பொய்க்கா(ல்) குதிர

சுள்ளுனு காத்து அடிக்குது ஊருக்குள்ள,
மே மாசம் வேறயா, வெயிலு கொளுத்துது. கண்ணு திறந்து சனத்தைப் பார்த்த போதும்ல, ஒரே வலியாத்தான் இருக்கும். செருப்பு இல்லாம அங்கிட்டு இங்கிட்டு நெகர முடியாதே மண்ணா இருந்தாலுஞ் சரி தார் போட்டு இருந்தாலுஞ் சரி. வெளுத்துப் புடும்.
கருங்குதிர காயைப் பொறுக்கறதுக்கு கிளம்பினான் காலாங்காத்தால. பல்லு வெளக்கல, வாயைக் கொப்புளிக்கல, இஸி கூட பேழல, என்ன செய்யறது. கிழவி காத்தால இருந்தே கத்துச்சு,
டேய் கிறுக்குபைய மவனே! கவுண்டர் ஊட்டுல ஊருக்காரய்ங்க மேஞ்சுபுடுவாங்கய்யா! வெல்லனே போய் காயைப் பொறிடா!, இல்லனா காண்டி அள்ளிட்டு போய்டுவாங்க,
இரு த்தா, இப்பொதான் சிம்பரன் கூட கூத்து கட்டியிருக்கேன். இப்ப போய் எழுப்பீட்டு
அடி த்தா, செருப்பால, அவனவன் ஊருல உசிரில்லாம திர்றான், உனக்கு மார்ல மசுறு வேணுங்குதா, எந்திர்றா,
சொன்ன கிழவி, சீவக்கட்டைய தூக்கிட்டு வந்துட்டா, கருங்குதிர இதுக்குமேலயும் கனவு கண்டான்னா, நாளப்பண்ண புது வெளக்குமாரு வாங்கோனும்.
பொறுங்க ஆசாமிகளா, இவேன் பேரு கருங்குதிர இல்ல. வேலைச்சாமி. எப்படி இந்த பேரு வந்துச்சுனு கேக்கிறீங்களா? இருங்க சொல்லுறேன்.
வேலைச்சாமியோட பாட்டன் காலத்துல இவனோட பாட்டனுங்க பொய்கால குதிர ஆடிப் பொழச்சவனுங்க, அந்த காலத்துல தேவய்யா கூத்துன்னா, கூழுக் கம்பக் கூட கீழ ஊத்திட்டு வருவாய்ங்க, அத்தன பேமசு, தேவய்யா ஒரு நாளு செத்துப் போனாரு, மனுசன் பொறந்தா செத்துதான போகனும். அவன் மகன் வந்தான், கருமூஞ்சி னு பேரு.. தேவய்யா அந்த காலத்துலயே கலப்பு கலியாணம் புடிச்சாரு. அதனால அவன் சாதிக்காரங்க ஒதுக்கிப்புட்டாங்க, தேவய்யா சம்சாரத்தில இப்படித்தான் பேரு வெப்பாங்களாம்ல, கருமூஞ்சி, வெள்ளைப் பன்னி, பணியாரம், இப்படித்தான் பேரு இருக்கும். சரி, கருமூஞ்சி ஓரளவுக்கு குதிரக் கூத்து ஆடினாலும் அவனுக்கு இதுலெல்லாம் இஷ்டமில்ல. இவிங்க ஊரு நத்தம் பக்கதுல கொத்தம்பட்டி கிராமம். கயிறு திரிக்கிறதுதான் இங்க தொழிலே. கட்டுக் கயிறு ன்னு சொல்லுவாங்க. மக்க ஒரு பக்கத்துல தென்னைமட்டைத் திரியை வெச்சுக்குட்டு நீளமா இழுப்பாங்க, எடையிடையே திரிய வச்சு தேச்சுக்கிட்டே திரிக்கணும்.. அந்த தொழில்லதான் கருமூஞ்சிக்கு நாட்டஞ் ஜாஸ்தி. இவன் காலத்துலயே எம்சிஆரு படமெல்லாம் திருவிழாவுல ஓட்டுவாய்ங்க,. சனங்க அதப் பாக்க வெள்ளமாட்டம் ஓடுங்க. பொய்கால் பொய்ச்சுப் போச்சு அப்பவே! கருமூஞ்சி மவன்ந்தான் கருங்குதிரயோட அப்பன். இவனுக்கு கோடிசாமினு பேரு.. ஊரு கோடியில இருக்கற சாமிய வேண்டி மகன் பொறந்ததால கருமூஞ்சி, கோடிசாமினு பேர வெச்சான்..
கோடிசாமி நல்லா கருகருன்னு காக்கா மாதிரி இருப்பான். இழவு சாதி பிரச்சனை மட்டும் இல்லாங்காட்டி பயபுள்ள விசயகாந்த் மாதிரி கும்ம்னு ஆயிருப்பான்... சாதி சாதின்னு இவன அடக்கியே போட்டாய்ங்க,. பாவம் கோடிசாமி, சிறுத்து கருத்து போய்ட்டான்.. அப்படி இப்படியுமா காசச் சேத்து பொண்டாட்டி மூக்கி ய கட்டிகிட்டான். இதுகளுக்குப் பொறந்து தொலைச்சுது வேலைச்சாமி. கோடிசாமிக்கும் கொடுத்து வெக்கல.. வெள்ளனே போய்ச் சேந்துட்டான்.
அம்புட்டுத்தான். வேலைச்சாமி பரம்பரை கத. ஆளும் ஒசரமா கருப்பா இருப்பான் பாருங்க, அதனால ஊருக்காரங்க கருங்குதிரன்னே கூப்பிட்டாங்க.. இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, அந்த காலத்தில இருந்தே அய்யாரு முதக்கொண்டு குதிரக் கூத்துத் தான் ஆடுவாங்க, வேலைச்சாமி காலத்தில அங்கிட்டிங்கிட்டு ஏதோ நடக்கும். அதுக்கே பக்கத்து கிராமத்துல போட்டி வேற..
இப்படித்தான் பாருங்க, மகமாயி கும்பாபிசேகம் ஒருநா நடத்திச்சி. கிழவி இவன மேக்காப்பு போட்டு பொய்க்கால் குதிரயை ரெடி பண்ணி அனுப்பி வெச்சுது. இவனும் ராசாவாட்டம் போனான்.. குதிரைய தூக்கிட்டுத்தான் போகோணும். கூட ஆடறதுக்கு, இளத்தி, வெங்காயி, முனிம்மா அதுகூட சம்புலி, கடப்பாரை எல்லாம் போவாணுங்க,, எல்லாருமே கயிறு திரிக்கிறவனுங்கதான்.. கூத்து நடக்கறப்ப ஊருக்குள்ள சனங்க யாருமே வேலக்கி போகமாட்டாங்க.. ஆத்தா கோயிலுக்குள்ள இவனுங்கள தூர நிக்கவச்சே பாக்க உடுவானுங்க. ஏதோ பாத்தமா கும்புட்டமான்னு கிளம்பிப் போயிருவானுங்க..
ஆட்டம் போடற அன்னிக்கி, கம்பு, சிலம்பு, ஒயிலாட்டம், நாட்டுப்புற கெழவி பாட்டு அதுகூட குத்துப்பாட்டு கூட பாடுவாங்க.. ஊடால பொய்க்கால் குதிரையை இவங்க ஆட்டோனும். ஊடால பாட்டு பாடுவாங்க பாருங்க, அடா அடா.... நம்ம தமிழ்நாட்டுல நல்லது செத்துப்போவுது, உள்ளது வெளங்காம போவுது... ஒரு பாட்டோட நாலுவரி எடுத்து உடறேன் பாருங்க ஆசாமிகளா..
மச்ச முள்ள புள்ளக் காரி நீஉச்சங் காட்ட ஆட வாடிகுருவி ரெண்டும் ஆடக் கண்டுஊருக்குள்ள அலம்பல் தாண்டீ..
வயிர நிரப்ப ஆச மச்சான்எனக்குமானம் ரோசம் கூட வெச்சான்.மானம் ரோசம் இல்லாட்டினா நானும்ஓங்கூட வே பாசம் வெப்பேன்..
ஓங் கூட வே பாசம் வெப்பேன்...
பருவம் வந்த சின்னப் புள்ள நீயும்உருவம் கொஞ்ச சின்ன புள்ள.ஊரு சனங்க உன்னைப் பாக்கஆறு வருசம் ஆகுமடி..மூனு நாளா கஞ்சி இல்லமூஞ்சப் பாத்து சொல்லு புள்ளதேரு இழுக்க தெம்பில்லாமகூத்து கட்டப் போறேன் புள்ளகூத்து கட்டும் ஆளை நீயும்பாத்துக் கட்டுடி கூண்டுக் கிளியே!
இப்படி இடையிடையில வரிக வரும்.. எழுதுன ஆசாமி எப்பவோ செத்துப்போய்ட்டான், இன்னமும் பாட்ட மாத்தல.. இப்படி ஆடிட்டிருந்தவன் சும்மா இல்லாம, குதிரையை வெச்சு மேல்சாதி புள்ளைய இடுச்சுப் புட்டான். அதுக்கு வந்தது பாருங்க கோவம். ஓடிப் போய் அப்பன்கிட்ட சொல்லிப்பிடிச்சு. அவன் சும்மா உடுவானா? ஆள இழுத்து வந்த நாலு சாத்து சாத்தி குதிரையை ஒடச்சிப் போட்டுட்டானுங்க...
பாவம் கருங்குதிர, அத வெச்சுத்தா ஆட்டம் போட்டுட்டு திரிவான்.. அதையும் ஒடச்சி போட்டுட்டானுங்களே!
கவுண்டர் ஊட்டுல காயைப் பொறிக்கரதுக்கு போனான்.. கவுண்டரைப் பார்த்தான். அவர் காலுமேல காலு போட்டு இங்கிலீசு பேப்பரு படிச்சுட்டு இருந்தாரு. போய் நடுங்கிட்டு நின்னான்...
" அய்யே. காயி பொறிக்கிறதுக்கு வந்தேஞ் சாமி.."
கவுண்டர் வேலைக்காரியப் பாத்து, " ஏலா! தா, இவன் காயி பொறிக்கனுமா, தோட்டத்துக்கு கூட்டி போ, கிலோ போட்டு வித்துரு. டேய் குதிர காசுகீசு ஒழுங்கா குடுத்துரனும்டா, இல்லா நாளப்பண்ண பொறிக்கப்படாது.
" சரி சாமி"
கவுண்டச்சி ஊட்டு வேலைக்காரி தோட்டத்துக்கு கூட்டிட்டு போனா,. நல்லா விதவிதமா காய்கறி வானத்துல நட்சத்திரத்த அப்பி போட்ட மாதிரி இருந்திச்சி. பொறிச்சுட்டு கவுண்டர்கிட்ட போனான்..
" சாமி, வர பங்குனியில நம்ம ஊரு திருவிழா வருதுங். எனக்கு அன்னிக்கி குதிர வாங்கித் தரன்னு சொன்னீக. செஞ்சுபுடலாங்க்லா?"
" இருலா, பங்குனிக்கு உன்னு மாசக்கணக்கு கெடக்கு. இப்போ செஞ்சா அடுத்த கிராமத்துல போய் ஆடிப்புட்டு ஒடச்சுட்டு வருவ. எவன் வாங்கிக் கொடுப்பான்?"
" ஏதோ அன்னிக்கு வர வருமானத்த வெச்சு கலியாணம் பண்ணிப் புடலாம்னு இருக்கேனுங்க சாமி."
" தோ பார்றா, கலியாணமா?" வெளங்கிப்புடுமடா/// சரி சரி மண்டைய சொறியாத. அடுத்தவார வாக்குல வா. காசு தாரேன்.. ரெண்டு வட்டிடா..... பாத்து வாங்கு..
" சரிங்க சாமி"

கவுண்டச்சி ஊட்டு வேலைக்காரி தோட்டத்துக்கு கூட்டிட்டு போனா,. நல்லா விதவிதமா காய்கறி வானத்துல நட்சத்திரத்த அப்பி போட்ட மாதிரி இருந்திச்சி. பொறிச்சுட்டு கவுண்டர்கிட்ட போனான்..
" சாமி, வர பங்குனியில நம்ம ஊரு திருவிழா வருதுங். எனக்கு அன்னிக்கி குதிர வாங்கித் தரன்னு சொன்னீக. செஞ்சுபுடலாங்க்லா?"
" இருலா, பங்குனிக்கு உன்னு மாசக்கணக்கு கெடக்கு. இப்போ செஞ்சா அடுத்த கிராமத்துல போய் ஆடிப்புட்டு ஒடச்சுட்டு வருவ. எவன் வாங்கிக் கொடுப்பான்?"
" ஏதோ அன்னிக்கு வர வருமானத்த வெச்சு கலியாணம் பண்ணிப் புடலாம்னு இருக்கேனுங்க சாமி."
" தோ பார்றா, கலியாணமா?" வெளங்கிப்புடுமடா/// சரி சரி மண்டைய சொறியாத. அடுத்தவார வாக்குல வா. காசு தாரேன்.. ரெண்டு வட்டிடா..... பாத்து வாங்கு..
" சரிங்க சாமி"
கருங்குதிர ஆகாசத்துல பறந்தான்... பின்ன,, புதுக்குதிர வருதுல்ல... கெழவிகிட்ட சொன்னா அது சிரிக்கும்... நல்ல சோறு நாலு நாளைக்கு கெடைக்கும். மிச்ச காசு இருந்திச்சினா, மதுர போய்ட்டு வரணும். கெழவி ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்திச்சி.. அது மண்டையபோடரதுக்குள்ள மீனாச்சி அம்மனை கண்ணுல காமிச்சரனும்... பாவம்.. அப்பன் இருந்தப்பவும் அழுகுது. மகன் இருந்தப்பவும் அழுகுது. சந்தைல காயை வித்துட்டு வூட்ட நெருங்கினான்..
கெழவி கயித்துக்கட்டில்ல படுத்துகிட்டி இருந்துது. காதுல வெசயத்த போட்டுட்டம்னா கொஞ்சம் சந்தோசப்படும்னு கருங்குதிர வெசயத்தைச் சொன்னான்.. கெழவி அன்னிக்கித்தான் பொறந்துச்சு போல... மூஞ்சி இளசாயிருச்சு..
அன்னிலிருந்து கருங்குதிரைக்கு அயிரமீனுதான்,வெள்ள சோறுதான், ஒரே கூத்து தான் போங்க.. கவுண்டரு சொன்ன நாளு வந்திச்சி. நல்லா மாப்ள கணக்கா துணியைப் போட்டுட்டு கவுண்டரு ஊட்டுக்குப் போனான்.
" சாமி. குதிரைக்கு காசு கொடுக்கம்னு சொன்னிங்க.. "
" ம்ம்.... வட்டிப் பணம்டா... வெள்ளனே கொடுத்துடு. இல்லாட்டி ஊட்டை எழுதி வாங்கிப்புடுவேண்டா.... "
" இல்லசாமி. சரியா கொடுத்தறேன்."
" ஏ தேவி.. இந்த கருவாயன் வந்து நிக்கான். அந்த பணத்தைக் கொடுடி.."
தேவி கவுண்டரு சம்சாரம்.. நல்லா கொழுகொழுன்னு இருக்கும் கழுத... கவுண்டரு நல்லவரு. இந்தம்மா நேரெதுக்கே. காசை அவன் கையில லொட் டுனு திணிச்சுட்டு மொறைச்சுட்டு போயிருச்சு..
" தோ பார்றா... அடுத்தவன் காலை மிதிச்சேன், கைய மிதிச்சேனுட்டு குதிரய ஒடச்சுப் போடாதடா.. அம்புட்டுத்தான் சொல்லுவேன்."
" வரேங் சாமி"
கையில் காசு, கண்ணுல கனவு... கருங்குதிர இப்ப நெசமாவே குதிர ஆயிட்டான்.. ஒன்னும் புடிக்க முடியல. பயபுள்ள கெழவிகிட்ட போய் காசக் கொடுத்தான்.. கெழவி அம்புட்டு காசப் பாத்ததே இல்ல.. ரொம்ப இல்லசாமி, ரெண்டாயிரம் ரூவா. எங்கிட்டு போய் சம்பாரிக்க,? எப்படி அடைக்க?.. குதிரை ஆயிரம் ரூவாக்கு வாங்கிப்புடலாம். மீதி என்ன செய்யறது?.
" கெழவி. என்னை நம்பி கவுண்டரு ரெண்டாயிரம் ரூவா கொடுத்தாரு தெரியும்ல.. நம்ம பேரைக் கேட்டாலே கவுண்டரு நடுங்குறாரு தெரியுமா.. சரி சரி. சந்தையீல மாடன் இருப்பான். அவண்ட சொன்னா குதிர செஞ்சு கொடுப்பான்.. என்ன, கொஞ்சம் காசு செலவாகும். தண்ணி வாங்கி கொடுத்தா கொள்ள அழகா செஞ்சு கொடுப்பான்.. என்ன சொல்ற கெழவி?"
" தே, நேரா மதுரைக்கு போவோம்டா. அங்கிட்டுதான் நல்ல கட்டை விக்கிறானுங்க. மாடஞ் சொன்னான், மண்ணாங்கட்டி சொன்னான்னு காச கரியாக்காதே. "
" அதுவுஞ் சரிதான். "

கெழவி கூட கருங்குதிர போனான்... மதுரைக்கி. மீனாச்சி அம்மாவை பாத்துப்புட்டு, நல்ல பொய்க்கா குதிர வாங்கிட்டு ஊருக்கு வந்தாங்க... மனசெல்லாம் ஒரே சந்தோசந்தான். ஒன்னும் சொல்றாப்டி இல்ல... மதுரைக்கு போனப்போ ஆத்தாவ கூட்டிட்டுபோய் ஓட்டல்ல புரோட்டா வாங்கிக் கொடுத்தான்... கெழவி இதுக்கு முன்னாடி தின்னதே இல்ல. நமுக்கு நமுக்குனு ஒரே மூச்சுல தின்னுபுடுச்சு.. ம்ம்.... இதுகளுக்கு இப்படியும் ஒரு சந்தோசந்தான்..
உன்னும் ஒருவாரந்தான் இருக்கு. பங்குனி திருவிழாவுக்கு... பதினாலு நாளு ஊரே கலகலனு இருக்கும்.. தெனமும் கூத்து கட்டுவாங்க... பொய்க்கால் குதிர ஆட்டம் ஒருவாரமாவது நிக்கும்.. எப்படியும் ஐநூறு ரூவா அடிச்சுப்புடலாம்.. கருங்குதிர நல்லா கணக்கு பன்னீட்டு இருந்தான்.
திருவிழா வந்திருச்சி,. புது சட்டை, புதுவேட்டி, புது பொய்க்கா குதிர. எல்லாமே புதிசு. சம்புலி ஊட்ல போயி குதிரைக்கு அலங்காரம் பண்ணீட்டு இருந்தான். ரெண்டு பேருமா சேந்து கடப்பாரையைக் கூட்டிட்டு போனாங்க.. விழா கமிட்டிக் காரனுங்க திடீர்னு இவனுகள தனியா கூப்புட்டானுங்க..
" ஏ! இந்த தடவ கூத்து இல்லப்பா, "
" என்னா சாமி. இப்படி சொல்லி வயித்துல ஆசீட்டு ஊத்துறீங்க.. இத வெச்சுதானே எங்களுக்கு பொழப்பே நடக்கி."
" ஏ என்ன வெளயாடரயா? என்னிக்காச்சி கூத்து நடக்கும். அது உனக்கு வருசம் பூராவா கஞ்சி ஊத்துது. வெலங்காத பயலுகளா... இந்த வருஷம் சினிமா ஓட்டறம்டா..""
" அப்பறம் எதுக்கு சாமி எங்கள வரச்சொன்னீங்க"
" வந்திட்டீங்கல்ல.. அன்னதானம் நடக்கும். போய்த் தின்னுட்டு ஊட்டுக்குப் போற வழியப் பாருய்யா... "
" சாமி.."
போய்ட்டாரு... கருங்குதிரைக்கு இப்படி ஒரு சோதனை வரும்னு யாருமே எதிர்ப்பாக்கல. பாவம். கவுண்டரு கொடுத்த ரெண்டாயிரத்த அப்படியே செலவு பண்ணிப்புட்டான்... ஏதோ கடை கன்னி வெச்சிருந்தா பொழச்சிருப்பான்.. எழவு கூத்து கூத்துனு இப்படி வாழ்க்கையில கூத்து அடிச்சுப் புடிச்சே இந்த பாழாப் போன சினிமா... அசராம எப்பவும் இருக்கற கடப்பாரை அழுதே போட்டான்.
மெதுவா நடந்து ஊட்டுக்கு வந்தானுங்க.. கருங்குதிர கெழவிகிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தான்...
" கெழவி, தா கெழவி,, இந்த வருஷம் கூத்து இல்லியாம்.. சினிமா ஓட்டறானுங்களாம். ஏமாத்திப்புட்டானுங்க படுபாவிங்க" அப்படின்னே அழுதுட்டான்... கெழவி கயித்துக் கட்டில்ல படுத்திருந்துச்சு..
" கெழவி, சோறு போடு , அந்த நாய்ங்க அன்னதானம் பண்றாங்க. என்னால அது சாப்பட முடியாது. எந்திரி கெழவி."
கெழவி அசரவே இல்ல. இவன் போய் உலுக்குனான்.. அது நிரந்தரமா போய்ச் சேந்திருச்சு..
கெழவி சந்தோசமாத்தான் செத்துருக்கு... பாவம் கருங்குதிர. அத நம்பிதான் இருந்தான். போய்ச் சேர்ந்திருச்சி.. அதோட கையில பழைய குதிரையோட மேல்துணி கெடந்திச்சி.
கருங்குதிர குதிரக்கட்டையே வெறுத்துப் பார்த்தான்.

Comments