புத்தகம் கற்றுக் கொடுத்தாள்

ரொம்ப நாளாக புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏதோ ஒரு காரணத்தினால் நிறுத்தியிருந்தேன். காரணமில்லாத காரணம் என்று கூட சொல்லலாம். ஆனால் புத்தகம் வாசனை என் மனக்கிடங்கின் ஏதோ ஒரு மூலையில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுதான் இருந்தது. வாழ்நிலையும், சூழ்நிலையும் தானே புத்தக வாசிப்பின் தீவிரத்தை நிர்ணயிக்கிறது?? கடந்த சில நாட்களாகவே புத்தக கண்காட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆண்டு தொடங்கியோ அல்லது தொடங்கி ஒரு மாதம் பின்னரோ இங்கு கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.. இதை எப்படி கண்காட்சி என்று சொல்லமுடிகிறது? விற்பனைக்கூடம் என்றோ, விலைநூலகம் என்றோ மாற்றிச் சொல்லுதல் தகுமா? சரி, அந்த ஆராய்வை விடுப்போம்.

சாயுங்காலம் ஐந்து மணியளவில் திருப்பூர் டவுன்ஹாலுக்குச் சென்றடைந்தேன். திருப்பூரில் கண்காட்சியை நடத்த அந்த இடம் சரியான இடமாக இருக்கும்.. இது ஆறாம் கண்காட்சி.. ஏற்கனவே இரண்டு முறை சென்றிருந்தாலும் இம்முறையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் சென்றடைந்தேன்.. இரு வாயில்கள் இருந்தன, ஒன்று நுழை வாயில் ; இன்னொன்று வெளி வாயில். நான் இரண்டாம் வாயில் வழியாகவேதான் உள்ளே சென்றேன்.. வாயில் நுழைவு ஒன்றும் தேர்ந்தெடுப்பின் திறனை தீர்மானிப்பதில்லை என்றாலும் கொடுக்கப்பட்டிருக்கும் விதியைத் தாண்டித்தானே செல்லவேண்டியிருக்கிறது என்ற நோகலுடன் நுழைந்தேன்.

பொதுவாக புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும்பொழுது எனக்கு சில பழக்கங்கள் உண்டு. முதலில் எல்லா ஸ்டால்களையும் ஒருமுறை பார்வையிடுவேன், அப்பொழுதே, பார்க்கவேண்டிய பதிப்பகங்கள் எவையெவை என்பதை தீர்மானித்துவிடுவேன்.. இதனால் பல தேவையில்லாத பதிப்பகங்களை நீக்கிவிட்டு, தேவையானவற்றை மட்டும் பார்க்கலாம்.. இரண்டாவது நன்கு உலாவலாம்... அதே போல, தேவையான பதிப்பகத்தினுடைய விசிட்டிங் கார்டுகளும் மறக்காமல் வாங்கிக் கொள்ளுவேன். அடுத்து, எந்தெந்த புத்தகங்கள் வாங்கவேண்டுமென்று சிறு குறிப்பு அவ்வப்போது எழுதிக் கொண்டே செல்லுவேன்... கூடவே விலையும்.... இறுதியில் கூட்டி கழித்து வாங்குவது என் பழக்கம். இதை நீங்கள் திட்டமிடுதல் என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள், எனக்கு அக்கறையில்லை, எம்முறையும் நண்பர்களுடன் செல்லும் பொழுது, எனக்கு இத்திட்டமிடுதல் வசதிமிகுந்ததாக இருக்கும்.. இம்முறை என்னுடன் வந்தது நான் மட்டுமே..

இறுதிநாளான இன்று (08-02-09) அதிகபட்ச நேரம் இருந்ததால் மெல்ல பார்ப்பதென்று முடிவெடுத்தேன். செல்லும்பொழுதே, கண்டிப்பாக வைரமுத்து கவிதைகளை வாங்கக்கூடாது என்ற முடிவுடந்தான் சென்றேன். ஏன் என்று நீங்கள் கேட்கலாம்.. சென்றமுறை சென்றிருந்த போது பெரும்பாலான பதிப்பகங்களில் வைரமுத்துவின் ஆதிக்கம் இருந்தது... அது இன்று நேற்றல்ல.. பல நாட்களாகவே நிகழும் ஒன்றுதான் என்றாலும், மற்ற கவிஞர்களையும் சற்று பார்க்கவேண்டுமல்லவா.. ஒவ்வொரு பதிப்பகத்தின் மீதும் ஏறி இறங்கும் பொழுதும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது... எத்தனையோ புத்தகங்கள் வாங்க காத்த்திருந்தாலும் கையிருப்பும் தற்சூழ்நிலையும்தானே அவ்வப்போதைய பொழுதை போக்க வல்லனவாக இருக்கின்றன???

ஒரு சில கவிதைகள், கதைத் தொகுப்புகள், இலக்கியங்கள் என்று எனது அலைப்பேசியில் நோட் (Note) செய்துகொண்டே இருந்தேன்... பெரும்பாலும், சமையல் குறிப்புகள், ஜோதிடம், சுயமுன்னேற்றம், திரைப்படம் போன்ற புத்தகங்களே அதிக விற்பனைக்கு இருந்தன, வாங்கியும் செல்கிறார்கள்... கவிதை????

உரசிச் செல்லும்
மூச்சுக்களில்
அடிபட்டு கக்கியது
இரத்தம்...
புத்தகக் கண்காட்சியில் கவிதை...

சென்ற வருடம் நிவேதிதா பதிப்பகத்தில் வாங்கியிருந்த நிழலின் கனம், ஒளியின் பொம்மை (?) சஹாராவும் ரொட்டித்துண்டும், போன்ற சில புத்தகங்கள் இன்னும் அப்படியே இருந்தன... விற்கவில்லை என்று நினைக்கிறேன்... சரி, சில புதியவர்களின் கவிதைப் புத்தகங்களாவது இருக்கும் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம்தான்... இல்லாமல் இல்லை... ஆனால் அவையெதுவும் என்னைக் கவரவில்லை... முழுக்க முழுக்க, வைரமுத்துவும், பா.விஜயும் ஆக்ரமித்திருந்தார்கள்.. அதற்கு அடுத்தாற்போல தபூசங்கர். இவர்களின் கவிதைகளே பிரதானமாக இருக்கையில், புதிய கவிஞர்கள் காணாமல் போயிருந்தார்கள்... ஒருவேளை நான் சென்றது இறுதிநாளாக இருப்பதால் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

ஒருசில காதல் கவிதைகளைப் படித்து வாந்தியெடுத்துவிட்டுத்தான் வந்தேன்... இதற்கு நான் எவ்வளவோ பரவாயில்லையாக எழுதுகிறேன்.

சரி, புத்தகங்கள்தான் ஒன்றும் அமையவில்லை ஏதாவது சினிமாக்களாவது வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டு ஒரு ஸ்டாலுக்குள் சென்றேன்.. உலகில் என்னென்ன சிறந்த திரைப்படங்களெல்லாம் இருக்கிறதோ, அத்தனையும் வைத்திருந்தார்..... நான் தேடிக்கொண்டிருந்தது இதைத்தான்... கிடைத்துவிட்டது.. எனக்கு எல்லாமே வாங்கிச் செல்லவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், முதலில் என்னென்ன படங்கள் இருக்கின்றன என்பதை முழுக்க பார்த்தேன்.. கிட்டத்தட்ட ஒருமணிநேரம் செலவழித்து பார்த்ததில், அவரின் விசிட்டிங் கார்ட் தென்பட்டது.. பத்திரப்படுத்திக் கொண்டேன்... கோவை தானே!! எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்... அப்படியென்றால் எதுவும் வாங்கவில்லையா என்று கேட்கிறீர்களா??

Where eagles dare
Fist full of dollers
For a few dollers More

இவை மூன்று கிளாஸிக்குகள் என் அப்பாவுக்காக,,, ஏற்கனவே இதன் டிவிடி இருந்தாலும் அது பழுதாகிவிட்டதால் மீண்டும் வாங்கினேன்.

எனக்காக,
Pickpocket,
Pulp Fiction, மட்டும்... இனி தரமான உலக சினிமாக்கள் மாதம் நான்கு வரை வாங்கிப் பார்க்கவேண்டும் என்ற முடிவும் எழுந்துவிட்டது... (யாருக்காகவாவது நல்ல சினிமா வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள்.. ஒன்றின் விலை ருபாய் 50.00 :) )

புத்தகம்???

உயிர்மை பதிப்பகம் தென்பட்டது.. உள்ளே சென்றவன், சில புத்தகங்களையாவது வாங்கவேண்டுமே என்ற நோக்கில், எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசியும், மனுஷ்யபுத்திரனின் கடவுளிடம் பிரார்த்தித்தல் உம் மட்டும் வாங்கினேன்... கொஞ்சம் உறுத்தியது... புத்தக கண்காட்சிக்கு வந்து இரண்டுதான் வாங்கினோமா என்று யோசித்துவிட்டு, மீண்டும் உயிர்மை சிற்றிதழை வாங்கி விட்டு நகர்ந்தேன்..

அதற்கடுத்தாற்போல் விகடன் பிரசுரம்...... எனை நன்கு தூண்டிய எஸ்.ராவின் துணையெழுத்தை பத்திரப்படுத்திக் கொண்டேன்.. செல்லும்பொழுது மணி எட்டரை. கால்வேறு வலித்தது... ஓசையில்லாமல் நகர்ந்து சென்றேன்... எனக்காக பல புத்தகங்கள் அங்கே அழுதுகொண்டிருப்பதை காதில் கேட்காமல் நழுவினேன்...

வெளியே செல்லும் வாயிலின் ஒரு ஓரத்தில் காலுடைந்த பிச்சைக்காரி யாசகம் கேட்டாள்.... கையில் மமதை நிறைந்த காகிதங்கள் ; திக்கற்ற மனது ; என்ன செய்ய?? மனம் இறுகிவிட்டது. ஒருநிமிடம் நின்று அவள் முகத்தை கவனித்துவிட்டு மீண்டும் நகர்ந்தேன்... அவள் என்னை என்னவெல்லாமோ எண்ணியிருக்கலாம்.. ஆனால் எனது எண்ணம் யாருக்கும் பிச்சை போடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தது. அவளை விட்டு நகர்ந்துவண்டியை உசுப்புகையில், அங்கே ஒரு பேச்சாளரின் பேச்சரவத்திற்கு கைத்தட்டல்கள் எழுந்துகொண்டிருந்தன.. பலர் அந்த பிச்சைக்காரியை நிராகரித்துச் சென்றார்கள். நான் செல்லும் வழியை அந்த பிச்சைக்காரி பார்த்துக் கொண்டிருக்கத் தேவையிருந்திருக்காது... அவள் அடுத்தவரைப் யாசித்துக் கொண்டிருக்கலாம்...

வீட்டுக்கு வந்த பிறகுதான் யோசித்தேன்.... யாருக்கோ எப்படியோ வீணாக செல்லும் பணத்திலிருந்து ஒருரூபாயாவது கொடுத்திருக்கலாம்...

பின் குறிப்பு :
என்ன, தலைப்பு ஒட்டவில்லையா???? நான் அங்கே சென்று உலவி, படித்து வாங்கிய புத்தகங்களைக் காட்டிலும் எனக்கு அந்த வாயில் பிச்சைக்காரிதான் நிறைய கற்றுத்தந்தாள். ஆகவேதான், அவள் புத்தகம் கற்றுக் கொடுத்தவள்...

Comments

//வாழ்நிலையும், சூழ்நிலையும் தானே புத்தக வாசிப்பின் தீவிரத்தை நிர்ணயிக்கிறது?//

முற்றிலும் உண்மை ஆதவன்...
//உரசிச் செல்லும்
மூச்சுக்களில்
அடிபட்டு கக்கியது
இரத்தம்...
புத்தகக் கண்காட்சியில் கவிதை...
//

அருமை...
//ஒருசில காதல் கவிதைகளைப் படித்து வாந்தியெடுத்துவிட்டுத்தான் வந்தேன்... இதற்கு நான் எவ்வளவோ பரவாயில்லையாக எழுதுகிறேன். //

நீங்க நல்லாத் தான் எழுதுகிறீகள்...
//வீட்டுக்கு வந்த பிறகுதான் யோசித்தேன்.... யாருக்கோ எப்படியோ வீணாக செல்லும் பணத்திலிருந்து ஒருரூபாயாவது கொடுத்திருக்கலாம்... //

கொடுத்திருக்கலாம் ஆதவன்...யாசகம் கேட்ப்பது எவ்வளவு தன்மானக் குறைவான விசயம்...மனிதர்கள் யாரும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை...அப்படியும் ஒருவர் யாசகம் கேட்கிறார் என்றால் அவரிடம் பணம் சம்பாதிக்க முடியாமல் ஏதோ ஒரு இயலாமை இருக்கிறது அதனால் தான் தன்மானம் விட்டு யாசகம் கேட்கிறார்...நம்மாள் முடிந்த சிறு உதவிகளை செய்வதி ஒன்றும் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை...
\\புத்தகம் வாசனை என் மனக்கிடங்கின் ஏதோ ஒரு மூலையில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுதான் இருந்தது\\

ஆரோக்கியம்
\\எந்தெந்த புத்தகங்கள் வாங்கவேண்டுமென்று சிறு குறிப்பு அவ்வப்போது எழுதிக் கொண்டே செல்லுவேன்... கூடவே விலையும்.... \\

நல்ல விடயம்.
\\ஒரு சில கவிதைகள், கதைத் தொகுப்புகள், இலக்கியங்கள் என்று எனது அலைப்பேசியில் நோட் (Note) செய்துகொண்டே இருந்தேன்... \\

அழை(ப்)பேசியை நல்ல விதமாக பாவிக்கின்றீர்கள்
\\வீட்டுக்கு வந்த பிறகுதான் யோசித்தேன்.... யாருக்கோ எப்படியோ வீணாக செல்லும் பணத்திலிருந்து ஒருரூபாயாவது கொடுத்திருக்கலாம்... \\

இந்த நிலைக்கு நம்மை கொண்டு வந்து விட்டனர். பல பிச்சைக்காரர்கள் என்ற பெயரில் இருக்கும் சோம்பேறிகள்
ஆதவா said…
நன்றி புதியவன்.. சில் யாசகர்களைக் கண்டால் நமக்கே வெறுப்பு வரும்.. அந்த அளவுக்கு மோசமாக இருப்பார்கள்..

அங்குலாங்குலமாக ரசித்து படித்தமைக்கு நன்றி புதியவன்...
ஹேமா said…
ஆதவா,வாழ்வை திட்டமிட்டு நகர்த்துகிறீர்கள்.நல்ல பழக்கம்.

நானும் பிச்சை போடுவதென்பதை வெறுப்பவள்.உழைத்து வாழக்க்கூடிய உடம்பு-நாட்டில் வாழ்ந்தும் சோம்பேறியாக வாழ்பவரை நாங்களே ஊக்கம் கொடுப்பது போல பிச்சை போடுவது.அநேகமாக என்வாழ்வில் ஒரே ஒரு முறைதான் பிச்சை போட்டிருக்கிறேன்.அதுவும் தேவை கேட்ட பிறகே!உதவிகள் என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன் இப்போதும்.சில விஷயங்களை நாங்கள் தவிர்த்தாலும் உறுதலாய் இறுக்கி வதைக்கும் அது ஏன்?அதன் பிரதிபலிப்புத்தான் உங்கள் இந்த அனுபவம்.
ஹேமா said…
ஆதவா,ஏன் உங்கள் கவிதைகளுக்கு என்ன?அருமையாய்தானே எழுதுகிறீர்கள்.
ஆதவா said…
மிக்க நன்றி நட்புடன் ஜமால்... பதிவை பிரித்து விமர்சனமிட்டிருக்கிறீர்கள்... மிக்க நன்றி...

அன்புடன்
ஆதவன்
ஆதவா said…
சகோதரி, நீங்களாவது ஒருமுறை யாசகம் கொடுத்திருக்கிறீர்கள்... நான் அதுவும் இல்லை.. ஆனால், சில பெண்களைப் பார்த்தால் மட்டும் எனக்கு உறுத்தும்... கையொடிந்து, கண்ணிழந்து... இன்னும் பலப்பல....... சொல்ல முடியாத வேதனை... அவர்கள் எப்படி சம்பாதிக்க முடியும்?? நாம் அவர்களுக்கு செய்வதென்ன? இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றும்..


ஆனால் பிச்சை கொடுக்க மாட்டேன்.... எனது கொள்கையிலிருந்து விலகி நடக்க மாட்டேன்.... அதனால்தான் அந்த உறுத்தல்கள்........

அன்புடன்
ஆதவன்
ஆதவா said…
///ஆதவா,வாழ்வை திட்டமிட்டு நகர்த்துகிறீர்கள்.நல்ல பழக்கம். /////

சில சமயங்கள், திட்டமிடுவதற்கு முன்பே வாழ்க்கை சென்றுவிடுகிறது... :)


////ஆதவா,ஏன் உங்கள் கவிதைகளுக்கு என்ன?அருமையாய்தானே எழுதுகிறீர்கள். ////

ஏதோ சுமாராக எழுதுகிறேனுங்க.... நண்பர், புதியவனும் நீங்களும் என் கவிதையை ஒப்புக் கொண்டுவிட்டதால்... நான் அருமையாக எழுதுகிறேன்... ஹி ஹி ஹி...
Unknown said…
ஆதவா,

என் பதிவிலிருந்து உங்களை இங்கு துரத்தி வந்திருக்கிறேன். Once Upon a Time in the West வாங்கி கொடுங்கள் உங்கள் தந்தைக்கு. Sergie Leone ன் முத்தாய்ப்பான படைப்பு.

கொள்கைகள் கடிவாளம் போன்றவை, அதுவே பார்வையாகிவிடக்கூடாது. அப்புறம் வாழ்க்கையை புரிந்து கொள்ளவே இயலாமல் போய்விடும். உங்கள் முடிவில் யாருக்கு பிச்சை அளிக்க வேண்டும் எனத்தோன்றுகிறதோ அவர்களூக்கு தாராளாமாக அளியுங்கள்.

காற்றும், நீரும், ஒளியும் ஒருவகையில் நமக்கு பிச்சை தானே. இயலாதவர்கள் பலர் பிச்சை எடுப்பதுண்டு. பிள்ளைகளால் துரத்தப்பட்ட முதியோர்கள், ஊனமுற்றோர் என பல்ர் சமுதாயத்தின் உதவியை வேண்டி நிற்பவர்கள். அவர்களுக்கு உதவுவதில் எந்த கொள்கை பிறழ்வும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

உங்கள் வார்க்த்தைகளில் ”வாழ்நிலையும் சூழ்நிலையும் அவர்களை அந்த நிலைக்கு தள்ளிருக்கலாம்.”!

ஆதலால், தகுதிவாய்ந்தவர்களிடம் இரக்கம் காட்டுவதில் தப்பில்லை. நீட்ஷேவின் வார்த்தைகளில் “ என் கொள்கைகளுக்காக நான் இறக்க மாட்டேன்” :).

அதனால், கொஞ்சம் இலக்கற்று திரிய கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது தான் மனிதம் வசப்படும்.
அடேயப்பா! மிக நேர்த்தியான மொழி நடையில் எளிய வார்த்தைகளில் சொல்கிறீர்கள் விஷயத்தை.
//ஒருசில காதல் கவிதைகளைப் படித்து வாந்தியெடுத்துவிட்டுத்தான் வந்தேன்... இதற்கு நான் எவ்வளவோ பரவாயில்லையாக எழுதுகிறேன்.//

நன்றாகவே பார்க்கிறீர்கள். நன்றாகவே எழுதுகிறீர்கள்.
இதோ எனது blog listல் உங்கள் வலைப்பக்கத்தை இண் ஐத்துக் கொள்கிறேன்

வாழ்த்துக்கள்.
ஆதவா! புதுமையை வரவேற்போம்! பழமையைப் புறக்கணிப்போம் என்பது தான் இன்றைய கால கட்ட வாழ்க்கை. அதற்காகப் புதிய கவிஞர்களின் படைப்புக்களைப் புறந்தள்ளி பழையவைகளைக் காட்சிப்படுத்துவதன் மூலம் அனைவரும் நம்மை நாமே ஒடுக்க நினைக்கிறோம்??

இப்படியே தொடர்ந்தால் புதியன புத்துயிர் பெறுவது எப்போது?
இயல்பு மொழி நடையில் பதிவை நகர்த்தி வந்து கடைசியில் கவிழ்த்து விட்டீங்களே?
பலஸ்தீன மொழி பெயர்ப்புக் கவிதைகள் உங்கள் ஊரில் கிடைக்குமா? இருந்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள். வாசிப்பு மனிதனை முழுமையாக்குகிறது. மனதினுள் பல சிந்தனைகளைத் தருகிறது. இதன் ஆழவோட்டம் எம்மை விட்டு இன்றைய நவீன உலகியல் மாற்றங்களால் நீங்கிக் கொண்டே செல்கிறது. ம்..இனி வருங் காலத்தில் எமது சந்ததியினர் அனைவரும் கணினியில் மென் நூலிலே வாசிப்பினைப் பூர்த்தி செய்யும் நிலையும் ஏற்படும்.
ஆதவா said…
அன்பு இசை...

இங்கே வந்து பதிவிட்டமைக்கு நன்றி.. உங்களுடைய தெரிவை நான் பத்திரப்படுத்திக் கொள்கிறேன். நல்ல சினிமாக்களை எங்கிருந்தாலும் வாங்கிப் பார்ப்பது என்ற கொள்கை (திரும்பவுமா?) வளர்த்துவிட்டேன்... சரி...

இலக்கின்றி நான் எழுதவேண்டுமானால் செய்யலாம்.. ஆனால் திரிதல் என்பது வட்டத்துக்கு உள்ளேதான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

மற்றபடி நீங்கள் சொன்னக் கருத்திலிருந்து வேறு மாற்றுக் கருத்து எனக்கேதுமில்லை.. ஏனெனில் ஒவ்வொருமுறையும் எனக்கு உறுத்தல்கள் வரும்பொழுதெல்லாம் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யலாம் என்று யோசிப்பதுண்டு.....

நன்றி இசை....
ஆதவா said…
நன்றி மாதவராஜ் அவர்களே... என்னை நீங்கள் சேர்த்துக் கொண்டது எனக்குப் பெருமை...

@கமல்,

எனக்குப் புதுமை மிகமுக்கியம்...அதேபோன்று பழமையும்... இரண்டும் 3:2 என்ற விகிதத்தில்தான் நான் கலந்துவருகிறேன்..... ஏனெனில் நானும் இன்று புதியவந்தானே!!! (நம்ம புதியவன் இல்லீங்க :D)

கமல், எங்கள் ஊரில் புத்தகம் கிடைப்பதே குதிரைக் கொம்பு... அடுத்தமுறை அல்லது அடுத்த கண்காட்சிக்குச் செல்லும்பொழுது நிச்சயம் பாலஸ்தீனக் கவிதைகளைத் தேடுவேன்...

நன்றி நண்பா
priyamudanprabu said…
ஏற்க்கனவே தமிழ்மண்றத்தில் படிச்சாச்சு

//உரசிச் செல்லும்
மூச்சுக்களில்
அடிபட்டு கக்கியது
இரத்தம்...
புத்தகக் கண்காட்சியில் கவிதை...
//
நல்லாயிருகு

Popular Posts