வான் தேவதைக்கு ஒரு கடிதம்

யாகங்கள் செய்த பின்னும்
அதன் புகை உனைத் தொட்ட பின்னும்
மேகங்கள் கருத்த பின்னும்
எம் நெஞ்சங்கள் வெளுத்த பின்னும்
மோகங்கள் தீண்டிய பின்னும்
சூரியனைக் கழித்த பின்னும்
தாகங்கள் அடங்கவில்லை - மழை
சோகங்கள் தீரவில்லை

பாகங்கள் உனக்கிரைத்தோம்
பழி பாவங்கள் விட்டிரைத்தோம்
கோபங்கள் எடுத் தெறிந்தோம்
கோவில்கள் எடுத் திரைத்தோம் - சிலர்
நாமங்கள் பழித்த காரணமோ?
ஓமங்கள் இழித்த காரணமோ?
தீமைகள் தடுத்திரா காரணமோ?
ஊமைகள் ஆன காரணமோ?
சீமைக்குக் கொடுத்த மழை-இந்த
ஊமைக்கு கொடுத்தல் உமக் கிழிவோ?
ஊமைக்கு உரைத்த லில்லையென
எமைக் கண்டு இளிப்போ?

ஆதி எடுத்துரைத்து பாடலியற்றி
மீதி உயிரெடுத்து மிச்ச மேகத்தில்
மெச்ச உதரிவிட்டு, கண்கள்
உச்ச வான் நோக்கும்....
இரத்தம் சிதறிவிட்டோம்
மொத்தம் உமக்களித்தோம் -ஆதலின்
ஆசு கவி போலிங்கு
பூசு மழை பூமிக்கு - இந்தப்
பாட்டுத் தீ பட்ட பின்னாவது -எங்கள்
காட்டுத் தீ அணைப்பாயோ?
காக்கின்றோம் உமது பதிலுக்கு - எதிர்
பார்க்கின்றோம் உமது துளிகளுக்கு...

Comments

Popular Posts