வெல்ல முடியா நடிகன் ??

அரங்கத்தில் நுழைந்துவிட்டான்
அந்த நடிகன்
அவன் நடிப்பு மிக அருமை
துடிப்பு மிக்கது. அல்லது
துடிக்கச் செய்யும் நடிப்பு.

கைகள் தட்டி வரவேற்கலாம்
முடியவில்லை
எழுந்து நின்று பாராட்டலாம்
வலுவில்லை
களித்தவர்கள் காணலாம்
இரவலில்லா இன்ப லோகத்தை..

நாடு போற்றும் நடிகனாகிவிட்டான்
திரைப்படங்கள், விளம்பரங்கள்
பேனர்கள், பலகைகள்
இல்லாத இடமில்லை
இவனும் இவன் பிரச்சாரமும்.
ஒரே வாணவேடிக்கை தான்

இவன் திரைப்படங்களைக்
கண்டு களித்தவர்கள் சிலர்
படம் பார்க்கவில்லை என
சாதிக்கும் சிலர்
இதற்கிடையே
சிரித்துக் கொண்டே பலரை
அரங்கத்தினுள் நுழையவைக்கிறான்
இந்த நடிகன்

பயணங்கள் தொடர்கிறது
அரங்கங்கள் நிறைகிறது
கணக்கெடுப்புகள் தொடர்கிறது
இவனை வெல்ல யாருமில்லை
இரண்டு ரூபாய் செலவும்
கட்டுப்பாட்டுணர்வும் தவிர..

Comments

Popular Posts