ஆரண்ய காண்டம் - விமர்சனம்

Aaranya-Kaandam

Directed & Written

Thiagarajan Kumararaja

Starring

Jackie Shroff, Ravi Krishna, Sampath Raj, Yasmin Ponnappa, Somasundaram

Music

Yuvan Shankar Raja

Cinematography  

P. S. Vinod

Year 2011

Language   

Tamil

Genre Neo Noir, Crime, Drama

வன்முறை, கெட்டவார்த்தை – குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதல்ல

இராமாயணத்தில் வாலியையும் சுக்ரீவனையும் சண்டையிடச் சொல்லிவிட்டு மரத்திற்குப் பின் மறைந்திருந்து தாக்குவான் இராமன். இறக்கும் தருவாயில் இராமனிடம் “இது தர்மமா?” என்று கேட்கும் வாலிக்கு, “யுத்த தர்மப்படி தவறுதான், ஆனால் மனுதர்மப்படி சரியானது” என்று விளக்கம் கொடுப்பான் இராமன். எந்த சூழ்நிலையில் எது தேவையானதோ அதுதான் தர்மம்… இராமாயணத்தின் ஒரு பகுதியைத் தலைப்பாக வைத்திருக்கும் ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் கருவும் அதுவே. Reservoir Dogs போன்ற மோனோகிராம் போஸ்டரைஸ்டு போஸ்டர்கள், அதில் முகம் தெரியாத நடிகர்கள், அதிக விளம்பரங்களும் ஆர்ப்பாட்டங்களுமில்லாமல், சர்வதேச விருதைப் பெற்றுவந்த சத்தமில்லாமல் அமைதியாக படம் வெளிவந்திருக்கிறது. சர்வதேச படங்களுக்கிணையான முயற்சிகள் தமிழ்சூழலில் அவ்வப்போது இருந்து வந்தாலும் முயற்சிகளைத் தாண்டி வென்றிருக்கிறது “ஆரண்ய காண்டம்”. விக்கிபீடியாவில், தமிழில் நியோ நாய்ர் ஜெனரில் வந்திருக்கும் முதல் திரைப்படம் என்கிறார்கள். பெருமையாகவும், வெட்கமாகவும் இருக்கிறது! இதற்கு முன்னர் புதுப்பேட்டையில் நியோ நாய்ரின்  கூறுகளான, கறுப்பு நகைச்சுவையும், ஒளிகுறைந்த ஒளிப்பதிவும் யதார்த்தமான கேங்க்ஸ்டர் கதையும் இருந்தாலும் மிகைப்படுத்தப்பட்ட திரைக்கதை, பாத்திரம் காரணமாக பெரிதாக எடுபடவில்லை என்றே நினைக்கிறேன் என்றாலும் சில அறிவுஜீவிகள் City of God லிருந்து பெறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வைத்தாலும் புதுப்பேட்டை என்னளவில் ஒரு முக்கியமான படமும் கூட. ”ஆரண்ய காண்டம்” படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, குவாண்டின் டாரண்டினோவின் தமிழ் வெர்சன் என்று சொல்லலாம். அந்தளவுக்கு படத்தின் துல்லியம் மிகப்பிரமாதமாக இருக்கிறது. குவாண்டினின் பல்ப் ஃபிக்‌ஷனுக்கும் புதுப்பேட்டையின் மேம்பட்ட கேங்க்ஸ்டர் வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்க்கலாம். பல்ப் ஃபிக்‌ஷன் நான் லீனியர் திரைக்கதை சார்ந்து வேறுபட்டுவிடுகிறது.  Aaranya-Kaandam-Stills-014

இப்படத்திலும் நான் லீனியரின் கூறுகள் சில இடங்களில் எட்டிப்பார்த்தாலும் முழுமையாக இல்லை என்று சொல்லிவிடலாம். ஆனால், தமிழ்சினிமாவின் எண்பதாண்டுகால திரைக்கதையமைப்பின் மிக முக்கியமான லீனியர் இப்படத்திலுண்டு. கிட்டத்தட்ட வானம் படம் போன்ற ஐந்து கதைகளின் ஒருங்கிணைப்பு என்றாலும் ஒவ்வொரு கதைக்குள்ளும் உள்ள வேறுபாடு, அது முடியும் தருவாயில் ஒரு தொடர்பு என்பதாக நீளுகிறது.

“ஒங்களால முடியலைன்னா என்னை ஏன் அடிக்கிறீங்க?” என்று தீர்ந்து போன தனது காமத்தை விமர்சிக்கும் ஒரு பெண்ணின் கோபத்தின் மூலம் வன்மத்தின் விதை விதைக்கப்படுகிறது. இளமையும் அதிகாரமும் தக்கவைத்துக் கொள்ள நினைக்கும் சிங்கம்பெருமாள் ”ஆடுகளம்” பேட்டைக்காரனைப் போன்ற வன்மத்தை தனது கூட்டாளியான பசுபதியின் ஒற்றைச் சொல்லிலிருந்து தொடர்கிறார். எதிர் கூட்டத்தைச் சேர்ந்த கஜேந்திரனுக்குச் சேரவேண்டிய கொகைன் எனும் போதை மருந்தை பசுபதி கைப்பற்ற நினைக்கிறார். இது சிங்கம்பெருமாளுக்குப் பிடிப்பதில்லை. தனது ஆட்களை வைத்தே பசுபதியைப் போட்டுத்தள்ளச் சொல்லுகிறார். இது பசுபதிக்குத் தெரிந்து தப்பிச் செல்லுகையில் சிங்கம்பெருமாளின் ஆட்கள் பசுபதியின் மனைவியைக் கடத்துகிறார்கள். இன்னொரு பக்கம் தனக்கு சேரவேண்டிய சரக்கை சிங்கம்பெருமாள் கடத்துகிறார் என்றறிந்து அவரை மிரட்ட, சம்பத்தை கோர்த்துவிடுகிறார் சிங்கம்பெருமாள். இரு கூட்டமும் துரத்த, சம்பத் செய்வதறியாமல் ஓடுகிறார். ஆனால் சரக்கு எங்கே? அது சென்னைக்குப் பிழைப்புக்கு வரும் ஒரு தந்தை காளையன் மற்றும் மகன் கொட்டுக்காபுளியிடமும் மாட்டிக் கொள்கிறது. காளையன், சிங்கம்பெருமாளிடம் மாட்டிக் கொள்கிறார். இடையிடையே சிங்கம்பெருமாளின் கூட்டத்திலிருக்கும் சப்பைக்கும் சிங்கம்பெருமாளின் கீப்பான சுப்புவுக்கும் காதல் கனிகிறது… சரக்கு வாங்க வைத்திருக்கும் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் எப்படியாவது தப்பி மும்பை செல்லப் பார்க்கிறார்கள்.

பசுபதி, இரண்டு கூட்டங்களிலிருந்தும் தப்பிக்கவேண்டும், சப்பையும் சுப்புவும் தப்பிக்கவேண்டும், காளையனை அவரது மகன் கொடுக்காபுளி கண்டுபிடிக்கவேண்டும், கஜேந்திரனுக்கு சரக்கு வந்து சேரவேண்டும்…. அடுத்தடுத்து நடக்கும் பரப்பரப்பான இறுதிக்காட்சியில் எதிர்பாராத திருப்பங்களுடன் முடிகிறது திரைப்படம். Aaranya Kaandam Movie New Stills (1)

இப்படியொரு படம் வந்திருப்பதை நம்பமுடியவில்லை. ஒரு நாவல் படித்ததைப் போல மிக அழகாக விவரமாக, துல்லியமாக, தேவையற்ற காட்சிகளற்று செல்கிறது. குறிப்பாக திரைக்கதை. முன்பே சொன்னது போல தமிழ்சினிமாவின் திரைக்கதையம்சங்களை அநாயசமாக உடைத்தெறிகிறது. சிங்கம்பெருமாளான ஜாக்கி ஷெராபின் அறிமுகம், அவர்களது கூட்டாளிகளின் அறிமுகம், பசுபதியான சம்பத்தின் வழியே கஜேந்திரன் மற்றும் அவனது தம்பி கஜபதியின் ஃப்ளாஷ்பேக் கதை என நாவலின் கூறுகள் நிறைய காணமுடிகிறது. சப்பையும் சுப்புவும் உடலுறவு கொள்ளப்போகும் காட்சியை அணைந்துகிடக்கும் தொலைக்காட்சியின் பிம்பம் வழியே காண்பிப்பது. சப்பையின் கேரக்டரை முதல் காட்சியிலேயே முடிவு செய்வது, பின் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபிப்பது. காளையனின் மகனைப் பற்றிய அறிமுகம் என ஒரு சுழண்டு சுழண்டு வருகிறது. படத்தின் நிறம் மஞ்சள் என்பதை போஸ்டர்களிலேயே காண்பித்துவிடுவதால் படம் முழுக்க அதனை உபயோகித்திருக்கிறார்கள். லோலைட் காட்சிகளும் மிக அழுத்தமான நேரத்தில் எழும் இசையும் குறிப்பிடத்தக்கன. இசையைப் பற்றிச் சொல்லவேண்டுமெனில் யுவனின் மாஸ்டர் பீஸ் எனலாம். தேவையான இடங்களில் அமைதியையும், கொடுத்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில், சம்பத் ஜாக்கியைப் பார்த்து “டொக்கு ஆயிட்டீங்களா?” என்று கேட்குமிடத்திலிருந்து துவங்குகிறது. காட்சிக்கேற்ப இசையை மாற்றிப் போடுவதிலிருந்தே இது ஒரு மாறுபட்ட பிஜிஎம் என்பது தெரிந்துவிடுகிறது. மென்மையான காட்சிகளில் வன்மையாகவும் வன்மையான காட்சிகளில் மென்மையாகவும் இசையமைக்கிறார். உலகத்தரம் என்று சொல்ல இயலவில்லை ஆனால் மாறுபட்ட இசை என்பதை புரியவைக்கிறார். பாடல் காட்சிகளுக்கான இடமிருந்தும் பாடல்கள் வைக்கப்படவில்லை. அதேபோலத்தான், வழக்கமான தமிழ் தாதாயிச படங்களுக்குண்டான குணங்களிலிருந்து வெகுதூரம் தள்ளியிருக்கிறது. அதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும் யதார்த்ததை மனதில் கொண்டு தவிர்த்திருக்கிறார்கள்!!

வன்மையான காட்சிகள், ராவான கெட்டவார்த்தை வசனங்கள், தத்துவார்த்தமான வார்த்தைகளை மிக அநாயசமாகச் சொல்லிச் செல்லுமிடங்கள் என படத்தின் ஒவ்வொரு பிரேமுக்குமுள்ள வசன இடங்கள் கவனிக்கப்பட்டிருக்கின்றன. தமிழின் எல்லா கெட்டவார்த்தைகளும் இடம்பெறுகின்றன. ஆனால் சென்னையின் பிரதான வார்த்தையான “ஓத்தா” வை ஒரு இடத்திலும் கேட்டதாகத் தெரியவில்லை. சென்னையின் வட்டார மொழி சுத்தமாக இல்லை. ஆனால் அந்த குறை அவ்வளவாகத் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ”சரக்கு வாங்கித் தந்தவன் சாமி மாதிரி”, ”நீ மட்டும் உயிரோடு இருந்தே, உன்னைக் கொன்னுடுவேன்” ”டேய் மகனே, எங்கப்பனை விட உங்கப்பன் புத்திசாலிடா” போன்ற ப்ளாக் காமெடிகள் வாழ்ந்து கெட்ட ஜமிந்தாரான காளையனின் (கூத்துப்பட்டறை சோமசுந்தரம்) போதை வார்த்தைகள், குறிப்பாக ஜாக்கியிடம் சேவல்சண்டையில் ஏளனப்படுத்துவதும், பிறகு மாட்டிக்கொண்டு நொங்கு நொங்கென நொங்கியெடுத்தபிறகு பேசும் காட்சிகள் வன்முறையையும் மீறி சிரிப்பை வரவழைக்கிறது. கொடுக்காபுளியின் பாத்திர வடிவமைப்பு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியொரு பாத்திரம் தமிழ்சினிமாவில் இதுவரை வந்ததே கிடையாது. கையாலாக அப்பனின் மேலுள்ள கோபம், அதேசமயம் அவன் மனதிலுள்ள மெல்லிய பாசம், சம்பத் ஓரிடத்தில் அவனிடம் “உங்கப்பாவைப் பிடிக்குமா?” என்று கேட்க, “அப்படியெல்லாம் இல்ல… ஆனா அவரு என் அப்பா” என்பான்.. சாதாரணமாக இருக்கும் அசாதாரண வசனம் இது. அதே சம்பத் அவனிடம் “ உங்கப்பாவை நான் காப்பாத்தறேன், என் பொண்டாட்டியையும் கடத்திட்டு போயிட்டானுங்க” என்பார்.. அதற்குப் பையன் “உன் பொண்டாட்டியவே காப்பாத்த வக்கில்ல, எங்கப்பாவை எப்படி காப்பாத்துவ?” என்பான்… கொஞ்சம் மிகைத்தன்மையோடு தெரிந்தாலும் அசலான யதார்த்தமான, பாத்திரத்திற்கேற்ப வசனமாகவே இருக்கும்.. aranya- kandam- Movie- Stills-009[5]

52 இடங்களில் சென்ஸார் கைவைத்த சுவடு தெரியாத, சில இடங்களில் நான் லீனியர்தனமான காட்சிகள் என உழைத்திருக்கிறார்கள். துரத்தத் துரத்த ஓடும் சம்பத் திடீரென பைக்கில் வருகிறார். அது எப்படி என காண்பிக்கும் காட்சி, ஜாக்கி ஷெராஃபின் கூட்டாளிகள் பேசும் “ஆண்டிகளை கரெக்ட் பண்றது எப்படி?” போன்ற இயல்பான காட்சிகள் முதலில் அழுத்தமாகத் தெரியாவிட்டாலும் அதன் கீற்று பின்வரும் காட்சிகளில் எவ்வளவு தூரம் தேவையானது என்பது தமிழ்சினிமா திரைக்கதைக்கு மிகவும் புதிதானது. சம்பத், கஜேந்திரனைப் பற்றி விவரிக்கும் பொழுது “கட்டை விரலைக் கடிச்சதெல்லாம் சும்மா” என்று கூட்டாளிகள் ஏளனமாகப் பேசுவார்கள், அதேநேரம் அந்த பெண் கட்டைவிரலற்ற தனது கைகளால் டீ கொண்டுவந்து வைக்கும் காட்சி (சட்டென அதைக் கவனிக்காமல் விட்டேன்.) மிக ஜோவியலாகப் பேசிக்கொண்டிருக்கும் கூட்டாளிகள் சட்டென கத்தியைத் தூக்குவது…. மிஸ்டர் மரியோ கேம் காட்சி,  சான்ஸே இல்லைங்க. Pulp Fiction மற்றும் No county for old men படங்களின் ஃப்ரெஷ்ஷான தமிழ் வெர்சன் (காப்பியல்ல) பார்த்தது போலவே இருந்தது.

ஜாக்கி ஷெராஃபின் முதல் தமிழ்ப்படம் இது. இந்திக்காரரான இவருக்கு தமிழ்சூழல், அதிலும் மிகமுக்கியமான பாத்திரமான சென்னையிலுள்ள கேங்க்ஸ்டர் தலைவன் எனும் சூழல் முற்றிலும் புதிதானது. ஆனால் மனுஷன் பின்னியிருக்கிறார். ஒரு காட்சியில் நிர்வாணமாகவும்!!! ஜாக்கியின் கீப்பாக வரும் யஅஸ்மின் பொன்னப்பா வாழ்ந்திருக்கிறார். இந்த படத்திற்கு நான் செல்வதற்கு தயக்கமாக இருந்ததற்கு ஒரே ஒரு காரணம் ரவிகிருஷ்ணா தான். 7G ரெயின்போ காலனியில் அட்டென்ஷனில் நின்று கொண்டு ஒப்பிப்பாரே… ஒருமாதிரி சப்பைத்தனமாக.. ஆனால் இப்படத்தில் கையில் ஒரு வீடியோகேம் சாதனத்தைக் கொடுத்துவிட்டதாலோ என்னவோ விளையாடியிருக்கிறார். ஒரு உறுப்பிடியான கேரக்டர் செய்துவிட்டதாக இனி எண்ணிக் கொள்ளலாம். படத்திற்குப் படம் பாத்திர கனத்தை ஏற்றிக் கொண்டே போகும் சம்பத்தின் நடிப்பு பாராட்டத்தக்கது. வெகு சில இடங்களில் சிலாகிக்கவைக்கிறார். காளையன் மற்றும் கொடுக்காப்புளி கேரக்டர்கள் படம் முடிந்தபிறகும் நீண்டநேரம் கூடவே வந்துகொண்டிருந்தது.

ஆரண்ய காண்டம் – காங்க்ரீட் காட்டில் வாழும் நாகரீக விலங்குகள் மனிதர்கள். அவர்களில் யாரும் நல்லவர்களுமில்லை, கெட்டவர்களுமில்லை, தர்மம் என்பதே தனக்குத் தேவையானதை தேவையான நேரத்தில் பெறுவதுதான். அந்த தருணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும்…..

Comments

தர்மம் என்பதே தனக்குத் தேவையானதை தேவையான நேரத்தில் பெறுவதுதான்]]

இது தர்மம் இல்லையென்றாலும், இதைத்தான் தர்மம் என்று நம்மில் பலர் சொல்லிக்கொண்டும் செய்து கொண்டும் இருக்கின்றனர்
போஸ்டர்லேயே வித்தியாசம்

ஏதோ வைஸ் சிட்டி கேம்ஸ் போல இருக்கின்றது.

நல்ல ஆழ்ந்து விமர்சிச்சி இருக்கீங்க ஆதவ்.
test said…
ஒரு நல்ல்ல்ல தமிழ்ப்படத்தைப் பார்த்த திருப்தி உங்கள் எழுத்துகளில்!

பல்ப் பிக்சனின் ப்ரெஷ்ஷான தமிழ் வெர்ஷன்....இது இது இந்த வார்த்தையே போதும் பாஸ் படம் பற்றி சொல்ல! பல்ப் பிக்சன் பார்த்த எல்லோருக்குமே இப்படி ஒரு படம் தமிழில் வராதா என்ற ஏக்கம் தோன்றியிருக்கும்!
நீங்கள் குறிப்பிட்டது போல புதுப்பேட்டையும் ஒரு முக்கியமான படம்தான். எனக்கு மிகப் பிடித்திருந்தது!

பாக்கவேணும் பாஸ்! ஆனா இங்க ரிலீசாச்சான்னு தெரியல! :-(
ஆதவா said…
வாங்க ஜமால்... ரொம்ப நாளாச்சு.. நன்றிங்க பாஸ்


ஜீ, ரிலீஸ் ஆகாட்டி நல்ல தரமான பிரிண்டில் பாருங்கள், நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.
Jackiesekar said…
இதுக்கு முன்னாடி இந்த தளத்துக்கு நான் வந்து இருக்கேனா தெரியவில்லை,,, ஆனா இண்டலி பார்த்துட்டு வந்தேன்.. ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க...மிக்க நன்றி.
ஆதவா....தலையை அடமானம் வைத்தாவது இந்த படத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது...உங்கள் எழுத்துகளில் படித்த பின்பு....
sakthi said…
அருமையான விமர்சனம் ஆதவா ஸ்டைலில்
ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!