தென்னாப்பிரிக்கா = துரதிர்ஷ்டம்
ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக மிக வலிமையான அணி என்று கேட்டால் நிச்சயம் கைகாண்பிப்பது தென்னாப்பிரிக்காவைத்தான். ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் Win/Loss Ratio அதிகமுள்ள அணி தென்னாப்பிரிக்காதான். அந்த ஆஸ்திரேலியாவே போனபிறகு இவர்களுக்கு மட்டும் என்ன வேலை? ஆனால் நான் பெரிதும் எதிர்பார்த்த இரண்டு போட்டிகள் நடக்காமல் போயின. அது இலங்கை – ஆஸ்திரேலியா போட்டியும், தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா போட்டியும்..
உலகக் கோப்பை போட்டி துவங்கும் முன்னர் நியூஸிலாந்து ஒரு சப்ப டீம். பங்களாதேஷிடமும் இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் மாறி மாறி அடிவாங்கி வெற்றி என்றால் வீசை என்ன விலை என்று கேட்குமளவுக்கு இருந்த அணி அது. ஆனால் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தானை ஜெயித்தாலும் தடுமாறித்தான் காலிறுதிக்கு வந்தது. புக்கிகள் எல்லாரும் தென்னாப்பிரிக்காவே ஜெயிக்கும் என்று பணத்தைக் கட்டி தோற்றுப் போயிருப்பார்கள். ஏனெனில் லீக் சுற்றுகளின் முடிவில் பலம்வாய்ந்த அணியாக தென்னாப்பிரிக்கா வலம் வந்தது!!
நியூஸிலாந்தின் திடீர் எழுச்சி இப்போட்டிகளின் இறுதிகட்டத்தில் பெருத்த சுவாரசியத்தைக் கொண்டுவந்துவிட்டது. ஆனால் இவர்களின் ஆட்டம் கடுமையான போராட்டத்தினிடையேதான் இருந்தது. குப்டிலும் மெகல்லமும் சீக்கிரமே சென்றாலும் ரைடர், டெய்லர் ஆட்டம் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக இருந்தது. ரோஸ் டெய்லரின் ஆக்ரோஷம் இல்லாமல் பொறுமையும் பொறுப்பும் இருந்தது. இந்த ஜோடிதான் வெற்றிக்கான முதற்படியை எடுத்து வைத்தது. இருந்தாலும் நியூஸியின் ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டர்கள் வலுவாகவில்லை. முக்கி முக்கி 221 எடுத்தார்கள். இலக்கு 222!! நெல்சன் எண்!! ஒருவேளை தோற்றுவிடுவார்கள் என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் நிஜமாகும் என்று நினைக்கவில்லை. தென்னாப்பிரிக்கா தரப்பில் மோர்கலும் ஸ்டெயினும் பவுலிங் வீசினார்களேயொழிய மிரட்டவில்லை. மிகவும் எதிர்பார்த்த தாஹீர் மட்டுமே ரன்களை வெகுவாக கட்டுப்படுத்தினார். போத்தாவுக்கு விக்கெட்டேயில்லை.
எப்போதும் பொறுப்பாக ஆடும் ஆம்லாவின் விக்கெட்தான் நியூஸிலாந்தின் அடுத்த வெற்றிப்படி! ஏனெனில் ஆம்லா நின்றுவிட்டால் அவ்வளவுதான். தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய பலம் அதன் ஓபனிங்.. ஆம்லாவைத் தூக்கிவிட்டால் பாதிகிணறைத் தாண்டியவாறு… வெகுசீக்கிரமே வெளியேறிவிட்டாலும் ஸ்மித் காலிஸ் கொஞ்ச நேரம் பயம் காட்டினர். பிறகு காலீஸ், ஓரமின் அருமையான கேட்சில் வெளியேற, டிவிலியர்ஸ் காலிஸ் ஜோடி நியூஸியின் வெற்றிக்குத் தடையாக கொஞ்ச நேரம் வந்தனர். அதுவரைக்கும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென ஒரு 10 நிமிடத்திலேயே ஆட்டம் மாறிவிட்டது. அடுத்தடுத்த டபுள் ஸ்ட்ரைக்கால் வில்லியர்ஸ், டுமினி வெளியேறிய பிறகு ஆட்டம் முழுக்க கிவியின் கையில் சிக்கியது!!
தென்னாப்பிரிக்காவில் வலுவான மிடில் ஆர்டர் சாய்ந்தபிறகு லோ எண்ட் ஆர்டர் இல்லாததால் முழுக்க தடுமாறிவிட்டது. முன்பெல்லாம் 9வது வீரர்கள் வரையிலும் ஆடுவார்கள். இப்பொழுது ஏழாவது வீரர் இல்லை என்பதால் பலமாக சறுக்கிவிட்டது.
இதுவரை தென்னாப்பிரிக்கா நாக் அவுட் சுற்றுகளை ஜெயித்ததேயில்லை. போலாக், கிப்ஸ், டொனால்ட், க்ளூஸ்னர் போன்றவர்கள் இருந்தபொழுதே அவர்களால் பைனல்வரை செல்லமுடியவில்லை. மிகமுக்கியமான மேட்சுகளில் சொதப்பலாக ஆடுவதே தென்னாப்ப்ரிக்காவின் வழக்கம்!! இன்று வரையிலும் துரதிர்ஷ்ட அணியாகவே அது கருதப்படுவதற்கு இதுவே காரணம்!!
நியூஸிலாந்தின் ஓரம், கடைசி நேரத்தில் ஆட்டம் காண்பித்த டுப்லெஸிஸை ஒரு ஜம்பிங் கேட்ச் மூலம் வெளியேற்றிய சவுதி, மிகச்சிறப்பான பவுலர் மெக்கல்லம் ஆகியோரால் நியூஸி, அரையிறுதிக்குச் சென்றுவிட்டது!! இது மிகப்பெரிய ஏமாற்றம். அரையிறுதியில் நியூஸிலாந்தை எளிதில் வீழ்த்திவிட எதிரணியினருக்கு வாய்ப்பு அதிகம்!
இன்று நடக்கும் இலங்கை இங்கிலாந்து போட்டியில் இலங்கை ஜெயிக்கவே அதிக வாய்ப்பு இருந்தாலும் இங்கிலாந்தையும் குறைத்து மதிப்பிட முடியாது!! பார்ப்போம்!!
Comments