ஆடுகளம் - பழிவாங்கும் வீழ்ச்சி்


Direction : Vetrimaran
Starring Dhanush, Taapsee Pannu, Kishore, Jeyabalan
Music : G. V. Prakash Kumar
Cinematography Velraj
Year : 2011
Language : Tamil
Genre : Drama, Action,

இரண்டு வருடங்களுக்கு முன்பு கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த ஓடத்துறையில் கட்டுச்சேவல் (சண்டைச்சேவல்) வாங்கச் சென்ற பொழுதுதான் எனக்கு முழுவிபரமும் தெரிந்தது. அப்பொழுது அந்த சேவலை 10000 ரூபாய் என்றார்கள். சுமார் 4 கிலோ இருக்கும். கிழட்டுச்சேவல் என்று நினைத்துவிட வேண்டாம். எப்படியும் ஐந்தாறு மாதம் மட்டுமே அதன் வயதாக இருக்கும். அப்படியொரு கம்பீரம், உயரம், எடை.. பழக்கமில்லாதவர்கள் அந்த சேவலை நெருங்க முடியாது. அதன் கூர்ந்த விரல்நகம் நம்மைக் கீறிவிடும்.. எங்கள் வீட்டுச் சேவல்கள் சண்டைக்கு தொண்டை முடி விறைத்துத் தூக்க நிற்பதையும் சண்டையிடுவதையும் அடிக்கடி பார்த்திருக்கிறேன். சேவலும் சேவச்சண்டையும் நமக்கு புதிதில்லை.

வளர்ச்சியின் மீதான பொறாமையும் வீழ்ச்சியின் பயமும் விசுவாசத்தின் ஆழமும் கிராமிய மக்களின் மனதில் ஊறிக் கிடக்கும் பாரம்பரிய விளையாட்டின் வெற்றி தோல்வியினால் எழும் மான அவமானங்களும் சொல்லப்படும் திரைப்படம் ஆடுகளம். மதுரை வட்டாரத்தையும், சேவக்கட்டு ஆடும் மனிதர்களின் மனநிலையையும் திரைக்குக் கொண்டுவந்ததில் உண்டான உழைப்பு அபாரமானது. அதற்காகவே இயக்குனரைப் பாராட்டத் தோணுகிறது. களத்தின் எழும் மண் மனதின் மேற்புறத்தில் படிந்திருப்பது, திரைப்படத்தின் வெற்றி...

இன்ஸ்பெக்டர் இரத்தினவேலு, சேவக்கட்டுச் சண்டையில் கில்லாடி, அவரை ஜெயிக்க ஜில்லாவில் எவனும் கிடையாது ஒருத்தரைத் தவிர.. அது பேட்டைக்காரன்... பேட்டைக்காரனின் மூன்று மிக முக்கிய ஆட்கள், கருப்பு, தொரை, மற்றும் கோழி வைத்தியம் செய்யும் அயூப். கருப்புக்கு பேட்டைக்காரன்தான் எல்லாம். யாரும் அவரைப் பற்றி தவறாகப் பேச அனுமதிக்கமாட்டான். பேட்டைக்காரன் வளர்க்கும் சேவல்கள் பற்றிய உத்திகள் வெளியில் யாருக்கும் தெரியாது. இரத்தினவேலுக்குத் தெரியாமல் அவனது விசுவாசிகள் பேட்டைக்காரனின் சேவலைத் திருடிச் செல்வதிலிருந்து படம் துவங்குகிறது. சேவச்சண்டை நடைபெறக்கூடாது என்பதால் அவ்வபோது ரெய்டும் நடக்கும், அதை நடத்தியது இரத்தினவேலுதான் என்று நினைத்து, இனிமேல் இரத்தினவேலுவோடு சேவச்சண்டை வேண்டாம் என்று ஒதுங்குகிறார் பேட்டைக்காரன். எப்படியாவது ஒருமுறையாவது சேவச்சண்டையில் பேட்டைக்காரனை ஜெயித்தே ஆகவேண்டும் எனும் வெறியோடு இருக்கும் இரத்தினவேலு அயூப்பை ஒரு விபத்தில் கொன்றுவிட, அயூப்பின் குடும்பத்திற்கு உதவி செய்யும் பொருட்டு “அயூப் நினைவுக்கோப்பை” சேவச்சண்டைக்கு இரத்தினவேலுவிடம் அனுமதி வாங்கச் செல்லுகிறார் பேட்டைக்காரன். தன்னோடு சேவச்சண்டையில் ஆடும்படி கூற, போட்டி தயாராகிறது. இதற்காக சேவலைத் தயார் செய்யும் பேட்டைக்காரன், சோதனைச் சண்டையில் தோற்றுப்போன சேவலை அறுத்து வீசும்படி ஒவ்வொருவரிடமும் கூறுகிறார். கருப்பு வளர்த்த சேவலும் தோற்றுப் போக, அறுத்து வீசச்சொல்லுகிறார். ஆனால் கருப்பு தான் வளர்த்த சேவலை அறுப்பதில் இஷ்டமின்றி மேலும் நல்லமுறையில் வளர்க்கிறார். சண்டையும் தயாரானது. இரத்தினவேலுவின் சேவல்கள் தொடர்ந்து தோற்றுக்கொண்டேயிருக்க, அவர் பெங்களூருவிலிருந்து சேவலை இறக்குமதி செய்கிறார். பெங்களூரு சேவல்களின் கம்பீரத்தைப் பார்த்து நமது சேவல்கள் தோற்றுவிடும் என்றெண்ணி, போட்டியிடவேண்டாம் என்று சொல்கிறார் பேட்டைக்காரன். அவரது சொல்லையும் மீறி, அறுத்து வீசச்சொன்ன சேவலை களமிறக்கி, மூன்று லட்சம் வரையிலும் ஜெயித்துவிடுகிறான் கருப்பு.

போட்டியில் தோற்றதன்படி, இன்ஸ்பெக்டர், மொட்டையடித்து மழித்துக் கொண்டு ஊரைவிட்டே சென்றுவிடுகிறார். கருப்பின் வெற்றியை எல்லாரும் கொண்டாட, தன் பேச்சைக் கேட்காமல் சேவலை வளர்த்த கருப்பு மீது பொறாமையும் வன்மமும் கொள்கிறார் பேட்டைக்காரன், அது மெல்ல மெல்ல பழிவாங்குதலாக மாறுகிறது. கருப்புதான் அடுத்த பேட்டைக்காரன் என்றும், பேட்டைக்காரனுக்கு இனி சேவலை மதிப்பிடத் தெரியாது எனவும் உடனிருப்போர் கூற, அவமானமும், தனது வீழ்ச்சியும் தாங்காத பேட்டைக்காரன் கருப்பை ஒவ்வொரு விதமாக, மெல்ல மெல்ல பழிவாங்குகிறார்... இது தெரியாத கருப்பு, ஒவ்வொன்றாக இழக்க, இறுதியில் தொரைக்கும் கருப்புக்கும் சண்டை மூட்டிவிடும் பேட்டைக்காரன் என்னவானார்? கருப்பு, பேட்டைக்காரனின் வன்மத்தை அறிந்தானா? என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்.

முதல் பாதி களச்சண்டை என்றால் இரண்டாம் பாதி மனச்சண்டை. கருப்பாக வரும் தனுஷ் வாய்மொழியிலிருந்து உடல்மொழி வரை மதுரைக்காரனாகவே மாறியிருக்கிறார். மனதிலிருப்பதை முகத்தில் கொண்டுவர அவருக்கு லாவகமாக வருகிறது. பேட்டைக்காரன் தன் மீது கோபம் கொள்வதிலிருந்து அவரது பொறாமையையும் பழிவாங்கலையும் அறிந்து கொள்வது வரை ஒவ்வொரு உணர்ச்சிகளையும் மிக அழகான நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். தனுஷின் மொத்த சினிமாகிரபியில் இந்த படம் என்னைப் பொறுத்தவரையில் முதலிடம் பெறுகிறது. அவருக்கு இணையான நடிப்பு ஈழக்கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன். அடர்ந்த மீசையும் மனதில் வஞ்சமும் மிகுந்த மனிதராக பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மனிதர். பிற்பாதியில் தனுஷைப் பார்க்கும்பொழுதெல்லாம் தனது பழிவாங்கல் தவறானது என்பது போல கூனிக் குறுகும் அவரது விழிகளிலேயே, மனப்போராட்டத்தை மிக அற்புதமாக சொல்லியிருக்கிறார். இயக்குனரின் இப்பாத்திரத்தேர்வு மிக நேர்த்தியானது. தொரையாக வரும் கிஷோருக்கும் நல்ல வாய்ப்பு.

வெற்றிமாறன்!!! இரண்டாவது படம் என்று சொல்லவேமுடியவில்லை. தமிழ்சினிமாவில் ஒருசிலர்தான் புதுமை எதாவது செய்வார்கள். இந்த திரைப்படமும் அதன் கதைப்பிண்ணனியும் புதுமையானதுதான். பாடல்களுக்கென்று தனிக்காட்சிகள் இல்லை, மிக யதார்த்தமான சண்டைக்காட்சிகள், கிராமிய மக்களின் விளையாட்டை காண்பித்திருப்பது, அழுத்தமான பேட்டைக்காரன் - கருப்பு மனநிலைக் காட்சிகள், போன்றவை குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இரவில் செல்லும் கதைக்களனை வேல்ராஜின் ஒளிப்பதிவு மிக அழகாக காட்டுகிறது. ஜி.வி பிரகாஷ்குமாரின் இசை படத்தைக் கெடுக்கவில்லை. ஓரளவு நல்ல இசையையே கொடுத்திருப்பதும் ஆறுதல்.

இறுதிக் காட்சியிலிருந்து ஆரம்பித்து, இறுதிக் காட்சியிலேயே முடியும் திரைக்கதை... சில வெளிநாட்டு படங்களின் பாதிப்பு இருப்பதாக ஒத்துக்கொள்ளும் இயக்குனரின் நேர்மைக்கு ஒரு சல்யூட்


ஆனால், படத்தின் நீளம் மிக அதிகம். நீண்ட நேரம் படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனும் உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. காதல் காட்சிகளை ரசிகர்களை முன்னிட்டே இயக்குனர் வெற்றிமாறன் சேர்த்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒரு சில காட்சிகளை கத்திரித்துவிட்டு, சுருக்கினால் படம் இன்னும் மிகச்சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. அசல் சேவச்சண்டைகளை திரையில் காண்பிக்காதது ஒரு பெரும் குறையாகத் தெரிகிறது. (வேறு வழியுமில்லை) சேவச்சண்டைகள் பத்து பதினைந்து நிமிடங்கள் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக மோதும். அதனை கிராஃபிக்ஸ் ஓரளவு காண்பிக்கிறது.

இந்த விமர்சனத்தில் ஹீரோயினைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை என்பதால் கீழ்காணும் படத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்!!



தமிழ்சினிமாவில் இந்தமாதிரி படங்கள் வருவது மிக அபூர்வம். கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்களில் இதுவும் ஒன்று!!

Comments

//ஆனால் கருப்பு தான் வளர்த்த சேவலை அறுப்பதில் இஷ்டமின்றி மேலும் நல்லமுறையில் வளர்க்கிறார்//
நாம நல்லா வள[ர்]க்காம சேவல் தோற்றால் அதற்கு சேவல் எப்படி பொறுப்பாகும் என்பார்.அப்பான்னா பிள்ளைகளுக்கு உலகத்தின் நல்லது கெட்டதை தெரிய வைக்க வேண்டும் என்றும் அது தனக்கு வாய்க்கவில்லை, அது தனது வளர்ப்பில் உள்ள சேவலுக்கும் பொருந்தும் என்பதால் இருக்குமோ?.
//இந்த விமர்சனத்தில் ஹீரோயினைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை என்பதால் கீழ்காணும் படத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்!!//
பொண்ணு நல்லாத்தானே இருக்கு.
இந்த படம் நிச்சயமாய் [வெற்றி]மாறனுக்கு வெற்றிதான்.தனுஷுக்கு நிச்சயமாய் நல்ல களம் தான்.
ஜீ... said…
பார்க்க வேண்டும்! பொல்லாதவன் பார்த்தபோதே வெற்றிமாறனின் ஸ்டைல் பிடித்துக் கொண்டது!
மிக அருமையான படம்.. இப்போதுதான் நானும் அந்தப்படத்தை சிலாகித்து எழுதி இருக்கிறேன்..