ஆறா ரணம் - கண்கள்

ஊறிக்கொண்டிருக்கும்
சேற்றுத் தாமரையைக்
கண்ணால் காண சகிக்காமல்
முற்கள் பொருந்திய மலராகச்
சென்று விடுகிறாய் பார்வை குருடாய்...

ஆற அமர்ந்து
கண்கள் பேசட்டுமே என்று
நினைத்தாலோ நீ
விழிகளை மூடிவிட்டு
மெளனம் பேசுகிறாய்
இதனால்
என் கண்களில் குருதி வடிவது
உனக்குத் தெரியும் என்றாலும்
உறுதியாக ஒரு வார்த்தை சொல்
இருக்கவா ? போய்விடவா ?

பார்த்த சமயங்களில்
கணைகளைத் தொடுத்தாய் கண்ணுக்கு
பாராத சமயங்களில்
அமிலம் ஊற்றுகிறாய் அதே கண்ணுக்கு

ஆடி அணிந்து பார்த்துக்கொள்ள
என் இதயமொன்றும்
பார்வை இழக்கவில்லை
அதனால் இரணத்தைத் தீர்க்க
உன் எச்சிலை என் விழிகளுக்குள்
ஒரு முறையாவது ஊற்றச் சொல்லுகிறேன்

நீ விழிகள் திறக்கும் போது
என் இதயம் இயங்குகிறது
மூடும்போது
குழாய்களில் கொழுப்பு சேருகிறது.
என்றுமே என் கண்களுக்கு முன்
நீ மூடியே கிடக்கிறாய் உன் மனம் போல

விக்கலோடு இயங்குகிறது
உன் பார்வை படாத என் இதயமும்
ஒரு சோடி கண்களும்...

Comments