இன்னுமொரு ஞாயிறு 13-02-2011

துவங்கியது யுத்தம்

128190

நேற்று இந்தியா ஆஸ்திரேலியா பயிற்சிப் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. பயிற்சிப் போட்டி என்பதாலோ என்னவோ இரண்டு அணிகளுமே அசால்டாக ஆடினார்கள். இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் பவுலிங் இன்னும் ஷார்ப்பாக இருப்பதாகவே தெரிந்தது. ப்ரட் லீ மற்றும் பொலிங்கர் இருவரது பவுன்ஸர்களையும் எதிர்த்தாட நமது வீரர்கள் சற்றே சிரமப்பட்டார்கள். நான் மிகவும் எதிர்பார்த்தபடி ஷேவாக் இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்திருந்தார். மற்றபடி குறிப்பிட்டு சொல்லும்படி கோலியும் பதானும் ஓரளவு ரன்களைச் சேர்க்க, மற்றவர்கள் பொல பொல.. அதிலும் எனக்கு யுவராஜை இன்னமும் அணியில் வைத்திருப்பது பிடிக்கவேயில்லை. கடந்த இருபது போட்டிகளில் மூன்றே அரைசதம் தான் அடித்திருக்கிறார். மற்ற போட்டிகளிலும் சொற்ப ரன்களே… நேற்றும் ஒற்றை ரன்னோடு நடையைக் கட்டினார். தோனியின் ஃபார்ம் சரியில்லை. ஸ்ரீஷாந்த் ஆக்ரோஷம் மட்டுமேதான் காண்பிக்கிறார். மிகவும் எதிர்பார்த்த சாவ்லா நான்கு விக்கெட்கள் வீழ்த்தி அணியில் இடம்பிடித்தது சரியென நிரூபித்திருந்தார். எப்படியோ ஆஸ்திரேலியாவை 176 ரன்களுக்குள் சுருட்டி இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பன் சொன்னான்.. “ டெண்டுல்கர் இறங்கலை பார்த்தியாடா? வார்ம் அப் மேட்சுங்கறதால அடிக்கிற ரன்னு கணக்கில சேராதுன்னு இறங்கல”  என்றான்.. அடப்பாவிகளா, இப்படியா எண்ணுவீர்கள்.. சென்னையில் நடைபெற இருக்கும் மேட்சில் டெண்டுல்கர் இறங்குவார் என்று தோனி சொன்னதை இவன் கேட்கவேயில்லை. எப்படியோ, உலகக் கோப்பைக்கான யுத்தம் துவங்கிவிட்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றதால் தலையில் வைத்து கொண்டாடாதீர்கள் ரசிகர்களே… இது வெறும் பயிற்சி ஆட்டம்தான். ஆஸ்திரேலியாவின் முழு பலம் 4 ஆம் தேதியிலிருந்து தெரியும்….


எக்கேடோ கெட்டு போங்கள்!

ராஜ் டிவியில் Guess the Actor எனும் நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். டிவி நிகழ்ச்சிகளிலேயே மிகக் கேவலமானதும் பொதுமக்களை ஏமாற்றக்கூடியதாகவு இருக்கும் இந்நிகழ்ச்சி இன்னும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது என்றால் எத்தனை பேர் தினமும் ஏமாந்து கொண்டிருப்பார்கள்? அப்படியென்ன நிகழ்ச்சி அது?

இரண்டு பிரபல நடிகர்களின் முகத்தை போட்டோஷாப் போன்ற மென்பொருள் கொண்டு இணைத்து அந்த இரண்டு பேரும் யார் என்று கேட்பார்கள். பதில் சொன்னால் 40000 ரூபாய் பரிசு. போன் பேச 1 காலுக்கு 10 ரூபாய். இதில் என்ன கொடுமை என்றால் நன்றாகவே தெரியும் அவர்கள் யார் என்பது. நேற்று அப்படித்தான் யதேட்சயாகப் பார்த்த பொழுது சரத்குமாரையும், ரஜினிகாந்தையும் இணைத்து இவர்கள் யார் என்று கேட்க.. நீண்ட நேரம் கழித்து ஒரு கால். “முரளியும் கமலஹாசனும்” என்று ஒருவர் சொல்கிறார். அட அறிவுகெட்டவனே, முரளி எங்கே சரத்குமார் எங்கே? ரஜினிகாந்தின் கண்ணைப் போட்டால் கூட குழந்தை கூட பதில் சொல்லுமே…

பிறகு விசாரித்ததில் ராஜ்டிவி எவ்வளவு கேவலமான கொள்ளை அடிக்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்களுக்குப் பேச நிமிடத்திற்கு 10 ரூபாய். போன் போட்டவுடனே அவர்களுக்குப் போகாது. ஒரு கம்ப்யூட்டர் பெண்குரல் மட்டும்தான் பேசும். அதுவும் ரொம்ப நேரம் லைனிலேயே காத்திருக்கவேண்டும். ஒரு ஐந்தாறு நிமிடங்கள் கழித்து (அதாவது நம்மிடமிருந்து 60 ரூபாய் போனபிறகு) ” நீண்டநேரம் காத்திருந்தால் லைனைத் துண்டித்து திரும்பவும் கால் செய்யவும்” என்று கம்ப்யூட்டர் சொல்லும். திரும்பவும் அழைத்தால் எடுப்பதற்கு ஒரு பயலும் இருக்கமாட்டார்கள். வீணாக நிமிடத்திற்குப் பத்துரூபாய் செலவழிப்பதுதான் தண்டம். அப்படியிருந்தும் யார் போன் செய்கிறார்கள்? ராஜ் டிவியின் கொள்ளைக்குத் துணை போகும் அவர்களது ஊழியர்களேதான் இந்த வேலையைச் செய்வது. எவனாது விஜய் போட்டாவைப் பார்த்து ப்ரித்விராஜ் என்று சொல்லுவானா? சிலசமயம் இந்த நிகழ்ச்சி லைவ் இல்லாமலும் நடக்கும். அச்சமயத்தில் உண்மையிலேயே பேசும் வாய்ப்பு உள்ளவர்கள் சரியாக பதில் சொன்னாலும் லைவ் இல்லாததால் படம் மாற்றப்பட்டு வேறொரு படமும் வந்திருக்கும். இப்படி ஏமாறிய நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நிமிடத்திற்கு 10 ரூபாய். குறைந்தது ஐந்து நிமிடங்களாவது லைனில் இருக்கவேண்டும் (அப்படியும் பேசவாய்ப்பு சுத்தமாகக் கிடைக்காது) 5 X 10 = 50 ரூபாய். ராஜ் டிவியை தமிழ்நாட்டில் எத்தனை பேர் பார்க்கிறார்கள்? அதிலிருந்து எத்தனை சதவிகிதம் அழைப்பார்கள்.. நான் நினைக்கிறேன் ஒரு மணிநேரத்திற்கு கிட்டத்தட்ட 1000 பேராவது அழைப்பார்கள் என்பது என் கருத்து. 10 X 1000 = 50000 ரூபாய்… ஆயிரம் பேர் என்று சொன்னதெல்லாம் சும்மா ஒரு கணக்குதான். நிறைய பேர் கூப்பிட வாய்ப்பு உண்டு. பரிசு 40000 ரூபாய்!!!!! ஒரு வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும் என்று கூப்பிடுபவர்களே மிக அதிகம்..

மக்களே…!!! எக்கேடோ கெட்டு போங்கள்!!


உடைந்த சஸ்பென்ஸ்

நேற்று எங்கள் ஊரெங்கும் யுத்தம் செய் படத்தின் புது போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதுவரையிலும் சேரனை மையப்படுத்தியே வந்த போஸ்டர்கள் எந்த சஸ்பென்ஸையும் உடைக்காமல் அருமையாக இருந்தன. நேற்றோ “ஒரு குடும்பம் பழிவாங்கும் கதை” “ஒரு தாயின் பழிவாங்கல்” என்று ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் லக்‌ஷ்மி ஆகியோரது மொட்டை ஸ்டில்கள் போடப்பட்டு படத்தின் மிகப்பெரும் சஸ்பென்ஸை உடைத்துவிட்டார்கள். இன்னும் படம் பார்க்காதவர்கள் உண்டு என்பதை மறந்து இப்படி வெளிப்படையாகவா விளம்பரம் செய்வது?


ஹார்மோன் செய்யும் கலகம்தானடா

நேற்று இரவு நீயா நானாவில் “காதல் புனிதமானதா Vs காதல் இயல்பானதா என்றொரு நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது. வலைப்பதிவர்களும் எழுத்தாளர்களுமான “தமிழ்நதியும்உமாஷக்தியும்” பங்கேற்றிருந்தார்கள். நீண்டநாள் கழித்து முழு நிகழ்ச்சியையும் பார்த்தேன். அதுவும் தமிழ்நதியும் உமாஷக்தியும் அமர்ந்திருந்ததாலேயேதான். காதல் இயல்பானது என்ற வரிசையும் இவர்கள் இருவரும் அமர்ந்திருந்தார்கள். டிவி நிகழ்ச்சி என்பதால் கட்டுப்பாடோ என்னவோ நிறைய விஷயங்களைப் பேசமுடியாமல் போயிருக்கும். தமிழ்நதி நன்றாக (அல்லது ஓரளவு) பேசினார். இயக்குனர் கரு.பழனியப்பனும், கவிஞர் தபூ சங்கரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்கள். கரு.பழனியப்பன் புனிதம்+இயல்பு இரண்டையும் முடிச்சு போட்டு நிகழ்ச்சியை முடித்து வைத்தார். தபூ சங்கரை எதற்குக் கூப்பிட்டார்கள் என்றே தெரியவில்லை. ஒரு வார்த்தை கூட அண்ணன் பேசவேயில்லை.

புனிதமான காதல் என்று ஒன்றுமே கிடையாது. வைரமுத்து சொல்வது போல காதல் என்பது வெறும் ஹார்மோன்களின் கலகம்தான்… எல்லா இடங்களிலும்தான் காதல் இருக்கிறது. அம்மா மகனிடமும், தம்பி, தங்கையிடமும், அத்தை, மருமகனிடமும், மாமா, அண்ணியிடமும் காதல் இருக்கிறது. ஆனால் எப்பொழுது காதல் சிறப்பாகிறது? காமத்தில்தான்… மேற்சொன்ன அனைவரும் தம் காதலை மட்டுமே வெளிப்படுத்துவார்கள். ஆனால் ஒரு காதலன் தன் காதலியிடம் உடலையும் சேர்த்து பகிர்ந்து கொள்வான். அவ்வளவேதான்…. காமம் என்ற ஒன்று இல்லாவிடில் காதலர்களே இல்லை… அந்த ஒன்றுக்காகத்தான் எல்லாமே!!! ரொம்ப எதிர்பார்த்த உமாஷக்தியும் அதிகம் பேசவில்லை. பேசிய காட்சிகளை வெட்டிவிட்டார்களோ என்னவோ?


அழும் சினிமா

இளைஞன் ட்ரைய்லரை இன்னமும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊரில் ஒரு தியேட்டரில் கூட படம் ஓடக்கிடையாது. கலைஞ்ஜர் டிவியில் ட்ரைய்லர் ஓடிய அளவுக்கு அந்த படம் ஓடியிருக்க வாய்ப்பே இல்லை…. கலைஞர் வசனம் இல்லையென்றால் ஓடியிருக்குமோ என்னவோ… இந்த லட்சணத்தில் வசனம் எழுதியதற்கு கலைஞ்ஜருக்கு விருது தரப்போகிறார்களாம்!!   தமிழ்சினிமாவுக்கு கண்களிருந்தால் அழுதழுது சென்னையே மூழ்கியிருக்கும் போங்கள்!!


Nothing Special

53rd.poster.final_53வது கிராமி விருதுகள் நேற்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. போன முறை போல இம்முறை பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் ரஹ்மானுக்கு இம்முறை பரிந்துரைப்பு இல்லை என்பதாலும் எனது ஃபேவரைட் ஆர்டிஸ்ட்களான பியான்ஸே, கெல்லி க்லார்க்‌ஷன் போன்றவர்களின் ஆல்பம் வரவில்லை என்பதாலும்தான்.. எனினும் ஓரிரு விருதுகளை மட்டும் அவதானிப்பதுண்டு. Record of the Year விருதை Lady Antebellum எனும் குழுவினருக்குக் கிடைத்திருக்கிறது. இவர்களது பாடல்கள் ஒன்றைக்கூட கேட்டதேயில்லை.  Song of the Year உம் இவர்களேதான். Best New Artist விருதை பதினாறே வயதான Justin Bieber பெறுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். Best Female Pop விருது லேடி ககா என்ற கிழவிக்கு (ஆக்சுவலி அவ குமரிதான்) கொடுத்திருக்கிறார்கள். அதிலும் Bad Romance என்ற அந்த பாடல் ஒரு கன்றாவி! அதில் லேடிககாவின் மூஞ்சியும் டான்ஸும் சுத்தம்!!!! இவளது The Fame Monster ஆல்பத்திற்குத்தான் Best Pop Vocal Album விருதும் கிடைத்திருக்கிறது. லேடி ககாவும் நம்ம ஃபேவரைட் பியான்ஸியும் பாடிய ஒரே ஒருபாடல்தான் (Video Phone )லேடிககா வரிசையில் எனக்குப் பிடித்த பாடல்.. (அதேமாதிரி (தலைப்பில்) Telephone featuring பியான்ஸே!) Best Rap விருது நம்ம தலைவர் Eminem வாங்கியது மட்டுமே எனக்கு பிடித்த விஷயம். மற்றவர்களையெல்லாம் தெரியாது!!


Happy Valentine's day

இன்று காலை நண்பன் அழைத்திருந்தான் “ நீயும் உன் தம்பியும் இனிய மருமகள்களை அம்மாவுக்குக் காட்ட வாழ்த்துக்கள் “ என்று சுருதி சுத்தமாகக் கூறினான். எனக்கு ஒரு எழவும் புரியவில்லை. “என்ன மேட்டர்டா?” என்றேன் ” இன்னிக்கி வேலண்டைன்ஸ் டே டா கூமுட்ட” என்றான். ”அதுக்கெதுக்கு எங்கிட்ட சொல்ற? என்று புரியாமல் கேட்டேன். “ ஏன்? வேலண்டைன்ஸ்டேன்னா கூப்பிட்டு விஷ் பண்ணமாட்டேன்னு பாத்தியா? காலையிலருந்து எவனுக்கெல்லாம் கூப்பிடக்கூடாதோ அவனுக்கெல்லாம் கூப்பிட்டு சொல்லிட்டி இருக்கேன்” என்றான். அடப்பாவி!!! இப்படியும் ஒரு குரூப் அலையுதுய்யா!!! இன்னிக்கி நாந்தானா போணி!! கடுப்பேத்தறான் மைலார்ட்!!

காதலர்தின வாழ்த்துக்கள்!!!

99998happy_valentines_day

Comments

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....
Unknown said…
அருமையான பதிவு
“ டெண்டுல்கர் இறங்கலை பார்த்தியாடா? வார்ம் அப் மேட்சுங்கறதால அடிக்கிற ரன்னு கணக்கில சேராதுன்னு இறங்கல”//

இது தான் கடி என்பதோ, அருமையான ஜோக்.
வணக்கம் சகோதரா,எப்படி நலமா?கிறிக்கற்- காத்திருப்புடன் உற்று நோக்கப்பட வேண்டிய விடயம். ஆஸ்திரேலியா எப்போதுமே நம்பிக்கையின் சின்னம் என்பதில் மாற்றமில்லை.

ராஜ் ரீவி விடயம், ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருப்பார்கள் என்பதனைச் சுட்டி நிற்கிறது. விழிப்புணர்வோடு கலந்து தற்கால தொலைக்காட்சிகளின் சித்து விளையாட்டின் ஓர் படி நிலை.

உடைந்த சஸ்பென்ஸ்: எதிர்ப்பார்ப்பை இல்லாது ஒழித்த முந்திரிக் கொட்டை விடயம்.

ஹார்மோன் செய்யும் கலகம்தானடா: காதலில் விழுந்தெழுந்த அனுபவ அறிவு கொண்டவரின் உள்ளத்து உணர்வுகள்:)

அழும் சினிமா: ஆங்.. இந்த தொல்லையைத் தாங்க முடியலை, உலகம் எங்கேயோ முன்னேறிக் கொண்டு போக எமது சமூகம் மட்டும் இன்றும் பாராட்டு விழா, விருதுகளோடு காலத்தைக் கழிக்கிறது. என்று திருந்துமோ எங்களின் சமூதாயம்.

Nothing Special: மேற்குல இசை அலசல். அருமை, லேடி காகா வரிசையில் என் எதிர்பார்ப்பு Rihanna மீதே இருந்தது, ஆயினும் சர்ச்சைக்குரிய பாடல் ஒன்றால் இப்போது தனது ஸ்தானத்தை இழந்து வ்ருகின்றார் என நினைக்கிறேன்.
’Sex in the air, I don’t care, I love the smell of it, sticks and stones may break my bones but chains and whips excite me’
இது அவரின் பாடல் வரி.

இப் பாடலைப் பார்க்க
http://www.youtube.com/watch?v=KdS6HFQ_LUc&feature=player_embedded&oref=http://s.ytimg.com/yt/swfbin/watch_as3-vfl_XjdLS.swf&has_verified=1

Happy Valentine's day: செம காமெடி,
இன்னும் ஒரு ஞாயிறு இந்த வார இறுதியை நோக்கிய ஆவலைத் தூண்டுகிறது.
ஆதவா said…
கருன், மாத்தியோசி, விக்கி உலகம் ஆகியோருக்கு நன்றி.

நிரூபன்!!! விமர்சனத்திற்கு விமர்சனம் என்பது போல,. உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது!! நன்றிங்க நண்பா.
Unknown said…
ஆரம்பத்தில் நான் இந்தியாவின் துடுப்பாட்டத்தை பார்த்து கலங்கி விட்டேன்.ஆனால் பின்னர் வென்றபின் தான் சந்தோசம்..

பாஸ் காதலர் தின நல் வாழ்த்துக்கள் பாஸ்..லவ்வர் கோல் பண்றாங்க போனை பாருங்க.
அருமையான பதிவு .வாழ்த்துக்கள் நண்பரே.
யுத்தம் செய் போஸ்டர்களை பார்த்து நானும் இதையே தான் யோசித்தேன்... ஆடியன்சை இழுக்குறாங்களாமாம்...
நீங்கள் குறிப்பிட்ட அந்த நீயா நானா நிகழ்ச்சியை பார்க்க நினைத்து தவறிவிட்டேன்... மறு ஒளிபரப்பு உள்ளதா... இணையத்தில் பார்க்க முடியுமா...
ஆதவா said…
நண்பர்களுக்கு நன்றி!!!
@ பிர்பாகரன்.
அந்த நிகழ்ச்சி மறு ஒளிபரப்பாகும் என்று நினைக்கிறேன். ஆனால் எப்போது என்றூ தெரியவில்லை... விசாரிக்கிறேன்.
Unknown said…
கலக்குறீங்களே தல...... நானும் உங்க பழைய ப்ளாக் கையே மறைதியில் வைத்துக்கொண்டு..... இன்னும் பதிவு வரலையேன்னு மொக்கை வாங்கிட்டேன்.....மன்னித்து விடுங்கள்......அதுக்குள்ளே இவ்வளவு பதிவா.... பின்னூட்டம் இடவே ஒரு வாரம் ஆகும் போல.......எல்லாம் படித்துவிட்டேன் மிக அருமை......
Riyas said…
ஒரே பதிவில் இத்தனை விஷயங்களா அப்பாடா.. எல்லாமே நல்லாயிருந்தது.

உங்கள் தளம் இப்போதுதான் பார்வையிடுகிறேன்..