத்தை உருக்கி
கண்களைக் கசிய வைத்தன
உங்கள் வரிகள்..!

இந்த இடுகையை எமது வலைப்பதிவில் மறுப்பதிவு செய்துள்ளேன்..!
ஆதவா!

வலியையும், கோபத்தையும் சேர்த்து எழுதியிருக்கிறீர்கள்.

பாவம்... புத்தர் என்ன செய்வார்!
ஹேமா said…
//யாராவது எழுப்புங்கள்
நீண்ட நெடுந்துயிலொன்றில்
ஆழ்ந்திருக்கிறது அமைதி

யாரோ வீசிய குண்டு,
எரிந்து தணலானது
போதிமரம்//

ஆதவா,கண்கள் கனத்து அழுதே விட்டேன்.எங்கள் உணர்வை அப்படியே பிழிந்தெடுத்த வரிகள்.
ஹேமா said…
//ஆ9 சாலையில்
சுட்டெரிக்கும் வெயிலில்
கதறித் துடிக்கிறது
சொற்களை இழந்த தமிழ்!//

நாங்கள் நடந்த பாதைகள் காத்துக்கிடக்கின்றன,
மீண்டும் எங்கள் கால் தடங்களுக்காக.
போகும் பாதைகளைத்தான் அடைக்கமுடியுமே தவிர
எங்கள் மனங்கள்
நாம் அலைந்த தெருக்களில்
மூச்சாய்...
ம்...ஹஹம்... நீதிமன்றத்திலேயே இப்படீன்னாக்கா, ?????

///
Nilavum Ammavum கூறியது...

ஆள் மாத்தி ஆள் மாத்தி அடிச்சுகிட்டே இருங்கடா ...என்னிக்கு தான் ஒரு முடிவுக்கு வர்றேங்கன்னு பார்க்கலாம
/////////

ஹாஹ்ஹா...... சரிதான்!!!! நாமளும் எத்தனைஇ நாளைக்குத்தான் பொறுமையா இருக்கிறது????!!!///

ஆதவா வருகைக்கு நன்றி!!
Anonymous said…
எங்கள் வாழ்வின் ரணங்களை வலியோடு சொல்லியிருக்கிறீர்கள்
Anonymous said…
கண்மூடி இருக்கிறாய் புத்தா
திறந்து பார்
உன் காலடியில் குருதி
//
அங்கு நடப்பது.. புத்தனின் பெயரில் ஒரு யுத்தம்... புத்தத்தை காக்க வேண்டிய பிக்குகள்தான்.. யுத்தத்தில் மும்முரமாக இருக்கின்றனர்...
Rajeswari said…
காலம் ஒழுகிக் கொண்டிருக்கிறது
குருதியைப் போலவே
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
திரைப்படம் போல//

என்ன சொல்வதென்றே தெரியவில்லை... கடவுள் மீது கோபம் வருகிறது
அமுதா said…
ஆதவா!! என்னவென்று கூறுவது இக்கவிதைகள் பற்றி. மனம் கனக்கிறது.

/*யாராவது எழுப்புங்கள்
நீண்ட நெடுந்துயிலொன்றில்
ஆழ்ந்திருக்கிறது அமைதி!*/
யாராவது எழுப்புங்களேன் என்று கூக்குரலிடுகிறது மனம்.

/*யாரேனும் பார்த்தீர்களா?
நான் தவற விட்ட அம்மாவும்
என் பொம்மைகளும்?*/
துடிக்கிறது நெஞ்சம்.

பிரார்த்தனைகள் பொய்யோ என்று தோன்ற வைக்கும் நிகழ்வுகள்.. என்றாலும் பிரார்த்தனைகள் மீதும் நம்பிக்கை இழக்க முடியவில்லை
Anonymous said…
aathava... mika mika azhagana varikal

யாரோ வீசிய குண்டு,
எரிந்து தணலானது
போதிமரம்

xxxxxxxxxxxxxxxxxx

சொல்லமுடியாது
புத்தனும் ஆவேசமாகலாம்
இந்நிலை கண்டு!

mika mika arputhamana varigal.. superb aadhava..