தூரிகைகள் அற்ற கூடங்கள்

தேகங்களில் நீர்படர்ந்தவாறே
வர்ணக் கலவைகளை
அப்பிக் கொண்டு
மிதக்கும் கனவுகளில்
தூரிகைகள் துடைக்கப்படுகிறது
ஓவியனின் எச்சிலில்..

கூர் விழுதுகளால்
நேர் பார்க்கப்பட்ட
வர்ணக் கோலங்களைத்
தூக்கிக் கொண்டு செல்லும் முன்
மனம் கனக்க
பார்வையிடுகிறான்
கனவுகள் ஒடிந்த
கண்களில்

விட்டுப் போன தூரிகைகளை
பிணமாக்கி ஓடுகிறது
எலிக் குஞ்சுகள்.
வர்ணப் பெட்டிகளை
விசிறியடித்துச் செல்லுகிறது
பூனைக் குட்டிகள்

எல்லாம் எழுதியவை
வாங்கித் தருமோ?

கனவுகளை
வாங்குவார் யாருமில்லை
கனவெனப்பட்ட கைங்கரியங்களை
வாங்குவாருண்டோ?

என்றாவது ஒருநாள்
விற்கப்படும் அந்த ஓவியம்
அதுவரை தூரிகைகள் அற்ற
ஓவியக் கூடத்தை
எலிகளின் புழுக்கைகள்
நிரப்பிக் கொண்டிருக்கும்..

Comments