நாளைய காலை....

அமரப்பட்ட இடத்தில்
பல நினைவுகள் அமர
கண்கள் குளித்தது;
தேகமும் கூட.

என்னுள் இருந்து
பயிர் செய்தவன்,
தப்பிவிட்டான்.
இனியென் கண்களுக்கு
முத்தமில்லை;
வெறும் கனவுகள் வருமோ?

என் கரங்களின் கணையாழிகள்
ஆவேசமாக பிடுங்கியெடுக்கப்படுகிறது
இதயக் குழாய்கள் பிடுங்குவதைப்போல..

ஊற்றிய தண்ணீரில்
என் கோலம்
அலங்கோலம்.
புள்ளி வைத்த பொடிகள்
கரைந்து போன கோலம்.

கழுத்தோடு
அணைக்கப்பட்டிருந்த என்னுயிர்
கொலை செய்யப்பட்டது.
கவனித்துக் கொண்டிருந்த
மரண ஜீவன்
கண்ணீர் விட்டது.

திருப்தியாக சென்றுவிட்டார்கள்
புண்ணிய வதிகள்.
திருப்தியற்று கிடக்கிறேன்
புண்பட்ட விதிகள்.

நாளைய காலை,
வாசலில் கூவிக் கொண்டிருக்கும்
பூக்காரியிடம் வாங்கி
சொறுகிக் கொண்டேன்
இருமுழ மல்லிகைப் பூக்கள்!

Comments

Popular Posts