தெருக்கூத்துக்காரன்

விரிக்கப்பட்ட ஒரு துண்டின் மேல்
விழும் எச்சில்களுக்கு
இரத்தம் வருத்த ஆடுகிறான்
தன் பிஞ்சுகளோடு

கனத்த உடலும்
கால் தெரியும் அமைப்பும்
ரசிக்கத்தான் கூட்டமுண்டு
காலணா வீச ஆளில்லை

கரணம் அடிக்கும் பூக்களை
ரசிக்கத் தெரிகிறது
சிந்தும் துளி ரத்தங்கள்
கண்ணுக்குத் தெரிவதில்லை

உழைக்கப் பல தொழில்கள்
பிழைக்கப் பல தொழில்கள்
பிச்சைக்குத் தொழிலுண்டா?
வீசுங்கள் உங்கள் சட்டைப்பை
காசுகளை.

ஆகாயத்தின் மத்தியில்
ஆடும் இவர்களின் வாழ்க்கையும்
அடிக்கடி கலையும் மேகங்கள்

கயிறின் நுனியில்
உயிரை வைத்து
பூக்கள் வாடும் மஞ்சள் வெயிலில்
உதடுகள் வெடிக்க
இவர்கள் ஆடுகிறார்கள்
இறைவனின் கூத்து
இறைவன் ஆடுகிறான்
இவர்களின் வாழ்க்கையில் கூத்து.

இது கொசுறு கவிதை:

(எல்லாவற்றையும்
கவிஞனுக்கு எழுதத் தெரிகிறது
எழுந்து போய் ஒரு வார்த்தை
சொல்ல தெம்பில்லை.)

Comments

Popular Posts