நெருப்பு நீ,நீர் நான்

நெருப்பு நீ,
நீர் நான்.

சூரியத் தகட்டில்
வெப்பந் தணியா நெருப்பு நீ,
வா!
வந்தனை பூமியை
உருட்டு; திரட்டு;
என்னோடு இணைந்து பிரட்டு.
என்னுள் ஊடுருவி
உள் துளை
கக்கிய தீயெடுத்து
நாக்கிலே குழை.

அணை என்னை; அல்லது
அணைப்பேன் உன்னை.
பிதுக்கி யெடுத்தவாறு
பதுங்கி வா!
தொடு
முத்தமிடு
தீ முழுவதுமாய் கக்கு,
முடிந்தவரை போராடுகிறேன்.

சத்தமிடு,
மொத்தமும் இடு.
இன்னதென அறியாமல் தொடுகிறேன் உன்னை
தாக்கு;
தேக்கு
காதல் ரசங்களை
(உன்)ஜுவாலைகளின் வழியே போக்கு.
சுவடெரித்து விட்டு திரும்பச் செல்;
இல்லயெனில்
எனை நீரென்றும் பாராமல் கொல்.

உடுத்து;
படுத்து;
உன் கோப வெறிக்கு ஆளாகாத
என்னை உன் சாம்பலிலே கிடத்து.

அகல விரி
விழி;
உன் தீயால் என்னிதயம் பிழி.
திடமான் பொருள் எனக்கதுவே.

குதி;
கூச்சலிடு;
அக்னி விட்டு கும்மாளமிடு
சலனமாய் கவனித்தே
அணைக்கிறேன் உன்னை.

சாபமிடு;
கோபமிடு;
ஆக்சிஜன் பொருள்களில்
தாளமிடு;
இசையாகி வழிகிறேன் நீரிலிருந்து,
எரித்துவிடு இந்த இசையை.

சூடு தாங்காது ஓடுவிடுவேனோ?
வெப்பம் என்ன செய்யும் நீருக்கு?
அணைக்க ஓடி வந்து விடு.
வரும் போது,
யாவற்றையும் அழி;
வேண்டியவர்களை கழி;
மிச்சம் வை துளி.
வெறி தலைக்கேறி வந்தாய்
சுடுகிறாய் இன்னமும்.
என் நீர் வற்றியது நெருப்பே!

குனிந்து பார்!
எரிகின்ற ஆழி நெருப்பில்
தீபமாய் கிடக்கின்றேன்..........

Comments

Anonymous said…
அட!!!
அருமையாய் இருக்கு ஆதவா