உலகக்கோப்பை–காலிறுதிகளின் பலம்

129500

கிட்டத்தட்ட காலிறுதிப் போட்டிகள் நெருங்கிவிட்டன. Group A வைப் பொறுத்தவரையிலும் எந்த பிரச்சனையுமில்லை. ஆனால் Group B ல் தான் அதிமுக கூட்டணி போல இழுவை நடந்து கொண்டிருக்கிறது. எந்த அணி வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பது போல காட்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன..  எப்படியும் நூலிழையில் இந்தியா அடுத்த கட்டத்திற்குப் போய்விடும் என்பது உறுதி!!

முதலில் இப்போதைய நிலவரப்படி ஒவ்வொரு அணியின் பலம் பலவீனம் குறித்து பார்ப்போம்!!
வெற்றி பெற்ற அணிகளுக்கு ஏற்ப வரிசைபடுத்தியிருக்கிறேன்.

Group A

8. வெஸ்ட் இண்டீஸ்

சுமாரான பவுலர்கள், சுமாரான பேட்ஸ்மென்கள் என ஒரளவு சுமாரான பேலன்ஸ்டு டீமாக இருக்கிறது. இன்னும் கெயில் சர்வான் போன்றவர்கள் ஆடவே ஆரம்பிக்கவில்லை. கெயிலின் மரண அடி இங்கிலாந்து போட்டியின்போது தெரிந்தாலும் நீண்டநேரம் நிலைக்க முடியவில்லை. சிலசமயங்களில் கேப்டன் கை கொடுத்தாலும் மொத்தமாக பேட்டிங்கில் ஏதோ குறைவது போலத் தெரிகிறது. பவுலிங்கைப் பொறுத்தவரையில் கேமர் ரோச் நல்ல ஃபார்மில் இருக்கிறார். பென்னும் நல்ல பவுலிங்கைத் தருகிறார்.  இதுவரை வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்த மூன்று போட்டிகளுமே பலம் குன்றிய அணிகளோடுதான். இனிமேல்தான் இந்தியாவை எதிர்கொள்ளப் போகிறது. அதில் ஒருவேளை ஜெயிக்கும் பட்சத்தில் தனது நிலையை இன்னும் ஸ்தரப்படுத்திக் கொள்ள இயலும்!

7. இந்தியா

வேலைக்காகத பவுலர்கள், பெரிய அளவில் சொதப்பும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள், ஓடத்தெரியாத ஃபீல்டர்கள், தவறான வியூகம் அமைக்கும் கேப்டன் என இன்றைக்கு அதிகமாக குறையுள்ள ஒரே அணி இந்தியாதான். அதைவிட பேட்டிங் பவர்ப்ளே எடுத்து ரன்னுக்கு பதில் விக்கெட் இழக்கும் ஒரே அணியும் இந்தியாதான்.. இதுவரை ஜாஹீர், சச்சின், சேவக் தவிர வேறு எவரும் ஆடவில்லை என்றே சொல்லலாம். அஸ்வினை ஏதோ பிரம்மாஸ்திரம் போல மறைத்து வைத்திருப்பது இன்னமும் வீண் தான். வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் பதானைத் தூக்கிவிட்டு ரெய்னாவையும், சாவ்லாவைத் தூக்கிவிட்டு அஸ்வினையும் இறக்கலாம்… ஆனால் எல்லாரும் கவனிக்காத ஒரு விஷயம் சாவ்லாவை விடவும் ஹர்பஜனின் பந்துவீச்சு சரியில்லாமல் போனதுதான்… கிட்டத்தட்ட இருவருமே 42 ஆவ்ரேஜ்களுக்குள் வருகின்றனர். ஹர்பஜன் 5 மேட்சுக்கு 5 விக்கெட், சாவ்லாவோ, 3 மேட்சுக்கு 4 விக்கெட்… இருவரில் சாவ்லாவே பெஸ்ட் என்று தோணுகிறது! இதுவரை இந்தியா ஜெயித்த மூன்று போட்டிகளும் பலம் குன்றிய அணிகளோடுதான். தென்னாப்பிரிக்காவுடன் தோற்றுவிட்டது, இங்கிலாந்து 339 ஐ டை செய்ததால் தோற்றதாகவே அர்த்தம்!! சோ, இந்தியா கோப்பை பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. பவுலிங் துறை கொஞ்சம் எழுந்தால் மட்டுமே கப்பு கிடைக்கும்! இல்லாட்டி வெங்கலக் கிண்ணம் கூட கிடைக்காது.

6. இலங்கை

இலங்கையின் ஆட்டம் கணிக்கமுடியாததாக இருக்கிறது. ஆஸியிடம் ஓரளவு விளையாடினாலும் மழை வந்ததால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. பாகிஸ்தானுடன் போராடி தோற்றதால் இலங்கை இன்னும் பெரிய அணிகளுடன் மோதி வெற்றி பெறவில்லை என்றாலும் அதன் பேட்டிங் மற்றும் பவுலிங் நம்பிக்கை அளிக்கிறது. தரங்கா, சங்ககரா போன்ற ஃபார்ம் பேட்ஸ்மென்களும் மலிங்கா போன்ற ஃபார்ம் பவுலர்களும் இருப்பது இன்னும் பலத்துடன் இருப்பதைக் காண்பிக்கிறது. அதேசமயம் சுழலில் முரளி இன்னும் ஜொலிக்காதது பின்னடைவாகவே இருக்கிறது! இன்றைய போட்டியில் நியூஸிலாந்தை வெற்றி பெறும் பட்சத்தில் கோப்பை வெல்வதற்கான வாய்ப்புள்ள அணிகளில் தனது இடத்தை ஸ்தரப்படுத்திக் கொள்ளும்!

5. நியூஸிலாந்து

ஆஸியிடம் தோற்றாலும் தனக்கு நிகரான பலம் வாய்ந்த பாகிஸ்தானை ஜெயித்தது!! அதனால் தற்சமயம் தற்காலிகமாக இரண்டாமிடத்தில் இருந்தாலும் இலங்கையுடன் இன்று தோற்றுவிடும் என்பதில் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறேன். சப்பை அணிகளுடன் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அணியில் சுமாரான பேஸ்மென்களே நிறைந்திருக்கிறார்கள். மெக்கலமும் சவுதியும் நல்ல ஃபார்மில் இருந்தாலும் மொத்தமாக அணியில் ஏதோ மிஸ் ஆவது தெரிகிறது.

4. பாகிஸ்தான்

நியூஸிலாந்தைத் தவிர அது தான் ஆடிய மற்ற அனைத்து போட்டிகளும் வெற்றி பெற்றிருக்கிறது. இலங்கையுடன் போராடி ஜெயித்ததே அதன் பலத்தை நிரூபித்தது போலாகும். இருப்பினும் பாகிஸ்தானின் பேட்டிங் ரொம்பவும் பலவீனமாக இருப்பதாக உணருகிறேன். மிஸ்பா தவிர வேறெவரும் ஆடியவாறே ஞாபகமில்லை. சிலசமயங்களில் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் கைகொடுக்கிறார். பவுலிங்கில் ஆரம்பத்தில் அப்ரிடி கலக்கினாலும்  பிறகு திறமையைக் காட்டமுடியவில்லை. உமர் குல் பரவாயில்லை… ஆஸ்திரேலியாவுடனான போட்டியின்போது பாகிஸ்தானின் மொத்த பலம், பலவீனம் ஆகிய அனைத்தும் தெரிந்துவிடும்!

3. இங்கிலாந்து

நன்றாக யோசித்துப் பார்த்தால், இங்கிலாந்து Group B யில் மிக நல்ல டீம் தான். பெரிய அணிகளான வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்காவை ஜெயித்தது. இந்தியாவை 339 க்கும் சேஸிங் செய்து டை செய்தது… அதேசமயம் சின்ன அணிகளான பங்களாதேஷிட்மும் அயர்லாந்திடமும் தோற்றது… சோ, இங்கிலாந்து ஜெயிப்பதெல்லாம் பெரிய அணிகளோடுதான்!!! இந்தியாவைக் காட்டிலும் இப்பொழுது நல்ல அணியாகத் தெரிகிறது.  பேட்டிங்கைப் பொறுத்தவரை, ஜோனதன் ட்ராட் மிகச்சிறப்பான வெளிப்பாட்டுடன் பேட்டிங் செய்கிறார். ஆடவந்தால் ஒரு அரைசதம் உறுதி என்பது போல 6 போட்டிகளில் 4 அரைசதங்கள்… ஒரு போட்டியில் கிட்டத்தட்ட அரைசதம்… இவரை அவுட் ஆக்கினால் இங்கிலாந்திடம் ஆளில்லை எனச் சொல்லலாம். கேப்டன் ஸ்ட்ராஸ் இக்கட்டான சூழ்நிலைகளில் ஆடுகிறார். பெல்லும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.  பவுலிங்கில் ஸ்வான் மிரட்டுகிறார். ப்ரஸ்னன், ஆண்டர்ஸன் போன்றவர்கள் சுமார் ரகம் தான்.. எடுபடவில்லை..

2. தென்னாப்பிரிக்கா.

என்னதான் இங்கிலாந்துடன் எதிர்பாராதவிதமாகத் தோற்றாலும் இந்தியாவுடன் வெற்றி பெற்று தன்னை நம்பர் ஒன் டீம் என்று நிலைநிறுத்திக் கொண்டது. ஆம்லா, டீவில்லியர்ஸ், டுமினி, ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருப்பதாலும், ஸ்மித், காலிஸ் போன்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஃபார்முக்குத் திரும்புவதாலும் நல்ல பேட்டிங் ஆர்டரை கைவசம் வைத்திருக்கிறது. அதேசமயம், மோர்கல், ஸ்டெயின், பீட்டர்ஸன், இம்ரான் தாஹீர் என பவுலிங் படையும் பலமாக இருக்கிறது. இம்ரானுக்கு அடிபட்டுவிட்டதால் இனி வருவாரா வரமாட்டாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஆயினும் இந்தியாவின் அஸ்வின் போல இம்ரான் தாஹீர் மறைக்கப்படுகிறார் என்று பேச்சு எழுகிறது. பங்களாதேஷிடம் ஜெயிக்க வாய்ப்பு இருந்தாலும் ஒருவேளை தோற்றுவிடுமோ எனும் சந்தேகமுமிருக்கிறது… பங்களாதேஷ் அதிர்ச்சி வைத்தியங்கள் தரலாம்..

1. ஆஸ்திரேலியா

முன்பே சொன்னது போல ஆஸ்திரேலியா எந்த பிரச்சனையுமின்றி முதலிடம் பிடித்திருக்கிறது. அடுத்து வரும் பாகிஸ்தான் போட்டியில் தோற்றாலொழிய முதலிடத்தை அது தவறவிடாது. ஆனால் ஆஸி இதுவரை ஆடிய போட்டிகள் எல்லாமே சப்பை டீம் உடன் தான்!! அது வென்ற நான்கு அணிகளில் நியூஸிலாந்து மட்டுமே ஓரளவு சுமார் டீம்!! மீதி கென்யா, ஜிம்பாப்வே, கனடா… இலங்கையுடன் சரிவர ஆடமுடியாமல் போனதால் ஆஸியை இன்னும் கணிக்கமுடியவில்லை. ஏனெனில் இலங்கையின் சுழற்பந்து வீச்சுகளை இவர்கள் எப்படி தடுத்தாடப்போகிறார்கள் என்பதையும், ஆஸியின் சுழற்பந்து எப்படி மற்ற பேட்ஸ்மென்களுக்கு சவாலாக இருக்கப் போகிறது என்பதையும் இன்னும் அவதானிக்க முடியவில்லை. தவிர ஜிம்பாப்வே, மற்றும் கனடா ஆகிய அணிகளை நிறைய “அடிக்க” விட்டு அல்லது கொஞ்சம் சிரமப்பட்டுதான் ஜெயித்தது.. இதை ஏன் சொல்கிறேனெனில் முன்பிருந்த ஆஸியாக இருந்தால் இவர்களெல்லாம் நசுக்கப்பட்டிருப்பார்கள்!!! ஆதலால் ஆஸிக்கு இன்னும் போட்டியே துவங்கவில்லை என்று சொல்லலாம்!!

உத்தேசமாகக் காலிறுதிப் போட்டிகள் இப்படியாக இருக்கும்...

 ஆஸி - வெஸ்ட் இண்டீஸ்
இலங்கை - இங்கிலாந்து
நியூஸிலாந்து - இந்தியா
பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா

அரையிறுதி

ஆஸி - இந்தியா
இலங்கை - தென்னாப்பிரிக்கா

Comments

Unknown said…
ரைட்டு
Unknown said…
ம்ம் இதை தான் எதிர்பார்த்தேன்...இன்னமும் எழுதுங்கள் காலிறுதி அரையிறுதி பற்றி ...ம்ம் அருமை

தப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது!!
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_18.html
Anonymous said…
sappa team India in Semi ?