என் சின்ன வயதில் எனக்கு பாட்டி சொல்லிக்கொடுத்த கதை இது.....

முன்னொரு காலத்தில் விளாத்திகுளம் என்ற ஊரில் ராக்கையன், மூக்கையன் என்ற இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர்.. அண்ணன் ராக்கையனும் தம்பி மூக்கையனும் கடுமையாக வேலை செய்து முன்னேறினர். சிலகாலம் கழித்து ராக்கையன் ஒரு பெரும் பணக்காரியைப் பார்த்து கலியாணம் செய்து கொண்டான். மூக்கையனோ ஒரு ஏழையைப் பார்த்து கலியாணம் செய்து கொண்டான்.
ராக்கையன் பொண்டாட்டி தன் புருஷனை மதிக்கவே மாட்டாள். சரியான சிடுமூஞ்சி. பணக்காரி என்ற திமிரு..
மூக்கையன் பொண்டாட்டியோ ரெம்ப நல்லவள். கோபப்படமாட்டாள். அன்பே வடிவானவள்.. இருந்தாலும் என்ன செய்ய? ஏழையாச்சே! ரெம்பவும் கஷடப் பட்டார்கள்.. அண்ணனிடம் மூக்கையன் போய் பணம் கேட்டால் அடித்து துரத்துவான். வேலையிலும் பெரும் பங்கு பணம் அவனுக்கே போய்விடுகிறேதே என்று எண்ணீ மனம் நொந்து போனான் மூக்கையன். என்ன செய்வதென்றே தெரியாமல்
ஒருநாள்-
அந்த ஊர் எல்லையிலுள்ள ஒரு குளத்தில் விழுந்து தற்கொலை செய்ய முயன்றான். அப்போது அந்த வழியாக வந்த தென்னை தேவதை மூக்கையனைப் பார்த்து தடுத்தாள். எதற்காக தற்கொலை செய்யப் பார்க்கிறாய் என்று கேட்டாள். அவனோ தன் வறுமையக் கொட்டித் தீர்த்தான். சரி! உனக்கு மூன்று தேங்காய் தருகிறேன். வெள்ளிக் கிழமை அன்று காலை நேரமாக எழுந்து சாணியால் வீட்டை மொழுகி பூஜை செய்து, இந்த தேங்காயை உடை... உடைக்கும் முன் நீ என்ன கேட்கிறாயோ அது கிடைக்கும் என்றது அந்த தேவதை.. மூக்கையனும் அதை வாங்கிக் கொண்டு சென்றான்
வெள்ளிக்கிழமை அன்று தேவதை சொன்னமாதிரியே எல்லாம் செய்து முடித்து அவனும் அவன் மனைவியும் கடவுளை வேண்டிக்கொண்டே "நல்ல அழகான வீடு வேண்டும்" என்று கேட்டு ஒரு தேங்காயை உடைத்தார்கள். அதன்படியே அழகான வீடு அந்த வினாடியில் தோன்றியது.. மூக்கையனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் ஆச்சரியம்... அடுத்து இன்னொரு தேங்காயை எடுத்து " பை நிறைய பொன் வேண்டும் என்று கேட்டார்கள். அதன்படி அடுத்த வினாடியே தங்கம் கொட்டோ கொட்டுன்னு கொட்டியது. அடுத்து மூன்றாவது தேங்காயை எடுத்து வீட்டு சாமான்கள் எல்லாம் வேண்டும் என்று வேண்டினார்கள். அதே மாதிரி நடந்தது... இருவரும் சந்தோசமாக குடித்தனம் செய்தார்கள்..

எல்லா பொன்னயும் தாமே வைத்திருப்பதற்கு பதில் ஏழைக்கு கொடுக்கலாமே என்று இந்த இரண்டு பேரும் நினைத்தார்கள்.. பொன்னை கொஞ்சம் கொஞ்சமாக அளந்து கொடுக்க படி வேண்டும்... ஆனால் இவர்களிடம் படி இல்லை.. உடனே மூக்கையன் தன் அண்ணன் ராக்கையனிடம் போய் படி கேட்டு வரலாம் என்று கிளம்பினான்.. அண்ணன் வீட்டுக்குப் போய் அண்ணியிடம் படி கேட்டான்.,. அவளுக்கோ சிறு சந்தேகம். படி வைத்து அளக்கும் அளவிற்கு இவர்கள் சம்பாதிக்கிறார்களா ? என்று நினைத்தாள். உடனே படியின் அடியில் புளியை கொஞ்சம் அப்பி வைத்து மூக்கையனிடம் கொடுத்தனுப்பினாள். மூக்கையனும் தன் வீட்டுக்குச் சென்று அந்த படியை வைத்து அளந்து ஊருக்கெல்லாம் பொன்னை அள்ளிக் கொடுத்தான். திரும்பவும் அந்த படியை அண்ணியிடம் ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் சென்றான் மூக்கையன். ராக்கையன் பொண்டாட்டி உடனே படியில் ஒட்டிய புளியை எடுத்துப் பார்த்தாள். அதில் தங்கம் சிறிதளவு ஒட்டியிருந்தது. அவளுக்கு ஆச்சரியம் தங்கத்தை படியில் அளக்கும் அளவுக்கு தங்கம் வைத்திருக்கிறார்களா? என்று. உடனே ராக்கையனை வரச்சொல்லி எல்லா விபரத்தையும் சொல்லி, நீங்களும் அதே அளவிற்கு தங்கம் கொண்டுவந்தால்தான் வீட்டுக்குள்ளே விடுவேன் என்று மிரட்டினாள்... ராக்கையனும் வேற வழியில்லாமல் தம்பி வீட்டுக்குப் போய் நீலிக் கண்ணீர் வடித்தான்... தம்பியும் தான் எப்படி வரம் பெற்றேன் என்று விபரம் சொல்லி அனுப்பினான்...
ராக்கையன் அதேமாதிரி குளத்தில் விழ பார்க்க, தென்னை தேவதை தடுத்து நிறுத்தியது,, தன் கஷ்டத்தை தேவதையிடம் சொன்னான். உடனே தேவதை மூன்று தேங்காயைக் கொடுத்து அனுப்பியது.. இவனும் சந்தோஷமாக வீட்டுக்கு வந்தான்..
வீட்டில் அவன் பொண்டாட்டி மிகுந்த கோபம் கொண்டாள்... பொன் எடுத்துக்கொண்டு வரச் சொன்னால் தேங்காய் வாங்கிக்கொண்டு வந்து ஏதோ வரம் கிரம் என்றூ சொல்கிறாயே என்று கரிச்சுக் கொட்டினாள். ராக்கையனோ எப்படியோ அவளை சமாதானப் படுத்தி வெள்ளிக் கிழமை அன்று பூஜை செய்து தயாராக நின்று கொண்டிருந்தார்கள்... ராக்கையன் மனைவிக்கு சரியான கோபம்.. இந்த மனுசனையெல்லாம் கட்டிட்டு ரெம்ப மாரடிக்கவேண்டியதா போச்சே என்று புலம்பினாள்..
ராக்கையன் முதல் தேங்காயை எடுத்து உடைத்துவிட்டு தன் மனைவியிடம் என்ன வரம் வேண்டுமோ கேள் என்றான்.... கடும் கோபத்தில் இருந்த அவளோ "ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!! மயிரு வேணும்" என்றாள்.. உடனே அவர்கள் வீடெல்லாம் மயிராக (முடி) காட்சியளித்தது.. அதைவிடக்கொடுமை அவர்கள் உடம்பெல்லாம் முடியாகவே இருந்தது. அவள் பயந்து கொண்டே அடுத்த தேங்காயை எடுத்து உடைத்தாள். " மயிரெல்லாம் போகவேண்டும்" என்று கேட்டாள்... அடுத்த வினாடியே எல்லா முடியும் போய்விட்டது.. கூடவே ராக்கையன் தலைமுடியும், அவளோட தலைமுடியும் போய்விட்டது. பின் அலறியடித்துக்கொண்டு கடைசி தேங்காயை உடைத்தாள். தலை முடி மட்டும் வரவேண்டும் என்று கேட்டாள். அதன்படியே தலைமுடி மட்டும் வந்துவிட்டது..
தன் கோபத்தால் நல்ல வரங்களைக் கூட பயன்படுத்தத் தெரியாமல் சிறிது காலம் வாழ்ந்துவிட்டு இறந்து போயினர் இவர்கள்..
தானம் தர்மம் ஆகியவை செய்து நீண்டநாட்கள் ஆயுளோடு வாழ்ந்து சரித்திரம் படைத்தனர் மூக்கையனும் அவன் மனைவியும்

குழந்தைகளே ! இதிலிருந்து நாம் அறிவது:
  • கோபம் கொள்ளக் கூடாது
  • பொறாமை கொள்ளக் கூடாது
  • அன்பும் பக்தியும் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டி
  • பாசமான குடும்ப வாழ்வு வாழ வேண்டும்
  • தானம் தர்மம் ஆகியவை செய்ய வேண்டும்
  • ஒவ்வொரு செயலையும் சிந்தித்தே செய்யவேண்டும்

Comments