வீட்டுக்குப் போகணும் - சிறுகதை

காலையில் போன் வந்ததிலிருந்து மனது ஒரே பரபரப்பாகவே இருந்தது. சுலைமான் அண்ணன் என்னை துபாய்க்குக் கூட்டி செல்வதாக சொன்னதை நிறைவேற்றும் வண்ணம் விசா அனுப்பியிருந்தார். அவரது அலுவலகத்தில் இண்டர்வியூ, தங்க ஏற்பாடு என்று சகலமும் செய்துவிட்டார். எனக்கு என்னவோ நான் அந்தரத்தில் பறப்பதைப் போன்ற உணர்வு. முதலில் வெண்ணைக்கரை விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்யவேண்டும். அப்பறம் தான் இந்த விசயத்தை அம்மாவிடம் சொல்லவேண்டும். காலையிலிருந்து ஏதோ கடிதாசி வந்ததே என்னடா அது என்று கேள்வி கேட்டு குடைந்துகொண்டிருந்தார். அப்பாவிடம் சொன்னால் இன்னும் சந்தோசப்படுவார். முன்பைப் போல இனி திட்டமாட்டார்.

விசா கவர் எடுத்துக்கொண்டு வெண்ணைக்கரை ஆலயத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன். வழியில் செல்பவர்களிடமெல்லாம் சொல்லவேண்டும் என்று எண்ணினேன். பின்னே, துபாயில் வேலை கிடைப்பது என்ன அத்தனை சுலபமா? கை நிறைய சம்பாதிக்கலாம். ஊருக்கு வந்ததும் நன்றாக செட்டில் ஆகிவிடவேண்டும். முடிந்தால் ஒருலட்ச ரூபாய் கார் வாங்கி வீட்டில் நிறுத்தவேண்டும். இனிமேல் செருப்பு போடக்கூடாது. ஷூ தான். என்னென்னவோ எண்ணங்கள்.

வெண்ணைக்கரையில் தனியாக அமர்ந்திருந்தார் விநாயகர். ஆஹா விநாயகா! உனக்குத்தான் எத்தனை மகிமை? என் கனவுகளை உடனே நிறைவேற்றுவாய் என்று கனவிலும் நினைக்கவில்லையே!. அட என்ன மறதி எனக்கு!! நெய் வாங்கி வர மறந்துவிட்டேன். இதோ, இந்த இடத்தில் தானே உன்னிடம் கேட்டேன். துபாய் வேலை வாங்கிக் கொடு என்று. சொன்னதைப் போல செய்துவிட்டாயே! பலே கில்லாடி நீ!

அருகே இருந்த கடையில் நெய் வாங்கி வந்து நெய்வேத்தியம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். அம்மா சமையல் செய்துகொண்டிருந்தாள். அம்மா, இனி நீ கஷ்டப்பட்டு சமையல் செய்யக்கூடாது. லேட்டஸ்ட் சமையல் பொருட்களை வாங்கித் தருவேன். அல்லது துபாயிலிருந்து அனுப்பி வைப்பேன். நீ ஜாலியாகவே சமைக்கவேண்டும்... மனதில் சொல்லிக் கொண்டேன். "அம்மா, எனக்கு துபாயில் வேலை கிடைச்சிடுச்சி. சுலைமான் அண்ணன் தான் விசா அனுப்பியிருக்காரு. பாருங்க" நீட்டினேன். அவருக்கு அப்படியொரு சந்தோசம். நாளை அக்கம்பக்கத்திலிருப்பவர்களிடம் சொல்லிக் கொள்வாள். என் பையன் துபாயில் வேலை செய்து பணம் அனுப்புகிறான் என்று,. அது அவளுக்குப் பெருமை தானே.. ஆஹா இந்த பெருமையை நான் தேடித் தருகிறேன். வள்ளுவர் கூட ஏதோ ஒரு குறளில் சொல்லியிருக்கிறார். சட்டென ஞாபகத்திற்கு வரமாட்டேன்கிறது.. அட, வள்ளுவர் என்றதும் நம்ம முத்து வாத்தியாரிடம் ஒரு வார்த்தை சொல்லவேண்டும். இன்னும் யார் யாரிடமெல்லாம் சொல்லவேண்டுமோ அனைவரிடமும் சொல்லிவிடவேண்டும். குறிப்பாக நான் வேலையில்லாமல் கஷ்டப்பட்டபோது ஏளனம் செய்தவர்களிடம் சொல்லிவிடவேண்டும்.

இரண்டு தெரு தள்ளி மாமா வீடு இருக்கிறது. மாமா பையனுக்கு விளையாட்டு சாமான்கள் வாங்கித் தரவேண்டும். நல்ல துணிமணி எடுக்கவேண்டும். மாமா கூட துபாயிலிருந்து டிவிடி வாங்கி வரச்சொன்னார். அதையும் வாங்கி வரவேண்டும். அத்தைக்கு ஒரு துபாய் புடவை.. துபாயில் புடவை கிடைக்குமோ என்னவோ? சரி, கிடைக்கும் நேரத்தில் தேடிப் பார்த்துவிடவேண்டியதுதான்..

நான் துபாய் போய்விட்டால் வீட்டில் தண்ணீர் யார் எடுப்பார்கள்.? அம்மாவுக்கு வயது ஆகிவிட்டது. அப்பாவோ சீக்கிரமே அலுவலகம் செல்லவேண்டும். அப்படியென்றால் தண்ணீர் கஷ்டம் கொஞ்ச நாட்களுக்கு இருக்கும். துபாயிலிருந்து வந்ததும் போர்வெல் போட்டு தண்ணீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அப்பறம் துவைப்பதற்கு வாஷிங் மெசின், ஃபிரிட்ஜ். என்று எல்லாவற்றையும் வாங்கிவிடவேண்டும்.

சென்னை கிளம்ப ஆயத்தமானேன். உடன் அம்மாவும் அப்பாவும் மாமாவும் வந்தார்கள். சென்ற வழியெல்லாம் துபாய் கனவுகளை நிரப்பினேன். அடுத்தமுறை என்னை வழியனுப்பும்போது காரில் வழியனுப்பவேண்டும். அப்படியென்றால் செல்லும் போது யார் கார் ஓட்டுவார்கள்? அதற்குள் அப்பாவை கார் ஓட்ட கற்றுக்கொள்ள சொல்லவேண்டும். கார் நிறுத்த வீட்டில் இடமில்லை. வெளியேதான் நிறுத்த வேண்டும்.. எண்ணங்கள் இப்படியே ஓடின. மெல்ல கனவோடு கனவாகத் தூங்கிப் போனேன்.

அப்பாதான் எழுப்பினார். சென்ட்ரல் வந்துவிட்டது.. இதுதான் எனக்கு முதல்முறை சென்னைக்கு வருவது. அடேயப்பா எத்தனை கூட்டம்? எவ்வளவு நெரிசல்? ஏர்போர்ட் செல்லவேண்டும். மீனம்பாக்கத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். ஏர்போர்ட் சென்றால் அங்கே எப்படி நடந்துகொள்ளவேண்டும்? அங்கே பெண்கள் அழகாக இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடன் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அவர்களுக்கு நிகராகப் பேசி அசத்திவிடவேண்டும்.

மீனம்பாக்கத்திற்கு வெகு அருகே வந்துவிட்டோம். ஒருவித நடுக்கம் என்னுள் இருந்தது. முதல்முறை விமானத்தில் செல்லவிருக்கிறேன். விமான விபத்தில் சிக்கிவிட்டால்? அவ்வளவுதான். இத்தனை கனவுகளும் நொறுங்கிவிடுமே! அம்மாவுக்குத்தான் முகமே சரியில்லை. என்னை விட்டு பிரிவதால் வாடிப்போய்விட்டார் போலும்.

எப்படியோ செக் இன் களையும், அம்மாவின் அழுகையையும், மாமாவின் அறிவுரையையும், அப்பாவின் மெளனத்தையும் தாண்டி விமான இருக்கையில் அமர்ந்துவிட்டேன், தொடையெல்லாம் நடுக்கம் ஏற்பட்டது. ஏதோ கனத்த உணர்வு. அழுகை வந்தது கண்ணீர் இல்லாமல். எதையோ இழந்துவிட்டேன். என்னவாக இருக்கும்? அம்மாவை விட்டுப் பிரிவது எத்தனை கஷ்டம் என்பது இப்போதுதான் புரிகிறது. என்னுடன் வருபவர்கள் எல்லாம் சிரித்தவாறு அமர்ந்திருக்கிறார்களே! பலமுறை விமான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அய்யோ, எனக்கு மட்டும் இப்படி நடுக்கம் ஏற்படுகிறதே! பேசாமல் இப்படியே எழுந்து சென்றுவிடலாமா? அதுவும் முடியாது. அதற்கும் திராணியில்லை. மெல்ல கண்ணயர்ந்தேன். தீடீரென ஒரு சப்தம். எனக்கு எதிர் திரையில் ஒரு பெண்மணி எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள். அருகே ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்திருந்தார். அவரது கையில் ஒரு வெளிநாட்டு புத்தகம். மயக்கும் வாசனை. என்னைப் பார்த்து மெல்ல சிரித்தார். ஆங்கிலத்தில் " துபாயா ? " என்றார். ஒருவேளை இது துபாய் செல்லும் விமானம் இல்லையோ? உள்ளூர் பேருந்தைப் போல சில நாடுகளில் இறங்குமோ என்னவோ?

சிறிது நேரம் யோசித்து, "வீட்டுக்குப் போகணும் " என்றேன். மீண்டும் சிரித்துவிட்டு, புத்தகத்தில் மூழ்கினார்.

Comments

பலமுறை விமான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அய்யோ, எனக்கு மட்டும் இப்படி நடுக்கம் ஏற்படுகிறதே! பேசாமல் இப்படியே எழுந்து சென்றுவிடலாமா? அதுவும் முடியாது. அதற்கும் திராணியில்லை. மெல்ல கண்ணயர்ந்தேன். தீடீரென ஒரு சப்தம். எனக்கு எதிர் திரையில் ஒரு பெண்மணி எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள்///

சிறுகதை நடை
சரளமாக வந்து உள்ளது..
என் தளம் வந்து கருதுதுரை தந்ததற்கு நன்றி.
please join your blog in www.tamilmanam.net
you will be viewed by more persons..
அமுதா said…
உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது..

சொல் சரிபார்ப்பு நீக்கினால் கருத்துரை இடுவது இன்னும் எளிதாக இருக்கும்
ஆதவா said…
///சிறுகதை நடை
சரளமாக வந்து உள்ளது..
என் தளம் வந்து கருதுதுரை தந்ததற்கு நன்றி.///

மிக்க நன்றி தேவன்மாயம்.. நல்ல படைப்புகள் இருக்குமிடத்தில் நிச்சயம் என் கருத்துக்கள் இருக்கும்ம்..
ஆதவா said…
////உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது..

சொல் சரிபார்ப்பு நீக்கினால் கருத்துரை இடுவது இன்னும் எளிதாக இருக்கும்.... ///
மிக்க நன்றி அமுதா அவர்களே.. சொல் சரிபார்ப்பு நீக்கிவிட்டேன். இனி தடையிருக்காது... மிக்க நன்றி..
Anonymous said…
Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team
ஹேமா said…
//அருகே ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்திருந்தார். அவரது கையில் ஒரு வெளிநாட்டு புத்தகம். மயக்கும் வாசனை. என்னைப் பார்த்து மெல்ல சிரித்தார். ஆங்கிலத்தில் " துபாயா ? " என்றார். ஒருவேளை இது துபாய் செல்லும் விமானம் இல்லையோ? உள்ளூர் பேருந்தைப் போல சில நாடுகளில் இறங்குமோ என்னவோ?

சிறிது நேரம் யோசித்து, "வீட்டுக்குப் போகணும் " என்றேன். மீண்டும் சிரித்துவிட்டு, புத்தகத்தில் மூழ்கினார்.//

முதன்முதலாக வெளிநாடு.விமானப் பயணம்.அனுபவத்தோடு மெல்லச் சிரித்து ரசித்தேன்.
//ஏதோ கனத்த உணர்வு. அழுகை வந்தது கண்ணீர் இல்லாமல். எதையோ இழந்துவிட்டேன். என்னவாக இருக்கும்?//

அது புரியவே புரியாது... ஆனால் தொண்டை கட்டிக் கொள்ளும்....அளவு அழவேண்டும் போலிருக்கும்...உணர்வுகள்...
அன்புடன் அருணா
நல்லதொரு சிறுகதை. சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் !!
ஆதவா said…
மிக்க நன்றி அன்புடன் அருணா
மிக்க நன்றி ரிஷான்

ரிஷான்... நலமா? உங்களை நான் பின் தொடருகிறேன்...

Popular Posts