திருப்பூர் புத்தகத் திருவிழா–நாள் 2
திருப்பூர் டைமண்ட் திரையரங்கின் எதிர்புறமுள்ள கே.ஆர்.சி வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 9வது திருப்பூர் புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாள்
நீ இருக்கும்
திசைக்கு முகம் காட்டி
உன் சதுரமான
எதிர்பார்ப்பின் மேல்
பூக்காது
தொட்டிப் பூ
பூப்பூத்தல் அது இஷ்டம்
போய்ப்பார்த்தல் உன் இஷ்டம்
- கல்யாண்ஜி
புத்தகங்கள் கனவின் புறவெளிப்பாடு. புத்தகத் திருவிழாக்கள் கனவின் சங்கமம்…. அடுத்தவர் கனவினுள் ஊடுறுவும் அனுமதியை ஒவ்வொரு புத்தகங்களும் தருகின்றன. கனவுள்ளிருந்து மீண்டு நாமும் இன்னொரு கனவைப் படைக்கவும் ஒரு வழிகாட்டியைப் போல நிற்கின்றன. நான் சந்திக்கும் ஒவ்வொரு படைப்பாளியும் சொல்வது “நிறைய புத்தகங்களைப் படியுங்கள்” என்பதுதான். புத்தகம் படிக்கும் படைப்பாளிகள் தங்களுக்குள்ளான மாற்றங்களை, வேறுபாடுகளை, தரத்தினை தமது படைப்பின் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். புத்தகங்கள் நம்மை வெறும் கதைகளால் நிரப்புவதில்லை, அது உண்மையின் ஒரு பங்கினை லாவகமாகத் திணிக்கிறது. முடங்கிக் கிடக்கும் மனதின் ஒரு துளி நெருப்பை தூண்டி பற்ற வைக்கிறது. காலத்தின் ஒவ்வொரு துளியிலும் நம்மை இருத்தி வைக்கிறது…
இரண்டாம் நாளான நேற்று சங்கமத்தில் கலந்து கொள்ள வந்திருந்த வாசகர்களைக் காணும் போது உண்மையான திருவிழா எப்படியிருக்கும் என்று காண்பிப்பதாக இருந்தது. குடியரசு தின விடுமுறை என்பதால் ஒவ்வொரு புத்தக அரங்கினுள்ளும் நிற்க முடியாத அளவிற்கு நெருக்கமான கூட்டம் காண முடிந்தது. புத்தகத்தின் வாசனை முகர பின்னலாடை நகரம் இந்த அளவிற்கு ஆர்வம் கொள்ளுகிறதா என்று உள்ளுக்குள் பெருமிதம். நேற்று முழுவதும் மகிழ்ச்சியின் கடல் விழாவின் இண்டு இடுக்கு முழுவதும் பரவியிருந்தது. நிறைய பெற்றோர்கள் தத்தம் மனைவி பிள்ளைகளுடன் இனிதே கலந்து கொள்வதைக் காண முடிந்தது. முதிர்வின் பெருமூச்சென இருந்த களத்தை மணத்தின் களிப்பாக மாற்றிவிட்டது நேற்று!
சேர்தளம் சார்பில் நாங்கள் வரவேற்புக் குழு அமைத்திருந்தோம். வாசகர்களின் புத்தக அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கெனவே இரவிக்குமாரும் முரளிக்குமாரும் கேமராவும் கையுமாக விழாவிற்குள் நிறையபேரைச் சந்தித்தார்கள். புத்தக அகத்தின் வாயிலில் அமர்ந்திருந்தவர்களிடம் இன்றைய நாளைப் பற்றிய விசாரணைகள், வாசகர்களின் ஆர்வம், புத்தக விற்பனை குறித்தான பல கேள்விகளும் கேட்கப்பட்டன. வெளியே நாங்கள் யூடான்ஸ் நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு போட்டிக்கான விளம்பர காகிதத்தை புத்தக திருவிழா களித்துத் திரும்பும் வாசகர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தோம். மேலும் ஒரு வலைமனை திறப்பது எப்படி? தமிழில் தட்டச்சுவது எப்படி? ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது எப்படி போன்ற வகுப்புகளும் நடைபெற்றன. ஒரு வாசகர் மிகுந்த ஆர்வமாக கேட்டறிந்து கொண்டார்.
திருவிழாவின் இன்னொரு பக்கம் திருப்பூர் தமிழ்ச்சங்கம் வழங்கும் “இலக்கிய விருதுகள்” விழா மேடையில் நடைபெற்றது. நீதியரசர் ராமசுப்பிரமணியம் உரையாற்றிக் கொண்டிருந்தார். புத்தகம் வாங்கித் திரும்பும் வாசகர்கள், ஆர்வலர்கள் பலருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல் நாளைவிடவும் இரண்டாம்நாள் விழா நேரம் அதிகம் நீட்டிக்கப்பட்டிருக்கக் கூடும். கோவில் திருவிழாக்களின் போது எப்படி நேரம் போவதே தெரியாதோ அப்படித்தான் இருந்தது எங்களுக்குமே, அப்பொழுதுதான் வந்தது போல இருந்தது, சீக்கிரமே இரவின் இருளைத் தொட்டுவிட்டதாகத் தோணிற்று. உண்மையில் இறைவன் என்றொருவன் இருப்பானேயானால் விழாக்களின் மாலையை நீட்டச் செய்யட்டும்!!
கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரேயொரு பதிப்பகத்திற்கு மட்டுமே நுழைந்தேன். அஜயன் பாலாவின் மர்லன் பிராண்டோ – (ரூ. 250/- எதிர் வெளியீடு) புத்தகத்தை சற்று நேரம் புரட்டிக் கொண்டிருந்தேன். பிராண்டோவின் சுயசரிதையை மொழிபெயர்த்திருக்கிறார் அஜயன். தனது பிறப்பு முதலான வாழ்க்கை, நடிப்பு, நடித்த படங்களில் அனுபவங்களென புத்தகம் விவரிக்கிறது. தமிழ் திரையுலக நடிகர்களின் பல்வேறு சரிதைகள் எழுதப்பட்டிருந்தாலும் மர்லன் பிராண்டோ போன்ற சிறப்பான உலக நடிகர்களின் சரிதை தெரிந்து கொள்வது அவசியமாகும். பெருமாள் முருகன் எழுதிய கெட்ட வார்த்தை பேசுவோம் (ரூ 100/- கலப்பை வெளியீடு) எனும் கட்டுரை கவனத்திற்கு ஈர்த்தது. எந்தவொரு வார்த்தையும் கெட்டுப்போவதில்லை என்று சொல்லும் பெருமாள் முருகன் காமம் சார்ந்த பழமொழிகளையும், பாடல்களையும் அதன் புழக்கத்தையும் பற்றி பேசுகிறார். வன் சொற்கள் என அறியப்பட்டதை மென்சொற்களால் படிக்க முடியும் பொழுது நாம் உருவாக்கிய வார்த்தைகளை அதற்கான மதிப்பை நாம் எவ்வாறான நிலையில் வைத்திருக்கிறோம் என்பதை உணரமுடிகிறது. கெட்டவார்த்தையோ அல்லது காமமோ இன்று நேற்று புழங்குவதல்ல, ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய இரட்டைப் புலவர்கள், கம்பர் முதலான பெரும் கவிகளும் புழங்கியவை என்பதை பாடல்களுடனே விவரிக்கிறார்.
இரண்டாம் நாளான நேற்றைய கூட்டம் இனி தொடரும் அனைத்து நாட்களிலும் இருக்கவேண்டும் என்பது புத்தகம் வாசிக்கும் ஒவ்வொருவரது ஆசையாகவும் இருக்கும்!!
பிகு : நேற்று ”கொழந்த”யிடம் மொத்தமே 60 சொச்சம் ஸ்டால்கள்தான் என்று சொல்லியிருந்தேன். ஆனால் எனது எண் தவறானது. நூறுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இருந்தன.
பிபிகு : மூன்றாவது நாளான இன்று சார்லி சாப்ளினின் “The Kid” திரைப்படம் ஒளிபரப்பப் படவிருக்கிறது!
வலைப்பதிவு பற்றிய குறுவகுப்பு எடுக்கும் சேர்தளம் நண்பர் செல்வம்,
ரூபாய் 250க்கும் மேல் புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு சான்றிதழ்!!
உடனுக்குடன் திருப்பூர் புத்தகத் திருவிழா தகவல்கள் பெற
Comments
இது ஒரு நல்ல முயற்சி. சென்னையிலும் மற்ற ஊர்களிலும் இதுபோல ஒரு முயற்சியை மேற்கொள்ளலாம்.
வணக்கம் நண்பா
திருவிழாவில் கானகம் காப்போம் கானுயிர் காப்போம் நிழற்படக் கண்காட்சி தங்களது சிந்தனையை
எவ்விதத்திலும் தூண்டவில்லையா?
அதைப் பற்றித்தான் அடுத்த பதிவு போடுவதாக இருந்தேன் நீங்கள் பின்னுரையில் கூறியிருக்கிறீர்கள்,
அன்புடன்
ஆதவா.