எனது கவிதைக் கோடுகள்

காற்றோடு வாளேந்தி
குருதி வடிக்கப்
போராடுகிறது
என் மைத்துளிகள்

ஈரக் குமிழ்களை
எச்சிலில் அடக்கிவிட்டு
நமட்டுச் சிரிப்போடு
சூரியனைத் துளைத்தெடுக்கும்
என் வியர்வையின் பலன்கள்

உள்ளூர அடக்கியிருக்கும்
உறுப்பிடியில்லா பசியை
ஓர் எழுத்தில் அடக்க
முயற்சிக்கும்
என் காகிதத்தின் கோடுகள்

பின்னிரவை பின்னி
சரமாக்கி நெஞ்சில் இட்டு
சந்திரனைத் தேடியலையும்
என் கற்பனைச் சிறகுகள்

பிரபஞ்சத்தை தாளில்
அடைத்துவிட்டு
எல்லை தேடிக் கொண்டிருக்கிறது
என் பேனாவின் முனைகள்

ஓர்விழிப் பார்வையும்
ஓராயிரம் கைதட்டல்கள்
நிமிர்ந்த நெஞ்சு
முரண் பட்டு உதிக்கும்
வடக்குச் சூரியன்கள்

எத்தனையோ எழுதிக்
கிழித்துவிட்டு
இது கவியோ என்று
நினைத்தேகுகிறது
புடைத்துப் போட்ட
மனப் புற்கள்.

Comments

Popular Posts