புத்தகத் திருவிழா–கற்கை நன்றே!

பறந்து செல்லும் பறவையை
நிறுத்திக் கேட்டான்
பறப்பதெப்படி?
அமர்ந்திருக்கையில் சொல்லத்
தெரியாது கூடப்
பறந்து வா சொல்கிறேன் என்றது
கூடப் பறந்து கேட்டான்
எப்படி?
சிரித்து
உன் போலத்தான் என்றது
அட ஆமாம்
எனக் கீழே கிடந்தான்
பறவை
மேலே பறந்து சென்றது

-ஆனந்த்

றவைகள் மிக அழகானவை, தம்முடைய பாரம்பரீய மரபுகளையும், தெளிவான வாழ்க்கை முறையையும் எந்தவொரு நவீன சூழலுக்கும் நசுக்க விடாமல் காத்து வருபவை. அதன் கூர்மையும், நுணுக்கமான செயல்முறையும் மென்மையும் நம்மிடம் இருந்ததாகக் கருதுகிறேன். நமது வாழ்க்கையை நவீன பற்சக்கரங்களுக்குள் நுழைந்து விட்டபிறகு பறவைகளிடமிருந்தோ விலங்குகளிடமிருந்தோ இருந்துவந்த குணாதிசயங்களை ஒரு சாறினைப் போல வெளியேற்றிவிட்டோம்!! உண்மையில் நாம் ஒரு விலங்குநிலையிலிருந்து வெகுதூரத்திலிருக்கிறோம் என்பதை திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ஏற்படுத்தப்பட்டிருந்த காணுயிர் புகைப்பட கண்காட்சியின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. வெறும் புகைப்பட கண்காட்சியாக அல்லாமல் வெறும் பொதுநல நோக்கு அல்லாமல் சூழலியல் சார்ந்த அக்கறையும் சமூகத்தின் முறைகேடான வளர்ச்சியைச் சுட்டியும் ஒரு பசுமை நிறைந்த உலகம் காணும் கனவுடனும் அமைக்கப்பட்டிருப்பது மனிதர்களின் நெஞ்சில் அறையும் விஷயம். Natural History Trust எனும் அமைப்பினர் நமது ஊரில் நாம் துரத்தியடிக்கப்பட்ட, தொலைத்துவிட்ட, கொலை செய்துவிட்ட பல உயிரினங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்க்கும்பொழுதெல்லாம், அதன் இடத்தில் வாழும் நாம் என்றென்றைக்கும் ஒரு குற்றவாளிகளே என்று நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. தன்னை ஒரு மனிதன் என நினைக்கும் ஒவ்வொருவரும் காணவேண்டிய கண்காட்சி அது!!

இரண்டு நாட்கள் ஊரில் இல்லாததால் முறையாக பதிவு செய்யமுடியாமைக்கு வருந்துகிறேன். எனினும் கிடைத்த நேரத்திலெல்லாம் ஊர் சுற்றும் வாலிபனைப் போல திருவிழாவில் சுற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு ஓவியத்தில் ஈடுபாடு உண்டு. அதனால் அது குறித்த சில புத்தகங்களைத் தேடிப் பார்த்தேன். பெரும்பாலும் ஆங்கிலத்தில் மிகத் தெளிவாகவே ஓவியங்கள் குறித்த புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆரம்பப் பாடம் படிக்க விரும்புபவர்கள் Drawing and Illustration (by Peter Gray) மற்றும் Sketching Made Easy (by Helen Douglas Cooper) ஆகியன கிடைக்கின்றன. இரண்டுமே முன்னூற்றைம்பதிற்கும் மேல் இருப்பதால் இப்போதைக்குத் தேவையில்லை என்று நகர்ந்து தமிழில் ஏதாவது கிடைக்குமா எனத் தேடிப் பார்த்ததில் “மனித உருவங்களை வரைவது எப்படி?” எனும் புத்தகம் (Prodigy வெளியீடு விலை ரூ.40)  எளிய முறையில் சின்னச் சின்ன பாடங்களுடன் துவங்குகிறது. அதைப் போன்றே பறவைகள், விலங்குகள் போன்றவற்றையும் வரைவதைத் தனித்தனி புத்தகங்கள் விளக்குகின்றன.

தியோடர் பாஸ்கரனின் சித்திரம் பேசுதடி (காலச்சுவடு – ரூ.175/-) தமிழ் சினிமாக்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. பழமையான சினிமாக்கள் குறித்து இலக்கியவாதிகள் என்ன பார்வை கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றிய முழுமையான விமர்சன தொகுப்பைக் காணமுடிகிறது. சினிமா மீதும் அதன் வரலாறு மீதும் ஆர்வமுடையவர்கள், தங்களது ஆதர்ச எழுத்தாளர்களின் பார்வையில் எதிர்வினைகளையும், விமர்சனங்களையும் படிக்கலாம். தஸ்தாவெஸ்கியின் நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப் படுகின்றன. நாவல் பரிட்சயம் உடையவர்கள் தஸ்தாவெஸ்கியைப் படிக்கவேண்டும் என்று பலராலும் சொல்லாமல் சொல்லப்படுவதைக் கேட்கமுடிகிறது.  ரா.கிருஷ்ணய்யா மொழிபெயர்த்துள்ள சூதாடி (நியூ சென்சுரி புக் ஹவுஸ், ரூ.110) சிறிய நாவலே.. இன்னும் சில மொழிபெயர்ப்புகளையும் நண்பர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஜி.குப்புசாமி மொழிபெயர்த்த ஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு (காலச்சுவடு, ரூ.350/-) விறுவிறுப்பான நாவல். ரா.கி ரங்கராஜன் மொழிபெயர்த்திருக்கும் ஹென்றி ஷாரியரின் பட்டாம்பூச்சி (நர்மதா ரூ.250/-) உண்மைக் கதையை மையப்படுத்தியிருக்கும் விறுவிறுப்பான நாவல். நிறைய நாவல்களின் முன்னுரையை வாசிக்கும்பொழுது “தமிழில் இதுவரை எழுதப்படாத களம்” என்ற அடைமொழியோடுதான் வாசிக்கிறேன்… ஒவ்வொரு நாவலுக்கும் இப்படி எழுதப்படாத களம் இருந்தால் எனில் இதுவரை தமிழில் உருப்படியாக எதுவும் எழுதவில்லையோ என்று சந்தேகிக்கும்படி செய்துவிடுகிறார்கள்!!!

இன்னும் நிறைய புத்தக அங்காடிகளில் ஏறி இறங்கினேன். சாகித்ய அகாடமியில் நிறைய மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. காவல்கோட்டம் தீர்ந்துவிட்ட சூழலில் அந்த அங்காடியே பிரசவம் முடிந்த பெண்ணைப் போல காட்சியளித்தது. தமிழ்ச் செல்வனின் சிறுகதைகள் (பாரதி புத்தகாலயம், ரூ.140/-) ஜெயமோகன் குறுநாவல்கள் (கிழக்கு, ரூ.200) யுவனின் பகடையாட்டம் (கிழக்கு, ரூ.175/-) போன்றவை கவர்ந்தன. சென்ற புத்தகத் திருவிழாவின் போதே வாங்கவேண்டும் என்று நினைத்திருந்த நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க (தமிழினி, ரூ.100/-) மற்றும் ஏழாம் உலகம் (கிழக்கு, ரூ.150/-) போன்றவை மீண்டும் கண்களின் முன் நிழலாடியது… அந்த இடத்தில் ஒரு ஏக்கப்பெருமூச்சு அலைந்து கொண்டிருக்கும்.

கிழக்கில் விசாரித்ததில் சாருவின் எக்ஸைலை (ரூ. 250/-) நிறையபேர் வாங்கிச் செல்கிறார்கள், 300 புத்தகம் ஆர்டர் கொடுத்து அதில் 200 மட்டுமே வந்திருக்கிறது. இப்போது எவ்வளவு இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள் என்றார்கள், ஆறு மட்டுமே இருந்தது. இது மூன்றாம் நாள் கணக்கு.. இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன…. எனக்குத் தெரிந்து திருவிழாவில் காவல்கோட்டத்திற்கு அடுத்து சாருவின் எக்ஸைல்தான் அதிகம் ஓட்டம் பிடித்திருக்கிறது. சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்ததில் சாருவின் அதே வசீகர எழுத்து,

கொற்கை எனும் ஒரு நாவல் கிலோ கணக்கில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அந்த புத்தகத்தைத் தூக்கி படிப்பதற்காகவே நாள்தோறும் உடற்பயிற்சி செய்யவேண்டும், ஜோ.டி.குரூஸ் எழுதிய கொற்கை காலச்சுவடு வெளியீடு (விலை ரூ.800/-) காவல் கோட்டத்தையே மிஞ்சிவிட்டது என்றால் பாருங்களேன்…

Comments

பகிர்வுக்கு நன்றி நண்பரே !