என்னோடு போகட்டும் துளிகளும் துயரமும்

காதலாய் வருடிய
உன் அதே கைகள்
காற்றைக் கிழித்துக்கொண்டு
இடுகிறது
மூன்று கோடுகள்.

என் கேசத்தின் சுருளில்
மயங்கி விழுந்த காலம் போய்
இன்று சுருட்டி எடுக்கிறாய்
துவைக்கும் துணியைப் போல.
உதிரும் பூக்களின் அழுகையைக்
காணாமல் மிதிக்கிறாய்
வாசனை போக..

தெம்பில்லாத உயிராய்
உன் முன்னே நிற்கையிலே
ஆண்மையை நிலை நாட்டுவாய்
செந்நிறக் கண்களோடு.
ஒளியின் வேகத்தை மிஞ்சும்
ஒலிபடைத்த மனதோடு...

எதிரே கனவில் மிதக்கும்
இவளுக்குத் தெரியப்போகிறது
என் துளிகளின் அவமானமும்
உன் வெறியின் அட்டகாசமும்.
மெல்ல கனவைக் கொன்று எழுந்து
உன்னையும் என்னையும் பார்க்கிறாள்.
அரைவிழிகள் திறக்க..

கேசத்தைச் சுருட்டிய நிலையில்
உன் கைகளையும்
கண்களை உருட்டிய நிலையில்
என் கைகளையும் காணும்போது
என்ன செய்வாள்
நம் இன்பத்திற்கு பிறந்தவள்?

உன் கீறல்களுக்குச் சுவராய்
இருந்தது என்னோடு போகட்டும்
இப்பிஞ்சுக்குத் தெரிய வைக்காதே!

Comments

Popular Posts