என் பெயர் சிவப்பு - விமர்சனம்

yan payer sivapu-800x1200

நீங்கள் ஒரு மனிதரைக் கொன்ற(தாக வாதித்து)
பின்னர் அது குறித்து கருத்து வேறுபாடு
கொண்ட நேரத்தை எண்ணிப் பாருங்கள்
ஆனால் அல்லாஹூவோ நீங்கள் மறைத்து
வைத்ததை வெளிப்படுத்தக் கூடியவனாவான்
      

-  அதிகாரம் 2 அல்பக்கரா 72

குருடரும் பார்வையுடையவரும் சமமானவரல்ல

- அதிகாரம் 35 அல்ஃபாதிர் 19

கிழக்கும் மேற்கும் அல்லாஹூவே உரியன

- அதிகாரம் 2 அல்பக்கரா 115

குர் ஆனின் இந்த மூன்று வாசகங்களோடு ஓரான் பாமுக்கின் இந்நாவல் ஆரம்பிக்கிறது. நுண்ணோவியங்களின் வீழ்ச்சியைப் பற்றிய நாவல் என்றாலும் இந்த மூன்று வாசகங்களின் மேலேதான் நாவல் பயணிக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் கிழக்கில் ஏற்படும் மேற்கத்திய ஆதிக்கத்தை, தமது பண்டைய மதகூறுகளடங்கிய ஓவியபாணியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் ஓவியர்களைப் பற்றியும், இஸ்லாமிய மதத்தின் ஓவிய கட்டுப்பாடுகள், ஒட்டாமன் கலாச்சாரம், அரசு, குற்றம் மற்றும் காதலும் காமமும் குறித்த விசாலமான பார்வையும் நாவலின் கொடிநரம்புகளென பிரித்தெடுக்கவியலாதபடி பரவிக்கிடக்கிறது.

ஓவியங்கள் வெறும் ஓவியங்களாக மட்டும் இருப்பதில்லை, அது தான் சார்ந்த மொழியையோ இனத்தையோ அதன் பின் மறைந்திருக்கும் சங்கேத பரிவர்த்தனைகளையோ குறிப்பிடாமல் இருப்பதில்லை, (எனக்கு டாவின்ஸி சட்டென நினைவுக்கு வருவார். கூடவே ஆதி சடங்குகள் அறியப்பட்ட சாவெட் மற்றும் லாஸ்காக்ஸ்). அவரவருக்கென ஒரு பாணி (style) இருக்கிறது. உதாரணத்திற்கு தஞ்சாவூர் ஓவியம் என்பது ஒரு பாணி, பாரசீக நுண்ணோவிய பாணியிலிருந்து வந்திருந்தாலும் மொகலாயர் ஓவியம் இன்னொரு பாணி, இருப்பினும் பெரிதும் நாம் விரும்புவது மேற்கத்திய தத்ரூப பாணிகளையே. இதன் ஆக்கிரமிப்பில் வீழும் ஒட்டாமன் பாணி ஓவியங்களைப் பற்றி மிக நுணுக்கமாகப் பேசுகிறது நாவல். நாவலின் ஒவ்வொரு எழுத்துக்களும் நுண்ணியதாக ஓவியத்துவமாகவே இருக்கிறது. ஓவியங்களின் விவரணைகள் நம்முன் காட்சிபடுத்துவது அந்நூற்றாண்டைய புராண கதைகளையும், அரச நம்பிக்கைகளையும் கலாச்சார விழுமியங்களையுமே...  இதன் கதை சொல்லப்பட்ட விதமும் வித்தியாசமாக இருக்கிறது. சுமார் பன்னிரெண்டு பாத்திரங்களின் கதை சொல்லலோடு பயணிப்பதாக அறிந்தாலும் நாவலின் கதை சொல்லிகள் வெறும் மாந்தர்கள் மட்டுமல்ல; கொலைசெய்யப்பட்ட பிரேதம், மதகட்டுப்பாட்டு காவலர்களை எதிர்க்கும் நாய், ஒரு செல்லா காசு, மரம், மரணம், சாத்தான் என அத்தனை பாத்திரங்களும் தங்கள் மீதான தர்க்கரீதியிலான நியாயங்களைப் பற்றி பேசுகின்றன. பின்னவீனத்துவ பாணியில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலின் பாத்திரப்பிணைப்பு முதலில் தடுமாற்றமாக இருந்தாலும் பிறகு சவுகரியமாகவும் பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையிலும் நாவல் சற்றே பெரியதாக இருப்பதால் கதை என்று நானறிந்தவற்றைப் பகிர்கிறேன்.

ஒரு சடலத்தின் பார்வையிலிருந்து நாவல் துவங்குகிறது. தான் எதற்காகவோ கொல்லப்பட்டிருக்கிறோம் எனும் விவாதத்தில் தன்னை அது அடையாளப்படுத்துகிறது. ”வசீகரன் எஃபெண்டி” என்றழைக்கப்பட்ட அந்த சடலம் அதற்கு முன்பாக நுண்ணோவியத்தின் பக்க ஓரங்களில் மெருகு தீட்டும் மெருகோவியனாக ஒட்டாமன் நுண்ணோவிய கலைக்கூடத்தில் இருந்தது. கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் கிடக்கும் இந்த சடலத்தை மையப்படுத்தியே கதை வெகு சுவாரசியமாக நகர்கிறது.

பதினாறாம் நூற்றாண்டு இஸ்தான்புல்லைத் தலைநகராகக் கொண்டு விளங்கும் ஒட்டாமன் சாம்ராஜ்ஜியத்தை சுல்தான் மூன்றாவது மூரத்  (1574- 1595) ஆண்டு வருகிறார். சுல்தானின் ஆணைப்படி ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டு விழாவிற்கான திருவிழா மலர்களை இஸ்தான்புல் ஓவியக்கூட தலைமை ஓவியரான குருநாதர் ஒஸ்மான் தலைமையில் நுண்ணோவியர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள், அதுமட்டுமல்ல, சுல்தான், வெனீசிய மன்னருக்கு இரகசியமாக தனது பெருமைகளையும் கீர்த்திகளையும் மற்றும் தனது உருவப்படமும் அடங்கிய ஓவியச்சுவடி ஒன்றைத் தயாரித்து பரிசளித்து நட்பு கொண்டாட விருப்பம் கொள்ள நினைக்கிறார். அது வெனீசிய பாணியிலான ஓவியங்களடங்கிய சுவடியாகவும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகவும் தயாரிக்க வேண்டுமென நுண்ணோவியர் எனிஷ்டே எஃபெண்டியிடம் கட்டளையிட்டிருக்கிறார். எனிஷ்டேவும் தனக்குக் கீழ் “நாரை, வண்ணத்துப்பூச்சி, ஆலிவ், மற்றும் வசீகரன்” எனும் புனைப்பெயர்களைக் கொண்ட நுண்ணோவியர்களை தத்தமது வீட்டிலேயிருந்தே பணிபுரிய வைக்கிறார். இதில் “வசீகரன்” என்பவன் தான் அடையாளம் தெரியாத ஒரு கொலைகாரனால் கொல்லப்பட்டிருக்கிறான். ஒட்டாமன் நுண்ணோவியங்கள் ஒரு ஆல்பம் போல தயாரிக்கப்படுகின்றன. அவை ஒருவரால் மட்டும் வரையப்படுவது கிடையாது. குழுக்களாக இணைந்தே வரையப்படும், புத்தக ஓரங்களில் மெருகு தீட்டுவது மெருகோவியனின் வேலை, வசீகரனுக்கு ஓவியம் தீட்டுவதை விடவும் மெருகு தீட்டுவதே பெரும்பாலான வேலை.

1591 ஆம் வருடம் கருப்பு எஃபெண்டி எனும் எழுத்தோவியன் தனது அம்மா வழி மாமாவான எனிஷ்டேவின் கடிதம் கண்டு பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு இஸ்தான்புல் திரும்புகிறான். கருப்பின் மாமா எனிஷ்டே எஃபெண்டியின் மகளான ஷெகூரேவை ஒருதலையாகக் காதலித்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு இஸ்தான்புல்லை விட்டுச் சென்றவன் வசீகரன் எஃபெண்டி கொலை செய்யப்பட்ட (அல்லது மற்றவர்கள் பார்வையில் காணாமல் போய்விட்ட) பிறகு மூன்று நாட்கள்  கழித்து அப்பொழுதுதான் திரும்பி வருகிறான். எனிஷ்டே தமக்கு உதவியாக கருப்பை நியமிக்கிறார், மட்டுமல்ல ஒருவேளை சுவடி தயாரிப்பதற்குள் தாம் இறந்துவிட்டால் அதனை முடிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்

இச்சமயத்தில் நுஸ்ரத் எனும் ஹோஜாக்கள் இஸ்லாமிய மதகட்டுப்பாடுகளையும், குரான் நம்பிக்கைகளையும் போதித்து, அதற்கெதிராக வேலை செய்யும் நுண்ணோவியர்கள், காபி இல்லத்தினர்கள் ஆகியோரை எதிர்க்கிறார்கள். காபி அருந்துவது தமது கோட்பாடுகளுக்கு எதிரானது எனவும், அது உள்ளிறங்கி தூங்கிக் கிடக்கும் பிசாசை முழிக்க வைக்கிறதாகவும் நினைக்கிறார்கள். இஸ்தான்புல் நகரத்தில் இருக்கும் ஒரு காபி இல்லத்தில் நுஸ்ரத்திற்கு எதிரான பிரச்சாரம் துவங்குகிறது. கதைசொல்லி எனும் திருநங்கை நாளுக்கொரு ஓவியத்தை மாட்டி அதன் வழியே நுஸ்ரத்தை கிண்டலும் கேலியுமாகப் பேசுகிறாள். நாவலில் இந்த கதைசொல்லி வரும் அத்தியாயங்களும் அது சொல்லும் கதைகளும் அபாரமானவை.

எனிஷ்டேவின் மகள் ஷெகூரே ஒரு அழகான பெண். ஒரு ஸ்பாஹி குதிரை வீரனைத் திருமணம் செய்து “ஓரான்” “ஷெவ்கெத்” எனும் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த குழப்பம் மிகுந்த தாய். நான்கு வருடங்களுக்கு முன்பு போருக்குச் சென்ற அவனது கணவன் வீடு திரும்பாததால் தனது மாமனார் வீட்டிலிருந்த மைத்துனன் ஹஸனின் அடாவடி தாளாமல் பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டவள். கருப்புக்கும் அவளுக்குமிடையேயிருந்த காதல் யூதப்பெண்மணியான “எஸ்தர்” மூலமாகத் மீண்டும் துளிர் விட ஆரம்பிக்கிறது. ஷெகூரே மனதில் கலக்கத்தை ஏற்படுத்தி விடுகிறான் கருப்பு.. (எனிஷ்டே வீட்டில் ஹாரியே எனும் அடிமைப்பெண் உண்டு. அவளுக்கும் எனிஷ்டேவுக்கும் ஒரு கனெக்‌ஷன் ஓடிக்கொண்டிருப்பதை ஷெகூரே அறிந்து கொள்கிறாள்)

இதனிடையே எனிஷ்டே வீட்டில் யாருமில்லாத பொழுது கொலைகாரன் நுழைந்துவிடுகிறான். அவனுக்கும் எனிஷ்டேவுக்குமான விவாதத்தின் முடிவில் கருப்பு பரிசளித்த ஒரு மங்கோலிய மசிக்குடுவையால் எனிஷ்டேவின் தலையில் அடித்தே கொல்கிறான் கொலைகாரன். கொலைகாரன் எனிஷ்டேவைக் கொல்லும் போது இரகசியச்சுவடியின் இறுதி ஓவியத்தை தனது பாவத்தின் வடிகாலாகக் கருதுகிறான், அதனை எடுத்தும் சென்றுவிடுகிறான். ஷெகூரேவும் ஹாரியேவும் திரும்பி வந்து நடந்ததை உணர்ந்து எனிஷ்டே இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டால் தனது மைத்துனன் ஹஸன் தன்னை கட்டாயப்படுத்தி வீட்டுக்கு இழுத்துச் சென்றுவிடுவான் என்றறிந்து உடனடியாக அவசராவசரமாக கருப்பைத் திருமணம் செய்துகொள்கிறாள். இரண்டு நாட்கள் கழித்து எனிஷ்டே இறந்ததை அறிவித்ததோடு நில்லாமல் சுல்தானுக்கு மிக வேண்டியவர் என்பதால் அரண்மனையிலும் போய்ச் சொல்லுகிறான் கருப்பு. சுல்தான் கோபமுற்று கொலைகாரன் யார் என்பதை மூன்று நாட்களுக்குள் கண்டறிய கருப்பை உத்தரவிடுகிறார். இச்சூழ்நிலையில் வசீகரனைக் கொன்ற கொலைகாரன் தான் எனிஷ்டேவையும் கொலை செய்திருக்கக் கூடும் ; அது தமக்குள் பணிபுரியும் நுண்ணோவியர்களுள் ஒருவராகத்தான் இருக்கும் என்று சந்தேகப்படுகிறான் கருப்பு. அதற்கேற்ப ஒரு “க்ளூ” கிடைக்கிறது. சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் இரகசியச் சுவடியின் கடைசி ஓவியம் எல்லா நிகழ்வுகளுக்கும் ஆதிகாரணமாக இருக்கிறது. . முடிவில் நுண்ணோவியர்களான “நாரை, வண்ணத்துப்பூச்சி, ஆலிவ்” ஆகியோரா அல்லது நுஸ்ரத் ஹோஜா குழுவைச் சார்ந்தவர்களா அல்லது குருநாதர் ஒஸ்மானா யார் அந்த கொலையாளி என்று தெரிந்துவிடுகிறது.

நாவலின் பாதை பத்து விரல்களின் விரி கோணங்களாக நீண்டு ஒரு சேர ஓரிடத்தில் குவிகிறது. நுண்ணோவியம் என்ற பெயருக்கேற்ப நுண்ணெழுத்துக்களால் நிரம்பப்பட்ட இந்நாவல் ஒட்டாமன் பாணி ஓவியங்களை வெகு விபரமாக, நுணுக்கமாக, ஆராய்கிறது. “நான் மரமாக இருக்க விரும்பவில்லை, அதன் பொருளாக இருக்க விரும்புகிறேன்” எனும் மரம் கதை சொல்லலில் ஒட்டாமன் ஓவியங்கள் தத்ரூபங்களை விரும்புவதில்லை, அது தனக்கான பொருளை மட்டுமே உணர்த்துவதாக இருக்கிறது. வெனீசிய ஓவியர்களைப் போல யாருடைய பார்வையிலிருந்தும் உதாரணத்திற்கு ஒரு நாவிதனோ, பண்டம் விற்பவனோ, ஒரு நாயின் பார்வையிலிருந்தோ வரையப்படுவதில்லை, அது அல்லாஹூ அவர்களின் பார்வையிலிருந்து வரையப்படுகிறது. இதற்கு நாரை சொல்லும் “ஆலிஃப்” குட்டிக்கதையான ஓவியர் இபின் ஷகிர் கதை அல்லாஹூவின் பார்வை என்பது என்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறது. நாவலினூடாக எழும் ஓவியங்கள் குறித்த கேள்விகள் குறிப்பாக குருநாதர் ஒஸ்மான் எழுப்பும் ”பாணி”, ”காலம்”, “குருட்டுமை” போன்ற கேள்விகள் நுண்ணோவியர்களின் ”ஆலிஃப்”, “பே”, “ஜிம்” எனும் மூன்று குட்டிக்கதைகளின் மூலம் நுண்ணோவியங்கள் குறித்த விசாலமான பார்வையை அறிய முடிகிறது. இந்த குட்டிக்கதைகள் ஓவியத்தையும், காதலையும் இணைக்கிறது. இருபெரும் முனைகள் இணைவதால் ஏற்படும் கலக்கம், பாணி, காலம், மற்றூம் குருட்டுமை போன்றவற்றின் வடுக்களாக ஓவியங்கள் மாறிவிடுவதை உணரமுடிகிறது. ஓவியம் என்பது வெறும் வண்ணங்களின் கலவையல்ல, அது வாழ்வின் தாழ்வாரங்களில் ஏற்படுத்தும் பிரமிப்பு, பயம், மனக்கிளர்ச்சி, பிசாசின் தூண்டலில் அழுகிப் போகும் வக்கிரம் நிறைந்த மனம், மற்றும் இவற்றின் ஒரு தொகுப்பு எனலாம்.  ஒட்டாமன் ஓவியர்கள் தமக்கென்று எந்தவொரு பாணியையும் உருவாக்குவதில்லை, பாரசீக பாணியிலான இவற்றை பெரும்பாலும் பண்டைய ஓவியங்களிலிருந்தே நகலெடுக்கிறார்கள். ஓவியர் எவரும் தமது கையொப்பமும் இடுவதில்லை, அது தனிப்பட்ட முறையில் தமக்கென ஒரு பாணியை உருவாக்கும் என்றே கருதுகிறார்கள். அதனாலேயே மேற்கத்திய ஓவியங்களை வெறுக்கிறார்கள். மிக தத்ரூபமாக வரையப்பட்ட அவை அல்லாஹூவின் படைப்பை தானே செய்தவனாக ஆகிவிடுவதாகக் கருதுகிறார்கள். இஸ்லாமிய மதப்படி உருவசித்திரங்கள் மதத்திற்கு எதிரானவை என்பதால் தத்ரூபமான உருவச்சித்திரங்களை எதிர்க்கத் தொடங்குகிறார்கள்.

நுண்ணோவியங்களின் வீழ்ச்சிக்கான அறிகுறிகளே நாவலின் மையத்தில் சலனமின்றி ஓடும் நதியைப் போல ஓடிக் கொண்டிருப்பதால் ஓவியம், இஸ்லாமியம் ஆகியவற்றின் வழியே கலைஞர்களின் இருப்பு குறித்த தகவல்களை நிறைய பெறமுடிகிறது. ஹெராத்தின் பண்டைய ஓவிய மேதைகளால் ஆரம்பிக்கப்பட்டு நிலையாக நிறுவப்பட்டிருந்த இஸ்லாமிய நுண்ணோவியக் கலை மேற்கத்திய தத்ரூபமான உருவச்சித்திரங்களின் கவர்ச்சியில் முடிவுக்கு வந்துவிடும் என எனிஷ்டே அஞ்சுவதற்கும் காரணங்கள் உள்ளன. வெனீசிய பயணத்திற்குப் பின்னர் ஸெபாஸ்டினோ எனும் ஓவியன் மூலமாக வரையப்பட்ட சுல்தான் மூரத்தின் ஓவியமே எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிறது. (பின்னர் இது குருநாதரால் நகலெடுக்கப்பட்டு குருநாதருக்கும் எனிஷ்டேவுக்குமுண்டான உறவில் விரிசல் ஏற்படுகிறது) ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டுவிழாவிற்குப் பிறகு மேற்கத்திய பாணியிலான ஓவியங்களே இனி வரையப்படும் என சுல்தான் எண்ணுவதை நுண்ணோவியர்கள் அறிந்து கொள்கிறார்கள். ஆனால் எனிஷ்டே தயாரிக்கும் இரகசியச் சுவடி பாரசீக மற்றும் வெனீசிய கலவையாக இருக்கிறது. எனிஷ்டேவுக்கோ அல்லது மற்ற ஓவியர்களுக்கோ தத்ரூபமாக வரையத்தெரியாது என்பதைவிட அம்மாதிரியான ஓவியங்களைப் பார்த்தது கூட கிடையாது.

எனிஷ்டேவுக்கும் கொலைகாரனுக்கும் நடக்கும் விவாதங்கள், மூன்று நுண்ணோவியர்களின் குட்டிக்கதைகள் (நாவல் முழுக்க நிறைய குட்டிக்கதைகளும், ஓவியக்கதைகளும் நிரம்பிக்கிடக்கின்றன), குருநாதர் ஒஸ்மான் நுண்ணோவியர்களையும் ஓவியங்களையும் விளக்கும் இடங்கள், போன்றவை மிக முக்கியமானவை. வெனீசிய ஓவியம் குறித்து ஓரிடத்தில் சொல்லப்படுவது இங்கே குறிப்பிட்டால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.

”வெனீசிய கலைஞர்களின் உருவரை ஓவியங்களைப் பார்த்தபிறகு நமக்கு புரியத்தொடங்கும் விஷயங்கள் பயங்கரமானவை, உதாரணத்திற்கு ஓவியங்களில் கண்கள் என்பவை இனிமேலும் வெறுமனே முகத்தில் இருக்கும் ஓட்டைகளாக இருக்கப்போவதில்லை, பதிலாக நமது கண்களைப் போலவே ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போல உறிஞ்சுக்கொள்ளும் கிணற்றைப் போல இருக்கவேண்டும். உதடுகள் என்பவை முகத்தின் மத்தியிலிருக்கும் ஒரு கீறலைப் போல காகிதத்தைப் போல தட்டையாக இனிமேலும் வரையப்படப்போவதில்லை, பதிலாக உணர்ச்சிகளின் மையப்புள்ளிகளாக - ஒவ்வொன்றும் சிவப்பின் ஒவ்வொரு சாயலில் - நமது சந்தோஷங்களையும் துயரங்களையும் மிக இலேசான சுருக்கத்திலும் விரிதலிலும் பாவங்களை வேறுபடுத்திக் காட்டக்கூடியதாக இருக்கவேண்டும். நமது நாசிகள் இனிமேலும் முகத்தை நடுவிலே பிரிக்கின்ற ஒருவகை சுவர்களாக இருக்காமல் உயிர்ப்போடு ஒவ்வொருவருக்கும் தனித்துவ வடிவங்களில் அமைந்த அங்கங்களாக இருக்கவேண்டும்”

நாவலில் ஏராளமான கதை நிகழ்கால நூல்களின் மேற்கோள்கள் இருக்கின்றன. தவிர நாவலாசிரியர் ஒரு ஓவியத்தை வர்ணிக்கும் விதத்தைப் பார்க்கும் பொழுது அவரும் ஒரு ஓவியராக இருக்கக் கூடும் எனும் சந்தேகம் வலுக்கிறது. ஒரு பொருளை வரைவது என்பது மேம்போக்கான பார்வையில் அல்லாமல் ஆழ உணர்ந்து வரைபொருளின் அம்சங்கள், தரம், வர்ணம் ஆகியவற்றின் வழியே அது வலியுறுத்துவதைத் தெளிவாகக் காட்டவேண்டும். ஒரு குதிரை பற்றிய வர்ணிப்பில்,

”ஒரு நல்ல குதிரைக்கு கவர்ச்சியான முகமும் கஸல்மானின் விழிகளும் இருக்கவேண்டும். அதன் செவிகள் கோரைப் புல்லைப்போல் நேராக, நல்ல இடைவெளி விட்டு இருக்கவேண்டும்; ஒரு நல்ல குதிரைக்கு சிறிய பற்களும், வட்டமான நுதலும், மெல்லிய புருவங்களும் வேண்டும்; அது உயரமானதாக, நீண்ட பிடரியுடையதாக மெலிந்த இடை, சிறிய நாசி, சிறிய தோள்கள், அகன்ற தட்டையான முதுகு கொண்டதாக இருக்கவேண்டும்; அதன் தொடைகள் முழுமையானதாக, நீண்ட கழுத்துடையதாக, அகன்ற மார்புடையதாக, விளங்கவேண்டும், சாவதானமாக நிதான நடையிட்டுச் செல்லும்போது அது இரு புறங்களிலும் நின்றிருப்பவர்களை வணங்கியபடி செல்வதைப் போல தோற்றமளிக்கும்படி பெருமிதமும் கம்பீரப்பொலிவும் கொண்டதாக இருக்கவேண்டும்.”

காதல் குற்றம் ஆகிய இரட்டை நுழைவாயிலின் ஒரு கதவு ஓவியமும் மறுகதவு மதமுமாக இருக்கிறது. கருப்பு - ஷெகூரே திருமண நிகழ்வுகள் நாவலின் போக்கின்படி கொஞ்சம் அவசரமான திருமணம் எனினும் எழுத்துக்கள் அவசரமாகவே பயணிக்கின்றன. அதேபோல குருநாதர் ஒஸ்மான், அரண்மனை கருவூலத்தில் ஓவியங்களைப் பார்வையிடும் அத்தியாங்கள் லேசாக சலிப்பூட்டுகின்றன. அவை புறவெளிப்பாடாக ஓவியத்தை நிலைநிறுத்த முயன்றாலும் அந்நிய தோற்றத்தால் நிலையிழந்து என்னால் காட்சிபடுத்த முடியாமல் போய்விடுகிறது. குருநாதர், மாபெரும் ஓவியர் பிஸ்ஹாத்தின் ஊசியால் கண்களைக் குருடாக்கிக் கொள்ளும் போதோ அல்லது கொலைகாரனை மற்றவர்கள் குருடாக்கும் பொழுதோ அந்த ஊசியின் முனை நம் கண்களைக் கூசுவதையும் சுல்தானின் வருகையை அவ்வளவு பெரிய விவரமாக வர்ணிக்காவிடினும் ஒரு பெருமிதத்தையோ, மரியாதையையோ உணரமுடிகிறது!!!

மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி இந்நாவலைத் திறம்பட மொழிபெயர்த்திருக்கிறார் என்று ஒற்றையாகச் சொல்லிவிட்டால் அதற்கு அர்த்தமே இல்லை. ஒரு இஸ்லாமிய நாவலான “என் பெயர் சிவப்பு”ஐ வாங்குவதற்கு எனக்கு இரண்டு தயக்கம் மிகுந்த காரணங்கள் இருந்தன.

1. அரேபிய மற்றும் உருது வார்த்தைகள் மிகுந்த சில சிறுகதைகள் சலிப்பைத் தந்தன. அவர்களின் சடங்குகள், மதகோட்பாடுகள், கொள்கைகள், சில வழக்கமான வார்த்தைகள் யாவையும் மனதில் நிறுத்தி படிக்க என்னால் இயலாது. முற்றிலும் அந்நியமொழிச் சூழல் மிகுந்த எழுத்துக்களுக்கு ஒவ்வாதவன் நான்.

2. மொழிபெயர்ப்பு நாவல் என்று இதுவரை எதுவும் படித்தது கிடையாது. (அன்னா கரினீனா படித்தபிறகுதான் அது டால்ஸ்டாயினுடையது என்றே தெரியும். அதெல்லாம் பழைய காலம்!!!)

கூடுமானவரையிலும் அரேபிய/உருது அல்லது இஸ்லாமிய வார்த்தைகளைத் தவிர்த்து, சுத்தமான தமிழில் பெரும்பாலும் (அது சிலசமயம் அதீதமாகிவிட்டதோ என்றூ கூட தோணுமளவுக்கு) குறிப்பிட்டு மொழிபெயர்த்திருக்கிறார். எலகண்ட் எஃபெண்டி என்பதை வசீகரன் எஃபெண்டி என பெயரிலும் கூட மாற்றம்! பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நாவல்களில் பெயர்களை மொழிபெயர்க்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். மிகச்சிறப்பாக, ஒரு அந்நிய நாவல் எனும் அடிமனதில் அடங்கிக் கிடக்கும் எண்ணத்தை மெல்ல கொன்று, நாவலின் தரத்தை மாற்றாமல் தந்திருப்பது பாராட்டுக்குரியது! ஒரு சில தவறுகள் (ஷா தாமஸ்ப், ஷா தமாஸ்ப்//) எழுத்துப்பிழைகள் இருப்பினும் பிரபஞ்சத்தூசிகளைப் போல காணாமல் போய்விடுகின்றன.

இந்நுண்ணிய நாவல் முடித்த பிறகு பண்டைய கால கட்டத்தில் நடக்கும் வரலாற்று நாவல்களைப் படிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறேன்.The Enchantress of Florence - சல்மான் ருஷ்டி, குர்அதுல்துன் ஹைதர் எழுதிய அக்னி நதி, கிம் ஸ்டான்லி ராபின்ஸனின் The Years of Rice and Salt போன்ற சில நாவல்கள் தேடியதில் கிடைத்தது!!  (அக்னிநதி மட்டும் தமிழில் கிடைக்கிறது. ) இவற்றில் எதாவது மொழிமாற்றம் செய்திருந்தால் சொல்லவும், அல்லது இதைப்போல நாவல்களைப் பரிந்துரைக்கவும்!!

நாவலின் பெயர் : என் பெயர் சிவப்பு (My Name is Red)
ஆசிரியர் : ஓரான் பாமுக்
மொழிபெயர்ப்பு : ஜி.குப்புசாமி
பதிப்பகம் : காலச்சுவடு
பக்கங்கள் : 664
விலை : 350.00

படங்கள் :

மாபெரும் ஓவியர் பிஸ்ஹாத்தின் இந்த ஓவியம் ஷிரின் குளித்துக் கொண்டிருப்பதையும் அவளது குதிரை ஷெப்தீஸ் தண்ணீர் குடிப்பதையும் ஹூஸ்ரேவ் எட்டிப்பார்ப்பதாக வரையப்பட்டிருக்கிறது. பாரசீக நுண்ணோவியத்திற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று நினைக்கிறேன். இது இரண்டு பரிமாணங்களில் மட்டுமே வரையப்பட்டிருக்கிறது. மற்றும் முன்னோக்கு தோற்றம் (Perspective) இருக்காது. கிட்டத்தட்ட இதே பாணியில் மொகல் ஓவியங்களையும் காணமுடியும். ஷிரின் ஷூஸ்ரேவ் காதல் கதை நாவலில் மிக மெல்லிய இசையாக ஒரு புகை, அறையை வியாபித்திருப்பதைப் போல நுழைகிறது!

447px-Nizami_-_Khusraw_discovers_Shirin_bathing_in_a_pool  

16 ஆம் நூற்றாண்டிய வெனீசிய ஓவியம் ஒன்று. முப்பரிமாணமும் மிக்கதாக தத்ரூபமான உருவச்சித்திரம் மிகுந்த ஓவியம்…

740px-The_Adoration_of_the_Shepherds_-_Giorgione_-_1505_NG_Wash_DC

ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டு திருவிழா மலரில் வரையப்பட்ட ஓவியங்கள் :

fest 2

fest1

 

உதவி : http://www.arts.ualberta.ca

Comments

இணையத்தில் புத்தகங்கள் பற்றி நான் நான் வாசித்த வரையில், இதுவொரு செமத்தியான பதிவு. உண்மையாகவே வெகு நேர்த்தியா எழுதியிருக்கீங்க.மேம்போக்கா புத்தகத்த "வாசிக்காம" ஒருவித ஈடுபாட்டுடன் வாசித்தது நல்லா தெரியுது..
---------
Postmodern வகை கதை சொல்லும் உத்திகளில், துண்டாடப்படுதலை (fragmentation)எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்பதற்கு இந்த நாவல் ஒரு நல்ல உதாரணம் (ஆனா, அசல் - போஸ்ட்மாடனிசஸ்ட்கள் post modern novel என்றெல்லாம் ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லி வருவதையும் கவனிக்கணும்).

இதுபோன்ற கதைகளில் உங்களுக்கு விருப்பமிருப்பின் - லத்தீன் அமெரிக்க நாவல்களை, கதைகளை படிக்கலாம் என்று நினைகிறேன். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். போர்ஹேவில் இருந்து ஆரம்பித்தால் அதுவொரு அட்டகாசமானதொரு தொடக்கமாக இருக்கும்.ஓராண் பாமுக் கூட போர்ஹேயின் மிகப் பெரிய ரசிகர்.
--------
ஆனா, இத தமிழ்ல என்னால ஒரு 200 பக்கங்களுக்கு மேல படிக்க முடியல. so much had been lost in translation என்பது ஆங்கிலத்தில் - அதுவும் குறைந்த பக்கங்கள் தான் படிச்சேன், இன்னும் முழுசா இந்த புக்க படிக்கல - படிச்சப்ப புரிஞ்சது. தமிழ் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் பைபிள் மொழிபெயர்ப்பு மாதிரி பெரும் ஆயாசத்தை தருது. இது என் கருத்து மட்டுமே.
அருமை ஆதவா!
எவ்வளவு பெரிய புத்தகம். அதை இவ்வளவு சுருக்கமாக சொல்ல எவ்வளவு உழைப்பு தேவையெனப் புரிகிறது. வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு.

ஆனா சுக்கமா சொன்னா எனக்கு புரியாது ;-) எனக்கு கதைன்னு ஒண்ணும் புரியலை. இதிலிருந்தே இது எனக்கு அப்பார்ப்பட்ட சங்கதின்னு புரியுது. இருக்கட்டும் பரவாயில்லை, நான் படிக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டேன். இப்போ படிச்சிட்டிருக்க புத்தகங்களை முடித்துவிட்டு வாங்க்கிக்கொள்கிறேன். :-)
ஆதவா said…
@கொழந்த..

போர்ஹேஸின் கதைகளைத் தமிழில் படிக்க மிகுந்த விருப்பம் எனக்கு. இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்திருக்கிறேன். உங்களது குறிப்புகளை எடுத்துக் கொள்கிறேன். லத்தீன் அமெரிக்க கதைகளை சாரு மொழிபெயர்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். பார்ப்போம்... நன்றி தல.

மேலும்,

தமிழ் மொழிபெயர்ப்பில் எனக்கு எந்தவொரு தயக்கமும் வரவில்லை, நீங்கள் ரஷ்யாவில் பிரிண்ட் அடிக்கப்பட்ட தமிழ் புத்தகங்களைப் படித்திருந்தால் இது எவ்வளவோ தேவலை என்று சொல்வீர்கள்... எனக்கு எந்த பிரச்சனையுமில்லை, அழகான மொழிபெயர்ப்பு!

@ முரளி
நீங்கள் கட்டாயம் படிக்கலாம். அவ்வளவு அருமையான நாவல் இது! எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்!!